Showing posts with label குழந்தை வளர்ப்பு. Show all posts
Showing posts with label குழந்தை வளர்ப்பு. Show all posts

Sunday, October 13, 2019

குழந்தைகளும், பொறுப்புணர்வும்!!


picture adopted from
https://www.isd197.org/news/news_archives/2015-16_news_archives/realistically_raising_a_responsible_child#.XaNSxS-ZOgQ

பெரும்பாலான பெற்றோரிடம் இருக்கும் குழந்தைகள் பற்றிய முதல் கவலை என்னவாக இருக்கும் என்றால், "எப்படி பொறுப்பா வர போறானோ/போறாளோ தெரியல , எப்போ பாரு டிவி/கம்ப்யூட்டர்/போன்/ கேம்ஸ்  அப்படின்னு திரியுறாங்க?" என்பதாக இருக்கும்.


இது பொதுவாக உபயோகப்படுத்தப்படும் ஒரு வாக்கியம் என்றாலும், கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால், பல அர்த்தங்கள் கொண்டது.

பொறுப்புணர்வு என்று எதனை குறிக்கிறோம்?

1. ஒரு காரியத்தை கொடுத்தால், அதனை முழுமையாக தொடக்கம் முதல் முடிவு வரை முழுமையாக  செய்து முடிக்கும் தன்மையா?

2. வார்த்தை சுத்தம், தொழில் சுத்தம், வார்த்தை மாறாமல் சொன்னதை செய்யும் தன்மையா?

3. கொடுத்த காலக்கெடுவுக்குள் ஒரு காரியத்தை செய்து முடிக்கும் தன்மையா?

4. உங்களின் முழு திறமையும் செலுத்தி காரியம் முடிக்கும் திறனையா?

5. தவறு செய்தாலும் நன்மை செய்தாலும், அதனால் விளையும் விளைவின் பலனை ஏற்றுக்கொண்டு கலங்காமல் இருக்கும் திறனிலா?

6. தான் சார்ந்த குடும்பத்துக்கு, வேலைக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகத்துக்கு ...தன்னால் ஆன பங்களிப்பை  கொடுத்து நல்ல பேர் வாங்குவதையா?

இப்படி சொல்லி கொண்டே போகலாம். "பொறுப்பு" என்ற ஒரு வார்த்தை பன்முகம், பல பரிமாணங்கள் கொண்டது. ஆயினும், ஒவ்வொரு குழந்தையும் மேலே குறிப்பிட்ட அந்த பல பரிமாணங்களையும் எப்படியாவது கற்று கொள்ள வேண்டும், அல்லது பெற்றோர் அதற்க்கு உதவ வேண்டும்.இது பள்ளி, கல்லூரி, வேலை, குடும்பம் என்று அனைத்து இடங்களுக்கும் பொருந்தும்.

பொறுப்புணர்வும், கீழ்ப்படிதலும் 

பொறுப்புணர்வு என்று சொன்னாலே பெருபாலான பெற்றோர் அதனை கீழ்ப்படிதல் என்று நினைத்து கொள்கிறார்கள். அதாவது, "நான் என்ன சொல்லுறேனோ/எதிர்பார்க்கிறேனோ, கேட்டு , பதில் கேள்வி எதுவும் கேக்காமல், அதன் படி(யே) நடக்கணும்/செய்யணும் " , இது கீழ்ப்படிதல்.

ஆனால் பொறுப்புணர்வு என்பது " எவரும் இதனை செய், அதனை செய் என்று சொல்லாமல் தானாகவே  எது செய்யவேண்டியதோ, அதனை தானாக செய்வது".

இரண்டுக்கும் ஒரு மெல்லிய கோடு அளவு வித்தியாசமே. அது, "பிறர் எதிர்பார்ப்பு" என்பது போய்  "தானாக முடிவெடுக்க முடியும்" என்ற ஒரு உணர்வு வரும் போது பொறுப்பு வந்துவிட்டது என்று உணரலாம்.

சொல்லப்போனால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை, அவர்கள் பெரியவர் ஆன பின்பும் கூட, கீழ்ப்படிதல் கொண்ட ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் தவிர, பொறுப்பானவர் ஆக, தானாக முடிவெடுக்க முடிந்தவர் ஆக, அல்ல. தான் சொல்லுவதை கேட்க வேண்டும், பதில் ஏதும் சொல்லாமலே, அப்படியாயின் அவர், பொறுப்பான பிள்ளை. இல்லை எனில் "சொன்ன பேச்சு கேக்காத தறுதலை"

எப்படி பொறுப்புணர்வை வளர்ப்பது?

எப்போது கீழ்ப்படிதல் எதிர்பார்ப்பு என்பதுபோய்  பொறுப்புணர்வு எட்டிப்பார்க்கும்? எவ்வளவு தூரம் குழந்தைகள் கையை பிடித்து நடக்க சொல்லி கொடுப்பது? அல்லது எப்படியாவது போ?  என்று தண்ணீர் தெளித்து விடுவதா? அல்லது எப்போது அவர்களாகவே சென்று கற்றுக்கொள்ளட்டும் என்று விடுவது? எப்போது அவர்க ளுக்கு நம் அறிவுரைகள் தேவை என்று அறிவது? இப்படி பல பல கேள்விகள்.

எப்போதும் பிள்ளைகள் நம் கண்ட்ரோலில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோரின் முதல் முதல் பயமே, "நம்ம கண்ட்ரோலில் இல்லை எனில், பிள்ளை தவறான பாதையில் போயிடும், பின்ன நமக்கு தான் பெரிய பாரம், வேலை" என்ற எண்ணத்திலே , விரல் நுனியில் பிள்ளைகளை வைத்துஇருக்கிறார்கள் . ஆனால், இப்படி வைத்திருப்பின், உங்கள் கட்டளைகளை கேட்கும் ஒரு ரோபாட் போல அவர்கள் இருப்பார்களே தவிர, எப்போது எதனை செய்தால் நல்லது, என்று முடிவெடுக்கும் பக்குவம் தெரியாதவர்களாக இருப்பார்கள்.

அதனால், இது உன்னுடைய வேலை, அதனை எப்படி செய்வாயோ அது உன்னுடைய திறமை. ஆனால் இதன் இறுதி நாள் அடுத்தவாரம் , அதற்குள் எப்படி முடிக்க முடியுமோ, முடித்து கொள். ஏதேனும் உதவி தேவை படின் கேள்? என்று சொல்லலாம்.


எப்போது உதவுவது, எப்போது உதவாமல் இருப்பது என்று அறிவது ஒரு கலை 

எப்போது உதவுவது, எப்போதுகுழந்தைகளை சுதந்திரமாக முடிவெடுக்க விடுவது என்று அறிவது என்பது எளிதான விஷயம் அல்ல.

மிகவும் கண்டிப்பாக,நான் சொல்லுவதை கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றுநினைப்பதும் தவறு , என்ன வேண்டும் என்றாலும் செய், எப்படி வேண்டும் என்றாலும் செய், என்று அதிகம் செல்லம் கொடுப்பதும் தவறு. ஒரு பாலன்ஸ் வேண்டும். எப்போது செல்லம் கொடுக்க வேண்டும், எப்போது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தெரிந்திருப்பது ஒரு கலை.

அன்பை பொழியும் பெற்றோர் ரோல் 

உதாரணமாக, நீங்கள் நல்ல மூடில் இருக்கிறீர்கள் எனில் குழந்தைகளோடு கருணையாக, அன்பாக அக்கறையாக, அவர்கள் சொல்லுவதை காது கொடுத்து கேட்டு அவர்களோடு விளையாடி கொண்டு, உதவி கொண்டு இருக்கலாம்" இந்த நேரத்தில், நீங்கள் எந்தவித  எதிர்பார்ப்பில்லாத அன்பை குழந்தை மீது நீங்கள் செலுத்துகிறீர்கள்.

ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ரோல் 

நீங்கள் எல்லா நேரத்திலும், மேலே சொன்னது போல, அன்பை பொழிந்து  கொண்டிருப்பேன், உண்மை வாழ்க்கை நிலவரம் குழந்தைகளுக்கு தெரியாது, அதனால். சிலநேரம் ஸ்ட்ரிக்ட் ஆபிசர், ரோல் நீங்கள் எடுக்க வேண்டியது வரும்.

இந்த நேரத்தில், நீங்கள் ஒரு வேலை முடிக்க 1. கால அளவு நிர்ணயிக்கலாம் 2. டிஸிப்ளின்  அல்லது இப்படி தான் செய்ய வேண்டும் என்று ஒழுக்கம் சொல்லலாம் 3. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நடத்தை சொல்லி கொடுக்கலாம். 4. உங்களின் நன் மதிப்புகள் , நற்குணங்கள், கருணை போன்றவற்றை சொல்லி கொடுக்கலாம்.

குழந்தைகள் கேட்டதை உடனே கொடுக்காமல் அவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தைகொடுக்கலாம். இது,  எனக்கு உடனே அது கிடைக்க வேண்டும் என்ற உந்துதலை கட்டுப்படுத்த உதவும். "Delayed gratification" என்பது குறைந்த மனக்கிளர்ச்சியை, "தான்/தன் சந்தோசம்" என்ற நிலையை விட்டு வர உதவும். இந்த எண்ணமே, வீடியோ கேம், இன்டர்நெட் அடிமையாக பிள்ளைகள்/பெற்றோர் கிடைப்பதற்கு அடிப்படை.

இது தான் "எதிர்பார்க்கப்படும் அடிப்படை ஒழுக்கம் " என்று தெளிவாக சொல்லி விடுங்கள். அதே போல, இதனை மீறினால் கிடைக்கும் விளைவுகளையும் சொல்லி விடுங்கள். தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளுக்கு குழந்தைகள் சந்தோசப்பட வேண்டும். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி" என்பது அவர்களுக்கு விளங்க வேண்டும்.

இது ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ரோலின் முக்கிய அம்சங்கள்.

இரண்டும் கலந்த கலவை ரோல் 

பெரும்பாலான குழந்தைகள், நீங்கள் அன்பாக, ஆதரவாக, அக்கறையாக,  சொன்னால் உங்களின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க சம்மதிப்பார்கள்.

ஆரோக்கியமான பொறுப்புணர்வான குழந்தைகள் எங்கே வளர்வார்கள் எனில், அங்கே அன்பும் கண்டிப்பும் ஒரு சேர இருக்கும் வீட்டில் தான். இந்த கண்டிப்பு, கீழ்ப்படிதல் எதிர்பார்ப்பு அல்ல, மாறாக, விளைவை சார்ந்த நல்ல தன்னம்பிக்கை கொண்டது.


  1. தன்னம்பிக்கை கொண்ட குழந்தைகள் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள். பொறுமையாக, நோக்கம் நிறைவேறும் வரை திரும்ப திரும்ப முயற்சி செய்பவர்களாக இருப்பார்கள். 
  2. தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக அதிலிருந்து பாடம் கற்று கொள்பவர்களாக இருப்பார்கள்.
  3. இறுதிவரை எடுத்த காரியத்தை செய்து முடிப்பார்கள். தேவை எனில் உதவி கேட்க தயங்க மாட்டார்கள்.
  4. அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்து இருப்பார்கள்.
  5. புதிய விஷயங்கள் செய்ய துணிவுகொள்வார்கள்
  6. ஏதேனும் தடங்கல்கள் வரின் தன்னால்  சமாளிப்பது எப்படி என்று அறிந்திருப்பார்கள்.
உனக்காக நான் இருக்கிறேன் என்ற உணர்வு கொண்டு வருவது 

சரி, "எப்படி குழந்தைகள் நாம்சரி தவறு எது  செய்தாலும் நம்முடன் பெற்றோர் இருப்பார்கள் " என்று நம்பிக்கை கொள்ள  வைப்பது 

"நான் எப்போதும் உன்னிடம் அன்பு செலுத்துவேன்" என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவது 

"நீ எனக்கு மகனாக/மகளாக கிடைத்தது என் பாக்கியம்" என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவது"

"உன்னுடன் நேரம் செலவழிப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி கொடுக்கிறது" என்று சொல்லுவது 

இது போன்ற சின்ன சின்ன செய்திகள் அடிக்கடி சொல்வதன் மூலம், குழந்தைகள் நமக்கு பின்புலமாக நம் பெற்றோர் இருக்கிறார்கள், என்று நம்பிக்கை கொள்வார்கள்.

உன்னால் முடியும் என்று ஊக்கப்படுத்துவது 

குழந்தைகளின் பொறுப்புணர்வை வளர்ப்பதற்கு அவர்களின் தன்னபிக்கை மிக முக்கியம். அதனை வளர்க்க சில வழிகளை பயன்படுத்தலாம்.

1. அவர்கள் தானாக செய்த திட்டப்பணி, படங்கள், உதவி போன்ற சிறு சிறு விஷயங்களையும் எடுத்து பாராட்டுவது. உதாரணமாக, அவர்களின் ஸ்கூல் ப்ராஜெக்ட் ஒன்றை எடுத்து கொண்டு, அவர்கள் எப்படி சிறப்பாக அதனை செய்தார்கள் என்று பாராட்டுவது.

2. வீட்டு வேலைகளில் ஏதாவது அவர்கள் உதவி இருப்பின் அதனை பாராட்டுவது.

3. அவர்கள்  ஏதாவது செய்த பிறகு,  "எனக்கு தெரியும் உன்னால் செய்ய முடியும் என்று" என்று  சொல்லுவது .

4. சொந்த பந்தங்களிடம் பரிவாக பேசும்போதோ அல்லது அவர்களுக்கு உதவி செய்யும் போதோ, அவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று அறிய வைப்பது.

5. நாமாக சொல்லாமல் அவர்களாக எதாவது ஒரு உதவி செய்திருப்பின், அவர்களின் பொறுப்புணர்வை பாராட்டுவது. 


அதீத கவனிப்பும் அதன் விளைவும் 

நான் அதிகம் கவனித்த பார்த்த இந்த தலைமுறை குழந்தைகள் பலர் சுயநல வாதிகளாக, இருப்பதற்கு நன்றியுணர்வு இல்லாதவர்களாக, இது என் உரிமை, கொடு என்று வேண்டுபவர்களாக, தன்னால் செய்ய முடிந்ததையும் பிறர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களாக, எதுவும் உடனே கிடைக்க வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களாக, தாம் செய்த தவறை ஒத்து கொள்ளாதவர்களாக, முயற்சி செய்யத்தவர்களாக, அடுத்தவர்களிடம் பகிராதவர்களாக, இருக்குகிறார்கள்.

மேலே சொன்ன அனைத்திற்கும் காரணம், பெற்றோர். தான் பட்ட கஷ்டம் தன குழந்தை படக்கூடாது என்று கேட்டதை வாங்கி கொடுத்து, அவர்கள் கேட்காததையும் வாங்கி கொடுத்து, "எல்லாமே ஈசி" என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறோம். உதாரணமாக, நீங்கள் Ipad /போன்/கேம்ஸ் என்று அனைத்தும் சிறு வயது முதலே குழந்தைக்கு கொடுப்பது 


இன்னொரு உதாரணம், குழந்தைகள் தாமாகவே செய்ய முடிந்த வேலையை செய்ய விடாமல் தானாக செய்வது. உதாரணமாக, டிவி பார்த்து கொண்டு, அது கொண்டு வா, இது கொண்டு வா என்று ஆர்டர் செய்யும் குழந்தைகள். அதனை செய்யும் பெற்றோர்.

இது தான் உன்னுடைய லிமிட் என்று தெளிவாக இலக்கு நிர்ணயிப்பது. "நோ" என்ற வார்த்தையை சொல்லுவது இவை இரண்டும் தாரக மந்திரம்.


