Showing posts with label தமிழ் திரைப்படம். Show all posts
Showing posts with label தமிழ் திரைப்படம். Show all posts

Saturday, October 2, 2010

ஒரு டாலர் தியேட்டர்ம் எந்திரன் படமும்



எங்க ஊரில ஒரு ஒரு டாலர் தியேட்டர் இருக்குதுங்க. அந்த தியேட்டர் நம்ம ஊரு டூரிங் தியேட்டர் மாதிரிங்க. அதாவது எப்போ புது படம் வந்தாலும் அந்த தியேட்டர் ரிலீஸ் ஆகிறதுக்கு மூணு மாசமாவது ஆகும். அதே போல எப்போ அந்த தியேட்டர் போனாலும் கொசு, பூச்சி கடி கிடைக்கும். அந்த தியேட்டர் படம் பார்க்க டிக்கெட் விலை ரொம்ப கம்மிங்க. எப்பவுமே எந்த படம் பார்கனும்னாலும் நாலு டாலர் தான் ஆகும். அதுவும் செவ்வாய் கிழமைன்னா எந்த படம்னாலும் ஒரு டாலர் தான்.

அப்படி இருந்த அந்த தியேட்டர் க்கு இந்த வாரம் வந்தது பாருங்க ஒரு மவுசு. ஒரு படம் பார்க்க இருவது டாலர் ஆம். அதுவும் preview ஷோன்னா 35 டாலராம். என்ன படத்துக்கு இப்படி மவுசுன்னு நீங்க யூகிச்சு இருப்பீங்களே. நம்ம எந்திரன் படத்துக்கு தாங்க.

ரஜினி எவ்வளவு காசு கொடுத்தும் பார்க்க மக்கள் ரெடி இருக்காங்கப்பா. யாரை பார்த்தாலும் கேட்குற முதல் கேள்வி "எந்திரன் பார்த்தாச்சா" அப்படின்னு தான். "இல்ல நாங்க இன்னும் பாக்கல அப்படின்னு சொன்னா" ஒரு மாதிரி பார்க்குறாங்க. அப்படி ஒரு எந்திரன் மாயை உருவாக்கப்பட்டு இருக்கு.

அதை விட கொடுமை என்னன்னா, எல்லா டிக்கெட் ம் படம் போடப்படுற எல்லா நாளும் booked. இங்க இந்திய அல்லது மற்ற மொழிப்படம் எல்லாம் ஒரு வாரம் தான் போடுவாங்க

ஒரு படம் வெளியிட அதிகப்படியா ஒரு 200-300 டாலர் அந்த தியேட்டர் வாடகை கொடுக்க வேண்டி வரும்ங்க. ஒரு நாள் மூணு ஷோ ஓட்டுறாங்க. எல்லா நாளும் டிக்கெட் booked ன்னா , 150 சீட்டிங் கபாசிட்டி இருக்கிற ஒரு தியேட்டர் எவ்வளவு லாபம் வரும்ன்னு நீங்களே கணக்கு போட்டுகோங்க.

ஒரு டிக்கெட் இருவது டாலர் விக்கிறாங்கன்னா எவ்வளவு டாலர் கொடுத்து அந்த படத்தை வாங்கி இருப்பாங்க. இது எங்க ஊரில மட்டும் தான். அமெரிக்கா புல்லா யோசித்து பாருங்க. இதில இன்னொரு விஷயம் என்னன்னா எவ்வளவு பேமஸ் ஆன ஆங்கில படமா இருந்தாலும் சரி, டிக்கெட் விலை பத்து முதல் பதினஞ்சு டாலர் தாங்க.

என்ன தான் இருந்தாலும் தலைவர் மதிப்பே தனி தான். ஆனா என்ன, பந்திக்கு முந்துன்னு சொல்லுவாங்க, இனிமே தலைவர் படத்துக்கு புக் பண்ண முந்துன்னு மாத்தணும் போல.

Wednesday, May 12, 2010

சுறாவும் எங்க வீட்டு ரங்கமணியும்

"தீதும், நன்றும், பிறர் தர வாரா" கணியன் பூங்குன்றனார் எப்போதோ சொல்லி வைத்த பொன்மொழி. ஆனாலும் எங்களை போல எத்தனை பேர் தெரிந்தே குழியில் விழுபவர்கள்.

வலையுலகத்தில் கிழித்து தொங்க விடப்பட்ட சுறா படத்தை நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் பார்த்தே ஆவது என்று முடிவு கட்டி விட்டார் எங்க வீட்டு ரங்கமணி(வீட்டுகாரரை அப்படி தானே சொல்லணும்?).

படத்தை வீட்டுல உட்கார்ந்து பார்ப்பதில் ஒரு சௌகரியம் உண்டு, பிடிக்காத சீன்கள், பாடல்கள் எல்லாவற்றையும் பாஸ்ட் பார்வர்ட் செய்து விடலாம். அப்படி ஓட்டி ஓட்டி சுறாவை பார்த்த போது மிஞ்சியது என்றால் ஒரு பத்து நிமிட படம் என்று நினைக்கிறேன்.

படத்தில் எல்லாமே யூகிக்க கூடியாதாக இருந்தது, இதுல எங்க வீடு ரங்கமணி செய்த டார்ச்சர் இருக்கு பாருங்க அது சொல்லி மாளாது.

முதலில் ஹீரோ அறிமுக காட்சி வந்ததும் ரங்கமணி

"இப்போ சும்மா குத்து சாங் ஒன்னு வரணுமே",

அப்புறம் சிறிது நேரம் கழித்து

"காமெடியன் எல்லாம் அறிமுகம் செய்துட்டாங்க எங்கப்பா கனவு தேவதை தமன்னா" என்று ஒரே வருத்தம்.

பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவரே கதை சொல்ல ஆரம்பித்து விட்டார்

"பாரு இப்போ எழுந்திருச்சு வருவான் பாரு"

"அடுத்த சீன் ல அந்த பொண்ணு வரும் பாரு"

"இப்போ அந்த அம்மா அழுவாங்க பாரு"

அவர் நேரம், எல்லாம் அவர் சொன்னது போலவே வந்தது.

உடனே "நான் சொன்னேன் இல்ல" என்று பெருமை வேறு.

ஐயோ சாமி தாங்க முடியல, சுறா கொத்து பெரும் கொத்துன்னா இவர் கொத்து அதை விட பெருசா இருந்தது.

ஒரு டிஸ்கி: தமிழ் சினிமாவுக்கு கதை வேணும்னா எங்க வீட்டு ரங்கமணியை தொடர்பு கொள்ளுங்கள்.

முடிவாக படம் பார்த்து முடித்த பிறகு இருவருமே சேர்ந்து சொன்னது

"வீட்டுல உட்கார்ந்து ஓட்டி ஓட்டி பார்த்தப்போவே நம்மால் பார்க்க முடியலையே, எப்படி தான் இதுக்கு பொறுமையா ரெண்டரை மணிநேரம் தியேட்டர் ல உட்கார்ந்து பார்க்கிறார்களோ ".

பிளேடு கூட சீக்கிரம் அறுத்துரும், இந்த படம் மழுங்கடிக்கப்பட்ட ஆக்சா பிளேடு.

யாரெல்லாம் இந்த படத்தை தியேட்டர்ல போய் பார்த்தார்களோ அவர்களுக்கு "உலகின் மிகச்சிறந்த பொறுமை சாலிகள்" என்ற பட்டம் கொடுக்கிறேன்.