Showing posts with label குழந்தையின்மை சிகிச்சை. Show all posts
Showing posts with label குழந்தையின்மை சிகிச்சை. Show all posts

Wednesday, April 29, 2015

குழந்தைஇன்மையும் Peer பிரஷர்ம்

நான் பதிவெழுத ஆரம்பித்த புதிதில் Peer பிரஷர் என்ற ஒரு பதிவு எழுதி இருந்தேன்.அதில் சிறு வயது முதல் நான் சந்தித்த peer பிரஷர் அல்லது சக ஒப்பீடு பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.

இது இந்தியாவில் வளர்ந்த பலருக்கும் தெரிந்திருக்கும். சிறு வயது முதல் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு பெண்களை அல்லது ஆண்களை நம்முடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு அவர்கள் எப்படி படிகிறார்கள் அல்லது வேலை பார்கிறார்கள் நீ பாக்குறியா என்று ஒரு ஒப்பீடு செய்வார்கள் நம் பெற்றோர்.

ஆணாக இருந்தால் "அவன் எவ்வளவு மார்க் வாங்குறான் பாரு, நீயும் தான் வாங்குறியே? " ,  "அவனுக்கு அரியர் இல்லையாம், நீயும் தான் எத்தனை வச்சு இருக்கிற?"  "அவன் வேலைக்கு போயிட்டான் நீ எப்போ போக போற?"

பெண்களுக்கு மேலே இருக்கும் அனைத்தும் பொருந்தும் என்றாலும் ஒரு சில சில மாற்றங்களும்  உண்டு, "அவ எத்தனை வீட்டு வேலை செய்யுறா பாரு, நீயும் தான் இருக்கியே, இங்க இருகிறதா அங்க எடுத்து வைக்கிரயா, போற வீட்டுல என்ன கேட்ட பேரு வாங்கி கொடுக்க போறியோ?" , "உன்னோட பெரியம்மா பொண்ணு பாரு உன் வயசு தான் ஆனா கல்யாணம் ஆகி 6 மாசம் ஆச்சு, உனக்கு எப்போ கல்யாணம்னு ஊரெல்லாம் கேட்குறாங்க, என்ன பதில் சொல்ல நான் அவங்களுக்கு, சீக்கிரம் ஒருத்தன் கிட்ட உன்ன பிடிச்சு கொடுக்குற வரை வயித்தில நெருப்ப கட்டிட்டு இருக்கேன்" , இப்படி சில ஒப்பிடுகள் நிறைய பெண்கள் கேட்டு இருக்கலாம்.

ஆனால் சிறு வயது முதல் நாம் அதுவும் பெண்கள் கேட்கும் ஒப்பீடுகள்எல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆக்கி விடும் ஒரு ஒப்பீடு உண்டென்றால் அது குழந்தை இல்லை அல்லது குழந்தை பிறப்பு தள்ளி போகிறதுஎன்னும் போது  உருவாகும் ஒப்பீடும்  அதனால் ஏற்படும் peer பிரஷர் ம் தான். கல்யாணம் ஆகி 3-6 மாசம் வரை பொறுக்கும் நம் பெற்றோர், உற்றார் உறவினர்கள் எல்லாரும் ஒரு வருடம் கழித்தும் "நல்ல செய்தி" சொல்லவில்லை என்றால் மெதுவாக ஆரம்பிப்பார்கள். நம் பெற்றோரே "எப்போ நல்ல செய்தி சொல்ல போற, பாரு உன் சித்தி பொண்ணுக்கு உனக்கப்புறம் கல்யாணம் இப்போ அவ 6 மாசம் முழுகாம இருக்காலாம்", என்று ஆரம்பிப்பார்கள். அப்போது ஆரம்பிக்கும் ஒரு வித டென்ஷன். இவை போன்ற கேள்விகள் எல்லாம் பெண்களை தான் குறி வைத்து முதலில் எய்ய படும். யாரும் ஆண்களை இப்படி கேட்பதை அதிகம் பார்த்ததில்லை.

"நமக்கு எதோ பிரச்சனையோ, அதனால தான் உண்டாகலையோ" என்று மெதுவாக ஒரு பயம் பெண்களை எட்டி பார்க்கும். அது முதல் குழந்தையின்மை peer பிரஷர். பின்னர் இன்னும் 6 மாதம் ட்ரை செய்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றால், உடனே "கோயிலுக்கு நேந்துகிறது" என்று ஆரம்பிப்பார்கள் நம் சொந்தங்கள். இன்னும் பிரஷர் அதிகமாகும்.


