Tuesday, February 24, 2015

ஒரு வருட கால கணக்கு -ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி - 3 ?


ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி பகுதி  1

ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி பகுதி  2

கணவன் மனைவிக்குள் சண்டை அல்லது ஆபிசில் மேனேஜர் கடுப்படிக்கிறார் அல்லது   நமக்கு நெருங்கிய ஒருவர் தவறு செய்து விட்டார் அல்லது ஒரு வாய்ப்பை தவற விட்டுவிட்டோம் அல்லது  பர்ஸ்/போன்  தொலைந்து விட்டது, கால் சுளுக்கி விட்டது அல்லது உடைந்து விட்டது அல்லது ஒருவர் ஏமாற்றி விட்டார்  ....இப்படி பல பல விஷயங்கள் நமக்கு பெரிய தலை போகிற விசயமாக இருந்து ஸ்ட்ரெஸ் கொடுக்கும்.

ஆனால் தற்போது பெரிய விசயமாக தெரியும் பல ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெரிய விசயமாக இருக்காது அல்லது காலத்தின் ஓட்டத்தில் ம ற /றை ந்து  விடும்.

அதனால் எந்த ஒரு விசயத்தையும்  ரத்த கொதிப்பு வரும்வரை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக யோசிக்காமல் "இன்றிலிருந்து ஒரு வருட காலத்தில் இந்த நினைப்பு இருக்குமா" என்று நினைத்து பாருங்கள்.

உங்கள் மேனேஜரிடம் நீங்கள் இன்று வாங்கிய திட்டு , அல்லது உங்களின் குழந்தை அல்லது நெருக்கமானவர் செய்த தவறு ஒரு வருடம் கழித்து நினைவில் இருக்குமா உங்களுக்கு? யோசியுங்கள். பர்ஸ் தொலைந்தது, போன் தொலைந்தது, கால் சுளுக்கு இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உதாரணமாக ஒரு வாரம்/ஒரு மாதம்/ சில மாதங்கள் , பெரிய விசயமாக இருக்கும் இருக்கும் பின்னர் அதனை பற்றி நினைவாவது இருக்குமா என்று யோசியுங்கள்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு உப்பு சப்பிலாமல் போக கூடிய விசயங்களை நினைத்து இப்போது ஸ்ட்ரெஸ் ஆகி என்ன பயன்.  பெரும்பாலான நம்முடைய ஸ்ட்ரெஸ்கள் இப்படி யோசித்தால் மறைந்து போகும்.


என்னுடைய சொந்த அனுபவத்தில் கண்டது இது , போன வருடம் பெரிய விசயமாக தெரிந்த பல இப்போது பெரிய விசயமாக தெரிவதில்லை. ஒரு வேலை தான் வாழ்க்கை என்று நினைத்திருந்தேன், ஆனால் இப்போது இது இல்லாவிட்டால் மற்றொன்று என்ற தோன்றுகிறது . மிகவும் முக்கியமான நபர் என்று நினைத்த பலர் இப்போது முக்கியமானவராக தெரிவதில்லை. காலம் எல்லாவற்றையும் மாற்றி விடும்.

ஸ்ட்ரெஸ் ஆகி ஒரு விஷயத்தை யோசிக்கும் போது தொடர்ச்சியாக அனைத்து நெகடிவ் விசயங்களும் நமக்கு தோன்ற ஆரம்பிக்கும். இதனை ஆங்கிலத்தில் "snowball effect " என்பர். அதுவும் சில நேரங்களில் இரவில் திடீரென்று ஒருவரை போனில் அழைக்க வேண்டும் என்று நினைப்பு வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், உடனே மனம் அதோடு நின்றுவிடாமல் அதனை தொடர்ந்து அந்த நபரை பற்றிய அனைத்தும் ஞாபகம் வரும், பின்னர் அது மற்ற விசயங்களுக்கு தாவும், பின்னர் இது தொடர்கதையாகி முடிவில் தூக்கம் இல்லாமல் ஸ்ட்ரெஸ் ஆகி அடுத்த நாள் தூங்கி வழிவோம். அதனால் எப்போதும் எந்த ஒரு விசயத்தையும் அந்த விசயத்துடன் நிறுத்தி ஒரு புல் ஸ்டாப் வைத்து விடுங்கள். அல்லது முளையிலையே அந்த நினைப்பை கிள்ளி விட்டு அடுத்த வேலைலையை பாருங்கள். என்னுடைய உதாரண படி, ஒரு சிறு பேப்பரில் "அடுத்த நாள் இவரை போனில் அழைக்க வேண்டும்" என்று எழுதி வைத்து விட்டு தூங்கி விடுங்கள். அதனால் நீங்கள் மறந்தும் போக மாட்டீர்கள், அதே சமயம் snow ball effect இல் இருந்தும் தப்பித்து கொள்ளலாம்.

நன்றி

Sunday, February 22, 2015

Kumon, Abacus, பியானோ... அப்பப்பா முடியல!


எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு அமெரிக்கா குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுடன் முகுந்த் விளையாட சென்றிருந்தான். அப்போது அந்த அம்மா 

"How come Indian students excel in Science and Math but not in Arts?, why do asians push their kids so much in to academics?" என்று. 

நான் இதை பற்றி இதுநாள் வரை யோசித்ததில்லை என்பதால் அவர்கள் கேட்ட பின் அந்த கேள்வி சரி என்றே தோன்றியது. 

இங்குள்ள பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் அறிவியலிலும், கணக்கிலும் நன்றாக score செய்கிறார்கள். Reading, Art இவைகள் பக்கம் அவர்கள் அதிகம் செல்வதில்லை. ஆனால் அமெரிக்க மாணவர்களோ நெறைய Reading, Art போன்றவற்றை பாடமாக எடுக்கிறார்கள். 

இங்கு இருக்கும் பள்ளிகள் அனைத்தும் public schools, அதாவது நம்மூர் அரசு பள்ளிகள் போன்றவை. இங்கு பள்ளி படிப்பு இலவசம் என்பதால் பெரும்பாலோனோர் தங்கள் பிள்ளைகளை இதில் தான் சேர்க்கிறார்கள். இங்கு இருக்கும் private schools எல்லாம் அதிக கட்டணம் வசூலிப்பவை என்பதால் அங்கு பிள்ளைகளை அனுப்புவது குறைவு.

