Sunday, September 17, 2017

நம்மை கண்ட்ரோல் செய்வது கட்டுப்படுத்துவது யார்/எது ?

இந்த கேள்வியை நீங்கள் ஒவ்வொரு வயதினரிடம் கேட்டால் ஒவ்வொரு பதில் கிடைக்கலாம். உதாரணமாக சிறு குழந்தைகளிடமோ அல்லது பருவ வயதினரிடமோ கேட்டால், பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் என்ற பதில் வரும். அதே காதலிப்பவர்களிடம் கேட்டால், பெற்றோர் அல்லது சமூகம் என்ற பதில் வரும். திருமணமான பின்னோ கணவன் தன்னை கண்ட்ரோல் செய்வதாக மனைவியும், மனைவி கண்ட்ரோல் செய்வதாக கணவனும் மாறி மாறி புகார் கூறி கொள்வர். ஆனால், வயதான பின்பு உடல்நிலை, குழந்தைகள் என்று சைக்கிள் மாறி விடும்.

ஆனால் நீங்கள் போனிலோ, அல்லது கம்ப்யூட்டரிலோ இன்டர்நெட் உபயோகிப்பவர் எனில் உங்களை கட்டுப்படுத்துவது எது என்ற கேள்வியை வயது வித்தியாசம் இல்லாமல்  கேட்டு பாருங்கள்.



உதாரணமாக, நீங்கள் யூ-டியூபில் வீடியோ ஒன்று பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுவோம், முன்பெல்லாம் நீங்களாக அடுத்த வீடியோவை கிளிக் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இப்பொழுதோ, அதுவே ஆட்டோ பிலே செய்கிறது. அதாவது, உங்களுடைய வேலையை மிச்சப்படுத்த என்று  யூ-டியூப் உங்களுக்காக செலக்ட் செய்து பிலே செய்கிறது. அதாவது யூ-டூபின் நோக்கம் உங்களை அதிக நேரம் அதில் செலவழிக்க வைப்பது. தொடர்ந்து பிலே ஆகும் போது, பல நேரங்களில் உங்களுக்கு அதனை விட்டு வெளியே வர முடிவதில்லை. அதாவது உங்கள் நேரத்தை, நீங்கள் வேறு வகையில் செலவழிக்க விடாமல் உங்களை யூ-டியூப் கண்ட்ரோல் செய்து விடுகிறது.



அதே போல, நெட்பிலிக்ஸ் எடுத்து கொள்ளுங்கள்,  இதுவும் அதே பாணியை கடைபிடிக்கிறது. '
ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்தது, தானாகவே பிலே ஆகிறது.

இன்னொரு விஷயம். நீங்கள் எப்போது ஒரு விசயத்தை அதிகம் பார்ப்பீர்கள். உதாரணமாக, முகநூல் நியூஸ் பீட் எடுத்து கொள்ளுங்கள். அதில் எந்த விஷயங்கள் அதிகம் காட்டப்படுகிறது. நீங்கள் ஒரு செய்தியை படித்து மனம் வெதும்பி கமெண்ட் அடிக்கிறீர்கள் அன்று வைத்து கொள்ளுங்கள், உங்களுக்கு அதனை சார்ந்த பதிவுகள், திரும்ப திரும்ப காட்டப்படுகிறது, உதாரணமாக, என்னுடைய நண்பர் ஒருவர் கறுப்பினத்தை சேர்ந்தவர், அவர் நடந்து முடிந்த சார்லோட்ஸ்வில் தாக்குதலை குறித்து கமெண்ட் அடித்திருந்தார். இப்பொழுது விடாமல் அவரிடம் இருந்து அதே போன்ற பல பல செய்திகள் கமெண்ட் ஆக வந்து கொண்டிருக்கின்றன. எல்லாமே ரத்தத்தை கொதிக்க வைக்கிறது போன்ற செய்திகள். நடந்தது என்னவென்றால், அவரின் முகநூல் உபயோகிக்கும் நேரத்தை அதிகப்படுத்த என்று, அதனை சார்ந்த பல பல விஷயங்கள் அவருக்கு பரிந்துரைக்க படுகின்றன.  அவரும் ஒவ்வொரு விஷயமாக வாசித்து, கமெண்ட் இட்டு  அதனை மற்றவருக்கு அனுப்புகிறார்.

முதலில் 15 நிமிடம் மட்டுமே முகநூலில்  செலவழித்த அவர், இப்போது அதுவே கதி என்று இருக்கிறார்.

நீங்கள் பிளிப்கார்ட் உபயோகிப்பவரா, இல்லை அமேசான் உபயோகிப்பவரா?, உங்களுக்கு ஏற்ற விடயங்களை, பொருட்களை அவர்களே பரிந்துரைக்கிறார்கள், உங்களுக்கு பிடிக்கும் என்று அடுத்த பொருட்களை பிளாஷ் செய்து உங்களை கிளிக் பண்ண செய்கிறார்கள். நீங்கள் செலவைக்கும் நேரத்தை அதிகரிக்க வைக்கிறார்கள்.

சரி, இப்போது, மறுபடியும் நான் முதலில் கேட்ட கேள்விக்கு வரலாம். உங்களை யார் கண்ட்ரோல் செய்கிறார்கள்.

"AI" எனப்படும் செயற்கை நுண்ணறிவு என்ஜினீர்கள். இவர்கள் டாப் 5-10 கம்பெனிகளில் இருக்கும் என்ஜினீயர்கள். கூகிள், முகநூல், யூடூப் , நெட்டபிலிக்ஸ், அமேசான், மைக்ரோ சாப்ட் என்றுஅனைத்து பெரிய கம்பெனிகளில் இருக்கும் அவர்களே உங்களை கண்ட்ரோல் செய்கிறார்கள். உங்களின் நேரத்தை எங்கே செலவழிப்பது, எப்படி செலவழிப்பது, என்ற அனைத்தையும் அவர்களே ப்ரோக்ராம் செய்து வைத்து விடுகிறார்கள். நீங்கள் அவர்கள் பரிந்துரைப்பது போல செயல்பட செயல்பட அதே போன்ற, அதனை சார்ந்தவை மட்டுமே உங்களுக்கு காட்டப்படும். உங்களின் சுயம் என்பது அவர்களால் நிர்ணயிக்க படுகிறது.

இப்போது எத்தனை பேர்  டிவி, போன், ஐபாட், கம்ப்யூட்டர், யூடூப், அமேசான், பிளிப்கார்ட், நெட்டபிலிக்ஸ் என்று எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள், சொல்லுங்கள். விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இதுவே, டிவி நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். எப்படி மக்களை அதிக நேரம் டிவி பார்க்க வைப்பது என்று உக்கார்ந்து உக்கார்ந்து யோசித்ததாலேயே, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் உருவாக்கப்படுகிறது. அதநை சார்ந்த பலவும் மற்ற எல்லா ஊடகங்களிலும் தெரிய செலவழிக்க வேண்டி உங்களுக்கு பரிந்துரைக்க படுகிறது.

அதுவே எத்தனை பேர் புத்தகங்களை வாசிக்கிறார்கள், இந்த இன்டர்நெட் தாக்கம் இன்றி சொந்தமாக ஏதாவது செய்கிறார்கள். நீங்களே உங்களை கேட்டு கொள்ளுங்கள். நாமெல்லாம் சுயத்தை AI என்ஜினீர்களிடம் இழந்து வருகிறோம், இதுவே உண்மை.

நன்றி

Reference:

https://www.ted.com/talks/tristan_harris_the_manipulative_tricks_tech_companies_use_to_capture_your_attention/transcript?utm_campaign=social&utm_medium=referral&utm_source=facebook.com&utm_content=talk&utm_term=technology#t-873658





Tuesday, September 12, 2017

நகையும், சுயமரியாதையும், கொசு(றும்)!!

ஒரு சில சமயம் சிறு குழந்தைகள் கேட்கும் கேள்விகள் நம்மை வாயடைத்து போக வைக்கும். பல நேரங்களில் எனக்கு இந்த நிலை ஏற்பட்டு இருந்தாலும் சமீபத்தில் முகுந்த் கேட்ட ஒரு கேள்வி என்னை யோசிக்க செய்தது. அது, Why do Women/Girls wear jewellery and makeup?
அதாவது "எதுக்கு மா நகை போடுறாங்க?, எதுக்கு பொண்ணுங்க மேக்கப் பண்ணுறாங்க?" இதுவே அந்த கேள்வி?.

எனக்கும் இதனை சார்ந்த ஒரு விஷயம் தோழிகளுடன் பேசும் போது கேட்க நேர்ந்தது. அதாவது, #100சாரீபாக்ட் எனப்படும் ஒரு தினமும் ஒரு புடவை அணிந்து போட்டோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் போடுவது. புடவை மட்டும் என்றில்லாமல் அதற்க்கு தேவையான அணிகலன்கள் (ஜிமிக்கி, தோடு, வளையல், நகை etc ) அணிந்து, அவை எங்கே வாங்கியது என்று டாக் செய்வது.
இதனை பலர் தினமும் செய்து வருவதாக அறிந்தேன். எதற்காக இவை செய்கிறார்கள்? என்ற கேள்வியும் வந்தது.

 சைக்காலஜியில் "மாஸ்லோவின் தேவைகள் பிரமிட்" என்ற ஒன்று உண்டு.  அதனை "Maslow's Hierarchy of Needs" என்றழைப்பர்.  அதன்படி, மனிதர்கள் தேவைகளை பல படிநிலைகள் கொண்டு பிரிக்கலாம். அவை,

1. அடிப்படை தேவைகள் (உணவு உடை உறைவிடம்)
2. பாதுகாப்பு தேவைகள் (வேலை, உடல்நிலை, வாழ்வில் ஸ்திரத்தன்மை)
3. அன்பு தேவைகள் (நண்பர்கள், குடும்பம், உறவுகள்)
4. சுயமரியாதை தேவைகள் (தன்னம்பிக்கை, சாதித்தல், அடுத்தவர் மதிக்கும்படி நடத்தை, தனித்தன்மை)
5.சுயம் அறிதல் (நன்னடத்தை, படைப்பாற்றல், தன்னிலை உணர்தல், வாழ்வின் நோக்கம் அறிய முற்படுத்தல்)



ஒவ்வொருவருடைய வாழ்வையும் எடுத்துக்கொண்டால் இந்த பிரமிடின் எதோ ஒரு படிநிலையில் நாம் இருக்கிறோம் அல்லது பல படிநிலைகளை தொட்டிருக்கிறோம் என்று அறியலாம்.

