Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Saturday, March 13, 2010

தண்ணீருக்காக ஒரு யுத்தம் வராமல் தடுப்போம்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
.



எண்ணெய் யுத்தம் கேள்வி பற்றிருக்கிறோம். அது கச்சா எண்ணைக்காக தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் தண்ணீருக்காக இதே போல் ஒரு யுத்தம் நடக்கும், இவ்வாறு நான் சொல்லவில்லை ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைப்படி பூமியில் தற்போது இருக்கும் நீரில் 2.5% நீரே குடிநீராக உபயோகப்படுத்தமுடியும். அவற்றிலும் ௦.0007% நீரே ஆறு,குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் இருக்கிறது. உலகத்தில் மக்கள்தொகை உயர உயர நீரின் தேவையும் அதிகம் ஆகும். ஆனால் இப்போது இருக்கும் நிலவரப்படி உபயோகிக்க கூடிய குடிநீர் அளவு ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் மிக மிக குறைந்து வருகிறது.





மேலே இருக்கும் புகைப்படத்தில்(1) ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் நாடுகளில் எல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது என்றும், மஞ்சள் நிறத்தில் இருக்கும் நாடுகள் தண்ணீர் தட்டுப்பாட்டின் விளிம்பில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது. அவற்றில் உலகில் மிகஅதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளான இந்தியாவும் சீனாவும் அடங்கும். இது தற்போதைய நிலை தான். இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பித்தால் என்ன ஆகும்? யோசித்து பாருங்கள். தற்பொழுது எண்ணைக்காக ஆக்கிரமிப்புகள் நடப்பது போல நாளை நீர்வளம் இருக்கும் நாடுகளை நோக்கி ஆக்கிரமிப்பு தொடங்கும். விளைவு போர்.



உலக புள்ளிவிவரங்கள் எல்லாம் இருக்கட்டும், தற்போது தமிழ்நாட்டுக்கும் அதன் அண்டை மாநிலங்களுக்கும் அடிக்கடி நடக்கும் உரசல்கள் எல்லாம் நதிநீர் சம்பந்தப்பட்டது. அது உள்ளூர் கலவரமானது அனைவரும் அறிந்ததே.

சரி! இதற்கு தீர்வு!

1. இருக்கும் நீர் நிலைகளை காப்பது
2. கழிவு கூடாரமாகி இருக்கும் ஆறு குளங்களை சுத்தபடுத்துவது
3. மேலும் கழிவு ஆறு குளங்களில் கலக்காமல் காப்பது.
4. நிலத்தடி நீரை அதிகப்படுத்துவது




மேலே இருக்கும் புகைப்படம் (2) ஒரு ஆலை கழிவு கங்கை ஆற்றில் கலக்க படும் புகைப்படம். ஆலை கழிவுகள் சுத்திகரிக்க பட வேண்டும் என்று எத்தனையோ சட்டம் இருந்தாலும் அதன் ஓட்டைகளை அறிந்து கொண்டு அதனை செயல்படுத்தாமல் இருப்பவர்களே அதிகம். சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.

கங்கை ஆற்றில் கலக்கும் கழிவுகளில் 20% கழிவுகளே ஆலை கழிவுகள், மீதமுள்ள 80% கழிவுகள் மனிதனால் உண்டாவது (3). இவற்றில் மக்கள் தூக்கி வீசுவது கொஞ்சம் தான், மாநிலங்களே அவற்றை என்ன செய்வது என்று அறியாமல் ஆறுகளிலும், ஏரிகளிலும் கலக்கிறார்கள் அல்லது தீயிட்டு கொளுத்தி காற்றை மாசுபடுத்துகின்றனர்.

இதனை தடுக்க ஒரே வழி மறுசுழற்சி முறையை மக்களிடம் கொண்டு செல்வது. கழிவுகளை பகுத்து எவை, மக்கும் கழிவுகள், எவை எல்லாம் மக்கா கழிவுகள், இவற்றை எல்லாம் எப்படி மறுசுழற்சி செய்வது என்பது போன்ற திட்டங்களை உருவாக்குதல். கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்று எங்கோ படித்திருக்கிறேன். இவை எல்லாம் அரசாங்கத்தின் வேலை தானே நாம் நம் வேலைகளை கவனிப்போம் என்று எண்ணாமல் நாமும் நம் வீட்டில் மறுசுழற்சி முறையை தொடங்கலாம்.

