Sunday, April 24, 2011

குழந்தையின்மை ஒரு நோயா? - 3 -அதிக எடை ஆபத்தானது

கையாஸ் தியரி என்று உண்டு, அதன்படி "உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அடுத்த நிகழ்வுடன் தொடர்புடையது" என்று அது கூறும். மற்ற விசயங்களில் அது உண்மையோ இல்லையோ ஆனால் மனித உடலை பொறுத்தவரை அது மிக மிக சரி என்றே தோன்றும். உதாரணமாக குழந்தையின்மைக்கான மிக முக்கிய காரணம் கருமுட்டை சரிவர வளர்ச்சியடையாமல் பாதியிலேயே நின்று போகும் கருப்பை நீர்க்கட்டி பாலி சிஸ்டிக் ஓவரீஸ் PCOS எனப்படும் ஒரு நிகழ்வுக்கும் அதிக எடை மற்றும் இன்சுலின்க்கும் இருக்கும் தொடர்பை கூறலாம்.

சரி PCOS என்றால் என்ன என்று பார்போம்.

நாம் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல கருமுட்டை முழு வளர்ச்சியடைவதே குழந்தைபேற்றுக்கான முதற்படி, அது சரியாக நடக்கவில்லை என்றாலே முதல் தடை ஆரம்பம்.


ஓவ்வொரு மாதமும் மாதவிலக்கு முடிந்தவுடன் பெண்களுக்கான ஹார்மோன்களான எஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்ரோன் போன்றவற்றை சுரந்து அடுத்த வுலேஷேன் நடக்க சிக்னல் அனுப்புகிறது. இந்த ஹார்மோன்கள் தவிர ஆண்களிடம் இருக்கும் ஹார்மோன்களான ஆன்றோஜென்களும் பெண்களிடம் சிறிதளவு சுரக்கின்றன.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்று படித்திருப்போம், அது தான் PCOS விசயத்தில் நடக்கிறது, எப்போது பெண்களுக்கான ஹார்மோன்களை சுரக்க உத்தரவிடும் பிட்யுட்டரி சுரப்பி மிக மிக சிறிய அளவில் தேவைப்படும் ஆண்களுக்கான ஹார்மோன்களை அதிகம் சுரக்க உத்தரவிட்டால் அங்கு ஹார்மோன் சீரின்மை நடக்கிறது. இந்த ஆன்றோஜென் கருமுட்டை முழு வளர்ச்சியடைவதை தடுக்கிறது. அடுத்து பிட்யுட்டரி சுரப்பி FSH எனப்படும் பாலிகுல் ஸ்டிமுலேடிங் ஹார்மோனை அதிகம் சுரந்து, ஒரே ஒரு கருமுட்டை வளர்ச்சியடைவதை ஊக்குவிக்காமல் பல பாலி சிஸ்ட் அதாவது நீர்கட்டிகளை உருவாக்குகிறது. விளைவு, கருமுட்டை வளர்ச்சியடையாமை, குழந்தையின்மை.

மேலே காட்டப்பட்டுள்ளது ஒரு PCOS உள்ள பெண்ணின் கருப்பை ultrasound படம். கருப்பு நிறத்தில் இருக்கும் ஓவ்வொரு வட்டமும் கருமுட்டைகளை குறிக்கிறது. ஒரே ஒரு கருப்பு நிற வட்டம் இருப்பின் அது சாதாரண ஆரோக்கியமான கருமுட்டை வளர்ச்சி. ஆனால் அந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது போல பல முழு வளர்ச்சியடையாத கருமுட்டைகள் இருப்பின் அதுவே PCOS எனப்படும் கருப்பை நீர்க்கட்டிகள்.


சரி இதற்கும் உடல் எடைக்கும் அல்லது இன்சுலினுக்கும் என்ன சம்பந்தம்.

