Saturday, November 19, 2011

மணமகனாக போகிறீர்களா? உங்கள் ரேட்டை தெரிந்துகொள்ளுங்கள்
நேற்று, எங்கள் ஆபிசுக்கு புதிதாக வேலைக்கு வந்திருந்த ஆந்திராவை சேர்ந்த ஒருவரிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஆந்திராவில் இளநிலை எஞ்சினியரிங் முடித்துவிட்டு இங்கு வந்து தகவல் தொழில்நுட்பத்தில் முதுநிலை முடித்துவிட்டு தற்போது வேலைக்கு சேர்ந்து இருக்கிறார்.

அவருடைய தங்கைக்கு ஊரில் மாப்பிள்ளை பார்ப்பதாக சொன்னார். அதன் பின் அவர் சொன்ன பல விசயங்களும் எனக்கு தலை சுற்ற செய்தன.
அவருடைய தங்கை பிடெக் முடித்து இருக்கிறார். வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு வரும் வரன்கள் எல்லாம் தற்போது வரதட்சனை கேட்பது கோடிகணக்கில். அதுவும் வரன்களின் படிப்பு மற்றும் அவர் வேலை பார்க்கும் இடத்திற்கு ஏற்ப வரதட்சனை கூடும் என்றார்.
அதே போல நகையாக இப்போதெல்லாம் கிலோ கணக்கில் கேட்கிறார்கள் என்றார். மணமகளின் எடைக்கு எடை வெள்ளி பாத்திரமும் தரவேண்டி என்று கேட்கிறார்கள் என்றார் அவர். வெளி நாட்டில் வேலை பார்க்கும் வரனாக இருந்தால் மாப்பிள்ளை வீட்டார் என்ன என்ன கேட்கிறார்களோ அவ்வளவும் தரவேண்டுமாம்.

”நான் கேள்வி பட்ட வரை தமிழ் நாட்டில் எல்லாம் இந்த நிலை கொஞ்சம் மாறி இருக்கிறது” என்று அவரிடம் சொன்னேன். இப்போதெல்லாம் வெளி நாட்டில் வாழும் மாப்பிள்ளைகளுக்கு முன்பிருந்த கிராக்கி இப்போது இல்லை என்ற போது அவர் ”இப்போது எங்கள் குடும்பம் இருப்பது சென்னையில் தான், சென்னையில் இருக்கும் வரன்களின் பெற்றோர் தான் இவ்வாறு கேட்கிறார்கள் “ என்று வேறொரு குண்டை தூக்கி போட்டார்.

எனக்கு தற்போதைய கல்யாண நிலவரங்கள் தெரியாததால், அவரிடம் பேசிவிட்டு வீடு வந்த பின்பு இணையத்தில் தேடினேன்.

அப்போது எனக்கு கிடைத்தது,

http://www.dowrycalculator.com/

என்ற இந்த தளம். நீங்கள் திருமணத்திற்கு தயாராக இருப்பவரென்றால் இந்த தளத்திற்கு சென்று தங்களை பற்றி அனைத்தையும் கொடுத்து தங்களின் வரதட்சனை ரேட் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இது விளையாட்டா உண்மையா தெரியவில்லை..ஆனாலும் இந்த தளத்தில் குறிப்பிட்டு இருப்பது போலே உண்மையில் யாராயினும் சென்று பார்த்து அதற்கு ஏற்றார்போல வரதட்சனை வாங்கினார்/வாங்குகிறார் என்றால் என்னாகும் நினைக்கவே பயமாக இருக்கிறது.

இதனை குறித்த டிவி9 கொடுத்த ஒரு செய்தி அறிக்கைThursday, November 10, 2011

1984

1984- ஜார்ஜ் ஆர்வெல் அவர்களின் மிக முக்கியமான நாவல் இது. டோடலிடோரியன் கவர்மெண்ட் எனப்படும் பொதுவுடமை தத்துவங்களை பின்பற்றும் ஒரு நாடு 1984 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று 1949 ஆம் ஆண்டு ஆர்வெல் எழுதியது. இவருடைய மற்றொரு பிரபல நாவலான Animal farm (விலங்குகள் பண்ணை) ஐ விட இது மிக பிரபலம்.

இந்த நாவல் வெளிவந்த பிறகு, பல புதிய பதங்கள் நடைமுறைக்கு வந்தன..இப்போதும் கூட பல சொற்கள் நடைமுறையில் இருக்கின்றன..

உதாரணமாக..தற்போது உலகெங்கும் பிரபலமாக இருக்கும் “Big Brother" எனப்படும் ஒரு நிகழ்ச்சியின் கரு இந்த புத்தகத்தில் இருந்தே வந்தது (ஒரு வீட்டில் சில பிரபலங்கள் சில மாதங்கள் தங்க வேண்டும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் காமிரா மூலம் கண்காணிக்கப்படும்).

Double think, Thoughtcrime, Newspeak போன்ற பல பதங்கள் அந்த புத்தகம் வந்த பின்பே பிரபலமாகின.

மேலும் “Big brother is watching you" போன்ற சொற்றொடர்களும் இதன் மூலமே பிரபலமாகின.பல முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் வேறு வேறு மாதிரி எண்ணங்கள் தோன்றும்.

நிறைய நாட்களுக்கு பிறகு கடந்தமாதம் மேலும் ஒரு முறை 1984 ஐ படிக்க நேர்ந்தது. தற்போதைய இந்தியாவிற்கும் 1984 நாவலுக்கும் எதோ தொடர்பு இருப்பது போல தோன்றுகிறது.

சரி இப்போது நாவலுக்குள் செல்வோம்.

அது ஒரு கற்பனையான நாடு, அதன் பெயர் ஓசோனியா. அதன் தலைவர் அனைவராலும் "பிக் பிரதர்" என்று அழைக்கப்படுகிறார்.

ப்ரோல்ஸ்
---------------
அந்த நாட்டில் வசிக்கும் மக்களில் எண்பத்திஐந்து சதவீதம் பேர் ப்ரோல்ஸ் என்றழைக்க படுகிறார்கள். இவர்கள்  வறுமையில் வாடுபவர்கள். அவர்களுக்கு மாதமாதம் ரேஷனாக சில உணவு பொருள்கள் 
வழங்கப்படுகின்றன.  இந்த மக்கள் அனைவர்க்கும் எப்பொழுதும் சினிமா, கேளிக்கை
குடி, விளையாட்டு போன்றவை வழங்கப்படுவதால் தாம் வறுமையில்,அறியாமையில் இருக்கிறோம்
 என்பதையே அறிந்து கொள்ளாமல் வாழ்பவர்கள். 

அவுட்டர் பார்ட்டி
------------------------

அந்த நாட்டில் வசிக்கும் பதிமூணு சதவீத மக்கள் அவுட்டர் பார்ட்டியை சேர்ந்தவர்கள். அவர்கள் மிடில் கிளாஸ் மக்கள். படிப்பறிவு கொண்டிருப்பதால் ஓசோனியாவின்  கவர்மென்ட் வேலைகள் செய்பவர்கள்.
படிப்பறிவு கொண்டிருப்பதாலேயே, அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் புரட்சி ஏற்படுத்தி விடுவார்கள் என்று பயந்து எப்போதும் ஓசோனியா தலைவரான "பிக் பிரதர்" மற்றும் அவர்களின் "Ministry of Truth" அமைச்சரவையால் எப்போதும் கண்காணிக்கப்படுபவர்கள். இவர்கள் 
செய்யும் அனைத்தையும் கண்காணிக்க அனைவர் 
வீடுகளிலும் டெலிஸ்க்ரீன் வைக்கப்பட்டு இருக்கும். அதன் மூலம் ஒவ்வொருவரும் என்ன என்ன செய்கிறார்கள், என்பது உண்மை அமைச்சரகத்துக்கு அனுப்பப்படும்.

அவர்கள் தங்க அரசாங்க இடம்/வீடு கொடுக்கப்படும்.  இவர்களுக்கும் மாதமாதம் ரேஷன் வழங்கப்படும் அதனை கொண்டு அவர்கள் வாழ வேண்டும் அரசாங்க ஊழியம் செய்ததற்கு அவர்களுக்கு சம்பளம் என்று சொற்ப தொகை  கிடைக்கும்.

ஒரு அவுட்டர் பார்ட்டியை சேர்ந்தவர் இன்னொரு அவுட்டர் பார்ட்டியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அரசாங்கத்தை சேர்ந்தவர்கள். தங்கள் குழந்தை மீது எந்த உரிமையும் அவர்கள் கொண்டாட கூடாது.

இன்னர் பார்ட்டி
----------------------

ஒசோனியாவின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் இரண்டு சதவீதத்துக்கும் குறைந்தவர்கள். இவர்கள் மேல் மட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு என்று ரேஷன் இருப்பதில்லை. வீடு/சொத்து வாங்கிகொள்ளலாம். பிடித்ததை சாப்பிடலாம். இவர்களை யாரும் கண்காணிப்பதில்லை என்பதால் டெலி ஸ்க்ரீன் இருப்பினும் உபயோகப்படுத்துவதில்லை.

பிக் பிரதர்
--------------

எல்லாவற்றிக்கும் தலைவர் இவர். இவர் யார் என்று மிடில் கிளாஸ் மக்களுக்கோ ப்ரோல்ஸ் க்கோ தெரியாது. ஆனாலும் அவருடைய படம் எல்லா வீடுகளிலும், தெருக்களிலும் மாட்ட பட்டு இருக்கும்.

நாவலின் கதாநாயகன் வின்செண்ட் ஸ்மித் ஒரு மிடில் கிளாஸை சேர்ந்தவர். அவர் MiniTrue எனப்படும் ட்ருத் மினிஸ்ட்ரியில் வேலை பார்க்கிறார். இவரை போல மினிட்ருதில் வேலை பார்ப்பவர்களின் வேலை வரலாற்றை மாற்றி அமைப்பது. அதாவது, பிக்ப்ரதர்க்கு எதிராக எதேனும் வரலாற்றில் இருந்திருந்தாலோ அல்லது போராட்டம் செய்திருந்தாலோ அவர் unperson ஆக்கபட்டுவிடுவார், அதாவது கொல்லப்பட்டு அவர் இருந்ததற்கான சுவடுகள் அழிக்கப்பட்டு விடும்.

இவருக்கு அந்த நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் பிடிப்பதில்லை. அந்த ஆபிஸில் இருக்கும் ஜுலியாவை இவருக்கு பிடித்து போகிறது. இருவருக்கும் பிக் பிரதரின் மீதும் அவரின் அரசாங்கதின் மீதும் இருவருக்கும் வெறுப்பு, ஏனெனில் அவர்களுடைய பெற்றோரை அரசாங்கத்தை எதிர்த்ததற்காக unperson ஆக்கி இருப்பார்கள். ரகசியமாக காதலிக்கும் இவர்களை அரசாங்க அதிகாரியாக இருக்கும் ஓப்ரெயன் சந்தித்து அவருக்கு உதவுவதாக கூறுகிறார். சில நாட்கள் கழித்து அவர்கள் இருவரும் அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்ததாக கைது செய்யப்படுகிறார்கள்.

அவர்கள் இருவரும் பலமுறை எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டு கொடுமைபடுத்தபடுகிறார்கள்.  ரூம் 101 எனப்படும் கொடுமை சேம்பரில் வைத்து மூளை சலவை செய்யப்படுகிறார்கள். முடிவாக அவர்கள் சிறையை விட்டு வெளியே வரும் போது பிக்ப்ரதர் அடிமைகளாக விசுவாசிகளாக வருகின்றனர்.

கதை முடிகிறது.

இந்த கதை ஒரு கற்பனை தான் என்றாலும் ரஷ்ய நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் நடந்த பல சம்பவங்கள் இந்த நாவல் மூலம் மறைமுகமாக தெரிவிக்கப்படுன்றன.

உதாரணமாக..