மேலும் இங்குள்ள பள்ளிகளில் நல்ல ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளுக்கு எல்லாம் demand அதிகம் இருக்கும். பள்ளி Admission அவரவர் இருக்கும் இடத்தை பொறுத்தது. ஒருவர் நல்ல பள்ளி இருக்கும் area வில் உள்ளார் என்றால் அவர்களுக்கு அந்த பள்ளியில் admission உண்டு. அதனால் நல்ல பள்ளி உள்ள area களில் எல்லாம் வீடு வாங்குவது, அல்லது வீடு வாடகைக்கு எடுப்பதற்கு அதிகம் செலவாகும்.

இங்குள்ள இந்தியர்களில் பெரும்பாலோனோர் நல்ல பள்ளிகள் இருக்கும் பகுதியில் வாழ்வதால், இந்திய சூழ்நிலை போல அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள பிள்ளைகளுக்குள் போட்டி மனப்பான்மை உருவாக்கபடுகிறது . 

இந்தியாவில் நெறைய வீடுகளில் அடுத்த வீட்டு பிள்ளைகளை காட்டி ஒரு comparison நடக்கும். அதே போல இங்கும் நெறைய வீடுகளில் நடக்கிறது.

"அடுத்த வீட்டு பிள்ளை மியூசிக் கிளாஸ் போகுது, நீயும் போ"

"அந்த பிள்ளை western டான்ஸ் கிளாஸ் போகுது, உன்னையும் அதில சேர்த்து விடுறேன்"


peer pressure அதிகரிக்க அதிகரிக்க  தங்கள் குழந்தைகளை அதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர் நினைத்தாலும் அவர்களின் பள்ளி விடுவதில்லை. தங்களின் grade ஐ உயர்த்த வேண்டும் என்று பள்ளிகளும் குழந்தைகளுக்கு நிறைய homework கொடுக்கிறார்கள்.
உதாரணமாக எங்கள் பகுதியில் இருக்கும் எல்லா பள்ளிகளும் UKG இல் இருந்ததே பிள்ளைகளுக்கு ஆங்கில வீட்டுபாடம் Razkids என்னும் தளத்தில் போட்டு விடுகிறார்கள். அதே போல கணக்கு வீட்டுப்பாடம் IXL  என்னும் தளத்தில். UKG படிக்கும் முகுந்துக்கு ஆங்கில வீட்டுபாடம் இது. ஒரு கதை புக்கை முழுவதும் படித்து வாசிக்க வேண்டும். பின்னர் அதன் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார், ஏன் அப்படி சொல்கிறார். அதில் வரும் கதை மாந்தர்கள் என் அப்படி செய்கிறார்கள், எப்படி மாற்றி செய்யலாம். ஆசிரியர் நோக்கம் என்ன? என்பன போன்ற பல விசயங்களை கிரகிக்க வேண்டும். ஒவ்வொரு கதை முடிவிலும் சில quiz வினாக்கள் உண்டு. அவைகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதன் பின் மதிப்பெண்கள் அவன் ஆசிரியருக்கு அனுப்பபடுகிறது.

இதனை தவிர இப்போது பல பள்ளிகளில் STEM எனப்படும் Science, Technology , Engineering மற்றும் Math சார்ந்த பல விசயங்களை project ஆகா கொடுகிறார்கள். அதற்கென்று பல விசயங்களை நாம் நெட்டில் தேட வேண்டி வருகிறது. எல்லாம் creative hands on ஆகா இருப்பதால் மனபாடம் என்பது கிடையாது. ஆனால் இதனை குழந்தைகளுக்கு நாம் சொல்லி தருவதற்கு முன்பு பல நேரங்களில் நாமே நிறைய cross -reference செய்ய வேண்டி இருக்கிறது.

பள்ளியில் இருக்கும் homework போதாது என்று பல இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை நெறைய extra classes க்கு அனுப்புகிறார்கள். எப்போதும் எதாவது ஒரு class இக்கு செல்கிறார்கள். இதில் parents க்கும் வேலை அதிகம். ஒவ்வொரு class க்கும் அவர்கள் குழந்தைகளை கொண்டு விடவேண்டும். 

மியூசிக், டான்ஸ், பியோனோ, ஸ்விம்மிங், கராத்தே, கிடார் என்று நெறைய classes உண்டு, ஆனாலும் அதனையே ஒரு career ஆக குழந்தைகளை எடுக்க நெறைய பெற்றோர் விடுவதில்லை. பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவ (அல்லது மருத்துவம் சார்ந்த) அல்லது இன்ஜினியரிங் படிப்புக்கு போவதையே விரும்புகிறார்கள். 

இதற்கெல்லாம் பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை போல தம் தம் பிள்ளைகளையும் வளர்க்க நினைப்பது தான் காரணம் என்று நினைக்கிறன். இது ஒரு வகையில் நல்லது தான் என்று நினைத்தாலும், ஒரு ஊரில் அனைவருமே மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக நினைத்தால் என்ன ஆகும்? பல குழந்தைகளுக்கு playtime கிடைப்பதில்லை. பல நேரங்களில் ஒரு homework க்கு பிறகு அடுத்த homework என்று இருக்கும், இப்படி எப்போதும் எதாவது ஒரு கிளாஸ்க்கு செல்லும் குழந்ததைகள் அதனை வெறுக்க ஆரம்பிப்பார்கள். விளையாட்டு என்பதையே மறந்து விடுகிறார்கள். என்னவாகுமோ? நினைத்தாலே பயமாய் இருக்கிறது.

நன்றி 


Thursday, February 19, 2015

தட்டையான உலகம் முதல் "break the internet" வரை.. சுருங்கிய மனித மனங்கள்.


நவம்பர் 9 1989, உலகவரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.  பெர்லின் சுவர்  இடிக்கப்பட்டு கிழக்கு ஜெர்மனியில் கம்யுனிசம்  வீழ்ந்த நாள். உலக பொருளாதார சந்தைகள் திறக்க அடிகோலிய நிகழ்வு அது என்பது  "The world is flat" புத்தகம் எழுதிய Thomas L. Friedman அவர்களின் கூற்று.  மிக சுவாரஸ்சியமாக  அவர் இதனை "சுவர் வீழ்ந்தது, ஆனால் விண்டோஸ் வளர்ந்தது" என்று  மைக்ரோசாப்ட் விண்டோஸ், IBM வளர்ச்சி பற்றி அவர் குறிப்பிடுகிறார்.  

