Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Wednesday, February 2, 2011

'Salt' - மகா குப்பை




ஒரு படத்தை ரொம்ப நாளா பார்க்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்..எல்லாரும் அந்த படத்தை பத்தி ஆகா, ஓகோ, சான்சே இல்லை என்று ஏத்தி வேற விட்டு இருந்தார்கள். தியேட்டர் போயி பார்க்க முடியல, சரி, DVD வரட்டும் வீட்டிலேயே பார்க்கலாம்னு முடிவு பண்ணி வெயிட் பண்ணி DVD வாங்கி ஆசை ஆசையா படத்தை பார்த்தா, சாமி!! நம்ம ஊரு விஜயகாந்த், அர்ஜுன், விஜய் வகையறா படங்கள் கூட தேவலைப்பா...அப்படின்னு தோனுற அளவு ஒரு படமுங்க இந்த 'Salt', இதை போய் எப்படி மக்கள் நல்லா இருக்குன்னு சொன்னாங்கன்னு தெரியலப்பா.

அதில வர்ற ஆன்ஜெலினா ஜோலி அம்மா இருக்காங்க பாருங்க..நம்ம ஊரு தனுஷ் மாதிரி உடம்பை வச்சுகிட்டு என்னம்மா தாவி தாவி சண்டை போடுராங்க தெரியுமாப்பா! அதை விட நம்ம ஹீரோ எல்லாம் பண்ணுவாங்க பாருங்க ஒரு லாரி ல இருந்து இன்னொரு லாரிக்கு அப்படியே ரன்னிங்க ல தாவுவாங்களே, அந்த மாதிரி ஜிவ் ஜிவ் ன்னு ஹை வேஸ்ல தாவுதுப்பா அந்த அம்மா!

அதை விட சில நேரங்கள்ல அந்த அம்மாவை ரோட்ல ஓட விட்டு இருக்காங்க அது ஓடுறதை பார்த்தா என்னவோ உடம்புக்கு முடியாம இருக்கிற ஒரு பாட்டிய ஒடுங்கம்மா அப்படின்னு படுத்தினா எப்படி இருக்கும் அப்படி இருக்கு.

இதில என்ன ஜோக் ன்னா அந்த அம்மா எல்லா இடத்திலையும் சும்மா 'சர்' சர்' ன்னு வந்து சுட்டுட்டோ/கொலை செஞ்சுட்டு போகுமாம், போலிசு, CIA, FBI, அப்புறம் இவங்க secret agency எல்லாம் லொலிபொப் சாப்பிட்டு இருப்பாய்ங்களாம், யாருக்கையா காது குத்துறீங்க. அதுவும் அந்தம்மா வைட் ஹவுஸ்க்கு எலிவேட்டேர் மேல இருந்து சும்மா சிட்டாட்டம் பறந்து வரும் பாருங்க சூப்பர் சீனுப்பா அது, ஐயோ! ஐயோ, தலையில அடிச்சிக்க வேண்டியது தான்.

கதையாவது கொஞ்சம் நல்லா இருக்கா!..அதுவும் இல்ல...அதே ரஷ்ய உளவாளியாம்...டபுள் ஏஜெண்டாம்...அய்யா!!..இதெல்லாம் நாங்க நிறைய ஜேம்ஸ்பாண்டு படங்கள்ள நிறைய பார்த்தாச்சுங்கோ!!

இதுனால சகலமானவர்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்னா, நம்ம ஊரு மக்களான விஜயகாந்த் படங்கள் எல்லாம் குப்பை, ஹோலிவூட் படங்கள் தான் சூப்பர்ன்னு நினச்சுட்டு, " We wont see tamil pictures, we only see english pictures" அப்படின்னு பீட்டர் விட்டுட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு வார்த்தை..”இங்கிலீஷ் ல யும் இந்த சால்ட் மாதிரி நிறைய குப்பை இருக்குதுங்கோ!”

Sunday, January 9, 2011

மன்மதன் அம்பு காட்டுவது என்ன?





