Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Thursday, July 28, 2011

ஹீலா ஹீலா - செத்தும் கொடுத்தார்

மருத்துவ ஆராய்ச்சி உலகில் இருக்கும் அனைவருக்கும் HeLa என்ற பெயர் மிகவும் பரிச்சயமாக இருக்கும். HeLa என்பது அழியாத மனித செல் லைன் என்று சொல்வார்கள். பொதுவாக மனித செல்கள் உடம்புக்கு வெளியே வளர்ப்பது 1951 வரை மிக மிக கடினமானது என்று கருதப்பட்டது. அவற்றை எல்லாம் முறியடித்து உடம்புக்கு வெளியேயும் செல்கள் வளர முடியும் என்று நிரூபித்தது HeLa செல்கள் மட்டுமே.

இதென்ன!, மனித செல்கள் உடம்புக்கு வெளியே வளருவதா? என்ன சொல்லுறாங்க! என்று கேட்பவர்களுக்கு திசு கல்சுர் பற்றிய சின்ன அறிமுகம்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால்

"செல்களை பெட்ரிடிஷ் எனப்படும் தட்டுகளில் வளர்ப்பது".

எப்படி செய்கிறார்கள்

"எந்த ஒரு உயிரினத்தின் செல்களை வளர்க்க வேண்டுமோ அதனை பெட்ரிடிஷ் இல் தடவி, அந்த செல்கள் அதாவது எல்லா விதமான nutrients ம் தந்து அந்த செல்கள் வளர்கின்றனவா? என்று பார்ப்பது

எதற்க்காக செய்கிறார்கள்

மருத்துவ சோதனைகளை சோதனைச்சாலை எலிகளிடமோ, மனிதர்களிடமோ செய்வதற்கு முன், உயிரின செல்களிடம் செய்து அவை எப்படி அந்த சோதனைகளை எதிர் கொள்கின்றன என்று காண்பர். இதனை போன்ற திசுக்களில் நடத்தப்படும் பரிசோதனை எந்த உயிரினத்தையும் பரிசோதனை என்ற பெயரில் துன்புறுத்துவதர்க்கு முன் செய்யப்படுவதால் திசு கல்ச்சர் ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

சரி இப்போது ஹீலா செல்களை பற்றி பார்ப்போம்

முதன் முதலில் ஆராய்ச்சி துறைக்கு நான் வந்த பொழுதெல்லாம் HeLa செல்களில் இந்த ஆராய்ச்சி நடந்தது, அந்த ஆராய்ச்சி நடந்தது என்றெல்லாம் பலர் கூற கேட்டு இருக்கிறேன். ஆனால் HeLa செல் என்றால் என்ன என்று கேட்டால் ஒரே ஒரு பதில் தான் வரும் "HeLa is a immortal cell line" அதனை தவிர வேறொன்றும் யாருக்கும் தெரியாது.

சமீபத்தில் "The immortal life of Henrietta Lacks" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது.
ஹீலா என்று மட்டுமே அறியப்பட்ட ஹென்ரிட்ட லாக்ஸ் என்ற கறுப்பின பெண்மணியின் கான்செர் செல்களே ஹீலா செல்கள் என்று அறியப்படுகின்றன என்று அறிந்த போது ஆச்சரியபட்டேன்.


போலியோ மருந்து முதல் பல பல கான்செர் மருந்துகள் வரை பலவகை மருந்துகளும் முதன் முதலில் சோதனை செய்யப்பட்டது இந்த அம்மாவின் செல்களில் தான். சொல்லப் போனால் ஒரு புது மருத்துவ மறுமலர்ச்சியையும், மில்லியன் டாலர் இண்டஸ்ட்ரியையும் இந்த செல்கள் உருவாக்கி இருக்கின்றன. இன்னும் கூட பல பல நாடுகளில் ஊர்களில் இருக்கும் பல மருத்துவ ஆராய்ச்சி கூடங்களில் இவருடைய செல்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன...

ஆனால் இவற்றை எல்லாம் நமக்கு கொடுத்த அவரோ மிக இளவயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களோ அவருடைய உடம்பில் இருந்து எடுத்த செல்களை கொண்டு திசு கல்ச்சர்இல் வளர வைத்து ஒரு பெரிய இண்டஸ்ட்ரி உருவாக்கி விட்டார்கள் ஆனால் இதனை பற்றி அவருடைய குடும்பம் துளியும் அறிந்திருக்க வில்லை.