உலகை தட்டையாக்கிய 10 காரணிகள் சொல்லபட்டாலும் இந்தியாவை பொருத்தவரை புரட்டி போட்டவை என் பார்வையில்: Netscape ,ஈமெயில், HTML, opensource software , uploading , outsourcing , offshoring என்பனவற்றை சொல்லலாம்.

இதை தவிர உலகம் அனைத்தையும் புரட்டி போட்டது கூகிள் போன்ற தேடு தளங்களும், அதன் பின்னர் வந்த "ஊக்கமருந்துகள்" ஆன mobile phones, instant messaging மற்றும் VoIP.


இன்றைய சூழலில் உங்களுக்கு facebook, twitter , blogs, instagram, whatsup என்றால் என்னவென்று தெரியாது என்று சொன்னால் உங்களை ஏற இறங்க பார்பார்கள். உலகம் உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் க்குள் அடங்கி விட்டது. November 9, 2014 , பெர்லின் சுவர் வீழ்ந்த நிகழ்வின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்.

உலகம் தட்டையாகிவிட்டது, ஆம், இன்று பல அமெரிக்க மென்பொருள் கம்பெனிகளில் எப்போது மீட்டிங் என்றாலும் , across the globe பல நாடுகளில் இருந்து குறிப்பாக, இந்தியா, பிரேசில் மற்றும்  துருக்கி நாடுகளில் இருந்து சாதரணமாக பலர் Dial -in செய்து கலந்து கொள்வார்கள். எப்போதும் கூகுள் hangout அல்லது skype போன்றவை  ஒன்று இவர்களுக்காக ஓபன் செய்து  இருப்பதை காணலாம். இன்று பல கம்பெனிகள், செலவை  மிச்சபடுத்த "Work from home" எனப்படும் வீட்டில் இருந்து வேலை செய்வதை அனுமதிக்கிறார்கள்.


எவ்வளவுக்கு எவ்வளவு உலகம் தட்டையாகி உலகின் எந்த மூலையில் என்ன நிகழ்ந்தாலும் நமக்கு உடனடியாக தெரிகிறதோ அதே போல எல்லா கெட்ட விசயங்களும் எங்கும் வியாபித்து புதிதாக இணைய உபயோகிப்பவர்களை சுண்டியும் இழுக்கின்றன.இணையத்தை மூலதனமாக கொண்டு மார்க்கெட்டிங் செய்பவர்கள் இங்கு ஏராளம். உதாரணமாக சிலமாதங்களுக்கு  முன்பு "Break the internet" என்ற பதம் இணையம் முழுதும் வியாபித்து இருந்தது. அதில் Kim Kardashian னின் நிர்வாண புகைப்படம் மட்டுமே இருந்தது. கிம் போன்றவர்கள் இணையத்தையும், தகவல் தொழில்நுட்பத்தையும் வைத்தே பணக்காரர்கள் ஆனவர்கள்.

 இன்று பலரின் நினைவூட்டியாக  இணையம்   இருக்கிறது. பிறந்தநாள், திருமண நாள், பிறப்பு, இறப்பு  என பலவும் இப்போது இணைய குறுஞ்செய்திகள் வாயிலாகவே நாம் அறிந்து கொள்கிறோம். ரோட்டில் ஒருவர் அடிபட்டு கிடந்தாலும் உதவாமல் அதனை புகைப்படம் எடுத்து உதவி செய்யுங்கள் என்று facebook ல் போடுபவர்களும்  உண்டு .  எங்கும்  பரபரப்பான இந்த நடப்பு  உலகத்தில் நட்புகளும் அதே பரபரப்புடன் ஆரம்பித்து பரபரப்புடன் முடிந்துவிடுகின்றன. அனைத்து நட்புகளுமே ரயில் சிநேகமாகி விட்டதோ என்று தோன்றுகிறது. எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை. ஒரு புறம் இந்த இணையத்தால் பல நன்மைகள் இருப்பினும் மனித மனங்கள் சுருங்கி விட்டன என்று தோன்றுகிறது.

நன்றி 






Sunday, February 15, 2015

ரங்கமணியும் திரைக்கதையும்!

 

ரொம்ப நாளா எங்க வீட்டு ரங்கமணிக்கு தமிழ் சினிமாக்கு திரைக்கதை எழுதனும்னு ஆசை. வழக்கமா எந்த தமிழ் படம் பார்த்தாலும் உடனே அவரே கதை சொல்ல ஆரம்பிப்பார். இப்போ கொஞ்ச நாளா எந்த ஆங்கில படம் பார்த்தாலும் "இதை தமிழ் மசாலா இயக்குனர்கள் எப்படி எடுப்பார்கள்" அப்படின்னு பிளேடு போடுறத தொழிலா வச்சிருக்கார். அப்படி நேற்று அவரிடம் மாட்டி என்னை பிளேடு அறுவை வாங்க வச்ச படம் 
Alfred Hitchcock's   "Rear window " .

Rear window கதை இது தான்

ஒரு புகழ் பெற்ற பத்திரிக்கை போடோக்ராபர் Jeff ஆ James Stewart நடிச்சு இருப்பார். ஒரு விபத்தில் Jeff இன் கால் உடைந்து  விட சக்கர நாற்காலியில் வாழ்க்கையை சில மாதங்கள் கழிக்க வேண்டிய நிலை. சக்கர நாற்காலியில் உக்கார்ந்து கொண்டே தன்னுடைய அபார்ட்மென்ட் இன் பின் ஜன்னல் வழியாக பக்கத்து சில அபார்ட்மென்ட்களில் நடக்கும் காட்சிகளை வேடிக்கை பார்கிறார்.

பாலே ஆடும் பெண், புதிதாக திருமணம் ஆன ஜோடிகள், எப்போதும் குடிபோதையில் இருக்கும் இசை மேதை, கணவனை சதா நச்சரிக்கும் பெண்ணும் அவள் கணவனும். தனிமையில் வாடும் பெண் இப்படி பல குடும்பங்களின் அன்றாட நிகழ்வுகளை காணுகிறார். ஒரு சில நாட்களுக்கு பின் கணவனை நச்சரிக்கும் பெண் காணாமல் போகிறாள், அவளுடைய கணவனின் நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்படுத்த, அந்த பெண் கொலை செய்ய பட்டு இருக்கிறாள் என்று Jeff முடிவு செய்கிறார். பின் எப்படி அதனை கண்டு பிடிக்கிறார் என்பதே மீதி கதை.


