Showing posts with label உண்மைக்கதை. Show all posts
Showing posts with label உண்மைக்கதை. Show all posts

Friday, March 18, 2016

குழந்தை மணமகள்களும் , அழகான சமன்பாடுகளும்!

முதல் விஷயம். சில வாரங்களுக்கு முன்பு "மியூசியம் ஆப் நேசுரல் ஹிஸ்டரி" சென்றிருந்தேன், அங்கு "நேஷனல் ஜியோக்ராபி"யின் சார்பில் புகைப்பட கண்காட்சி ஒன்று வைத்து இருந்தார்கள். பல பல அருமையான இயற்க்கை புகைப்படங்கள் கண்களை கவர பார்த்து கொண்டு வந்த நான்,  ஸ்டெப்னி சிங்குலர் என்பவரின் "டூ யங் டு வெட்" எனப்படும் குழந்தை மணமகள்கள் புகைப்படங்கள் கண்டபோது திகைக்க நேர்ந்தது. புகைப்படத்தில் காணப்பட்ட 8-10 வயது சிறுமிகள்  திருமணமாகி அவர்களின் கணவர்களுடன் சோகமாக கொடுத்த போஸ் பார்க்கவே மனதை வருத்தியது.


அரபு நாடான ஏமனில் எடுக்க பட்ட புகைப்படங்கள் அவை. எண்ணெய் வளங்கள் ஏதும் இன்றி மிக மிக  ஏழை நாடான ஏமனில் பிறக்கும் அல்லது வளர்க்கப்படும் பல பெண் குழந்தைகள் அவர்களின் 15 வயதுக்குள் அவர்களுக்கு கொடுக்கப்படும் டவுரிக்காக அவர்களின் வயதை விட 2-3 மடங்கு வயது நிறைந்த ஆண்களுடன் திருமணம் முடித்து  கொடுக்க படுகிறார்கள். புகைப்படங்களில் காணப்பட்ட குழந்தைகள் 9-10 வயது குழந்தைகள் அவர்களின் கணவர்களின் குறைந்தபட்ச வயது 30-40.

புகை பட கண்காட்சியில் நான் பார்த்த அனைத்து படங்களும் சொல்லுவது என்னவென்றால், குழந்தை திருமணங்கள் சாதி, மதம், இனம், நாடு கடந்த ஒரு நிகழ்வாக இருக்கிறது என்று தெரிவிக்கிறது. வளரும் நாடுகளும் இதில் அடங்கும், நேபால், இந்தியா, நைஜீரியா போன்ற பல பல நாடுகளில் திருமணம் ஆக போகும் அல்லது திருமணம் ஆன சிறுமிகளின் பல புகைப்படங்கள் அவர்களின் கருத்துக்கள் எல்லாம் கண்ணீர் வரவழிக்கும்.  திருமணம் முடிந்த கையோடு கணவரால் பாலியல் தொல்லைக்கும் , 12 -13 வயதில் ஒரு குழந்தைக்கு  தாயாகவும் ஆகும் பல குழந்தைகள் பல பாலியில் தொற்றுக்கும் பல ஆப்ரிக்கா நாடுகளில் HIV க்கும் ஆளாவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு இருக்கும் கொடுமை.


இதனை சார்ந்த ஒரு புத்தகமும் வாசிக்க நேர்ந்தது "I am Nujood, Age 10 and divorced" என்ற 10 வயது நுஜூத் என்ற பெண்ணின் சுயசரிதை. ஏமன் நாட்டை சேர்ந்த 10 வயதில் திருமணம் முடிக்கப்பட்டு கணவரால்? 10 வயதில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு, வீட்டை விட்டு ஓடி வந்து கோர்டில் தஞ்சம் புகுந்து முடிவில் விவாகரத்து கொடுக்கப்பட்ட ஒரு சிறுமியின் கதை அது.  படிக்க படிக்க கண்ணீர் வர வழிக்கும் ஒன்று. எந்த நாடாக இருந்தாலும் எந்த ஊராக இருந்தாலும் பெண்கள், பெண் குழந்தைகள்  அனுபவிக்கும் கஷ்டங்கள் மட்டும் மாறாமல் இருக்கிறது.