சமீப காலமாக நான் பார்த்த படங்களில், பத்து டாலர் அழுது ஒரு கொடுமையான படத்தை ஏன் பார்த்தோம் என்று நொந்து தலையில் முட்டி கொண்டது சமீபத்தில் பார்த்த மன்மதன் அம்பு படத்தில் தான் என்று நினைக்கிறேன்.

எனக்கு சில கமல் படங்களான பஞ்சதந்திரம், தெனாலி போன்றவை எப்போது பார்த்தாலும் பிடிக்கும். ஆனாலும் மன்மதன் அம்பு போன்ற ஒரு கொடுமையான படம் கமல் படம் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை.

கமலின் தோல்விப்படமான மும்பை எக்ஸ்ப்ரஸில் கூட காமெடி நன்றாக இருந்தது என்று சொல்ல வேண்டும். இந்த படத்தில் காமெடி என்ற பெயரில் வந்த சில வசனங்கள் எனக்கு சிரிப்பை விட கடுப்பை வரவழித்தது. அதை விட மாதவனை ஒரு கேனை போல சித்தரித்து இருந்தார்கள்.

இவற்றை எல்லாம் விட என்னை மிக மிக கடுப்பேத்தியது சங்கீதாவின் காரெட்டரை அவர்கள் போட்ரேட் செய்த விதம் ..

கணவனிடம் இருந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு ஊர் சுற்றும் ஒரு பெண் அவர் என்று அவரைப் பற்றி அவரே கூறிக்கொள்கிறார்.

நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்று தான்..எத்தனை பெண்கள் இப்படி இருக்கிறார்கள்...இதில் சங்கீதா ஒரு நடிகையாக காட்டவில்லை. அவர் நடிகையின் தோழியாக தான் காட்டப்பட்டு இருக்கிறார்..

விவாகரத்து என்பது மனதளவில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்...அதுவும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம்..அதிக பாதிப்புக்கு உள்ளாபவர்கள் அவர்கள் தாம்..அப்படிப்பட்ட அவர்களை இப்படி ஜீவனாம்சம் வாங்கிக்கொண்டு ஊர் சுற்றும் பெண் என்று சித்தரித்து இருப்பது... கடுப்பின் உச்சம்..

உடனே சிலர் இருப்பதை,ஊர் உலகத்தில நடக்கிறதை தானே சினிமாவில் காட்டுகிறோம் என்று சப்பை கட்டு கட்டலாம்..எனக்கு தெரிந்து எந்த ஊரில் இப்படி நடக்கிறது என்று சொல்லுங்கப்பா...

இங்கே அமெரிகாவில் கூட எனக்கு தெரிந்த பல அமெரிக்க தோழிகள் விவாகரத்துக்கு பிறகு படும் கஷ்டத்தை கண்ணாற கண்டு இருக்கிறேன். இங்கே நிறைய சர்ச்சுகளில் விவாகரத்துக்கு பிறகு ஏற்படும் மனமுறிவுக்காகவே பல கவுன்சிலிங்குகள் நடத்தப்படுவது உண்டு...சாதாரணமானவர்களின் உண்மை நிலை இதுதான்..

உண்மை நிலை இப்படி இருக்க யாரை இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொண்டு கமல் இந்த காரெக்டரை உருவாக்கினார் என்று தெரியவில்லை...

ஒரு வேலை அமெரிக்காவில் பணத்திற்காக பணக்கார கிழவர்களை திருமணம் செய்து கொள்ளும் ஒரு சில பெண்களை உதாரணமாக அவர் எடுத்து இருக்கலாம்..ஆனால் இந்த பெண்கள் எல்லாம் 15 மினிட் fame க்காக எதுவும் செய்பவர்கள்..அவர்களை அந்த படத்தில் சங்கீதா சித்தரிக்கபட்டு இருப்பது போல ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக காட்டி இருக்க வேண்டாம்..

ஒன்றே ஒன்று இறுதியாக..Kamal disappointed us..and he made me hate him.

