
ஏற்கனவே என்னுடைய முந்தய சில இடுகைகளில் ஆராய்ச்சி பட்டம் பெற முயற்சி செய்யும் பலர் படும் அவஸ்தைகளை பற்றி எழுதி இருந்தேன் பகுதி 1 , பகுதி 2, அந்த அவஸ்தைகளின் தொடர்ச்சியே இந்த இடுகையும்.
நேற்று நெடுநாளைக்கு பிறகு என்னுடைய நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. என்னுடைய ஜூனியர் அவர். இந்தியாவில் இருந்து இங்கு மேல்படிப்புக்காக வந்தவர். கிட்டதட்ட ஐந்து வருட இடைவெளியில் சந்தித்தால் எனக்கு ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறி இருந்ததாக தோன்றியது. பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு பேசிகொண்டிருந்த போது "எப்போ கிராஜூவேட் ஆன? " என்று நான் கேட்டது தான் தாமதம் அவர் முகம் சுருங்கி எதோ போல ஆகி விட்டது. பின்னர் ஒருவாறு பேச்சை மாற்றி வேறு பேச்சு பேச ஆரம்பித்து விட்டோம்.
பின்னர் வேறு ஒரு நண்பர் மூலமாக நான் அறிந்தது இது தான். என்னுடைய நண்பர் படிப்பை தொடர்ந்த போது, அவருடைய பாஸ் அவருக்கு ஒரு புது உயிரினத்தை அதாவது அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாத ஒரு உயிரினத்தை அவரின் ஆராய்ச்சிக்கு கொடுத்து இருக்கிறார். இது போன்று யாரும் ஆராய்ச்சி
செய்யாத உயிரினத்தை கொடுத்து ஆராய்ச்சி செய்ய சொல்லுவது ஒரு சூதாட்டம் மாதிரி. நல்ல ரிசல்ட் வந்தால் நல்ல மதிப்பு மற்றும் நல்ல ஜேர்னலில் ஆராய்ச்சி கட்டுரை என்று எல்லாம் நல்ல படியாக நடக்கும். மாறாக ஒன்றும் வரவில்லை என்றால் எல்லாமே ஆப்பு ஆகிவிடும்.
”புது உயிரினம் அதனால் நல்ல எதிர்காலம் உனக்கு இருக்கிறது” என்று அவருடைய பாஸ் பிரைன் வாஷ் செய்து இருக்கிறார். இவரும் நம்பி இறங்கி இருக்கிறார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட உயிரினம் செயற்கையான லேப் சூழ்நிலையில் வளர மறுக்க.அவருக்குஅதனை எப்படி லேபில் வளர வைக்க என்று ஆராயவே அவருக்கு சில வருடங்கள் பிடித்திருக்கிறது. பின்னர் புது உயிரினத்தில் நடத்தப்படும் அடிப்படை சில டெஸ்டுகள் நடத்தி முடிக்க அவருடைய ஆராய்ச்சி காலமும் முடிந்திருக்கிறது, பின்னர் ஒரு வருடம் எக்ஸ்டென்ஷன் வாங்கி அவர் தொடர்ந்திருக்கிறார், சில பல புதிய ஆராய்ச்சிகள் செய்து முடிக்கும் தருவாயில் அவர் செய்தது போன்ற அதே ஆராய்ச்சிகள் வேறொறுவர் செய்து ஜர்னலில் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறார். அதனை காரணமாக காட்டி அவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் எங்கும் வெளியிட படவில்லை.
ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்படாததால் அவருக்கு முனைவர் பட்டமும் கொடுக்கப்படவில்லை. இந்தியாவில் இருந்து ஸ்டூடண்ட் விசாவில் வந்ததால் அதுவும் முடிந்து விட்டு இருக்கிறது, இப்பொதைக்கு அவர் 5 வருடங்களுக்கு முன் எந்த நிலையில் இந்தியாவில் இருந்து வந்தாரோ அதெ போல வெறுங்கையுடன் இந்தியா திரும்ப வேண்டிய நிலை. இடையில் திருமணம் வேறு.
ஒரு ஆராய்ச்சி மாணவன் நல்ல படியாக தீசிஸ் எழுதி பட்டம் பெறுவது என்பது முழுக்க முழுக்க அவனது ப்ரோபாசர் கையில் இருக்கிறது. அவர் நல்லவராக அமைந்து விட்டால் எல்லாம் நல்லபடியாக இருக்கும், இல்லாவிட்டாலோ, எல்லாம் சர்வநாசம் ஆகிவிடும்.