(குழந்தைஇன்மை குறித்து என் சில பழைய பதிவுகள் இங்கே

குழந்தையின்மை சிகிச்சை வியாபாரமாக்கப்படுகின்றதா?

குழந்தையின்மை ஒரு நோயா?- 1

குழந்தையின்மை ஒரு நோயா?- 2

குழந்தையின்மை ஒரு நோயா? - 3 -அதிக எடை ஆபத்தானது

)


இரண்டு வருடங்கள் ஆகி விட்டது, இன்னும் குழந்தை இல்லைஎன்றால் அடுத்து "ட்ரீட்மென்ட்" என்று ஆரம்பிப்பார்கள். அது போல ஒரு ஸ்ட்ரெஸ் பெண்களுக்கு இல்லை என்பது என் கருத்து. IUI, IVF என்று எடுக்கும் ஒவ்வொன்றும் பெண்களுக்கு மனதளவில் உடலளவில் அவ்வளவு ஸ்ட்ரெஸ் கொடுக்க கூடியது. அதுவும் IVF இன் ஓவ்வொரு நிலையிலும் தினமும் பல ஊசிகள் போட வேண்டி வரும், ஹார்மோன் இன்ஜெக்சன் என்பதால் பயங்கர மூட் ஸ்விங் இருக்கும். அனுசரித்து செல்லும் கணவரும் குடும்பத்தினரும் இருந்தால் நல்லது. இல்லை என்றால் மிக கஷ்டம்.

உதாரணமாக, நம் ஊரில் எல்லாம் யாருக்கு குறை என்று எல்லாம் இன்னும் கூட பலர் பார்ப்பதில்லை, உடனே பெண்களை குற்றம் சொல்லும் "அவளை ஒதுக்கிட்டு இன்னொன்னை கட்டிக்கோ" என்று ஆணிடம் சொல்லும் பழக்கம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. இப்படி நிலையில் எங்கே தனக்கு குழந்தை இல்லை என்றால் வாழ்கையே இல்லையோ என்று பயமும், ஸ்ட்ரெஸ் ம் அதிகமாகும் நிலை ஒரு சில நேரங்களில் பரிதாபத்துக்கு உரியது.


ஆனால் அப்படி எடுத்தும் ஒரு சிலருக்கு குழந்தை பிறப்பு இல்லாமல் இருந்து இருக்கிறது. அபப்டி பட்ட நிலையில், வாழ்கையில் ஒரு விரக்தி வரும் பாருங்கள், ஊர் கூடி மலடி என்று சொல்லாமல் சொல்வது, எத்தனை ட்ரீட்மென்ட் எடுத்த பின்பும் ஒன்றும் இல்லை அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலையில்லா தன்மை என்று எங்கு பார்த்தாலும் குழப்பங்கள். எதற்காக வாழ வேண்டும் என்று நினைப்பு..அப்பப்பா..

நம்ம ஊரில் அல்லது நம்மூர் மக்களிடம் இப்போதும் இருக்கும் ஒரு கெட்ட ஒப்பீடு,  குழந்தை இல்லாத தம்பதியினரை முன் வைத்து கொண்டு குழந்தை உள்ள பல தம்பதியினரை பாராட்டி பேசுவது. அல்லது நல்ல விசயங்களில் குழந்தை இருக்கும் பெண்களுக்கு முன்னர் குழந்தை இல்லா பெண்ணை கீழாக நடத்துவது என்று பல. நான் சொல்வது எல்லாம் இந்தியாவில் இருக்கும் சூழல் அல்ல, இங்கே அமெரிக்காவிலும் நடக்கும் சில அவலங்கள் தான்.

