Showing posts with label பீதொவேன். Show all posts
Showing posts with label பீதொவேன். Show all posts

Saturday, March 6, 2010

திருவாசகமும், பிரபந்தமும், பீதோவன் இசையும் பின் நானும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கு பிரபந்தம் என்றால் ஒரு பாட்டு தான் நினைவுக்கு வரும். அது நான் பத்தாவது படிக்கும் போது என்று நினைக்கிறேன், அதில் மனபாட பகுதியாக வரும் "பச்சைமா மலை போல் மேனி" என்று தொடங்கும் தொண்டரடிபொடி ஆழ்வார் அவர்களுடைய பாடல். அதே போல சைவ சமயத்தை எடுத்து கொண்டால் "குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில்" என்று தொடங்கும் அப்பர் தேவார பாடலும் தான் நினைவுக்கு வரும்.

இந்த இரண்டு பாடல்களை தவிர பிற ஏதும் அதிகம் தெரிந்திராத நான் நிறைய பாடல்கள் கேட்க வேண்டும் என்று நான் குழந்தை உண்டாகி இருக்கும் போது சொன்னார்கள். அதற்காகவென்றே தேடி தேடி கேட்க ஆரம்பிதேன்.

நான் சிறு வயதாக இருக்கும் போது என் அம்மாவுடன் சேர்ந்து ஒவ்வொரு பிரதோசமும்
எங்கள் ஊரில் உள்ள "இம்மையில் நன்மை தருவார்" கோயிலுக்கு செல்வேன். அப்போது அங்கு ஒருவர் நின்று கொண்டு திருவாசகம் பாட கேட்டு இருக்கிறேன். அப்போது எல்லாம் அர்த்தம் புரியாது என்றாலும் கேட்க நன்றாக இருக்கும்.

அர்த்தம் புரிந்து நான் சிவபுராணம் கேட்க ஆரம்பிதேன். ஆகா! என்ன அருமையான வரிகள். அப்பொழுது தான் இளையராஜா அவர்கள் இசையமைத்த "திருவாசகம் சிம்போனி" கேட்க நேர்ந்தது. சிவபுராணத்தின் பல வரிகள் சிம்போனி இசைக்கு தகுந்த மாதிரி பொருத்தி இசை அமைத்து இருந்தார்.

அதே போல, இங்குள்ள கோவில்களில் திருமஞ்சனதிற்கு முன் பாட படும் "வெண்ணை அளைந்த குணுங்கும்" என தொடங்கும் பாடல் பாட கேட்டு இருக்கறேன். அது என்ன பாடல் என்று பார்த்த போது அது பிரபந்தந்தில் வரும் பெரியாழ்வார் திருமொழியின் இரண்டாம் பத்தில் வரும் பாடல் என்று அறிந்தேன். அதனை படிக்கும் போது வரும் ஆனந்தம் அளவிற்கு அரியது.

அதே போல பெரியாழ்வார் திருமொழியில் வரும் "மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி" என தொடங்கும் தாலாட்டு பாடல் அருமையானது. அதனை சிக்கில் குருசரண் அவர்களின் இசையில் கேட்க நேர்ந்தது. அருமையான பாடல்களை அருமையான சங்கீதத்தில் கேட்கும் போது வரும் ஆனந்தம் இன்பமானது. சில நேரங்களில் தாலாட்டு பாடலாக நான் "மாணிக்கம் கட்டி" பாடலை பாட முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

குழந்தை உண்டாகி ஏற்கும் போது பீதோவன் கேட்பது முக்கியம் என்று சில நண்பர்கள் சொன்னதால் பீதோவன் கேட்க ஆரம்பிதேன். நான் முதலில் கேட்ட பீதோவன் இது தான்

Various - Beethoven - Fur Elise .mp3
Found at bee mp3 search engine


இதனை கேட்டவுடன் அட!! என்று ஒரே ஆச்சரியம் எனக்கு. இதனை நிறைய கார் reverse எடுக்கும் போது வரும் இசையாக கேட்டு இருக்கிறேன். எப்படி இன்றைய அன்றாட வாழ்கையில் பீதோவன் இணைந்துள்ளார் என்று எண்ணி ஆச்சரியபட்டேன்.
பின் பீதோவன் நிறைய கேட்க ஆரம்பிதேன்.

பீதோவெனின் No. 5 in C Minor symphony நேரில் சென்று பார்க்க, கேட்க நேர்ந்தது. Pin drop silence என்பார்களே அது போன்ற ஒரு நிசப்தமான அரங்கில் மியூசிக் கண்டக்டர் அவர்கள் நுழைய அனைவரும் கரகோசம் எழுப்புகிறார்கள், அதன் பின் அவர் கை அசைக்க மெதுவாக ஆரம்பிக்கிறது. சிறிது நேரத்தில் எல்லா வாத்தியங்களும் இணைந்து கொள்ள ஆகா!! என்ன அருமையான இசை. என் வாழ்நாளில் மறக்க முடியாத இசை கச்சேரி அது.

மேற்கத்திய இசையாயினும் சரி இந்திய இசையாயினும் சரி அதனை கேட்கும் போது ஏற்படும் இன்பமும், உணர்வும் மறக்க இயலாதவை.

நான் ரசித்த இது போன்ற ஒரு சில பாடல்களும் இசையும் இசைகடலின் மிக மிக சிறிய துளியே. இசை பெருங்கடலின் இன்பத்தை அனுபவிக்க எத்தனை பிறவி எடுத்தாலும் போதாது.