2010 ஆம் வருடம் கிரேக் வெண்டர் அவர்கள் செயற்கை செல் உருவாக்கிய செய்தி வந்தது தான் தாமதம், பதிவுலகில் உள்ள நாத்திகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பாருங்கள் செயற்கை செல் உண்டாக்கி விட்டனர் அறிவியலார், அதனால் கடவுள் என்ற ஒன்று இல்லாவே இல்லை என்ற விவாதம் ஆரம்பித்தனர்.
ஆத்திகர்களே விடுவேனா பார் என்று நாத்திகர்களுக்கு 'counter' கொடுப்பதாக நினைத்து வரிந்து கட்டி கொண்டு, பரிணாமம் என்ற ஒன்று இல்லாவே இல்லை, கடவுள் இந்த உலகத்தை இத்தனையாவது நாள் இப்படி தான் படைத்தார் என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தனர்.
என்னை போன்ற ஆ/நாத்திகர்களே, ஆத்திகர்கள் பக்கமும் செல்ல முடியாமல் நாத்திகர்கள் பக்கமும் செல்ல முடியாமல், என்ன செய்வது என்று புரியாமல் விழிக்க ஆரம்பித்து விட்டோம்.
அதென்ன ஆ/நாத்திகர்கள், “நமக்கு மேலே ஒரு சக்தி இருந்து நம்மை ஆட்டுவிக்கிறது என்று நம்பும் அறிவியலார்கள்”.
சரி இதெல்லாம் இப்போது எதற்கு சொல்கிறேன் என்று கேட்பவர்களுக்கு.
சில நாட்களுக்கு முன்பு தமிழ் மணத்தை பல நாட்கள் இடைவேளைக்கு பிறகு திறக்க நேர்ந்தது..அதில் அதிக பதிவர்கள் பரிந்துரைத்த இடுகை என்ற ஒரு இடுகை "Central Dogma" எனப்படும் மாலிகுலர் பயாலஜி அடிப்படை தத்துவத்தை கூறுவது என்று பறைசாற்றப்பட்டு கிட்டதட்ட 30க்கும் அதிகமானவர்கள் பரிந்துரைத்து இருந்தனர். அட, நம்ம சப்ஜெக்ட் ஆச்சே..நாமலே ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சதே..என்று..மிக மிக ஆர்வத்துடன் சென்று பார்த்தேன்..
படித்த சில நேரத்தில் அதில் கூறப்பட்டிருந்த அடுக்கடுக்கான அறிவியல் மற்றும் பரிணாமத்தை பற்றிய திரிபுகளை பார்த்த பிறகு பொறுக்க மாட்டாமல், சில கேள்விகளை எழுப்பிவிட்டு தயவு செய்து தவறான அறிவியலை போதிக்காதீர்கள் என்று சொல்லி விட்டு வந்தேன்.
அதற்கான பதிலாக தன் கூற்றை நியாயப்படுத்தி தன் கட்டுரையில் உள்ள குற்றம் இருந்தால் காட்டும்மாறு சவால் விட்டு இருந்தார்.
பரிணாமம் என்பது என்ன? மனித பரிமாணம் மட்டுமே பரிணாமம் என்றழைக்கப்படுகிறதா?, வேறெந்த உயிரினமும் பரிணாமிக்காதா? என்ற சில கேள்விகளை எழுப்பி இருந்தேன்?...பதில் ஏதும் அங்கிருந்து வந்ததாக தெரியவில்லை.
முன்பே பரிணாமம் பற்றி தருமி அய்யா அவர்களும், தி அனலிஸ்ட் அவர்களும் அழகாக எழுதி இருக்கிறார்கள்.
அதனால், நான் இங்கு கூற இருப்பது எல்லாம் பரிணாமத்திற்கான சிறந்த உதாரணமாக இருக்கும் ஃப்லூ வைரஸ் பற்றியே.
அதென்ன ஃப்லூ வைரஸ், பறவைக்காய்ச்சல் பன்றிக்காய்ச்சல், ஃப்லூ காய்ச்சல் என்ற வித விதமான காய்சல் பரப்பும் ஒரு சின்னச்சிறிய உயிரி அது.
ஒரு ஓவியரின் கைவண்ணத்தில் கீழே காட்டப்பட்டு இருப்பது தான் ஒரு ஃப்லூ வைரஸும் அதில் இருக்கும் ஜீன்களும்.