எப்படி.

1. வீட்டில் சமையல் கழிவுகளை பகுத்தல். இதனை மற்ற கழிவுகளுடன் கலக்காது மண்ணில் மக்க செய்தால், இது இயற்கை உரமாகலாம்.

2. பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் இவற்றை முடிந்தவரை பயன்படுத்தாது இருத்தல்.

3. எங்கு சென்றாலும் துணிப்பை எடுத்து செல்லுதல், இது பிளாஸ்டிக் பை உபயோகத்தை குறைக்க உதவும்.

4. கண்ணாடி, பேப்பர் போன்ற கழிவுகளை, பழைய பேப்பர் காரனிடம் மட்டுமே போடுதல்.

மேலே நான் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் எனக்கு தெரிந்த சில வழிகள் மட்டுமே. இன்னும் நெறைய வழிகள் கட்டாயம் இருக்கும்.

"You must be the change you wish to see in the world" என்ற அண்ணல் காந்தியடிகளின் வார்தைக்கிணங்க ஒவ்வொருவரும் இதனை ஆரம்பிப்போம்! உலகத்தை காப்போம்!


இதனை போன்ற மனநிறைவு தரும் ஒரு பதிவை தொடர் பதிவாக எழுத என்னை அழைத்த சிறுமுயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கும், இது போன்ற ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த அனைத்து பதிவர்களையும் அழைத்த மண், மரம், மழை, மனிதன் வின்சென்ட் அவர்களுக்கும் என் கோடான கோடி நன்றிகள்.


References
1. www.un.org/waterforlifedecade
2. www.danielbachhuber.com/tag/photography/
3. www.cag.gov.in/reports/scientific/2000_book2/gangaactionplan.htm

Friday, February 19, 2010

சின்ன சின்ன ஆசைகளும் நினைவுகளும்

ஒரு வருடத்திற்கு முன்பே பதிவுலகம் எனக்கு அறிமுகமானாலும், பதிவுகளை படிப்பதோடு நிறுத்தி கொண்டிருந்தேன். நாமும் பதிவு எழுதலாம் என்று முடிவு செய்த ஒரு மாதத்திற்குள் என்னை பதின்மகால வயது டைரி பதிவு எழுத அழைத்த தெகா அவர்களுக்கு என் நன்றி. தெகா என்னை தொடர் பதிவு எழுத அழைப்பதாக சொன்னதும் எனக்குள் ஒரு பயம், எதை எழுதுவது?, என்ன எழுதுவது? என்று. அலை அலையாக ஓடிய எண்ணங்களை ஒன்று சேர்த்து ஒரு வழியாக எழுதிவிடுவது என்று ஆரம்பித்தேன்.

சிறு வயதில் எங்கள் வீட்டுக்கு நெறைய டைரி இலவசமாக வந்தாலும் அதில் முதல் ஒரு சில நாட்களை தவிர வேறு நாட்களில் எதுவும் எழுதி இருக்க மாட்டேன். அவை அனைத்தும் எப்போதோ அடுப்பு எரிக்க பயன் பட்டு இருக்கும் என்பதால், என் ஆழ் மனதில் புதைந்து இருக்கும் ஒரு சில நினைவுகள் இங்கே.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் ஒன்பதாவது படிக்கும் போது என் அப்பாவின் கண்டிப்பால் பள்ளிக்கு தாவணி அணிந்து செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. பிறகு வீட்டிலும் எனக்கு நெறைய தாவணி எடுத்து கொடுத்தனர். அதில் மறக்க முடியாத
அரக்கு கலர் மயில் பாவாடையும் சந்தன கலர் தாவணியும் இன்னும் என் கண் முன் நிற்கின்றன. அதை அணிந்து தெருக்களில் நடக்கும் போது யாராவது என்னை பார்கிறார்களா என்று மனதில் ஒரு பட்டாம்பூச்சி பறக்கும். எங்கள் பக்கத்துக்கு வீட்டுக்கு ஒரு குடும்பம் குடி வந்த போது அதில் இருந்தவர்களை பார்த்து எனக்குள் ஏற்பட்ட குறுகுறுப்பும் அதனை இரும்பு கரம் கொண்டு அடக்கிய என் அம்மாவின் ஆளுமையும் என்னை இப்போது வியப்பில் ஆழ்த்துகின்றன. பிறகு அம்மாவின் நம்பிக்கைக்கு உரியவளாக இருக்க நானே என்னை மாற்றி கொண்டதும், அலங்காரங்களை தவிர்த்தததும் நினைவுக்கு வருகிறது.