அடுத்து நான் ரசித்த  விஷயம் கணக்கு குறித்தது. பள்ளி கல்லூரி நாட்களில் கணிதம் மிக விருப்ப பாடம். பயன் என்ன வென்று அறியாமலேயே நிறைய மனனம் செய்து கணித சமன்பாடுகளை கற்றுகொண்டு இருக்கிறேன். உதாரணமாக pi எனப்படும் pi =3.14 என்னும் நம்பர், சிறு வயதில் வட்டத்தின் ஆரம் மற்றும் பரப்பளவு  கண்டு பிடிக்க உதவும் ஒன்று. அதே போல arithmetic progression எனப்படும் 2,4,6,8,10.. போன்ற 2 வித்தியாசம் உள்ள நம்பர் சீரிஸ் போன்ற எளிதான சீரிஸ் .. இவை எல்லாம் மனனம் செய்து கடம்  அடித்து படித்து இருக்கிறேன் அதன் உபயோகம் தெரியாமல். சொல்ல போனால் நம்மில் பலர் நாம் சிறு வயதில் படித்த படிப்புக்கும் இப்பொழுது பார்க்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஏனெனில் நமக்கு எந்த இடத்தில் சமன்பாடுகள் உபயோக்கிக்க படும் என்று ப்ராக்டிகல் ஆக எங்கும் சொல்லி கொடுப்பதில்லை. உதாரணமாக என்னுடைய முதுநிலையில் fourier சீரிஸ் என்னும் ஒரு சமன்பாடுகள் வரும். அது எங்கு உபயோகிக்க வேண்டும் என்று யாரும் சொல்லி கொடுக்கவில்லை இன்னும் கூட சொல்லி கொடுக்கபடுவதில்லை. ஆனால், என்னுடைய முனைவர் படிப்பின் போது புரதங்களின் வடிவமைப்பை பற்றி படிக்கும் போது அல்லது ஆராய்ச்சி செய்யும் போது எப்படி fourier சீரீஸ் உபயோகிக்க படுகிறது என்று ஆச்சரிய பட்டது உண்டு.

அதே போல புள்ளியியல் படிக்கும் பலரும் Bayes தியரம் என்ற ஒன்று படித்து இருப்பார்கள். என்ன சொத்தை தியரம் இது என்று நானே கடம் அடித்து படித்து இருக்கிறேன். ஆனால், இதன் ப்ராக்டிகல் உபயோகம் அளவற்றது. நிறைய ரீசனிங் அல்லது டிடெக்டிவ் வேலை பார்க்கும் பலர் அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உபயோகிப்பது இது. சொல்ல போனால் அகதா க்ரிஷ்டி அவர்களின் மையின் கதாநாயகனான "Hercule Poirot" வின் திறமையின் அடிநாதமே இந்த Bayes தியரம் தான்.

கணித சமன்பாடுகளின் உபயோகங்களை அறிந்து கொண்டால் அதனை படிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பது உங்களுக்கு பிடித்த செயலை செய்வது  போல சுவாரசியமானது. கணித சமன்பாடுகளின் மீது காதல் கொண்டிருந்த நான் BBC தளத்தில் "அழகிய சமன்பாடுகள்" என்ற போட்டி காண நேர்ந்தது. அதில் 12 கணித சமன்பாடுகளை கொடுத்து வாசகர்களை தேர்தெடுக்க சொல்லி இருந்தார்கள். பார்க்க படிக்க ஆச்சரியமாக  இருந்தது. அதில் என்னுடைய பாவரிட் ஆன Bayes தியரமும் இருந்தது கண்டு இன்னும் சந்தோசம்.




 உங்களுக்கும் கணித சமன்பாடுகள் பிடிக்கும் என்றால் http://www.bbc.com/earth/story/20160120-you-decide-what-is-the-most-beautiful-equation-ever-written என்ற தளம் சென்று உங்களுக்கு பிடித்த சமன்பாட்டுக்கு வாக்களியுங்கள்.


நன்றி.

