Showing posts with label சாதி. Show all posts
Showing posts with label சாதி. Show all posts

Sunday, February 21, 2016

சாதியையும்/நிறமும், திருமணமும்,அரசியலும்-இந்திய அமெரிக்க ஒற்றுமைகள்.

ரொம்ப நாட்களாகவே இது எனக்கு தோன்றுவது உண்டு. அதாவது, இனமும், நிறமும், சாதியும் இந்தியாவிற்கு மட்டும் தான் சொந்தமானதா இல்லை வேறெங்கும் இருக்கிறதா என்று. இதனை சார்ந்த ஒரு நியூயார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றும்  வாசிக்க நேர்ந்தது. அதன் விளைவே இது.

நான் இங்கு வந்த புதிதில் பல்கலைகழக காம்பஸ் இல் நிறைய கலப்பு ஜோடிகள் காணலாம். அதாவது, வெள்ளை-ஆசியன், வெள்ளை-இந்தியன், வெள்ளை-கருப்பு, வெள்ளை-சவுத் அமெரிக்கன்..அப்பொழுதெல்லாம், பரவாயில்லையே இங்கு நம்ம ஊர் போல சாதி, மதம் எல்லாம் இல்ல, என்று நான் நினைப்பது உண்டு. ஆனால், அப்படி சுற்றி திரிந்த பல காதல் பறவைகள் எத்தனை பேர் மண வாழ்கையில் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என்று பாருங்கள், கம்மி. ஆனால் வெள்ளை -வெள்ளை, கருப்பு-கருப்பு,மெக்சிகன் -மெக்சிகன், இந்தியன்-இந்தியன் ஜோடிகள் எனில் கட்டாயம் அவை திருமண வாழ்கையில் ஒன்று சேர தடை இருப்பதில்லை.

உதாரணமாக, ஒரு பைபிள் பெல்ட் ஸ்டேட் எனப்படும் தென் கிழக்கு மாநிலங்களில் இருக்கும் ஒரு வெள்ளை பைய்யன் ஒரு கறுப்பின பெண்ணை நான் விரும்புகிறேன் அவளை திருமணம் செய்ய விளைகிறேன் என்று சொன்னால் அவன் வீட்டில் கிடைக்கும் ட்ரீட்மென்ட் வித்தியாசமாக இருக்கும். நிறைய பேர் வீட்டில் அதனை ஒத்து கொள்ள மாட்டார்கள். என்னுடன் தற்போது வேலை பார்க்கும் ஒரு கறுப்பின பெண், தன்னுடைய வெள்ளை கணவர் வீட்டில் தனக்கு இருக்கும் வரவேற்ப்பை பற்றி சில நேரம் வருத்தபடுவது உண்டு. இந்த விசயத்தில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய வித்தியாசம் என்று எதுவும் இல்லை. ஆனால், இங்கு இந்தியாவில் நடப்பது போல கௌரவ கொலைகள் எதுவும் நடப்பதில்லை என்றாலும், குடும்பத்தால் ஒதுக்க படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

அதே போல, எனக்கு தெரிந்து, யூத, முஸ்லிம் ஜோடிகள் எங்கேயும் பார்த்ததே இல்லை. கல்லூரி காம்பஸ் ஆகட்டும் அல்லது திருமணம் முடித்த பின்னர் ஆகட்டும். இது நடக்க வாய்ப்பே இல்லை அல்லது நான் பார்த்த வரை இல்லை. 

இந்தியாவிலாவது காதல் ஜோடிகள் சேர்ந்தாலும் மக்கள் பிரித்து வைத்து பார்த்து இருக்கிறேன், ஆனால் இங்கு இது போன்ற கலப்பு ஒத்து வராது என்று நினைத்தே எந்த யூத-முஸ்லிம் ஜோடிகளும் இணைவது இல்லை போல. ஒரு வேளை லிபரல் ஸ்டேட்ஸ் எனப்படும் நார்த் ஈஸ்ட் அல்லது கலிபோர்னியாவில் இது சாத்தியமா என்று தெரியவில்லை.