நமக்கெல்லாம் இருப்பது போலே ஆயிரக்கணக்கான ஜீன் களை ஃப்லூ வைரஸ் கொண்டிருக்கவில்லை. அவைகள் கொண்டிருப்பது மொத்தம் பன்னிரெண்டு ஜீன்கள் மட்டுமே..இந்த 12 ஜீன் களும் 'segmented genome' என்றழக்கப்படும் 8 கூறுகளாலான மரபுப்பொருள்களை உடைய பகுதிகளாக பிரிக்கபட்டு இருக்கும்.
வெறும் 12 ஜீன்களை கொண்டு எப்படி இத்தனை effective ஆக மக்களை அவர்களால் தாக்க முடிகிறது, வாழ முடிகிறது, ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் கிலி ஏற்படுத்த முடிகிறது என்றால்..அதற்கு ஒரே ஒரு காரணம் தான், வைரஸ் கிருமிகள், எப்படி திறமையாக வாழ்வது என்ற பரிணாம கொள்கையை நன்கு அறிந்து கொண்டிருக்கின்றன.
"survival of the fittest" என்றழைக்கப்படும் அந்த கொள்கையை எப்படி அவை பயன்படுத்துகின்றன என்று பார்ப்போம்.
ஏற்கனவே, ஃப்லூ வைரஸ் 8 கூறுகளையுடைய மரபுப்பொருள்களை கொண்டது என்றறிந்தோம், இந்த கூறுகளை permutation and combination முறையில் பலவாறு சேர்த்து, பிரித்து ஒழுங்குபடுத்தி எந்த கூறுகள் வாழ்வதற்கு தகுந்ததோ அவற்றை அழகாக இணைத்து கொள்கிறது ஃப்லூ.
உதாரணமாக கீழே கொடுக்கபட்டு இருக்கும் இரண்டு பிங்க் மற்றும் கிரீன் வைரஸ்கள் தங்களின் மரபுப்பொருள்களை எப்படி ஒழுங்குபடுத்தி அதிக ஆற்றல் கொண்ட ஃப்லூவை உருவாக்குகிறது பாருங்கள்.
ஃப்லூ நோய்வாய்பட்ட ஒருவரிடம் இருந்து எந்த நிமிடத்தில் வைரஸை நீங்கள் பிரித்தெடுத்தாலும், அவற்றில் கிட்டதட்ட 40% வைரஸ்கள், இப்படி ரீஅஸ்ஸார்ட்மெண்ட் செய்துகொண்டு மிக மிக வலிமையான வைரஸ் சந்ததிகளை உருவாக்கி இருக்கும்.
என்ன ஒரு திறமை பாருங்கள்.
இவ்வளவு இன்று போதும் என்று நினைக்கிறேன், பிறகொரு சமயம், மீண்டும் ஃப்லூ பற்றி பார்ப்போம்.
தற்போது..மீண்டும் ஆத்திக, நாத்திக சண்டைக்கு வருவோம்..
ஆத்திகர்களே..நீங்கள் கடவுள் என்ற ஒன்று இருப்பதாக நம்புகிறீர்கள், அதோடு விட்டுவிடுங்கள்..பரிணாமம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதெல்லாம் வேண்டாம்.
நாத்திகர்களே..பரிணாமம் உண்மை..ஆனால் தயவு செய்து பரிணாமத்திற்கும் கடவுளுக்கும் முடிச்சு போடவேண்டாம்.
நன்றி.
15 comments:
மிகவும் அழகான பதிவு. எளிமையான விளக்கம். நல்லதொரு படங்கள்.
சண்டை போடாவிட்டால் ஆத்திகமும் மறைந்து போகும், நாத்திகமும் மறைந்து போகும். அதனால் அவர்கள் நன்றாக எழுதி விளையாடட்டும்.
வணக்கம் சகோ அருமையான விள்க்கம்
நன்றி
வணக்கம்!பதிவர் சார்வாகன் ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி அருமையான விளக்கம்.நன்றின்னு சொல்லி விட்டுப் போய் விட்டார்.நீங்கள் அவரது பதிவுகளை தொடர்ந்து படிக்கிறீங்களான்னு தெரியல.