கீழே காட்டப்படும் இரண்டு புகைப்படங்களும் unperson ஆக்கப்படுவதற்கான ஒரு உதாரணம்.Saturday, October 29, 2011

A.R.முருகதாஸும் வாட்ஸன் & கிரிக்கும்

19ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதி, ஒரு ஜெர்மன் பயோகெமிஸ்ட் ஒருவர் நியூக்ளிக் ஆசிட் என்ற ஒன்றை கண்டுபிடித்தார். பின்னர், நிறைய நியூக்ளிக் ஆசிட் கொண்ட ஒரு செயின் கார்போஹைடிரேடாலும்,பாஸ்பாரிக் அமிலத்தாலும் நிறைய நைட்டிரஜன் அணுக்கள் நிறைந்த காரத்தாலும் நிறைந்திருப்பதை கண்டு பிடித்தார் அதற்கு, டி.என்.ஏ/ஆர்.என்.ஏ என்று பின்னர் பெயரிடப்பட்டது.

1943 ஆம் ஆண்டு Oswald Avery என்ற அமெரிக்க விஞ்ஞானி,  இந்த டி.என்.ஏ அல்லது ஆர். என். ஏ என்பது, மரபுப்பொருட்களை கொண்டிருக்கலாம், அதன் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த நிகழ்வுகள் கடத்தப்படலாம், என்றும் கண்டுபிடித்தார்.

டி.என்.ஏ என்பது மரபுப்பொருளைக் கொண்டது என்று கண்டுபிடித்தாலும் அது எப்படி இருக்கும், எந்த தோற்றம் கொண்டது என்று யாரும் அறிந்திருக்கவில்லை.

1953 ஆம் ஆண்டு, ஜேம்ஸ் வாட்ஸன் & ஃபிரான்ஸிஸ் கிரிக் ஆகிய இருவரும் x-ray crystallography முறையை பயன்படுத்தி டி.என்.ஏ என்பது டபுள் ஹெலிக்ஸ் எனப்படும், முருக்கிவிட்ட ஏணி போன்ற ஒரு தோற்றம் கொண்டது என்று கண்டுபிடித்தனர்.


மேலே உள்ள படத்தில் இருப்பது போன்ற தோற்றம் கொண்டது தான் டி.என்.ஏ என்று கண்டுபிடித்ததற்க்காக, வாட்சன் அவர்களுக்கும் கிரிக் அவர்களுக்கும் 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது.சரி, இப்போது எப்படி, வாட்ஸனும் கிரிக்கும், டி. என். ஏ தோற்றத்தை கண்டுபிடித்தார்கள் என்று பார்க்கலாம்.

முதலில், டி.என்.ஏ வை, உயிரினத்திலிருந்து பிரித்து எடுக்க வேண்டும், இதற்காக, எச்சில், ரத்தம் போன்ற பல பொருள்கள் பயன்படுத்தபடுகின்றன.

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு இருப்பது, சாம்பிளில் இருந்து பிரிக்கப்பட்ட டி.என்.ஏ.

டி. என். ஏவை மட்டும் பிரித்த பிறகு, அதனை படிமங்களாக்குகின்றனர்.

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு இருப்பது, படிமங்களாக்கபட்ட டி. என்.ஏ ஆகும்.

அடுத்து, படிமங்களாக்கப்பட்ட டி.என்.ஏக்களை, x-ray crystallography, எனப்படும் x-ray ஒளிச்சிதறல் முறையை பயன்படுத்தி சிதறச்செய்கின்றனர்.


மேலே உள்ள படத்தில் இருப்பது சிதறடிக்கபட்ட டி.என்.ஏ ஒளி.

பின்பு, சிதறச்செய்த ஒளியை ஒன்று படித்தி, இது தான் டி.என்.ஏவின் தோற்றம் என்று கண்டு பிடிக்கிறார்கள்.சரி, இப்போது தலைப்புக்கு வருவோம்,

இத்தனை கஷ்டப்பட்டு வாட்ஸனும், கிரிக்கும், கண்டுபிடித்த டி.என்.ஏ தோற்றத்தை, வெறும், சாதாரண மைக்கிராஸ்கோப் அடியில் சாம்பிளை வைத்து கொண்டு ஸ்ருதிஹாசன் 7 ஆம் அறிவு படத்தில் கண்டுபிடிக்கிறார். எப்படி பட்ட மைக்கிராஸ்கோப் அது?,  டி.என்.ஏ ஸ்ட்ரெக்சரை, காட்டுகிறது என்று சொன்னால் x-ray crystallography செய்யும் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும், செய்வாரா Mr. A. R. முருகதாஸ் அவர்கள்?

தன்னுடைய தந்தை வெறும் டெலஸ்கோப் வைத்துகொண்டு, வைரஸ் பரவுவதை தசாவதாரம் படத்தில் காணுவதை விட ஸ்ருதிஹாசன் செய்வது பரவாயில்லை என்றாலும், எப்படி எல்லாம், அறிவியல் கண்டுபிடிப்புகள் தமிழ் சினிமாவில் நகைப்புக்குள்ளாக படுவது நினைத்து கடுப்பை கிளப்புகிறது.Saturday, October 22, 2011

கடுப்பை கிளப்பும் சிலர்! • அவசர அவசரமாக ஆபிஸுக்கு போய் கொண்டிருப்போம்..மீட்டிங் வேறு இருக்கும். அந்த நேரம் பார்த்து.. எல்லா சிக்னலிலும் ரெட் விழுந்து சதி செய்யும். சிக்னலில் நிற்கும் போது,  நமக்கு முன்னால் இருக்கும் காரில் ஒரு கிழவி உக்கார்ந்து கொண்டு இடைவிடாது  மேக்கப் தலை சீவுதல் என்று படுத்தும் பாருங்க.., சிக்னல் விழுந்தபின்னும் காரை எடுக்காமல் கடுப்பை கிளப்பும்.

 • மாலையில் எப்படியாவது சீக்கிரம் ஆபிஸிலிருந்து வீட்டுக்கு வந்துடனும்னு வேக வேகமா வர நினைப்போம். அப்போது சிங்கிள் லேன் ரோடுல  யார் கூடயோ செல்போனில் பேசி கொண்டு 45 மைல் ஸ்பீடு லிமிடில் வெறும் 15 மைல் ஸ்பீடில் உருட்டி கொண்டு செல்லும் சிலர்.


 • விழுந்து விழுந்து வேலை செய்து முடித்து இருப்போம், ஸ்டேடஸ் அப்டேட் மீட்டிங்கில் பெரிய தலை ஒருத்தர் வந்து ஒரு ஐடியா சொல்லுவார், நாம அந்த ஐடியாவை முதல்லயே சொல்லி இருப்போம்..ஆனா அப்போ , மேனேஜர் அதை ரிஜெக்ட் பண்ணி இருப்பார். இப்போ, பெரிய தலை நாம சொன்னதையே சொல்லுவார்.ஆகா, ஓகோ ஐடியா பிரமாதம்னு பெரிய தலைக்கு ஜால்ரா போடுவாரு பாருங்க நம்ம மேனேஜர்..அந்த ஜால்ரா சத்தம் காதை கிழிக்கும்.

 • நான் அடிக்கடி சந்திக்கும் நபர்கள் இவர்கள்.. முக்கியமாக இந்தியர்களாக இருப்பர். முதல் சந்தித்து ”ஹெல்லோ ஹவ் ஆர் யூ?”, என்று சொல்வதில் ஆரம்பித்து...வரிசையாக தன்னை பற்றி ஒரு அறிவுஜீவி  என்றெல்லாம் அடுக்க ஆரம்பிப்பார்கள். நானும் பெரிய ஆள் தான் போல இவரு என்று நினைக்க ஆரம்பித்து சப்ஜெட் சம்பந்தமாக ஒரு சாதாரண கேள்வி கேட்பேன்...அதற்கு கேனத்தனமாக எதாவது பதில் சொல்வார்கள். ”எதுக்கு இந்த பந்தா?” என்று கேட்க எனக்கு நாக்கு வரை வந்துவிடும்.
 • சப்ஜெட் ஒன்னுமே தெரியாட்டியும்...அதை தெரியும் இதை தெரியும், யானையை குதிரையாக்குவேன்..என்றெல்லாம் எல்லார் முன்னாலும் பிலிம் காட்டியே பிரமோஷன் வாங்கி பிழைப்பை நடத்தும் சிலர்.
 • மாங்கு மாங்குன்னு ரிசெர்ச் பண்ணி ஒரு டாபிக் பத்தி பிளாகுல எழுதி இருப்போம்...பத்து பேரு தான் வந்து நம்ம பிளாக்கை படிச்சு இருப்பாங்க... பரவாயில்ல பத்து பேராவது படிச்சிருக்கங்க அப்படின்னு சந்தோசமாகியிருப்போம்..ஆனா சுண்டியிழுக்கிற தலைப்பை வச்சு பிளாக் போஸ்ட் முழுக்க மொக்கை போட்டு இருப்பார் ஒருத்தர்..அவருக்கு கூட்டம் அள்ளும்..ஆனாலும் எனக்கு விசிடர்ஸ் கம்மியாயிடாங்க ஹிட்ஸ் கம்மியாயிட்டதுன்னு புலம்பு புலம்புன்னு புலம்புவார் பாருங்க.
 • எனக்கெல்லாம்,பத்து பேரு வந்து என்னோட பிளாக்கை படிச்சாலே பெரிசு..இதி்ல   ஓட்டு பெட்டி..தமிழ்மணம் ராங்கிங்கில் வருவதற்கு நடக்கும் அடிபிடி சண்டைகள் எல்லாம் பார்க்கும் போது கடுப்பு வரும் பாருங்க.

Saturday, October 15, 2011

எடிசன் என்ற ஒரு திருடரும், டெஸ்லா என்ற மற(றை)க்கப்பட்ட விஞ்ஞானியும்


முதலில் ஒரு டெஸ்டு
"Everyone steals in commerce and industry. I've stolen a lot, myself. But I know how to steal! They don't know how to steal!
இதை சொல்லியது யார்.

அடுத்து உங்களுக்கு சில காம்பெடிஷன் கேள்விகள்..

 1. ரேடியோவை கண்டுபிடித்தவர் யார்?
 2. X-Ray யை கண்டுபிடித்தவர் யார்?
 3. Vaccum tube கண்டுபிடித்தவர் யார்?
 4. நியான் பல்பை கண்டுபிடித்தவர் யார்?
 5. Speedometer, Auto ignition system  ஆகியவற்றை கண்டுபிடித்தவர் யார்?

சரி இப்போ ஒரு கதை..

                                                                                         
”ஒரு ஊரில டெஸ்லான்னு ஒருத்தர் இருந்தாராம். அவரு கொஞ்சம் ஆர்வக்கோளாராம்.. சரியா!!, எப்பயும் எதையாவது ஒன்னை நோண்டிட்டே இருப்பாராம். இதை களட்டி அதில மாட்டுறது, அதை களட்டி இதில மாட்டுறதுன்னு எப்பயுமே செய்துட்டு இருப்பாராம்....இவரோட ஆர்வக்கோளாற பாத்த அவர் ஃப்ரெண்டு..ஏன்டா இவனே..இங்க ஒக்காந்து எல்லாத்தயும் நோண்டிட்டு ஆர்வக்கோளாறா இருக்கியே.. ஒன்ன மாதிரி ஆட்களை எல்லாம் அமெரிக்கால தேடுராங்களாம்.. நீ ஏன் அங்க போயி இதை எல்லாம் செய்யகூடாதுன்னு சொன்னாராம்”

”சரி, நம்ம அருமை நண்பன் சொல்லுறானேன்னு, இந்த..ஆர்வக்கோளாறும் அமெரிக்காவில அப்போ பேமஸா இருந்த எடிசன் லாப்ல அப்ளை பண்ணி எடிசன் கிட்ட அஸிஸ்டெண்ட் ஆ சேர்ந்தாராம்..”

“அங்க போயி நைட்டும் பகலும் வேலை பார்த்து பல புது புது கண்டுபிடிப்பா கண்டுபிடிச்சாராம்...ஆனா என்ன பிரச்சனைனா...டெஸ்லா ஒரு கேனையாம்...அதாவது இவரு கண்டுபிடிக்கிறதை எடிசன் நைசா எடுத்து எல்லாத்தையும் பேடண்டு செஞ்சு நிறைய பணம் சம்பாதிச்சாராம்..ஆனா ரொம்ப கவனமா, நம்ம டெஸ்லாவோட பெயரை எதிலையுமே சேக்கலையாம்..சரியா..”