சரி, இந்த கதையை தமிழ் மசாலா இயக்குனர் எடுத்திருந்தால் எப்படி இருக்கும் என்ற ரங்கமணியின் கற்பனை இதோ.


ஒப்பன் பண்ணினா நம்ம ஹீரோ இயற்க்கை கட்சிகளை போட்டோவா எடுத்துட்டு ஒரு ட்ரைன்ல போயிட்டு இருக்கார். அப்போ அந்த ட்ரைன் ஒரு ஸ்டேஷன் ல நிக்குது, ஒரு திருடன் ஒருத்தர் பர்ஸ் அடிச்சிட்டு ஓடுறான். நாம ஹீரோ சுமார் அம்பது அடி பறந்தே போயி திருடன்கிட்ட இருந்து பர்ஸ் புடிங்கிட்டு வந்து சேர்கிறார். உடனே கூட இருக்குறவங்க எல்லாம் சேர்ந்து ஒரு செம கலக்கலான குத்து பாட்டு.

அடுத்த சீன் ல ஹீரோ தற்கொலை பண்ணிக்கிற போன ஹீரோயின காப்பத்துறார். ஹீரோயின் தன்னோட வீடு பூனை செத்ததிற்கு தற்கொலை பண்ணிக்கிற போறாங்க. ஹீரோயின காப்பதினதுல ஹீரோவுக்கு கால்ல அடி பட்டுடுத்து. உடனே ஹீரோயினுக்கு ஹீரோ மேல லவ் வந்துடுது. சுவிஸ் ல ஒரு சூப்பர் டூயட் சாங்.

அடுத்த சீன் ல ஹீரோ அவர் அபர்த்மென்ட் ல சக்கர நாற்காலியில உக்கார்ந்து இருக்கார். அவங்க பக்கத்து அப்பார்ட் மென்ட் ல நெறய குடும்பம் குடியிருக்குது. அதுல ஒன்னு ஜோக்கர் குடும்பம், அப்புறம் ஒரு கிளுகிளுப்பான பொண்ணு இருக்கிற ஒரு குடும்பம். அப்புறம் நெறைய வாலிப பசங்க தங்கியிருக்கிற ஒரு வீடு, அப்புறம் நை நைங்கிற பொண்டாட்டி , புருஷன் இருக்கிற குடும்பம் குடியிருக்குது.

அடுத்த சீன் ல எல்லா வாலிப பசங்களும் அந்த கிளுகிளுப்பான பொண்ணுக்காக ஜொள்ளு விடுதுங்க. அப்போ ஒரு பாட்டு. அப்புறம் ஜோகர் குடும்பம் அடிக்கிற கடி ஜோக்ஸ் எல்லாம் சேர்ந்து ரெண்டு மூணு சீன் போகிறது.

அப்புறம் அடுத்த சீன் ல ஹீரோவை தேடிகிட்டு ஹீரோயின் வந்துடறாங்க, மறுமடியும் சுவிஸ் ல ரெண்டு பாட்டு.

இப்போ அதுக்குள்ளே ஹீரோவுக்கு கால் சரியாயிடுது (தமிழ் ஹீரோ எல்லாம் இரும்பு மனிதர்கள் மாதிரி ). பக்கத்து அப்பார்ட் மென்ட் ல சில அநீதிகள் நடக்குது அதை எல்லாம் அவர் தட்டி கேட்குறார். அப்போ தான் அவருக்கு தெரிய வருது, அந்த நை நை அம்மா உயிரோட இல்லை அப்படின்னு. இவர் என்னாச்சுன்னு கண்டு பிடிக்கிறார்.

அப்போ தான் கதையில ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம். அதாவது, அந்த கிளுகிளுப்பான பொண்ணு அந்த நை நை அம்மாவோட கணவரோட சின்ன வீடு. அந்த அம்மா உயிரோட இருந்தா நாம சந்தோசமா இருக்க முடியாதுன்னு நினைச்சு அந்த பொண்ணும், அந்த அம்மாவோட புருசனும் சேர்ந்து கொலை பண்ணுறாங்க. அதை நம்ம ஹீரோ "Jeff intuition " வச்சு இதை கண்டு பிடிச்சி தண்டனை வாங்கி தந்துடறார்.

அப்புறம் படத்துக்கு தமிழ்ல தானே தலைப்பு வைக்கணும், இதோ . "பின் ஜன்னல்"

Thursday, February 12, 2015

50 shades பைத்தியம் பிடித்தலையும் அமெரிக்க பெண்கள்!


ஒரு புது பைத்தியம் இப்போது இங்கிருக்கும் மக்களுக்கு அதுவும் மிடில் ஏஜ் பெண்களுக்கு  பிடித்திருக்கிறது. பெண்கள் அதிகம் இதனை பற்றி பேசினாலும் ஆண்களும் இதனை பற்றி பேசுகிறார்கள். அது "50 shades of Grey" என்னும் புத்தகம் பற்றியது. 

ஆபிஸ் லஞ்ச் டைம் என்று போய் உக்கார்ந்தால் எப்போ பார்த்தாலும் அந்த புத்தகத்தில் வரும் காரெக்டர் கள்  பற்றிய பேச்சு "Grey" "Ana"....etc etc . இதனை பலரும் எனக்கு படிக்க பரிந்துரை செய்தார்கள். அதுவும் என் அருகில் அமர்ந்து வேலை பார்க்கும் ஒரு பெண் நண்பரும்  இதனை சிலாகித்து படி படி என்று வற்புறுத்தியதால் கூகுளில் தேடி ஒரு pdf version தரவிறக்கி படிக்க ஆரம்பித்தேன். 20 பக்கங்கள் தான் இருக்கும், முடியல ஆள விடுங்கடா சாமி என்று மூடி விட்டேன். 

இது erotic நாவல் வகையை சேர்ந்தது என்று சொல்லி கொள்ளுகிறார்கள் ஆனால் என்னை கேட்டால் கீழ்தர நீல படங்களுக்கு ஒப்பானது. நிறைய பேர் சொல்வது/ என்னிடம் சொன்னது போல ரொமாண்டிக் நாவல் அல்ல. நானும் இவர்கள் கொடுத்த பில்டப்புகளை பார்த்து Vladimir Nabokov  அவர்களின் Lolita" போன்று இருக்கும் என்று நினைத்திருந்தேன் அல்லது குறைந்த பட்சம் மில்ஸ் & பூன்ஸ் வகையை சேர்ந்தது என்றாவது நினைத்திருந்தேன். என் நினைப்பில் மண் விழுந்து விட்டது. 
இந்த புத்தகத்தையும் அதன் 2 sequel களையும் வைத்தே E.L.James என்ற பெண்மணி பணக்காரியாகி  விட்டது.