வேறு எங்கும் போக வேண்டாம், என்னுடைய சொந்த வாழ்கையில் நடந்தது இது. என் postdoc படிப்புக்காக என்று திருமணத்திற்கு பிறகு நாங்கள் குழந்தை பிறப்பை தள்ளி போட்டு இருந்தோம். அது பற்றி எதுவும் தெரியாத நிலையில், எங்களுக்கு நெருகிய சொந்தம் முதல் நெருங்கிய நண்பர்கள் வரை பலரும் எங்களை நல்ல விஷயங்கள் பலவற்றிக்கும் அழைப்பதில்லை, அப்படியே அழைத்தாலும் என்னை ஒரு சில விடயங்களை செய்யவிடவில்லை . என்னை மிகவும் காயபடுத்திய ஒரு சில விசயங்களில் நான் நெருங்கிய தோழியாக அப்போது நான் நினைத்த ஒரு பெண், தான் தாய்மை அடைந்ததை என்னிடம் சொல்லாமல் மற்ற அனைவருக்கும் சொல்லி அவர்களிடமும் "என்னிடம் சொல்ல வேண்டாம் 3 மாதங்கள் கழிந்த பின் சொல்லுங்கள்" என்று சொன்னது. அதே போல அவளுக்கு குழந்தை பிறந்ததை என்னிடம் சொல்லாமல் மற்றவர்கள் அனைவரிடமும் சொன்னது என்று பல.

அமெரிக்காவில் பல குரூப்கள் உண்டு. இது சாதி மத மொழி தாண்டியது   அதாவது, ஒரு குழந்தை இருக்கும் பெற்றோர் அதே போல ஒரு குழந்தை இருக்கும் பெற்றோரிடம் நட்பு வைத்து கொள்வார்கள் அல்லது அப்படி ஒரு குழந்தை இருக்கும் பெற்றோர்கள் பலரை தங்கள் குருப்பில் சேர்த்து கொள்வார்கள். அதே போல இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருப்பவரும்  2 அல்லது 3 குழந்தைகள் இருக்கும் குருப்பில் இருப்பார்கள். ஆனால் இவர்கள் தவறி கூட ஒரு குழந்தை இல்லா பெற்றோரை தங்கள் குருப்பில் சேர்த்து கொள்ள மாட்டார்கள். எங்கே தன் குழந்தைகளை பார்த்து கண்ணு வைத்து விடுவார்களோ என்று ஒரு குறுகிய எண்ணம். ஒரு சப்போர்ட் குரூப் என்று எதுவும் இருபதில்லை. ஏற்கனவே குழந்தை இல்லை என்று நொந்து போய் இருக்கும் இவர்கள், சமூகத்தால், நண்பர்களாலும் ஒதுக்க படுவதை அறியும் பொது இருக்கும் மனஉளைச்சலை நானும்  கொஞ்ச காலம் அனுபவித்து இருக்கிறேன். எங்கு சென்றாலும் இந்திய மக்களிடம் இருக்கும் ஒரு குறுகிய மனப்பான்மை இருக்கு பாருங்கள் அதனை என்ன என்று  சொல்வது.

உடலில் எந்த குறையும் இல்லை என்றாலும் இது போன்ற ஸ்ட்ரெஸ் களே பல நேரங்களில் நமக்கு எதிரியாக இருக்கும் என்று பலரும் அறிவதில்லை.  பாசிடிவ் எண்ணங்கள், நமக்கும் குழந்தை பிறக்கும் என்ற எண்ணங்கள் கொண்டு ஒழுங்காக உடற்பயிற்சி செய்து, நல்ல சத்தான உணவுகளி உண்டு, முக்கியமாக பெண்கள் அதிக எடை போடாமல், சந்தோசமாக ரிலாக்ஸ் ஆக இருந்தாலே எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று நான் அறிந்த நிறைய infertility இணைய தளங்கள் அறிவுறுத்துகின்றன.

எவ்வளவு முயற்சி செய்தாலும் குழந்தை பேறு கிடைக்கவில்லை என்றாலும், கனவனம் மனைவி ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு  குழந்தை தத்து எடுத்து கொள்ளுங்கள். அதற்காக வாழ்க்கை விரக்தி வேண்டாம். குழந்தை என்பது வாழ்கையின் ஒரு அங்கம் தானே தவிர அதுவே முழு வாழ்கையும் அல்ல.

இது எனக்கு தெரிந்த, நெருங்கிய பல குழந்தையில்லா  தோழிகளின் வாழ்கையில் இருந்து எடுக்க பட்டது. அவர்களுக்காகவே எழுதப்பட்டது.

நன்றி.