புற்றுநோய் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் ஹென்றிட்டா மருத்துவர்களை அணுகி இருக்கிறார், ஆனால் அவர்கள் இவருடைய செல்லை எடுத்து எப்படி டிஷ் இல் வளர்க்கலாம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதிலேயே குறியாக இருந்திருககிறார்கள் அந்த மருத்துவர்கள். அதனை தவிர கதிரியக்கத்தை கொண்டு எப்படி புற்று நோய் கட்டிகளை கரைப்பது என்ற அப்போதைய புது தொழில்நுட்பத்தை அவர் மீது செலுத்தி ட்ரையல் அண்ட் எரர் முறையில் நிறைய சோதனைகள் அவர் மீது நடத்தி இருக்கிறார்கள்.

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இனவெறி அதிகமாக அமெரிக்காவில் இருந்த சமயத்தில், கறுப்பர்களுக்கு என்று தனி மருத்துவமனை, தனி வார்டு, அவர்களுக்கு அளிக்கப்பட மாற்றான் பிள்ளை ட்ரீட்மென்ட் எல்லாம் அந்த புத்தகத்ததில் படிக்கும் போது இப்போது இருக்கும் அமெரிக்காவின் ஐம்பது வருடத்திற்கு முந்தய கொடூரமான முகம் தெரிகிறது.

அவ்வளவு ஏன், ஹீலா செல்கள் யாரிடம் இருந்து வந்தன என்று கூட யாரும் அறிந்திருக்கவில்லை. எங்கே இவரிடம் இருந்து வந்தது என்று தெரிந்தால் இனவெறி பிரச்சனை வரும் என்றோ அல்லது பண பிரச்சனை வரும் என்றோ மிக ரகசியமாக அதனை மறைத்து இருக்கிறார்கள்.

எப்படியோ, முடிவாக ரெபேக்கா ஸ்க்லூட் என்ற பெண் எடுத்த அயராத முயற்ச்சியின் விளைவாக தற்போது ஹென்ரிட்டா பற்றி அறிய முடிகிறது. தானோ தன் குடும்பமோ சுகப்படாவிட்டாலும் கூட, மருத்துவ ஆராய்ச்சி உலகில் தனக்கென்று ஒரு நீங்கா இடம்பெற்று விட்டார் செத்தும் கொடுத்த ஹென்ரிட்டா லாக்ஸ் அவர்கள்.

Monday, August 30, 2010

A House for Mr Biswas - ஒரு சொந்த வீட்டுக்கான கனவு



அது மூட நம்பிக்கைகள் அதிகம் நிறைந்த கிராமம். அங்கு ஏழை ஒருவர் வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. "குழந்தை பிறந்த நேரம் சரியில்லை, அவன் ஒரு பெண்பித்தனாக ஊதாரியாக இருப்பான், தந்தை தாயை விழுங்கி விடுவான், அதனால் தோஷம் கழிய அவனை தண்ணீர் அருகில் செல்ல விடாதீர்கள்" என்று அங்கு இருக்கும் ஜோதிடர் கணிக்கிறார். அவனுக்கு மோகன் என்று பெற்றோர் பெயரிடுகின்றனர். அவனுடன் குடும்ப பெயரான பிஸ்வாஸ்ம் சேர்ந்து அவன் மோகன் பிஸ்வாஸ் என்று அழைக்க படுகின்றான்.

சில ஆண்டுகளுக்கு பின் சிறுவன் பிஸ்வாஸ் ஒரு கன்று கன்றுக்குட்டியை துரத்தி போகிறான், அது ஒரு நீரோடைக்கு அருகில் செல்ல வாழ்நாளில் நீரோடையை முதலில் பார்த்து மெய் மறந்து கன்று குட்டியை மறந்து விடுகிறான். அந்த கன்று குட்டி நீரில் விழுந்து இறந்து விடுகிறது. அதனை தேட சென்ற அவன் தந்தையும் நீரில் மூழ்கி இறக்க அங்கே ஆரம்பிக்கிறது பிஸ்வாஸ் இன் கஷ்ட காலம்.

அப்பாவை இழந்த, பள்ளிகூடத்தில் இருந்து நிறுத்தபட்ட அவன் ஒரு குருக்களிடம் வேதம் கற்று கொள்ள அனுப்பி வைக்க படுகின்றான். அவன் அம்மா மற்றும் இரண்டு சகோதரர்கள் அவன் சொந்த காரர்கள் உடன் தங்குகிறார்கள். அவன் அக்கா வசதியான அவனுடைய மாமா அத்தை உடன் சென்று தங்க குடும்பம் திசைக்கு ஒன்றாக பிரிகிறது.

