Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Friday, May 1, 2015

பதிவுலகில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவது எப்படி? ஓர் கைடு




  1. முதல் தகுதி உங்களுக்கு அறிவியல் தெரிந்திருக்க கூடாது. நிறைய கற்பனை வளம் இருக்க வேண்டும் 
  2. உதாரணமாக,நீங்கள் சிந்தெடிக் பையலாஜி பற்றி எழுத வேண்டும் என்று வைத்து கொள்ளுங்கள், அதற்க்கு உங்களுக்கு basic biology தெரிந்திருக்க வேண்டும் என்ச்று தேவை இல்லை. உங்களுக்கு தேவை எல்லாம் நெட்டில் தேடும்போது கிடக்கும் ஒரு சில விசயங்கள், பின்னர் இருக்கவே இருக்கு உங்கள் கற்பனை குதிரை, அதனை தட்டி விடுங்கள்.. சுடச்சுட ஒரு பதிவு தயார். பிறகு என்ன.. படிக்கும் சிலரும் இவர்களின் கதையை நம்புவார்கள். உங்களுக்கு வெற்றிதான்.
  3. யார் வந்து ப்ரூவ் கொடு என்று கேட்க்க போகிறார்கள், அப்போ பாத்துக்கலாம் அதனை எல்லாம்.
  4. அடுத்து பரிணாமம், டார்வின் மெண்டல் இவர்கள் எல்லாம் பைத்திய காரர்கள் வேலை வெட்டி இல்லதவ்வ்ர்கள், அவர்களே முன்னுக்கு பின் முரணாக பேசி இருக்காங்க பாருங்க என்று மேற்கோள் காட்ட வேண்டியது. படிக்குரவங்களுக்கு என்ன தெரிய போகுது? 
  5. உங்களுக்கு தெரியுதோ இல்லையோ அதனை பற்றி எல்லாம் யார் கேட்டா?
  6. மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடா தெரிந்து இருக்க வேண்டும், உதாரணமாக உறவுமுறை திருமணம் எல்லாம் கெடுதல் இல்லை, ஏன்னா கான்சர் பாதிப்பு இரண்டு வகை திருமணத்திலும் ஒன்றுந்தான் என்று விவாதிக்க வேணும்.
  7. நோயின்னா எல்லா மக்களுக்கும் கான்செர் இல்ல சக்கர வியாதி தானே தெரியும்,Cystic Fibrosis, Sickle Cell Anemia, Tay-Sachs Disease இதெல்லாம் உறவுகல்ல திருமணம் முடிகிறதால வருதுன்னு சொன்னா அவங்களுக்கு புரியவா போகுது..
  8. நீங்க எதைவேண்ணா எழுதுங்க , சுட்டி,தொடுப்பு எதையும் கொடுக்க கூடாது, யாரு போய்  அதை எல்லாம் சரி பார்த்துட்டு இருக்க போறாங்க..

அவ்வளவு தான், நீங்க பதிவுலக சயின்டிஸ்ட் ஆயாச்சு? பின்ன என்ன ஒரு கவர்ந்து இழுக்கிற தலைப்பை தேர்ந்தெடுத்து வச்சுடுங்க.. முடிஞ்சது கதை..
இன்னும் கூட நிறைய டிப்ஸ் இருக்கும்,  இருந்தா சொல்லுங்கப்பா, எல்லாருக்கும் உபயோகமா இருக்கும். 

நன்றி 

Saturday, October 22, 2011

கடுப்பை கிளப்பும் சிலர்!



  • அவசர அவசரமாக ஆபிஸுக்கு போய் கொண்டிருப்போம்..மீட்டிங் வேறு இருக்கும். அந்த நேரம் பார்த்து.. எல்லா சிக்னலிலும் ரெட் விழுந்து சதி செய்யும். சிக்னலில் நிற்கும் போது,  நமக்கு முன்னால் இருக்கும் காரில் ஒரு கிழவி உக்கார்ந்து கொண்டு இடைவிடாது  மேக்கப் தலை சீவுதல் என்று படுத்தும் பாருங்க.., சிக்னல் விழுந்தபின்னும் காரை எடுக்காமல் கடுப்பை கிளப்பும்.