அனைவரும் இப்போது வரவிருக்கும் "50 shades of grey" படத்தை பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள். 2015 காதலர் தினம் அன்று இந்த புத்தகம் படமாக எடுக்கப்பட்டு வெளிவிட படுகிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இவர்களின் தொல்லை தாங்க வேண்டுமோ. எப்படிப்பட்ட பாலியல் வறட்சி இருப்பின் இதனையே பேசி பேசிகொல்வார்கள்  என்று நினைக்க தோன்றுகிறது. எங்கே செல்கிறது இந்த சமூகம்.



Wednesday, February 11, 2015

ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி - 2 ? குறைகளுடன் சமரசம் செய்து கொள்ளுங்கள்




குறை இல்லா மனிதன் இல்லை. எந்த காரியத்தையும் எந்தவொரு குறையும் இல்லாமல் பூரணமாக செய்ய என்னால் மட்டுமே முடியும் என்று ஒருவர் நினைக்க ஆரம்பித்தால் அவர் ஸ்ட்ரெஸ் ஐ வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறார் என்று பொருள். 

எனக்கு அனுபவம் இருக்கிறது. இந்த முறையில் நான் வகுத்தபடி தான் அனைவரும் நடக்க வேண்டும் ஏனெனில் அதுதான் சரியான விளைபயன் தரும். அவ்வாறு நடக்க இல்லையேல் பின்விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்  என்று நினைத்து பயந்து தன்னையும் சரி அடுத்தவரையும் சரி தன்  வழி நடக்க வைக்க நினைப்பார்கள் (இம்சிப்பார்கள்) சிலர். மற்றவர்களுக்கும் அதனை பற்றி அனுபவம் இருக்கும் அல்லது அவர்களின் எண்ணங்களையாவது கேட்போம் என்று நினைப்பதில்லை இவர்கள். 
பெற்றோர் குழந்தைகளிடமும் ,கணவன் மனைவியிடத்தோ அல்லது மனைவி கணவனிடத்தோ இதனை போன்ற எதிர்பார்ப்பை(இம்சையை)  அடிக்கடி காணலாம் . 

இன்னும் சிலரோ தனக்கு உள்ள மிக சிறிய குறைகளையோ நினைத்து நினைத்து வருந்தவோ அல்லது மற்றவர்களிடம் உள்ள குறைகளையோ குத்தி காட்டவோ, கிண்டல் செய்யவோ  செய்வார்கள். அது வெளிப்புற தோற்றமாக இருக்கலாம் அல்லது அவர்களின் பழக்க வழக்கங்களாக அல்லது நடவடிக்கைகளாக இருக்கலாம். இது போன்று செய்யும் போது  முதலில் நம் மீது இருக்கும் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறோம். பின்னர் அடுத்தவர்கள் நம் மீது கொண்டுள்ள மரியாதையை, நம்பிக்கையை இழந்து விடுகிறோம்.

இதிலிருந்து எப்படி மீள்வது?. ஒவ்வொரு முறையும் அடுத்தவர்கள் ஒரு காரியத்தை தன்  வழியில் அல்லாமல் வேறு மாதிரியாக செய்யும் போதோ  உடனே டென்சன் ஆகி  நரம்பு புடைக்க  "நீ செய்வது தவறு, நான் சொல்லும்படி செய்"  என்று  கத்தாமல்  "இட்ஸ் ஓகே, ஒன்றும் இல்லை, எல்லாம் நன்றாக நடக்கும்" என்று ஒரு ஜென்டில் ரிமைன்டர் செய்து கொள்ளுங்கள். 

அடுத்தவரை பார்த்து குறை சொல்ல வாய் வரும்போதோ அல்லது உங்களின் குறைகளை பார்த்து மனம் வருந்தும் போதோ ஒன்றை நினைத்து கொள்ளுங்கள். குறைகளுடன் பிறந்து அதனை பெரிதாக நினைக்காமல் வாழ்ந்து சாதித்தவர்கள் ஏராளமானோர். உதாரணமாக இருவர்; ஒருவர் "பீதோவன் இசைக்கலைஞர் காது கேட்கும் தன்மையற்றவர்", மற்றொருவர் "ஹெலன் கெல்லர் எழுத்தாளர் காது கேட்கும் வாய்பேசும் பார்வை இல்லாதவர்."

முடிவாக இது 



நன்றி 

ஸ்ட்ரெஸை  கட்டுபடுத்துவது எப்படி -1 ? பேனை பெருமாளாக்க வேண்டாம் , துவக்க பகுதி இங்கே.


Monday, February 9, 2015

ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி -1 ? பேனை பெருமாளாக்க வேண்டாம்


எப்பொழுதெல்லாம் நமக்கு பிடிக்காத நிகழ்ச்சிகள் நம் வாழ்கையில் நடக்கும் போதோ அல்லது புரிந்து கொள்ளாத கடினமான நபரை சமாளிக்க வேண்டி வரும் போதோ அல்லது வாழ்கையில் ஏமாற்றங்களையோ  அல்லது எதிர்பாராத சந்தர்ப்பங்களை சந்திக்கும் போதோ நாம் என்னவாகிறோம்.
overreact செய்கிறோம், எப்பொழுதும் அதனையே நினைத்து கொண்டு, ஒன்றை பத்தாக்கி,நூறாக்கி, ஆயிரமாக்கி, நாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி,  நாம் மட்டும் தான்  உலகின் ராசியற்ற மனிதன் என்று மனம் நொந்து என்று எல்லா எதிர்மறை விளைவுகளும் நடக்கும் என்று நினைத்து அழுது அரற்றி புலம்பி etc etc ...

பல நேரங்களில் பார்த்தோமானால் நாம் பெரிய பிரச்னை என்று நினைத்து அரற்றிய விஷயம் மிக சிறு பிரச்னை ஆக இருக்கும். சொல்ல போனால் பல சிறு பிரச்சனைகளை நாம் தான் ஊதி பெருசாக்கி அசைவற்று போகும் நேரங்களில் நாம் உண்மை நிலவரத்தை விட்டு வெகு தூரத்திற்கு சென்று விடுகிறோம். நாம் கற்பனை செய்த சந்தர்பம் மட்டுமே அப்போது நம் முன் நிற்கும். அதனால் பிரச்சனைக்கு சரியான தெரிவு காண முடியாது. 