சிறிது நாட்களில் குருக்கள் வீட்டில் பிடிக்காத சில விஷயங்கள் நடப்பதை அவன் பார்த்து விடுகிறான், உடனே குருக்கள் அவன் சுத்த பத்தமாக இல்லை என்று சொல்லி அவன் மாமா வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். அவன் அத்தை தன் தம்பி கடைக்கு வேலைக்கு அனுப்ப அங்கும் நடக்கும் தில்லு முல்லுகளை அவன் கண்டறிகிறான் அதனால் அங்கிருந்தும் வெகு விரைவில் வெளியேற்றப்படுகிறான்.

வெளியே வந்த பிஸ்வாஸ் தன் தாயிடம் சென்று தன்னை யாரிடம் தன்னை தங்க அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சி கேட்டு கொள்கிறான். பிறகு என்ன வேலை செய்வது என்று தெரியாமல் தெருவில் சென்று கொண்டிருந்த பிஸ்வாஸ் பள்ளிகூட நண்பனை சந்திக்கிறான். அந்த நண்பன் sign board எழுதும் வேலையை கற்றுகொடுக்க, அதனையே ஒரு தொழிலாக அவன் எடுத்து கொள்கிறான்.

சில வருடங்களுக்கு பிறகு அவன் sign-board எழுத ஒரு கடைக்கு செல்கிறான் அங்கே இருக்கும் கடைகாரர் மகளை பார்த்து காதல் கொள்கிறான் . அந்த கடை காரர் குடும்பம் அந்த ஊரிலேயே பெரிய துளசி குடும்பம் என்று அழைக்கபடுகிறது. இதனை அறிந்த அந்த கடைகாரர் அவனுக்கே அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்க அவன் அம்மாவுக்கும் மற்றைய உறவினர்களுக்கும் நிம்மதி ஏற்படுகிறது.

அவனுக்கு என்று சொந்த வீடு என்று எதுவும் இல்லாததால் துளசி குடும்பத்துடன் அவர்களின் வீடான அனுமான் ஹவுஸ் இல் தங்குமாறு அவன் தாய் கூறுகிறாள். ஹனுமான் ஹவுஸ் சென்ற சில நாட்களிலேயே அந்த வீட்டு பெண்கள் தங்கள் கணவர்களுடன் அங்கு தங்கியிருப்பது தெரிகிறது. அவர்களின் கணவன் மார்கள் அந்த வீட்டுக்கு கூலியில்லாத வேலைகாரர்கள் ஆக மாறி இருப்பதும் பிஸ்வாசுக்கு தெரிய வருகிறது.

எப்படியாவது அந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிட வேண்டும் என்று அவன் விடாமல் முயற்சி எடுக்கிறான். அவன் அனைத்து முயற்சிகளையும் துளசி குடும்பத்தினர் முறியடிக்கிறனர். ஓவ்வொரு முறை தோற்கடிக்க படும்போதும் தனக்கென ஒரு சொந்த வீடு வேண்டும் என்ற அவனது வெறி அதிகமாகி கொண்டே இருக்கிறது. பள்ளிக்கூடம் கூட தாண்டாத அவன் சிறிது சிறிதாக முயற்சி செய்து ஒரு பத்திரிக்கையாளர் ஆக மாறுகிறான்.

மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தனக்கென ஒரு வீடு கட்டுகிறான், தான் மனைவி குழந்தைகளுடன் அங்கு குடியேறுகிறான். ஆனால் அங்கு சென்ற சில காலத்தில் நாற்பது நாற்பத்தைந்து வயதிற்குள் அவன் வாழ்க்கை முடிகிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த நோபல் பரிசு வென்ற திரு. V. S. நைபால் அவர்களின் எழுத்தை உலகுக்கு அடையாளம் காட்டிய மிக முக்கியமான நாவல் இது. நாவல் நடப்பதாக காட்டப்படுவது இந்தியாவில் அல்ல. ட்ரினிடாட் நாட்டில் குடியேறிய இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதியில் கதை நடப்பதாக சித்தரிக்க படுகிறது. நைபால் அவர்களின் எழுத்து நடை கட்டிபோட வைக்கும். என்னை மிகவும் பாதித்த நாவல்களில் இதுவும் ஒன்று.

