Wednesday, April 28, 2010

Wisdom teeth எனும் வில்லன்

என்னுடைய முந்தய இடுகையான வலி க்கு பின்னூட்டம் அளித்து விசாரித்த அனைவருக்கும் என் கோடான கோடி நன்றிகள். தற்போது வலி குறைந்திருந்தாலும் இன்னும் இரண்டு நாட்களில் கடைவாய் பற்கள் பிடுங்கப்பட உள்ளன. அதனால் அடுத்த வலிக்கு நான் தயாராகி கொண்டிருக்கிறேன்.

மனிதனுக்கு தன் வாழ்நாளில் மூன்று முறை பல் முளைப்பதுண்டு. குழந்தையாய் இருக்கும் போது முளைக்கும் பால் பற்கள் (First Molar). பின்னர் பால் பற்கள் விழுந்து முளைக்கும் பற்கள் second molar எனப்படும். இந்த பற்கள் அவர் அவர் சுகாதார, பரம்பரை குண நலன்களுக்கேற்ப அறுபது எழுபது வயதில் விழ ஆரம்பிக்கும்.

இவை தவிர இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் முளைக்கும் wisdom teeth எனப்படும் (third molar) நான்கு கடைவாய் பற்கள். இந்த பற்கள் வளர்வதற்குள் மனித தாடை முழுமையாக வளர்ந்து விடுவதால் என்னை போல பலருக்கு இந்த பற்கள் முளைப்பதற்கு தாடையில் அதிகம் இடம் இருப்பதில்லை. கீழுள்ள படத்தில் குறிப்பிட்டு உள்ளதை போல இந்த பற்கள் பல வழிகளில் வளர்ந்து இருக்கும்.இப்படி சாய்ந்த, படுத்த நிலையில் வளர்ந்த பற்கள் அடுத்த பற்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கும் போது வலி உண்டாகிறது.

சில wisdom பற்கள் பாதி மட்டுமே வளர்ந்த நிலையில் அதன் வளர்ச்சி நின்று விடும். இந்த நிலையில் பாதி வளர்ந்த பற்களின் இடுக்குகளில் உணவுத்துகள்கள் சென்று infection ஏற்படுத்தி விடும். சில நேரங்களில் அடுத்த பற்களையும் இது தாக்க கூடும். அதன் விளைவாக அந்த பற்களும் கெட ஆரம்பிக்கும், வலி உயிர் போகும். இப்படி infection வந்தால் antibiotic மருந்துகளே வலி தீர ஒரே வழி. ஆனால் அவை நீண்ட நாட்கள் பயன் தராது என்பதால் இந்த பற்களை பிடுங்குவதே வலி குறைக்க உதவும்.

Wisdom பற்கள் multi rooted பற்கள். அதாவது ஆழமான வேர் கொண்டவை. முக்கால் வாசி wisdom பற்கள் தாடை நரம்புகளுக்கு வெகு அருகாமையில் இருக்கும் என்பதால் இந்த பற்களை எடுக்கும் போது கவனம் தேவை. இதனை இங்குள்ள dentist எனப்படும் பல்மருத்துவர்கள் பெரும்பாலும் செய்வதில்லை. Oral surgeons எனப்படும் பல் அறுவை சிகிச்சை நிபுணர்களே செய்கிறார்கள்.

எனக்கு கீழ் கடவாய் பற்கள் இரண்டும் படுத்த நிலையில் இருப்பதால் பிடுங்கியே ஆகவேண்டிய கட்டாயம். வரும் வெள்ளிகிழமை அதற்க்கான சுபயோக சுபதினம் எனக்கு. அதனால் இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு நோ ப்ளாக் நோ இன்டர்நெட். நன்றி.

Saturday, April 24, 2010

வலி

"தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்", என்பார்கள். இது பழைய பழமொழி. "எந்த வலி வந்தாலும் அமெரிக்காவில இருக்குறவங்களுக்கு சனி, ஞாயிறு வரவேண்டாம்". இது தான் நான் கண்டுபிடிச்ச புது மொழி.

ரெண்டு நாளா பல்லு வலியில நான் பட்ட அவஸ்தையும் அதற்காக ஒரு on the counter மருந்து ஒன்று வாங்கி சாப்பிட்டு அது hives எனப்படும் அலேர்ஜி ஆனதும், அதற்காக எமெர்ஜென்சி செல்ல நான் பட்ட அவஸ்தையும் என்னோட எதிரிக்கு கூட வரவேண்டாம்.

நான் என்ன சொல்லுறேன்னு அமெரிக்காவில இருக்குறவங்களுக்கு புரிந்து இருக்கும். இங்கே weekend எந்த கிளினிக்கும் திறந்து இருக்காது, அந்த கிளினிக் ல இருக்கிற டாக்டரும் வேலை பார்க்க மாட்டாங்க. அதனால சனி, ஞாயிறு உடம்புக்கு முடியாம போனா பெரிய ஆஸ்பத்திரியில இருக்கிற எமெர்ஜென்சி ரூம் எனப்படும் அவசர சிகிச்சை பிரிவுக்கு தான் போகணும்.