Sunday, April 24, 2011

குழந்தையின்மை ஒரு நோயா? - 3 -அதிக எடை ஆபத்தானது

கையாஸ் தியரி என்று உண்டு, அதன்படி "உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அடுத்த நிகழ்வுடன் தொடர்புடையது" என்று அது கூறும். மற்ற விசயங்களில் அது உண்மையோ இல்லையோ ஆனால் மனித உடலை பொறுத்தவரை அது மிக மிக சரி என்றே தோன்றும். உதாரணமாக குழந்தையின்மைக்கான மிக முக்கிய காரணம் கருமுட்டை சரிவர வளர்ச்சியடையாமல் பாதியிலேயே நின்று போகும் கருப்பை நீர்க்கட்டி பாலி சிஸ்டிக் ஓவரீஸ் PCOS எனப்படும் ஒரு நிகழ்வுக்கும் அதிக எடை மற்றும் இன்சுலின்க்கும் இருக்கும் தொடர்பை கூறலாம்.

சரி PCOS என்றால் என்ன என்று பார்போம்.

நாம் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல கருமுட்டை முழு வளர்ச்சியடைவதே குழந்தைபேற்றுக்கான முதற்படி, அது சரியாக நடக்கவில்லை என்றாலே முதல் தடை ஆரம்பம்.


ஓவ்வொரு மாதமும் மாதவிலக்கு முடிந்தவுடன் பெண்களுக்கான ஹார்மோன்களான எஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்ரோன் போன்றவற்றை சுரந்து அடுத்த ஆவுலேஷேன் நடக்க சிக்னல் அனுப்புகிறது. இந்த ஹார்மோன்கள் தவிர ஆண்களிடம் இருக்கும் ஹார்மோன்களான ஆன்றோஜென்களும் பெண்களிடம் சிறிதளவு சுரக்கின்றன.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்று படித்திருப்போம், அது தான் PCOS விசயத்தில் நடக்கிறது, எப்போது பெண்களுக்கான ஹார்மோன்களை சுரக்க உத்தரவிடும் பிட்யுட்டரி சுரப்பி மிக மிக சிறிய அளவில் தேவைப்படும் ஆண்களுக்கான ஹார்மோன்களை அதிகம் சுரக்க உத்தரவிட்டால் அங்கு ஹார்மோன் சீரின்மை நடக்கிறது. இந்த ஆன்றோஜென் கருமுட்டை முழு வளர்ச்சியடைவதை தடுக்கிறது. அடுத்து பிட்யுட்டரி சுரப்பி FSH எனப்படும் பாலிகுல் ஸ்டிமுலேடிங் ஹார்மோனை அதிகம் சுரந்து, ஒரே ஒரு கருமுட்டை வளர்ச்சியடைவதை ஊக்குவிக்காமல் பல பாலி சிஸ்ட் அதாவது நீர்கட்டிகளை உருவாக்குகிறது. விளைவு, கருமுட்டை வளர்ச்சியடையாமை, குழந்தையின்மை.

மேலே காட்டப்பட்டுள்ளது ஒரு PCOS உள்ள பெண்ணின் கருப்பை ultrasound படம். கருப்பு நிறத்தில் இருக்கும் ஓவ்வொரு வட்டமும் கருமுட்டைகளை குறிக்கிறது. ஒரே ஒரு கருப்பு நிற வட்டம் இருப்பின் அது சாதாரண ஆரோக்கியமான கருமுட்டை வளர்ச்சி. ஆனால் அந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது போல பல முழு வளர்ச்சியடையாத கருமுட்டைகள் இருப்பின் அதுவே PCOS எனப்படும் கருப்பை நீர்க்கட்டிகள்.


சரி இதற்கும் உடல் எடைக்கும் அல்லது இன்சுலினுக்கும் என்ன சம்பந்தம்.

தற்போதைய
ஆராய்ச்சியின் படி அதிக உடல் எடை, அன்றோஜென்கள் எனப்படும் ஆண் ஹார்மோன்களை சுரக்கிறது, அதனாலேயே ஆண்கள் போன்று மீசை, தாடி வளர்வது அல்லது ஸ்கின் டாக்ஸ் எனப்படும் மருக்கள் உண்டாவது அல்லது குரல் மாறுவது, மாத விலக்கு வராமல் இருப்பது போன்ற மாற்றங்கள் உண்டாக ஆரம்பிக்கும். உடல் எடையை பத்து சதவீதம் குறைத்தாலே அன்றோஜென் சுரப்பு கம்மியாகும் என்றும், மாதவிலக்கு திரும்பும் என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

சரி இங்கே இன்சுலின் எங்கிருந்து வந்தது?