//அறிவியல் சார்ந்து அப்ப்டியே பரிணாம் கல்வி,கொள்கை எல்லவற்றையும் அற்வியலாளர்களுக்கு விட்டு விட்டு அதனால் வரும் நனமைகளை அனுபவித்து மதம் பின்பற்றி விட்டு போங்கப்பா என்றுதானே சொல்கிறோம்.பரிணாம கொள்கை இருந்தால் சாமி கும்பிட முடியலை என்றால் பிரச்ச்சினை எங்கே!!!!!!!! //
என பின்னூட்டத்தோடு நிறைய தொடுப்புக்களையும்,காணொளிகளையும் அவரது தளத்தில் கொண்டு வருகிறார்.நேரம் கிடைத்தால் வாசியுங்கள்.
உங்கள் சார்ந்த கருத்துக்களை முன் வையுங்கள்.ஆரோக்கியமான எழுத்துகளுக்கு என்றும் என் ஆதரவு.
ந்ன்றி போட்டு முடிச்சுக்குறேன்:)
நல்ல பதிவு
பகிர்வுக்கு நன்றி
ப்
சண்டைகள் பெரும்பாலும் அவரவர் வேதங்கள் சொல்லும் கடவுள் பற்றியே.
பெரியார் கூட அன்பே கடவுள் போன்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்பவர்தான்.
புத்தன் கூட கடவுள் பற்றிய கேள்விகளுக்கு மவுனமே பதிலாய் தந்தான்.
சண்டை இடுவது அறியாமையே.
முகுந்தம்மா எனக்கும் அறிவியலுக்கும் ரொம்ப தூரம்( உனக்கும் அறிவியலுக்கும் மட்டுமில்லை படிப்புக்கும் ரொம்ப தூரம் என்று இப்ப நீங்க முணுமுணுப்பது என் காதில் விழுந்து விட்டது. பரவாயில்லை) நீங்க எழுதினால் நல்லதைதான் எழுதுவீர்கள் என்ற நம்பீகையுடன் 2 தடவை படித்து பார்த்தேன் எனக்கு புரிந்ததெல்லாம் நாதிகனும் ஆத்திகனும் சண்டை போடாதீங்க என்பது மட்டும்தான். அந்த கருத்து நல்ல கருத்து என்பதால் உங்களை வாழ்த்திவிட்டு போகிறேன். வாழ்க வளமுடன்
நல்ல பதிவு
பரிணாமவியலை அடித்து நொருக்கிய அல்லாஹ்..
என்று நான்கூட இதே புளூ வைரஸை வைத்து ஒரு பதிவு எழுதினேன்.
முடிந்தால் படித்து பாருங்கள்
, வைரஸ் கிருமிகள், எப்படி திறமையாக வாழ்வது என்ற பரிணாம கொள்கையை நன்கு அறிந்து கொண்டிருக்கின்றன.//
வைரஸ் கிருமிகள் விளக்கம் அருமை.
Avargal Unmaigal said...
//முகுந்தம்மா எனக்கும் அறிவியலுக்கும் ரொம்ப தூரம்( உனக்கும் அறிவியலுக்கும் மட்டுமில்லை படிப்புக்கும் ரொம்ப தூரம் என்று இப்ப நீங்க முணுமுணுப்பது என் காதில் விழுந்து விட்டது. பரவாயில்லை) நீங்க எழுதினால் நல்லதைதான் எழுதுவீர்கள் என்ற நம்பீகையுடன் 2 தடவை படித்து பார்த்தேன் எனக்கு புரிந்ததெல்லாம் நாதிகனும் ஆத்திகனும் சண்டை போடாதீங்க என்பது மட்டும்தான். அந்த கருத்து நல்ல கருத்து என்பதால் உங்களை வாழ்த்திவிட்டு போகிறேன். வாழ்க வளமுடன்//
நானும் இதையேத்தான் சொல்றேன்!
எனக்கு எழுதும் வேலையைக் குறைத்த 'அவர்கள் உண்மைகள்' க்கு நன்றி.
ஒரு புதிய உரையாடலைத் துவங்கும் எண்ணமும் நேரமும் இல்லை. தொடர்புடைய கருத்தை பதித்துவிட்டுச் செல்லலாம் என்ற அடிப்படையில் இப்பின்னூட்டம்.
யாரையும் குறிப்பிட்டோ புண்படுத்தவோ அல்ல இப்பின்னூட்டம்.