Weekend இந்த ஒரே வழி தான் இருக்கிறதால சனி ஞாயிறு உடம்புக்கு முடியாம போகிற எல்லாரும் அங்க உக்கார்ந்து இருப்பாங்க. அதனால எமெர்ஜென்சி ரூம் போனா உங்களை எப்போ மருத்துவம் பார்க்க கூப்பிடுவாங்கன்னு தெரியாது. முதல்ல முடியாம இருக்கிற குழந்தைகள், அக்சிடென்ட் கேஸ், வயசானவங்க, இவங்களுக்கு தான் முதல்ல மருத்துவம் பார்ப்பாங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் குறைஞ்சது இரண்டு முதல் மூணு மணி நேரம் காத்து இருக்கணும்.

தாங்க முடியாத பல்லு வலியோட அலேர்ஜி ஆகி நேற்று இரவு முழுதும் எமெர்ஜென்சி ரூம் ல , ஒன்பது மாத கைக்குழந்தை முகுந்த் ஓட நானும் என்னோட வீட்டுக்காரரும் பட்ட பாடு சொல்லி மாளாது. நான் பிரசவத்தின் போது கூட இந்த அவஸ்தை படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பலநேரங்களில் நான் இந்தியாவை மிஸ் செய்தாலும் நேற்று போல நான்
இந்தியாவை என்றும் மிஸ் செய்யவில்லை என்று தான் சொல்லவேண்டும்.


பி.கு: வலி சரியாகும்வரை நோ இன்டர்நெட், நோ பதிவு. நன்றி

Friday, April 23, 2010

எனக்கு பிடித்த பத்து தமிழ்ப்படங்கள்- தொடர் பதிவு

எனக்கு பிடித்த பத்து தமிழ்ப்படங்கள் பற்றி எழுத பத்மா அழைச்சிருந்தாங்க. அவங்களுக்கு என் நன்றி. சினிமா பற்றி அதிகம் எழுதுவதில்லை என்ற முடிவுடனேயே நான் பதிவெழுத ஆரம்பித்தேன். இருப்பினும் பத்மாவுக்காக இந்த தொடர் பதிவு.

சிறுவயதில் எனக்கு பிடித்த திரைப்படங்கள் எல்லாம் இப்போது பிடிப்பதில்லை. அதேபோல, இப்போது பிடிக்கும் படங்கள் சிறுவயதில் அறவே வெறுத்து ஒதுக்கி இருக்கிறேன்.

சிறுவயதில் எனக்கு பாட்டு, சண்டை, சிரிப்பு உள்ள படங்கள் தான் பிடிக்கும். மெதுவாக செல்லும் கதைஅம்சம் உள்ள படங்கள் அறவே பிடிக்காது. எனக்கு சிறுவயதில் ரஜினி ரொம்ப பிடிக்கும். ரஜினி படங்கள் தான் சிறந்தது என்று என் கூட படித்த பெண்களிடம் சண்டை போட்டு இருக்கிறேன். இன்றும் கூட ரஜினி படங்கள் பார்பேன் ஆனால் சிறுவயதில் பிடித்த அளவு பிடிக்குமா என்றால் சந்தேகமே.

எனக்கு பிடித்த தமிழ்ப்படங்கள் என்று யோசிக்கும் போது அந்த படம் பார்த்தபோது செய்த, சந்தித்த நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகம் வருகின்றன. அப்படி எனக்கு பிடித்த சில தமிழ்ப்படங்கள் இங்கே.

1 . எதிர்நீச்சல் & பாமாவிஜயம்
எனக்கு நாகேஷ் மிகவும் பிடிக்கும். அதுவும் எதிர்நீச்சல் படத்தில் அவரின் ஒவ்வொரு செயலும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும். "அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா " என்ற பாட்டு சரியான நகைச்சுவை. பாமாவிஜயம் படத்தில் "வரவு எட்டணா செலவு பத்தணா" பாட்டும், நகைச்சுவையும் அருமை. இன்றும் பார்க்க தூண்டும் படம்.

2 . ஒரு தலை ராகம்


சிறுவயதில் என் பெரிய அண்ணன் இருந்த போது இந்த பாடல் காசெட் எப்போதும் எங்கள் வீட்டில் ஒலித்து கொண்டிருக்கும். என் பெரிய அண்ணனுக்கு பிடித்தமான படம். நானும் சில வருடங்களுக்கு முன் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. என்னுடைய பெரிய அண்ணனுக்காக இந்த படம் பிடிக்கும்.

3 . முதல் மரியாதை


எனக்கு இந்த படம் பார்க்கும் போதெல்லாம் இந்த படத்தில் வரும் கதை போன்றே எங்கள் பக்கத்து வீட்டில் நடந்த ஒரு கதை தான் ஞாபகம் வரும். சிவாஜியின் மிகை இல்லாத நடிப்பும், வடிவுக்கரசி, ராதாவின் நடிப்பும் அருமையாக இருக்கும்.