முடிவாக, நம் நோக்கம் தன்னம்பிக்கை கொண்ட, சமூக பொறுப்பு, குடும்ப பொறுப்பு கொண்ட ஒரு பொறுப்பான ஒரு பிள்ளையை வளர்ப்பது.இது எளிதான காரியம் அல்ல,  இரு பக்கம் கூர்மையான ஒரு கத்தி மேல் நடப்பது போன்றது. அதிக செல்லமும் இல்லாமல், அதிக கண்டிப்பும் இல்லாமல் அதே நேரம், தெரிவான இலக்கு கொடுத்து வளர்க்க வேண்டிய ஒன்று. கொஞ்சம் முயற்சியும் சுய கட்டுப்படும் கொண்டிருந்தால் நிச்சயம் வெற்றி கொள்ளலாம்.

நன்றி.

Saturday, February 6, 2016

Stinky லஞ்ச் ம், பாமாயிலும், அமேசான் காடுகளும்!

முகுந்துக்கு சில மாதங்களாக லஞ்ச் என்று எது கொடுத்தாலும், அது சாண்ட்விச் தவிர எதுவாக இருப்பினும் திரும்பி வருகிறது. அதுவும் இந்தியன் சாப்பாடு என்றால் சொல்லவே வேண்டாம். டிபன் திறக்க கூட படுவதில்லை. ஒவ்வொரு முறையும் நாம் இட்லி, சாப்பாடு என்று எது வைத்தாலும் அதனை திறந்து சாப்பிட்டால் மற்ற குழந்தைகள் stinky lunch என்று கேலி செய்வதாகவும் அதனால் தான் சாப்பிடாமல் வருவதாகவும் காரணம் வருகிறது. இது முகுந்த் மட்டும் தான் செய்கிறானா இல்லை மற்ற இந்தியன் குழந்தைகளும் செய்கிறதா என்று அறிந்து கொள்ள, முகுந்த் உடன் படிக்கும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு பையனின் டாக்டர் அம்மாவிடம் கேட்டேன். அந்த அம்மா, இங்கே சிறு வயதில் வந்தவர்கள், மிடில் ஸ்கூல், ஹை ஸ்கூல், கல்லூரி எல்லாம் இங்கே படித்து கணவன் மனைவி இருவரும்  டாக்டர் ஆனவர்கள். அவர்களிடம் இது பற்றி கேட்ட போது அவர்கள் சொன்னது இது.

சிறுவயதில் தானும் சான்ட்விச் தவிர எதுவும் பள்ளிக்கு எடுத்து சென்றதில்லை. ஏனெனில், stinky லஞ்ச் என்று இந்தியன் சாப்பாட்டை அமெரிக்க குழந்தைகள் கிண்டல் செய்வதுண்டு. அது மட்டும் அல்லாமல் தானும் மற்ற குழந்தைகள் போல இருக்க வேண்டும் என்று கிட்ட தட்ட எல்லா குழந்தைகளும் எண்ணுவதுண்டு. அதுவும் 80 களில் எல்லாம் தற்போது போல இந்தியன் மக்கள் அதிகம் இல்லாததால், மற்ற குழந்தைகளிடம் இருந்து தான் மட்டும் தனித்து தெரிய விரும்பியதில்லை அதனால், எப்பொழுதும் என் அம்மாவிடம் சண்ட்விச் மட்டுமே அனுப்புங்கள் என்று சொல்லுவதுண்டு.

 ஏனெனில், நாம் நம்ம ஊர் சாப்பாட்டை கொடுத்தால் அதன் வாசத்தை வைத்து சாப்பிடும் குழந்தைகள்  தனித்து அறியபடுகிரார்கள், அதுவே அவர்களை தனிமை படுத்துகிறது. அதிலிருந்து தப்பிக்கவே, குழந்தைகள் இந்தியன் சாப்பாடு கொடுத்தால் டப்பாவை திறப்பது கூட கிடையாது. இதனை என் பையனும் செய்தான். இது ஒரு துவக்க கால பிரச்சனை மட்டுமே, போக போக குழந்தைகள் இதனை எதிர்த்து நிற்க பழகி கொள்ளுவார்கள். யாரேனும் கிண்டல் செய்தாலும் "இது என் சாப்பாடு உனக்கு பிடிக்க வில்லை எனில் வேறு பக்கம் திரும்பி கொள், அல்லது வேறு பெஞ்ச் சென்று விடு" என்று சொல்ல பழகி கொள்ளுவார்கள்.  என் பையனிடம் இதனை சொல்லி வருகிறேன். நீங்களும் சொல்லுங்கள், இதுவும் ஒரு வகையான புல்லியிங் தான், ஆனால், குழந்தைகள் எதிர்த்து நின்றால் மட்டுமே இது முடிவுக்கு வரும். இதனை குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். சரியாகி விடும் என்று சொன்னார். எனக்கும் அதுவே சரி என்று படுகிறது. மெதுவாக சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறேன். பார்க்கலாம்.

என்றாவது ஒரு நாள் வீட்டு சாப்பாடு வேண்டாம், ஸ்கூல் கபே இல் சாப்பிடு என்று சொன்னாலும், அதுவும் பல நேரங்களில் ஒரே மாதிரியான சாப்பாடு மட்டுமே அங்கு கிடைக்கிறது. அதிலிலும் இருக்கும் நியூற்றிஷன் பார்த்தால் தலை சுற்றுகிறது.  நான் பார்த்த படித்த அடுத்த விஷயம் எல்லா பொருட்களிலும் இருக்கும் அப்படி பட்ட ஒரு நியூற்றிஷன் பற்றியது.

அமெரிக்காவில், கனடாவில் அல்லது ஐரோப்பா போன்ற எந்த மேலை நாடுளில், எந்த பொருள் நீங்கள் கடையில் வாங்கினாலும் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களும்  நேரடியாக அல்லது மறைமுகமாக ஒரு ingredient கொண்டு இருக்கும்.  அது  பாமாயில். பல் துலக்கும் பேஸ்ட் முதல் திங்கும் சிப்ஸ் வரை அனைத்திலும் இந்த பாமாயில் சேர்க்க படுகிறது.அமெரிக்காவில்  தினமும் உபயோகிக்கும் கிட்டத்தட்ட 40-50% பொருட்களில்  பாமாயில் சேர்க்கபடுகிறது என்று புள்ளியியல் தெரிவிக்கிறது.  

மிகவும் சீப் ஆன எண்ணெய், குறைந்த செலவில் அதிக லாபம் அதனால் என்ன தீங்கு என்று கேட்பவர்களுக்கு. அனைத்திலும் நீக்கமற இது நேரடியாகவோ மறைமுகமாகவோ சேர்க்கபடுவதால் இதய நோய்கள் வரும் என்று புள்ளியியல் தெரிவிக்கிறது. பாமாயிலில் அதிக  saturated fat ம்குறைந்த   polyunsaturated fat ம் இருப்பதால் இதய நோய்கள் வரும் என்பது ஒரு பக்கம் என்றாலும் இந்த பாமாயில் உற்பத்தி செய்ய நடக்கும் சுற்றுப்புற சீர்கேடுகள் அளவிட முடியாதவை. முதலில் அதிக அளவில் பனை மரங்களை நட என்று  என்று அதிக அளவில் மற்ற மரங்கள் வெட்டபடுகின்றன. முக்கியமாக அமேசான் காடுகள். அதனால் பல காட்டு மிருகங்கள் தற்போது அழிந்தது மட்டும் அல்லாது பல மிருகங்கள் கிட்டத்தட்ட எச்டின்ச்ட் அல்லது அழியும் நிலைக்கு தள்ள பட்டு விட்டன. இது ஒரு புறம் இருக்க, பனை மரங்கள் தரும் ஆக்சிஜன் அளவை விட  இயற்க்கை  மரங்கள் வெட்டபடுவதால் அதிலிருந்து கிடைக்கும் ஆக்சிஜென் அளவு மிக குறைந்து அதிக நுரையீரல் மட்டும் சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் என்று பல பிரச்சனைகளை பிரேசில் போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் வசிக்கும் பல மக்கள் அனுபவிக்கிறார்கள்.