Wednesday, December 22, 2010

தி டின்னெர் கேம் , பீஜா பிரை & ஏப்ரல் பூல்






ஒரு வீடு, அதற்குள் இருவர், அதில் ஒருவருக்கு முதுகு வலி, இன்னொருவர் சற்று வெகுளியான மனிதர். இதுதான் கதை களம். இதனை வைத்துக்கொண்டு ஒரு முழு நீள காமெடி படம். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும் அளவு காமெடி. நான் சொல்வது நேற்று நாங்கள் பார்த்த பிரெஞ்சு படமான Le dîner de cons' பற்றி.

இந்த வெகுளியை தங்கள் நண்பர்கள் நடத்தும் டின்னெர் பார்டிக்கு அழைத்து செல்வதே முதுகுவலிகாரரின் நோக்கம். அங்கு, அவரவர் உடன் அழைத்து வரும் வெகுளி/முட்டாள்கள் அனைவருடனும் பேச விட்டு கலாய்த்து அதில் ஒருவருக்கு "சிறந்த முட்டாள்" என்று பட்டம் கொடுப்பார்கள். இது பற்றி டின்னெர் முடியும் வரை அழைத்து வரப்படும் வெகுளிகளுக்கு தெரியாது.

அந்த டின்னேர்க்கு அழைத்து செல்வதற்கு முன் முதுகு வலி ஏற்பட்டு பாடாய்படுத்த, அவர் மனைவி அவரை விட்டு விட்டு செல்ல, இன்கம் டாக்ஸ் காரர் வீட்டுக்கு வர என்று வரிசையாக எல்லாமே தப்பாய் முதுகு வலிகாரருக்கு நடக்க, ஒரே சிரிப்பு தான்.


ஆங்கிலத்தில் இந்த படத்தின் பெயர் 'தி டின்னெர் கேம்' . சப் டைட்டில் உதவியுடன் நாங்கள் அந்த படம் பார்த்தாலும், சப் டைட்டில் தேவையே இல்லை என்று சொல்லுமளவு François Pignon ஆக நடித்த Jacques Villeret அவர்களின் நடிப்பு. அவரின் சொட்டை தலையும் அவர் முக பாவனைகளும் பார்த்தாலே சிரிப்பாய் வரவழித்தது. முதுகு வலியுடன் Pignon கொடுக்கும் தொல்லைகளையும் பொறுத்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நடிக்கும் கதாபாத்திரத்தில் Thierry Lhermitte நடித்திருந்தார்.

நான் பிரெஞ்சு படங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை ஆயினும் சிரித்து சிரித்து வயிறு வலி வந்தே விட்டது. இப்படி நல்ல படத்தை நம்ம மக்கள் காப்பி அடிக்காம இருக்க மாட்டாங்களே என்று தேடிப்பார்த்ததில் கண்டுபிடித்தது இது தான். ஹிந்தியில் 'Bheja Fry' அப்புறம் மலையாளத்தில் "ஏப்ரல் பூல்" இரண்டுமே அன் அபீசியல் காப்பி ஆப் தி டின்னெர் கேம் படம்.


படங்கள்: நன்றி இணையம்


Tuesday, September 21, 2010

ஒரு வருடத்தில் 524 recipes சமைப்பது எப்படி?

வேலை கழுத்தறுக்கிறது, வாழ்க்கை போர் அடிக்கிறது, சுவாரசியப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தேன். What about trying a new recipe everyday? Isn't it fun?

"என்ன ரேசிபே செய்ய ஆரம்பிக்கலாம்?" யோசித்த போது பிரெஞ்சு ரேசிபே செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். (Why French?, அது எப்படின்னே தெரியல, பிரெஞ்சு பொண்ணுங்க மட்டும் என்ன சாப்பிட்டாலும், எப்படி தான் ரவுண்டு கட்டி சாப்பிட்டாலுமே ஒல்லியாவே இருக்குதுங்க? அதான் ஹி, ஹி, ஹி)

முதல் வேலையா, ஒரு பிரெஞ்சு சமையல் புத்தகம் வாங்கினேன், அது Mastering the Art of French Cooking, by Julia Child

அடுத்து ஒரு வலைபூ ஆரம்பித்தேன், அதில் இன்று என்ன ரேசிபே செய்ய போகிறேன் என்று எழுதினேன்.