4 . தண்ணீர் தண்ணீர்


நீரின்றி எதுவும் இல்லை என்று உணர்த்திய படம். சரிதாவின் மிகையில்லாத நடிப்பும், சூழ்நிலையும் கண்ணில் நீர் வரும்.

5 . ரோஜா


நான் ஒன்பதாவது படிக்கும் போது வந்த படம். அந்த படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை பாட்டும், காதல் ரோஜாவே பாட்டும் என்னை கிறுக்கு பிடிக்க வைத்தன. இந்த படத்திற்கு பிறகு அரவிந்த சாமி அவ்வளவு பிடிக்கும். சின்ன சின்ன ஆசை பாட்டில் வருவது போல தண்ணீரில் ஆடி என் அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன். மறக்க முடியாத படம்.

6 . அலைபாயுதே


நானும் என்னுடைய கணவரும் (காதலிக்கும் போது) சேர்ந்து பார்த்த முதல் படம். இன்றும் மறக்க முடியாதது.

7 . அன்பே சிவம் & பஞ்சதந்திரம்இரண்டுமே இரண்டு extreme படங்கள். முதல் படம் பயங்கர touching என்றால் அடுத்த படம் மனம் விட்டு சிரிக்க வைக்கும். அன்பே சிவம் Planes, Trains and Automobiles என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்றாலும் கமலின் நடிப்பு அருமை.

8 . பாரதி


பாரதியாரின் வாழ்கை கதை. பாரதியாக நடித்தவரின் நடிப்பு அருமை. அதற்காகவே எனக்கு இந்த படம் பிடிக்கும்.

9 . காந்தி


காந்தி படத்தின் தமிழ் மொழியாக்கத்தை கடந்த வருடம் பார்க்க முடிந்தது. காந்தியாக நடித்த Ben Kingsley யின் நடிப்பு அருமை.

10 . சிவாஜி


கடைசியாக தலைவர் படம். ரஜினி படங்கள் அனைத்தும் 100% என்டேர்டைன்மென்ட். லாஜிக் எல்லாம் பார்க்ககூடாது. அதனாலேயே ரஜினி படங்கள் அனைத்தும் பிடிக்கும் என்றாலும், சிவாஜி படம் அமெரிக்காவில் முதல் இருக்கையில் அமர்ந்து எல்லா சேட்டைகளும் செய்து பார்த்த படம் என்பதால் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கும் படம்.

என்னுடைய தமிழ்பட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உதவிய பத்மாவிற்கு மீண்டும் என் நன்றிகள்.

இது தொடர் பதிவு என்பதால் தொடர விருப்பமானவர்கள் தொடருங்கள்.

Thursday, April 22, 2010

SETI தெரியுமா -இன்று பூமி தினம் !

செய்தி இல்லீங்க, இது SETI - Search for Extra-Terrestrial Intelligence (SETI). அதாவது வெளியில இருக்கிற அண்டங்களில், ஏதாவது உயிருள்ள ஜீவன்கள் இருக்கா அப்படின்னு தேடுற ஒரு ப்ராஜெக்ட்.

இதுல என்ன பண்ணுவாங்கன்ன பூமியின் மேற்பரப்பில பெரிய ரேடியோ telescope வச்சு ஏதாவது Alien சிக்னல் வருதான்னு கண்காணிச்சுட்டு இருப்பாங்க.

இதுல ஒரு சிறப்பு என்னன்னா எல்லாரும் இந்த ப்ராஜெக்ட் ல பங்கு கொள்ள முடியும். இதுல தேவை என்னன்னா இண்டர்நெட்ல இணைக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் மட்டுமே. setiathome.ssl.berkeley.edu என்ற தளத்துக்கு போயி அவங்க கொடுக்குற BOINC அப்படிங்கிற மென்பொருளை உங்க கணினியில நிறுவிவிட்டா போதும். பிறகு உங்க கம்ப்யூட்டர் எப்போ எல்லாம் standby mode ல இருக்கோ அப்போ இந்த ப்ரோக்ராம் ரேடியோ telescope ல இருந்து கிடச்ச சிக்னலை analyze பண்ணும். நீங்களும் இந்த ப்ராஜெக்ட் ல பங்கு பெறலாம்.

கிட்டத்தட்ட அம்பதுகளின் ஆரம்பத்தில் துவங்கிய இந்த தேடல் இன்னும் நடந்துட்டு இருக்கு. அம்பது வருசமா தேடினதுல எதுவும் இன்னும் கிடைக்காட்டியும் எந்த எந்த இடத்தில இன்னுமே தேடணும்னு முடிவு பண்ண இத்தனை வருஷ தேடல் உதவி இருக்காம்.

அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா, அடுத்த மனிதன் வாழுற மாதிரி சூழ்நிலை உள்ள கிரகத்துல இருந்து சிக்னல் வர்றவரை, தயவு செய்து இருக்கிற ஒரு பூமிய பாதுகாப்போமா.

இன்று பூமி தினம். அதனால இதை எல்லாரும் மனசுல வச்சுகோங்க.

Wednesday, April 21, 2010

"தண்ணியும்" நானும்

சின்ன வயசிலிருந்து குடிகாரர்கள் என்றாலே ஒரு பயம் எனக்கு. நான் பார்த்தவரை குடிகாரர்கள் எல்லாம் தெருக்களில் அரைகுறை ஆடையுடன் யாரையோ கெட்ட வார்த்தைகளில் திட்டி கொண்டிருப்பார்கள். என்னை பயமுறுத்த என்னுடைய அம்மா "குடிகாரன்கிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்" என்று அடிக்கடி சொல்வார்கள். அதனாலேயே பயந்து இருந்தேன்.

அந்த பயம் நான் பெரிய பெண் ஆனதும் கூட தொடர்ந்தது என்று தான் கூற வேண்டும். ஒயின் ஷாப் என்ற போர்டு பார்த்தாலே அந்த இடத்தை விட்டு ஒரு பத்து அடி தள்ளி தான் நடப்பேன்.

டிவி, சினிமாக்களில் பார்த்தவரை எனக்கு தெரிந்து "தண்ணி அடிப்பவர்கள்" என்றால் ஒரு டேபிளில் பெரிய பாட்டில் இருக்கும், சோடா, தண்ணீர் இருக்கும் அப்புறம் snacks இருக்கும். யாரோ அதனை ஒரு கிளாசில் ஊற்றுவார்கள் அப்புறம் எல்லாரும் cheers சொல்லி குடிப்பார்கள். இதுவே எனக்கு தெரிந்த தண்ணி அடிப்பது.

நான் வெளிநாட்டுக்கு வந்த சில மாதங்களில் ஒரு நாள் என்னுடைய labmate ஒரு பெண்ணின் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது. என்னுடன் படித்த அனைவரையும் அவர் ஒரு பார்ட்டிக்கு அழைத்திருந்தார். பார்ட்டி ஆரம்பித்த சிறிது நேரத்தில் அவர் என்னிடம் வந்து "Beer ?" என்று ஒரு பாட்டில் நீட்டினார். நான் "நோ தேங்க்ஸ்" என்று சொல்லி coke பாட்டில் ஒன்று எடுத்து கொண்டேன்.

பின்னர் அனைவரும் பேசி கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் இருந்த ஒரு Mexican நண்பர் ஒருவர், ஒரு பாட்டில் எடுத்து அனைவரிடமும் காட்டிகொண்டிருந்தார். அது Tequila எனப்படும் Mexican ஸ்பிரிட். அதனை அவர் திறந்ததும் அனைவரும் அவர்களின் கிளாஸ் இல் ஊற்றி அவர்களின் கட்டை விரலுக்கு கீழே எலுமிச்சம் பழச்சாற்றை தடவி கொண்டனர். பிறகு ஒரு மிடறு குடித்ததும் கைவிரலை ஒரு நக்கு நக்கிக்கொண்டனர். இப்படி தான் Tequila குடுக்க வேண்டும் போல என்று நான் நினைத்து கொண்டேன்.

பிறகு ஒருநாள் ரஷ்யாவிலிருந்து ஒரு பேராசிரியர் எங்கள் ஆராய்ச்சி கூடத்திற்கு வந்திருந்தார். அவருக்கு மரியாதை செய்யவேண்டும் என்று என்னுடைய பாஸ் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் ஸ்பெஷல் ட்ரின்க் என்று சிறிய கிளாஸ் இல் ஊற்றி கொடுத்தனர். அது Vodka எனப்படும் ரஷ்யன் ஸ்பிரிட். அதில் அல்கஹோல் அதிகம் என்பதால் சிறிய கோப்பைகளில் குடிப்பதாக கூறினர். அதனுடன் Beluga caviar எனப்படும் மீன் முட்டைகளும் இருந்தன. அது ரஷ்யாவில் மிகவும் பிரசித்தம்.

எப்போதெல்லாம் பார்ட்டி நடக்கிறதோ அப்போதெல்லாம் என்னுடைய Labmates "தண்ணியை" taste ஆவது செய்து பார் என்று என்னை வற்புறுத்துவது உண்டு. அப்போதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி விலகிக்கொள்வேன். என்னுடைய நெருங்கிய தென்னாப்பிரிக்க தோழி ஒருவர், "பார்க்கலாம் நீ எவ்வளவு நாள் தான் இப்படி இருக்கிறாய்" என்று கிண்டல் செய்வதுண்டு. நானும் "சரி பார்க்கலாம்" என்று சொல்வேன்.