  • மாலையில் எப்படியாவது சீக்கிரம் ஆபிஸிலிருந்து வீட்டுக்கு வந்துடனும்னு வேக வேகமா வர நினைப்போம். அப்போது சிங்கிள் லேன் ரோடுல  யார் கூடயோ செல்போனில் பேசி கொண்டு 45 மைல் ஸ்பீடு லிமிடில் வெறும் 15 மைல் ஸ்பீடில் உருட்டி கொண்டு செல்லும் சிலர்.


  • விழுந்து விழுந்து வேலை செய்து முடித்து இருப்போம், ஸ்டேடஸ் அப்டேட் மீட்டிங்கில் பெரிய தலை ஒருத்தர் வந்து ஒரு ஐடியா சொல்லுவார், நாம அந்த ஐடியாவை முதல்லயே சொல்லி இருப்போம்..ஆனா அப்போ , மேனேஜர் அதை ரிஜெக்ட் பண்ணி இருப்பார். இப்போ, பெரிய தலை நாம சொன்னதையே சொல்லுவார்.ஆகா, ஓகோ ஐடியா பிரமாதம்னு பெரிய தலைக்கு ஜால்ரா போடுவாரு பாருங்க நம்ம மேனேஜர்..அந்த ஜால்ரா சத்தம் காதை கிழிக்கும்.

  • நான் அடிக்கடி சந்திக்கும் நபர்கள் இவர்கள்.. முக்கியமாக இந்தியர்களாக இருப்பர். முதல் சந்தித்து ”ஹெல்லோ ஹவ் ஆர் யூ?”, என்று சொல்வதில் ஆரம்பித்து...வரிசையாக தன்னை பற்றி ஒரு அறிவுஜீவி  என்றெல்லாம் அடுக்க ஆரம்பிப்பார்கள். நானும் பெரிய ஆள் தான் போல இவரு என்று நினைக்க ஆரம்பித்து சப்ஜெட் சம்பந்தமாக ஒரு சாதாரண கேள்வி கேட்பேன்...அதற்கு கேனத்தனமாக எதாவது பதில் சொல்வார்கள். ”எதுக்கு இந்த பந்தா?” என்று கேட்க எனக்கு நாக்கு வரை வந்துவிடும்.
  • சப்ஜெட் ஒன்னுமே தெரியாட்டியும்...அதை தெரியும் இதை தெரியும், யானையை குதிரையாக்குவேன்..என்றெல்லாம் எல்லார் முன்னாலும் பிலிம் காட்டியே பிரமோஷன் வாங்கி பிழைப்பை நடத்தும் சிலர்.
  • மாங்கு மாங்குன்னு ரிசெர்ச் பண்ணி ஒரு டாபிக் பத்தி பிளாகுல எழுதி இருப்போம்...பத்து பேரு தான் வந்து நம்ம பிளாக்கை படிச்சு இருப்பாங்க... பரவாயில்ல பத்து பேராவது படிச்சிருக்கங்க அப்படின்னு சந்தோசமாகியிருப்போம்..ஆனா சுண்டியிழுக்கிற தலைப்பை வச்சு பிளாக் போஸ்ட் முழுக்க மொக்கை போட்டு இருப்பார் ஒருத்தர்..அவருக்கு கூட்டம் அள்ளும்..ஆனாலும் எனக்கு விசிடர்ஸ் கம்மியாயிடாங்க ஹிட்ஸ் கம்மியாயிட்டதுன்னு புலம்பு புலம்புன்னு புலம்புவார் பாருங்க.
  • எனக்கெல்லாம்,பத்து பேரு வந்து என்னோட பிளாக்கை படிச்சாலே பெரிசு..இதி்ல   ஓட்டு பெட்டி..தமிழ்மணம் ராங்கிங்கில் வருவதற்கு நடக்கும் அடிபிடி சண்டைகள் எல்லாம் பார்க்கும் போது கடுப்பு வரும் பாருங்க.