எனக்கு ஆன்மீகவாதி/மதவாதி என்று பிரிப்பதில் உடன்பாடு கிடையாது.. அது அவர்களின் எதிர் உரையாடுபவரின் தன்மையைப் பொறுத்தும், சமூகமதிப்பீடு குறித்த ஒரு அச்சத்திலும், மாறும் ஒரு முகமூடியாகவே பார்க்கிறேன்.
பொதுவாகக் கடவுள் கருத்தைத் தாங்கிப் பிடிப்பவர்கள் சிறுதும் அடிப்படை அறமும் நேர்மையுமற்றவர்களாகவே இருக்கிறார்கள். தன்னுடைய் அறிதல் ஆர்வத்தில் ஒரு அறிவியலாளன் உழைப்பையும், சிந்தனையும் வழங்கி உலகுக்கு ஒரு உண்மையை அளிக்கும் போது அவனது அறிதல் எல்லையை அனைவருக்குமான எல்லையாகவும், ஏன் அந்த அறிவியலாளனுக்குமான எல்லையாகக் கட்டமைத்து, அங்கே தங்களது கடவுளரை உட்காரவைக்கும் திருடர்களே அவர்கள்.
அறிவியல் படித்த நம்பிக்கையாளர்கள் இதிலே கைதேர்ந்த வித்தைக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில், ஒருவர் ஒன்றை நம்புவதற்கு எதுவுமே தேவையில்லை, உயிரின் தோற்றமோ, அண்டப் பெருவெடிப்போ எதுவுமே தேவையில்லை, just beleive it அவ்வளவுதான். இப்படி எளிதான் ஒரு வழி இருக்கும் போது ஏன் இவர்கள் அறிவியலோடு இவ்வளவு மெனக்கடுகிறார்கள் என்று பலமுறை சிந்தித்ததுண்டு. எங்கே இவ்வுளகின் சிந்தனைத் தளத்தில் தனித்து விடப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில்தான், அறிவியலையும் பற்றிக்கொண்டு அதன் அறிதல் எல்லையிலே கடவுளை ஊசலாட விட்டு தங்களது மறுமைக்கான கடவுள் சேவையைச் செய்யும் திருப்தியுடனும், curiosity ஐ passify செய்தும் கொள்கின்றனர் என்று கருதுகிறேன்.
ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளும் தன்மையோ பொறுமையோ இல்லாமல், உடனடியாக அறிவியலாளன் தனது நேர்மையினால் குறிப்பிட்ட தனது அறிதல் எல்லையில் உரையாடலை மாற்றியமைப்பது. இதுதான் நம்பிக்கையாளனின் ஒரே திறமை. சும்மா சொல்லக்கூடாது ஒரு வார்த்தைக்கு தெளிவான விளக்கம் வைக்காட்டி எவ்ளோ உபயோகம் இருக்கு பாருங்க, எங்க வேணாலும், எப்படி வேணாலும், எதிரே உரையாடுபவரின் உரையாடலுக்கு தகுந்த மாதிரி உட்காரவைத்து சிலாகித்துக்கொள்ளலாம்.
தொடர்ச்சி அடுத்து.
மேலே சொன்னது அறிவியல் தளத்தில் நம்பிக்கையாளர்களின் செயல்பாட்டு வகை என்றால், பொது வெளியில் அவர்களது பரப்புரையும், விற்கும் தந்திரமும் வேறானது.இதில் புத்தர் கூட விதிவிளக்கல்ல.
தனது உணவிற்கான இடப்பெயர்ச்சியை ஒரு உயிர் செய்யும், பின்னர் அதற்கான உழைப்பைச் செய்து உணவை உட்கொள்ளும். ஆனால் ஆன்மீகத் தத்துவங்கள், முதலில், ஒருவர் வாழ்ந்துவரும் ஒரு எதார்த்தமான வாழ்வை முழுமையற்றதாகவும் சிறுமையுடையனவாகவும் சித்தரிக்கின்றன. அதாவது கறுப்பை அவமானமாகக் காட்டும் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரம் போல.