Saturday, October 15, 2011

எடிசன் என்ற ஒரு திருடரும், டெஸ்லா என்ற மற(றை)க்கப்பட்ட விஞ்ஞானியும்


முதலில் ஒரு டெஸ்டு
"Everyone steals in commerce and industry. I've stolen a lot, myself. But I know how to steal! They don't know how to steal!
இதை சொல்லியது யார்.

அடுத்து உங்களுக்கு சில காம்பெடிஷன் கேள்விகள்..

  1. ரேடியோவை கண்டுபிடித்தவர் யார்?
  2. X-Ray யை கண்டுபிடித்தவர் யார்?
  3. Vaccum tube கண்டுபிடித்தவர் யார்?
  4. நியான் பல்பை கண்டுபிடித்தவர் யார்?
  5. Speedometer, Auto ignition system  ஆகியவற்றை கண்டுபிடித்தவர் யார்?

சரி இப்போ ஒரு கதை..

                                                                                         
”ஒரு ஊரில டெஸ்லான்னு ஒருத்தர் இருந்தாராம். அவரு கொஞ்சம் ஆர்வக்கோளாராம்.. சரியா!!, எப்பயும் எதையாவது ஒன்னை நோண்டிட்டே இருப்பாராம். இதை களட்டி அதில மாட்டுறது, அதை களட்டி இதில மாட்டுறதுன்னு எப்பயுமே செய்துட்டு இருப்பாராம்....இவரோட ஆர்வக்கோளாற பாத்த அவர் ஃப்ரெண்டு..ஏன்டா இவனே..இங்க ஒக்காந்து எல்லாத்தயும் நோண்டிட்டு ஆர்வக்கோளாறா இருக்கியே.. ஒன்ன மாதிரி ஆட்களை எல்லாம் அமெரிக்கால தேடுராங்களாம்.. நீ ஏன் அங்க போயி இதை எல்லாம் செய்யகூடாதுன்னு சொன்னாராம்”

”சரி, நம்ம அருமை நண்பன் சொல்லுறானேன்னு, இந்த..ஆர்வக்கோளாறும் அமெரிக்காவில அப்போ பேமஸா இருந்த எடிசன் லாப்ல அப்ளை பண்ணி எடிசன் கிட்ட அஸிஸ்டெண்ட் ஆ சேர்ந்தாராம்..”

“அங்க போயி நைட்டும் பகலும் வேலை பார்த்து பல புது புது கண்டுபிடிப்பா கண்டுபிடிச்சாராம்...ஆனா என்ன பிரச்சனைனா...டெஸ்லா ஒரு கேனையாம்...அதாவது இவரு கண்டுபிடிக்கிறதை எடிசன் நைசா எடுத்து எல்லாத்தையும் பேடண்டு செஞ்சு நிறைய பணம் சம்பாதிச்சாராம்..ஆனா ரொம்ப கவனமா, நம்ம டெஸ்லாவோட பெயரை எதிலையுமே சேக்கலையாம்..சரியா..”

”இதை கொஞ்ச நாள் கழிச்சு தெரிஞ்சு கிட்ட டெஸ்லா...எடிசன் கம்பெனிக்கு போட்டி கம்பெனியா இருந்த Westing house ங்கிற கம்பெனிக்கு போனாராம் நம்ம டெஸ்லா..”

“இவரு..சரியான ஜீனியஸ்(ஆனா கேனை) ன்னு தெரிஞ்ச அந்த கம்பெனிக்காரனுகளும் இவரு கண்டுபிடிச்ச பல கண்டுபிடிப்புகளுக்கும் நான் நீன்னு போட்டி போட்டு பேட்டெண்டு வாங்கிட்டாங்களாம்..ரொம்ப ரொம்ப சொற்ப பணத்தை ராயல்டியா இவருக்கு கொடுத்துட்டு...கோடி கோடியா அவங்க சுருட்டி இருக்காங்க...இதெப்படி இருக்கு”