உதாரணமாக. அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் எல்லாம் இரண்டாம் படிநிலையான வேலையை சார்ந்இருக்கிறது. வேலை இல்லாமல் இருக்கும் பலரின் அடிப்படை வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகின்றன.

வேலையும் இருந்து விட்டால், வாழ்வின் அடுத்த நிலையான, உறவுகளை தேட ஆரம்பித்து விடுகிறோம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த நிலை பொருந்தாது, ஏனெனில், வேலைவெட்டி இல்லாதவன் தான் கதாநாயகன், ஆனால் உண்மை நிலவரம் வேறு, வேலை வெட்டி இல்லதவனை யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

உறவுகளும் அமைந்த பின், அடுத்த நிலை பிரச்சனைகள் எட்டி பார்க்கின்றன, பெரும்பாலும் அவை, சுயமரியாதை சம்பந்தப்பட்டவை. இந்தியாவில் ஒளிபரப்பப்படும் 100க்கு 99 சீரியல்கள் இந்த சுயமரியாதை பிரச்னைனை கையிலெடுத்து, சமூக அந்தஸ்து, அடுத்தவர் மதிக்கும்படு நடத்தை,…என்பதை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படுபவை.

சீரியல்கள் தவிர்த்து உண்மை நிலவரம் என்னவென்றால், தன்னை இந்த சமூகம் மதிக்க வேண்டும், அதற்கான சில ப்ரோடோகால் உண்டு, நகை போடுவது, மேக்கப் போடுவது, 100சாரீபாக்ட் எல்லாமே, தனக்கான, தன்னுடைய சுயத்துக்கான தேடல். இதனாலேயே, நிறைய வீடுகளில் சீட்டுப்போட்டு நகை வாங்குவது. வாயை கட்டி வயிற்றை கட்டி நகை வாங்குவது. கஷ்டப்படும்போது அடகு வைக்க என்று காரணம் சொல்லப்பட்டாலும், மற்ற அடிப்படை தேவைகள் பூர்த்தியான பல வீடுகளில் நகை என்பது, தன்னுடைய சுயமரியாதையை வளர்த்து கொள்ளவே. எனக்கு தெரிந்தே ஏழை குடும்ப பெண்கள் கல்யாணத்துக்கு செல்லமாட்டார்கள், ஏனெனில், நீங்கள் எவ்வளவு நகை அணிந்து இருக்குறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பும், மரியாதையும் இருக்கும் என்பதால்.

சுயமரியாதை என்ற ஒன்று மட்டுமே பலரை பலநிலைக்கு கீழே தள்ள வல்லது. பலர் கடன் வாங்கியாவது வீடு கட்டுவது, நகை வாங்குவது, பார்ட்டி வைப்பது எல்லாமே, தன்னுடைய ஸ்டேட்டஸ் ஐ வெளிக்காட்டி கொள்ள, ஏதோஒரு வகையில் தான் உயர்ந்தவன் அல்லது நானும் உங்களில் ஒருவன் என்று காட்டி கொள்ள. இப்படி வெட்டியாக சுயமரியாதை மட்டுமே கருத்தில் கொண்டு, உறவுகளை, வேலையை தொலைத்து அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்பட்டவர்களை நான் சந்தித்து இருக்கிறேன். இவர்கள் எல்லாம் பந்தா பேர்வழிகள், "ரொம்ப நல்லவங்க சார்/மேடம்" நீங்க என்று சொல்லிவிட்டால் போதும், எதையும் செய்வார்கள்.

சுயமரியாதை என்பது ஒருவகை தேவை மட்டுமே, ஆனால் அதுவே வாழ்வின் முழுநோக்கமாக இருப்பின் இழப்பு மட்டுமே கிட்டும்.  வாழ்வின் முழு நோக்கம் தெரிய, அதீத சுயமரியாதை நிலையை விட்டு வெளிவரவும்.  நம்முடைய முழு திறமை வெளிப்படும்.

கொசு(று)

கொசுக்கடி பற்றிய ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது. கொசுக்கள் ஏன் ஒருசில மட்டும் அதிகம் கடிக்கின்றன?, இதுவே கட்டுரை

நீங்கள் ஒருபார்க்குக்கு நண்பர்களுடன்  சென்றுள்ளீர்கள், அங்கு உங்களை மட்டுமே கொசு பயங்கரமாக கடிக்கிறது, மற்றவர்களை அல்ல. ஏனென்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா?, ஏனெனில், கொசுக்கடிக்கும் உங்கள் ரத்தவகைக்கும் சம்பந்தம் உண்டு. கொசுக்கள் ஓரிரு ரத்தவகை மனிதர்களை அதிகம் விரும்பும். அதுவும், ஓ வகை மனிதர்கள் தாம் கொசுக்களின் முதல் விருப்பம். ஆனால் உங்கள் ரத்தவகை ஏ  எனில், உங்களை அதிகம் கடிக்காது.

நன்றி



Saturday, September 9, 2017

கலிங்கத்து பரணியும், விக்ரம் வேதாவும், கைதிகள் குழப்பமும்!

படித்தது:
தமிழ் சரித்திர நாவல்களில் கல்கியை தவிர நான் வாசித்ததில்லை. கல்கியின் எழுத்துகளில் கூட பொன்னியின் செல்வன் கவர்ந்த அளவு கூட பார்த்திபன் கனவோ இல்லை சிவகாமியின் சபதமோ கவரவில்லை. இந்த முறை  இந்திய பயணத்தில் மூச்சு முட்ட வேலை இருந்ததால், கடைசி நாளில் மதுரையில் கோவிலுக்கு சென்று விட்டு  புதுமண்டபத்தில் தேடி கடல் புறா வாங்கி வந்தேன். சாண்டில்யனின் நாவல்கள் வாசித்ததில்லை, ஆயினும் பலர் சிலாகித்து சொல்வதை கேட்டதுண்டு. 
முன்பெல்லாம் ஓரிரு வாரங்களில் புத்தகத்தை முடிக்க நேரம் இருந்தது போல் இப்பொழுது இல்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயமாவது முடித்து இருக்கிறேன். ஒருவழியாக 3 பாகங்களையும் 3 மாதத்தில் முடித்தாகிவிட்டது.
 

இதன் கதை நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என்பதால் சிறு கதை சுருக்கம் இங்கே. தென்னிந்தியாவை ஆண்ட சோழர்கள் பற்றியதே "கடல் புறாவும்". ஆனால் கதையின் நாயகன் கருணாகர பல்லவன் அல்லது இளைய பல்லவன். பொன்னியின் செல்வன் கதை வந்தியத்தேவனை சுற்றி நகர்வது போல, கடல்புறா, இளையபல்லவனை சுற்றி நகர்கிறது. அவன் கடலோடும் திறமை, படை நடத்தும் திறமை, அவன் சந்திக்கும் பிரச்னைகள் அதனை எப்படி முறியடிக்கிறான்..இப்படி நகர்கிறது கடல்புறா.

 ஆனால் ஒரு பெரிய வித்தியாசம், வந்தியத்தேவன் என்ற அரசன் பெயரளவில் பொன்னியின் செல்வனில் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பார். அவர் உண்மையில் வாணர் குலத்தை சேர்ந்தவரா இல்லையா, என்று உறுதியாக தெரியவில்லை. அவரை பற்றியும் பெரிய அளவில் சரித்திரத்தில் இல்லை. ஆனால், இளையபல்லவனோ கதையின் நாயகன், உண்மையில் கருணாகர தொண்டைமான் என்று புகழ்பெற்று குலோத்துங்க சோழனின் முதன் மந்திரியாக படைத்தளபதியாக இருந்தவன். 

புத்தகத்தை பற்றி என்னுடைய கருத்துக்கள், ஒவ்வொரு ஆசிரியர்க்குள்ளும் ஒரு எழுத்து நடை உண்டு. தான் சொல்லவந்ததை சொல்லும் விதமும் வித்தியாசமாக இருக்கும். சாண்டில்யனின் நடை, ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் அடுத்த அத்தியாயத்துக்கான லீட் (சுருக்கம் ) கொடுக்கிறார், அது வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு நாவல் படிக்கும் போதும் அதன் தொடர்புடைய கிளை கதைகள் படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் உண்டு. அதே போல தோண்டியபோது, எனக்கு சில விஷயங்கள் புரிந்தன.  

கடல்கடந்து ராஜ்யத்தை விரிவு செய்த இந்திய அரசர்களில் சோழர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அவர்களின் கடற்படை எப்படி அந்த காலத்தில் சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கிறது. எப்படி எல்லாம் அவர்கள் படையை காத்தார்கள், வழி நடத்தினார்கள் என்றெல்லாம் படிக்கும் போது புல்லரிக்கிறது.  இதெயெல்லாம் கடந்து எனக்கு புரிந்த விஷயம், கலிங்கத்து பரணி என்ற காவியத்தின் தலைவன் இளையபல்லவன். 

பரணி என்பது ஆயிரம் யானைகளை போரில் கொன்ற ஒரு தலைவனை பற்றி பாடுவது "கலிங்கம்" என்ற நாட்டை பிடிக்க நடந்த போரில் ஆயிரம் யானைகளை கொன்ற ஒரு தலைவனின் புகழ் பாடும் காவியம் கலிங்கத்து பரணி. அதனை முன்னின்று நடத்திய கருணாகர பல்லவனின் கீர்த்தி பாடும் காவியம் கலிங்கத்து பரணி. 

கலிங்கத்து பரணி என்ற ஒரு காவியம் இருக்கிறது என்று எனக்கு தெரிந்திருந்தாலும், அது என்னவென்று நான் அறிந்திருக்கவில்லை. ஒரு சில தமிழறிஞர்கள் அவ்வப்போது மேடைகளில் "கலிங்கத்து பரணி" குறித்து பேசுவது மட்டுமே கேட்டிருக்கிறேன். ஆனால் அது ஒரு வகை இலக்கியவகை. பரணி பாடுவதற்கு என்று சில வழிமுறைகள், இலக்கணங்கள்  இருக்கின்றன. அதன் படி பாடுவது சுலபமல்ல என்றெல்லாம் அறியும் போது நமது தமிழ் மொழியின் சிறப்பை முன்னோர்களின் சிறப்பை எண்ணி பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
எனக்கென்னவோ கடல் புறா படித்த பிறகு, லியோ டால்ஸ்டராயின் "War and  Peace" ஞாபகத்துக்கு வந்தது. இரண்டும் ஒரு அரசனின்/தலைவனின் போர்முறையை, வீரத்தை பறைசாற்றுகிறது. ஒரு அற்புதமான அனுபவம். 