சும்மா, one recipe one day னா போர் அடிக்குமே , ஏதாவது சுவாரஸ்யம் கொண்டு வரணுமே? என்ன செய்யலாம்?

ஓகே,
  • ஒரு வருசத்துக்குள்ள அந்த சமையல் புத்தகத்தில இருக்கிற எல்லா ரேசிபேயும் சமைச்சு முடிச்சுடனும்
  • ஒவ்வொன்னையும் சமைச்சு முடிச்சப்புறம் வலைபூவில சொல்லணும்,
  • கவுன்ட் டவுன் வச்சுக்கணும்,
இது எப்படி இருக்கு? சுவாரஸ்யமா இருக்கு இல்ல?

இதென்ன சின்னபுள்ள தனமா இருக்கு, இதெல்லாம் எப்படி சாத்தியம்னு நினைக்கிறவங்க,

Julie & Julia படத்த பாருங்க

Monday, September 20, 2010

திரைப்படமும், வாசிப்பனுபவமும்


ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதில் வரும் கதை மாந்தர்கள் பற்றிய நமது கற்பனையும், கதை நடக்கும் சூழ்நிலைகள் பற்றிய நமது அவதானிப்பும், அந்த புத்தகங்கள் திரைப்படங்களாக எடுக்கப்படும் போது சில வேளைகளில் பெருத்த ஏமாற்றம் தருவது உண்டு. திரை படங்களாக ஒரு புத்தகம் மாறும் போது கதை சொல்லியின் கோணத்தில் இருந்து மாறுபட்டு ஒரு இயக்குனரின் கோணத்தில் மாறுவதே இதற்க்கு காரணமாக இருக்கலாம்.

இப்படி நிறைய எனக்கு பிடித்த புத்தகங்கள் திரைப்படங்களாக மாறும் போது ஏமாற்றம் தருவது உண்டு. ஆனால் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள், படிக்கும் போது ஏற்படுத்திய தாக்கத்தை விட திரைபடமாக மாறும் போது ஏற்படும் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்படி எனக்குள் தாக்கம் ஏற்படுத்திய ஒரு புத்தகம்/திரைப்படம் Khaled Hosseini அவர்கள் எழுதி Marc Forster அவர்கள் இயக்கிய The Kite Runner.

2000 ஆம் ஆண்டு கதைமாந்தர் அமிரின் நினைவுகளாக படம் ஆரம்பிக்கிறது. ஆப்கானிஸ்தானில் 1978 இல் சோவியத் படைகள் நுழைவதற்க்கு ஒரு சில மாதங்களுக்கு முந்தய அமைதியான, அழகான காபூல் நகரம் அது. குழந்தைகள் குதூகலத்துடன் பட்டம் விட்டு கொண்டிருக்கின்றனர். அதில் உயர்ந்த குலத்தை சேர்ந்த பணக்கார அமிரும், தாழ்ந்த குலத்தை சேர்ந்த அமிர் வீட்டில் வேலை செய்யும் ஹாசனும் அடுத்து நடைபெரும் பட்டப்போட்டியில் எப்படி ஜெயிப்பது என்று பேசி கொண்டிருக்கிறார்கள்.

பட்டபோட்டியின் விதிகளின் படி, பட்டத்தை ஒருவர் அறுத்த பிறகு தன் பட்டத்துடன் அறுந்த பட்டத்தையும் ஓடி சென்று எடுக்க வேண்டும், அப்படி செய்தால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்க படுகிறார். அமீர் ஒவ்வொரு பட்டத்தை அறுக்கும் போதும் ஹாசன், அமீருக்கு அறுந்த பட்டத்தை எடுத்து வரும் Kite Runner ஆக இருக்கிறான்.