பல தானார்வ நிறுவனங்கள் பாமாயில் எப்படி இயற்க்கை வளங்களை சுரண்டுகிறது என்பதனை குறித்து ஒரு பக்கம் கத்து கத்து என்று கத்தி கொண்டு இருந்தாலும், Embrace the Serpent என்னும் கொலம்பியா நாட்டு படம் அமேசான் காடுகள் அழிக்க படுவதால் ஏற்படும் பாதிப்புகளை கதற கதற காட்டுகிறது. இந்த படம் இந்த வருட ஆஸ்கார் போட்டிக்கு தேர்ந்து எடுக்க பட்டு இருக்கிறது. 




எப்படி எல்லாம் இயற்க்கை வளங்கள் சூறை யாட படுகின்றன அவை எப்படி நமக்கே பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று பார்க்கும் பொது, மனிதனின் பணம் சேர்க்கும் சுயநலத்துக்காக எத்தனை எத்தனை உயிர்கள் பலியாகின்றன என்று கண்ணீர் விட தோன்றுகிறது. 

நன்றி.



Sunday, September 20, 2015

பிஞ்சிலே பழுத்த பழங்கள்!

இரண்டு விஷயங்கள் காண, அனுபவிக்க நேர்ந்தது. முதல் விஷயம் கண்டது ஒரு பர்த்டே பார்ட்டியில். இந்திய பெண் குழந்தை ஒன்றுக்கு பர்த்டே என்று சென்று இருந்தோம். அந்த குழந்தை முகுந்த் உடன் பள்ளியில் படிக்கிறாள். அந்த பார்டிக்கு வந்த இன்னொரு குழந்தை முகுந்தை பார்த்து பர்த்டே குழந்தையிடம் "எப்படி ஒரு பாய் உனக்கு ப்ரெண்ட் ஆக இருக்க முடியும். கேர்ள் க்கு கேர்ள் மட்டுமே ப்ரெண்ட் ஆக இருக்க வேண்டும். பாய் ப்ரெண்ட் செட் ஆகாது" என்று ஒரே சண்டை போட்டு கொண்டு இருந்தது. உடனே நான் தலை இட்டு , "என்னமா பிரச்னை" என்று கேட்க்க, அதற்க்கு அந்த குழந்தை, "எப்படி ஒரு கேர்ள் க்கு பாய், ப்ரெண்ட் ஆக இருக்க முடியும், பாய் ப்ரெண்ட் என்றால் கல்யாணம் செய்துக்குவாங்க, இது செட் ஆகாது..ஆகாது" என்று ஒரே சண்டை 6 வயது குழந்தைக்கு எப்படி இந்த விஷயங்கள் எல்லாம் தெரியும் யார் சொல்லி கொடுக்கிறார்கள் என்று யோசித்து, "எங்க மா இதெல்லாம் கேட்ட, அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லையே" என்று நான் கேட்க்க, அவள், "சினிமால பார்த்தேன், எனக்கும் தெரியும் " என்று குண்டை தூக்கி போட்டது.

இதனை பற்றி தோழி ஒருவரிடம் புலம்பி கொண்டு  இருந்த போது அவர், இப்போ இருக்க குழந்தைகள் எல்லாம் ரொம்ப அட்வான்சா பேசுதுங்க, இதை பாரு என்று "சன் டிவி யின் குட்டி சுட்டீஸ்" யு ட்யூப்  லிங்க் ஒன்றை அனுப்பினார்.


அதில் வந்த சிறுவன் பேசிய பேச்சை பார்த்து வாயடைத்து விட்டேன். அதுவும், "இது வேறையா " என்று அசால்டாக பேசுவது, பிறகு டேய் என்று வயதில் மூத்தவரை அனைவர் முன்பும் விளிப்பது, "வாயை மூடுப்பா" "அண்ணாச்சிக்கு நட்டு கழண்டுடுச்சு", என்று கூப்பிடுவது அவரின் தாத்தாவை பார்த்து கண்டபடி பேசுவது அதனை பார்த்து குழந்தையின் அம்மா சிரிப்பது கண்டு, இதில் என்ன சிரிக்க இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

மரியாதை என்பது கிலோ என்ன விலை என்று கேட்க வேண்டும் போல இந்த குழந்தையிடம். ஒரு 4 வயது குழந்தை இப்படி பேசினால் இது வளர்ந்து பெரியவரானால் எப்படி பேசும். அப்பொழுது அவர் அம்மா இப்படி சிரித்து கொண்டு இருப்பாரா ?


என்னவோ போங்கப்பா..



Wednesday, August 12, 2015

கற்பனை திறனும், குழந்தைகளும், வெற்றியும்

“Imagination is more important than knowledge. For knowledge is limited to all we now know and understand, while imagination embraces the entire world, and all there ever will be to know and understand.”


"கற்பனை உலகில் எப்பொழுதும் வாழ்பவர்கள்" என்று கவிஞர்கள் எழுத்தாளர்களை பலர் தூற்றுவதை பார்த்து இருக்கிறேன். "கற்பனையில வாழுறத விட்டுட்டு நிஜத்தை கவனி" என்று பல பெற்றோர் தன் டீன் ஏஜ் குழந்தைகளிடம் சொல்லுவதை பார்த்து இருக்கிறேன். அதாவது, எப்பொழுதும் புத்தகம், புத்தகம், மனபாடம், முதல் மார்க் என்று இருந்தால் அவர்கள் நிஜ வாழ்கையில் வாழ்வதாகவும். கொஞ்சம் கற்பனை, படம் வரைதல், கவிதை/கட்டுரை எழுதுதல் என்று இருந்தால் அது கற்பனை வாழ்க்கை என்றும் சொல்லுகிறார்கள்,

இந்தியாவில் பல பெற்றோர்  யாரிடமாவது நீங்கள்,  "குழந்தைகளுக்கு கற்பனை திறனை கற்று கொடுங்கள்" என்று சொல்லி பாருங்கள் உங்களை ஒரு மாதிரி பார்பார்கள். நான் பார்த்தவரை, குழந்தைகள் பென்சில் அல்லது கிரையான் அல்லது ஸ்கெட்ச் பேனா வைத்து ஏதாவது கிறுக்கினால் கூட நிறைய பெற்றோர் அடிப்பதை பார்த்து இருக்கிறேன். கண்ட கண்ட இடத்தில ஏன் இப்படி கிறுக்கிற என்று சத்தம் போடுகிறார்கள். அப்படி குழந்தைகள் கிறுக்கினால் உடனே வரும் பதில், "இப்படி கண்ட இடத்தில கிறுக்காம போய் புக்கை எடுத்து படி, நிறைய தெரிஞ்சுக்கோ ".என்று நிறைய சொல்ல கேட்டு இருக்கிறேன். அதாவது இவர்களின் கூற்றுப்படி, "கனவு உலகில் வாழாமல், நிறைய விசயங்களை தெரிந்து கொள்ளுவது சிறந்தது"

 உண்மையில் நமக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு கற்பனை திறன் தேவையா? வாழ்க்கைக்கு, வாழ்க்கையின் வெற்றிக்கு கற்பனை திறன் தேவையா?

சமீபத்தில்  ஐன்ஸ்டீன் அவர்களின் கற்பனை திறன் பற்றிய மேலே குறிப்பிட்ட கூற்று படிக்க நேர்ந்தது. எத்தனை உண்மையான வரிகள் அவை. உண்மை என்னவென்றால், பெரிய அறிவியல் அறிஞர்கள் ஆகட்டும், கலைஞர்கள் ஆகட்டும்,  இன்வேண்டோர்ஸ் எனப்படும் புதிய புதிய கண்டு பிடிப்புகள் கண்டு பிடிப்பவர் ஆகட்டும் இவர்கள் எல்லாம் கொண்டிருக்கும் ஒரு திறன் அல்லது trait "Imagination" கற்பனை திறன்.