பின்னர் முழுமையுடையதாக மாற்றுவதற்கான வழிமுறையாக ஒன்றை முன்னிறுத்தி அதற்கு பதிலீடாக தனக்கான உணவையும் இருத்தலையும் தக்கவைத்துக் கொள்கிறது ஆன்மீகம். அதோடு நில்லாமல், ஒரு சமுதாயத்தில் ஞானம் என்றால் இந்த ஆன்மீகச் சிந்தனைதான் என்ற தோற்ற மயக்கத்தை உற்பத்தி செய்கின்றன. இதைத்தான் நித்யானந்தா விலிருந்து, ஜெயமோகன் வரை அவரவரது எல்லைக்குட்பட்டு செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஒரு சமூகத்தில் ஞானம் என்றால் இதுதான் என்ற ஒற்றைத் தன்மையை நிறுவுவதன் மூலம், ஏணைய அனைத்தையும் குறைந்த ஞானம் அல்லது ஞானமற்ற தன்மையனதாக மாற்றம் பெறுகிறது. விவசாய அறிவு, தச்சுத்தொழில், கட்டட அறிவு போன்ற செயலூக்கமும் ஞானமும் இணைந்து தேவைப்படுபவை கீழானதாக மாற்றப்படுவதன் மூலம், சிந்தனையும், உழைப்பும் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. அதோடு நில்லாமல் அதனை ஞானமாகவே அங்கீகரிக்காதது ஆகப் பெரும் கொடுமை. இப்படி கலாச்சாரத்தளத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செய்ததன் விளைவே இன்றைக்கு தமிழகம், மற்றும் இந்தியாவில் வேறு எந்த துறையும் உலகத் தரத்திற்கு உயராமல் இருக்கிறது.
அதனால்தான், மேற்குலகில் சாராயம் (பியர்) காய்ச்சும் ஒருவரால் வெப்ப இயக்கவியலுக்கான தத்துவத்தை முன்மொழிய முடிகிறது, நம்மூரில் பனையேறிகள் என்ற எள்ளலோடு முடிவடைகிறது.
ஆனால் இன்னமும், மேற்குலகின் உழைப்பையும் சிந்தனையையும் அடிப்படையாகப் பயன்படுத்திக் கொண்டே, மேற்கத்திய சிந்தனை என்பது பொருள் முதவாதத் தன்மையது என்றும், நமது சமூகம் இறை/ஆற்றல்/பேரின்பம் குறித்த தேடல் என்று ஜல்லி அடிப்பு வேறு தொடர்ந்து கல்லாகட்டிக்கொண்டிருக்கிறது. ஒரு எளிய உதாரணத்தோடு சொல்லணும்னா E=mC^2 ல் நாங்கள் Eஐத் தேடுகிறோம் அவர்கள் mஐத் தேடுகிறார்கள் என்று உருவகப்படுத்துவது. "E" யும் "m" மும் சமானத்தன்மையனது என்பதை விளக்கும் சமன்பாட்டில்கூட இரண்டிற்கும் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கும் சிறந்த அறிவுடைய ஆன்மீகவாதிகள் நம்மூரில் அதிகம். ஆதாவது ஆற்றல் என்பது கட்புலனாகத பேரின்பமாம், பொருண்மை என்பது சராசரி வாழ்க்கையாம், இதைக்கேட்டு நாம் புலகாங்கிதம் அடையணும்னு வேற எதிர்பார்க்கிறாங்க.
இப்போதைக்கு இதோட நிறுத்திகிறேன்.. சுருக்கமா சொல்லணும்னா " கடவுள், ஆன்மீகம் இவையிரண்டும் ஒரு சமூகத்தின் சிந்தனையையும், செயலூக்கத்தையும் பெருமளவில் பாதிக்கும் காரணிகளாக இருக்கின்றன." குறிப்பாக நமது தமிழ்சமூகத்தில் பக்தி இலக்கியமும், ஆன்மீகச் சிந்தனைகளும் கட்டமைத்திருக்கும் மதிப்பீடுகள் சமூக முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக இருந்திருக்கிறது.
ஃப்லூ வைரஸைப் பற்றி நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவை நான் வாசிக்கவில்லை. பதிவுலகிற்கு வந்த புதிதில் இந்த மாதிரிப் பல பரிணாமத்தின் புரிதலேதுமற்று மிகப் பிழையான விளக்கத்தோடு பதிவுகளாஇ வாசித்து அதற்கு விளக்கம் கொடுக்க முயற்சித்துள்ளேன். ஆனால் அதனால் பயனேதும் வந்ததாகத் தெரியவில்லை. They are not interested in learnig or knowing. இப்பதிவுகளை தம் மதத்தைச் சேர்ந்த ஒருவர்/தன்னைப் போலவே ஆன்மீகத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர் எழுதுகிறார் அதனால் சரியாக இருக்கும் என்பதற்காகவே பலர் வந்து ஆமோதித்து பின்னூட்டம் இட்டு, அதையே நம்பிச் செல்வது தான் நடக்கிறது. பின் அந்த ஏழாம் அறிவில் வந்தது போல், 'நம் முன்னோர்கள் (அல்லது எமது மதப் புத்தகம்) எல்லாம் அறிந்தவர், இந்த அறிவியல் எல்லாம் பிழை' என்று சொல்வது தான் நடக்கிறது.