மற்றொரு
ஆராய்ச்சியின் படி இந்த PCOS ம் இன்சுலினின் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று அறிய முடிகிறது, அதிக உடல் எடை உள்ளவர்களின் உடலில் அதிகம் சக்கரை இருப்பதாக பிட்யுட்டரி சுரப்பி நினைத்து கொண்டு அதிக இன்சுலினை சுரக்க உத்தரவிடுகிறது அந்த இன்சுலின் தொடர்விளைவாக ஆன்றோஜென்களை அதிகம் சுரக்க வழிவகை செய்து PCOS ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

சரி இந்த PCOSஐ குணப்படுத்த என்ன செய்கிறார்கள், அதீத உடல் எடையும் , அதிக இன்சுலினும் PCOS க்கு காரணமாக அமைகின்றன என்று அறியப்படுவதால் பல நேரங்களில் சக்கரை குறைவான ஆரோக்கியமான உணவும், அதிக பழங்கள் கொண்ட உணவு முறையும் பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் மேட்போர்மின் எனப்படும் சக்கரையை கட்டுபடுத்த உதவும் மாத்திரையையும் டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனாலும் அதிக junk உணவுகளையும், empty கலோரிகளை தரும் உணவுகளையும் தவிர்த்து நிறைய காய் பழங்கள் கொண்ட உணவுகளை உண்பதும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதுவுமே இதற்க்கு ஒரே வழி.

--தொடரும்

Reference

http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0001408/

Saturday, April 9, 2011

குழந்தையின்மை ஒரு நோயா?- 2

நேற்றைய இடுகையில் குழந்தையின்மை பற்றிய பொது கருத்துக்களை பற்றி எழுதி இருந்தேன். இன்றைய இடுகையில் பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையையும் சினை முட்டை பையையும் பற்றி ஒரு சின்ன முன்னுரை.

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு இருப்பதே பெண்களின் இனப்பெருக்க உறுப்பு. கவிழ்த்த முக்கோணத்தை போன்று இருப்பது கர்ப்பப்பை, இரண்டு கைகள் போல காட்டப்பட்டு இருப்பது பால்லோப்பியன் டியுப். இரண்டு கைகளின் முடிவில் இருப்பது சினைமுட்டையை உற்பத்தி செய்யும் சினைப்பை.

ஒவ்வொரு மாதமும் சினைமுட்டை, சினைப்பையில் உருவாகி, வெடித்து, வெளியேறி, பால்லோபியன் டியுப் வழியாக மெதுவாக கர்ப்பப்பை நோக்கி நகர ஆரம்பிக்கும். சினைமுட்டை பால்லோபியன் டியுப் வந்தவுடன் அங்கிருக்கும் விந்தணுவுடன் இணைந்து கருவாக் ஆள்ளத். பிறகு கருவானது மெதுமெதுவாக கர்ப்பப்பையை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. இதற்கிடையில் கர்பப்பையானது தன்னுடைய கருப்பை சுவர்களை மெத்தை போலாக்கி கருவை தாங்கும் சக்தி கொண்டதாக மாற்றுகிறது. தற்போது கருவானது கர்பப்பை சுவர்களில் தன்னை இணைத்து கொண்டு பலசெல் கருவிலிருந்து முழுதும் வளர்ந்து குழந்தையாகும் வரை மாறும் தனது வியப்பான பயணத்தை ஆரம்பிக்கிறது.

மேலே குறிப்பிடபட்டுள்ள பல நிலைகளில் ஏதேனும் ஒரு நிலை சரிவர நடக்காவிட்டாலும் குழந்தைப்பேறு வாய்க்காது.

உதாரணமாக சினைமுட்டை முழு வளர்ச்சியடையாமல் பாதி வளர்ச்சியடைந்திருதாலோ அல்லது வெடித்து வெளியேற முடியாமல் இருந்தாலோ குழந்தைப்பேறுக்கு முதல் தடை ஆரம்பம்.

அடுத்த தடை சினைமுட்டை பால்லோபியன் டியுப் வழியாக கருப்பை நோக்கி நகர முடியாமை. இதற்க்கு முக்கிய காரணியாக இருப்பது பால்லோபியன் டியுப் அடைப்பு.