பார்த்தது

அமெரிக்கா வந்தபிறகு தியேட்டரில் சென்று நான் பார்த்த தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் நிறைய பேர் புகழ்ந்து சொன்ன "விக்ரம் வேதா" தமிழ் படத்தை தியேட்டரில் சென்று பார்க்க நேர்ந்தது. எனக்கு தெரிந்த வரை மிக மிக நேர்த்தியான கதை, திரைக்கதை, நடிப்பு என்று அனைத்திலும் பின்னி எடுத்த ஒரு அற்புதமான படம் இது. படம் முடிந்தவுடன் அனைவரும் எழுந்து ஸ்டாண்டிங் ஓவேஷன் (கைதட்டல்) கொடுத்தனர்.  அதில் எல்லா நடிகனின் ரசிகனும் இருந்தார்கள். அதுவே படக்குழுவிற்கு கிடைத்த வெற்றி. வெல் டன் டீம்.




வாசித்தது 

விக்ரம் வேதா படத்தை பார்த்த பிறகு வாசிக்க நேர்ந்த ஒரு விஷயம், "  Prisoner's dilemma"
அதாவது, இரண்டு குற்றவாளிகள் A , B இருக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுவோம். இருவரும் ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கிறது. இருவரும் வாயை திறக்க மறுக்கிறார்கள்.  அவர்களை அழைத்து  ஒரு டீல் பேசுகிறார்கள், அதாவது, A ஐ அழைத்து நீ உண்மையை ஒப்புக்கொண்டால் உன்னை வெளிவிட்டு B ஐ 20 வருட தண்டனை கொடுப்போம். அதேபோல B ஐ அழைத்து நீ ஒப்புக்கொண்டால் உனக்கு  விடுதலை, A க்கு 20 வருட தண்டனை. அதே போல இருவரும் ஒப்புக்கொண்டால் 5 வருட தண்டனை. ஆனால் இருவரும் கடைசிவரை வாயை மூடி இருந்தால் 1 வருடம் மட்டுமே சிறை. என்று சொல்கிறார்கள் என்று வைத்து கொள்ளுவோம். 

இந்த நிலையில் என்ன முடிவெடுப்பார்கள் அந்த கைதிகள்?



 
 என்ன ஆகிறதென்றால்,  இருவரும் வாய் மூடி இருந்தால் ஒருவருடம் தண்டனை என்றறிந்து இருந்தாலும்,  பெரும்பாலும்எங்கே அடுத்தவன் ஒப்புக்கொண்டு தனக்கு 20 வருட தண்டனையும், அவனுக்கு விடுதலையும் பெற்றுத்தந்த விடுவானோ என்றெண்ணி,  இருவரும் ஒப்பு கொண்டு இருவரும் ஐந்து வருட சிறை அனுபவிப்பர். 

இது அவர்கள் இருவரும் வாய் மூடி இருந்தால் கிடைக்கும் ஒருவருட சிறையை விட அதிகம் என்றாலும், நிறைய பேர் தன்னலமாக யோசித்து அதிக தண்டனை பெற்று கொள்கிறார்கள் என்பது "கைதிகள் குழப்பம்"  எனப்படும் "Prisoner's dilemma"



நன்றி 







Saturday, August 26, 2017

முகமும், முகமூடியும், பிக்பாஸும் !!

நைபால் அவர்களின் "A Bend in the River"புத்தகத்தில் ஒரு பாதிரியார் பாத்திரம்வரும், அந்த பாத்திரத்தின்  பொழுதுபோக்கு முகமூடிகளை சேகரிப்பது. அப்படி அவர் சேகரிக்கும் முகமூடிகளை அவர் பத்திரப்படுத்தி கொண்டிருப்பார், சமயத்துக்கு தகுந்தாற்போல உபயோகப்படுத்த. நாமும் கூட அந்த லிஸ்டில் இருக்கிறோம் என்று நினைக்கிறோம். சமயத்துக்கு தகுந்தாற்போல நடந்து கொள்ள என்று பல பல முகமூடிகள் வைத்துக்கொண்டு இருக்கிறோம்.  சொல்லப்போனால், எல்லா இடங்களிலும் வாயில் வந்ததெல்லாம் வார்த்தை என்று பேசாமல், சமயத்துக்கு தகுந்தாற்போல பேச வேண்டும், என்று குழந்தையில் இருந்தே சொல்லி வளர்க்கப்படுகின்றனர். உண்மை முகத்தை காட்டுபவர்கள் கொடுமை காரர்களாக காட்டப்படுகிறார்கள். நடிப்பவர்கள், அல்லது முகமூடி அணிபவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ள படுகிறார்கள்.

இந்த முகமூடிகளை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டாலும், சில சமயங்களில் முகமூடியை கிழித்து கொண்டு உண்மை முகம் வெளியே தெரிந்து விடுகிறது. முகமூடியை உண்மை என்று நினைத்த வெளியுலகம், நிஜ முகத்தை பார்க்க நேரிடும் போது பயப்படுகிறது.

இரண்டு உதாரணங்கள் உண்டு. ஒன்று அமெரிக்காவில் சமீபத்தில் சார்லட்வில் நகரில் நடந்தது. கடந்த வருட அமெரிக்க தேர்தல் முடிந்தவுடன் நடந்த விஷயங்களும், அதனை குறித்த டிரம்ப் அவர்களின் அறிக்கையும். அமெரிக்க "சைலன்ட் மெஜாரிட்டி" பற்றி குறிப்பிட்டிருந்தேன். வெள்ளை இனத்தவர் மட்டுமே உசத்தி என்றென்னும் ஒரு இயக்கம் அல்லது பல இயக்கங்கள் அமெரிக்காவில் உண்டு. அமெரிக்காவில் அடிமை முறை வேரறுக்கப்பட்டு, எல்லாரும் சமம் என்று பிரகடன படுத்திய பிறகு அடங்கி போய், அல்லது அடங்கியது போன்ற முகமூடியை மாட்டிக்கொண்டு தெரிந்த இந்த இயக்கத்தினர், தனக்கு சப்போர்ட் செய்ய ஒருவர் வந்தது போன்ற எண்ணம் வந்தவுடன், அதுவரை, நான் இனவெறி கொண்டவன் அல்ல என்று சொல்லி திரிந்த அல்லது முகமூடி அணிந்து கொண்டிருந்த பலரும், தற்போது, "தான் ஒரு வெள்ளை, அடக்கப்படும் வெள்ளை", என்று வீறுகொண்டு எழுந்திருக்கிறதை காண முடிகிறது.  ஆபிசில், எதேச்சையாக, சார்லெட் வில் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, அங்கே வந்த ஒருவர், "பிரசிடெண்ட் சொல்லுவதில் உண்மை இருக்கிறது, இரண்டு பக்கமும் தப்பு உண்டு" என்று வார்த்தையை உதிர்க்க, அதிர்ந்து விட்டேன். ஏனெனில், இதுவரை, அவர் எல்லாருடனும் "நன்றாக" பேசிக்கொண்டிருந்தனர், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முகமூடியை கிழித்து கொண்டு அவரின் உண்மை இனவெறி முகம் வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது.


ஆனால் இது நடந்த நேரத்தில், ஒபாமா அவர்கள் ட்விட்டரில் வெளியிட்ட மண்டேலா அவர்களின் ஒரு பொன்மொழி, ட்விட்டரில் அதிகம் ஷேர் செய்யப்பட்ட ஒன்றாகி இருக்கிறது. வெயிலில் தானே தெரியும் நிழலின் அருமை!.

அடுத்த நிகழ்வு, சற்று வேறுபட்ட செட்டப், எல்லாரும் எப்போதும், எங்கேயும்  பேசும் தமிழ் பிக்பாஸ் பற்றியது. "இது நமக்குள் நடக்கும் மாற்றங்கள், நம்மில் இருக்கும் பல பல பிரமாணங்கள் வெளிப்படுகின்றன, ஒரு செட்டப் இல் 100 நாட்கள், வெளியுலக தொடர்பு இல்லமால் இருப்பின் எப்படி இருக்கும் " என்று கமல் அவர்கள் ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தினாலும். மக்களுக்கு எது பிடிக்கிறது என்று பார்க்க வேண்டும்.  உண்மையை சொன்னால், பிக் பாஸ், பிக் பிரதர் போன்றவை எல்லாமே, ஜியார்ஜ் ஆர்வெல் அவர்களின் "1984" புத்தக படைப்பில் வரும் பாத்திரம். என்ன அங்கே, ஒவ்வொரு வீடும் பிக் பாஸ் வீடு போல கேமரா பொருத்தப்பட்டு, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படும்,என்று 1934 இல் எழுதி இருப்பார். தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

நிற்க..நான் இங்கே சொல்ல வந்தது, முகமூடிகளை பற்றி. மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு தீர்வு காணும் அல்லது காண நினைக்கும் கதாபாத்திரங்கள் மட்டுமே போற்ற படுகின்றனர். அதாவது, முகமூடி மாட்டி, நன்றாக நடிக்க தெரிந்தவர்கள். அல்லது, அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை முகமூடி அணிந்து காட்ட தெரிந்தவர்கள் மட்டுமே நல்லவர்கள் மற்றபடி, இது ஒரு கேம் என்று தெரியாமல், அதாவது முகமூடி அணியாமல் இருப்பின், அவர்கள் கெட்டவர்களாக சித்தரிக்க படுகின்றனர்.  உண்மையாக நாம் அது போன்ற ஒரு செட்டப்பில் இருப்பின் நமக்குள் இருக்கும் ஒரு சில விஷயங்கள் வெளியே எட்டிப்பார்க்கும். உதாரணமாக, நாம் வளர்ந்த சூழல், நம் குடும்பம், சாதி, இவற்றை கொண்டு நம்மை  செதுக்கிய விஷயங்கள். அது எவ்வளவு தான் முகமூடி அணிந்தாலும் எப்படியாயினும் எட்டி பார்த்து விடும். அதனாலேயே, நம்முடைய அலைவரிசைக்கு இசைந்த பலருடன் நாம் பழக எத்தனிக்கிறோம்.