தற்போது இந்தியாவை எடுத்து கொள்வோம். நிறைய கூலி செய்து தன் பிள்ளைகளை படிக்க வைத்து ஒரு எஞ்சினீர் ஆக்கி, கீழ் மட்டத்தில் இருந்து தற்போது மிடில் கிளாஸ் ஆகி இருக்கும் பல குடும்பங்கள் எனக்கு தெரிய உண்டு. எனக்கு தெரிய பல கலப்பு காதல் திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அவை எல்லாம் பார்க்கும் ஒரு வேளை இந்தியாவில் சாதி ஒழிந்து விட்டதோ என்று எண்ண தோன்றும். ஆனால் இது ஒரு மேம்போக்கான பார்வை மட்டுமே.

உதாரணமாக பல சாதி விட்டு சாதி கலப்பு திருமணம் நடக்கிறது. ஆயினும் அப்படி அங்கிகரிக்க படுகின்ற சில திருமணங்கள் எல்லாம் ஓரளவு ஒத்த சாதி திருமணங்கள் தாம். எனக்கு தெரிந்து நடந்த மேல்சாதி  - கீழ் சாதி திருமணங்கள் மிக மிக சொற்பம். இப்படிப்பட்ட காதல் கூட கௌரவ கொலைகளில் மட்டுமே முடிகின்றன. 

இந்த நிகழ்வு எல்லா நாடுகளும் உண்டா?, இல்லை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மட்டுமே நடப்பதா? என்று நான் யோசித்து பார்ப்பது உண்டு. உதாரணமாக, என்னுடைய ஜெர்மனி காலங்களில் நான் பார்த்தவரை , எல்லாம் நிறைய டர்கிஷ்-டர்கிஷ் ஜோடிகள் பார்த்து இருக்கிறேன். ஜெர்மன்-ஜெர்மன் ஜோடிகள் அல்லது, ஜெர்மன் -மற்ற வெள்ளை ஜோடிகள் பார்த்து இருக்கிறேன். ஜெர்மன்- கருப்பு ஜோடிகள் மிக மிக அபூர்வம். தற்போது இந்த நிலை மாறி இருக்கிறதா என்று தெரியவில்லை. 


அதே போல இன்னொரு முக்கியமான சாதி அல்லது இனம் சார்ந்த விஷயம் என்றால் அது அரசியல் தான். இங்கு வந்த புதிதில் எல்லாம், அமெரிக்காவில் எல்லாரும் சமம் என்ற குருட்டு நம்பிக்கை கொண்டு இருந்தேன். அல்லது அப்படி ஒரு மாயை என்னுள் உருவாக்கி கொண்டிருந்தேன். ஆனால், பல விசயங்களில் எப்படி இனம் என்பது ஒரு முக்கியமான ஒன்று என்று இங்கு வந்த பிறகு தெரிய ஆரம்பித்தது. உதாரணமாக, எனக்கு தெரிந்து நான் பார்த்த  தேர்தல்கள் ஒபாமாவின் இரு முறை ஜனாதிபதி தேர்தலும் மற்றும் செனட் தேர்தலும். ஒபாமா தேர்தலில் காலத்திலும் கூட எப்படி கறுப்பின மக்கள் குதூகலமாக வாக்களித்தார்கள், தங்களில் ஒருவர் வர போகிறார் என்று சந்தோஷ பட்டார்கள் என்று கண் முன் காண நேர்ந்தது. அப்படி கருப்பு மக்கள் சந்தோஷ பட்டு கொண்டு இருக்க எனக்கு தெரிந்தே, ஒபாமாவை குறித்து கிண்டல் செய்த பல வெள்ளை மக்களும்  உண்டு. அவரை முட்டாள், குரங்கு கையில் பூமாலை என்பது போன்ற விமரிசனங்கள் முன் வைக்க பட்டன.
இங்கு(அமெரிக்கா) தேர்தல் எனும் பொழுது எல்லாம் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக எப்படியாவது வேட்பாளரின்  நிறம் அல்லது இனம் ஓட்டு போடுவதற்கு ஒரு முக்கிய காரணி ஆகி விடும்.
இதனை பல பேர் நம்ப மறுத்தாலும் இது தான் உண்மை.