”இதை கொஞ்ச நாள் கழிச்சு தெரிஞ்சு கிட்ட டெஸ்லா...எடிசன் கம்பெனிக்கு போட்டி கம்பெனியா இருந்த Westing house ங்கிற கம்பெனிக்கு போனாராம் நம்ம டெஸ்லா..”

“இவரு..சரியான ஜீனியஸ்(ஆனா கேனை) ன்னு தெரிஞ்ச அந்த கம்பெனிக்காரனுகளும் இவரு கண்டுபிடிச்ச பல கண்டுபிடிப்புகளுக்கும் நான் நீன்னு போட்டி போட்டு பேட்டெண்டு வாங்கிட்டாங்களாம்..ரொம்ப ரொம்ப சொற்ப பணத்தை ராயல்டியா இவருக்கு கொடுத்துட்டு...கோடி கோடியா அவங்க சுருட்டி இருக்காங்க...இதெப்படி இருக்கு”

”கடைசியில காசும் இல்லாமா சொத்தும் இல்லாம வறுமையில வாடி இறந்துட்டார் நம்ம டெஸ்லா..” அவரு இறந்து போறதுக்கு முன்னால American Institute of Electrical Engineers ஒரு ஹாரனரி மெடல் கொடுக்க அவரை கூப்பிட்டாங்களாம்..அங்க போன அவரு சொன்னதை பாருங்க..
"You Propose, to honor me with a medal which I could pin upon my coat and strut for a vain hour before the members of your institute. You would decorate my body and continue to let it starve, for failure to supply recognition, my mind and its creative products, which have supplied the foundation upon which the major portion of your institute exists"
முதல்ல இருக்கும் quote ஐ சொன்னது தாமஸ் ஆல்வா எடிசன். அடுத்து நான் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் ஒரே பதில் தான்...அது

டெஸ்லா- ஒர் மற(றை)க்கப்பட்ட விஞ்ஞானி.

Friday, October 7, 2011

ஒரு பசுவின் கண்ணீர் கதை”என் சோக கதையை கேளு மனிதகுலமே” என்று ஒரு பசு என் கனவில் நேற்று வந்து கண்ணீர் விட்டது.

”என்ன பசு?, என்ன பிரச்சனை உனக்கு?” இது நான்.

”என்ன பிரச்சனையா?, பிரச்சனையே நீங்க தானே!”

“என்னது..நானா?, நான் என்ன செஞ்சேன்”

”நீங்கன்னா...மனிதர்களை சொன்னேன்”

”என்னது மனிதர்களா?, நாங்களாம் எவ்வளவு நல்லவங்க, எப்படி உங்க குலத்தை கோமாதா எங்கள் குல மாதான்னு கும்பிடுறோம், மாட்டுப்பொங்கல்ன்னு ஒரு விழாவே உங்களை வச்சு கொண்டாடுறோம், நீ என்னடான்னா ரொம்ப தான் சலிச்சுகிறியே..இவ்வளவும் செய்யிற எங்களை போயி பிரச்சனைன்னு சொல்லுறியே”

“அடா, அடா..உங்க மக்கள் செய்யிற செயலை நீ தான் மெச்சிக்கணும்., எப்படி எல்லாம் எங்களை கொடுமை படுத்த முடியுமோ அதை எல்லாம் செய்துட்டு..சாமியா கும்பிடுராங்களாம்..நல்ல கதைப்பா”

“என்னது நாங்க கொடுமை செய்யுரமா?..என்னா சொல்லுற”

”நீங்க சொய்யிற கொடுமை ஒன்னா, ரெண்டா...வரிசையா சொல்லுரேன் கேளு”

”நான் ஏன் தான் பசுவா பிறந்தேனோன்னு நோகாத நாளில்லை..பிறந்த கொஞ்ச நாளில அம்மா கிட்ட இருந்து என்னை பிரிச்சிட்டாங்க..அப்புறம், நான் இனப்பெருக்கத்துக்கு தயாரானவுடன் என்னுடைய சோதனை காலம் ஆரம்ப்பிச்சிடுச்சு”

“வருடம் முழுதும் புள்ளதாச்சின்ங்கிற கதையா..எப்போ பார்த்தாலும் செயற்கை முறையில விந்தனுவை செலுத்தி என்னை புள்ளதாச்சி ஆக்கிடறாங்க...அப்புறம் கன்று பிறந்தவுடன்..கன்றையா பாலை குடிக்க விடறீங்க?....நீங்க தானேப்பா பாலை கறந்து குடிக்கிறீங்க..அதுவும் இப்பொல்லாம் எதோ rBGH ஒரு ஊசியை போட்டு அதிக நாள் பால் கொடுக்கிற மாதிரி பண்ணுறீங்க” என்று கண்ணீர் விட்ட பசு...கொஞ்ச நேரம் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு தொடர்ந்தது.


“அந்த rBGH எங்களை என்ன பாடு படுத்துன்னு யாருக்காவது தெரியுமா? பால் மடியில எரிச்சல் ஏற்படுத்தி ஒரு பக்க பால்மடி பெருத்து வழி ஏற்படுத்துது. இதுவாவது பரவாயில்லை, இது எங்களை லேம்னெஸ் எனப்படும் நோயை தருகிறது. எங்களால் சரியாக நடக்க முடியாமல், நிற்க முடியாமல், செயல்பட முடியாமல் படும் பாடு இருக்கிறதே..அப்பப்பா!”

“சில நேரங்களில் இது எங்கள் கருப்பையில் கட்டிகளை ஏற்படுத்தி, அது கான்சேர் கட்டிகளாகும் அபாயத்தையும் தருகிறது, இதுவாவது பரவாயில்லை, எங்கள் கன்றுகுட்டிகளுக்கு ஏற்படும் நிலை இருக்கிறதே...அது இன்னும் பரிதாபம்”

 ”பிறந்த சில நாட்களில் எங்களிடம் இருந்து பிரிக்கப்படும் எங்கள் கன்றுகள், பசுங்கன்றுகளாக இருப்பின் என்னை போன்ற கதி அதற்கும் ஏற்படுகிறது..எருதுகளாக இருப்பின்...வெகு சீக்கிரமே அடிமாடுகளாக மாற்றப்படுகின்றன...,சில நேரங்களில் அவை நன்கு கொலுக்க என்று அதிக புரோட்டீன் கொண்ட உணவு கொடுக்க படுகிறது..அந்த உணவை செரிக்க முடியாமல் பல நேரங்களில் Mad cow disease போன்ற பலவும் எங்களுக்கு ஏற்படுகின்றன” என்று குலுங்கி குலுங்கி அழுத பசு...திடீரென்று எதோ நினைத்தாய் பலத்த ஒலியுடன் வில்லன் போல சிரிக்க ஆரம்பித்தது.

பசுவுக்கு என்னாயிற்று என்று நான் நினைத்த தறுவாயில், பசுவே பேச ஆரம்பித்தது....

“இப்படி எல்லாம் எங்களை கொடுமை படுத்திய மனித குலத்துக்கு நாங்கள் தரும் பரிசு என்ன தெரியுமா, பழிக்கு பழி”

“எங்களை கொடுமை படுத்தி எடுக்கபடும் பாலை குடிப்பதால் அவர்களுக்கும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தியாகி.. சிறுமிகள் சீக்கிரம் பூப்படைவது, தேவையில்லாத அதிக முடிவளர்ச்சி..பெண்களுக்கு Male pattern வருவது...சில நேரங்களில் மார்பு புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுத்துவது,... ஹாஹாஹா, எப்பூடி”

”ஹாஹாஹா” என்று பசு சிரித்தது நாலாபக்கமும் எதிரொலித்து...என் காதுகளை அடைத்தது....சடாரென்று தூக்கத்திலிருந்து எழுந்தேன்...

Friday, September 23, 2011

ஜீனியஸ் என்பது கெட்ட வார்த்தையா?


இரண்டு நாட்களுக்கு முன் பிபிசி இல் ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது அது Is Genius a dirty word? என்பது.  ஒருவரை ஜீனியஸ் என்று அழைக்க வரையறுக்கப்படும் அளவு கோல் என்ன?  

தாமஸ் ஆல்வா எடிசன் நிறைய கண்டு பிடித்திருக்கிறார்  அதனாலே அவரை போன்ற கண்டு பிடிப்பாளர்கள்  தான் ஜீனியஸ் ஸா?

இல்லை ஐன்ஸ்டீன் போன்று பல செயல்களுக்கு ஒரு புது அறிவியல் விளக்கம் கொடுத்து புது புது தியரி கொடுப்பவர்கள் தான் ஜீனியஸ்ஸா?

இல்லை அவ்வளவு தூரம் கூட போக வேண்டாம், சில நேரங்களில் அழகாக இசை அமைத்து பாடல்களை பாடும் பாடகர்களையும் இசை அமைப்பாளர்களையும் கூட சில நேரம் ஜீனியஸ் என்கிறோமே? எதனை வைத்து சொல்கிறோம்.

வரலாற்றை புரட்டி பார்த்தால் அதில் நாம் தற்போது பலரை "ஜீனியஸ்ப்பா அவரு" என்று கூறுவோமே
அவர்களில் பலரை அப்போது வாழ்ந்த மக்கள் " இது நட்டு கழண்ட கேசு"  என்றே சொல்லி இருக்கிறார்கள். இந்த நிலை தற்போதும் உண்டு. அறிவியல் ஆராய்ச்சிகள் செய்து ஆய்வுக்கூடமே கதி என்று இருக்கும் பல அறிவியலார்களுக்கு வெளியில் கிடைக்கும் பட்டம் "அது ஒரு நட்டு கழண்ட கேசு " என்பதே.

ஏன் இந்த நிலை என்று யோசித்தால், பதில் ரொம்ப சிம்பிள்.. எப்போதும் ஒரே எண்ணம் ஒரே குறிக்கோள் என்று வாழும் அறிஞர்கள் பலர் பல நேரங்களில் அவர்கள் உலகத்தில் மட்டுமே வாழ்வார்கள், உலக நடப்பு அதிகம் அறிந்து கொள்ளவோ அதற்காக நேரம் ஒதுக்கவோ மாட்டார்கள். அதனாலேயே நல்ல அறிஞராக அறிவியலாராக இருந்து கொண்டு அதே நேரம் நல்ல பிசினஸ் செய்பவராகவும் இருப்பவர்கள்/இருந்தவர்கள் மிக மிக சிலரே.

உதாரணமாக எடிசன். எத்தனை பொருட்கள் கண்டு பிடித்தாரோ அத்தனை பொருட்களையும் பேடெண்ட செய்து விட்டார்.  சொந்தமாக ஒரு கம்பெனியும் வைத்து தன்னை பிசினேசிலும் நிலைப்படுத்தினார்.

தற்போதைய உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் ஹுமன் ஜினோம் புகழ்
கிரேக் வெண்டேர் ஐ சொல்லலாம். அறிவியலிலும் சரி, பிசினேசிலும் சரி மனிதர் தன்னை நன்றாக நிலைபடுத்தி கொண்டுள்ளார்.

 ஆனால் எடிசன் போன்றோ, கிரேக் வெண்டேர் போன்றோ இருக்கும் ஜீனியாஸ்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மற்ற 
99 % ஜீனியஸ்கள் எல்லாம் பல நேரங்களில் சாதாரண மக்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை, அல்லது கவனிக்கபடுவதில்லை.

என்னை பொறுத்தவரை அறிவு என்பது 40 %ம் விளம்பர திறமை/பேச்சு திறமை  30 % ம் மீதி  தில்லாக முடிவெடுக்கும் திறமை/ரிஸ்க்
எடுக்கும் திறமை 30 % இருந்தால் போதும் நல்ல சக்செஸ்ஃபுல் அறிஞராகிவிடலாம்.