”கடைசியில காசும் இல்லாமா சொத்தும் இல்லாம வறுமையில வாடி இறந்துட்டார் நம்ம டெஸ்லா..” அவரு இறந்து போறதுக்கு முன்னால American Institute of Electrical Engineers ஒரு ஹாரனரி மெடல் கொடுக்க அவரை கூப்பிட்டாங்களாம்..அங்க போன அவரு சொன்னதை பாருங்க..
"You Propose, to honor me with a medal which I could pin upon my coat and strut for a vain hour before the members of your institute. You would decorate my body and continue to let it starve, for failure to supply recognition, my mind and its creative products, which have supplied the foundation upon which the major portion of your institute exists"
முதல்ல இருக்கும் quote ஐ சொன்னது தாமஸ் ஆல்வா எடிசன். அடுத்து நான் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் ஒரே பதில் தான்...அது

டெஸ்லா- ஒர் மற(றை)க்கப்பட்ட விஞ்ஞானி.

Friday, March 26, 2010

The Blind Side -எனது பார்வையில்



உண்மை கதைகள் சினிமாவாக எடுக்கப்படுவது உண்டு. அதிலும் சில கதைகள் நெஞ்சை உருக்கும் வகையில் இருக்கும், எனக்கு பிடித்த சினிமாவாக்கப்பட்ட சில உண்மைக்கதைகள்

The Hurricane - Rubin Carter என்ற குத்து சண்டை வீரரின் வாழ்க்கை.

Schindler's List - இரண்டாம் உலக யுத்தத்தின் போது 1000 யூதர்களை காப்பாற்றிய Oscar Schindler என்பவரின் வாழ்க்கை.

The Pursuit of Happyness - Businness man Chris Gardner இன் வாழ்க்கை.

இந்த படங்கள் அனைத்தும் அதனை பார்த்த பிறகும் நம் மனதுக்குள் ஏதோ செய்யும். அதே போல நேற்று இரவு Michael Oher என்ற அமெரிக்கன் Football வீரர் ஒருவரின் உண்மைக்கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் The Blind Side ஐ பார்க்க நேர்ந்தது.

அமெரிக்கா என்றால் சொர்க்க பூமி, இங்கு வறுமை இல்லை என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. அதிலும் ஹிந்தி சினிமாக்களில் எல்லாம் அமெரிக்கா என்றால் இங்கு இருக்கும் beaches, bar, pub இவை தவிர வேறெதுவும் நான் பார்த்ததாக ஞாபகம் இல்லை. ஆனால் இங்கும் வறுமை , வீடின்மை, பசிக்கொடுமை எல்லாம் உண்டு.

நான் பிரசவித்து மருத்துவமனையில் இருந்த போது என்னிடம் அங்கிருந்த நர்ஸ் ஒன்று கேட்டார்கள்,

"உங்களை உங்கள் வீட்டுகாரர் நன்றாக நடத்துகிறாரா? குழந்தைக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா உங்கள் வீடு" என்று

இதனை கேட்ட போது ஏன் இப்படி கேட்கிறார்கள் என்று எனக்கு அர்த்தம் புரியவில்லை. ஆமாம் என்று தலை ஆட்டி வைத்தேன்.

பிறகு எனக்கு அதற்கான காரணம் புரிந்தது. இங்கு குழந்தைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்று தெரிந்தால் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து விடுவார்கள். பிரிக்கப்பட்ட குழந்தைகள், அனாதை குழந்தைகள் போல சில நேரங்களில் Foster home, எனப்படும் பாதுகாப்பாளர்களுடன் இருப்பதுண்டு. அதுவும் சில நேரங்களில் நன்றாக அமைவதில்லை. அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆக்கப்பட்டு விடும்.

அப்படி, ஒரு போதைக்கு அடிமையான அம்மாவிடம் இருந்து பிரிக்கப்பட்ட, அப்பாவாலும் கைவிடப்பட்ட Micheal என்ற ஒரு கறுப்பின பையன், எவ்வாறு அமெரிக்கன் football இல் பெரிய விளையாட்டு வீரர் ஆக்கபடுகிறார் என்பதே கதை சுருக்கம்.