Wednesday, May 26, 2010

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மனிதன்



ஒரு கப்பல் பசிபிக் மகா சமுத்திரத்தில் சென்று கொண்டு இருக்கிறது. அதில்
ஒரு இந்திய குடும்பமும் zoo வில் இருக்கும் மிருகங்களும் அடங்கும்.

அப்போது பயங்கர புயல் வீசுகிறது, கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக கவிழ ஆரம்பிக்கிறது. இந்திய குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் அந்த குடும்பத்தில் உள்ள பதினாறு வயது பையன் " Pi " க்கு ஒரு lifeboat கிடைக்கிறது. ஆனால் அவன் அதில் ஏறுவதற்கு முன் ஒரு Hynea (ஒரு வகை ஓநாய்), ஒரு குரங்கு (Orangutan ), ஒரு அடிபட்ட வரிக்குதிரை , பின் ஒரு பெங்கால் புலி, ஏறிக்கொள்கிறது.

சில நாட்களில் ஓநாய், குரங்கையும், வரிக்குதிரையையும் தின்றுவிடுகிறது.
புலி, ஓநாயை திங்க, " Pi " க்கு பயம் பிடித்து கொள்கிறது. எப்படியாவது தன்னை
புலியிடம் இருந்து காப்பாற்றி கொள்ள பல வழிகளை கையாள்கிறான். தானே மீன் பிடித்து அதனை புலிக்கும் அளிக்கிறான். சரியான உணவும் நீரும் இல்லாததால் இருவருக்கும் கண் தெரியாமல் போகிறது, நோய் வாய்படுகின்றனர். மெசிக்கன் கரையில் boat ஒதுங்க புலி காட்டிற்குள் எங்கோ ஓடி ஒளிந்து கொள்கிறது.

மீட்கப்பட்ட " Pi " யிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கும் போது அவன் மேற்சொன்ன கதையை கூறுகிறான். ஆனால் யாரும் அதனை நம்ப தயாராக இல்லை. உடனே அவன் வேறு ஒரு கதையை கூறுகிறான், அந்த கதையின் படி "Hynea " ஒரு பிரெஞ்சு சமையல்காரனாகவும், "Orangutan " அவன் தாயாகவும் , அடிபட்ட வரிக்குதிரை ஒரு சக பயணியாகவும், புலி அவனாகவும் இருக்கிறார்கள். இந்த கதை நம்பக்கூடியதாக இருப்பதாக கூறுகிறார்கள்.

கடல் பிரயாணத்தின் போது இப்படி உணவும் குடிநீரும் இல்லாமல் தனித்து விடப்பட்டவர்கள் "Cannabalism " எனப்படும் மனித மாமிசம் சாப்பிடுபவர்களாக மாறுவது உண்டு. எப்படியாவது வாழவேண்டும் என்ற போராட்டம் அவர்களுக்கு உள் உள்ள மிருகத்தை தட்டி எழுப்பி விடும்.

அதன் படி " Pi " முதலில் சொன்ன கதையில் தனக்கு உணவு இல்லாவிட்டாலும் கூட மீன் பிடித்தாவது புலிக்கு கொடுத்து தன்னையும் காப்பாற்றி கொண்டு கொஞ்சம் மனிதனுக்கு உள்ள கடவுளை தட்டி எழுப்ப முயற்சிக்கிறான். ஆனால் யாரும் இதனை ஏற்று கொள்ளாத போது மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை பற்றி சொல்ல அனைவரும் ஏற்று கொள்கின்றனர்.

நீங்கள் என்ன நினைகிறீர்கள் முதலில் சொன்ன கதை உண்மையா? அல்லது இரண்டாவது சொன்ன கதை உண்மையா?

இது Booker பரிசு வென்ற "Life of pi " என்ற புத்தகத்தை படித்த பிறகு எனக்கு தோன்றிய சில எண்ணங்கள்.


பி.கு: எப்போதோ எழுதியது, இந்தியா செல்லும் இந்த இடைப்பட்ட காலத்தில் இருக்கட்டுமே என்று போஸ்ட் செய்து வைத்தது. நன்றி.