தற்போதைய
ஆராய்ச்சியின் படி அதிக உடல் எடை, அன்றோஜென்கள் எனப்படும் ஆண் ஹார்மோன்களை சுரக்கிறது, அதனாலேயே ஆண்கள் போன்று மீசை, தாடி வளர்வது அல்லது ஸ்கின் டாக்ஸ் எனப்படும் மருக்கள் உண்டாவது அல்லது குரல் மாறுவது, மாத விலக்கு வராமல் இருப்பது போன்ற மாற்றங்கள் உண்டாக ஆரம்பிக்கும். உடல் எடையை பத்து சதவீதம் குறைத்தாலே அன்றோஜென் சுரப்பு கம்மியாகும் என்றும், மாதவிலக்கு திரும்பும் என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

சரி இங்கே இன்சுலின் எங்கிருந்து வந்தது?

மற்றொரு
ஆராய்ச்சியின் படி இந்த PCOS ம் இன்சுலினின் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று அறிய முடிகிறது, அதிக உடல் எடை உள்ளவர்களின் உடலில் அதிகம் சக்கரை இருப்பதாக பிட்யுட்டரி சுரப்பி நினைத்து கொண்டு அதிக இன்சுலினை சுரக்க உத்தரவிடுகிறது அந்த இன்சுலின் தொடர்விளைவாக ஆன்றோஜென்களை அதிகம் சுரக்க வழிவகை செய்து PCOS ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

சரி இந்த PCOS குணப்படுத்த என்ன செய்கிறார்கள், அதீத உடல் எடையும் , அதிக இன்சுலினும் PCOS க்கு காரணமாக அமைகின்றன என்று அறியப்படுவதால் பல நேரங்களில் சக்கரை குறைவான ஆரோக்கியமான உணவும், அதிக பழங்கள் கொண்ட உணவு முறையும் பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் மேட்போர்மின் எனப்படும் சக்கரையை கட்டுபடுத்த உதவும் மாத்திரையையும் டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனாலும் அதிக junk உணவுகளையும், empty கலோரிகளை தரும் உணவுகளையும் தவிர்த்து நிறைய காய் பழங்கள் கொண்ட உணவுகளை உண்பதும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதுவுமே இதற்க்கு ஒரே வழி.

--தொடரும்

Reference

http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0001408/

Saturday, April 9, 2011

குழந்தையின்மை ஒரு நோயா?- 2

நேற்றைய இடுகையில் குழந்தையின்மை பற்றிய பொது கருத்துக்களை பற்றி எழுதி இருந்தேன். இன்றைய இடுகையில் பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையையும் சினை முட்டை பையையும் பற்றி ஒரு சின்ன முன்னுரை.

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு இருப்பதே பெண்களின் இனப்பெருக்க உறுப்பு. கவிழ்த்த முக்கோணத்தை போன்று இருப்பது கர்ப்பப்பை, இரண்டு கைகள் போல காட்டப்பட்டு இருப்பது பால்லோப்பியன் டியுப். இரண்டு கைகளின் முடிவில் இருப்பது சினைமுட்டையை உற்பத்தி செய்யும் சினைப்பை.

ஒவ்வொரு மாதமும் சினைமுட்டை, சினைப்பையில் உருவாகி, வெடித்து, வெளியேறி, பால்லோபியன் டியுப் வழியாக மெதுவாக கர்ப்பப்பை நோக்கி நகர ஆரம்பிக்கும். சினைமுட்டை பால்லோபியன் டியுப் வந்தவுடன் அங்கிருக்கும் விந்தணுவுடன் இணைந்து கருவாக் ஆள்ளத். பிறகு கருவானது மெதுமெதுவாக கர்ப்பப்பையை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. இதற்கிடையில் கர்பப்பையானது தன்னுடைய கருப்பை சுவர்களை மெத்தை போலாக்கி கருவை தாங்கும் சக்தி கொண்டதாக மாற்றுகிறது. தற்போது கருவானது கர்பப்பை சுவர்களில் தன்னை இணைத்து கொண்டு பலசெல் கருவிலிருந்து முழுதும் வளர்ந்து குழந்தையாகும் வரை மாறும் தனது வியப்பான பயணத்தை ஆரம்பிக்கிறது.