நல்ல சக்செஸ்ஃபுல் ஜீனியஸ் வரலாற்றில் மட்டுமல்ல தற்போது வாழும் மக்களிடையேயும் மதிக்க படுவார்கள். சக்செஸ்ஃபுல் ஆகாத வரையில் ஜீனியஸ் என்று ஒருவரை புகழ்ந்தாலும் அது வெறும் உதட்டளவில்  கூறப்படும் கெட்ட வார்த்தையே!

Saturday, September 10, 2011

இந்திய, மேற்கத்தைய கலாச்சாரம்: சில பார்வைகள்


நேற்று இரவு "As good as it gets" என்ற ஒரு ஆங்கில படம் பார்க்க நேர்ந்தது. பதிவுலகில் அப்பப்போ நடக்கும் லிவ்விங் டுகெதெர் கலாச்சாரம் குறித்த சண்டைகள் நினைத்து, எனக்கு அந்த படம் பார்த்தவுடன் எதோ தோன்றியது போல இருந்தது. அதன் விளைவே இந்த இடுகை.


அந்த படத்தில் ஒரு குழந்தையுடன் கஷ்டப்படும் Single mom ஆக "ஹெலன் ஹன்ட்" நடித்திருப்பார். (சிங்கிள் வுமன் என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு திருமணம் ஆகி விவாகரதானவர்களோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்ற பின்பு பாய் பிரெண்ட் விட்டு விட்டு சென்றிருப்பான், அல்லது கணவன் இறந்திருப்பார், இப்படி எந்த பிரிவில் இருந்தாலும் தனியாக குழந்தையை கவனித்து கொள்ளும் அம்மா சிங்கள் மாம் அன்று அழைக்கப்படுகிறாள்)


தன் வயதான தாயையும் கவனித்து கொண்டு தன் நோயாளி மகனையும் கவனித்து கொண்டு ஒரு ஹோட்டலில் சர்வர் ஆக வேலை பார்பார் ஹெலன். தன் கஷ்ட நிலையை கொஞ்சமாவது புரிந்து கொள்ளும் ஒரு பாய் பிரெண்ட் கிடப்பானா என்று தன் தாயிடம் அவள் அழுவாள். ஆனால் அவளிடம் பாய் பிரெண்ட் ஆக வருபவர்கள் அவள் உடலுக்காக மட்டுமே வருவார்கள். கடைசியில் எப்படி அவள் ஜாக் நிகோல்சனின் அன்பை புரிந்து கொள்கிறாள் என்று படத்தில் காட்டி இருப்பார்கள்.


எனக்கு தெரிந்து, படிக்கும் காலத்திலும் சரி வேலை பார்க்கும்காலத்திலும் சரி நிறைய மேற்கத்திய கலாச்சாரத்தை சேர்ந்த பல தோழிகள் தனக்கு நல்ல பாய் பிரெண்ட் கிடைப்பதில்லை என்று கூறியதை கேட்டதுண்டு. அப்படியே நல்ல பாய் பிரெண்ட் கிடைத்தாலும் அவர் திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார் என்றும் கூறுவதுண்டு. மேற்கத்திய கலாசாரத்தில் commit செய்து கொள்ள அதாவது திருமணம் செய்கிறேன் என்று வாக்கு கொடுக்க ஆண்கள் தயங்குவதுண்டு. திருமண நாளில்e கூட நிறைய ஆண்கள் மனம் செய்து கொள்ளாமல் ஓடி விடுவதுண்டு அதனை cold feet என்று அழைப்பார்கள். என்னுடைய முந்தய பாஸ் ஒரு பெண், நல்ல தோழி போல பழகுவார், அவருக்கு கிட்டத்தட்ட நாற்பது வயதாகிறது. ஆயினும் இன்னும் வாழ்கையில் செட்டில் ஆக முடியவில்லையே என்று ஒரே கவலை அவருக்கு. என் என்றால் அவர் இஷ்டம் போல ஒரு பாய் பிரெண்ட் ம் கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்த ஒரு பாய் பிரெண்ட் ஒரு நாள் காலையில் எழுந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டான் என்று சொல்லி அழுது இருக்கிறார்.

நான் இதுவரை சந்தித்த பெண்கள் வாழ்கையில் ஒரு செக்யூரிட்டி தேடுபவர்கள். தனக்கும் ஒரு குடும்பம் குழந்தை என்று வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆயினும் பலருக்கு அது அமைவதில்லை. தெரிந்து திருமணம் செய்து டைவெர்ஸ் ஆன பல சிங்கள் மாம்கள் பலரை பார்த்திருக்கிறேன். அவர்கள் சாப்பிட, குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு சென்றே தீர வேண்டிய கட்டாயம். தன் குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயம்.

என் நல்ல தோழி ஒருத்திக்கு ஒரு பழக்கம் உண்டு, எதாவது துணி வாங்க போனால் எல்லா துணிகளையும் போட்டு பார்க்கும் பழக்கம் உள்ள அவள் திருமண உடை போன்று இருக்கும், வெள்ளை ஆடைகளை மட்டும் அணிந்து பார்க்க மாட்டாள். அவளை பொறுத்த வரை திருமண ஆடைகளை ட்ரை செய்தால் திருமணமே நடக்காது நல்ல பாய் ஃப்ரெண்ட் கிடைக்காது என்ற மூட நம்பிக்கை அவளுக்கு.

நான் சந்தித்த இவர்கள் எல்லாம் எனக்கு அந்த திரைப்படம் பார்த்தவுடன் ஞாபகம் வந்தனர். அவர்கள் இவ்வாறுசொல்லும் போதெல்லாம் பரவாயில்லை நம்ம கலாசாரத்தில் இந்த பிரச்சனை எல்லாம் இல்லைப்பா, “அம்மா அப்பா பார்த்து ”வைப்பாங்க என்று ஏனோ எனக்கு தோன்றி தொலைக்கும்.

இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போல.


Monday, September 5, 2011

Outbreak ஹாலிவூட் படமும் நிஜமும்!

சுமார் ஒரு வருடத்திற்கு முதல் பார்த்த படம் அவுட்ப்ரேக். இரண்டு நாட்களுக்கு முன்பு கலைஞர் டீவியில் அதே படத்தை தமிழில் பார்க்க நேர்ந்தது. ஆப்ரிக்க கண்டத்தில் ஒரு ஊரில் பரவும் வைரஸ் கிருமி எவ்வளவு வேகமாக அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவி மக்களை கொல்கிறது என்பதை நிறைய உண்மை + ட்ராமா கலந்த திரைப்படமாக எடுத்து இருப்பார்கள்.

உண்மையில் படத்தில் காட்டுவது போல நடக்குமா? என்று யோசிப்பவர்களுக்கு... 2009 இல் உலகமெங்கும் பரவிய H1N1 பன்றிக்காய்ச்சல் நல்ல உதாரணம்.

2009 இல் என்ன நடந்தது..

 • March 2009 இல் Mexico நாட்டில் உள்ள La Gloria, Veracruz என்ற ஊரில் உள்ள 60% மக்கள் காய்ச்சல் வந்து நோய் வாய்ப்படுகின்றனர்.
 • March 7இல் Mexico நாட்டில் இருந்து வந்த ஒருவர் மூலம் அமெரிக்காவுக்கு அந்த நோய் 14 மாவட்டங்களில் பரவுகிறது.
 • அமெரிக்காவில் உள்ள 18 மாவட்டங்கள் நோய் பரவியதாக அறிவிக்கப்படுகின்றன..
 • ஏப்ரெல் 27இல் ஸ்பெயின் நாட்டில் இந்த வைரஸ் இல் பரவியதாக அறிவிக்கிறார்கள்.
 • ஸ்பெயினை தொடர்ந்து U.K யிலும் இந்த வைரஸ் பரவியதாக அறிவிக்கப்படுகிறது.
 • ஏப்ரெல் 28ல் கனடா, இஸ்ரேல், நியூஸிலாந்து நாடுகள் வைரஸ் பரவியதாக அறிவிக்கின்றன..
 • ஏப்ரெல் 29, 30இல் ல் மற்ற யுரோப்பியன் யூனியன் நாடுகளான ஆஸ்திரியா, ஜெர்மனி, நெதெர்லாண்ட்ஸ் மற்றும் சுவிஸ்சர்லாந்த்து நாடுகள் வைரஸ் பரவியதாக அறிவிக்கின்றன.
 • மே 1இல், சைனாவில் உள்ள ஹாங்ஹாங்கில் கிட்டதட்ட 300 பேர் நோய் பாதிக்கபட்டதாக அறிந்து தனியறையில் அடைக்கப்படுகின்றனர்.
 • நோய் பரவுவதை தடுக்க 5 நாள் முழு அடைப்பை மெக்ஸிகோ மேற்கொள்கிறது.
 • ஆசிய நாடுகளான, சைனா, கொரியாவிற்க்கு நோய் பரவுகிறது.
 • மே 3, அரபு நாடுகளும், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவும் நோய் பரவியதாக அறிவிக்கின்றன.
 • மே 6,7,8 மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கும் நோய் பரவுகிறது.
 • மே 16 இந்தியாவில் நோய் தாக்கிய முதல் கேஸ் அறிவிக்கப்படுகிறது.
 • ஆகஸ்ட் 13 க்குள் 1800 பேர் நோய் தாக்கி இறந்ததாக WHO அறிவிக்கிறது.
 • எந்த எந்த நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியது என்பதை WHO அறிவிக்கிறது.சரி இப்போது நீங்களே சொல்லுங்கள்..அந்த படத்தில் காட்டுவதை விட பயங்கரமாக வேகமாக H1N1 பன்றிக்காய்ச்சல் பரவி இருக்கிறது என்று கூறலாம்.

இரண்டு மாததிற்குள் பாதி உலகை H1N1 வைரஸ் ஆட்கொண்டுவிட்டது..அதற்கு காரணம் உலகம் சுருங்கி விட்டதாகும்..யாரும் எங்கேயும் செல்லலாம், அங்கு சென்று நோய் பரப்பலாம் என்று ஆனதே.

இப்போது யோசித்து பாருங்கள். H1N1 வைரஸ் உடனடியாக மரணத்தை விளைவிப்பதில்லை..காய்ச்சலை மட்டுமே தந்தது. கவனிக்கபடாமல் இருந்தால் தான் அது மரணத்தை தந்தது..ஆனால் நோய் ஏற்பட்ட சில மணி நேரத்தில் மரணத்தை கொடுக்கும் ஏதேனும் பயங்கரமான வைரஸ் இந்தியா போன்றதோரு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பரவினால் என்னவாகும்....நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது..

இந்த கருவை மையமாக கொண்டு ”Contagion" என்ற ஒரு படம் வர இருக்கிறது...முடிந்தால் பாருங்கள். கீழே உள்ள படத்தின் டிரைலரை பாருங்கள்.Thursday, July 28, 2011

ஹீலா ஹீலா - செத்தும் கொடுத்தார்

மருத்துவ ஆராய்ச்சி உலகில் இருக்கும் அனைவருக்கும் HeLa என்ற பெயர் மிகவும் பரிச்சயமாக இருக்கும். HeLa என்பது அழியாத மனித செல் லைன் என்று சொல்வார்கள். பொதுவாக மனித செல்கள் உடம்புக்கு வெளியே வளர்ப்பது 1951 வரை மிக மிக கடினமானது என்று கருதப்பட்டது. அவற்றை எல்லாம் முறியடித்து உடம்புக்கு வெளியேயும் செல்கள் வளர முடியும் என்று நிரூபித்தது HeLa செல்கள் மட்டுமே.

இதென்ன!, மனித செல்கள் உடம்புக்கு வெளியே வளருவதா? என்ன சொல்லுறாங்க! என்று கேட்பவர்களுக்கு திசு கல்சுர் பற்றிய சின்ன அறிமுகம்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால்

"செல்களை பெட்ரிடிஷ் எனப்படும் தட்டுகளில் வளர்ப்பது".