அப்படி சினைமுட்டை வெளியேறி, ஃபல்லோபியன் டியூப் வழியாக வந்து காத்திருப்பது அதிகபட்சம் ஒரு 24 மணி நேரமே, அதற்குள்ளாக விந்தணுவுடன் இணைந்தால் மட்டுமே கருவாக முடியும். அப்படி கருவாவதற்கு விந்தணுவும் சினைமுட்டையும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதாவது விந்தணுவில் இருந்து வரும் குரோமோசோமும் சினைமுட்டையில் இருந்து வரும் குரோமோசோமும் எவ்வித மரபணு சார்ந்த குறைபாடும் இல்லாமல் இருக்கவேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே உருவான கரு குழந்தையாக மாறும், மரபணு குறைபாடிருப்பின் அந்த கரு கலைந்துவிடும்.

கடைசியாக ஏற்படும் தடை கரு, கர்ப்பப்பையில் தன்னை இணைத்து கொள்ள முடியாமை. இதற்கு முக்கிய காரணியாக இருப்பது கர்ப்பப்பை தன்னை கருவை தாங்கிகொள்ளும் படி தயார் படுத்த முடியாமை அல்லது கர்ப்பபை கட்டிகள்.

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து நிகழ்வையும் கண்ட்ரோல் செய்யும் மாஸ்டர் கண்ட்ரோலராக இருப்பது பிட்யூட்டரி சுரப்பியாகும்.




எப்படி இந்த பிட்யூட்டரி சுரப்பி அனைத்தையும் கண்ட்ரோல் செய்கிறது என்பதை மேலுள்ள படத்தில் காணலாம். சினைப்பையில் இருந்து சினைமுட்டை முழுவளர்ச்சி அடைந்து வெடித்து வெளியேறுவது பிட்யூட்டரி சுரப்பி வெளியிடும் சிக்னலான FSH எனப்படும் ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்ட்ங் ஹார்மோன்னால் தான்.
அதே பிட்யூட்டரி சுரப்பி கருப்பை சுவர்களை மெத்தை போல மாற்றி கருவை கருப்பையுடன் இனைக்க வசதியாக்கும் LH எனப்படும் லூட்டியல் ஃபேஸ் ஹார்மோனை சுரக்கிறது.

சரி, இப்போது எப்படி நமது இனப்பெருக்க உறுப்புகள் வேலை செய்கிறது என்பது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நாளைய இடுகையில் எப்படி உடல் பருமனும், உணவுப்பழக்கவழக்கங்கள் மேலே விவரித்த ஒவ்வொரு நிலையையும் பாதிக்கிறது என்று காண்போம்.

--தொடரும்

Friday, April 8, 2011

குழந்தையின்மை ஒரு நோயா?- 1



சென்ற சில மாதங்களாக பதிவுகள் பக்கம் வர இயலவில்லை. தற்செயலாக என்னுடைய இடுகைகள் ஸ்டேட்ஸ் பற்றி பார்த்த போது தினப்படி குறைந்தது பத்து தடவையாவது என்னுடைய முந்தய இடுகையான குழந்தையின்மைசிகிச்சை வியாபாரமாக்கபடுகிறதா? என்ற இடுகையை பலர் படித்திருப்பது அறிய முடிகிறது.

நேற்று என் அம்மாவிடம் உறவுக்காரர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த போது அதில் என் வயதொத்த சிலர் குழந்தையில்லாமல் மிகவும் சிரமப்படுவதாக அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள். எனக்கு தெரிந்தே இங்கு வசிக்கும் எங்கள் நண்பர்கள் சிலர் பல வருடங்களாக குழந்தைக்கு முயற்சி செய்து எதுவும் நடக்காமல் வாழ்க்கை வெறுத்து இருப்பதை கண்ணார கண்டிருக்கிறேன்.

முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குழந்தையின்மை பிரச்சனை இப்போது ஆங்காங்கே நிறைய காண, கேட்க முடிகிறது. நான் மட்டும் தான் இப்படி அடிக்கடி கேட்கிறேனா? இல்லை, உண்மையில் நிலவரம் அப்படித்தான் இருக்கிறதா? போன்ற கேள்விகள் எனக்குள் எழாமல் இல்லை. இருப்பினும் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு வரை, குழந்தையில்லாமல் நூற்றில் ஒருவர் இருக்கிறார் என்ற நிலைமை போய் இப்போது நூற்றில் பத்து பேர் இந்த நிலையில் இருப்பதை அறிய முடிகிறது.