மேலே குறிப்பிடபட்டுள்ள பல நிலைகளில் ஏதேனும் ஒரு நிலை சரிவர நடக்காவிட்டாலும் குழந்தைப்பேறு வாய்க்காது.

உதாரணமாக சினைமுட்டை முழு வளர்ச்சியடையாமல் பாதி வளர்ச்சியடைந்திருதாலோ அல்லது வெடித்து வெளியேற முடியாமல் இருந்தாலோ குழந்தைப்பேறுக்கு முதல் தடை ஆரம்பம்.

அடுத்த தடை சினைமுட்டை பால்லோபியன் டியுப் வழியாக கருப்பை நோக்கி நகர முடியாமை. இதற்க்கு முக்கிய காரணியாக இருப்பது பால்லோபியன் டியுப் அடைப்பு.

அப்படி சினைமுட்டை வெளியேறி, ஃபல்லோபியன் டியூப் வழியாக வந்து காத்திருப்பது அதிகபட்சம் ஒரு 24 மணி நேரமே, அதற்குள்ளாக விந்தணுவுடன் இணைந்தால் மட்டுமே கருவாக முடியும். அப்படி கருவாவதற்கு விந்தணுவும் சினைமுட்டையும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதாவது விந்தணுவில் இருந்து வரும் குரோமோசோமும் சினைமுட்டையில் இருந்து வரும் குரோமோசோமும் எவ்வித மரபணு சார்ந்த குறைபாடும் இல்லாமல் இருக்கவேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே உருவான கரு குழந்தையாக மாறும், மரபணு குறைபாடிருப்பின் அந்த கரு கலைந்துவிடும்.

கடைசியாக ஏற்படும் தடை கரு, கர்ப்பப்பையில் தன்னை இணைத்து கொள்ள முடியாமை. இதற்கு முக்கிய காரணியாக இருப்பது கர்ப்பப்பை தன்னை கருவை தாங்கிகொள்ளும் படி தயார் படுத்த முடியாமை அல்லது கர்ப்பபை கட்டிகள்.

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து நிகழ்வையும் கண்ட்ரோல் செய்யும் மாஸ்டர் கண்ட்ரோலராக இருப்பது பிட்யூட்டரி சுரப்பியாகும்.
எப்படி இந்த பிட்யூட்டரி சுரப்பி அனைத்தையும் கண்ட்ரோல் செய்கிறது என்பதை மேலுள்ள படத்தில் காணலாம். சினைப்பையில் இருந்து சினைமுட்டை முழுவளர்ச்சி அடைந்து வெடித்து வெளியேறுவது பிட்யூட்டரி சுரப்பி வெளியிடும் சிக்னலான FSH எனப்படும் ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்ட்ங் ஹார்மோன்னால் தான்.
அதே பிட்யூட்டரி சுரப்பி கருப்பை சுவர்களை மெத்தை போல மாற்றி கருவை கருப்பையுடன் இனைக்க வசதியாக்கும் LH எனப்படும் லூட்டியல் ஃபேஸ் ஹார்மோனை சுரக்கிறது.

சரி, இப்போது எப்படி நமது இனப்பெருக்க உறுப்புகள் வேலை செய்கிறது என்பது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நாளைய இடுகையில் எப்படி உடல் பருமனும், உணவுப்பழக்கவழக்கங்கள் மேலே விவரித்த ஒவ்வொரு நிலையையும் பாதிக்கிறது என்று காண்போம்.

--தொடரும்

Friday, April 8, 2011

குழந்தையின்மை ஒரு நோயா?- 1சென்ற சில மாதங்களாக பதிவுகள் பக்கம் வர இயலவில்லை. தற்செயலாக என்னுடைய இடுகைகள் ஸ்டேட்ஸ் பற்றி பார்த்த போது தினப்படி குறைந்தது பத்து தடவையாவது என்னுடைய முந்தய இடுகையான குழந்தையின்மைசிகிச்சை வியாபாரமாக்கபடுகிறதா? என்ற இடுகையை பலர் படித்திருப்பது அறிய முடிகிறது.