உதாரணமாக, ஐன்ஸ்டீன் அவர்களை எடுத்து கொள்ளுவோம் , இருக்கும் அறிவை தெரிந்து கொள்ளுவது மட்டுமே போதும், என்று நினைத்து நிறைய தெரிந்து கொள்ளுவதில் மட்டுமே அறிவை செலுத்தி இருந்தால், ஒரு "தியரி ஆப் ரெலேய்டிவிட்டி" அல்லது "Energy mass சமன்பாடு"கண்டு பிடித்து இருக்க முடியாது. 

நீங்கள் எவ்வளவு தான் படித்து இருந்தாலும் அல்லது உலக அறிவு பெற்று இருந்தாலும், உங்களுக்கு கற்பனை திறன் இல்லை எனில் தனித்து தெரிய முடியாது. உங்களால் ஒன்றும் புதிதாக கண்டு பிடிக்க முடியாது. அவுட் ஆப் தி பாக்ஸ் எனப்படும் வித்தியாசமாக யோசிக்க உங்களுக்கு சிந்திக்க, கற்பனை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

அதனால் யாராவது, கற்பனையில வாழாத? என்பர் சொன்னால் ஒரு சிரிப்பு சிரித்து விடுங்கள். கற்பனை இல்லாவிட்டால் எதிலும் வெற்றி பெற முடியாது. வாழ்க்கையாகட்டும், வேலையாகட்டும். எதிலும்.

சரி இப்பொழுது கற்பனை எவ்வளவு முக்கியம் என்று அறிய முடிகிறது அல்லவா?, அடுத்து, எப்படி கற்பனை திறனை வளர்ப்பது, முக்கியமாக குழந்தைகளிடம் கற்பனை திறனை வளர்ப்பது என்று பாப்போம்.

சிறு வயதில் நான்  நிறைய கதைகள் பாட்டி, அம்மா  சொல்லி கேட்டதுண்டு. அப்பொழுது அந்த கதையின் மாந்தர்கள் எப்படி இருப்பார்கள் என்று மனக்கண்ணில் ஓடும்.   

ஒரு கதை படித்தாலோ அல்லது கட்டுரை வாசித்தாலோ கதையுடன் அல்லது கட்டுரையுடன் ஒன்றாவிட்டால் நமக்கு அந்த எழுத்துக்கள் எல்லாம் வாக்கியங்களாக மட்டுமே தெரியும். என்ன சொல்ல வருகிறார்கள் என்று அறிய முடியாது. grasping பவர் அல்லது வார்த்தைகளை உருவங்களாக மனக்கண்ணில் கொண்டு வந்தால் மட்டுமே எழுத்தின் முழு பரிமாணமும் நமக்கு விளங்கும். அதே போல பின்னர் எந்த கதைகள் படித்தாலும் அல்லது செய்தி துணுக்கு வாசித்தாலும் அதில் சொல்ல வரும் செய்திகள் உங்களுக்கு விளங்கும். "Authors motive" மிக முக்கியம். என்ன சொல்ல விளைகிறார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இங்கு குழந்தைகள் முதலில் கற்று கொள்ளுவது "மேக் பிலீவ்" அல்லது "கற்பனை செய்" என்று தான்.
எப்பொழுதும் முகுந்துடன் தினமும் சில்லி சென்ட்டேன்செஸ் எனப்படும் வாக்கியங்கள் விளையாடுவது உண்டு. ஏதாவது ஒரு வாக்கியத்தை சொல்ல வேண்டும் அது கேட்பவர்களுக்கு சிரிப்பை வரவழிக்க வேண்டும். அதுதான் சில்லி செண்டென்ஸ்.  உதாரணமாக "A dolphin climbed on a mountain" .  நான் இப்படி விளையாடுவதை பார்த்து சிலர், என்ன இடியோடிக் விளையாட்டு இது என்று கேட்பார்கள். ஆனால் என்னை பொருத்தவரை, இது பயங்கர இண்டரஸ்டிங் விளையாட்டு. ஏனெனில் குழந்தைகள்  இதனை விளையாடுவதற்கு முன்பு, அந்த மிருகம் எப்படி வாழும் என்று தெரிந்திருக்க வேண்டும், பின்பு எப்படி வாழ முடியாது, என்னவெல்லாம் செய்ய முடியாது என்று அறிந்திருக்க வேண்டும். பின்பு, உங்களின் கற்பனையை பயன்படுத்தி சில்லியாக நிறைய சொல்ல வேண்டும் . அதனால் இந்த விளையாட்டு விளையாட நிறைய தெரிந்திருக்கவேண்டும், மற்றும் கற்பனை செய்ய வேண்டும்.

அதே போல, நிறைய படம் வரைய சொல்லுவது, அல்லது புல்லில் படுத்து கொண்டு மேகத்தை பார்ப்பது, பார்த்து நிறைய மேகத்தின் ஷேப் என்ன மிருகம் போல இருக்கிறது என்று கற்பனை செய்வது. பின்னர் ஒரு மிருகம் வேறு எங்காவது இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய சொல்லுவது. தினமும் புத்தகம் படிப்பது, அதில் வரும் கதை மாந்தர்கள் குறித்து விவாதிப்பது என்று நிறைய நான் விளையாடுவது உண்டு.  குழந்தைகளை நாம் கற்பனை செய்ய சொல்லி ஊக்க படுத்த படுத்த, அவர்களுக்கு உற்சாகமாக இருக்கும். நம்முடன் விளையாட சொல்லுவார்கள்.  நிறைய நெருக்கம் அதிகமாகும்.

இரண்டு நாளைக்கு முன்பு, காலையில் எழும் போது, அம்மா என்னிடம் ஒரு கதை இருக்கிறது கேள், என்று முகுந்த் ஒரு கதை சொன்னான், அது "கேட்ச் என்னும் ஒரு கம்பளி பூச்சி கதை" ஆச்சரியமாக இருந்தது அவன் சொல்வதை கேட்கும் போது. சிறு குழந்தைக்கே உரிய சில சில்லிநேச்ஸ் அந்த கதையில் இருந்தாலும், நாம் செய்யும் சிறு சிறு உற்சாகமும் அவர்களை எப்படி செதுக்குகிறது என்று கேட்க சந்தோசமாக  இருந்தது. 

சரி, இப்படி செய்வதால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு. உங்கள் குழந்தை, ஒரு புத்தக புழுவாக, நடமாடும் நூலகமாக  மட்டும் வாழ வேண்டுமா? அல்லது ஒரு இன்வேன்டோர் ஆக பெரிய பெரிய சாதனைகள் செய்ய வேண்டுமா? நீங்களே உங்கள் குழந்தைக்கு முதல் ஆசான், முடிவு செய்யுங்கள்.

நன்றி.

Sunday, March 22, 2015

சிறு குழந்தைகள் காய்ச்சலில் மெத்தனம் வேண்டாம்!

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

சில குடும்பங்களை வீட்டுக்கு கெட் டுகெதர் க்கு அழைத்து இருந்தோம். எல்லா குழந்தைகளும் நன்கு விளையாடி கொண்டிருந்தன. அவற்றில் ஓரூ 2 வயது சிறுவனும் அடங்குவர். நன்றாக விளையாடி கொண்டிருந்த அவன் திடீரென்று நடுங்க ஆரம்பித்து விட்டான். உடனே temperature பார்த்ததில் 101 காட்டியது. ஐபுப்ரொபின் கொடுத்து விட்டோம். அவன் உடைகளை கலைந்து ஸ்பான்ஜ் பாத் கொடுக்க ஆரம்பித்தோம். ஆனால் சிறிது நேரத்தில் அவனுக்கு வலிப்பு வந்து விட்டது. உடல் வெப்பநிலை திடீரென்று அதிகரிக்கும் பொது மூளை இப்படி ரியாக்ட் செய்கிறது.
உடனே 911 அடித்து பரமேடிக்ஸ் வந்து விட்டார்கள். அவர்கள் பார்க்கும் பொது அவன் உடல் 104 ஐ  கடந்து இருந்தது. 20 நிமிடத்திற்குள் 2-3 டிகிரி வெப்ப நிலையை சிறு உடல் தாங்கி கொள்ள இயலவில்லை, வலிப்பு வந்து விட்டது.  அந்த சிறுவனுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் விட்டு விட்டு வந்திருக்கிறது என்ன செய்ய போகிறது என்று இவர்கள் மெத்தனமாக இருந்து இருக்கிறார்கள்.