எப்படி செய்கிறார்கள்

"எந்த ஒரு உயிரினத்தின் செல்களை வளர்க்க வேண்டுமோ அதனை பெட்ரிடிஷ் இல் தடவி, அந்த செல்கள் அதாவது எல்லா விதமான nutrients ம் தந்து அந்த செல்கள் வளர்கின்றனவா? என்று பார்ப்பது

எதற்க்காக செய்கிறார்கள்

மருத்துவ சோதனைகளை சோதனைச்சாலை எலிகளிடமோ, மனிதர்களிடமோ செய்வதற்கு முன், உயிரின செல்களிடம் செய்து அவை எப்படி அந்த சோதனைகளை எதிர் கொள்கின்றன என்று காண்பர். இதனை போன்ற திசுக்களில் நடத்தப்படும் பரிசோதனை எந்த உயிரினத்தையும் பரிசோதனை என்ற பெயரில் துன்புறுத்துவதர்க்கு முன் செய்யப்படுவதால் திசு கல்ச்சர் ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

சரி இப்போது ஹீலா செல்களை பற்றி பார்ப்போம்

முதன் முதலில் ஆராய்ச்சி துறைக்கு நான் வந்த பொழுதெல்லாம் HeLa செல்களில் இந்த ஆராய்ச்சி நடந்தது, அந்த ஆராய்ச்சி நடந்தது என்றெல்லாம் பலர் கூற கேட்டு இருக்கிறேன். ஆனால் HeLa செல் என்றால் என்ன என்று கேட்டால் ஒரே ஒரு பதில் தான் வரும் "HeLa is a immortal cell line" அதனை தவிர வேறொன்றும் யாருக்கும் தெரியாது.

சமீபத்தில் "The immortal life of Henrietta Lacks" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது.
ஹீலா என்று மட்டுமே அறியப்பட்ட ஹென்ரிட்ட லாக்ஸ் என்ற கறுப்பின பெண்மணியின் கான்செர் செல்களே ஹீலா செல்கள் என்று அறியப்படுகின்றன என்று அறிந்த போது ஆச்சரியபட்டேன்.


போலியோ மருந்து முதல் பல பல கான்செர் மருந்துகள் வரை பலவகை மருந்துகளும் முதன் முதலில் சோதனை செய்யப்பட்டது இந்த அம்மாவின் செல்களில் தான். சொல்லப் போனால் ஒரு புது மருத்துவ மறுமலர்ச்சியையும், மில்லியன் டாலர் இண்டஸ்ட்ரியையும் இந்த செல்கள் உருவாக்கி இருக்கின்றன. இன்னும் கூட பல பல நாடுகளில் ஊர்களில் இருக்கும் பல மருத்துவ ஆராய்ச்சி கூடங்களில் இவருடைய செல்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன...

ஆனால் இவற்றை எல்லாம் நமக்கு கொடுத்த அவரோ மிக இளவயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களோ அவருடைய உடம்பில் இருந்து எடுத்த செல்களை கொண்டு திசு கல்ச்சர்இல் வளர வைத்து ஒரு பெரிய இண்டஸ்ட்ரி உருவாக்கி விட்டார்கள் ஆனால் இதனை பற்றி அவருடைய குடும்பம் துளியும் அறிந்திருக்க வில்லை.

புற்றுநோய் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் ஹென்றிட்டா மருத்துவர்களை அணுகி இருக்கிறார், ஆனால் அவர்கள் இவருடைய செல்லை எடுத்து எப்படி டிஷ் இல் வளர்க்கலாம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதிலேயே குறியாக இருந்திருககிறார்கள் அந்த மருத்துவர்கள். அதனை தவிர கதிரியக்கத்தை கொண்டு எப்படி புற்று நோய் கட்டிகளை கரைப்பது என்ற அப்போதைய புது தொழில்நுட்பத்தை அவர் மீது செலுத்தி ட்ரையல் அண்ட் எரர் முறையில் நிறைய சோதனைகள் அவர் மீது நடத்தி இருக்கிறார்கள்.

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இனவெறி அதிகமாக அமெரிக்காவில் இருந்த சமயத்தில், கறுப்பர்களுக்கு என்று தனி மருத்துவமனை, தனி வார்டு, அவர்களுக்கு அளிக்கப்பட மாற்றான் பிள்ளை ட்ரீட்மென்ட் எல்லாம் அந்த புத்தகத்ததில் படிக்கும் போது இப்போது இருக்கும் அமெரிக்காவின் ஐம்பது வருடத்திற்கு முந்தய கொடூரமான முகம் தெரிகிறது.

அவ்வளவு ஏன், ஹீலா செல்கள் யாரிடம் இருந்து வந்தன என்று கூட யாரும் அறிந்திருக்கவில்லை. எங்கே இவரிடம் இருந்து வந்தது என்று தெரிந்தால் இனவெறி பிரச்சனை வரும் என்றோ அல்லது பண பிரச்சனை வரும் என்றோ மிக ரகசியமாக அதனை மறைத்து இருக்கிறார்கள்.

எப்படியோ, முடிவாக ரெபேக்கா ஸ்க்லூட் என்ற பெண் எடுத்த அயராத முயற்ச்சியின் விளைவாக தற்போது ஹென்ரிட்டா பற்றி அறிய முடிகிறது. தானோ தன் குடும்பமோ சுகப்படாவிட்டாலும் கூட, மருத்துவ ஆராய்ச்சி உலகில் தனக்கென்று ஒரு நீங்கா இடம்பெற்று விட்டார் செத்தும் கொடுத்த ஹென்ரிட்டா லாக்ஸ் அவர்கள்.

Friday, June 24, 2011

இந்தியப் பெண்களென்ன சோதனைச்சாலை எலிகளா?அதிக வேலை பளுவினால் பதிவெழுத முடியா நிலை, அதிலும் சில நாட்களுக்கு முன் நான் படித்த இந்த செய்தியை எப்படியாவது பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு நாளும் எதோ ஒரு தடங்கல்.

அந்த செய்தியின் சாராம்சம் இது தான் "ஆந்திராவை சேர்ந்த ஏழை பெண்கள் சிலரை கர்பப்பை வாய் புற்று நோய் மற்றும் மார்பு புற்று நோய் மருந்து கொடுத்து அவர்கள் அறியாமலேயே பல சோதனைகள் நடத்தப்பட்டு இருக்கிறது.

எந்த ஒரு நோய்க்கும் மருந்து கண்டு பிடித்தவுடன் அதனை சோதனை சாலைகளில் இருக்கும் எலிகள் மீது செலுத்தி அவை எப்படி அந்த மருந்தை எதிர் கொள்கின்றன என்று கணிப்பர்.

நோயுற்ற எலிகள் உயிருடன் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி பெற்றாலும் சில நேரங்களில் சில மருந்துகள் மனிதர்களுக்கு வேலை செய்யாது. அதனால் மனிதர்களிடம் இது போன்ற சோதனைகள் நடத்துவது உண்டு. ஆங்கிலத்தில் இதனை 'clinical trials' என்று அழைப்பர். ஆனாலும் இதற்க்கு மனிதர்களை சம்மதிக்க வைப்பதென்பது அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் மிக கடினம். இதில் சேர்க்கும் முன் பல படிவங்களை நிரப்பி சோதனையில் பங்கு பெறுபவரின் முழு சம்மதமும் பெற்று சோதனையின் பக்க விளைவுகள் ஏதும் இருப்பின் அதனை முழுதும் விளக்கி, பங்கு பெறுபவர் முழு சம்மதம் கொடுத்தால் மட்டுமே இந்த சோதனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க சட்டம் சொல்கிறது சுட்டி. இதனை அமெரிக்க போன்ற நாடுகளில் நடத்த ஆகும் செலவும், நேரமும் அதிகம்.

அதனால் தானோ என்னவோ? பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இத்தனை பெரிய காரியத்தை செய்ய இந்தியாவில் இருக்கும் சில நிறுவனங்களை தொடர்பு கொண்டு இதனையும் 'outsource' செய்ய நினைகின்றன போலும். அப்படி அவுட் சோர்ஸ் செய்யப்பட்ட சோதனைகளை நடத்த இங்கிருக்கும் சில நிறுவனங்கள் குறிவைப்பது ஏழை மக்களை தான். அவர்கள் தான் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் சொற்ப பணத்துக்காகவும் நல்ல சாப்பட்டுக்காகவும் சோதனை எலிகளாக சம்மதித்து இருக்கிறார்கள். இவர்களை பொறுத்தவரை பணம் கிடைக்கிறது, கொஞ்ச நாள் கடும் பணியிலிருந்து ஓய்வு கிடைக்கிறது, அதற்கு ஆசைப்பட்டு பின்விளைவுகள் கூட தெரிவிக்கப்படாமல் ஆபத்தான மருந்தை போட்டு கொள்கிறார்கள். விளைவு இப்போது தெரிகிறது.

மருந்து கம்பெனிகளுக்கோ எந்த வித பிரச்சனையோ/படிவங்களோ/சட்ட பிரச்சனையோ/ அதிக பணமோ இல்லை, அதிகம் சிரமப்படாமல் தங்கள் காரியம் நடக்கிறது. இப்படிப்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு தேவை பணம், பணம் பணம் மட்டுமே!

இப்படிப்பட்ட உள்நாட்டு தரகு கம்பனிகளும் வெளி நாட்டு மலை முழுங்கி மருந்து கம்பெனிகளும் இருக்கும் வரை, மனித உயிராவது ஒண்ணாவது, அடபோங்கப்பா!


Sunday, April 24, 2011

குழந்தையின்மை ஒரு நோயா? - 3 -அதிக எடை ஆபத்தானது

கையாஸ் தியரி என்று உண்டு, அதன்படி "உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அடுத்த நிகழ்வுடன் தொடர்புடையது" என்று அது கூறும். மற்ற விசயங்களில் அது உண்மையோ இல்லையோ ஆனால் மனித உடலை பொறுத்தவரை அது மிக மிக சரி என்றே தோன்றும். உதாரணமாக குழந்தையின்மைக்கான மிக முக்கிய காரணம் கருமுட்டை சரிவர வளர்ச்சியடையாமல் பாதியிலேயே நின்று போகும் கருப்பை நீர்க்கட்டி பாலி சிஸ்டிக் ஓவரீஸ் PCOS எனப்படும் ஒரு நிகழ்வுக்கும் அதிக எடை மற்றும் இன்சுலின்க்கும் இருக்கும் தொடர்பை கூறலாம்.

சரி PCOS என்றால் என்ன என்று பார்போம்.

நாம் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல கருமுட்டை முழு வளர்ச்சியடைவதே குழந்தைபேற்றுக்கான முதற்படி, அது சரியாக நடக்கவில்லை என்றாலே முதல் தடை ஆரம்பம்.


ஓவ்வொரு மாதமும் மாதவிலக்கு முடிந்தவுடன் பெண்களுக்கான ஹார்மோன்களான எஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்ரோன் போன்றவற்றை சுரந்து அடுத்த வுலேஷேன் நடக்க சிக்னல் அனுப்புகிறது. இந்த ஹார்மோன்கள் தவிர ஆண்களிடம் இருக்கும் ஹார்மோன்களான ஆன்றோஜென்களும் பெண்களிடம் சிறிதளவு சுரக்கின்றன.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்று படித்திருப்போம், அது தான் PCOS விசயத்தில் நடக்கிறது, எப்போது பெண்களுக்கான ஹார்மோன்களை சுரக்க உத்தரவிடும் பிட்யுட்டரி சுரப்பி மிக மிக சிறிய அளவில் தேவைப்படும் ஆண்களுக்கான ஹார்மோன்களை அதிகம் சுரக்க உத்தரவிட்டால் அங்கு ஹார்மோன் சீரின்மை நடக்கிறது. இந்த ஆன்றோஜென் கருமுட்டை முழு வளர்ச்சியடைவதை தடுக்கிறது. அடுத்து பிட்யுட்டரி சுரப்பி FSH எனப்படும் பாலிகுல் ஸ்டிமுலேடிங் ஹார்மோனை அதிகம் சுரந்து, ஒரே ஒரு கருமுட்டை வளர்ச்சியடைவதை ஊக்குவிக்காமல் பல பாலி சிஸ்ட் அதாவது நீர்கட்டிகளை உருவாக்குகிறது. விளைவு, கருமுட்டை வளர்ச்சியடையாமை, குழந்தையின்மை.

