Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

Friday, April 23, 2010

எனக்கு பிடித்த பத்து தமிழ்ப்படங்கள்- தொடர் பதிவு

எனக்கு பிடித்த பத்து தமிழ்ப்படங்கள் பற்றி எழுத பத்மா அழைச்சிருந்தாங்க. அவங்களுக்கு என் நன்றி. சினிமா பற்றி அதிகம் எழுதுவதில்லை என்ற முடிவுடனேயே நான் பதிவெழுத ஆரம்பித்தேன். இருப்பினும் பத்மாவுக்காக இந்த தொடர் பதிவு.

சிறுவயதில் எனக்கு பிடித்த திரைப்படங்கள் எல்லாம் இப்போது பிடிப்பதில்லை. அதேபோல, இப்போது பிடிக்கும் படங்கள் சிறுவயதில் அறவே வெறுத்து ஒதுக்கி இருக்கிறேன்.

சிறுவயதில் எனக்கு பாட்டு, சண்டை, சிரிப்பு உள்ள படங்கள் தான் பிடிக்கும். மெதுவாக செல்லும் கதைஅம்சம் உள்ள படங்கள் அறவே பிடிக்காது. எனக்கு சிறுவயதில் ரஜினி ரொம்ப பிடிக்கும். ரஜினி படங்கள் தான் சிறந்தது என்று என் கூட படித்த பெண்களிடம் சண்டை போட்டு இருக்கிறேன். இன்றும் கூட ரஜினி படங்கள் பார்பேன் ஆனால் சிறுவயதில் பிடித்த அளவு பிடிக்குமா என்றால் சந்தேகமே.

எனக்கு பிடித்த தமிழ்ப்படங்கள் என்று யோசிக்கும் போது அந்த படம் பார்த்தபோது செய்த, சந்தித்த நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகம் வருகின்றன. அப்படி எனக்கு பிடித்த சில தமிழ்ப்படங்கள் இங்கே.

1 . எதிர்நீச்சல் & பாமாவிஜயம்




எனக்கு நாகேஷ் மிகவும் பிடிக்கும். அதுவும் எதிர்நீச்சல் படத்தில் அவரின் ஒவ்வொரு செயலும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும். "அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா " என்ற பாட்டு சரியான நகைச்சுவை. பாமாவிஜயம் படத்தில் "வரவு எட்டணா செலவு பத்தணா" பாட்டும், நகைச்சுவையும் அருமை. இன்றும் பார்க்க தூண்டும் படம்.

2 . ஒரு தலை ராகம்


சிறுவயதில் என் பெரிய அண்ணன் இருந்த போது இந்த பாடல் காசெட் எப்போதும் எங்கள் வீட்டில் ஒலித்து கொண்டிருக்கும். என் பெரிய அண்ணனுக்கு பிடித்தமான படம். நானும் சில வருடங்களுக்கு முன் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. என்னுடைய பெரிய அண்ணனுக்காக இந்த படம் பிடிக்கும்.

3 . முதல் மரியாதை


எனக்கு இந்த படம் பார்க்கும் போதெல்லாம் இந்த படத்தில் வரும் கதை போன்றே எங்கள் பக்கத்து வீட்டில் நடந்த ஒரு கதை தான் ஞாபகம் வரும். சிவாஜியின் மிகை இல்லாத நடிப்பும், வடிவுக்கரசி, ராதாவின் நடிப்பும் அருமையாக இருக்கும்.

4 . தண்ணீர் தண்ணீர்


நீரின்றி எதுவும் இல்லை என்று உணர்த்திய படம். சரிதாவின் மிகையில்லாத நடிப்பும், சூழ்நிலையும் கண்ணில் நீர் வரும்.

5 . ரோஜா


நான் ஒன்பதாவது படிக்கும் போது வந்த படம். அந்த படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை பாட்டும், காதல் ரோஜாவே பாட்டும் என்னை கிறுக்கு பிடிக்க வைத்தன. இந்த படத்திற்கு பிறகு அரவிந்த சாமி அவ்வளவு பிடிக்கும். சின்ன சின்ன ஆசை பாட்டில் வருவது போல தண்ணீரில் ஆடி என் அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன். மறக்க முடியாத படம்.

6 . அலைபாயுதே


நானும் என்னுடைய கணவரும் (காதலிக்கும் போது) சேர்ந்து பார்த்த முதல் படம். இன்றும் மறக்க முடியாதது.