Thursday, January 27, 2011

எல்லாம் பயமயம்!

`தெனாலி படத்தில் கமல் ஒரு பயந்தாங்குளியாக நடித்திருப்பார். ஜெயராமை சந்திக்கும் முதல் காட்சியிலேயே தனக்கு எதை எதை பார்த்தால் பயம் என்று ஒரு லிஸ்ட் வாசிப்பார். அந்த லிஸ்ட் இல் புல் முதல் வெடிகுண்டு வரை இருக்கும்..

உண்மையில் ஒருவருக்கு இப்படி பய உணர்வு இருக்குமா என்று நான் யோசித்தது உண்டு. ஆனால் உன்மையில் மனிதர்களுக்கு இருக்கும் பய லிஸ்ட் மிக பெரியது என்று தோன்றுகிறது.
உதாரணமாக..
  1. முடி கொட்டிட்டா என்னாவது?
  2. பரு அல்லது சுருக்கம் வந்தால் முகம் அசிங்கமாயிடுமோ?
  3. லேட்டஸ்ட் மாடல் பொண்ணை/பையனை போல டிரஸ்/ செல் போன்/பைக்வாங்காட்டி யாரும் நம்மை பார்க்க/மதிக்க மாட்டாங்களோ?
  4. அந்த பொண்ணு/பையன் என்னை கிண்டல்/சைட் அடித்தால்/அடிக்காட்டி என்ன செய்வது?
  5. வாத்தியார் எல்லார் முன்னாடியும் திட்டினால் என்னாவது?
  6. ப்ரோமோஷன் கிடைக்கா விட்டால் என்னாவது?
  7. மெமோ கிடைத்து விட்டால் என்ன செய்வது?
  8. வேலையை விட்டு தூக்கிவிட்டால் என்ன செய்வது?
  9. பதவி போயிட்டா என்னாவது?
  10. பக்கத்து வீட்டுக்காரன்/காரி என்னை பத்தி என்னா நினைப்பா?

இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே இன்னும் பெரிய லிஸ்ட் கட்டாயம் இருக்கும்

உண்மையில் நமது சமுதாயம் சிறுவயது முதலே நமக்கு பயங்காட்டியே ஒழுக்கத்தை சொல்லி கொடுத்து இருக்கிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக "
பூச்சாண்டி பிடிச்சிட்டு போயிடுவான்", "பிள்ளை பிடிகிறவன் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்", "சரியா சாப்பிடாட்டி பூனை வந்துடும்"என்று குழந்தையை ஒழுக்கமாக வளர்க்க பயத்தை உண்டாக்குகிறோம்.

சிறுவர்கள் ஆன பிறகு இது போன்று எதுவும் கிடையாது என்பதில்லை, அப்பொழுது வேறு மாதிரியான பயஉணர்வு ஏற்படுத்தி ஒழுக்கத்தை போதிக்கிறோம். உதாரணமாக, "ஒழுங்கா சாப்பிடாட்டி TV கிடையாது", "ஒழுங்கா ஹோம்வொர்க் பண்ணாட்டி கிரிக்கெட்/கேம் கிடையாது", "ஒழுங்கா படிச்சு first ரேங்க் வராட்டி vacation கட் " போன்றவை.

இதனை போன்ற பயத்தின் மூலம் ஒழுக்கம் என்பது பெரியவர்கள் ஆன பிறகும் தொடர்கிறது. உதாரணமாக "தப்பு செய்தால் போலீஸ் பிடிக்கும்", "பாவம் செய்தால் நரகத்துக்கு போவோம்", "படிச்சு, பாஸ் செய்யாட்டி வேலை கிடைக்காது" என்பது போன்ற சில.

அரபு நாடுகளில் கடுமையான தண்டனைகள் தரப்படுவதால் தான் அங்கு குற்றம் நடப்பதும் குறைவாக இருக்கிறது. அதனாலேயே தமிழ் திரைஉலகில் அந்த காலத்து வாத்தியார் படங்களில் இருந்து இந்த காலத்து அன்னியன் வரை பல படங்கள் இதனை வலியுறுத்துகின்றன.