நான் நாத்தியவாதியானதற்குக் காரணம் கடவுள் இருப்பதற்கு உலகில் எந்த விதச் சான்றுகளும் இல்லை என்பதே ஒழிய, பரிணாமம் அல்ல. ஆனால் உலகம் இருக்கும் நிலையில் தற்சமயம் நாளைக்கு மதங்கள் சொல்வது போன்ற எல்லாம் வல்ல கடவுள் இருப்பதற்குச் சான்றுகள் தெரியவரின் கூட, உலகை உய்விக்க முதலில் செய்யவேண்டியது அந்த எல்லாம் வல்லவனை அழிப்பதென்றே சொல்வேன். Writing more about that would be derailing this thread. So will stop it there.
தருமி ஜயாவின் இப்பதிவில் எழுதிய பின்னூட்டங்களில் கூட அவ்வாறே சொல்லியுள்ளேன். பரிணாமத்திற்கு இருக்கும் ஆதாரங்களைப் பார்க்கும் போது அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. கடவுள் என்றோருவன் இருந்தால் கூட நாம் இப்போது இங்கிருப்பதற்கு பரிணாமமே காரணம் என்று சொல்லக்கூடியளவு ஆதாரம் உண்டு. அதில் கொஞ்சம் கூட விளக்கமற்று, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குமுன் பலர் சேர்ந்து தொகுத்த புத்தகத்தில் சொல்லவில்லை அல்லது பரிணாமக் கொள்கை மனிதனை ஒரு மிருகமாகவே பார்க்கிறது என்பதால் அதைப் பற்றி உண்மையில் படித்தவர்களை/அது தொடர்பாக ஆராய்ச்சி செய்பவர்களை விசரர்களென நினைப்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது. பரிணாமம் பூமியில் உயிர் தொடங்கியதிலிருந்து என்ன நடந்ததென்பதை விளக்குகிறதே ஒழிய, உயிர் எவ்வாறு பூமியில் முதலில் தோன்றியது என்பதை விளக்கவில்லை. பரிணாமத்தை பொய் என்னும் அநேகமானவர்களுக்கு இது தெரிவதில்லை. அத்தோடு இயற்கை நம்மை உருவாக்க மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக எடுத்தது, அதுவும் படிப்படியாகப் பல இடைப்பட்ட உயிரினங்களினூடக என்னும் உண்மைக்குப் பதில் அவரவர் மதப் புத்தகத்தில் எதிர்மாறாக கடவுள் மிகச் சுலபமாக ஒரு கிழமைக்குள் உலகில் காணப்படும் அத்தனை உயிரினங்களையும் படைத்துவிட்டார் என எந்தவித ஆதாரமும் இல்லாமல் சொல்லப்படுவதை நம்பியே ஆக வேண்டுமெனில், பரிணாமத்தை எப்படியாவது பொய்யாக்க வேண்டும்.
அதனால் கூட ஒரு பிரச்சனையும் இல்லை. Science is a self correcting dicipline. We can learn a lot even if we ever find evidence to disprove it. பொய்யாக்குவதற்கு வழிகூடப் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கு. அதற்குரிய வேலைகளைச் செய்யாமல் பிழையான புரிதல்களுடன் வாசிப்பவர்களுக்குப் பிழையான தகவல்கள் கொடுப்பதும் அதைக் கேட்டால் அதற்குரிய பதில் சொல்லாமல் தப்புவதும் தான்
கடுப்பேற்றும் விடயங்கள்.
என்னுடைய பதிவிற்கு link கொடுத்ததற்கும் மிக்க நன்றி முகுந்த் அம்மா.
கையேடு, உங்கள் கருத்துகளை முழுமையாக ஆமோதிக்கின்றேன். எப்படி இவ்வளவு வடிவாகத் தமிழில் எழுதுகிறீர்கள்? It's amazing.
ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள்
http://avargal-unmaigal.blogspot.com/2012/02/blog-post_10.html
Post a Comment