மேலே காட்டப்பட்டுள்ளது ஒரு PCOS உள்ள பெண்ணின் கருப்பை ultrasound படம். கருப்பு நிறத்தில் இருக்கும் ஓவ்வொரு வட்டமும் கருமுட்டைகளை குறிக்கிறது. ஒரே ஒரு கருப்பு நிற வட்டம் இருப்பின் அது சாதாரண ஆரோக்கியமான கருமுட்டை வளர்ச்சி. ஆனால் அந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது போல பல முழு வளர்ச்சியடையாத கருமுட்டைகள் இருப்பின் அதுவே PCOS எனப்படும் கருப்பை நீர்க்கட்டிகள்.


சரி இதற்கும் உடல் எடைக்கும் அல்லது இன்சுலினுக்கும் என்ன சம்பந்தம்.

தற்போதைய
ஆராய்ச்சியின் படி அதிக உடல் எடை, அன்றோஜென்கள் எனப்படும் ஆண் ஹார்மோன்களை சுரக்கிறது, அதனாலேயே ஆண்கள் போன்று மீசை, தாடி வளர்வது அல்லது ஸ்கின் டாக்ஸ் எனப்படும் மருக்கள் உண்டாவது அல்லது குரல் மாறுவது, மாத விலக்கு வராமல் இருப்பது போன்ற மாற்றங்கள் உண்டாக ஆரம்பிக்கும். உடல் எடையை பத்து சதவீதம் குறைத்தாலே அன்றோஜென் சுரப்பு கம்மியாகும் என்றும், மாதவிலக்கு திரும்பும் என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

சரி இங்கே இன்சுலின் எங்கிருந்து வந்தது?

மற்றொரு
ஆராய்ச்சியின் படி இந்த PCOS ம் இன்சுலினின் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று அறிய முடிகிறது, அதிக உடல் எடை உள்ளவர்களின் உடலில் அதிகம் சக்கரை இருப்பதாக பிட்யுட்டரி சுரப்பி நினைத்து கொண்டு அதிக இன்சுலினை சுரக்க உத்தரவிடுகிறது அந்த இன்சுலின் தொடர்விளைவாக ஆன்றோஜென்களை அதிகம் சுரக்க வழிவகை செய்து PCOS ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

சரி இந்த PCOS குணப்படுத்த என்ன செய்கிறார்கள், அதீத உடல் எடையும் , அதிக இன்சுலினும் PCOS க்கு காரணமாக அமைகின்றன என்று அறியப்படுவதால் பல நேரங்களில் சக்கரை குறைவான ஆரோக்கியமான உணவும், அதிக பழங்கள் கொண்ட உணவு முறையும் பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் மேட்போர்மின் எனப்படும் சக்கரையை கட்டுபடுத்த உதவும் மாத்திரையையும் டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனாலும் அதிக junk உணவுகளையும், empty கலோரிகளை தரும் உணவுகளையும் தவிர்த்து நிறைய காய் பழங்கள் கொண்ட உணவுகளை உண்பதும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதுவுமே இதற்க்கு ஒரே வழி.

--தொடரும்

Reference

http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0001408/

Saturday, April 9, 2011

குழந்தையின்மை ஒரு நோயா?- 2

நேற்றைய இடுகையில் குழந்தையின்மை பற்றிய பொது கருத்துக்களை பற்றி எழுதி இருந்தேன். இன்றைய இடுகையில் பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையையும் சினை முட்டை பையையும் பற்றி ஒரு சின்ன முன்னுரை.

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு இருப்பதே பெண்களின் இனப்பெருக்க உறுப்பு. கவிழ்த்த முக்கோணத்தை போன்று இருப்பது கர்ப்பப்பை, இரண்டு கைகள் போல காட்டப்பட்டு இருப்பது பால்லோப்பியன் டியுப். இரண்டு கைகளின் முடிவில் இருப்பது சினைமுட்டையை உற்பத்தி செய்யும் சினைப்பை.

ஒவ்வொரு மாதமும் சினைமுட்டை, சினைப்பையில் உருவாகி, வெடித்து, வெளியேறி, பால்லோபியன் டியுப் வழியாக மெதுவாக கர்ப்பப்பை நோக்கி நகர ஆரம்பிக்கும். சினைமுட்டை பால்லோபியன் டியுப் வந்தவுடன் அங்கிருக்கும் விந்தணுவுடன் இணைந்து கருவாக் ஆள்ளத். பிறகு கருவானது மெதுமெதுவாக கர்ப்பப்பையை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. இதற்கிடையில் கர்பப்பையானது தன்னுடைய கருப்பை சுவர்களை மெத்தை போலாக்கி கருவை தாங்கும் சக்தி கொண்டதாக மாற்றுகிறது. தற்போது கருவானது கர்பப்பை சுவர்களில் தன்னை இணைத்து கொண்டு பலசெல் கருவிலிருந்து முழுதும் வளர்ந்து குழந்தையாகும் வரை மாறும் தனது வியப்பான பயணத்தை ஆரம்பிக்கிறது.

மேலே குறிப்பிடபட்டுள்ள பல நிலைகளில் ஏதேனும் ஒரு நிலை சரிவர நடக்காவிட்டாலும் குழந்தைப்பேறு வாய்க்காது.

உதாரணமாக சினைமுட்டை முழு வளர்ச்சியடையாமல் பாதி வளர்ச்சியடைந்திருதாலோ அல்லது வெடித்து வெளியேற முடியாமல் இருந்தாலோ குழந்தைப்பேறுக்கு முதல் தடை ஆரம்பம்.

அடுத்த தடை சினைமுட்டை பால்லோபியன் டியுப் வழியாக கருப்பை நோக்கி நகர முடியாமை. இதற்க்கு முக்கிய காரணியாக இருப்பது பால்லோபியன் டியுப் அடைப்பு.

அப்படி சினைமுட்டை வெளியேறி, ஃபல்லோபியன் டியூப் வழியாக வந்து காத்திருப்பது அதிகபட்சம் ஒரு 24 மணி நேரமே, அதற்குள்ளாக விந்தணுவுடன் இணைந்தால் மட்டுமே கருவாக முடியும். அப்படி கருவாவதற்கு விந்தணுவும் சினைமுட்டையும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதாவது விந்தணுவில் இருந்து வரும் குரோமோசோமும் சினைமுட்டையில் இருந்து வரும் குரோமோசோமும் எவ்வித மரபணு சார்ந்த குறைபாடும் இல்லாமல் இருக்கவேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே உருவான கரு குழந்தையாக மாறும், மரபணு குறைபாடிருப்பின் அந்த கரு கலைந்துவிடும்.

கடைசியாக ஏற்படும் தடை கரு, கர்ப்பப்பையில் தன்னை இணைத்து கொள்ள முடியாமை. இதற்கு முக்கிய காரணியாக இருப்பது கர்ப்பப்பை தன்னை கருவை தாங்கிகொள்ளும் படி தயார் படுத்த முடியாமை அல்லது கர்ப்பபை கட்டிகள்.

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து நிகழ்வையும் கண்ட்ரோல் செய்யும் மாஸ்டர் கண்ட்ரோலராக இருப்பது பிட்யூட்டரி சுரப்பியாகும்.
எப்படி இந்த பிட்யூட்டரி சுரப்பி அனைத்தையும் கண்ட்ரோல் செய்கிறது என்பதை மேலுள்ள படத்தில் காணலாம். சினைப்பையில் இருந்து சினைமுட்டை முழுவளர்ச்சி அடைந்து வெடித்து வெளியேறுவது பிட்யூட்டரி சுரப்பி வெளியிடும் சிக்னலான FSH எனப்படும் ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்ட்ங் ஹார்மோன்னால் தான்.
அதே பிட்யூட்டரி சுரப்பி கருப்பை சுவர்களை மெத்தை போல மாற்றி கருவை கருப்பையுடன் இனைக்க வசதியாக்கும் LH எனப்படும் லூட்டியல் ஃபேஸ் ஹார்மோனை சுரக்கிறது.

சரி, இப்போது எப்படி நமது இனப்பெருக்க உறுப்புகள் வேலை செய்கிறது என்பது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நாளைய இடுகையில் எப்படி உடல் பருமனும், உணவுப்பழக்கவழக்கங்கள் மேலே விவரித்த ஒவ்வொரு நிலையையும் பாதிக்கிறது என்று காண்போம்.

--தொடரும்

Friday, April 8, 2011

குழந்தையின்மை ஒரு நோயா?- 1சென்ற சில மாதங்களாக பதிவுகள் பக்கம் வர இயலவில்லை. தற்செயலாக என்னுடைய இடுகைகள் ஸ்டேட்ஸ் பற்றி பார்த்த போது தினப்படி குறைந்தது பத்து தடவையாவது என்னுடைய முந்தய இடுகையான குழந்தையின்மைசிகிச்சை வியாபாரமாக்கபடுகிறதா? என்ற இடுகையை பலர் படித்திருப்பது அறிய முடிகிறது.

நேற்று என் அம்மாவிடம் உறவுக்காரர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த போது அதில் என் வயதொத்த சிலர் குழந்தையில்லாமல் மிகவும் சிரமப்படுவதாக அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள். எனக்கு தெரிந்தே இங்கு வசிக்கும் எங்கள் நண்பர்கள் சிலர் பல வருடங்களாக குழந்தைக்கு முயற்சி செய்து எதுவும் நடக்காமல் வாழ்க்கை வெறுத்து இருப்பதை கண்ணார கண்டிருக்கிறேன்.

முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குழந்தையின்மை பிரச்சனை இப்போது ஆங்காங்கே நிறைய காண, கேட்க முடிகிறது. நான் மட்டும் தான் இப்படி அடிக்கடி கேட்கிறேனா? இல்லை, உண்மையில் நிலவரம் அப்படித்தான் இருக்கிறதா? போன்ற கேள்விகள் எனக்குள் எழாமல் இல்லை. இருப்பினும் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு வரை, குழந்தையில்லாமல் நூற்றில் ஒருவர் இருக்கிறார் என்ற நிலைமை போய் இப்போது நூற்றில் பத்து பேர் இந்த நிலையில் இருப்பதை அறிய முடிகிறது.

ஒரு சதவீதமாக இருந்த குழந்தையின்மை இப்போது பத்து சதவீதமாக எப்படி மாறி இருக்கிறது? யார் காரணம்? அவசர வாழ்க்கைக்கும், பாஸ்ட் பூட் கலாச்சாரத்திற்கும், ஒயிட் காலர் வேலைக்கும் நாம் கொடுத்த கூலிகளா இவை? என்பது போன்ற பல கேள்விகள் என்னுள் எழுவது உண்டு.

குழந்தையின்மைக்கு ஆண்கள் சில நேரம் காரணமாக இருப்பினும், அது பெரிது படுத்தபடாமல் "பிள்ளை பெத்து போட முடியாத மலடி" என்று ஊராரால் பெண்களின் மீதே பலி போடப்படுகிறது. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆணுக்கு குறைபாடு இருந்திருக்கிறது, ஆனால் அதனை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். பின்னர் குழந்தை இல்லை என்று அந்த பெண்ணை அவர்கள் படுத்திய பாடு இருக்கிறதே அப்பப்பா! சொல்லி மாளாது. கடைசியில் தாங்கமுடியாமல் அந்த பெண் விவாகரத்து வாங்கி விட்டார். இப்போது மறு திருமணம் செய்து அவருக்கு ஒரு பெண்குழந்தை இருக்கிறது.

இது சமூகத்தில் எப்படி குழந்தையில்லாமல் இருக்கும் பெண்களை நடத்துகிறார்கள் என்பதை உணர்த்தும் இடுகை அல்ல. குழந்தையின்மைக்கு என்னென்ன காரணங்கள் அறியப்பட்டிருக்கின்றன, அவற்றை எப்படி சரி செய்கிறார்கள் அல்லது என்னென்ன மருத்துவ முறைகள் கையாள்கிறார்கள் போன்ற மருத்துவ அறிவியல் சம்பந்தமான இடுகை இது.