தண்டனை கிடைக்கும் என்று தெரிந்துகொண்டே குற்றம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் இருக்கும் இந்த நாட்களில் ஒருவர் ஒரு கிராமத்துக்கு வந்து “நான் 10 தங்க பார்களை உங்கள் கிராமத்துக்கு தருகிறேன், போலிஸ் எல்லாம் பிடிக்காது, யாரேனும் ஒருவரை கொலை செய்ய முடியுமா?” என்று கேட்டால் அந்த கிராமத்து மக்கள் என்ன செய்வார்கள், கொலை செய்வார்களா? இல்லை பணத்துக்காக பாவம் செய்யாமல் இருப்பார்களா?

என்ன இது லூசு தனமா இருக்கு என்று நினைகிரீர்களா? இப்படி ஒரு சூழலை மையமாக கொண்டது தான் நான் இப்பொது வாசித்த Paulo Cohelco வின் புத்தகமான The Devil and miss Prym இல் கேட்கப்படும் கேள்வி இது..என்ன செய்வார்கள் அந்த கிராம மக்கள் நீங்களே சொல்லுங்கள்.

Wednesday, January 12, 2011

ஆட்டோகிராப்!

சிறு வயதில் நாம் இருந்த ஊர், வீடு பள்ளி போன்றவை எப்போதும் மனதில் நிற்கும். அதற்க்கு பிறகு எத்தனை வீடு, ஊர், மாநிலம், நாடு மாறினாலும் எப்போது நினைத்தாலும் அந்த பழைய வீடு கண்முன் வந்து நிற்கும்.

எனக்கு எப்போது இந்தியா பற்றி நினைத்தாலும் நான் சிறு வயதில் இருந்து இந்தியாவை விட்டு வெளியில் வரும் வரை நாங்கள் வசித்த அந்த வீடு நினைவிற்கு வரும்..எனது சிறு வயது நண்பர்கள், பள்ளி தோழிகள், பக்கத்து வீட்டு எதிர் வீட்டு நண்பர்கள் என பலரும் நினைவுக்கு வருவார்கள்.

பள்ளி முழுப்பரிட்சை முடிந்து லீவு விட்டதும் என் நண்பர்களில் பலர் அவரவர் தாத்தா பாட்டி வீட்டுக்கு போகிறோம் என்று சொல்லி செல்வார்கள் அப்போதெல்லாம் எனக்கும் அவர்களை போல தாத்தா பாட்டி வீட்டுக்கு போக வேண்டும் என்று தோன்றும், ஆனால் வாய்ப்பு வாய்த்ததில்லை. அதற்காகவே என் அம்மா கோவிலுக்கு, கடை வீதிக்கு என்று அழைத்து செல்வார்கள்.

அதிலும் சித்திரை மாதம் வரும் சித்திரை திருவிழா மறக்க முடியாதது. எல்லா நாட்களும் சாமி சுத்தி வருவதை பார்க்க சாயங்காலம் கிளம்பி விடுவோம். அப்புறம் மீனாட்சி கல்யாணம், தேர், பூபல்லாக்கு, அழகர் ஆத்தில இறங்குறதுன்னு சித்திரை திருவிழா முடியும் வரை ஒரே கொண்டாட்டம் தான்..

பிறகு மறுபடியும் போரடிக்க ஆரம்பிக்கும் போது, என் அம்மா, என்னை தையல் கிளாஸ் போ, பாட்டு கிளாஸ் போ என்று விரட்டுவார்கள். நான் போகவே மாட்டேன்! பிறகு ஒரு வழியாக போக ஆரம்பிக்கும் போது ஸ்கூல் திறந்து விடும்..அப்புறம் மறுபடியும் ரௌடீன் ஆரம்பித்து விடும்..

சிறுவயதில் நான் அனுபவித்த அந்த நாட்களை போல முகுந்துக்கு கிடைக்குமா என்று நினைத்தால் ஒரு சில நேரம் அவனை பார்க்க பாவமாக இருக்கிறது. பாதி நேரம் என்னையும் ரங்கமணியும் விட்டால் அவனுக்கு விளையாட எந்த ஆட்களும் இல்லை.