உதாரணமாக ஒபாமாவின் தேர்தலின் போது  கூட ஒபாமா ஒரு கலப்பு,அவருடைய  தாய் வெள்ளை, அப்பா கருப்பு என்று பல முறை மீடியாக்கள் ஒளிபரப்பின. அதாவது, மறை முகமாக அவர் முழு கருப்பு இல்லை, ஒரு மிக்ஸ் என்று அறிய வைக்க ஊடகங்கள் பல முயன்றன. தற்போது குடியரசு கட்சி தேர்தல் வேட்பாளராக இருக்கும் Trump கூட இனம் மற்றும் மதங்களை சொல்லியே பேசி வருகிறார், ஆதரவு திரட்டி வருகிறார். 

இந்தியாவை பொருத்தவரை, தேர்தல் என்று மட்டும் அல்ல தேர்தல் இல்லாத நேரத்திலும் கூட சாதி/மதம் என்பது ஒரு முக்கிய காரணி எனபது அனைவரும் அறிந்ததே.

இந்த விஷயங்கள் எல்லாம் யோசிக்கும் போது சாதி, மதம் போன்ற பாகுபாடுகள் எல்லாம் எதோ இந்தியாவிற்கு மட்டும் சொந்தம் என்பது போல ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உண்மையில் உலகில் இருக்கும் பல நாடுகளிலும் இப்படி எதோ ஒரு வகையில் ஒரு பிரிவினை இருக்கத்தான் செய்கிறது. பொருளாதாரம், செய்யும் தொழில், நிறம், இனம் என்று பல வகைகளிலும் அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பின்ன பட்டு இருக்கின்றன. ஒரு சில நாடுகளில் அவை அப்பட்டமாக தெரிந்தாலும், பல நாடுகளிலும் அவை நீக்கமற நிறைந்து இருக்கின்றன என்பது மறுக்க இயலாது.

நன்றி .

Wednesday, September 23, 2015

இன, சாதி பாகுபாடுகள் பிறப்பில் இருந்து தொடர்வதோ!




என்னுடன் வேலை பார்த்தவர்கள் அவர்கள். இருவரும் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். 20 களில் இருப்பவர்கள். ஒருவர் யூத மதத்தை சேர்ந்தவர், இன்னொருவர் எந்த மதத்தையும் சேர்ந்தவர் இல்லை என்றாலும் பெயரளவில் ஒரு முஸ்லிம் பெயர் கொண்டவர்.

எந்த மீட்டிங் என்றாலும், ஒருவர் பேசினால் இன்னொருவர் அதனை குறை சொல்லுவது என்பது எப்பொழுதும்  இருக்கும். வெளிப்படையாக அவர்கள் இருவரும் வெறுப்புணர்வை காட்டி கொள்ளாவிட்டாலும்(அது சட்டப்படி குற்றம்), அவர்களின் செய்கையில் ஒரு துவேஷம் இருந்து கொண்டே இருக்கும். எனக்கு இது தோன்றுவது உண்டு, இவர்கள் பிறப்பதற்கு முன்பே ஆரம்பித்த, எங்கோ நடக்கும் பிரச்சனைகள் இவர்களுக்கு முந்தய தலைமுறையில் ஆரம்பித்த பிரச்சனைகள் எப்படி இவர்ளின் ஒவ்வொரு செயலிலும் ஆக்கிரமித்து கொண்டு இருக்கின்றான், என்று யோசித்ததுண்டு. ஒருவேளை இவை பிறப்பில் இருந்தே உருவானதோ என்றும் யோசிப்பது உண்டு.