தாழ்ந்த குலத்தை சேர்ந்தவனாக வீட்டு வேலைகாரனாக ஹாசன் இருந்தாலும் அவன் மீது தன் தந்தைக்கு அதிக பாசம் இருப்பதாக அமீர் எப்போதும் பொறமை படுகிறான். எப்படியும் வரும் பட்டப்போட்டியில் வெற்றி பெற்று தந்தையிடம் நல்ல பேர் பெறவேண்டும் என்று அமீர் நினைக்கிறான்.

பட்டபோட்டி நாள் வருகிறது. ஒவ்வொரு பட்டமாக அமீர் அறுக்க அமிரின் தந்தை குதூகளிக்கிறார். கடைசி பட்டத்தையும் அறுத்த பிறகு ஹாசன் அறுந்த அந்த பட்டத்தை எடுக்க ஓடுகிறான், அவனை தேடி அமிரும் பின் செல்கிறான். அப்போது உயர்ந்த இனத்தை சேர்ந்த சில சிறுவர்கள் ஹாசனை சூழ்ந்து கொண்டு பட்டத்தை கொடுத்து விடும்படி மிரட்டுகிறார்கள். "இது அமீர் உடையது கொடுக்க முடியாது" என்று ஹாசன் மறுக்க அவனை பாலியல் துன்பத்துக்கு ஆட்படுத்து கின்றனர். இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அமீருக்கு அதிலிருந்து குற்றஉணர்ச்சி மனதில் ஏற்பட அதிலிருந்து தப்பிக்க ஹாசன் குடும்பத்தின் மீது திருட்டு பட்டம் காட்டி வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறான்.

சில மாதங்களில் சோவித் படைகள் காபூலில் நுழைய உயிருக்கு பயந்து அமிரும் அவன் தந்தையும் பாகிஸ்தானுக்கு செல்கிறார்கள். பிறகு அங்கிருந்து அமெரிக்க வருகின்றனர். அமீர் வளர்ந்து திருமணம் செய்யும் வரை அவன் தந்தை அவனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார். அமீர் ஒவ்வொரு முறை வெற்றி பெரும் போதும் "ஹாசன் இப்போ இருந்த நல்ல இருக்கும்" என்று கூறுகிறார்.

அமிரின் தந்தை இறந்த பிறகு அவன் தந்தையின் நண்பர் மூலம் ஹாசன் தன்னுடைய சகோதரன் என்றும், தன் வீட்டு வேலைகாரிக்கும் தந்தைக்கும் பிறந்தவன் என்றும் அமீர் அறிகிறான். மேலும் ஹாசன் இப்போது உயிரோடு இல்லை என்பதும் தாலிபான் படைகளால் நடுரோட்டில் சுட்டு கொல்லப்பட்டான் என்பதும் தெரிய வரும் போது அமீர் மனம் வருந்துகிறான். அவனுக்கு மேலும் துன்பம் சேர்க்கும் வண்ணம் ஹாசனின் மகன் சொஹ்ராப் இப்போது அனாதையாக யாருமில்லாமல் தாலிபான்கள் வசம் உள்ளான் என்றும் அறிகிறான்.

சொஹ்ரப்பை மீட்டு வர காபூல் கிளம்புகிறான், அவன் பார்த்த அழகான அமைதியான காபூல் நகர் அழிந்து விட்டு இருக்கிறது. ஒரு மைதானத்தில் ஒரு பெண்ணை கல் எறிந்து கொள்வது, நடு ரோட்டில் சுட்டு கொள்வது, தாடி இல்லாதவர்களை சுடுவது, நினைத்த போது யாரையும் கடத்தி சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவது போன்ற தாலிபான்கள் ஆதிக்கம் அவனுக்கு அதிர்ச்சி தருகிறது.

சொஹ்ராப் ஒரு பெண்ணைப்போல உடைகளை அணிந்து நடனம் ஆடுவதை பார்கிறான், தாலிபான்கள் வசம் இருந்த சொஹ்ரப்பை பலத்த காயங்களுடன் ஒரு வழியாக மீட்டு வீடு திரும்புகிறான்.

புத்தகமாக இதனை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட தாக்கத்தை விட அதனை படமாக பார்க்கும் போது மனதை நெகிழ செய்தது இந்த படம்.