இப்படி வலிப்பு வந்து விட்டால் உடனே இரும்பு போன்ற எதையும் கையில் கொடுக்காதீர்கள், உடலில் உள்ள ஆடைகளை அவிழ்த்து நிறைய தண்ணீர் ஒத்தடம் கொடுங்கள், நிறைய காற்று படும் இடத்திற்கு குழந்தையை தூக்கி சொல்லுங்கள், தண்ணீர் கூட கொடுக்க வேண்டாம். இப்படி காய்ச்சலால் வரும் வலிப்பு 3 நிமிடத்திற்குள் இருக்கும். குழந்தை பிறந்த 30 நாட்களுக்குள்  இருப்பின் உடல் வெப்பம் 100.4 டு 101 காட்டுகையில் மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது. இப்படி அழைத்து செல்வது Meningitis போன்ற மூளை காய்ச்சல் வருவதை தவிர்க்கும். மூளை காய்ச்சல் கவனிக்காமல் விட்டால் வலிப்பு, பேச்சுத்திறன் இழத்தல், கண்பார்வை இழத்தல் போன்ற பல ஆபத்துகளை ஏற்படுத்த வல்லது.

அதே போல 5 வயதிற்கு கீழே உள்ள குழந்தைக்கு காய்ச்சல் ஐபுப்ரொபின்  6-8 மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுத்தும் ககுறையாமல்  இருந்தால் TYLENOL இடையே 4-6 மணி நேரத்திக்கு ஒரு முறை கொடுக்கலாம். உடல் வெப்பநிகை 101 ஐ தாண்டாமல் பார்த்துகொள்வது மிக அவசியம்.

இன்னும் சில அனுபவ குறிப்புகள்.

சிறு குழந்தைகள் 3-4 நாட்களாக DRY COUGH  எனப்படும் வறட்டு இருமல் மற்றும் காய்ச்சல் கொண்டிருந்தால் ear infection ஆக இருக்கலாம்,

சிறு குழந்தைகளுக்கு சளி, மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் இருப்பின் வைரல் காய்ச்சல் ஆக இருக்கலாம். சளியின் நிறத்தை வைத்து bacterial அல்லது vairal  infection என்று சொல்கிறார்கள். அதாவது சளியின் நிறம் தெளிவாகவோ அல்லது வெள்ளையாகவோ இருந்தால் அது viral , அதுவே மஞ்சள் அல்லது பச்சையாக இருப்பின் அது bacterial infection.

VIRAL என்றால் antibiotics தேவை இல்லை , சில நேரங்களில் நிறைய வாந்தி அல்லது வயிற்ருபோக்கு இருக்கும். நிறைய தண்ணீர் கொடுங்கள். pedialite கொடுக்கவும். BRAT டயட் அதாவது, பிரட், அரிசி கஞ்சி, ஆப்பிள் sauce ,வாழைபழம் கொடுக்கவும் .

Bacterial  infection என்றால் Antibiotics கொடுப்பார்கள்.10
நாளைக்கு கொடுக்கிறார்கள் என்றால் 10 நாட்களும் கொடுக்க வேண்டும்.
இடையே காய்ச்சல் சரியானாலும் கூட.ஏனெனில் FULL COURSE கொடுப்பது பாக்டீரியாவை முழுதும் கொல்ல உதவும்.இடையே நிறுத்தினால் பாக்டீரியா மீண்டும் வளர வாய்ப்புள்ளது,
சில நாட்களில் மறுபடியும் காய்ச்சல் வரலாம்.

கவனிக்கால் விடப்பட்ட VIRAL INFECTION  சில நேரங்களில் BACTERIAL உடன் சேர்ந்து
co -infection  ஆகலாம். அது ஆபத்தானதாக முடியும்.

முடிவாக, சிறு குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலை அலட்சியம் செய்யாதீர்கள்.

நன்றி

Sunday, February 22, 2015

Kumon, Abacus, பியானோ... அப்பப்பா முடியல!


எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு அமெரிக்கா குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுடன் முகுந்த் விளையாட சென்றிருந்தான். அப்போது அந்த அம்மா 

"How come Indian students excel in Science and Math but not in Arts?, why do asians push their kids so much in to academics?" என்று. 

நான் இதை பற்றி இதுநாள் வரை யோசித்ததில்லை என்பதால் அவர்கள் கேட்ட பின் அந்த கேள்வி சரி என்றே தோன்றியது. 

இங்குள்ள பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் அறிவியலிலும், கணக்கிலும் நன்றாக score செய்கிறார்கள். Reading, Art இவைகள் பக்கம் அவர்கள் அதிகம் செல்வதில்லை. ஆனால் அமெரிக்க மாணவர்களோ நெறைய Reading, Art போன்றவற்றை பாடமாக எடுக்கிறார்கள். 

இங்கு இருக்கும் பள்ளிகள் அனைத்தும் public schools, அதாவது நம்மூர் அரசு பள்ளிகள் போன்றவை. இங்கு பள்ளி படிப்பு இலவசம் என்பதால் பெரும்பாலோனோர் தங்கள் பிள்ளைகளை இதில் தான் சேர்க்கிறார்கள். இங்கு இருக்கும் private schools எல்லாம் அதிக கட்டணம் வசூலிப்பவை என்பதால் அங்கு பிள்ளைகளை அனுப்புவது குறைவு.

மேலும் இங்குள்ள பள்ளிகளில் நல்ல ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளுக்கு எல்லாம் demand அதிகம் இருக்கும். பள்ளி Admission அவரவர் இருக்கும் இடத்தை பொறுத்தது. ஒருவர் நல்ல பள்ளி இருக்கும் area வில் உள்ளார் என்றால் அவர்களுக்கு அந்த பள்ளியில் admission உண்டு. அதனால் நல்ல பள்ளி உள்ள area களில் எல்லாம் வீடு வாங்குவது, அல்லது வீடு வாடகைக்கு எடுப்பதற்கு அதிகம் செலவாகும்.

இங்குள்ள இந்தியர்களில் பெரும்பாலோனோர் நல்ல பள்ளிகள் இருக்கும் பகுதியில் வாழ்வதால், இந்திய சூழ்நிலை போல அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள பிள்ளைகளுக்குள் போட்டி மனப்பான்மை உருவாக்கபடுகிறது . 

இந்தியாவில் நெறைய வீடுகளில் அடுத்த வீட்டு பிள்ளைகளை காட்டி ஒரு comparison நடக்கும். அதே போல இங்கும் நெறைய வீடுகளில் நடக்கிறது.

