Sunday, December 7, 2014

வளர்சிதைமாற்றம்



ஒவ்வொரு வருட முடிவின் போதும் இந்த வருடம் என்ன செய்தோம், எப்படி இருந்தது, நல்லவை கெட்டவை என்ன என்ன என்று அனைவரும் அசை போடுவதுண்டு. இது என்னுடைய இந்த வருட வளர்சிதைமாற்றங்கள் பற்றிய சுயசொறிதல் பதிவு.

இந்த வருடம் நிறைய பாடங்களை எனக்கு கற்று கொடுத்து இருக்கிறது. நிறைய படிக்க சிந்திக்க வாய்ப்பை தந்தது. நிறைய மாற்றங்கள் என்னுள்ளே. எது சரி எது தப்பு என்று பிரித்தறியும் பக்குவம் தந்து இருக்கிறது. ஒன்று மட்டும் உண்மை என்று உணர்ந்து இருக்கிறேன். எந்த ஒரு விசயத்தை செய்யும் போதும் உங்கள் மனசாட்சி உங்களை கொல்லாமல் இருந்தால் நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று பொருள். மனசாட்சியை விட சரியான ஆசான் இல்லை என்பது நான் கண்ட உண்மை.


என் தனிப்பட்ட விருப்பங்களில் நிறைய மாற்றங்கள்.  உதாரணமாக இசையில் இளையராஜா மட்டும்  கேட்டு கொண்டு இருந்த நான் இப்போது உலக இசை பக்கம் திரும்பி இருக்கிறேன். வித விதமான இசை மனதை கவர்கிறது. "Adele" அவர்களின் குரலில் "Someone like you", மனதை மயக்கி இருக்கிறது.

நிறைய புது புத்தகங்கள் படிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. வெறும் கதை புத்தகங்கள் படித்தததில் இருந்து இப்போது விலகி நிறைய சுயசரிதை படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். எனது துறையை சேர்ந்ததலோ என்னவோ  "The Immortal Life of Henrietta Lacks" மிகவும் பிடித்து மனதை கனக்க வைத்தது. "Steve Jobs" அவர்களின் சுயசரிதை உத்வேகம் அளித்து இருக்கிறது.

நிறைய ஆங்கில படங்கள் பார்த்து இருக்கிறேன். "Gone girl " மற்றும் "Wild" பிடித்திருந்தது. ப்போதும் தொலைகாட்சி பார்ப்பதில்லை நான். சிலரிடம் "நாதஸ்வரமா , எங்க கச்சேரி? " என்று அவர்கள் நாதஸ்வரம் தொடர் பற்றி பேசும் போது கேட்டு பல்பு வாங்கி இருக்கிறேன். ஆயினும் சில நேரங்களில் அம்மாவுடன் சேர்ந்து தமிழில் மகாபாரதம் பார்க்க நேர்ந்ததுண்டு.
ஆயினும் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டான Soccer உலக கோப்பையை விளையாட்டை ஒருபோட்டி விடாமல் தொலைகாட்சியில் பார்த்து பெட் கட்டி கடைசியில் என்னுடைய பிடித்த நாடான ஜேர்மனி வெற்றிவாகை சூடுவதை பார்த்து ஆனந்த பட்ட நிமிடங்கள் மறக்க முடியாதவை.

வேலையை பொருத்தவரை, புது  துறையை தேர்தெடுத்து அதை கற்றுக்கொண்டு இருக்கிறேன். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வெறியாகி இருக்கிறது. பார்க்கலாம்.

ஒரு சில நட்புகளை சந்திக்கவும் ஒரு சிலரை இழக்கவும் நேர்ந்திருக்கிறது. எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்ளும் பக்குவம் வந்து இருக்கிறது.
பதிவுலகை பொறுத்தவரை , நிறைய பதிவுகள்  எழுதவில்லை என்றாலும் எழுதிய ஒரு சில பதிவுகளும் மன நிறைவை தந்து இருக்கின்றன.

நிறைய சந்தோசமும் நிறைய மனவருத்தமும் இந்த வருடம் தந்து இருந்தாலும் என்னை செதுக்கி ஒரு வளர்சிதைமாற்றத்தை இந்த ஆண்டு உருவாக்கி இருக்கிறது. வரும் புத்தாண்டில் எல்லாம் நன்மையாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் கொஞ்சம் சீ க்கிரமே புத்தாண்டுவாழ்த்துக்கள்.