அடிப்படை தேவைகள் எதுவும் இல்லாமல், துணி என்று சொல்லி உடுத்த ஒரு பிளாஸ்டிக் பையில் இருக்கும் இரண்டு துணியும், சாப்பாட்டிற்கு ஸ்டேடியத்தில் கிடக்கும் பாப்கார்ன், hotdog போன்ற அடுத்தவர்களின் மிச்சத்தை சாப்பிட்டு, தூங்குவதற்கு School ஜிம் அல்லது எங்கெல்லாம் குளிருக்கு ஒதுங்க முடியுமோ அங்கெல்லாம் வாழும் ஒரு பதினாறு வயது பையன் Mike. அவனுக்கு பெரிய உடம்பு அதனால் அனைவரும் Big Mike என்று அழைக்கிறார்கள்.

ஒரு நாள் ஸ்கூல் ஜிம்மும் மூடிவிட எங்கு சென்று குளிருக்கு ஒதுங்குவது என்று அறியாமல் இருக்கிறான் மைக். அப்போது அதே பள்ளியில் படிக்கும் மாணவன் SJ வின் தாய் Anne அவனை பார்க்கிறாள், சரி என் வீட்டில் இன்று வந்து தங்கிக்கொள், நாளை காலை உன் தாயிடம் கொண்டு உன்னை சேர்க்கிறேன் என்று சொல்கிறாள்.

அடுத்த நாள் அவனின் தாய் அவன் சொன்ன இடத்தில் இல்லை என்பதையும், மறுபடியும் அவன் தெருவில் தங்க வேண்டி இருப்பதையும் அறிந்த Anne, Thanks giving என்னும் பண்டிகை வருவதால் அதுவரை தங்களுடன் இருக்குமாறு கூறுகிறாள். மைக் இதுவரை முழு சாப்பாடு சாப்பிட்டதில்லை, அதுவும் Dinning Table இல் உக்கார்ந்து சாப்பிட்டதில்லை. அவனுக்கு என்று ஒரு படுக்கை இருந்ததில்லை. அதனால் அவனுக்கு கிடைக்கும் அனைத்தும் புதுமையாக இருக்கிறது. வேறு வழியில்லாமல் அடுத்த சில நாட்களும் அவன் அங்கு தங்க நேர்கிறது. படிப்படியாக அவன் அந்த குடும்பத்தில் ஒருவனாகிறான். அந்த குடும்பம் பதினெட்டு வயதான அவனை தத்து எடுத்து கொள்கிறது.

எப்போதும் அடுத்தவர்களிடமிருந்து தன்னை காத்து கொள்ள பழகியதால், protective instinct எனப்படும் தற்காப்பு திறமை அவனிடம் அதிகம் இருப்பதை Anne கண்டறிகிறாள். அதனையே முதலீடாக்கி இந்த திறமை தேவைப்படும் American football கேமில் அவனை பயிற்றுவிக்கிறாள். நல்ல திறமைசாலியாகி விடுகிறான். பின் என்னானது என்பது மீதி கதை.

ஏற்கனவே இதே போல வீடில்லாமல், சாப்பிட வழியில்லமல் சிறு குழந்தையையும் வைத்து கொண்டு படித்து முன்னேறி பெரிய தொழிலதிபர் ஆன Gardner அவர்களின் வாழ்கையை போல இதுவும் மிகவும் inspiring கதை. அதில் Mike ஆக நடித்த Quinton Aaron இன் நடிப்பும், Anne ஆக நடித்து Oscar வென்ற Sandra Bullock இன் நடிப்பும் A+ ரகம்.

இதனை பார்த்து முடித்த பிறகு எனக்கு தோன்றிய எண்ணங்கள். இதனை போல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட inspiring சினிமாக்கள் தமிழ் சினிமாவில் மிகக்குறைவு. இந்தியாவிலும் எத்தனையோ Mike, Gardner போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்கையை திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும்?. நாலு பாட்டு, அஞ்சு பைட்டு, மூணு செண்டிமெண்ட் என்று ஒரு வட்டத்தை விட்டு ஏன் வரமாட்டேன் என்கிறார்கள் தமிழ் திரை உலகினர் என்று தோன்றியது.