இதனை ஒரு தொடர் போல எழுதலாம் என்று இருக்கிறேன். இது மருத்துவ ஆலோசனை அல்ல. குழந்தையின்மை குறித்த நான் படித்த, கேட்ட, அனுபவித்த என் அறிவுக்கு எட்டிய கருத்துக்கள் மட்டுமே இவை என்பதை முன்கூட்டியே இங்கு தெரிவித்து கொள்கிறேன்.

மருத்துவ ரீதியாக பல காரணங்கள் குழந்தைஇன்மைக்கு காரணமாக இருந்தாலும் முக்கியமான காரணமாக நான் கருதுவது நமது உணவு பழக்க வழக்கங்களும், அதீத எடையும் தான். எப்படி இவை நம் உடம்பை பாதிக்கிறது, அதனை தவிர்ப்பது எப்படி என்பதை அடுத்து பார்க்கலாம்.

---தொடரும்

Saturday, March 19, 2011

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை அறிவது எப்படி?நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவரா?, இந்தியாவை அதிகம் மிஸ் செய்வதால் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வசிக்க விரும்பி அங்கு வீடு பார்ப்பவரா? எப்படி இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை கண்டுபிடிப்பது என்று குழம்புபவரா? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!

நீங்கள் ஒரு அபார்ட்மென்ட் பார்க்க செல்லும் போது கீழ்க்கண்டவற்றை பார்க்க முடிகிறதா?

 • நிறைய ஹோண்டா அல்லது டொயோட்டா கார்களை பார்க்க முடிகிறதா? அப்படியானால் அங்கு கட்டாயம் நிறைய ஆசிய மக்கள் குறிப்பாக இந்தியர்கள் வாழலாம்.
 • எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருக்கும் பள்ளிகளில் எது சிறந்த பள்ளி என்று பெயர் பெற்றிருக்கிறது என்று பாருங்கள், அதற்கு அருகில் இருக்கும் எந்த அப்பார்ட்மெண்டிலோ அல்லது குடியிருப்புகளிலோ கட்டாயம் இந்தியர்கள் இருப்பார்கள், நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு வீடு பார்க்கலாம்.
 • நீங்கள் பார்க்கும் அபார்ட்மெண்டில் டென்னிஸ் கோர்ட் அல்லது புட்பால் கிரௌண்ட் இருந்து அதில் சிலர் கிரிக்கெட் விளையாடுகிறார்களா? அப்படியானால் சந்தேகமே வேண்டாம். அது நிறைய இந்தியர்கள் வசிக்கும்அபார்ட்மென்ட் தான்.
 • நீங்கள் அபார்ட்மென்ட் ஐ சுற்றி பார்க்கும் போது சில ஆண்கள் கைலி அணிந்து கொண்டு அல்லது சில பெண்கள் நைட்டீ அணிந்து கொண்டு வாசலில் நின்று கொண்டு இருப்பதை பார்க்கிறீர்களா? அது கட்டாயம் நம் மக்கள் அதிகம் வாழும் பகுதியே.
 • ஒரு காரில் பலர் சீட் பெல்ட் கூட அணியாமல் செல்வதை காண்கிறீர்களா?, அது இந்தியர்கள் வசிக்கும் பகுதியே.

சரி இப்போது அங்கு அதிக இந்திய மக்கள் வாழ்வார்கள் என்று தெரிந்தாயிற்று..இப்போது அங்கு வீடும் பார்த்தாகி விட்டது இப்போது அங்கு எப்படி சமாளிப்பது என்று சில survival டிப்ஸ் உங்களுக்காக.

 • நீங்கள் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் அந்தந்த மொழி பேசும் மக்கள் குரூப் ஒன்று இருக்கும் அதில் ஐக்கியமாகி விடுங்கள், இல்லையேல் உங்களை அந்த மக்கள் ஒதுக்கி வைத்து விடுவர்.
 • உதாரணமாக நீங்கள் தமிழ் மொழி பேசுபவர் என்றால் தமிழ் மக்கள் குரூப் இல்தான் சேர வேண்டும், உங்கள் பக்கத்து வீட்டு காரர் வடஇந்தியராக இருந்து உங்களுக்கும் இந்தி பேச தெரிந்திருந்தாலும் அவருடன் அதிகம் பேசாதீர்கள். அப்படி பேசி நீங்கள் அவர் நண்பராகி விட்டால், நீங்கள் தமிழ் மொழி பேசும் மக்கள் க்ரூபில் இருந்து விலக்கி வைக்கப்படுவீர்கள்.
 • எப்போதும் அடுத்த வீட்டு குழந்தை என்னென்ன செய்கிறது என்று கவனமாக பார்த்து கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் அப்பொழுது தான் உங்கள்குழந்தையையும் அடுத்த வீட்டு குழந்தை செல்லும் வகுப்புகளுக்கோ, விளையாட்டுகளுக்கோ அனுப்ப முடியும்.
 • இது பெண்களுக்கு மட்டும்: அடுத்த வீட்டு பெண்கள் உங்கள் வீட்டுக்கு வந்து பேசினாலோ அல்லது போனில் பேசினாலோ எந்த வேலை இருந்தாலும் அதனைவிட்டு விட்டு மறக்காமல் பேசி விடுங்கள் இல்லையேல் நீங்கள் தலைகனம் கொண்டவர், திமிர் பிடித்தவர் என்று அனைவருக்கும் அடுத்த நாளே பறைசாற்றப்படும் அதனால் ஜாக்கிரதை.
இதெல்லாம் சில டிப்ஸ் மட்டுமே, நல்ல படியாக உங்கள் வீடு தேடும் படலமும் வீடு பார்த்த பிறகு உங்களுகென்று ஒரு குரூப் அமைந்து அமோகமாக வாழவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Friday, February 25, 2011

பறவை காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும்

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு காய்ச்சல் : பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், சிக்கன் குன்யா என வித விதமான காய்ச்சல்கள். ஆனால் இந்த காய்ச்சல் வகைகள் எல்லாம் ஒரே ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா! உண்மை தான்.
இன்ப்லுயன்சா வைரஸ் என்பதே அந்த வைரஸ் கிருமி. பொதுவாக வைரஸ் கிருமிகள், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகளை விட வித்தியாசமானவை. மனித செல்களை அடையும் வரை அவை செயல் படுவதில்லை, மனித செல்களை அடைந்தவுடன் வேகமாக தன்னை மனித செல்களுடன் இணைத்து கொண்டு தன்னை தானே படிவமெடுத்து வெளியிட்டு பெருகுகின்றன.

சரி, இன்ஃப்லுயன்ஸா என்பது ஒரு வைரஸ் கிருமி தானே, பிறகு எப்படி பல உயிரினங்களில் வித விதமான காய்ச்சல்கள் ஏற்படுத்துகிறது?
இந்த வைரஸ் கிருமி ஒரு உயிரினத்தில் வசிக்க ஆரம்பிக்கிறது என்று வைத்து கொள்ளுவோம், அது அந்த உயிரினத்தில் தன்னை நகல் எடுக்க ஆரம்பிக்கும் போது, தனக்குள்ளே சில மாற்றங்களை செய்து கொள்ளுகிறது, அதனை ஆங்கிலத்தில் மியுட்டேஷன் என்று கூறுகிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் அந்தந்த உயிரினத்திற்கு தகுந்தாற் போல அது தன்னை மாற்றிகொண்டே இருப்பதால், ஒரு நோய்-> ஒரு மருந்து என்ற முறைப்படி நம்மால் மருந்து கண்டுபிடிக்க முடிவதில்லை.
2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலை இதற்கு உதாரணமாக கூறலாம். இதனை ஏற்படுத்திய இன்ஃப்லுஎன்ஸா வைரஸ் H1N1 என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு 1918 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு H1N1 ஸ்பெயினில் ஏற்பட்டு இருந்தாலும், அப்போது இருந்த வைரஸை விட இப்போது 2009 ல் நோய் உண்டாக்கிய வைரஸ் நிறைய மாற்றங்களை தனக்குள் ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது. அதனை தவிர 2009 ல் ஏற்பட்ட பன்றிக்காய்சல் பன்றியில் இருந்து வந்திருந்தாலும், ஒரு மனிதனில் இருந்து இன்னொரு மனிதனுக்கு தாவும் சக்தி பெற்றிருந்தது.


சரி, இது எப்படி ஒரு மனிதனில் இருந்து இன்னொருவருக்கு தாவுகிறது?
காய்ச்சல் உள்ள ஒருவரிடம் இருந்து வரும் தும்மல், இருமல், சளி துப்புதல் இவற்றால் இந்த காய்ச்சல் அதிகம் பரவும் என்பதால், முடிந்த வரை நோயுற்ற ஒருவரிடம் இருந்து விலகி இருப்பது நமக்கு அந்த காய்ச்சல் வராமல் தடுக்கும். அடிக்கடி கை கழுவுவதன் மூலமும் இந்த காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.


மேலும் நாம் வசிக்கும் இடத்தில் இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதம் நம் மூக்கை உலராமல் வைத்திருந்து மூக்கில் இருக்கும் மியூக்கஸ் மூலமாக நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும் என்பதால் முடிந்த அளவு வீட்டில் ஈரப்பதம் இருக்கும் படியும் பார்த்துக்கொள்ளலாம்.


ஃப்லூ தடுப்பூசி

ஒவ்வொரு வருடமும் இந்த வகை இன்ஃப்லுயன்ஸா வைரஸ் பரவலாம் என்று ஊகித்து அதற்கு மருந்து தயாரிக்கின்றனர். அதனை இங்கு அமெரிக்காவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஃப்லு ஷாட்ஸ் என்று தடுப்பூசியாக போடுகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர் என்று அறிவதால் அவர்களுக்கு இந்த தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆனாலும் ஒரு முறை இந்த தடுப்பூசி போட்டுவிட்டால் ஒவ்வொருவருடமும் போட வேண்டும் இல்லாவிட்டால் ஃப்லூ கட்டாயம் வந்துவிடும் என்று இங்குள்ள அனைவரும் நம்புகிறார்கள்..ஆனால் உன்மை என்னவென்றால் ஃப்லூ தடுப்பு ஊசி போட்டு கொண்டாலும் பலருக்கு காய்ச்சல் வரலாம். ஏன் என்றால் தடுப்பூசி மருந்து இந்த வகை வைரஸ் பரவலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதே இதற்கு காரணம். ஆனால் இந்த இன்ஃப்லூயன்ஸா வைரஸ் இந்த வருடம் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது?, அதற்குறிய மருந்து என்ன? என்பது நோய் வந்த பிறகே கணிக்க முடியும் என்பது வருந்ததக்க உண்மை.

Tuesday, February 8, 2011

Researcher என்றொரு ஜந்து-2ஏற்கனவே என்னுடைய முந்தய சில இடுகைகளில் ஆராய்ச்சி பட்டம் பெற முயற்சி செய்யும் பலர் படும் அவஸ்தைகளை பற்றி எழுதி இருந்தேன் பகுதி 1 , பகுதி 2, அந்த அவஸ்தைகளின் தொடர்ச்சியே இந்த இடுகையும்.

நேற்று நெடுநாளைக்கு பிறகு என்னுடைய நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. என்னுடைய ஜூனியர் அவர். இந்தியாவில் இருந்து இங்கு மேல்படிப்புக்காக வந்தவர். கிட்டதட்ட ஐந்து வருட இடைவெளியில் சந்தித்தால் எனக்கு ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறி இருந்ததாக தோன்றியது. பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு பேசிகொண்டிருந்த போது "எப்போ கிராஜூவேட் ஆன? " என்று நான் கேட்டது தான் தாமதம் அவர் முகம் சுருங்கி எதோ போல ஆகி விட்டது. பின்னர் ஒருவாறு பேச்சை மாற்றி வேறு பேச்சு பேச ஆரம்பித்து விட்டோம்.