ஒரு சதவீதமாக இருந்த குழந்தையின்மை இப்போது பத்து சதவீதமாக எப்படி மாறி இருக்கிறது? யார் காரணம்? அவசர வாழ்க்கைக்கும், பாஸ்ட் பூட் கலாச்சாரத்திற்கும், ஒயிட் காலர் வேலைக்கும் நாம் கொடுத்த கூலிகளா இவை? என்பது போன்ற பல கேள்விகள் என்னுள் எழுவது உண்டு.

குழந்தையின்மைக்கு ஆண்கள் சில நேரம் காரணமாக இருப்பினும், அது பெரிது படுத்தபடாமல் "பிள்ளை பெத்து போட முடியாத மலடி" என்று ஊராரால் பெண்களின் மீதே பலி போடப்படுகிறது. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆணுக்கு குறைபாடு இருந்திருக்கிறது, ஆனால் அதனை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். பின்னர் குழந்தை இல்லை என்று அந்த பெண்ணை அவர்கள் படுத்திய பாடு இருக்கிறதே அப்பப்பா! சொல்லி மாளாது. கடைசியில் தாங்கமுடியாமல் அந்த பெண் விவாகரத்து வாங்கி விட்டார். இப்போது மறு திருமணம் செய்து அவருக்கு ஒரு பெண்குழந்தை இருக்கிறது.

இது சமூகத்தில் எப்படி குழந்தையில்லாமல் இருக்கும் பெண்களை நடத்துகிறார்கள் என்பதை உணர்த்தும் இடுகை அல்ல. குழந்தையின்மைக்கு என்னென்ன காரணங்கள் அறியப்பட்டிருக்கின்றன, அவற்றை எப்படி சரி செய்கிறார்கள் அல்லது என்னென்ன மருத்துவ முறைகள் கையாள்கிறார்கள் போன்ற மருத்துவ அறிவியல் சம்பந்தமான இடுகை இது.

இதனை ஒரு தொடர் போல எழுதலாம் என்று இருக்கிறேன். இது மருத்துவ ஆலோசனை அல்ல. குழந்தையின்மை குறித்த நான் படித்த, கேட்ட, அனுபவித்த என் அறிவுக்கு எட்டிய கருத்துக்கள் மட்டுமே இவை என்பதை முன்கூட்டியே இங்கு தெரிவித்து கொள்கிறேன்.

மருத்துவ ரீதியாக பல காரணங்கள் குழந்தைஇன்மைக்கு காரணமாக இருந்தாலும் முக்கியமான காரணமாக நான் கருதுவது நமது உணவு பழக்க வழக்கங்களும், அதீத எடையும் தான். எப்படி இவை நம் உடம்பை பாதிக்கிறது, அதனை தவிர்ப்பது எப்படி என்பதை அடுத்து பார்க்கலாம்.

---தொடரும்

Wednesday, March 10, 2010

குழந்தையின்மை சிகிச்சை வியாபாரமாக்கப்படுகின்றதா?

சில மாதங்களுக்கு முன் என் தோழி ஒருவரின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அவர்களுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனாலும் ஒரு நல்லசெய்தி சொல்ல முடியாமல் வேதனைபட்டு கொண்டு இருந்தனர்.

நான் சென்றிருந்த சமயம் அவர்கள் வீட்டில் ஒரு இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு நடிகை ஒரு மருத்துவரிடம் கேள்வி கேட்டு கொண்டிருந்தார். அந்த மருத்துவர் பெண்களுக்கான Ob-Gyn/Infertility டாக்டர் என்று நினைக்கிறேன். அதில் நடிகை ஒவ்வொரு கேள்வி கேட்டு முடித்த பின் அந்த டாக்டரின் speciality என்று சுமார் பத்து நிமிடம் அறிவித்தார் ஒரு பெண். அதில் எங்களிடம் சிகிச்சை எடுத்து கொண்டால் எல்லா கருப்பை பிரச்சனையும் விலகி குழந்தை உண்டாகும் என்றார். எல்லா speciality யும் சொன்ன பின் அந்த அறிவிப்பாளர் "எங்கள் டாக்டர் மிகுந்த பக்தியும் கைராசியும் உள்ளவர் ...." என்று நிறைய சொன்னார்.