ஒருமுறை கிறிஸ்துமஸ் விடுமுறைகளின் போது என்னுடைய தென்னாப்பரிக்க தோழி Weihnachtsmärkten எனப்படும் ஜெர்மனிய கிறிஸ்துமஸ் மார்க்கெட் ஒன்றுக்கு அழைத்து சென்றாள். அதுவரை நான் இப்படி ஒன்று பார்த்ததில்லை ஆகையால் மிகவும் ரசித்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு கடை அருகே அழைத்து சென்று அங்கு சூடாக விற்கப்படும் Glühwein என்ற பானத்தை ஒரு கோப்பையில் வாங்கி என்னிடம் கொடுத்து குடிக்க சொன்னாள். ஆவி பறக்க கோப்பையில் இருந்த பானத்தை பார்த்ததும் நம்ம ஊரு சுக்குமல்லி காப்பி போன்று இருந்தது. அதனால் குடித்து விட்டேன். சிறிதளவு துவர்ப்பு சுவையுடன் இருந்தது அது. முழுதாக குடித்து முடிக்கும் வரை பேசாமல் இருந்த என் தோழி குடித்து முடித்தவுடன் நான் ஜெயித்து விட்டேன் என்று என்னிடம் கூறினாள். பிறகு தான் தெரிந்தது நான் குடித்தது கிறிஸ்துமஸ் நேரங்களில் குளிருக்கு சூடாக விற்கப்படும் ஒரு வகை ஸ்பிரிட் என்று.

யாருக்கு தெரியும் "தண்ணி" என்பது இப்படி கொதிக்க கொதிக்க காபி போல இருக்கும் என்று. ஆனாலும், இன்றும் என் வீட்டுக்காரர் இதனை சொல்லி என்னை கிண்டல் செய்வதுண்டு.

Tuesday, April 20, 2010

உலகம் தட்டையானது (The World is flat)
சில நாட்களுக்கு முன் தாமஸ் எல். பிரீட்மான் எழுதிய "The World is flat - உலகம் தட்டையானது ", புத்தகம் படிக்க நேர்ந்தது. சுமார் இருபது வருடங்களுக்கு முன் நாம் வாழ்ந்த காலத்திலிருந்து இப்போது இருக்கும் information age எனப்படும் அதி நவீன காலத்திற்கு நம்மை இட்டுச்சென்ற முக்கிய காரணிகளை பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை தபால், கடிதம், செய்திதாள்கள், தூர்தர்ஷன் இவைதான் இருந்தது. ஆனால் இன்று SMS பற்றி தெரியாதவரை வேற்று கிரக வாசி போல பார்க்கின்றனர். ஒரு வீட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு கைபேசி இருக்கிறது. கைபேசியுடன், டிஜிட்டல் கேமரா, இன்டர்நெட், FM ரேடியோ, ஆயிரக்கணக்கான டிவி சேனல்கள் என்று அனைத்து வசதிகளும் உண்டு. உலகின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் சில நொடிகளில் நம்மை வந்தடைந்து விடுகின்றன.

இது எப்படி சாத்தியமானது?

பிரீட்மான் அவர்களின் கூற்றுப்படி உலகத்தை தட்டையாகிய காரணிகள் சில

1 . முதல் காரணி 1989 ஆம் ஆண்டு நிகழ்ந்த பெர்லின் சுவர் இடிப்பு அல்லது சோவியத்தில் கம்யுனிசத்தின் வீழ்ச்சி - சோவித் யூனியனின் வீழ்ச்சி, அதன் பொருளாதார அமைப்பை போன்று பின்பற்றிய இந்தியா, சீனா போன்ற நாடுகளின் சந்தையை அனைத்து நாடுகளுக்கும் திறக்க வழிகோலியது.

2. இன்டர்நெட் - மனிதரின் துணை இல்லாமல் ஒரு இயந்திரம் அடுத்த எந்திரத்துடன் தொடர்பு கொள்ள உதவிய SMTP , HTTP போன்ற தொடர்ப்பு தொழில்நுட்பம் . இவை PC எனப்படும் தனிக்கணினியை ஒன்றுடன் ஒன்று இணைக்க உதவியது. Intranet ஆக இருந்த கணினி இணைப்பு பின்பு இன்டர்நெட் ஆனது இதனை போன்ற மென்பொருள்களின் உதவியால் தான்.

3 . Netscape போன்ற browser கள் - இவை இண்டர்நெட்டை ஐந்து வயது குழந்தைகளில் இருந்து எழுபது வயது பெரியவர்கள் வரை கொண்டு சேர்த்தது. அனைத்தும் virtual மயமாக்கப்பட்டது. அதாவது இங்கிருந்த படியே நான் இந்தியாவில் இருக்கும் கணினியை இயக்க முடியும்.

4 . Open source - யார்வேண்டுமாயினும் எதைவேண்டுமாயினும் எழுத, பகிர உதவும் Open source மென்பொருட்கள், வலையுலகம், விக்கிபீடியா போன்றவை.