சுருங்க சொல்லபோனால் பல சிறு பிரச்சனைகளை நாம் பெரிய எமெர்ஜென்சி ஆக்கி ஒரு எமெர்ஜென்சிக்கு பின் அடுத்தது என்று ஓடிகொண்டே இருக்கிறோம்.

காலம் செல்ல செல்ல, எந்த ஒரு பிரச்சனையையும் அவசர அவரமாக முடிக்காவிட்டால் அது தீர்க்கப்படவில்லை என்றே நாம் நம்ப ஆரம்பித்து விடுவோம். ஏன் இப்படி?

சில நாட்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் அது, அது  நடந்து முடிந்தவுடன் பயங்கரமாக மனமுடைந்த நான் ஒரு நாள் முழுதும் அழுது கொண்டிருந்தேன். உடனே என் கணவர் சொன்னது இது " எலிக்கு பயந்து வீட்டை கொளுத்தாதே! நீ நீயாகவே இரு, சிறு பிரச்சனையை பெரியதாகாதே. அதெல்லாம் வேலை வெட்டியில்லாதவர்கள் செய்வது, தூக்கி போட்டுவிட்டு உன் முன்னே இருக்கும் வேலையை பார்" என்றார். இப்போது நான் அந்த பிரச்சனையை திரும்பி பார்த்தால் எனக்கு சிரிக்க தோன்றுகிறது. நான் ஏன் அதனை பெரிய பிரச்னை என்று நினைத்தேன் அழுதேன் என்று தெரியவில்லை. உனக்கு தெரிந்தது அவ்வளவு தான், என்று தூக்கி போட்டுவிட்டு நம் வேலையை போய் பார்க்கவேண்டும் என்பது நான் கற்ற பாடம்.

பின்னர் எனக்கு "Don't sweat the small stuff"  என்ற புத்தகம் பரிந்துரை செய்தார். வாழ்கையை எப்படி ஸ்ட்ரெஸ் இல்லாமல் அல்லது ஸ்ட்ரெஸ் குறைத்து வாழ்வது என்பதை கூறும் புத்தகம், அதனை பகிர்ந்து கொள்ளலாம் என்று எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.

அந்த புத்தகத்தின் துவக்க பகுதி தான் இது.

 "Life is too short to argue, fight or be negative in any way.  Count your blessings, value the people who matter and move on from the drama with your head held high."





Thursday, February 5, 2015

ஐயையோ! திருப்பரங்குன்றம் மலையை காணோமே!

இது என்ன வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடி  போல இருக்கேன்னு நினைக்காதீங்க.  சமீபத்தில் மதுரை சென்ற போது நான் உண்மையில் கண்டது. திருப்பரங்குன்றம் மலை அங்கே தான் இருக்கிறது..ஆனால் அதனை பார்க்க தான் முடியவில்லை.  பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை, நாங்கள் இருந்த ஜெய் ஹிந்துபுரம் பகுதியில் இருந்து திருப் பரங்குன்றம் மலையை தெள்ள தெளிவாக பார்க்கலாம். தற்போது, ஒரே புகை மூட்டம் அதனை சுற்றி. என்ன காரணம் என்று விசாரித்த போது நான் அறிந்தது இது. திருப்பரங்குன்றம் பகுதிக்கு அருகில் மாநகராட்சி குப்பை எரிக்கபடுகிறது. அதனால் ஏற்படும் புகை மூட்டம் அந்த பகுதி முழுதும் சூழ்ந்து ஒரே புகை மூட்டம்.

அது சரி..எரிக்காவிட்டால் அப்புறம் எப்படி தான் குப்பைகளை அகற்றுவது, என்று சிலர் கேட்கலாம். முதலில் குப்பைகளை எரிப்பதால் என்னவாகும் என்று சில நாட்களுக்கு முன் நான் வாசித்த கதிர் அவர்களின் வலைத்தளம் என்ன சொல்கிறது பாருங்கள். சுருக்கமாக சொன்னால், முதலில் எரிக்க்காகப்படும் பொருள்கள் மக்கும் கழிவுகள்  மக்கா கழிவுகள், நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள், மறுசுழற்சி செய்யபடும் கழிவுகள் என்று எரிக்கும் முன் பிரிக்கபடுவதில்லை. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து எரிக்கிறார்கள்.

எரிக்கப்படும் கழிவுகளில்  இருக்கும்  நெகிழி (plastic) கழிவுகள் dioxtin என்னும் நச்சு பொருள் வெளியாகிறது. அது மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களை உண்டாக்குவது அல்லாமல், இதய நோய்கள், கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்சனைகளையும் அதிகரிக்கிறது. இதெல்லாம் விட இவை இனபெருக்க உறுப்புகளின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்யவல்லவை. இதனை பற்றி எத்தனை பேருக்கு தெரியும். குப்பைகளை பாதுகாப்பாக எப்படி அகற்றுவது என்று மாநகராட்சி கழிவு மேலாண்மையில் இருக்கும் யாருக்காவது தெரியுமா என்று தெரியவில்லை.



அனைவருக்கும், தன்  வீட்டில் இருந்து குப்பை சென்றால் போதும். அது என்னவாகிறது எப்படி உலகிற்கு கேடு விளைவிக்கிறது என்று கவலை இல்லை. அரசியல்வாதிகளுக்கோ இதெல்லாம் ஒரு பிரச்சனையாகவே தெரிவதில்லை.

உண்மையில் குப்பைகள் கொண்டு மின்சாரம் தயாரிக்கபடுகிறது ஸ்வீடன் நாட்டில். அதில் கிடைக்கும்  energy கொண்டு 20% வீடுகளுக்கு heating சிஸ்டம் வழங்கபடுகிறது. குப்பைகள் போதவில்லை என்று பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் குப்பைகள் இறக்குமதி செய்ய படுகிறது.   அதெல்லாம் வளர்ந்த நாடு, அவர்களிடம் பணம் இருக்கிறது அதனால் இப்படி விதவிதமாக மாற்று எரிசக்தி வழியில் முதலீடு செய்கிறார்கள் என்று யாரும் சொல்ல முடியாது, சொல்லபோனால் இந்தியா தான் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இருக்கிறது.