நான் பத்தாவது படிக்கும் போது நடந்த என் பெரிய அண்ணனின் திருமணமும் அதற்காக எனக்கு கிடைத்த மாம்பழ கலர் பட்டு பாவாடையும், நீல நிற தாவணியும் என்றும் மறக்க இயலாதது. அடுத்த வருடம் நான் அத்தை ஆனதும் என் அண்ணன் மகளை பார்க்க எங்கள் அண்ணி வீட்டுக்கு முதல் முதலாக குதிரை வண்டியில் சென்றதும் பசுமையான நினைவுகள். இன்று அண்ணன், அண்ணி இருவரும் உயிருடன் இல்லை என்று உணரும் போது மனம் கனக்கிறது.

மாநகராட்சி பள்ளியில் படித்ததால் ஏற்பட்ட பாதிப்பு பள்ளி இறுதியாண்டின் ஆரம்பத்தில் எனக்கு தெரிய ஆரம்பித்தது. அந்த கஷ்டங்களை எல்லாம் சமாளித்து ஒரு வழியாக நல்ல மதிப்பெண் வாங்கி தேறியவுடன் எப்படியும் பொறியியல் கிடைத்து விடும் என்று ஒரு மமதையில் இருந்தேன். பிறகு அது கிடைக்காமல் இளநிலை இயற்பியல் பாடத்திற்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்ததும், கல்லூரியில் இடம் கிடைத்தால் கல்லூரியில் இருந்த மீனாட்சி சிலைக்கு மாலை சாற்றுவதாக வேண்டி கொண்டதாகவும் ஞாபகம். அப்போதெல்லாம் எந்த ஸ்கூல் ல படிச்சிட்டு வந்திருக்க? என்று யாராவது கேட்டால் பள்ளி பெயர் சொல்ல வெட்கப்பட்டதும் கூட நினைவுக்கு வருகிறது.

கல்லூரி நாட்களில் எனக்கு கிடைத்த தோழிகள் அனைவரும் என்னை போல கல்லூரியில் ஒரு மாதம் கழித்து சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்குள் ஒரு பிணைப்பு இருந்தது. நாங்கள் ஏழு பேர் சேர்ந்த ஒரு குழுவாக இருப்போம். எங்கள் பெயரின் முதல் எழுத்துக்களை எல்லாம் சேர்த்து V R STARS என்று அழைத்து கொள்வோம். எனக்கு முதன் முதலில் பொன்னியின் செல்வனை அறிமுகம் செய்தவர்கள் அவர்களே. பொன்னியின் செல்வன் படித்து விட்டு அதனை ஒவ்வொரு நாளும் விவாதிப்போம். இன்று யாருடனும் நான் தொடர்பில் இல்லை என்றாலும் எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய என்னுடைய கல்லூரி தோழிகளுக்கு என் நன்றிகள்.

என்னுடைய சொந்த மாவட்டத்தை விட்டு சென்றறியாத என்னை என்னுடைய பதின்ம காலம் NCC கேம்ப் க்காக ஹைதராபாத் ம், உலக தமிழ் மாநாட்டுக்காக தஞ்சாவூர் க்கும் அழைத்து சென்றது. அதில் அறிமுகமான வெளி உலகம் இன்னும் நினைவில் இருக்கிறது. மரணத்தை பற்றி அதுவரை அறியாத எனக்கு மரணத்தை என் பாட்டியின் மூலம் பதின்மகாலம் அறிமுகம் செய்து வைத்தது.

இன்று காலம் என்னை எப்படி எப்படியோ மாற்றி ஏதேதோ படிக்க வைத்து முனைவர் பட்டம் பெற செய்திருந்தாலும், என்னை சுய கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து என்னை செதுக்கிய என் பதின்ம காலம் என்றும் நெஞ்சில் நிற்கும்.