5 . Outsourcing & Offshoring - ஓரிடத்தில் இருக்கும் வேலையை வேறு வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்புதல். பிரீட்மான்னின் கூற்றுப்படி நிறுவனங்கள் தங்களின் லாபத்தை கணக்கில் கொண்டு எங்கு கூலி குறைவாக வேலை அதிகமாக செய்து தருவார்களோ அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு outsource செய்வது . உதாரணமாக சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு செய்து தரப்படும் துணிமணி, பொம்மை, தளவாடங்கள் போன்ற அனைத்து பொருட்களும், இந்தியாவில் இருந்து செய்து தரப்படும் மென்பொருட்கள், BPO க்கள் போன்றவை. இதனால் மக்களிடம் ஏற்பட்ட பணப்புழக்கமும் ஒரு காரணம்.

இவை எல்லாம் பிரீட்மான் அவர்கள் சொல்லும் உலகம் தட்டையானதிற்க்கான சில காரணிகள். இதனை எல்லாம் சொல்லிவிட்டு அவர், அமெரிக்கர்கள் உலகத்துடன் போட்டியிட வேண்டுமாயின் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதெல்லாம் சரி தான், ஆனால், நேற்று என்னுடைய கணவர், தான் இந்தியா பற்றி ஒரு செய்தி படித்ததாக கூறினார். அது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை. அதன் படி இந்தியாவில் இருக்கும் கழிவறைகளின் எண்ணிக்கையை விட கைபேசிகளின் (cellphone) எண்ணிக்கை அதிகம் என்று அது தெரிவிக்கிறது.

ஆமாம், உலகம் தட்டையாகி விட்டது. கழிவறைக்கு கூட கைபேசி எடுத்து செல்கின்றனர் சிலர். ஆனால் கழிவறை தான் போதுமான அளவு இல்லை.

Saturday, April 17, 2010

Iceland எரிமலையும், அமெரிக்கா பயணமும்

"தென்னை மரத்தில தேள் கொட்டினா பனை மரத்தில நெறிகட்டுற மாதிரி" அப்படின்னு பழமொழி கேள்வி பட்டு இருக்கேன். ஆனா இப்போ தான் அதுக்கு proof பார்க்க நேர்ந்தது.

ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் அட்லாண்டிக் மகாசமுத்திரம் பிரிக்குது. அதனால ஐரோப்பாவில இருந்து வரும் விமானங்கள் கடல் மேல ரொம்ப நேரம் பறக்கிறத தவிர்க்க நிலத்துக்கு மேல முடிஞ்ச வரை பறக்க பார்ப்பாங்க. அதனால ஐரோப்பாவில இருந்து வரும் விமானங்கள் எல்லாம் UK, Iceland, Canada வழியாக அமெரிக்கா வரும்.

இப்போ Iceland ல எரிமலை வெடித்ததால் ஐரோப்பாவில இருந்து ஒரு விமானமும் அமெரிக்கா வரல. எரிமலையில இருந்து வர்ற புகை மேகமண்டலம் மாதிரி சூழ்ந்து இருக்கிறதால விமான என்ஜின் நின்னு போயிடுதாம். அதனால எந்த விமானமும் பறக்கல.

இதனால நெறய பேரு விமானநிலையத்தில காத்துட்டு இருக்காங்க. அதுல ஒருத்தர் எங்களோட நண்பரின் மாமியார். அவர்களும் லண்டன் விமான நிலையத்தில மாட்டிட்டு இருக்காங்க. தன்னோட மகளின் பிரசவத்துக்காக இந்தியாவில இருந்து வந்துட்டு இருந்தவங்க இப்போ லண்டன் ல. இதில இன்னொரு நிகழ்வு என்னான மே மாதம் டெலிவரி னு சொன்னங்க டாக்டர்ஸ் ஆனா இப்போவே குழந்தை பிறந்துடுச்சு.

இதை எல்லாம் சொல்லும் போது அந்த நண்பர் சிரிப்பாக ஒன்றை குறிப்பிட்டார். இடுப்புவலி வந்தவுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன் இங்கு படிக்கும் தன்னுடைய மச்சானுக்கு போன் செய்து "Water broke " அப்படின்னு சொல்லி இருக்கார். அவர் மச்சான் என்ன நினைச்சாரோ தெரியல, "Is it , I will call the plumber" அப்படின்னு சொன்னாராம். எப்படி இருக்கு பாருங்க.

Thursday, April 15, 2010

Researcher என்ற ஒரு ஜந்து-1

என்னுடைய முந்தய இதே தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் ஒருவர் முனைவர் பட்டம் பெறுவதற்குள் இருக்கும் அவஸ்தையை எழுதி இருந்தேன், ஒருவர் முனைவர் பட்டம் பெற்ற பிறகு அவர் permanent வேலையில் சேர்வதற்குள் என்ன சந்திக்க நேரிடும் என்பதை குறிப்பிடுவது இந்த பதிவு.