References :

http://www.pri.org/stories/2012-06-26/sweden-imports-waste-european-neighbors-fuel-waste-energy-program

http://blogs.wsj.com/indiarealtime/2015/02/04/india-has-worlds-third-largest-number-of-billionaires/



Tuesday, February 3, 2015

எப்படி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி தருவது? ஒரு அமெரிக்க கதை



இங்கு இருக்கும் தமிழ் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக தன்னார்வ பணி செய்து கொண்டு இருக்கிறேன்.   நாங்கள் இருக்கும் ஜியார்ஜியா மாகணத்தில் வேற்று மொழி பாடமாக தமிழ் அங்கிகரிக்க பட்டு இருப்பதால், நமது மொழியும் கலாச்சாரமும் வளர வேண்டும் என்று பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் படிக்க தமிழ் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். கிட்டத்தட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்கள் பள்ளியில் படிகிறார்கள். அங்கு ஆசிரியர்/ஆசிரியையாக வேலை பார்பவர்கள் அனைவரும் தன்னார்வ தொண்டர்கள் தாம். வாரத்தில் ஒரு நாள் ஒன்றரை மணி முதல் இரண்டு மணிநேரம் மட்டுமே தமிழ் பள்ளி நடக்கும். கலிபோர்னியா தமிழ் அகாடமி யின் பாடத்திட்டத்தை பயன்படுத்தி பாடம் நடத்துகிறோம். தமிழ் நாட்டு தமிழ் பாடத்திட்டத்திற்கு இணையான அனைத்து பகுதிகளையும் கொண்டது எங்கள் பாட திட்டம்.  மழலையர் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் நடத்தப் படுகிறது. வீட்டுப்பாடம் , மாததேர்வு, மாதம் ஒரு  ப்ராஜெக்ட்,  ரிவிசன் டெஸ்ட், வருட தேர்வு என்று அனைத்தும் உண்டு.


தமிழும் கலாச்சாரமும் வளரவேண்டும் என்ற எண்ணத்துடன் இப்படி நாங்கள்  அனைவரும் எந்த பிரதிபலனும் இன்றி உயிரை கொடுத்து உழைத்தாலும், ஆங்கிலம் மட்டுமே முதல் மொழியாக வளரும் இங்கு பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் படிப்பது என்பது மியூசிக், Kumon , Soccer , டென்னிஸ், பியானோ  போல "இன்னொரு கிளாஸ்" அவ்வளவு தான். ஆர்வத்துடன் படிக்கும் சில குழந்தைகளும் இருக் கிறார்கள் என்றாலும் பெற்றோர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் தமிழ் பள்ளி வரும் குழந்தைகள் தாம் அதிகம்.

இங்கு இருக்கும் ஆசியர்கள் முறையாக ஆசிரிய பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்றாலும் மிக சிறந்த முறையில் ஆர்வத்துடன் பாடம் நடத்துகிறார்கள். அதனால் பல நேரங்களில் பள்ளிக்கு வரும் குழந்தைகளிடம் கண்டிப்பாக நடந்து கொள்ள முடிவதில்லை. தப்பித்தவறி ஒரு சில நேரங்களில் கண்டிப்பாக நடந்தால் என்னென்ன நேர்கிறது கேளுங்கள்.

ஒரு ஆசிரியர் பாடம் கவனிக்காத ஒரு பையனை கூப்பிட்டு கவனியாமல் இருந்தால் கிள்ளு வாங்குவாய் என்று சொல்லி இருக்கிறார். அவன் தன பெற்றோரிடம் சென்று என் தமிழ் ஆசிரியர் என்னை கொன்று (Kill )விடுவேன் என்கிறார் என்று முறையிட்டு இருக்கிறான்.

இன்னொரு ஆசிரியர் பாடம் கவனிக்காத ஒரு ஆறாம் வகுப்பு மாணவனை "நீ பாடம் கவனிக்காவிட்டால் நிறைய கற்று கொள்வதை lose செய்வாய்" என்று சொல்லி இருக்கிறார். உடனே அவன் அதனை பெரிய பிரச்னை ஆக்கிவிட்டான் . "எப்படி என்னை loser என்று அந்த ஆசிரியர் கூறலாம். என் வாழ்கையில் நான் loser ஆவேன் என்று எப்படி  சொல்கிறார், நான் இனிமேல் இந்த பள்ளிக்கு செல்வதில்லை "என்று ஒரு டிராமா செய்து விட்டான்.

நான் பாடம்  எடுக்கும் 1ஆம் வகுப்பு பையன் வகுப்பில் சரியாய் கவனிக்கவில்லை என்று அவன் பெற்றோரிடம் முறையிட்டேன். அதற்க்கு அவன், தன்னை பற்றி அனைவர் முன்னமும் ஆசிரியை குறை சொல்லி விட்டார், அதனால் இமேஜ் பாதிக்கப்பட்டு விட்டது எனவே நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து இருக்கிறான். அவன் வயது 5-6 அதற்குள் இவர்களுக்கு எல்லாம் என்ன இமேஜ்ஓ தெரியவில்லை.

ஒன்றுக்கு இரண்டு பக்கம் இவர்களை எழுத சொன்னாலோ அல்லது கவனிக்க சொன்னாலே உடனே ஒரு அங்கலாய்ப்பு வந்து விடுகிறது. "You are giving us lots of stuff to write" அல்லது "Why should we write the same stuff again and again" அல்லது "I am bored" இவை எல்லாம் நான் சாதரணமாக வகுப்பில் கேட்க்கும் அங்கலாய்ப்புகள்.

இன்னும் சில பெரிய குழந்தைகளின் பெற்றோர் தம் பிள்ளைகள் எப்படி எல்லாம் தமிழ் படிப்பதில் இருந்து தப்பிக்க நினைகிறார்கள் என்று கூறுவதை கேட்கும் போது தமிழை எப்படி வளர்க்க போகிறோம் என்று சற்று பயமாகவே இருக்கிறது.

இங்கு இருக்கும் குழந்தைகள் சிறு வயது முதலே தர்க்கம் செய்ய நன்கு அறிந்து இருக் கிறார்கள்.ஏன்  நான் இதனை செய்ய வேண்டும்?. இதனை செய்வதால் என்ன பயன்?, செய்யாமல் விட்டால் என்ன நடக்கும்? அதனை எப்படி சமாளிப்பது? போன்ற பல கேள்விகள் கேட்கிறார்கள்.