7 . அன்பே சிவம் & பஞ்சதந்திரம்



இரண்டுமே இரண்டு extreme படங்கள். முதல் படம் பயங்கர touching என்றால் அடுத்த படம் மனம் விட்டு சிரிக்க வைக்கும். அன்பே சிவம் Planes, Trains and Automobiles என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்றாலும் கமலின் நடிப்பு அருமை.

8 . பாரதி


பாரதியாரின் வாழ்கை கதை. பாரதியாக நடித்தவரின் நடிப்பு அருமை. அதற்காகவே எனக்கு இந்த படம் பிடிக்கும்.

9 . காந்தி


காந்தி படத்தின் தமிழ் மொழியாக்கத்தை கடந்த வருடம் பார்க்க முடிந்தது. காந்தியாக நடித்த Ben Kingsley யின் நடிப்பு அருமை.

10 . சிவாஜி


கடைசியாக தலைவர் படம். ரஜினி படங்கள் அனைத்தும் 100% என்டேர்டைன்மென்ட். லாஜிக் எல்லாம் பார்க்ககூடாது. அதனாலேயே ரஜினி படங்கள் அனைத்தும் பிடிக்கும் என்றாலும், சிவாஜி படம் அமெரிக்காவில் முதல் இருக்கையில் அமர்ந்து எல்லா சேட்டைகளும் செய்து பார்த்த படம் என்பதால் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கும் படம்.

என்னுடைய தமிழ்பட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உதவிய பத்மாவிற்கு மீண்டும் என் நன்றிகள்.

இது தொடர் பதிவு என்பதால் தொடர விருப்பமானவர்கள் தொடருங்கள்.

Wednesday, March 31, 2010

கதை கதையாம் காரணமாம்

கதைகள் கேட்ட, வாசித்த அனுபவத்தை பற்றி பகிர 'சொல்லத்தான் நினைக்கிறேன்' அம்பிகா அழைத்திருந்தார்கள், அவர்களுக்கு என் நன்றி.

எனக்கு கதை சொல்லிகள் என்றால் உடனே என் அம்மா பாட்டி தான் நினைவுக்கு வருவார்கள். அவர்கள் பெரிய சிவபக்தை. ஒவ்வொரு சிவராத்திரிக்கும் எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள், அப்புறம் எங்களையும் அழைத்து கொண்டு மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு செல்வார்கள். அங்கு நடக்கும் ஆயிரத்தி எட்டு சங்காபிஷேகம் என்று நினைக்கிறேன், அது பார்த்து விட்டு வருவோம்.

பாட்டி எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் நிறைய சிவன் கதைகள் சொல்வார்கள். கண்ணப்ப நாயனார், நந்தனார், சிறுத்தொண்டர் கதை அப்புறம் சிவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது இன்னும் நெறைய சொல்லுவார்கள். அப்புறம் ரொட்டி தாசன் கதை, அய்யா பிச்சை கதை இதுவும் சிவன் கதை தான் ஆனால் என் பாட்டியின் version ஆ என்று எனக்கு தெரியாது.

என் பாட்டி நன்றாக பாடுவார்கள், சங்கீதம் எல்லாம் அவர்களுக்கு தெரியாது, எல்லாம் நாட்டு புற பாடல்கள் மாதிரி இருக்கும். அதுவும் நந்தனார் தில்லை செல்ல முடியாமல் வருந்தும் கதையை மிக அழகாக பாட்டாக்கி பாடுவார்கள். இன்னும் என் பாட்டியின் அந்த பாடல்களும் நந்தனார் கதைகளும் பசுமரத்தாணி போல என்மனதில் உள்ளன.

என் அம்மா எங்களுக்கு கதை சொன்னதில்லை என்றாலும், நன்றாக பாடுவார்கள், இரவில் தூங்குவதற்கு முன் தினமும் பாடச்சொல்லி நான் கேட்பதுண்டு. என் பிரசவத்திற்கு என் அம்மா இங்கு வந்திருந்த போது இப்படி பாடச்சொல்லி record செய்து வைத்திருக்கிறோம்.

இதெல்லாம் சிறு வயதில் நான் கேட்டவை. அப்புறம் ஏழாவது எட்டாவது படிக்கும் போதெல்லாம் எங்கள் வீட்டில் ரஷ்ய நாடோடிக்கதைகள் புத்தகம் இருக்கும். அதனை படித்ததுண்டு. அப்புறம் அம்புலிமாமா, தெனாலிராமன், பீர்பால் கதைகளும் இரவல் வாங்கி படித்ததாக ஞாபகம். கொஞ்ச நாள் கழித்து ராஜேஷ்குமார், சுஜாதா இவர்களின் துப்பறியும் கதைகள் படித்ததுண்டு. அதுவும் இரவல் வாங்கி படித்ததோடு சரி. என் அப்பா இதனை எல்லாம் வாங்கி தர மாட்டார்கள்.