அது ஒரு 30 நிமிட நிகழ்ச்சி என்று நினைக்கிறேன், அதில் நடிகை ஒரு ஐந்தாறு கேள்வி தான் கேட்டு இருப்பார். மற்றபடி அந்த டாக்டர் பற்றின விளம்பரமும் அவரின் கைராசி பற்றியும் தான் நிறைய கேட்க முடிந்தது.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது என் தோழியுடன் பேசி கொண்டிருந்தேன். அவர் இந்தியா செல்ல இருப்பதாக சொன்னார். அங்கு சென்று குழந்தையின்மைகாக சிகிச்சை எடுத்து கொள்ள இருப்பதாக சொன்னார். இங்கு நல்ல advanced treatments இருக்கும் போது எதற்கு அங்கு செல்கிறாய் என்று கேட்டேன். அதற்கு அவர் தனக்கு கருக் குழாய் அடைப்பு (Fallopian tube blockage) இருப்பதாக டாக்டர்ஸ் சொன்னதாகவும் அதற்கு சோதனை குழாய் குழந்தை (IVF treatment) தான் ஒரே தீர்வு என்று இங்கு இருக்கும் டாக்டர்ஸ் சொன்னதாகவும் சொன்னார். அதற்காக ஆகும் செலவு இங்கு அதிகம் என்றும், அவர்களின் இன்சூரன்ஸ் இதனை கவர் செய்யாது என்றும் சொன்னார். அதனால் இந்தியா சென்று இதற்கான மருத்துவம் பார்க்க போவதாகவும் சொன்னார்.

இதை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் வேறொரு இந்தியன் சேனலில் மற்றொரு டாக்டர் வந்து பேசி கொண்டு இருந்தார். அவரும் தான் ஒரு கைராசி குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் என்றும், தன்னிடம் சிகிச்சை பெற்று பலர் குழந்தைபேறு அடைந்ததாகவும் சொன்னார். இது ஒரு coincidence ஆ! இல்லை உண்மையிலேயே இந்தியன் சேனல்களில் இது போன்று விளம்பரம் அடிக்கடி வருகிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் இப்போதெல்லாம் மருத்துவம் குறித்த நிகழ்ச்சிகள் எல்லாம் மருந்துகள் பற்றி கூறுவதை விட அந்த மருத்துவர் பற்றிய விளம்பரமாக மாறியதாக எனக்கு தோன்றியது. சமீப காலங்களில் இந்திய பத்திரிக்கைகள் வாரஇதழ்கள் எல்லாவற்றிலும் இது போன்ற விளம்பரங்கள் அடிக்கடி காண நேரிடுகின்றது.

இவை எல்லாம் நடந்தது சில மாதங்களுக்கு முன், நேற்று என் தோழியை சந்திக்க நேர்ந்தது, அவர் தான் உண்டாகி இருப்பதாக நல்ல செய்தி சொன்னாள். எல்லாம் இயற்கையாக நடந்ததாகவும் எந்த treatment க்கும் செல்லவில்லை என்றும் சொன்னாள். எனக்கு ஒரே சந்தோசம், கடவுள் அவர்களுக்கு நல்ல வழி காட்டினாரே! என்று.

ஆனாலும் எனக்கு வந்த சந்தேகம் இது தான், கருக்குழாய் அடைப்பு என்றும் (Fallopian tube blockage) இயற்கையாக குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றும் இங்குள்ள டாக்டர்ஸ் எப்படி சொன்னார்கள்?. மருத்துவம் மிகவும் முன்னேற்றம் அடைந்ததாக கூறப்படும் இந்த நாட்டிலும் ஏன் இப்படி நடக்கிறது? என்று நினைத்தேன். அப்போது Robin Cook அவர்களின் Vital Signs என்னும் புத்தகத்தில் இது போன்ற குழந்தையின்மை சிகிச்சை (Infertility கிளினிக்) நிலையங்களில் நடக்கும் கூத்துகள் நினைவுக்கு வந்தன. அது ஒரு கற்பனை கதை என்றாலும், இங்கு நடக்கும் கூத்துகளை எல்லாம் பார்க்கும் போது, குழந்தையின்மை சிகிச்சை வியாபாரமாக்கப்படுகின்றதோ என்று நினைக்க தோன்றுகிறது.