பின்னர் வேறு ஒரு நண்பர் மூலமாக நான் அறிந்தது இது தான். என்னுடைய நண்பர் படிப்பை தொடர்ந்த போது, அவருடைய பாஸ் அவருக்கு ஒரு புது உயிரினத்தை அதாவது அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாத ஒரு உயிரினத்தை அவரின் ஆராய்ச்சிக்கு கொடுத்து இருக்கிறார். இது போன்று யாரும் ஆராய்ச்சி
செய்யாத உயிரினத்தை கொடுத்து ஆராய்ச்சி செய்ய சொல்லுவது ஒரு சூதாட்டம் மாதிரி. நல்ல ரிசல்ட் வந்தால் நல்ல மதிப்பு மற்றும் நல்ல ஜேர்னலில் ஆராய்ச்சி கட்டுரை என்று எல்லாம் நல்ல படியாக நடக்கும். மாறாக ஒன்றும் வரவில்லை என்றால் எல்லாமே ஆப்பு ஆகிவிடும்.

புது உயிரினம் அதனால் நல்ல எதிர்காலம் உனக்கு இருக்கிறதுஎன்று அவருடைய பாஸ் பிரைன் வாஷ் செய்து இருக்கிறார். இவரும் நம்பி இறங்கி இருக்கிறார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட உயிரினம் செயற்கையான லேப் சூழ்நிலையில் வளர மறுக்க.அவருக்குஅதனை எப்படி லேபில் வளர வைக்க என்று ஆராயவே அவருக்கு சில வருடங்கள் பிடித்திருக்கிறது. பின்னர் புது உயிரினத்தில் நடத்தப்படும் அடிப்படை சில டெஸ்டுகள் நடத்தி முடிக்க அவருடைய ஆராய்ச்சி காலமும் முடிந்திருக்கிறது, பின்னர் ஒரு வருடம் எக்ஸ்டென்ஷன் வாங்கி அவர் தொடர்ந்திருக்கிறார், சில பல புதிய ஆராய்ச்சிகள் செய்து முடிக்கும் தருவாயில் அவர் செய்தது போன்ற அதே ஆராய்ச்சிகள் வேறொறுவர் செய்து ஜர்னலில் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறார். அதனை காரணமாக காட்டி அவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் எங்கும் வெளியிட படவில்லை.

ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்படாததால் அவருக்கு முனைவர் பட்டமும் கொடுக்கப்படவில்லை. இந்தியாவில் இருந்து ஸ்டூடண்ட் விசாவில் வந்ததால் அதுவும் முடிந்து விட்டு இருக்கிறது, இப்பொதைக்கு அவர் 5 வருடங்களுக்கு முன் எந்த நிலையில் இந்தியாவில் இருந்து வந்தாரோ அதெ போல வெறுங்கையுடன் இந்தியா திரும்ப வேண்டிய நிலை. இடையில் திருமணம் வேறு.

ஒரு ஆராய்ச்சி மாணவன் நல்ல படியாக தீசிஸ் எழுதி பட்டம் பெறுவது என்பது முழுக்க முழுக்க அவனது ப்ரோபாசர் கையில் இருக்கிறது. அவர் நல்லவராக அமைந்து விட்டால் எல்லாம் நல்லபடியாக இருக்கும், இல்லாவிட்டாலோ, எல்லாம் சர்வநாசம் ஆகிவிடும்.

Wednesday, February 2, 2011

'Salt' - மகா குப்பை
ஒரு படத்தை ரொம்ப நாளா பார்க்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்..எல்லாரும் அந்த படத்தை பத்தி ஆகா, ஓகோ, சான்சே இல்லை என்று ஏத்தி வேற விட்டு இருந்தார்கள். தியேட்டர் போயி பார்க்க முடியல, சரி, DVD வரட்டும் வீட்டிலேயே பார்க்கலாம்னு முடிவு பண்ணி வெயிட் பண்ணி DVD வாங்கி ஆசை ஆசையா படத்தை பார்த்தா, சாமி!! நம்ம ஊரு விஜயகாந்த், அர்ஜுன், விஜய் வகையறா படங்கள் கூட தேவலைப்பா...அப்படின்னு தோனுற அளவு ஒரு படமுங்க இந்த 'Salt', இதை போய் எப்படி மக்கள் நல்லா இருக்குன்னு சொன்னாங்கன்னு தெரியலப்பா.

அதில வர்ற ஆன்ஜெலினா ஜோலி அம்மா இருக்காங்க பாருங்க..நம்ம ஊரு தனுஷ் மாதிரி உடம்பை வச்சுகிட்டு என்னம்மா தாவி தாவி சண்டை போடுராங்க தெரியுமாப்பா! அதை விட நம்ம ஹீரோ எல்லாம் பண்ணுவாங்க பாருங்க ஒரு லாரி ல இருந்து இன்னொரு லாரிக்கு அப்படியே ரன்னிங்க ல தாவுவாங்களே, அந்த மாதிரி ஜிவ் ஜிவ் ன்னு ஹை வேஸ்ல தாவுதுப்பா அந்த அம்மா!

அதை விட சில நேரங்கள்ல அந்த அம்மாவை ரோட்ல ஓட விட்டு இருக்காங்க அது ஓடுறதை பார்த்தா என்னவோ உடம்புக்கு முடியாம இருக்கிற ஒரு பாட்டிய ஒடுங்கம்மா அப்படின்னு படுத்தினா எப்படி இருக்கும் அப்படி இருக்கு.

இதில என்ன ஜோக் ன்னா அந்த அம்மா எல்லா இடத்திலையும் சும்மா 'சர்' சர்' ன்னு வந்து சுட்டுட்டோ/கொலை செஞ்சுட்டு போகுமாம், போலிசு, CIA, FBI, அப்புறம் இவங்க secret agency எல்லாம் லொலிபொப் சாப்பிட்டு இருப்பாய்ங்களாம், யாருக்கையா காது குத்துறீங்க. அதுவும் அந்தம்மா வைட் ஹவுஸ்க்கு எலிவேட்டேர் மேல இருந்து சும்மா சிட்டாட்டம் பறந்து வரும் பாருங்க சூப்பர் சீனுப்பா அது, ஐயோ! ஐயோ, தலையில அடிச்சிக்க வேண்டியது தான்.

கதையாவது கொஞ்சம் நல்லா இருக்கா!..அதுவும் இல்ல...அதே ரஷ்ய உளவாளியாம்...டபுள் ஏஜெண்டாம்...அய்யா!!..இதெல்லாம் நாங்க நிறைய ஜேம்ஸ்பாண்டு படங்கள்ள நிறைய பார்த்தாச்சுங்கோ!!

இதுனால சகலமானவர்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்னா, நம்ம ஊரு மக்களான விஜயகாந்த் படங்கள் எல்லாம் குப்பை, ஹோலிவூட் படங்கள் தான் சூப்பர்ன்னு நினச்சுட்டு, " We wont see tamil pictures, we only see english pictures" அப்படின்னு பீட்டர் விட்டுட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு வார்த்தை..”இங்கிலீஷ் ல யும் இந்த சால்ட் மாதிரி நிறைய குப்பை இருக்குதுங்கோ!”

Thursday, January 27, 2011

எல்லாம் பயமயம்!

`தெனாலி படத்தில் கமல் ஒரு பயந்தாங்குளியாக நடித்திருப்பார். ஜெயராமை சந்திக்கும் முதல் காட்சியிலேயே தனக்கு எதை எதை பார்த்தால் பயம் என்று ஒரு லிஸ்ட் வாசிப்பார். அந்த லிஸ்ட் இல் புல் முதல் வெடிகுண்டு வரை இருக்கும்..

உண்மையில் ஒருவருக்கு இப்படி பய உணர்வு இருக்குமா என்று நான் யோசித்தது உண்டு. ஆனால் உன்மையில் மனிதர்களுக்கு இருக்கும் பய லிஸ்ட் மிக பெரியது என்று தோன்றுகிறது.
உதாரணமாக..
 1. முடி கொட்டிட்டா என்னாவது?
 2. பரு அல்லது சுருக்கம் வந்தால் முகம் அசிங்கமாயிடுமோ?
 3. லேட்டஸ்ட் மாடல் பொண்ணை/பையனை போல டிரஸ்/ செல் போன்/பைக்வாங்காட்டி யாரும் நம்மை பார்க்க/மதிக்க மாட்டாங்களோ?
 4. அந்த பொண்ணு/பையன் என்னை கிண்டல்/சைட் அடித்தால்/அடிக்காட்டி என்ன செய்வது?
 5. வாத்தியார் எல்லார் முன்னாடியும் திட்டினால் என்னாவது?
 6. ப்ரோமோஷன் கிடைக்கா விட்டால் என்னாவது?
 7. மெமோ கிடைத்து விட்டால் என்ன செய்வது?
 8. வேலையை விட்டு தூக்கிவிட்டால் என்ன செய்வது?
 9. பதவி போயிட்டா என்னாவது?
 10. பக்கத்து வீட்டுக்காரன்/காரி என்னை பத்தி என்னா நினைப்பா?

இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே இன்னும் பெரிய லிஸ்ட் கட்டாயம் இருக்கும்

உண்மையில் நமது சமுதாயம் சிறுவயது முதலே நமக்கு பயங்காட்டியே ஒழுக்கத்தை சொல்லி கொடுத்து இருக்கிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக "
பூச்சாண்டி பிடிச்சிட்டு போயிடுவான்", "பிள்ளை பிடிகிறவன் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்", "சரியா சாப்பிடாட்டி பூனை வந்துடும்"என்று குழந்தையை ஒழுக்கமாக வளர்க்க பயத்தை உண்டாக்குகிறோம்.

சிறுவர்கள் ஆன பிறகு இது போன்று எதுவும் கிடையாது என்பதில்லை, அப்பொழுது வேறு மாதிரியான பயஉணர்வு ஏற்படுத்தி ஒழுக்கத்தை போதிக்கிறோம். உதாரணமாக, "ஒழுங்கா சாப்பிடாட்டி TV கிடையாது", "ஒழுங்கா ஹோம்வொர்க் பண்ணாட்டி கிரிக்கெட்/கேம் கிடையாது", "ஒழுங்கா படிச்சு first ரேங்க் வராட்டி vacation கட் " போன்றவை.

இதனை போன்ற பயத்தின் மூலம் ஒழுக்கம் என்பது பெரியவர்கள் ஆன பிறகும் தொடர்கிறது. உதாரணமாக "தப்பு செய்தால் போலீஸ் பிடிக்கும்", "பாவம் செய்தால் நரகத்துக்கு போவோம்", "படிச்சு, பாஸ் செய்யாட்டி வேலை கிடைக்காது" என்பது போன்ற சில.

அரபு நாடுகளில் கடுமையான தண்டனைகள் தரப்படுவதால் தான் அங்கு குற்றம் நடப்பதும் குறைவாக இருக்கிறது. அதனாலேயே தமிழ் திரைஉலகில் அந்த காலத்து வாத்தியார் படங்களில் இருந்து இந்த காலத்து அன்னியன் வரை பல படங்கள் இதனை வலியுறுத்துகின்றன.

தண்டனை கிடைக்கும் என்று தெரிந்துகொண்டே குற்றம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் இருக்கும் இந்த நாட்களில் ஒருவர் ஒரு கிராமத்துக்கு வந்து “நான் 10 தங்க பார்களை உங்கள் கிராமத்துக்கு தருகிறேன், போலிஸ் எல்லாம் பிடிக்காது, யாரேனும் ஒருவரை கொலை செய்ய முடியுமா?” என்று கேட்டால் அந்த கிராமத்து மக்கள் என்ன செய்வார்கள், கொலை செய்வார்களா? இல்லை பணத்துக்காக பாவம் செய்யாமல் இருப்பார்களா?

என்ன இது லூசு தனமா இருக்கு என்று நினைகிரீர்களா? இப்படி ஒரு சூழலை மையமாக கொண்டது தான் நான் இப்பொது வாசித்த Paulo Cohelco வின் புத்தகமான The Devil and miss Prym இல் கேட்கப்படும் கேள்வி இது..என்ன செய்வார்கள் அந்த கிராம மக்கள் நீங்களே சொல்லுங்கள்.