இதே போன்ற சூழல் நிலவாத  போது, மற்றவர்களை நம் அலைவரிசைக்கு இழுக்க என்று சிலபல உத்திகள். அதாவது, எங்கள் குடும்பம், நாங்க பணக்காரங்க, படிச்சவங்க, அரசியல்வாதி, என்பது போன்ற பல அஸ்திரங்களை உருவாக்கி, incrowd சேர்ப்பது. அதாவது குரூப்பிஷம் சேர்ப்பது. அப்படி சேர்ப்பதன் மூலம், தன்னுடைய, பெரிய மனிதன் முகமூடியை அணிந்து கொள்ளுவது. அப்படி தன்னுடைய குரூப்பில் சேராத, அடிபணியாத பலரை, ஒதுக்கி தீர்த்து கட்டுவது.  இது, எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. இல்லை என்று சொல்ல இயலாது. ஏன் நாமே கூட பல இடங்களில் அதனை செய்து இருக்கலாம், அல்லது செய்பவரின் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கலாம்.  ஆனால், அதனை மற்றவர் செய்வதை பார்க்கும் போது நமக்கு ரத்தம் கொதிக்கிறது. உடனே, நாம், நடுநிலையானவன் முகமூடியை அணிந்து கொண்டு "குரூப் சேர்த்த காயத்திரியை" கண்டபடி திட்டுவது.  என்று நமக்கும் இருக்கும் உண்மை தனத்தை முகமூடியை கிழித்துக்கொண்டு வெளியே வந்து கீழ்த்தரமாக திட்டி தீர்க்கிறோம். உண்மையை சொன்னால், அந்த இடத்தில் பிழைக்க என்று, தன்னை மாற்றிகொண்டு, அல்லத ஒத்திசைத்த ஜூலியை, கண்டபடி திட்டி தீர்த்தது. ஆனால் உண்மையில் நாமெல்லாமே, ஜூலியை போலவே. ஆபிசில் பிடிக்காவிடினும், சிலருடன் வேலை செய்ய அல்லது ஒத்துப்போக என்று "நல்லவர்" முகமூடியை அணிந்து கொண்டு நடிக்கிறோம். அங்கே நம்முடைய  அந்த "முகமூடி", பிழைக்கத்தெரிந்தவன் பட்டத்தை நமக்கு கொடுக்கிறது. ஆனால், இங்கே நாம் நடுநிலையானவன் என்று நம்முடைய உண்மையான முகத்தை திறந்து, மற்றவர்களை திட்டி தீர்க்கிறோம். கமல் அவர்கள் குறிப்பிட்டது போல, "உள்ளே அவர் பேசியது கொஞ்சம் தான், வெளியே பேசும் மக்களின் கீழ்த்தரமான வார்த்தைக்கு".

எது என்னவோ, "இனவெறி/தான் உசத்தி" என்ற உண்மை முகத்தை மறைக்க முகமூடி அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களின் உண்மை முகத்தை மக்கள் பார்த்தார்கள் என்றால், அவர்கள் தங்களின் நல்லவர் முகமூடியை கிழித்து உங்களை தொங்கவிட்டு விடுவார்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், இப்படி சண்டை போடும், முகத்தை காட்டும் வேலையை செய்யாமல் சும்மா நாம் உண்டு நம் வேலை உண்டு என்று "பிந்து" போல இருந்தால் அவர்களை பிடிப்பதில்லை. போரிங்  என்று முத்திரை குத்தப்படுவர். அதாவது, மக்கள் விரும்புவது என்னவோ அதற்க்கு தகுந்தாற்போல முகமூடி அணிந்து நடிக்க, பேச, சண்டை போட தெரிந்தவர்களை மட்டுமே, நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு ஒரு வில்லி/வில்லன் வேண்டும், ஒரு கதாநாயகி/கதாநாயகன் வேண்டும். எப்போதுமே சீரியல் பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு, இதெல்லாம் அவசிய தேவை.  அதனை நிறைவேற்ற என்று டிவியும் நிறைய மக்களை தரையிறக்குகிறது என்று தோன்றுகிறது.


டிஸ்கி
இதில் குறிப்பிட்டுள்ளவை எல்லாமே, என்னுடைய கருத்துக்கள் மட்டுமே. யாரையும் குறிப்பிடவில்லை.




Saturday, April 29, 2017

கழுகும், நடுத்தர வயது மனிதனும்!!

"கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை" என்ற பழமொழி எந்த விஷயத்தில் சரியாக இருக்கிறதோ தெரியவில்லை, என்னுடைய பதிவெழுதும் விசயத்தில் மிக சரியாகவே இருக்கிறது. வேலை மேல் வேலை என்பதை விட, கழுத்து முழுகும் வரை வேலை. சில நேரங்களில், உட்கார கூட முடியாமல், ஓடி கொண்டே இருப்பது போன்ற நிலை. வார நாட்களில் எல்லாம் காலையில் இருந்து மாலை வரை ஆபிசில் கழுத்து ஓடியும் வரை வேலை, வீட்டுக்கு வந்தவுடன், வீட்டு வேலை, முகுந்த்உடன் வீட்டுப்பாடம் செய்ய உட்கார, சமையல் என்று, அதிக நேரம் வேலை பார்த்து, பளு காரணமாக கழுத்து மற்றும் முதுகு வலி வேறு வந்து படுத்துகிறது.  எப்போ பாரு ஓடு ஓடுன்னு ஓடிட்டே இருக்கிற மாதிரி. சொல்ல போனால் வேலை பார்க்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு காமன் பிரச்னை இது.  அதுவும் பெண்களுக்கு.  என்னடா வாழ்க்கை என்று சில நேரம் தோன்றுகிறது.


picture from Google Images

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, நண்பர்கள் குழாமில் சிலர், "கழுகின் வாழ்க்கை" என்பது குறித்த ஒரு செய்தி அனுப்பி இருந்தார்கள். அது, ஒரு கழுகு 70 வயது வரை உயிர் வாழ முடியும்,  ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு, பிறகு கழுகின் அலகு மற்றும் கால் நகம் அதன் கொத்தி தின்னும் அல்லது பிடிக்கும் சக்தியை இழந்து விடும். இப்போது கழுகுக்கு இரண்டே இரண்டு சாய்ஸ் உண்டு, 1) எந்த இரையையும் பிடிக்காமல்/பிடிக்க முடியாமல் பட்டினி கடந்து சாக வேண்டியது 2) தனது அலகு மாற்று கால் நகத்தை ஏதாவது பாறை அல்லது கல்லில் மோதி உடைப்பது. அப்படி உடைக்கப்படும் நகம் மற்றும் அழகு, திரும்ப  வளர்ந்து அதனால் மறுபடியும் இரையை பிடித்து வாழ முடியும்"

அதே போல மனித வாழ்க்கையும், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு, போதும் வாழ்க்கை..இருந்து என்ன செய்ய போறோம், வாழ்க்கை போறமாதிரி போய் முடிக்கட்டும். இனிமே என்ன புதுசா செய்ய போறோம், அதான் வயசாயிடுச்சில்ல..என்று பலர் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இந்தியாவில், ஒரு 30 வயதை கடந்தாலே, பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என்று ஒரு சோம்பேறித்தனம் வந்து விடுகிறதா? அல்லது வயசாயிடுச்சில்ல நமக்கு என்று எண்ணம் வந்துவிடுகிறதா என்று தெரியவில்லை. பெண்கள் அதுவும் குறிப்பாக, சமையல், குழந்தைகள் பார்த்து கொள்வது, அவர்களுக்கு சொல்லி கொடுப்பது, குடும்பத்தில் இருப்பவர்களை கவனிப்பது, பிறகு டிவி சீரியல்களை காலத்தை கழிப்பது.  இதுவே அவர்களின் ரொடீன்.  இதனை தவிர, அவர்களுக்கு என்று எதுவும் செய்து கொள்வதில்லை.  மற்ற ஊர்களில் எப்படியோ, ஆனால் இன்னும் மெட்ரோ அல்லாத ஊர்களில் எல்லாம் இந்த நிலை தான். இதனாலேயே முக்கால் வாசி இந்திய பெண்களுக்கு 30-40 வயதில் கூட சக்கரை வியாதி அல்லது மற்ற வியாதிகள் வருகிறது. இதனை இங்கு எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால், எங்கள் தோழி குடும்பத்தில் அவர்களின் அக்கா, 38 வயதில் மாரடைப்பு வந்து இறந்து விட்டார். உடம்பை கவனியாமல் இருந்ததால்  இப்படி ஒரு நிலை, 7, 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் அவருக்கு.


இந்த செய்திகள் எல்லாம் மனதில் ஒரு கிலியை வரவழைத்து இருக்கின்றன. இதனால்  தோழிகளுக்கு இடையே பிட்னெஸ் பிரென்ட்லி காம்பெடிஷன் வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். இதில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஹெல்த் செக் அப் செய்து கொள்ளுவது, அரிசி உணவுகளை குறைப்பது, தினமும் நடப்பது. அதனை தவிர  ஒவ்வொரு மாதமும் லேடீஸ் டே அவுட் போகலாம் என்று தோழிகள் குழாமில் முடிவெடுத்து இருக்கிறோம். முக்கியமாக சினிமா கிடையாது. மாறாக, ஷாப்பிங், 5K , 10K  அல்லது பெர்சனல் ஹைஜீன், பிட்னெஸ்  என்று ஏதாவது செய்யலாம் என்று முடிவு. பார்க்கலாம் இந்த சம்மரில் எவ்வளவு தூரம் இது செயல் படுத்தப்படும் என்று. ஏனென்றால், அடுத்த மாதம் இந்தியாவில்  ஆபீஸ் வேலைக்கு ஹைதெராபாத் செல்லவேண்டும், அதோடு முகுந்தையும் சம்மர் விடுமுறைக்கு அழைத்து செல்லலாம் என்று நினைக்கிறன். எப்படி அனைத்தையும் சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

உண்மையில் "கழுகு" கதை உண்மையோ பொய்யோ தெரியாது..ஆனால்,  நடுத்தர வயதில், உடம்பை கவனியாமல் விட்டால் என்னாகும் என்பது மட்டும் நிதர்சனம்.

நன்றி.



Friday, March 17, 2017

Gifted குழந்தை என்னும் மாயையும், போதை மற்றும் அடிக்சனும் !!

ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது, பதிவு பக்கம் வந்து. அவ்வப்பொழுது சில விஷயங்கள் எழுத வேண்டும் என்று தோன்றி கொண்டிருந்தாலும், எழுத முடியவில்லை. அவ்வப்பொழுது நேரம் கிடைக்கும் பொழுது கிறுக்கிய சிலவும், சிறிது நாட்களுக்கு பின் திரும்ப படிக்கும் பொழுது நன்றாக இல்லை என்று டெலீட் செய்திருக்கிறேன். முடிவாக நான் கவனித்த சில விஷயங்களை குறித்த என்னுடைய எண்ணங்கள் இங்கே.