அதனாலேயே அவனை இங்கு லைப்ரரி களில் நடக்கும் ஸ்டோரி டைம்முக்கு அழைத்து செல்கிறேன். அதில் அவன் வயதொத்த பல குழந்தைகள் இருப்பர். ஒரு லைப்ரரியன் குழந்தைகள் புத்தகம் சிலவற்றை எடுத்து கொண்டு அதில் இருக்கும் கதைகளை வாசிக்கிறார். பல நேரங்களில் அந்த கதைகளை குழந்தைகள் உக்கார்ந்து கேட்பதில்லை இருப்பினும் சில பல விளையாட்டுகளை காட்டுகிறார் அந்த லைப்ரரியன். இந்த கதை நேரம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது, எந்த செலவும் இல்லாமல் மற்ற குழந்தைகள், பெற்றோரை சந்திக்க நல்ல வாய்ப்பு.

என்னுடைய சிறுவயதில் நான் அனுபவித்ததை போன்ற ஒரு சூழ் நிலை முகுந்துக்கு கிடக்க போவதில்லை, இருந்தாலும் இந்த ஊரில் இருக்கும் சூழ்நிலைக்கு அவன் சீக்கிரம் பழகி கொள்வான் என்று நினைக்கிறேன்.

இது இப்படி இருக்க இப்போது வேறு ஊருக்கு செல்ல வேண்டும். அமெரிக்கா வந்ததில் இருந்து நோர்த் கரோலினா வாசியாக தான் இருந்திருக்கிறேன். ஆனால் இப்போது வேலை கிடைத்திருப்பது பக்கத்து மாநிலமான ஜியார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவில், அதனால் ஜியார்ஜியா சொந்த மாநிலமாக போகிறது. இனிமேல் அங்கு சென்று நண்பர்கள், வீடு என்று back to square 1.

எத்தனை நாள் தான் இப்படி சட்டிய தூக்கிட்டு ஊர் ஊரா திரியறதோ!..எப்போ இந்தியா வந்து அக்கடான்னு இருப்போம்னு தோணுது! என்ன செய்ய காலம் தான் இதுக்கு பதில் சொல்லணும்.

Sunday, January 9, 2011

மன்மதன் அம்பு காட்டுவது என்ன?





சமீப காலமாக நான் பார்த்த படங்களில், பத்து டாலர் அழுது ஒரு கொடுமையான படத்தை ஏன் பார்த்தோம் என்று நொந்து தலையில் முட்டி கொண்டது சமீபத்தில் பார்த்த மன்மதன் அம்பு படத்தில் தான் என்று நினைக்கிறேன்.

எனக்கு சில கமல் படங்களான பஞ்சதந்திரம், தெனாலி போன்றவை எப்போது பார்த்தாலும் பிடிக்கும். ஆனாலும் மன்மதன் அம்பு போன்ற ஒரு கொடுமையான படம் கமல் படம் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை.

கமலின் தோல்விப்படமான மும்பை எக்ஸ்ப்ரஸில் கூட காமெடி நன்றாக இருந்தது என்று சொல்ல வேண்டும். இந்த படத்தில் காமெடி என்ற பெயரில் வந்த சில வசனங்கள் எனக்கு சிரிப்பை விட கடுப்பை வரவழித்தது. அதை விட மாதவனை ஒரு கேனை போல சித்தரித்து இருந்தார்கள்.

இவற்றை எல்லாம் விட என்னை மிக மிக கடுப்பேத்தியது சங்கீதாவின் காரெட்டரை அவர்கள் போட்ரேட் செய்த விதம் ..

கணவனிடம் இருந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு ஊர் சுற்றும் ஒரு பெண் அவர் என்று அவரைப் பற்றி அவரே கூறிக்கொள்கிறார்.

நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்று தான்..எத்தனை பெண்கள் இப்படி இருக்கிறார்கள்...இதில் சங்கீதா ஒரு நடிகையாக காட்டவில்லை. அவர் நடிகையின் தோழியாக தான் காட்டப்பட்டு இருக்கிறார்..

விவாகரத்து என்பது மனதளவில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்...அதுவும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம்..அதிக பாதிப்புக்கு உள்ளாபவர்கள் அவர்கள் தாம்..அப்படிப்பட்ட அவர்களை இப்படி ஜீவனாம்சம் வாங்கிக்கொண்டு ஊர் சுற்றும் பெண் என்று சித்தரித்து இருப்பது... கடுப்பின் உச்சம்..

உடனே சிலர் இருப்பதை,ஊர் உலகத்தில நடக்கிறதை தானே சினிமாவில் காட்டுகிறோம் என்று சப்பை கட்டு கட்டலாம்..எனக்கு தெரிந்து எந்த ஊரில் இப்படி நடக்கிறது என்று சொல்லுங்கப்பா...

இங்கே அமெரிகாவில் கூட எனக்கு தெரிந்த பல அமெரிக்க தோழிகள் விவாகரத்துக்கு பிறகு படும் கஷ்டத்தை கண்ணாற கண்டு இருக்கிறேன். இங்கே நிறைய சர்ச்சுகளில் விவாகரத்துக்கு பிறகு ஏற்படும் மனமுறிவுக்காகவே பல கவுன்சிலிங்குகள் நடத்தப்படுவது உண்டு...சாதாரணமானவர்களின் உண்மை நிலை இதுதான்..

உண்மை நிலை இப்படி இருக்க யாரை இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொண்டு கமல் இந்த காரெக்டரை உருவாக்கினார் என்று தெரியவில்லை...

ஒரு வேலை அமெரிக்காவில் பணத்திற்காக பணக்கார கிழவர்களை திருமணம் செய்து கொள்ளும் ஒரு சில பெண்களை உதாரணமாக அவர் எடுத்து இருக்கலாம்..ஆனால் இந்த பெண்கள் எல்லாம் 15 மினிட் fame க்காக எதுவும் செய்பவர்கள்..அவர்களை அந்த படத்தில் சங்கீதா சித்தரிக்கபட்டு இருப்பது போல ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக காட்டி இருக்க வேண்டாம்..

ஒன்றே ஒன்று இறுதியாக..Kamal disappointed us..and he made me hate him.

Sunday, March 28, 2010

பெயரில் என்ன இருக்கிறது

"ஏம்மா இப்படி ஒரு பெரிய பேரை எனக்கு வச்சிங்க" என்று அம்மாவிடம் நான் சிறு குழந்தையாய் இருக்கும் போது அடிக்கடி கேட்டதுண்டு.

"நீ நல்ல படியா பொறக்கனுன்னு நான் சாமிகிட்ட வேண்டிட்டனா, அதனால தான் சாமி பேரை உனக்கு வச்சேன்" என்று என் அம்மா சமாதானம் சொல்வார்கள்.

எனக்குன்னு வீட்டில செல்ல பேரு இருந்ததால இது ஒரு பெரிய விஷயமா சின்ன வயதில் எனக்கு தெரியல.

அப்புறம் படித்தது எல்லாம் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் என்பதால் இளநிலை முடிக்கும் வரை என் பெயர் ஒரு பெரிய பிரச்சனை ஆனதில்லை.

பிறகு முதுநிலை படிப்புக்கு இருபாலரும் படிக்கும் கல்லூரியில் சேர்ந்தபோது என் கூட படித்த பையன்கள் எல்லாம்

"வாங்க அம்மா மாதாஜி" என்பார்கள்.

இந்தியாவிற்குள் இருந்த வரை என் பெயர் அவ்வளவு கஷ்டப்படுத்தவில்லை.

ஆனால் என் மேல் படிப்புக்காக நான் வெளிநாடு செல்ல நேர்ந்த போது என் பெயரையும் என் அப்பாவின் பெயரையும் இவர்கள் செய்த கொலை இருக்கிறதே! அது சொல்லி மாளாது.