அதே போல, எப்பொழுதும் இந்தியர்கள் சந்தித்து கொண்டால் ஒரு சிலர் ஒதுங்கியே இருப்பதை கவனிக்கலாம். அதாவது பார்டி என்று வைத்து கொள்ளுவோம், பள்ளியில் ஒன்றாக படிக்கும் குழந்தைகள் பார்டி என்று போனாலும், சாதி வித்தியாசம் தெரியும், அதுவும் தற்பொழுது குடிபெயர்ந்த மக்களிடம் மட்டுமே இதனை அப்பட்டமாக பார்க்கலாம் (70-80 களில் குடிபெயர்ந்த மக்களிடம் இது அதிகம் காணப்படவில்லை) . அதாவது ஒரு சில  சாதி மக்கள்வேறு  சாதி மக்களுடன் அதிகம் ஒட்ட மாட்டார்கள். அல்லது வேறு சாதி மக்களும் ஒரு சில  சாதி மக்களின் பார்டிகளுக்கு சென்றாலும் ஒதுங்கியே இருப்பார்கள். ப்ரெண்ட்சர்குள் கூட நிறைய ஒரே சாதி மக்கள் அவர்கள் சாதி மக்களுடன் அதிகம் ப்ரெண்ட் ஆக இருப்பது காணலாம், ஒரே எண்ணம், சாப்பாடு, பழக்க வழக்கங்கள் என்று காரணம் வேறு சொல்லுவார்கள்.  அதில் வேறு சாதி மக்களை சேர்த்து கொள்ள மாட்டார்கள்.
அதே போல எல்லா  மக்கள் சேர்ந்து ப்ரெண்ட் சர்குள் வைத்து கொண்டாலும் அதில் நிறைய நேரம், ஒரு  சில  சாதி மக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். இவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அதனால் இன்னும் இந்திய சாதி வேறுபாடுகளை கட்டி  காக்கிறார்கள், என்று நினைத்து போனா போங்கள் என்று விட்டு விட நினைத்தாலும் , சில நேரங்களில் பிள்ளைகளுக்கும் அதனை கற்று கொடுப்பதுதான் கடுப்பை கிளப்பும்.

இதனை பற்றி நிறைய கவனித்து கவனித்து இந்த மக்கள் எல்லாம் திருந்த மாட்டார்கள் பா, என்று நினைத்து கொள்ளுவேன். ஆனால், சமீபத்தில் ஒரு செய்தியையும் அதனை சார்ந்த கட்டுரையும் படிக்க நேர்ந்தது. அது, எப்படி தன்னுடைய பிறப்பு சாதி குறித்த எண்ணங்கள் மக்களின் எண்ணங்களையும் முன்னேற்றங்களையும் மாற்றுகின்றன என்பது பற்றியது.

அதாவது பொதுவாக நம்பப்படுவது என்னவென்றால், நீங்கள் கடுமையாக அயராமல் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பது. அது நீங்கள் எந்த இன, மதம், மொழி, பாலினம் சேர்ந்தவராயினும் உழைத்தால் பயன் உண்டு என்பதே  அது.

ஆனால், இந்தியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மக்கள் இன்னமும் தங்களின் வாழ்கையின் வெற்றி தங்களின் சாதியை சார்ந்தது என்று நம்புவதாக அறிய முடிகிறது. அதாவது, நான் என்ன தான் படித்து முன்னேற முயற்சி செய்தாலும், என்னுடைய் சாதி என்னை முன்னேற விடாது, என்ற எண்ணம். மக்கள் மனதில் புரையோடி இருப்பதாக அறிய வருகிறது.

குழந்தை பருவத்தில் இருந்தே தங்களின் சாதியை குறித்து குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதன் விளைவாகவே அவர்கள் இந்த சமுதாயம் என்னை சாதிக்க விடாது அல்லது என்ன படித்தாலும் நான் இந்த வேலைக்கு தான் போவேன் என்று பட்டை குத்தி வைத்து இருக்கிறது என்று குழந்தைகள்/இளைஞர்கள் நம்ப ஆரம்பிகிறார்கள். அது படிப்படியாக தங்களின் கற்கும் திறனை குறைக்கிறது என்று சொல்கிறார்கள்.

இதனை எப்படி தவிர்ப்பது, குழந்தையில் இருந்து, சாதி என்ற ஒன்றை பற்றி குழந்தைகளிடம் பேசாமல் இருப்பது. எந்த சாதி மதத்தை சேர்ந்தவர்களும் சாதிக்கலாம். சாதி ஒரு பொருட்டே இல்லை என்ற என்னத்தை கொண்டு வருவது மட்டுமே.

என்ன தான் பண புழக்கம் அதிகமாகி இந்தியா முன்னேறுவதாக ஒவ்வொரு ஆட்சியாளரும் பறை சாற்றி கொண்டு இருந்தாலும், சாதியையும் அதனை சார்ந்த மக்களின் எண்ணங்களையும் மாற்ற முயலாத வரை, இந்தியா வல்லரசு என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளில் இருந்து வருவது மட்டுமே. என்பது என் எண்ணம்.