"அடுத்த வீட்டு பிள்ளை மியூசிக் கிளாஸ் போகுது, நீயும் போ"

"அந்த பிள்ளை western டான்ஸ் கிளாஸ் போகுது, உன்னையும் அதில சேர்த்து விடுறேன்"


peer pressure அதிகரிக்க அதிகரிக்க  தங்கள் குழந்தைகளை அதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர் நினைத்தாலும் அவர்களின் பள்ளி விடுவதில்லை. தங்களின் grade ஐ உயர்த்த வேண்டும் என்று பள்ளிகளும் குழந்தைகளுக்கு நிறைய homework கொடுக்கிறார்கள்.
உதாரணமாக எங்கள் பகுதியில் இருக்கும் எல்லா பள்ளிகளும் UKG இல் இருந்ததே பிள்ளைகளுக்கு ஆங்கில வீட்டுபாடம் Razkids என்னும் தளத்தில் போட்டு விடுகிறார்கள். அதே போல கணக்கு வீட்டுப்பாடம் IXL  என்னும் தளத்தில். UKG படிக்கும் முகுந்துக்கு ஆங்கில வீட்டுபாடம் இது. ஒரு கதை புக்கை முழுவதும் படித்து வாசிக்க வேண்டும். பின்னர் அதன் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார், ஏன் அப்படி சொல்கிறார். அதில் வரும் கதை மாந்தர்கள் என் அப்படி செய்கிறார்கள், எப்படி மாற்றி செய்யலாம். ஆசிரியர் நோக்கம் என்ன? என்பன போன்ற பல விசயங்களை கிரகிக்க வேண்டும். ஒவ்வொரு கதை முடிவிலும் சில quiz வினாக்கள் உண்டு. அவைகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதன் பின் மதிப்பெண்கள் அவன் ஆசிரியருக்கு அனுப்பபடுகிறது.

இதனை தவிர இப்போது பல பள்ளிகளில் STEM எனப்படும் Science, Technology , Engineering மற்றும் Math சார்ந்த பல விசயங்களை project ஆகா கொடுகிறார்கள். அதற்கென்று பல விசயங்களை நாம் நெட்டில் தேட வேண்டி வருகிறது. எல்லாம் creative hands on ஆகா இருப்பதால் மனபாடம் என்பது கிடையாது. ஆனால் இதனை குழந்தைகளுக்கு நாம் சொல்லி தருவதற்கு முன்பு பல நேரங்களில் நாமே நிறைய cross -reference செய்ய வேண்டி இருக்கிறது.

பள்ளியில் இருக்கும் homework போதாது என்று பல இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை நெறைய extra classes க்கு அனுப்புகிறார்கள். எப்போதும் எதாவது ஒரு class இக்கு செல்கிறார்கள். இதில் parents க்கும் வேலை அதிகம். ஒவ்வொரு class க்கும் அவர்கள் குழந்தைகளை கொண்டு விடவேண்டும். 

மியூசிக், டான்ஸ், பியோனோ, ஸ்விம்மிங், கராத்தே, கிடார் என்று நெறைய classes உண்டு, ஆனாலும் அதனையே ஒரு career ஆக குழந்தைகளை எடுக்க நெறைய பெற்றோர் விடுவதில்லை. பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவ (அல்லது மருத்துவம் சார்ந்த) அல்லது இன்ஜினியரிங் படிப்புக்கு போவதையே விரும்புகிறார்கள். 

இதற்கெல்லாம் பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை போல தம் தம் பிள்ளைகளையும் வளர்க்க நினைப்பது தான் காரணம் என்று நினைக்கிறன். இது ஒரு வகையில் நல்லது தான் என்று நினைத்தாலும், ஒரு ஊரில் அனைவருமே மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக நினைத்தால் என்ன ஆகும்? பல குழந்தைகளுக்கு playtime கிடைப்பதில்லை. பல நேரங்களில் ஒரு homework க்கு பிறகு அடுத்த homework என்று இருக்கும், இப்படி எப்போதும் எதாவது ஒரு கிளாஸ்க்கு செல்லும் குழந்ததைகள் அதனை வெறுக்க ஆரம்பிப்பார்கள். விளையாட்டு என்பதையே மறந்து விடுகிறார்கள். என்னவாகுமோ? நினைத்தாலே பயமாய் இருக்கிறது.

நன்றி 


Thursday, August 21, 2014

உங்கள் குழந்தைகள் அதிகம் டிவி பார்கிறார்களா!!



வீட்டு  வேலை அவசரமாக  முடிக்க வேண்டும், சமைக்கணும், பிள்ளைகள் வேற  ஸ்கூல் ல  இருந்து வந்துட்டாங்க, என்ன செய்ய , சரி டிவில கார்டூன் போட்டு விட்டுடலாம்.

பிள்ளைகள் ரொம்ப அடம் பிடிக்கிறாங்களா?, சரி கார்டூன் போட்டுடலாம், பேசாம இருப்பாங்க.

குழந்தைங்களுக்கு சாப்பாடு ஊட்டணுமா? சரி கார்டூன் போட்டுடலாம்.

நம்ம டிவில சீரியல் பாக்கணுமா?, சரி பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர் ல கேம்ஸ் விளையாட கொடுத்துடலாம்.

....இப்படி கிட்ட தட்ட பெற்றோர்களுக்கு  ஏதாவது வேலை ஆக வேண்டும் என்றால்  இப்போது பிள்ளைகளுக்கு நாம கொடுப்பது ஸ்க்ரீன் டைம்...அது டிவி, கம்ப்யூட்டர், ipad, வீடியோ கேம்ஸ்...etc

 கூட்டு குடித்தனம் சிதைந்து தனிக்குடித்தனம் என்றன பின், குழந்தைகளை பார்த்துக்கொள்ள என்று பெரியவர்களும் இல்லாத நிலையில், சிறு வயதில் இருந்து இப்படி எல்லாவற்றிற்கும் டிவி என்பது ஒரு குழந்தைகளை கவனிக்கும் ஒரு ஆயா போல ஆகிவிட்டது.

நாம் சுவிட்ச் ஆன் செய்ய மாட்டேன் என்று சொன்னாலும் தானாகவே டிவி சுவிட்ச் ஆன் செய்து தனக்கு வேண்டிய கார்டூன் சேனல் போட்டு கொள்ள 4-5 குழந்தைகள் கூட தற்போது  அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இப்படி எப்போதும் டிவி பார்க்கும் குழந்தைகள் தங்களை அந்த கார்டூன்  கேரக்டர்களை போலவே நினைத்து கொள்வது எல்லா வீடுகளிலும் தற்போது பார்க்க முடிகிறது. எனக்கு தெரிந்து சோட்டா பீம் பார்த்து விட்டு பெரியவர்களை போட்டு குத்து குத்து என்றும் குத்தும்  பிள்ளைகளை அதிகம் பார்த்து இருக்கிறேன். நான் நின்ஜா,  என்னால் மேலிருந்து கீழே குதிக்க முடியும் என்று குதித்து அடி வாங்கிய சிறுவர்களை காட்ட முடியும். பார்பி  பொம்மைகளையும், டிஸ்னி கார்டூன் களையும் பார்த்து விட்டு தன்னை இளவரசியாக நினைத்து அதற்கு ஏற்றார் போல நடை உடை பாவனைகள் மாற்றி கொள்ளும் அனேக பெண் குழந்தைகள் பார்த்து இருக்கிறேன்.

இப்படி தனக்கு முன்னால் விரியும் ஒரு உலகத்தில் வாழ ஆரம்பிக்கும் பல குழந்தைகள் தங்களால் நிஜ உலகுக்கு வர முடியாமல் எதற்கு எடுத்தாலும் கோபப்படுவது, கத்துவது, அடிப்பது போன்ற மன மாற்றங்கள் அடைந்து . பொறுமை என்பது நிறைய குழந்தைகளுக்கு இருப்பதில்லை. தனக்கு வேண்டியது உடனே கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைய தோன்றுவதையும் பார்த்து இருக்கிறேன். இப்படி நிறைய குழந்தைகள் பள்ளி சென்றாலும் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் திணறுவதை தற்போது attention deficient disorder  என்று அழைக்கிறார்கள் . அதாவது கவன பற்றாகுறை நோய். தற்போது ஒரு ஆராய்ச்சியில் இந்த நோய்க்கு டிவி யின் பங்கு எவ்வளவு என்பதை நிருபித்து இருக்கிறார்கள். http://www.additudemag.com/adhd/article/826.html


இதனை தவிர்க்க வேண்டுமாயின், குழந்தைகளுக்கு வெளியில் சென்று விளையாட நிறைய நேரம் கொடுக்கவும், டிவி யை, ஒரு ஆயா போல பயன் படுத்தாமல் ஒரு மணி நேரம் மட்டுமே டிவி நேரம் என்று நேர எல்லை வகுக்கலாம். இதனால் எப்போதும் டிவி ஏ  கதி என்று குழந்தைகள் இல்லாமல் இருக்கும்.
புத்தகங்கள் வாசித்து காட்டலாம். புதிய இசை, பாட்டு, நடனம் போன்ற விசயங்களில் குழந்தைகளை செலுத்தலாம்.