என் பாஸ் ஒரு ஜெர்மன், அவர்கள் பாஷையில் j வை யா என்று உச்சரிப்பார்கள். நான் அங்கு சென்றவுடன் நான் சொன்னது இது தான்.

"Please dont try to pronounce my name, please call me using my pet name" என்று சொல்லிவிட்டேன். ஆனால் அதனையும் அவர் ரயி என்று தான் கூறுவார். பிறகு அதுவே என் பேராகி போனது.

என் அப்பாவின் பெயர் இன்னும் படாதபாடு பட்டது, Balasubramaniyan என்ற என் அப்பாவின் பெயர் Balpsapbramanijan என்று ஆனது. அதனையே என் student card லயும் print செய்து கொடுத்து விட்டார்கள். ஒரு semester முழுவதும் நான் அந்த பெயருடனே student கார்டு வைத்துகொண்டு இருந்தேன்.

இன்று வரை என் கணவர் என் அப்பாவின் இந்த பெயரை சொல்லி என்னை கிண்டல் செய்வதுண்டு.

நான் படித்து முடித்து விட்டு வரும் வரை என் boss ஆல் என் பெயரை ஒரு முறை கூட சரியாக உச்சரிக்க முடியவில்லை. எனக்கு பட்டம் அளிக்கும் போது அவர்கள் வழக்கப்படி என் பாஸ் என்னை பற்றி சில வார்த்தைகள் கூறி எனக்கு toast செய்ய வேண்டும். அப்பொழுதும் என் boss என் முழுப்பெயரை சொல்ல திணறியது இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது.

பிறகு அமெரிக்கா வந்த பிறகு இன்னும் விடாது கருப்பு போல துரத்தியது என் பெயர் பிரச்சனை. Driving license ஆபீஸ் சென்ற போது என் பெயரில் உள்ள எழுத்துக்களை கூட்டி பார்த்து விட்டு அங்கு இருந்த அம்மா எப்படி சொன்னார்கள்.

"35 letters in a name, Wow, You have almost all alphabets in your name" என்று.

கார்த்திகேயன் என்ற என் கணவரின் பெயர், Karth ஆகி பின் Kaath ஆகி பின் முடிவாக Scott ஆகி விட்டது.

சஞ்சீவ் sam ஆகிவிட்டது.

எழிலன் Ezi ஆகி போனது.

தமிழரசி என்ற அருமையான பெயர் Tami ஆகி விட்டது.

கண்ணன் Cannon ஆகி விட்டது.

கவின் Kevin ஆகி விட்டது.

ரங்கநாதன் Randy ஆகி விட்டது.

பெயரில் என்ன இருக்கிறது என்று முதலில் நினைத்தாலும், இங்கு வந்த பிறகு தங்கள் பெயரை எல்லாம் சுருக்கி வைத்து கொண்ட சிலரை போல நானும் பேசாமல் பெயரை மாற்றி கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

Thursday, March 4, 2010

Flashback...டொய்ங்..டொய்ங்

நேற்று இரவு எழுந்து எதாவது எழுதலாமே என்று நினைத்து கம்ப்யூட்டர் ஐ on பண்ணியவுடன்

"என்ன இப்போ எல்லாம் நடுராத்திரியில எழுந்திருச்சு blog எழுதுற மாதிரி பைத்தியம் ஆயிட்ட?" என்றார் என் கணவர்.

அட ஆமால்ல! இப்படி நான் படிக்கும் போது கூட எந்திருச்சு படிச்சதில்லையே. இப்படி ப்ளாக் நம்மளை addictive ஆக்குதோ என்று நினைச்சாலும்

"ஆமா பகல்ல உங்க பையன பாக்கவே நேரம் சரியாய் இருக்கு, எனக்குன்னு டைம் எப்போ தான் கிடைக்குது சொல்லுங்க". என்று நொள்ள சாக்கு சொன்னேன்.

"ஒரு நிமிஷம் கடந்த 5 வருஷ flashback ஐ ஓட்டி பாரு. உனக்கே புரியும்" என்று பதில் வந்தது.