 டாலேண்ட் என்பது என்ன?  ஒரு குழந்தை கிப்ட்டேட் என்று எப்பொழுது அழைக்க படும். என்னை பொறுத்தவரை Talented and  Gifted என்பது சூழல் சார்ந்தது. ஒரு சில குழந்தைகள் ஒரு சில விஷயங்களை சூப்பர் ஆக செய்வார்கள். உதாரணமாக எனக்கு தெரிந்த சில குழந்தைகள் அவ்வளவு அழகாக படம் வரைவார்கள். இந்த வயதில் இவ்வளவு திறமையா என்று வியக்க வைக்கும். இன்னும் சில குழந்தைகள் 7-8 வயதில் ஒரு பெரிய புத்தகத்தை ஓரிரு நாட்களில் படித்து முடித்து விடுவார்கள். அதனால் என்னை பொறுத்தவரை திறமை, அறிவு என்பதெல்லாம் சூழல் சார்ந்தது.

அமெரிக்காவில் இருக்கும் பள்ளிகளில் "TAG" அல்லது Talented and Gifted ப்ரோக்ராம் ஒன்று உண்டு. இதில், சாதாரணமாக பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளை சில பல டெஸ்ட்கள் வைத்து அதில் வரும் மார்க்குகள் பொறுத்து, மற்றும் அமெரிக்கா அளவில் இருக்கும் குழந்தைகளின் மார்க்குகள் ஆவெரேஜ் வைத்து ஒரு சில குழந்தைகளை தேர்தெடுத்து அவர்களுக்கு என்று சிறப்பு வகுப்புகள் நடத்துவார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளின் IQ அவர்களின் வயதொத்த மற்ற குழந்தைகளை விட அதிகம் இருக்கும் அல்லது இருப்பதாக நம்பப்படும். அந்த குழந்தைகளுக்கு என்றிச்மென்ட் வகுப்புகள் நடக்கும். அது எக்ஸ்ட்ரா ரீடிங், அல்லது எஸ்ட்ரா மேத்(கணிதம்) அல்லது வானவியல் ..இப்படி எந்த துறையில் குழந்தை இன்ட்ரெஸ்ட் காட்டுகிறதோ அதற்க்கு தகுந்தாற்போல பாட திட்டத்தை மாற்றியமைத்து சொல்லி கொடுப்பார்கள்.



photo from google images

இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால்,  இந்திய பெற்றோர்களுக்கு இடையே தம் குழந்தைகளை எப்படியாவது TAG ப்ரோக்ராமில் சேர்த்து விட வேண்டும் என்று நடக்கும் விஷயங்கள்.

எதோ தம் குழந்தை gifted ப்ரோக்ராமில் இருந்தால் மட்டுமே நன்றாக படிப்பதாகவும், இல்லை எனில் படிக்கவில்லை என்றும் ஒரு மாயையை பலர் கொண்டு இருக்கிறார்கள். தங்கள் குழந்தை கிபிட்ட் இல் இருக்கிறது என்று பெருமையாக, தன்னிச்சையாக வந்து சொல்லி டம்பம் அடிக்கும் பெற்றோரை பார்த்திருக்கிறேன் என்றாலும். நிறைய பெற்றோர் அதற்காக குழந்தைகளை தயார் படுத்துகிறேன் பேர்வழி என்று பாடாய் படுத்துவதை பார்த்து இருக்கிறேன்.

முதலில் MAP டெஸ்ட், CoGAT டெஸ்ட் என்பதெற்க்கெல்லாம் புக்ஸ் வாங்கி,  தினமும் ப்ராக்டீஸ் செய்ய சொல்லி படுத்தும் பெற்றோரை பார்த்து இருக்கிறேன். உண்மையில் இந்த இரண்டு டெஸ்ட்களை மற்றும் வைத்து கொண்டு TAG செலெக்ஷன் செய்வதில்லை. மாறாக, குழந்தைகளுக்கு எவ்வளவு கிரியேட்டிவிட்டி இருக்கிறது என்பதனையும் பார்க்கிறார்கள். ஒரு அப்ஸராக்ட் வரைபடத்தை கொண்டு ஒரு குழந்தை எப்படி படம் வரைந்தது, என்னவெல்லாம் கதை சொல்லுகிறது, போன்ற பலவற்றையும் கணிக்கிறார்கள்.

காக்னிடிவ், ஆப்டிடியூட் டெஸ்ட்களுக்கு வேண்டுமானால் நாம் கோச்சிங் கொடுக்கலாம், ஆனால் எப்படி கிரேட்டிவ் ஆக இருப்பது என்பதற்கு எப்படி கோச்சிங் கொடுக்க முடியும். அதற்காகாகவும், மக்கள் பிள்ளைகளை அப்ஸ்ட்ரக்ட் பெயின்டிங் கிளாஸ், ஆர்ட் கிளாஸ் என்று அனுப்புகிறார்கள். உண்மையில், ஒரு கிரயன், பெயின்ட்  என்று கொடுத்து கிறுக்க வைத்து குழந்தைகளை குழந்தைகளாகவே விட்டாலே, பல குழந்தைகளை கிரேட்டிவ் ஆக இருக்கும். அதனை விடுத்து அதற்கும் ஒரு கிளாஸ் போட்டு..பிள்ளைகளை ஏன் இப்படி வதைக்கிறார்களோ தெரியவில்லை.


நான் வாசித்த மற்றோர் விஷயம் ஒரு வித மாயை சம்பந்தப்பட்டது., அது, போதை, பழக்கம், அடிமையாதல், சார்ந்து இருத்தல் பற்றியது ...இப்படி பல பல பெயர்கள். நம்மால் கண்ட்ரோல் செய்ய முடிந்தால் பழக்கமாக இருக்கும் ஒரு  விஷயம் கண்ட்ரோல் செய்ய முடியாத நிலையை அடையும் போது அந்த விசயத்திற்கு "அடிக்சன்/அடிமையாதல்" நடக்கிறது.

அடிக்சன், அடிமையாதல்ன்னு சொல்ல  ஆரம்பிக்கும் போதே பலர்  மனம், அதெல்லாம் நம்மகிட்ட இல்ல, குடிக்கிறது, சிகரெட் பிடிக்கிறது, போதை மருந்து, இவைகளை போன்ற  விஷயங்கள் தான் அடிக்சன் மத்ததெல்லாம் இல்ல. அப்படின்னு நிறைய பேர் நினைக்கலாம், சொல்லலாம்.  ஆனால் வாழ்க்கையில் பல பல விஷயங்கள் உண்டு அவையும் அடிக்க்ஸன் தான்.

உதாரணமாக, பெரிய பெரிய கம்பெனிகளில் வேலை செய்யும் மக்களுக்கு productive ஆக இருப்பது எப்படி என்று மேனேஜ்மென்ட் கிளாஸ்ஸஸ் எடுக்கும்.. அது மோட்டிவேஷன்/சாதனை என்றெல்லாம் பரப்பப்படும். ஒரு முறை வெற்றியை சுவைத்த ஒவ்வொரு மனமும், வெற்றி பெற வேண்டும், எப்போதும் வெற்றியே பெற வேண்டும் என்று எப்போதும் இவர்களின் மனம் உழைத்து கொண்டிருக்கும். "Its an addiction to be successful". வெற்றி ஒரு வித போதை. அந்த போதை எப்போதும் வேண்டும் என்று அதற்காக உழைப்பார்கள்.  

பெரும்பாலான வீடுகளில் சாயங்கால நேரம் சென்று பாருங்கள், டிவி அல்லது சீரியலில் மூழ்கி இருப்பார்கள். இது, இந்தியாவில் என்று இல்லை. அமெரிக்காவிலும் இதே நிலை தான். சொல்ல போனால் உலகம் முழுக்க இதே நிலை தான். 

உதாரணமாக, சில நாட்களுக்கு முன் டிவி யில், "King of Queens" என்ற காமெடி தொடர் பார்க்க நேர்ந்தது. அதில் கதாநாயகன், கதாநாயகி இருவரும், வீட்டில் இருக்கும் போது ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்ட் வந்து எதோ கேள்வி கேட்கிறார், அவர் ஒரு வார்த்தையை உபயோகித்து, அது வேண்டுமா என்று கேக்கிறார். இருவருக்கும் அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியவில்லை, உடனே, கதாநாயகி, excuse மீ என்று சொல்லி தண்ணீர் குடிப்பது போல சென்று டிக்சினரி எடுத்து அந்த வார்த்தையின் அர்த்தம் பார்த்து விட்டு வந்து பேசி சமாளிக்கிறார். தினமும் வீட்டுக்கு வந்து டிவி மட்டுமே நாம் பார்க்கிறோம். டிவி நம்மை முட்டாளாக்குகிறது, அதனால் ஏதாவது கிளாஸ்க்கு சென்று அறிவை பெருக்கி கொள்ளுவோம் என்று இருவரும் முடிவு செய்கிறார்கள்.

இது, நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட தொடர் என்றாலும் இதில் சொல்ல பட்டிருக்கும் விஷயம் உலகம் முழுதும் இருக்கும் மக்களுக்கு பொருந்தும் என்று நினைக்கிறன். உதாரணமாக முன்பெல்லாம் வயதாக ஆக ஒருவருக்கு அறிவும் ஞானமும் அதிகரிக்கும் என்று கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால், உங்களை நீங்களே கேட்டு பாருங்கள், உதாரணமாக நீங்கள் பள்ளி/கல்லூரி செல்லும் போது உங்களுக்கு தெரிந்த/அறிந்த பல விஷயங்கள் இப்போது உங்களுக்கு நியாபகம் இருக்காது. பல சிம்பிள் வார்த்தைகளின் ஸ்பெல்லிங் கூட பலருக்கும் மறந்து விட்டது. ஆட்டோ ஸ்பெல்லிங் என்ற ஒன்று இருப்பதாலேயே நம்மில் பலரும் வாழ்க்கையை தள்ளி கொண்டு இருக்கிறோம்.  ஏனெனில் நம்மில் பலர் சினிமா, டிவி, சீரியல், வாட்ஸாப், முகநூல்  என்று  பலவற்றுக்கும் அடிமை/சார்ந்து/பழக்கம்/அடிக்க்ஸன் ஆகி இருக்கிறோம். ஒரு புத்தகத்தை எடுத்து படித்து எவ்வளவு நாள் ஆகிறது.

