Showing posts with label இளைய இந்தியா. Show all posts
Showing posts with label இளைய இந்தியா. Show all posts

Thursday, February 2, 2012

ஒரு சீட்டுக்கு பத்து லட்சமும், நண்பன் படமும்

ஒரு சில நேரங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாக தோன்றும் சில விசயங்களுக்குள்ளும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும், அப்படித்தான் எனக்கு நான் கேள்விப்பட்ட சில விசயங்களுக்கும் நான் பார்த்த நண்பன் படத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக தோன்றுகிறது.

முதலில் நான் கேள்விபட்ட சில விசயங்கள். சென்னையில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி சேர்க்க ஃபீஸ் குறைந்தது 2 லட்சம் அதிக பட்சம் 10 லட்சம் கேட்கிறார்கள். இது நான் அறிந்து கொண்ட அதிர்ச்சி தரும் செய்தி. எல்லா ஊர்களிளும் இது உண்மையா என்று யாராவது சொல்லுங்கள். இந்த ஃபீஸ் தவிர மாதாமாதம் டெர்ம் பீஸ், பஸ் பீஸ், ஹாஸ்டல் பீஸ்....இன்னும் நிறய இருக்கிறது. இதனை தவிர ஒரு குழந்தையை நீச்சல், கராத்தே போன்ற வேறு ஆக்டிவிடியில் சேர்த்து விட்டால் அதற்கு தனி ஃபீஸ். எல்லாவற்றையும் சேர்த்தால் எப்படியும் ஒரு மாதத்திற்கு ஒரு குழந்தைக்கு 10 முதல் 15 ஆயிரம் வரை செலவாகும் போல. எப்படி ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தால் சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை.

இத்தனை செலவு செய்து, அந்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, அதனை தவிர கராத்தேயில், பாட்டு கிளாசில்..என்று அடுக்கடுக்காக சேர்த்துவிட்டு அவை எல்லாவற்றிலும் அந்த குழந்தை முதலில் வரவேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறோம். இதற்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் பெற்றோரும் விதி விலக்கல்ல, இங்கு பள்ளிக்கு ஃபீஸ் இல்லை..ஆனாலும் இந்திய பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் இருக்க விடுவதில்லை குமோன், நீச்சல், கராத்தே, பியானோ, பாலே..என்று எண்ணற்ற கிளாஸ்களில் சேர்த்து விட்டு அவற்றில் எல்லாம் தங்கள் குழந்தைகள் முதலில் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். யாரும் குழந்தைகள் என்ன விரும்புகிறார்கள் என்று கேட்பதில்லை. இதனை ஒரு மைய கருத்தாக வைத்தே நண்பன் படம் வந்திருப்பது வரவேற்க்கப்பட வேண்டியது.


அடுத்த செய்தி, தற்போது இருக்கும் குழந்தைகள் மற்றும் இளைய சமுதாயதினரின் வாழும் வாழ்க்கைமுறை பற்றியது. சிறு வயதிலேயே, டி.வி, செல் போன், வீடியோ கேம், இன்டர்நெட்,ஃபேஸ்புக், டுவிட்டர்..எல்லாம் தெரிகிறது இவர்களுக்கு. முகமறியா நட்புகளே இவர்கள் அறிந்தது. வெளியில் சென்று விளையாடுவதை பல குழந்தைகள் அறிவதில்லை.

நண்பன் என்றால் யார்? உயிர் தோழன், தோழி என்றெல்லாம் நமது இலக்கியங்களில் சொல்லி இருக்கிறார்களே அப்படி என்றால் யார்?, என்ன செய்வார் என்று இன்றைய இளைஞர்களிடம் கேட்டு பாருங்கள், அவர்கள் சொல்வது இதுவாகத்தான் இருக்கும், “என் பெஸ்ட் ஃப்ரெண்ட் கூட மால் போனேன், அங்க கே.எஃப்.சி போனோம், தண்ணி அடிச்சேன், பைக்கில/காரில ஈ.சி.யாரில போனேன்..”என்று தான் நூற்றுக்கு தொண்ணூறு இளைஞர்கள் இன்று சொல்கிறார்கள். அதுவும் தண்ணி அடிப்பது என்பது இப்போதெல்லாம் டீ, காபி குடிப்பது போல சர்வ சாதாரணமாக சொல்லப்படுகிறது.

இப்படி செய்யிறவங்கெல்லாம் எங்க ஊரில இல்ல என்று சொல்லுபவர்களுக்கு..இது சென்னையில் மட்டும் நடப்பதல்ல..மதுரை, திருச்சி போன்ற ஊர்களிலும் இப்போது நடக்கிறது..
தோள் கொடுப்பான் தோழன் என்று சொல்வார்கள், நண்பன் படத்தில் காட்டபட்டு இருப்பது போல தன்னுடைய நண்பனை உயர்த்த எத்தனை பேர், தோள் கொடுக்கிறார்கள் இப்போது சொல்லுங்கள்.


Friday, October 8, 2010

இளைஞர்களிடம் தண்ணீ பழக்கம்!

வேலை விசயமாக குடிப்பழக்கம் பற்றிய ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அதில் இந்தியாவில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தது. மேலும் அறிந்து கொள்ள கூகுளை தோண்டியபோது கிடைத்த தகவல்கள் மன வருத்தம் தந்தன.

India alcohol policy alliance, என்றழக்கப்படும் இயக்கத்தில் இருந்து வந்த கட்டுரை தந்த தகவல்கள் இவை.


பதினைந்து வருட இடைவெளியில் இளைஞர்களிடம் குடிப்பழக்கம் அபரிமிதமாக அதிகரித்து இருப்பதாக அது தெரிவிக்கிறது. அருகில் இருக்கும் அட்டவணையில் அது தெளிவாக கட்டப்படுகிறது. தொன்னூறுகளில் இரண்டு சதவீதமாக இளைஞர்களிடம் இருந்த குடிப்பழக்கம் தற்போது பதினான்கு சதவீதமாக மாறி இருக்கிறது.

அதே
போல,
எந்த வயதில் இளைஞர்கள் குடிப்பழக்கத்தை ஆரம்பிக்கிறார்கள், என்று பார்த்தபோது எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.


தொன்னூறுகளில் பத்தொன்பது வயதாக ஆரம்பித்த குடிப்பழக்கம், தற்போது பதிமூன்று வயதாக குறைந்து இருக்கிறது. இளமை காலம் ஆரம்பிக்கும் போதே குடிப்பழக்கமும் இளைஞர்கள் /குழந்தைகளிடம் வர ஆரம்பிக்கிறது என்று தெரிவிக்கிறது.


இப்படி சிறுவயதில் குடிப்பழக்கத்தை ஆரம்பிப்பவர்கள் வளர வளர நிரந்தர குடிகாரர்கள் ஆக மாறிவிடுகிறார்கள். இருபதுகளில் இருபத்தி ஏழு வயதில் நிரந்தர குடிகாரர்கள் ஆனவர்கள், தற்போது பத்தொன்பது வயதிலேயே அன்றாட குடிகாரர்கள் ஆவதாக அந்த கட்டுரை தெரிவிக்கிறது.


இதே நிலை தொடர்ந்தால், சீக்கிரமே இந்தியா ஒரு குடிகார, பொறுப்பற்ற நாடாக மாறும் என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது.

தமிழக அரசு
எல்லா ஊர்களிலும், சந்து பொந்துகளிலும் கூட டாஸ்மாக் கடை திறந்து இது போன்ற நிலையை ஊக்குவிப்பது போல இருக்கிறது. என்ன ஆகுமோ!