உண்மையாக கதை வாசிக்க ஆரம்பித்தது என்றால், அது என்னுடைய கல்லூரி காலத்தில் தான். நான் படித்த கல்லூரியின் பின்புறத்தில் ஒரு lending library இருக்கும். அதில் எங்கள் தோழியர் அனைவரும் சேர்ந்து பணம் கட்டி உறுப்பினர் ஆக சேர்ந்தோம். அதில் புத்தகம் எடுத்து ஒவ்வொரு வாரமும் எங்களுக்குள் circulate செய்து கொள்வோம். அப்படி முதன் முதலில் எனக்கு படிக்க கிடைத்தது "பொன்னியின் செல்வன்". அதுவரை வரலாற்று நாவல்கள் ஒன்று கூட நான் படித்ததில்லை என்பதால் முதலில் படிப்பது எனக்கு கடினமாக இருந்தது. ஆனாலும் அடுத்தவாரம் அனைவரும் அதனை பற்றி விவாதிப்பார்களே நாம் என்ன செய்வது என்ற பயத்திலேயே, நானும் அதனை ஒரு homework போல படிப்பேன். பிறகு கல்கியின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு அவருடைய "சிவகாமியின் சபதம்", "பார்த்திபன் கனவு", "அலை ஓசை" எல்லாம் படித்ததாக ஞாபகம்.

நான் வேலை பார்க்க ஆரம்பித்த போது, என்னுடன் பணிபுரிந்தவர்கள் எல்லாம் ஆங்கில நாவல்கள், படங்கள் பற்றி பேசுவார்கள் எனக்கு அதனை பற்றி எல்லாம் எதுவும் தெரியாது என்பதால் அவர்களுடன் விவாதிக்க முடியாது. பின்னர் என்னுடைய தோழி ஒருத்தி எனக்கு Robin Cook புத்தகம் Chromosome 6 என்று நினைக்கிறேன், அதனை எனக்கு படிக்க கொடுத்தாள். நான் ஆங்கில புத்தகங்கள் படித்ததில்லை என்பதால் அவளிடம் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி வைத்து கொண்டேனே தவிர படிக்கவில்லை.

நான் முதன் முதலில் படித்த (படித்து முடித்த) ஆங்கில புத்தகம் Sir Arthur Conan Doyle's Sherlock Holmes இன் துப்பறியும் கதை "A study in Scarlet". அதுவும் நான் இந்தியாவை விட்டு வெளியில் வந்த பின்பு. முன்பே சில தமிழ் துப்பறியும் கதைகள் படித்து இருந்ததால் எனக்கு இதனை படிக்க நன்றாக இருந்தது. பிறகு எல்லா Sherlock Holmes இன் கதைகளும் படித்தேன். அதே போல அடுத்த துப்பறியும் கதை எழுத்தாளர் "Agatha Christie" யின் கதைகளும் படித்து இருக்கிறேன்.

Thriller கதைகள் எனக்கு பிடித்து இருந்ததால் medical thriller எழுதும் Robin Cook இன் கதைகளும், Law thriller எழுதும் John Grisham இன் கதைகளும் படிக்க ஆரம்பித்தேன். பிறகு ஒருவாறு த்ரில்லர் கதைகள் போரடிக்க வேறு வகையான புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் எனக்கு பிடித்த ஒரு சில

Animal farm and 1984 - George Orwell
The Kite Runner - Khaled Hosseini
To Kill a Mocking Bird - Harper Lee
A house for Mr.Biswas - V.S.Naipaul
The Lord of the Rings - J.R.R.Tolkien
A Passage to India - E.M.Forster
Memoirs of a Geisha - Arthur Golden
The God of Small Things - Arundhati Roy

ஒருகாலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தகம் வாங்கும் பழக்கம் வைத்து கொண்டு இருந்தேன். தற்பொழுது நாங்கள் இருக்கும் இடத்தில் நூலக வசதி நன்றாக இருப்பதால் நூலகத்தில் இருந்து இரவல் வாங்கி படிக்க முடிகிறது. ஒவ்வொரு வாரமும் என் பையனுக்காக நூலகம் சென்று Board books எனப்படும் படக்கதைகள் புத்தகம் எடுத்து வந்து வாசித்து கொண்டு இருக்கிறேன். அதில் எனக்கு பிடித்த சில

The Very Hungry Caterpillar by Eric Carle
Goodnight Moon by Margaret Wise Brown
Brown Bear, Brown Bear, What do you see? by Bill Martin, Jr.
The Rainbow Fish by Marcus Pfister
Corduroy by Don Freeman
The Snowy Day by Ezra Jack Keats
The Runaway Bunny by Margaret Wise
Guess How Much I Love You by Sam McBratney

இவை எல்லாம் நூலகத்தில் இருக்கும் லிஸ்ட் இல் சிறந்த புத்தகங்களாக இருப்பவை.