இன்று, நான் பிரசவத்திற்கு முன் வரை படித்த/வேலை பார்த்த பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. எப்போதும் கலகலப்பாக என்னுடன் பேசும் நண்பர்கள் அனைவரும் இன்று ஏனோ பேசவில்லை. அங்கு இருக்கும் பலரிடம் எனக்கு நல்ல நட்பு உண்டு, இருப்பினும் ஏன் இப்படி நடந்து கொண்டனர், வேலை இருந்தால் ஒரு மாதிரி இல்லாவிட்டால் இப்படி தான் நடத்துவார்கள் என்று நினைத்து கொண்டேன்.

என்னுடைய பழைய பாஸ் ம் என்னவோ தெரியவில்லை, இதனை வேறு விதமாக சொல்லியே விட்டார்(ள்). அடுத்தவர்களுக்கு வேலை இருக்கிறது உன்னை போல இல்லை அல்லவே, என்று கிட்டத்தட்ட ஒவ்வொரு வார்த்தை முடிவிலும் கமெண்ட் போல சொல்லி கொண்டு இருந்தார்(ள்). இது ஒருவகையான சர்காஸ்டிக் விமர்சனம் தான் என்றாலும் அவர்களை பொறுத்தவரை குடும்பத்திற்காக career ஐ on - hold இல் வைத்திருப்பது என்பது stupid decision .

நான் அவர்களை குறை சொல்ல முடியாது. என்னுடைய பாஸ், திருமணம் ஆகாதவர். எனக்கு தெரிந்து ஆராய்ச்சி துறையில் இருந்து கொண்டு குடும்ப வாழ்கையிலும் ஈடுபடும் பெண்கள் மிக குறைவு. ஏனெனில் மற்ற துறைகளை போல அல்லாமல் ஆராய்ச்சி துறையில் அர்ப்பணிப்பு அதிகம் தேவைப்படும். டென்சன் அதிகம் உள்ள ஒரு துறை இது. அதனால் இந்த துறையில் உள்ள நெறைய பெண்கள் இதனாலேயே அதே துறையில் இருப்பவர்களை திருமணம் செய்து கொள்வர். இதனால் இருவருக்கும் ஒரே இடத்தில், ஒரே ஊரில் வேலை கிடைப்பது சுலபமாக இருக்கும் என்பதால்.

ஒருவர் முனைவர் பட்டம் பெற்ற பிறகு Tenure எனப்படும் permanent பேராசிரியர் வேலை கிடைப்பதற்கு அமெரிக்காவில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பாருங்கள்.

1 . முதலில் முனைவர் பட்டம் பெற வேண்டும் (Minimum 5-6 years)

2. முனைவர் பட்டம் பெற்ற பிறகு ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு வருடங்கள் ஒருவர் Postdoc எனப்படும் professor ஆவதற்கான தகுதி வேலை பார்க்க வேண்டும். அதில் அவர் எத்தனை ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுகிறார் என்பதை பொறுத்து அவரின் அடுத்த நிலையான Tenure - Track எனப்படும் ஒரு பதவி தரப்படும்.

3. Tenure - Track என்பது temporary professor மாதிரி. இந்த பதவி அவருக்கு ஒரு நான்கு அல்லது ஐந்து வருடங்கள் தரப்படும். அதற்குள் அவர் எவ்வளவு productive ஆக இருக்கிறார் என்பதற்கு அவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் எந்த அறிவியல் பத்திரிக்கையில் வருகின்றது என்பதை பொறுத்தது.

4 . அப்படி அவர் நல்ல கட்டுரைகள் எழுதினாலும் ஆராய்ச்சி செய்ய பணம் தேவை அதற்காக அவர் " Grants " எனப்படும் ஆராய்ச்சி செய்வதற்காக பணம் goverment இடம் இருந்து வாங்க வேண்டும். இதில் ஒரு கொசுறு என்னவென்றால் அமெரிக்க குடிமக்கள் மட்டுமே இதனை வாங்க அனுமதிக்க படுவர்.

5 . கிராண்ட்ஸ் இருக்கிறது, ஆராய்ச்சி கட்டுரை உள்ளது, பிறகு என்ன? உங்களை பற்றி அந்த துறையில் உள்ள சிலர் "Recommend " செய்ய வேண்டும்.

6 . இந்த கடலையும் தாண்டிய பிறகு ஒரு வழியாக அவர் permament professor ஆகிறார்.

சமீபத்தில் இங்குள்ள அலபாமா என்னும் மாநிலத்தில் உள்ள பல்கலைகழகத்தில் ஒரு பெண் பேராசிரியர் ஒருவர் தனக்கு Tenure எனப்படும் permanent வேலை கிடைக்காததற்கு யாரெல்லாம் காரணம் என்று நினைத்தாரோ அவர்களை எல்லாம் சுட்டு கொன்று விட்டது பெரிய செய்தியானது. அந்த பேராசிரியர் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவருக்கே permanent வேலை என்பது எட்டா கனியான போது மற்றவர்களுக்கு என்னவாகும் என்று நினைத்து பாருங்கள்.