சரி, இவ்வளவு நேரம் போதை/அடிக்சன் பற்றி நான் கூறிய அனைத்து விஷயங்களுக்கும் நம் மூளையில் இருக்கும் டோபோமின் என்ற வேதிப்பொருள் (நியூரோ டிரான்ஸ்மிட்டர்) காரணம். இது ஒருவரின் அன்றாட பழக்க வழக்கம், அடிமை தனம் போன்ற அனைத்தையும் கண்ட்ரோல் செய்யும் ஒன்று.


photo from google images
இது மூளையின் ரீவார்டு செண்டர் என்றழைக்க படுகிறது. உதாரணமாக, வெற்றி பெற்றவுடன் கிடைக்கும் ஒரு சந்தோசம், அது நிறைய நிறைய வேண்டும் என்ற உணர்வு. அல்லது, முகநூலில் லைக்/ ஷேர் கிடைத்தவுடன் கிடைக்கும் ஒரு சந்தோசம்/ நிறைவு இன்னும் வேணும் என்று அதற்காக என்னவேண்டும் என்றாலும் செய்ய ஆரம்பிக்க தூண்டுவது இது. டோபோமின் சுரப்பு அதிகம் இருக்க இருக்க, பரபர வென்று எப்போதும் இருக்கும் ஒரு நிலை.  இதற்கு ஆப்போசிட் ஆக, மூளையில் டோபமைன் சுரப்பு இல்லையெனில் எப்பொழுதும் சோம்பேறித்தனம், எதற்கெடுத்திட்டாலும் பயம், கவனமின்மை, எதிலும் இன்ட்ரெஸ்ட் காட்டாமல் எனோ தானோ என்று வாழும் வாழ்க்கை.

அதனால், டோபோமின் என்பது, வாழ்க்கைக்கு அதுவும் மெண்டல் ஹெல்த் க்கு ரொம்ப முக்கியம்.
நெகடிவ் சென்ஸ் இல் பார்க்கப்படும் இந்த போதை/ அடிக்க்ஸன் போன்ற எதுவும் இல்லை எனில், வாழ்க்கை போர் அடிக்கும், எந்த வித நோக்கமும் இல்லாமல் தினமும் எழுந்து, உறங்கி, சாகும் நிலை.


இந்த இரண்டு விஷயங்களையும் நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எப்படியாவது தங்கள் குழந்தைகளை TAG ப்ரோக்ராமில் சேர்த்துவிட பெற்றோருக்கு இருக்கும் வெறி கூட ஒரு வித அடிக்சன் என்றே நினைக்க தோன்றுகிறது.  ஆனால், அதில் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு உண்மையில் நிறைய இன்ட்ரெஸ்ட் இருந்தால் மட்டுமே, இயற்க்கை டோபோமின் சுரப்பு வரும், அப்பொழுது மட்டுமே குழந்தைகள் உண்மையான ஆர்வத்துடன் இருப்பார்கள், படிப்பார்கள். இல்லை எனில், மந்த புத்தி, எதிலும் இன்ட்ரெஸ்ட் இல்லாமை போன்றவையே வரும்.


நன்றி.

Saturday, February 4, 2017

பெண் சுதந்திரமும் "பிரிட்ஜெட் ஜோன்ஸ் பேபி"ம் , "பிங்க்" ம்

இரண்டு படங்கள் பார்க்க நேர்ந்தது, ஒன்று "பிரிட்ஜெட் ஜோன்ஸ் பேபி" மற்றொன்று "பிங்க்".

இரண்டும் வெவ்வேறு ஜானேர், ஒன்று ரொமான்டிக் காமெடி மற்றொன்று ட்ராமா.

ஆனால் எனக்கு இந்த இரண்டும் பார்த்த பிறகு ஒரு ஒற்றுமை தட்டுப்பட்டது, அதோடு நிறைய பெண் சுதந்திரம் குறித்த விஷயங்கள், இந்தியாவில் பெண் சுதந்திரம் என்பது எப்படி பார்க்கப்படுகிறது போன்ற எண்ணங்கள் மனதுக்குள் வந்து போயின.  அதன் விளைவே இந்த பதிவு.

முதல் படம் "பிரிட்ஜெட் ஜோன்ஸ் பேபி", கதாநாயகி பிரிட்ஜெட், தனது 43 ஆவது பிறந்த நாளை தனியே கொண்டாடுகிறாள், இன்னும் திருமணம் குழந்தை எதுவும் இல்லாமல் இருப்பது, ஒரு பாய் பிரென்ட் கூட இல்லாமல் இருப்பது குறித்து வருந்தி கொண்டு, இந்த பிறந்த நாளில் நான் வருந்த மாட்டேன், என்று முடிவெடுத்து, தனது தோழியுடன் ஒரு பாப்-ராக் அல்லது மியூசிக் பெஸ்டிவல் செல்கிறாள். அங்கே கண் மண் தெரியாமல் குடித்து விட்டு எங்கோ ஒரு டென்ட் க்குள் நுழைய, அங்கே இருக்கும் ஒருவன், உனக்கு கம்பெனி வேண்டுமா?, என்று கேட்க  இவள் சம்மதித்து விடுகிறாள். மறுநாள் காலையில் அடித்து பிடித்து ஓடி வந்து விடுகிறாள். பின்னர் இன்னொரு சமயம், தன்னுடைய பழைய பாய் பிரென்ட் ஐ சந்திக்க, அங்கும் அவனுடன் ஒரு நாள் இரவு கழிக்கிறாள்.
பின்னர் அந்த மாத விலக்கு தள்ளி போக, யார் குழந்தையை வயிற்றில் சுமக்கிறோம் என்ற ஒரே குழப்பம். இரண்டு பேரிடமும் இந்து உங்கள் குழந்தையாக இருக்கலாம், ஆனால் ஒரு தகவலுக்காக மட்டுமே இதனை தெரிவிக்கிறேன், எனக்கு எந்த சப்போர்ட்டும் வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள். இருவரும், குழந்தை பிறக்கும் வரை கூட இருந்து கவனித்து கொள்கிறார்கள். பிறகு, DNA டெஸ்ட் செய்து யாருடைய குழந்தை என்று முடிவு செய்கிறார்கள்.



அடுத்த படம் "பிங்க்" ஏற்கனவே நிறைய பேர் இந்த படத்தை குறித்து எழுதி விட்டதால், கதை என்ன என்று பலருக்கு தெரிந்திருக்கலாம். மிக சுருக்கமாக இங்கே, 3 பெண்கள்  ராக் கான்செர்ட் செல்கிறார்கள், அங்கே ஒருத்திக்கு தெரிந்த பையன் மூலமாக 3 பேர் அறிமுகமாகி வாங்க டின்னெர் சாப்பிட்டு போகலாம் என்று அவர்கள் அழைக்க, அவர்களுடன் பார்ம் ஹவுஸ் செல்கிறார்கள். அங்கே ஒருவன் தப்பாக நடக்க அவனை தாக்கி விட்டு செல்கிறார்கள். தாக்கப்பட்டவன் ஒரு பெரிய ஆள் என்பதால், இவர்களை துரத்தி துரத்தி பழிவாங்குகிறான் அதோடு விபசாரி என்று பட்டம் கட்டி கோர்ட்டுக்கு இழுக்கிறான்.  அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார்கள் என்பதே கதை.

இந்த இரண்டு படத்திற்கும் இருக்கும் ஒற்றுமை, ராக் மியூசிக் கான்செர்ட் சென்று திரும்பும் பொது ஏற்படும் நிகழ்ச்சி/விபத்து.  முதல் படத்தில் ஜோக், கேஸுயல் ஆக எடுத்து கொள்ளப்படும் இந்த நிகழ்வு அடுத்த படத்தில் பெரிய பிரச்சனையாக எடுத்து கொள்ள படுகிறது. அதோடு இந்தியாவில் பெண் சுதந்திரத்தின் நிலையை மிக விவரமாக விளக்குகிறது.

எனக்கு தோன்றிய விஷயங்கள் இங்கே.

ஒரு 15 வருடத்திற்கு முன்  பெங்களூர்ரில் எனக்கு நேர்ந்த அனுபவம். கல்லூரி படிப்பு இறுதியாண்டு ப்ராஜெக்ட் க்காக பெங்களூரில் தங்க வேண்டி இருந்தது. அப்போது, என்னுடன் வந்த மற்ற ஸ்டுடென்ட்ஸ் இடம் எங்கே தங்கலாம் என்று கேட்டபோது, "நல்ல ஹாஸ்டல் அல்லது பேயிங் ரூம் பாருங்கள், ஆனா, நோர்த் இந்தியன் பெண்கள் இருக்கும் ரூம் வேண்டாம்" என்றார்கள்.
"நார்த் இந்தியன் பெண்கள் கேரக்ட்ர் சரி இருக்காது, தனியாக இருக்கும் போது பிரீ ஆக இருப்பார்கள், அதோடு பாய் பிரென்ட் கூட்டி வருவார்கள், அதனால் பார்த்து இருங்கள்", என்று கூறினார்கள். அதாவது, யாரேனும் ஒரு பெண் பிரீ ஆக பேசினாலோ அல்லது பிரீ ஆக பழகினாலோ நம்மூரில் கொடுக்கும் பட்டம் "கேரக்ட்ர் சரி இல்லை". பிங்க் படத்தில் இதே போன்ற ஒரு "பெயரை", வட கிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் பெண்ணுக்கு தருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இது பத்து, பதினைந்து வருடங்களுக்கு முந்தைய விஷயம் இல்லை, இது "சில நேரங்களில் சில மனிதர்கள்" காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்து இப்போது வரை தொடர்கிறது.

இந்தியா நிறைய முன்னேறி இருக்கிறது, நிறைய பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். தனியாக இருக்கிறார்கள். என்பதெல்லாம் ஒரு வித மாயையோ என்று என்ன தோன்றுகிறது.  எல்லா தமிழ் சினிமா படங்களை எடுத்து கொள்ளுங்கள், பெண் என்பவள் இப்படி தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.  பிங்க் படத்தில் சொல்வது போல, பெண் என்பவள், "விர்ஜின்" ஆக  குடிக்காதவள் ஆக, ஆண்களிடம் பிரீ ஆக பேசாதவள் ஆக, இருந்தால் அவளுக்கு "நல்ல பெண்எ" ன்ற செர்டிபிகேட் கிடைக்கும். அவள் தான் எங்கள் "ஹீரோயின்" இல்லை எனில், அவள் ஆண்கள் மத்தியில் ஒரு "விபச்சாரி " அல்லது "ஐட்டம்" ஆக பார்க்கப்படுவாள், என்று "பிங்க்" தெரிவிக்கிறது. இது டெல்லி போன்ற இந்திய ஹை மெட்ரோ ஏரியாகளில் நடப்பதாக காட்டப்படும் போது மற்ற சிறு, குறு நகரங்களில் எல்லாம் இதனை குறித்து பேச கூட கூடாது "மூச்".


இதனை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்,

முன்பொரு சமயம் "இந்தியாவில் இருந்து வந்த பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்" என்ற பெயரில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதாவது அமெரிக்கா வந்த பிறகு பெண்கள் சந்திக்கும் மாற்றங்கள், அதே பழகிய பிறகு நாம் இந்தியா செல்ல நேரும் போது retune செய்ய வேண்டிய விஷயங்கள் என்று சில குறிப்பிட்டு இருந்தேன். அதில் குறிப்பிட்ட ஒரு சில விஷயங்கள் இங்கே.