நன்றி

Reference

Stereotypes persist that class and privilege determine intellect and succes  Yasmin Anwar | 

Monday, November 5, 2012

இட ஒதுக்கீடும் பர்த்டே பார்ட்டியும்!!

என்ன ஒரு தலைப்பு!!..

அது என்னனங்க போன வாரம் ஒரு பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிட்டாங்கன்னு போயிட்டோம்..அது ஏன் போனோம்னு நானும் ரங்கமணியும் தலையில முட்டிக்காத குறை தான்.

ஒரு இந்திய தமிழ் குழந்தையின் பார்ட்டி அது. அந்த குழந்தையின் பெற்றோர் எங்களுக்கு அதிக பரிச்சயமில்லாதவர்கள் என்றாலும், முகுந்த் உடன் படிக்கும் பையன் பார்ட்டி என்பதால் அங்கு சென்றோம்.


அந்த பர்த்டே பார்ட்டியில ஒரு குறிப்பிட்ட சாதி வகுப்பை சேர்ந்த பலரும் சில அமெரிக்கர்களையும், சில வேறு சாதி மக்களையும் அந்த குழந்தையின் பெற்றோர் அழைத்திருந்தார்கள். அவர்கள் வீட்டில் நடத்தப்பட்டது அந்த பார்ட்டி.

அங்கு வந்திருந்த பலர் இந்தியாவில் நடக்கும் இட ஒதுக்கீடு பற்றியும், அது எப்படிப்பட்ட முட்டாள்தனம் என்பது போன்று பேசிக்கொண்டு இருந்தனர். எப்போதும், இப்படி நடக்கும் டிஸ்கஸன்களில் நமக்கு ஏன் வம்பு என்று பேசாமல் இருந்து விடுவேன். எல்லாரும் வாய் கிழிய தமிழில் பேசிய பிறகு..கேக் வெட்டும் நேரம் வந்தது..பிறகு எல்லாரும் சாப்பிட வாங்க என்று அந்த பெற்றோர் அழைத்தனர்.  நாங்கள் எல்லரும் தட்டை எடுத்து கொண்டு புஃபேக்கு சென்று வரிசையில் நிற்க..அந்த குறிப்பிட்ட சாதி மக்கள் மட்டும் அவர்களின் டைனிங் டேபிளில் உட்கார்த்திருக்க..அவர்களுக்கு என்று தனி சாப்பாடு பரிமாறப்பட்டது.

எங்களை போன்ற சில குடும்பங்களுக்கு அமெரிக்கர்கள் உட்பட வேறு சாப்பாடு வைத்து இருந்தனர். அதில் ஒரு அமெரிக்க அம்மா..அது என்ன சாப்பாடு என்று கேட்க..அதற்கு அந்த பர்த்டே பார்ட்டி அம்மா, ”அது கடவுளுக்கு படைத்தது..வேறு மக்கள் சாப்பிட கூடாது” என்று கூறினார்.

அட..இது நல்லா இருக்கே..அப்படி கடவுளுக்கு படைத்த சாப்பாட்டை வேறு சாதி மக்கள் சாப்பிட கூடாது என்று சொல்பவர்கள்..எதற்கு மற்ற மக்களை பார்ட்டி என்று அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை..

அதே போல சாப்பிட்ட பிறகு கை கழுவ என்று மற்ற சாதி மக்களுக்கு தனி இடம் என்று வைத்து இருந்தது கண்டு..அட அட என்ன அழகா நமக்கு இவங்க இடம் ஒதுக்கி இருக்காங்கப்பா என்று எனக்கு மலைப்பாக இருந்தது.

அவர்கள் சிறிது நேரத்துக்கு முன்பு வரை “இட ஒதுக்கீடு” பற்றி பேசிய பேச்சுக்கும் அவர்கள் எங்களுக்கு கொடுத்த “இட ஒதுக்கீடு” பற்றியும் நினைத்து ”அட நாம அமெரிக்காவில தான இருக்கோம்” கிள்ளி பார்த்து கொண்டு அந்த இடத்தை விட்டு விட்டால் போதும் என்று காலி செய்தோம்.