ஒரு பெற்றோர் சொன்னது, தமிழ் படி என்று சொன்னபோது நடந்த உரையாடல்

அப்பா : தமிழ் வீட்டுபாடம் படிடா?
பையன் "Why should I do it ?"
அப்பா: அப்பொழுதான் உனக்கு எழுத படிக்க  பேச வரும்.
பையன்: I can learn that by watching tamil channels
 அப்பா: உன் குழந்தைகளுக்கு நம் மொழி கலாச்சாரம்  சொல்லி தரனும் இல்ல.
பையன்: You are there dad, you will teach them
அப்பா: ???


எப்படி இவர்களுக்கு தமிழ் படிக்கும் எண்ணத்தை தூண்டுவது? இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு பிறகு தமிழின் நிலை இங்கு என்னாகும்? நினைக்கும் போதே மனம் பதைக்கிறது.


Monday, February 2, 2015

வேடிக்கை மனிதர்கள்!

நான் சந்தித்த சில வேடிக்கை மனிதர்கள்.


சத்தியசீலர்

இந்த வகை வேடிக்கை மனிதர்கள் தான் சத்திய சீலர்/ உண்மை விளம்பி என்று காட்டி கொள்வார்கள். தான் சத்திய சீலராக இருப்பது போல் அனைவரும் இருக்கவேண்டும் என்று ஆணை விதிப்பார்கள். அதாவது அவர்கள் மாமிசம் உண்ணாமல் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுவோம் மாமிசம் உண்பவர்கள் எல்லாம் பாவம் செய்பவர்கள் என்றரீதியில் உபதேசம் செய்வார்கள். இவர்களை போன்றவர்களை என்ன செய்வது?


மெழுகுவர்த்தி

இந்த வகை மக்களை சந்திக்கும் போது அவர்களுக்காக என்ன செய்வது என்று தெரியாது. இவர்களை சந்தித்து சில நேரம் கூட இருக்காது ஆனாலும் உடனே இந்த நிலைக்கு தான் வர என்ன என்ன கஷ்டப்பட்டார்கள் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். தாங்கள் பட்ட கஷ்டம் போல யாரும் கஷ்டப்படவில்லை என்று புலம்புவார்கள். அவர்கள் பட்ட கஷ்டத்தினாலெயே தான் அவர்கள் குடும்பம் நன்றாக இருக்கிறது என்பார்கள். இவர்களை போன்றவர்களிடத்தில் எப்படி பேசுவது.

ராஜா/ராணி

இந்த வகை வேடிக்கை மனிதர்கள் எப்போதும் தான் சொல்வதே/செய்வதே சரி, அடுத்தவர்கள் சொல்வதோ, செய்வதோ பிசாத்து என்று சொல்வார்கள். உலகின் எந்த டாபிக் எடுத்து கொண்டாலும் தனக்கு அதனை பற்றி அத்துப்படி என்று காட்டி கொள்ளுவார்கள். அடுத்தவர்களின் சிந்தனைகளை மதிக்கவோ காது கொடுத்து கேட்கவோ மாட்டார்கள். இவர்களை போன்றவர்களை பார்க்கும் போதும் பேசும் போதும், வாயை மூடி கொண்டு மனதுக்குள் சிரித்து கொள்ள தோன்றும்.


வெத்து வேட்டு/சவுண்டு பார்ட்டி 

இவர்களும் ராஜா/ராணி கேரக்டர் போல தான் என்றாலும் ஒரு பெரிய வித்தியாசமும் உண்டு. ராஜா/ராணி கேரக்டரில் இருப்பவர்களுக்கு விசயம் தெரியும் ஆனால் இவர்களோ வெத்து வேட்டுகள் யானையை குதிரை ஆக்குவேன், அவனை தெரியும் இவனை தெரியும் என்றெல்லாம் பேசுவார்கள் ஆனால் இவர்கள் ஒரு லொட லொட மட்டுமே.. இந்தவகை மக்கள் உண்மையில் ஒரு சரியான பயந்தாங்கொள்ளிகள். கஷ்டமான அல்லது சவாலான ஒரு பிரச்னையை கொடுத்து பாருங்கள் இவர்களிடம், ஓடி ஒளிந்து கொள்வார்கள்.


பொய்முகம்

நான் பார்த்த கேரக்டர்களிலேயே ரொம்ப பயங்கரமானவர்கள் இவர்கள். அதிகம் நடிப்பவர்கள். சிரித்து பேசியே நம்மை நம்ப வைத்து கழுத்தறுப்பவர்கள். யாரை பற்றியும் உண்மையை சொல்ல மாட்டார்கள்..ஆனால் அனைவரைப் பற்றியும் அறிந்து இருப்பார்கள். இவர்களிடம் உண்மை என்பது துளிக்கும் இருக்காது..எல்லாமே நடிப்புதான். இவர்களை எப்படி இனம் கண்டு சமாளிப்பது என்பதே பெரிய சவால்.


டிராமா கிங்/குயீன்

இவர்கள் எந்த ஒரு situation ஐயும் dramatize செய்து தங்களுக்கு சாதகமாக வளைக்க வல்லவர்கள். இவர்கள் ஒரு சிறிய பிரச்சனையையும் பூதாகரமாக்கி அனைவரையும் torture செய்வார்கள். இவர்கள் கொஞ்சம் ராஜா/ராணி டைப் மக்கள். தான் செய்வது, நினைத்தது தான் சரி, அடுத்தவர்கள் சொல்வது நினைப்பது எல்லாம் தவறு என்று நினைப்பார்கள். அடுத்தவர்கள் சொல்ல வருவதை ஒரு வார்த்தை கூட கேட்பதற்கு இவர்கள் தயாராக இருப்பதில்லை. அனைத்து விசயங்களையும் சந்தேக கண்ணுடனே பார்பார்கள். பயங்கர சுயநல வாதிகள். மற்ற யாரையும் பற்றி கொஞ்சம் கூட நினைக்க மாட்டார்கள்.இவர்களின் முழு முதல் ஆயுதம் அழுகை பின்னை emotional blackmail.தனக்கு எதிரில் உள்ளவர்கள் சரணம் அடைந்து மன்னிப்பு கேட்கும்வரை இவர்கள் தங்கள் நாடகத்தை தொடர்வார்கள்.பெரும்பாலும் இந்த வகை கேரேக்டேர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.அடுத்தவர் வளர்ச்சியில் மீது பொறமை கொண்டவர்கள்.

இது நான் சந்தித்த சில வேடிக்கை மனிதர்கள் பற்றிய என்னுடைய கருத்துக்கள் மட்டுமே..இன்னும் பல பல கேரக்டெர்கள் இருக்க கூடும்...