  1. வாக்கிங் செல்லும் போது அல்லது பொது இடத்தில் நடக்கும் போது ஒருவர் சிரித்தால் நாமும் சிரிக்க அல்லது புன்னகைக்கவாவது வேண்டும். இல்லையெனில் ரூட் அல்லது unfriendly. 
  2. அடுத்து, ஆஃபிஸில் எப்போதும் உம் என்று இருக்க முடியாது, அல்லது தனிமையாக இருக்க முடியாது என்பதால், பக்கத்தில் இருப்பவர்களிடம் பொது விஷயம் பேச வேண்டி வரும், அதுவும் சகஜமாக பேச வேண்டி வரும். 
  3. அதே போல, ஆபீஸ் பார்ட்டி எனில் ஷாம்பெய்ங் ஓபன் செய்வார்கள், அதில் நீங்களும் சில நேரம் பங்கேற்க வேண்டி இருக்கும். 
  4. ஏதெனும் விசேஷம் என்றால், ஹக் செய்து கொள்வார்கள், மகிழ்ச்சியை தெரிவிக்க. 


இவை எல்லாம் சாதாரண விஷயங்கள். இங்கே கம்பெனிகளில் இதெல்லாம் சகஜமாக இருக்கும்.
இங்கே இருந்து பழகிய பெண்கள், அங்கே விடுமுறைக்கு செல்லும் போது அல்லது வேலை செய்ய நேரிடும் போது இதே போன்ற பழக்க வழக்கங்கள் மாற்ற வேண்டி வரும்.  இந்தியாவில் MNC களில் வேலை பார்க்கும் பெண்கள், இங்கே ஆன் சைட் வந்து செல்லும் போது, இங்கே இருக்கும் கலாச்சார தாக்கத்தால், அதே போல சகஜமாக இருக்கலாம் என்று நினைத்தால் அவர்களுக்கு கிடைக்கும் பட்டம் "கேரக்ட்டர் சரி இல்லை" என்பது.

இங்கே பிரிட்ஜெட் ஜோன்ஸ் படத்தையும், பிங்க் ஐயும் குறிப்பிட்டதுக்கு காரணம். பிரிட்ஜெட் ஜோன்ஸ் இல், ஒரு பெண் 43 வயதிலும், யார் தகப்பன் என்று தெரியாமல் குழந்தை பெற்றுக்கொண்டு,  எந்த சப்போர்ட்டும் இல்லாமல் தனியாக சிங்கிள் மாம் ஆக குழந்தையை வளர்க்க முடியும். தனியாக வாழ முடியும். இந்தியாவில், நீங்கள் எவ்வளவு படித்து, எந்த நிலையில் இருப்பினும், பெண்களுக்கு என்று சில வட்டங்கள் உண்டு, அதனை தாண்டி நீங்கள் வெளியே வர முடியாது. வந்தால், நீங்கள் தவறான நடத்தை உள்ள பெண்ணாக பார்க்க படுவீர்கள். இந்தியாவின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் இந்த நிலை தான். இது தான் நிதர்சனம்.

இதனை பார்த்த பிறகு, அடிக்கடி தலை தூக்கும், பெண் சுதந்திரம், தீபிகா படுகோன் போன்ற பெண்ணியவாதிகளின் "மை சாய்ஸ்" போன்ற விஷயங்களை பார்க்கும் போது, புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிறமாதிரி, மேலை நாடுகளை பார்த்து, நாமும் அப்படிதான் இருக்கணும்னு/இருக்க நினச்சு "ஏன் மா இப்படி பிள்ளைகளை தூண்டி விடுறீங்க. நீங்க பேசாம தூண்டி விட்டுட்டு போயிடுவீங்க, கஷ்டப்படுறது அதுங்க தானே மான்னு" கேட்க தோணுது. என்னவோ போங்கப்பா!!


டிஸ்கி 

இது பெண்சுதந்திரம் குறித்த என்னுடைய எண்ணங்கள் மட்டுமே. யாரையும், எந்த கலாச்சாரத்தையும்  குறிப்பிடவோ, விமர்சிக்கவோ, ஆதரிக்கவோ இல்லை.

புரிதலுக்கு நன்றி.

Sunday, January 15, 2017

கலவை- படித்த, கவனித்த, கேட்ட, ரசித்தவை


படித்தது 

“Oysters open completely when the moon is full; and when the crab sees one it throws a piece of stone or seaweed into it and the oyster cannot close again so that it serves the crab for meat. Such is the fate of him who opens his mouth too much and thereby puts himself at the mercy of the listener"
 Leonardo da Vinci, 1452-1519


தமிழில் மொழி பெயர்த்தால், "சிப்பிகள்" முழு நிலவை கண்டதும் முழுதும் திறந்து இருக்கும். இதனை சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் நண்டு, சிறிய கல்லையோ, அல்லது கடற்பாசியையோ அதில் போட்டு விடும். அதன் பின்பு அந்த சிப்பியால் மூட முடியாது, நண்டிற்கு உணவாகிவிடும்.  நேரம் காலம் பார்க்காமல், எப்போதும் தான் பேசுவதே வார்த்தை என்று வள வள வென்று பேசிக்கொண்டிருக்கும் ஒருவனுடைய வாழ்க்கையும், ஏதேனும் காரியம் ஆகா வேண்டுமாயின், எதிரிஅவனை தூண்டி விட்டு அவன் வாயாலேயே உளற விட்டு, அவசர கதியில் செயல் செய்ய வைத்து உங்களை எளிதாக தோற்க்கடித்து விடுவான். எப்போதும் ஓயாது பேசி கொண்டிருக்கும் பலருக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறன். 


கவனித்தவை: முன்பெல்லாம் பஸ் நிலையம், ரயில் நிலையம், லிப்ட், சிக்னல் போன்ற பொது இடங்களில் நின்று கொண்டிருந்தாலோ அல்லது பொது போக்குவரத்துகளில் சென்று கொண்டிருந்தாலோ தெரியாத மக்களாக இருப்பினும் ஏதேனும் பேசுவது அல்லது சிரிப்பது என்பது நடந்தது. உதாரணமாக, டவுன் பஸ்களில் அடிக்கடி செல்லும் நேரம், யாரேனும் வயதானவர்கள் வந்தால் எழுந்து இடம் கொடுப்பது, கர்ப்பினி பெண்கள் வந்தால் இடம் கொடுப்பது என்று இருக்கும். அல்லது ஒரு புத்தகம் வாசிப்பது, வார இதழ் வாசிப்பது என்பதெல்லாம் சாதாரணம். அதுவும் நீண்ட தூர பயணம் செய்பவர்கள், எதோ ஒரு வகையில் ரயில் சிநேகம் உண்டாக்கி ஒரு வித நட்பு கூட தொடரலாம்.  எனக்கே அப்படி சில அனுபவங்கள் உண்டு. ஒரு வயதான, ஆங்கிலம் தெரியாத அம்மாவை பிளைட்டில் அழைத்து வந்ததற்கு இப்போதும் போன் செய்து நன்றி சொல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் பழைய கதை என்று நினைக்க சொல்ல வைக்கிறது இப்பெல்லாம் நான் கவனிக்கும் பல இளைய தலைமுறை மக்களின் செயல்.

 இப்போதெல்லாம் மக்களிடம்  ஐ காண்டாக்ட் என்பதே அருகி போய் விட்டது. நீங்களே கவனித்து பாருங்கள், முன்பெல்லாம் லிப்ட்க்கு காத்திருக்கிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், அப்போது ஏதாவது பேசுவார்கள். முக்கியமாக, அன்றைய வெதர் எப்படி இருக்கு, கேம்ஸ், என்பது போன்ற பொது விடயம் நிறைய இருந்திருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம், ஆளுக்கொரு போன் வைத்து கொண்டு எல்லா நேரமும் அதில் முகம் புதைத்து கொள்கின்றனர். போன் என்பது ஒரு எஸ்கேப் வழி ஆகிவிட்டிருக்கிறது.  உங்களுக்கு பிறரிடம் பேச விருப்பம் இல்லையா,  தவிர்க்க நினைக்கிறீர்களா, உடனே போனை எடுத்து அதில் பார்க்க வேண்டி இருக்கோ இல்லையோ, எதையாவது நோண்ட வேண்டியது. இல்லை 1000 வைத்து முறையாக ஏதாவது வந்திருக்கிறியாதா என்று வாட்ஸாப் பார்க்க வேண்டியது, என்று செய்வதை அப்பட்டமாக காண முடிகிறது. இல்லை, இளைய தலைமுறை மக்கள், காதில் ஏர் போனை சொருகி கொண்டு, கண்ணை மூடி கொள்ளுகிறார்கள்.

கண்ணை பார்த்து பேசாமல் அவாய்ட் பண்ணும் இவர்கள்,  நிஜத்தை, எதிரில் இருக்கும் ஒருவரின் பெர்சனாலிட்டியை அறிய முற்படாமல், எப்போதும் ஒரு கனவுலகில் வாழ்கிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. எந்த சூழலை எப்படி சமாளிப்பது என்பது எப்போதும் போனை பார்த்து கொண்டிருப்பதால் கிடைக்காது, இருக்கும் சூழலை கண் திறந்து பார்த்தால் மட்டுமே புரியும், பிடிபடும் என்று எப்படி இவர்களிடம் சொல்வது?

கேட்டது : கணவன் மனைவி உறவு குறித்தும், அதில் "அருகிவிட்ட காதல் என்பது எப்படி புதுப்பிக்க பட வேண்டும் என்பது குறித்த ரிலேஷன்ஷிப் கவுன்சிலர், T.T. Rangarajan அவர்களின் பேச்சினை தோழிகள் குழுமத்தில் ஷேர் செய்திருந்தனர். எப்பொழுதும் அடுத்தவரை நோக்கி குறை மட்டுமே சொல்லிக்கொண்டு நாம் திரிந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் இது ஒரு நல்ல ஸெல்ப் செக் மற்றும் அனாலிசிஸ் போல தோன்றியது. நீங்களும் கேட்டு பாருங்கள், கட்டாயம் பிடிக்கும்.