என் கதை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உதவிய அம்பிகா அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள். கதைகள் கேட்ட, வாசித்த அனுபவத்தை பகிர நான் அழைக்க விரும்புவது

ராகவன் நைஜீரியா
தெகா
ராமலெட்சுமி

விருப்பமிருந்தால் தங்களின் அனுபவங்களை பகிருங்களேன், அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

Monday, March 29, 2010

Love in Heathrow



"ஒரு ஊரில ஒரு அம்மா, அப்பா இருந்தாங்களாம். அவங்களுக்கு ஒரு பொண்ணு இருந்துச்சாம். அந்த பொண்ணுக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அவங்க அப்பா ஒத்த காலில நின்னாறாம், ஆனா, அந்த பொண்ணை நல்லா படிக்க வைக்கணும்னு அந்த பொண்ணோட அம்மா அப்பாகிட்ட சண்டை போட்டாங்களாம். கடைசியல அவங்க அம்மா சொன்னது போல நல்லா படிச்சதாம் அந்த பொண்ணு.

படிச்சு முடிச்சவுடனே அந்த பொண்ணுக்கு வேலை கிடைச்சதாம். அந்த வேலையில இருந்து அந்த பொண்ணை வெளிநாட்டுக்கு அனுப்புனாங்களா, அங்க அந்த பொண்ணு போனப்போ அங்க ஒரு பையன பார்த்ததாம். அந்த பையன் இந்த பொண்ணோட friend ஓட friend டாம். அந்த பையனுக்கு இந்த பொண்ணை ரொம்ப பிடிச்சு போனதாம். அந்த பையன் என்னை கல்யாணம் பண்ணிகிறயான்னு கேட்டாராம். இந்த பொண்ணும் சரின்னு சொல்லிடுச்சாம்.

அப்புறம் அந்த பொண்ணு மேல் படிப்பு படிக்க ஆரம்பிச்சுடுச்சாம், அந்த பையன் அமெரிக்கா வந்துட்டாராம். அப்புறம் அவங்க ரெண்டு பெரும் போன்லயும், இண்டர்நெட்லையுமே லவ் பண்ணினாங்களாம்.

அப்புறம் ஒரு நாள், அந்த பொண்ணோட அம்மாகிட்ட தான் லவ் பண்ணுறத சொல்லிச்சாம் அந்த பொண்ணு. அவங்க அம்மா டென்ஷன் ஆகிட்டாங்களா, அப்புறமா நான் பையன பார்க்கணும்னு சொன்னாங்களாம். கொஞ்ச நாள் கழிச்சு பையன பார்த்த பிறகு, அவங்க அம்மாவுக்கும் பிடிச்சிடுச்சாம், அப்புறம் அந்த பையன் வீட்டுலயும் இந்த பொண்ண பிடிச்சிடுச்சாம்.

அப்புறம் மெதுவா அந்த பொண்ணோட அப்பா கிட்ட, அந்த பொண்ணோட அம்மா இதை சொன்னாங்களாம். அவரு சாதி, சனம் என்ன சொல்ல போகுதோன்னு யோசிச்சாரம். அந்த பொண்ணோட அம்மா நம்ம மக செய்யிறது சரியா தாங்க இருக்கும்னு சமாதானம் செய்தாங்களாம். அப்புறம் எல்லாரும் சம்மதிச்சு கல்யாணம் சிறப்பா நடந்துச்சாம். சரியா தம்பி" என்று ஒரு வழியா என் பையனுக்கு கதை சொல்லி முடிச்சேன்.

பொண்ணுபார்த்த/பார்க்க போன கதையை சொல்ல அனன்யா , அழைச்சிருந்தாங்க. எனக்கு அந்த அனுபவமே ஏற்படாததால, எனக்கு தெரிஞ்ச ஒரு கதை இங்கே. நன்றி அனன்யா.

நானும் என் பங்குக்கு ஒரு சிலரை கூப்பிடனும்ல

சித்ரா
பத்மா

என்னைய போல பீல் பண்ணி கதை சொல்லனும்னு நெனைச்சா சொல்லுங்கப்பா.