குழந்தைகள் களிமண் போன்றவர்கள், அவர்களை நன்வகையில் வளர்ப்பது பெற்றோர்களான  நம் கையில் மட்டுமே இருக்கிறது.

நன்றி.

Friday, March 1, 2013

அறிவாளி குழந்தை தயாரிப்பது எப்படி?


தேவையான பொருள்கள்

2-3 வயது குழந்தை
பாட அட்டவணை - பல
பாட புத்தகங்கள் (1- 5 ஆம் வகுப்பு புத்தகங்கள் நலம்)
அறிவியல் புத்தகம் - பல
வானவியல் புத்தகம் - பல
கணிதம் - பல
ஆங்கிலம் - எண்ணிலடங்கா
அறிவு ஜீவி பொம்மைகள்:  பல
பணம்- நிறைய.



ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது 
  1. ஒவ்வொரு நாளும் குழந்தையிடம் நீ மத்தவங்களை விட பெரியாளா வரணும், நீ தான் பெரிய ஆளா இருக்கணும். வேறு யாரையும் உன்னை விட பெரியாளா ஆக விடக்கூடாது என்று சொல்ல வேண்டும் 
  2. அடுத்த குழந்தைகளை விட நம் குழந்ந்தை வித்தியாசமாக ஆக்க என்ன செய்யலாம் என்று யோசித்து பட்டியலிட வேண்டும் .
  3. இப்படி பட்டியலில்  இட்டபடி ஒவ்வொரு நாளிலும் நடைமுறை படுத்த வேண்டும்.

செய் முறை 

  1. நம் குழந்தை வைத்திருக்கும் மற்ற குழந்தைகள் விளையாடும் எந்த பொம்மைகளும் வாங்கி கொடுக்க கூடாது. எப்போதும் அறிவு ஜீவி பொம்மைகள் மட்டுமே  வைத்து விளையாட விடவும்.
  2. உங்கள் குழந்தை வயதொத்த மற்ற குழந்தைகள் உங்கள் வீட்டுக்கு விளையாட வந்தாலோ, அந்த குழந்தைக ளி டம், உங்கள் குழந்தை "வெரி அட்வான்ஸ் "அதனால் அந்த குழந்தைகளுடன் செட்  ஆகாது என்று கூறி வந்தவர்களை திருப்பி அனுப்பவும்.
  3. உங்கள் குழந்தையை வயதை விட பெரிய வயது குழந்தைகளுடன் எப்போதும் விளையாட விடவும்.
  4. கலரிங், பெயிண்ட் அடித்தல், பேனா வைத்து கிறுக்குதல், டீவியில் கார்டூன்  பார்த்தல், போன்ற சாதாரண குழந்தைகள் செய்யும் எதையும் உங்கள் குழந்தையை செய்ய விடாமல், எப்போதும் கணிதம், வானவியல், அறிவியல், ஆங்கிலம்..போன்ற புத்தகங்களை படிக்க மட்டுமே வற்புறுத்த வேண்டும்.
  5. எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிடி அனைத்திலும் உங்கள் குழந்தையை சேர்த்து விட வேண்டும்.
  6.  யாராவது உங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தால் அவர்களின் முன் உங்கள் குழந்தையின் திறமைகளை மறக்காமல் பட்டியலிடவும்.  அவர்கள் போதும் போதும் என்று சொன்னாலும் விட கூடாது.
  7. உங்கள் குழந்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்தவர்கள் முன்னிலையில் ஆடவோ,பாடவோ செய்ய வைக்க வேண்டும்.
  8. குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்று உங்கள் குழந்தை எப்படி படிக்கிறது என்று விசாரிப்பதோடு நிறுத்தி விடாமல், என் குழந்தை ரொம்ப அட்வன்ஸ்டு அதனால, டபுள் ப்ரோமோஷன் கொடுங்க என்று நச்சரிக்க வேண்டும்.
  9. அவர்கள் உங்கள் தொல்லை தாங்க  முடியாமல் ஒன்று உங்கள் குழந்தையை டபுள் ப்ரொமோட் செய்யலாம், அல்லது உங்கள் குழந்தையை வேறு பள்ளியில் சேர்க்க சொல்லி விடலாம். எதற்கும் தயாராக இருக்கவும்.
  10. அப்படி உங்கள் குழந்தை டபுள் ப்ரொமோட் செய்ய பட்டால், உடனே உங்கள் குழந்தையுடன் படித்த அடுத்த குழந்தைகளின் பெற்றோருக்கு போனை போட்டு, ஏன் உங்க குழந்தை ப்ரொமோட் ஆகல என்று துக்கம் விசாரிக்க வேண்டும்.அதோடு விடாமல் உங்கள் குழந்தையிடம்.."நீ வேற கிளாஸ் போயிட்ட அதனால பழைய நண்பர்களுடன் விளையாடாதே " என்று கண்டிப்பாக சொல்லவும்.
 அவ்வளவே!! அறிவாளி குழந்தை நீங்கள் தயாரித்து விட்டீர்கள். வாழ்த்துகள்.

Friday, September 3, 2010

குழந்தைகளுக்கு டைம் அவுட் கொடுப்பது நல்லதா?



குழந்தை அடம் பிடிக்கிறது அல்லது அடுத்தவர்களை அடித்தல்/உதைத்தல்/கடித்தல்/விழுந்து அழுதல் போன்றவற்றை செய்கிறது என்ன செய்யலாம் என்று குழந்தைகள் மருத்துவரிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் டெக்னிக்

"டைம் அவுட் கொடுத்து பாருங்கள்" என்று.

டைம் அவுட் என்பது அழும்/பிடிவாதம் செய்யும் குழந்தைகளை தனி இடத்தில் அல்லது ஒரு மூலையில் உக்கார செய்து அழுவதை நிறுத்தும் வரை யாரும் பேசாமல்/ கண்டு கொள்ளாமல் இருப்பது. இப்படி செய்யும் போது குழந்தை தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு அமைதி அடைந்து, பெற்றோரிடம் தனக்கு என்ன வேண்டும்/தேவை என்பதை சொல்லும் என்று இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். இது போல செய்வது குழந்தையின் தன்னம்பிக்கை வளர்க்கும் கட்டுப்பாட்டோடு வளர உதவும் என்றும் சொல்கிறார்கள்.

என்னுடைய இந்தியா பயணத்தில் அநேகமாக எல்லா வீடுகளிலும் இருக்கும் சிறு குழந்தைகள் பிடிவாதம் பிடித்து அழுத போதும் பிறரை அடிக்கும் போதும் நான் கேள்வி பட்ட இந்த டெக்னிக் ஐ சொன்னேன்.

அதற்க்கு அவர்கள் பதில் "அதெல்லாம் ஒத்து வராது இங்க, குழந்த பயந்து போயிடும்" என்று சொல்கிறார்கள். குழந்தை கேட்பதை கொடுத்து அந்த நேரம் சமாதனப்படுத்துகிறார்கள். இப்படி செய்வதால் குழந்தை திரும்ப திரும்ப அதே செய்து கவனத்தை ஈர்க்கிறது. சில பெற்றோர் குழந்தையை அடிக்கிறார்கள். ஆனாலும் கொஞ்ச நேரத்தில் அதனை மறந்து விடுகிறார்கள்.

இதனை தடுக்க என்ன வழி? எப்படி சமாதனப்படுத்துவது? டைம் அவுட் கொடுப்பது நல்லதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?