Tuesday, April 20, 2010

உலகம் தட்டையானது (The World is flat)




சில நாட்களுக்கு முன் தாமஸ் எல். பிரீட்மான் எழுதிய "The World is flat - உலகம் தட்டையானது ", புத்தகம் படிக்க நேர்ந்தது. சுமார் இருபது வருடங்களுக்கு முன் நாம் வாழ்ந்த காலத்திலிருந்து இப்போது இருக்கும் information age எனப்படும் அதி நவீன காலத்திற்கு நம்மை இட்டுச்சென்ற முக்கிய காரணிகளை பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை தபால், கடிதம், செய்திதாள்கள், தூர்தர்ஷன் இவைதான் இருந்தது. ஆனால் இன்று SMS பற்றி தெரியாதவரை வேற்று கிரக வாசி போல பார்க்கின்றனர். ஒரு வீட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு கைபேசி இருக்கிறது. கைபேசியுடன், டிஜிட்டல் கேமரா, இன்டர்நெட், FM ரேடியோ, ஆயிரக்கணக்கான டிவி சேனல்கள் என்று அனைத்து வசதிகளும் உண்டு. உலகின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் சில நொடிகளில் நம்மை வந்தடைந்து விடுகின்றன.

இது எப்படி சாத்தியமானது?

பிரீட்மான் அவர்களின் கூற்றுப்படி உலகத்தை தட்டையாகிய காரணிகள் சில

1 . முதல் காரணி 1989 ஆம் ஆண்டு நிகழ்ந்த பெர்லின் சுவர் இடிப்பு அல்லது சோவியத்தில் கம்யுனிசத்தின் வீழ்ச்சி - சோவித் யூனியனின் வீழ்ச்சி, அதன் பொருளாதார அமைப்பை போன்று பின்பற்றிய இந்தியா, சீனா போன்ற நாடுகளின் சந்தையை அனைத்து நாடுகளுக்கும் திறக்க வழிகோலியது.

2. இன்டர்நெட் - மனிதரின் துணை இல்லாமல் ஒரு இயந்திரம் அடுத்த எந்திரத்துடன் தொடர்பு கொள்ள உதவிய SMTP , HTTP போன்ற தொடர்ப்பு தொழில்நுட்பம் . இவை PC எனப்படும் தனிக்கணினியை ஒன்றுடன் ஒன்று இணைக்க உதவியது. Intranet ஆக இருந்த கணினி இணைப்பு பின்பு இன்டர்நெட் ஆனது இதனை போன்ற மென்பொருள்களின் உதவியால் தான்.

3 . Netscape போன்ற browser கள் - இவை இண்டர்நெட்டை ஐந்து வயது குழந்தைகளில் இருந்து எழுபது வயது பெரியவர்கள் வரை கொண்டு சேர்த்தது. அனைத்தும் virtual மயமாக்கப்பட்டது. அதாவது இங்கிருந்த படியே நான் இந்தியாவில் இருக்கும் கணினியை இயக்க முடியும்.

4 . Open source - யார்வேண்டுமாயினும் எதைவேண்டுமாயினும் எழுத, பகிர உதவும் Open source மென்பொருட்கள், வலையுலகம், விக்கிபீடியா போன்றவை.

5 . Outsourcing & Offshoring - ஓரிடத்தில் இருக்கும் வேலையை வேறு வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்புதல். பிரீட்மான்னின் கூற்றுப்படி நிறுவனங்கள் தங்களின் லாபத்தை கணக்கில் கொண்டு எங்கு கூலி குறைவாக வேலை அதிகமாக செய்து தருவார்களோ அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு outsource செய்வது . உதாரணமாக சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு செய்து தரப்படும் துணிமணி, பொம்மை, தளவாடங்கள் போன்ற அனைத்து பொருட்களும், இந்தியாவில் இருந்து செய்து தரப்படும் மென்பொருட்கள், BPO க்கள் போன்றவை. இதனால் மக்களிடம் ஏற்பட்ட பணப்புழக்கமும் ஒரு காரணம்.

இவை எல்லாம் பிரீட்மான் அவர்கள் சொல்லும் உலகம் தட்டையானதிற்க்கான சில காரணிகள். இதனை எல்லாம் சொல்லிவிட்டு அவர், அமெரிக்கர்கள் உலகத்துடன் போட்டியிட வேண்டுமாயின் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதெல்லாம் சரி தான், ஆனால், நேற்று என்னுடைய கணவர், தான் இந்தியா பற்றி ஒரு செய்தி படித்ததாக கூறினார். அது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை. அதன் படி இந்தியாவில் இருக்கும் கழிவறைகளின் எண்ணிக்கையை விட கைபேசிகளின் (cellphone) எண்ணிக்கை அதிகம் என்று அது தெரிவிக்கிறது.

ஆமாம், உலகம் தட்டையாகி விட்டது. கழிவறைக்கு கூட கைபேசி எடுத்து செல்கின்றனர் சிலர். ஆனால் கழிவறை தான் போதுமான அளவு இல்லை.