நேற்று என் அம்மாவிடம் உறவுக்காரர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த போது அதில் என் வயதொத்த சிலர் குழந்தையில்லாமல் மிகவும் சிரமப்படுவதாக அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள். எனக்கு தெரிந்தே இங்கு வசிக்கும் எங்கள் நண்பர்கள் சிலர் பல வருடங்களாக குழந்தைக்கு முயற்சி செய்து எதுவும் நடக்காமல் வாழ்க்கை வெறுத்து இருப்பதை கண்ணார கண்டிருக்கிறேன்.

முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குழந்தையின்மை பிரச்சனை இப்போது ஆங்காங்கே நிறைய காண, கேட்க முடிகிறது. நான் மட்டும் தான் இப்படி அடிக்கடி கேட்கிறேனா? இல்லை, உண்மையில் நிலவரம் அப்படித்தான் இருக்கிறதா? போன்ற கேள்விகள் எனக்குள் எழாமல் இல்லை. இருப்பினும் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு வரை, குழந்தையில்லாமல் நூற்றில் ஒருவர் இருக்கிறார் என்ற நிலைமை போய் இப்போது நூற்றில் பத்து பேர் இந்த நிலையில் இருப்பதை அறிய முடிகிறது.

ஒரு சதவீதமாக இருந்த குழந்தையின்மை இப்போது பத்து சதவீதமாக எப்படி மாறி இருக்கிறது? யார் காரணம்? அவசர வாழ்க்கைக்கும், பாஸ்ட் பூட் கலாச்சாரத்திற்கும், ஒயிட் காலர் வேலைக்கும் நாம் கொடுத்த கூலிகளா இவை? என்பது போன்ற பல கேள்விகள் என்னுள் எழுவது உண்டு.

குழந்தையின்மைக்கு ஆண்கள் சில நேரம் காரணமாக இருப்பினும், அது பெரிது படுத்தபடாமல் "பிள்ளை பெத்து போட முடியாத மலடி" என்று ஊராரால் பெண்களின் மீதே பலி போடப்படுகிறது. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆணுக்கு குறைபாடு இருந்திருக்கிறது, ஆனால் அதனை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். பின்னர் குழந்தை இல்லை என்று அந்த பெண்ணை அவர்கள் படுத்திய பாடு இருக்கிறதே அப்பப்பா! சொல்லி மாளாது. கடைசியில் தாங்கமுடியாமல் அந்த பெண் விவாகரத்து வாங்கி விட்டார். இப்போது மறு திருமணம் செய்து அவருக்கு ஒரு பெண்குழந்தை இருக்கிறது.

இது சமூகத்தில் எப்படி குழந்தையில்லாமல் இருக்கும் பெண்களை நடத்துகிறார்கள் என்பதை உணர்த்தும் இடுகை அல்ல. குழந்தையின்மைக்கு என்னென்ன காரணங்கள் அறியப்பட்டிருக்கின்றன, அவற்றை எப்படி சரி செய்கிறார்கள் அல்லது என்னென்ன மருத்துவ முறைகள் கையாள்கிறார்கள் போன்ற மருத்துவ அறிவியல் சம்பந்தமான இடுகை இது.

இதனை ஒரு தொடர் போல எழுதலாம் என்று இருக்கிறேன். இது மருத்துவ ஆலோசனை அல்ல. குழந்தையின்மை குறித்த நான் படித்த, கேட்ட, அனுபவித்த என் அறிவுக்கு எட்டிய கருத்துக்கள் மட்டுமே இவை என்பதை முன்கூட்டியே இங்கு தெரிவித்து கொள்கிறேன்.

மருத்துவ ரீதியாக பல காரணங்கள் குழந்தைஇன்மைக்கு காரணமாக இருந்தாலும் முக்கியமான காரணமாக நான் கருதுவது நமது உணவு பழக்க வழக்கங்களும், அதீத எடையும் தான். எப்படி இவை நம் உடம்பை பாதிக்கிறது, அதனை தவிர்ப்பது எப்படி என்பதை அடுத்து பார்க்கலாம்.

---தொடரும்