ரசித்தது : எப்போதும் திரில்லர் வகை படங்கள் பார்க்க பிடிக்கும். எந்த ஒரு திரில்லர் படம் என்றாலும் கதாநாயகன் எவ்வளவு முக்கியமோ அதற்க்கு சமமான அளவில் வில்லனின் பாத்திரப்படைப்பும் இருக்கும் பட்சத்தில் படத்தின் வெற்றி உறுதி என்று சொல்லலாம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், தனிஒருவன் படத்தின் சித்தார்த் அபிமன்யு, பாத்திர படைப்பு. கதாநாயகனை விட ஒரு படி மேலே சென்ற ரசிக்கும் படியான ஒரு வில்லன்.  அதே போல, எனக்கு பிடித்த ஒரு திரில்லர் என்றால் சமீபத்தில் பார்த்த "துருவங்கள் பதினாறு" படம். கடைசி வரை சீட் நுனியில், அடுத்து என்ன அடுத்து என்ன என்று தேட வைத்து சற்றென்று முடித்த ஒரு படம். என்ன முடிச்சிருச்சா?, என்னவானது என்று கேட்டு தெரிந்து முடிவை அனலைஸ் செய்து பார்த்து புரிந்து கொண்ட படம். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ரஹ்மான், நல்லவரா கெட்டவரா, என்று கடைசி வரை தெரியவில்லை. அது  பெர்செப்ஷன் பொறுத்தது. எனக்கு பிடித்த திரில்லர் பட வரிசையில் இந்த படமும் உண்டு.


நன்றி




Friday, January 13, 2017

"ஜல்லிக்கட்டு தமிழர்கள் அடையாளம் " அட்லாண்டாவில் ஒலித்த கோஷம் !

நாமெல்லாம் எதுக்குங்க தமிழ்ல ப்ளாக் எழுதுறோம், இன்னும் நாமெல்லாம் தமிழை பிடிச்சிட்டு இருக்கோம், ஏனென்றால் நாம் தமிழர் என்ற அடையாளம் எங்கு சென்றாலும் மறைவதில்லை. அது எந்த நாட்டுக்கு சென்றாலும் இருக்கும். அதே போல மற்றொரு அடையாளம், காலம் காலமாக நடைபெறும் ஒன்று, "ஏறு தழுவுதல்" என்ற பண்டைய பாரம்பரியம். ஏற்கனவே, ஒவ்வொரு விஷயமாக ஒவ்வொரு தலைமுறையிலும் மறைந்து, மருகி வரும் இந்த காலத்தில், இப்படி ஒரு பாரம்பரியமே நடைபெற கூடாதென்ற நிகழ்வு தடுக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தில், ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம், என்ற கோஷத்துடன் ஜல்லிக்கட்டை ஆதரித்து அட்லாண்டா வாழ் தமிழர்கள் இன்று அட்லாண்டா,"ஷாரன் பார்க்கில்" ஒன்று கூடி தங்களின் ஆதரவை தெரிவித்த நிகழ்வு நடந்தது. தமிழர்களின் அடையாளம் "ஜல்லிக்கட்டு" அதனை தொடர்ந்து நடத்துவோம். . என்று கூடிய தமிழர்கள் சார்பாக,  இங்கே சில புகைபடங்கள்.  










நமது பாரம்பரியம் ஜல்லிக்கட்டு அதனை தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற எனது கருத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.

நன்றி 

Wednesday, January 11, 2017

லாஸ் ஏஞ்சலீஸ் டு சான் பிரான்சிஸ்கோ, தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

இந்த வருடம் புது வருடம் பிறந்தது, புது ஊரில். ஒரு கருத்தரங்கில் பங்கேற்க, பேச என்று கலிபோர்னியா செல்ல நேர்ந்தது. முன்பே ஒரு முறை லாஸ் ஏஞ்சலீஸ் சென்றிருந்தாலும், முதல் முறை முகுந்துடன். "கோல்டன் கேட் பாலம்" பார்த்தே ஆகவேண்டும் என்று விரும்பியதால். LA யில் இருந்து சிலிக்கான் வேலி வரை பின்னர் SFO டு LA  வரை  5- 6 மணி நேர கார் பயணம். 

LA யில் இருந்து SFO செல்ல வேண்டும் என்றால் 3 வழிகள் உண்டு. ஒன்று மிக மிக அழகான "பசிபிக் கோஸ்ட் ஹை வே" கடற்கரை ஓரம் மலையில் அமைத்த பாதை கீழே ஆர்ப்பரிக்கும் பசிபிக் மகா சமுத்திரம், என்ற மிக மிக அழகான பாதை. அழகென்றாலே ஆபத்து உண்டு என்று யாரோ சொன்னது போல, மிக மிக கவனமாக ஓட்ட வேண்டிய பாதை. பகலில் மிக அற்புதமான சீனிக் டிரைவ் ஆக இருக்கும் இது, மாலை மயங்கியவுடன் மிக ஆபத்தான பாதை ஆகிவிடும். கும்மிருட்டில், மலைப்பாதையில், எதிர் வரும் ஆப்போசிட் ட்ராபிக் கண்ணில் ஒளி அடிக்கும் ஆபத்தில், கொஞ்சம் வண்டியை திசை திருப்பினாலும் கடலில் விழ வேண்டிய நிலை. வழியில் எந்த எக்ஸிட் ம் இல்லாமல், எந்த ஸ்டாப் ம் பண்ண முடியாமல்,  2- 3 மணி நேரம், அப்படி ஒரு சூழலில் வண்டி ஓட்டி வர நேர்ந்தது மறக்க முடியா அனுபவம்.  




இந்த  பாதை எவ்வளவுக்கு எவ்வளவு அற்புதமாக இருந்ததோ அதற்க்கு நேர் எதிர் இருந்தது, LA யில் இருந்து SFO நாங்கள் சென்ற ஐ-5 எனப்படும் சென்ட்ரல் கலிபோர்னியா வழி  செல்லும் ஒரு பாதை.

ஆரம்பிக்கும் போது இந்த பாதையும் அழகாகவே  இருந்தது, சுற்றிலும் மலைகள் சூழ, அதில் வெள்ளை போர்வைகள் போல பனி படர்ந்து அற்புதமான காட்சியாக இருந்தது. இந்த காட்சியை ரசித்து கொண்டே வண்டி ஓட்டி கொண்டிருந்த போது, தூரத்தில் ஒரு இருள் சூழ்ந்த நிகழ்வு போல, கரும் புகையா அல்லது புழுதியா என்று தெரியவில்லை லாண்ட்ஸ்கேப்பில் பார்த்தால் நம்மை சுற்றிலும் ஒரு 180 டிகிரி அளவு போல புகை போல படர்ந்தது போல தென்பட்டது. இதென்ன Smog ஆக இருக்குமோ என்று நினைத்து வண்டியை விட, அது உண்மையில் "டஸ்ட் பவுல்" என்று காலிஃபோர்னியர்கள் சொல்வது போல ஒரு புழுதி படலம். 



மத்திய காலிஃபோர்னியாவில் எங்கெங்கு நோக்கினும் தண்ணீர் பஞ்சம்,  சாலையில் இரு மருங்கிலும், வாடிய பயிர்களும், அதனை சார்ந்த அட்டைகளும் காண நேர்ந்தது. எது முக்கியம், புது புது பாலங்களா? இல்லை நிலத்திற்கு நீரா? என்று அரசாங்கத்தை தாக்கி பல பல போர்டுகள்.





இந்த பலகைகளை பார்த்து கொண்டே வந்த எங்களுக்கு திடீரென்று மூக்கை துளைக்கும் மாட்டு சாண நாற்றம். குடலை பிடுங்கும் ஒரு நாற்றம் அது. காரின், AC எல்லாவற்றையும் நிறுத்தி வைத்துவிட்டு வண்டியை செலுத்தினாலும் இந்த நாற்றத்தை பொறுக்க முடியவில்லை. 
அப்புறம் நாங்கள் பார்த்தது, "ஹாரிஸ் ரான்ச்" எனப்படும் அமெரிக்காவின் #1 மாடுகளை வளர்த்து/வாங்கி உணவுக்காக வெட்டும் இடம். ஆயிரக்கணக்கான ஏக்கரில், எங்கெங்கு காணினும் மாடுகள், பல லட்சம் மாடுகள், தங்களின் சாணத்தின் மீது தானே நின்று கொண்டு, மிக மிக குறைந்த இடத்தில், பார்க்கவே பாவமாக இருந்தது. 

இந்தியாவில், நிறைய மாட்டு கொட்டகைக்கு சென்று இருக்கிறேன், ஆனாலும் இப்படி ஒரு நாற்றத்தை நுகர்ந்ததில்லை. ஒரு வேளை , வெட்டப்படும் முன், நன்கு கொழுக்க வைக்க என்று ஸ்பெஷல் சாப்பாடு மாடுகளுக்கு கொடுக்க படுகிறது. அது நிறைய சோளமும், ப்ரொடீனும் நிறைந்த ஒரு வகை உணவு. அதனாலேயே, க்ரீன் ஹவுஸ் காஸெஸ் எனப்படும், கழிவு பொருட்களில் இருந்து வரும் கேஸ்கள் அதிகமாக இந்த மாடுகளில் இருந்து வருகிறதா தெரியவில்லை.  ஆனால், ஒரு முறை இந்த பக்கம் வந்து இந்த "வாசத்தை" நுகர்ந்த எவரும், ஹம்பர்கர்ஓ, அல்லது சடீக் ஓ அல்லது பீப் பிரை ஓ சில நாட்கள் கட்டாயம் சாப்பிட மாட்டார்கள். 




 இந்த மாடுகளுக்கு உணவளிக்க, தண்ணீர் காட்ட மட்டும் எப்படி இவர்களுக்கு தண்ணீர் கிடக்கிறது என்று எனக்கு ஒரே கேள்வி. ஏனெனில், ரெஸ்டாரெண்டில் சாப்பிட சென்றால் கூட, ஒரு முறை தண்ணீர் வந்து வைத்த பிறகு மறுமுறை வைக்க, கெஞ்ச வேண்டி இருக்கிறது. தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று எல்லா இடங்களிலும் போஸ்டர்.  அமெரிக்கா முழுதுக்கும் சாப்பாடு வருவது, கிட்டத்தட்ட 60-80% வரை கலிஃபோர்னியாவில் இருந்து. கலிபோனியாவில் இது போல தண்ணீர் பஞ்சம் இருக்க, சாப்பாட்டு உற்பத்திக்கு என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. மிக பெரிய கேள்வி குறி.

இதெல்லாம் எனக்கு, எங்கே செல்லும் இந்த பாதை என்று என்னுடைய "தண்ணீருக்காக ஒரு யுத்தம் வராமல் தடுப்போம்" முந்தைய பதிவை ஞாபக படுத்தின. 

மொத்தத்தில், லாஸ் ஏஞ்சலீஸ் , சான் பிரான்சிஸ்கோ பயணம், ஒரு மறக்க முடியா அனுபவம்.

நன்றி.