உடனே என் மனதில் வளையம் வளையமாக flashback ஓடியது.

டொய்ங்..டொய்ங்..டொய்ங்..

ஐந்து வருடங்களுக்கு முன் ....டன் டட்ட டைன்

2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான் இங்கு வந்த போது எங்களுக்கு என்று நட்பு வட்டம் யாரும் இல்லை. இங்கு இருந்த நட்பு எல்லாம் என்னுடைய கணவரின் bachelor friends மட்டுமே.

என்னங்க உங்களுக்கு family ஆ யாரும் friends கிடையாதா என்று என் கணவரிடம் கேட்டேன்

"அட போம்மா, இங்க பாமிலி ஓட இருந்தா தான் நம்மளையும் பாமிலி மக்கள் ஒட்ட விடுவாங்க. இப்போ நீ வந்துட்ட இல்ல இனிமே பாரு என்னோட வேலை பாக்குறவங்க நிறைய பேர் friends ஆவாங்க" என்று பதில் வந்தது.

என்ன ஆச்சரியம் அதே போல எங்களுக்கு ஒரு group அமைந்தது. அதில் இருந்த அனைவரும் couples என்பதால் அது "couples group". அது மட்டும் அல்ல அவர்கள் அனைவர் வீட்டிலும் கணவர் வேலை பார்த்தார் மனைவி house wife. அப்புறம் என்ன! வாரா வாரம் get together தான், Virginia beach, Blue ridge parkway...etc நெறைய ஊர் சுற்றல் தான்.

அப்புறம் ஒரு ஆறு மாதத்தில் எனக்கு பல்கலைகழகத்தில் வேலை கிடைத்தது, அதன் பின் எங்க couples க்ரூபில் இருந்து நாங்கள் கழற்றி விட பட்டோம். என்ன காரணம் என்று கேட்ட போது,

"நீங்க வேலை பார்கிறதால weekend தானே உங்களுக்கு கிடைக்கும். அதில போய் உங்கள disturb பண்ண வேண்டாமுன்னு விட்டுட்டோம்" என்று பதில் வந்தது.

அப்புறம் கொஞ்ச நாள் கழித்து எங்களை போல இருவரும் வேலை பார்க்கும் ஒரு குரூப் அமைந்தது அது "all working group" அது கணவன் மனைவி வேலை பார்க்கும் couples group. அப்புறம் என்ன! weekend weekend, get together தான், நெறைய ஊர் சுற்றல் தான்.

யாரு கண்ணு பட்டுச்சோ! அப்புறம் ஒரு நல்ல நாளில் அந்த குரூப் இல் இருந்தும் கழற்றி விடப்பட்டோம். இப்போது காரணம் அவர்கள் எல்லாம் "expecting parents" ஆகி விட்டார்கள். நாங்கள் இன்னும் couples தானே. காரணம் கேட்ட போது.

"குழந்தை இருந்தா குழந்தைக்கும் ஒரு செட் வேணும்ல..நாம மட்டும் பேசிட்டு இருந்தா குழந்தைகள் எங்க போகும்". என்று பதில் வந்தது.

அப்புறம் ஒரு வழிய முக்கி தக்கி நாங்களும் "first time parents" ஆகி parents group ல join பண்ணிடலாம்னு நினைச்சா அதுக்குள்ள அவங்க எல்லாம் double century போட்டு "Two time parents" ஆகிட்டாங்க.

இப்போ என்ன பண்ணுறது? அவங்க நமளையும் ஆட்டைக்கு சேர்த்துக்கணும் னா நாங்களும் double century போடணும். இல்லாட்டி "first time parents" இருக்க குரூப் ஆகா பார்க்கணும், அதுவும் ஆம்பளை பையன் இருக்க first time parents குரூப் ஆ பார்க்கணும்..

"அப்ப தானே என் பையனுக்கும் அவன் செட்டுக்கு ஆள் கிடைக்கும்"

flashback முடிந்தது டொய்ங்..டொய்ங்..டொய்ங்.