எல்லாவற்றையும் தாண்டிய பின்னர் யாரும் சரியாக தன்னை recommend செய்யாததால் அலபாமா பெண் பேராசிரியர் தனக்கு permanent வேலை கிடைக்கவில்லை என்று நினைத்து, அதற்கு காரணமானவர்களை கொன்றிருக்கிறார்.

இருபதுகளில் ஒருவர் முனைவர் பட்டம் பெற படிக்க ஆரம்பித்தால் அவர் படித்து முடித்து permanent வேலையில் சேரும் போது தனது நாற்பதுகளில் இருக்க நேரிடும்.

இப்படி ஏழு கடல் ஏழு மலை எல்லாம் தாண்டி ஒருவர் பேராசிரியர் ஆனாலும் அவருக்கு சம்பளம் என்று கிடைப்பது இந்தியாவில் இருந்து வரும் ஒரு பிரெஷ் programmer க்கு கிடைப்பதை விட சற்று அதிகம்.

Wednesday, April 14, 2010

அமெரிக்க தமிழ்ப்புத்தாண்டு

விடியக்காலையில் தொலைபேசி அலறியது, யாரென்று பார்த்தால் இந்தியாவிலிருந்து அம்மா. "தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" , என்று வாழ்த்து சொன்னார்கள். நேற்று இரவு முழுதும் பல் முளைப்பதால் தூங்க முடியாமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்து எங்களையும் தூங்க விடாமல் செய்த முகுந்த் ஆல் இருவரும் ஏன்டா பொழுது விடியுது என்று நினைத்து எழுந்தோம். அப்போது தான் உறைத்தது "ஓ, இன்னிக்கி newyear இல்ல". வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டோம்.

என்னுடைய சிறுவயது, இந்திய தமிழ் புத்தாண்டு ஞாபகம் கொசுவர்த்தி சுற்றியது, அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து பெரிய கோலம் போட்டு, கூரை பூ வீட்டு வாசலில் வைத்து, சாமி அலமாரியில ஒரு கண்ணாடி வைத்து அதில் நகை எல்லாம் போட்டு "காலையில் எழுந்திருச்சதும் அதில தான் கண்ணு முழிக்கணும், அப்போ தான் இந்த வருஷம் பூரா உனக்கு அதிர்ஷ்டம் வரும் ", என்று அம்மா சொல்லுவதும். அதற்காகவே காலையில எழுந்திருச்சு கண்ணை மூடிகிட்டே சாமி அலமாரி வரை சென்று அதில் கண்ணு முழித்து, இந்த வருஷம் எனக்கு நல்ல அதிர்ஷ்டம் வரும் என்று நம்பியது, கொசுவர்த்தியாக சுத்தி முடிந்தது.

நினைவுகளில் இருந்து விடுபட்டு, பையனை கவனிக்க ஆரம்பிக்க, அடுத்த தொலைபேசி அழைப்பு, இந்த முறை அவருடைய அப்பா, அம்மா, மறுபடியும் அதே வாழ்த்து பரிமாற்றம். புதுவருசம் வந்திருச்சு, அப்புறம் என்ன அவர் அலுவலகம் கிளம்ப, நான் முகுந்த் ஐ கவனிக்க. மறுபடியும் ஆரம்பித்தது எங்களுடைய "Just another day".

அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Tuesday, April 13, 2010

வீடு

மழை வருது, சீக்கிரம் சட்டி எடுத்து வாருங்கள், மனைவி கத்தியது கேட்டது
ஓட்டையை சரிசெய்யுங்கள், பலமுறை வீட்டுக்காரரிடம் சொன்னபோது
வரும்மாதம் பார்போம் என்ற பதில் வாடிக்கை ஆனது
கடுமையாக கேட்டால் எங்கே காலி செய்ய வேண்டுமோ, மனது பயந்தது
ஒண்டு குடித்தனத்தில் வாழ்ந்த மனம் ஒடுங்கிவிட்டது
காம்பவுண்டு வீடுகளின் அனைத்து கஷ்டமும் நெஞ்சில் ரணமானது
எனக்குன்னு ஒரு சொந்த வீடு வெறும் கனவானது
என் வாழ்நாளுக்குள் கனவு நிறைவேறுமோ மனம் ஏங்கலானது

Monday, April 12, 2010

Idiot boxநான் எழுதிய சாதிகள் இல்லையடி பாப்பா, இடுகைக்கு இப்படி காரசாரமான விவாதங்கள் பின்னூட்டங்களாக வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக வந்த பின்னூட்டங்களும் அதற்கு பின் வந்த எதிர்வாதங்களும் என்னை சில நேரம் நிலை தடுமாற வைத்து விட்டன. இனிமேல் இதனை போன்ற இடுகையை எழுதுவதற்கு முன் பல முறை யோசிப்பேன் என்பது மட்டும் உண்மை.

நேற்று நான் சனிக்கிழமை நடந்த நிகழ்விலிருந்து சரியாக விடுபடாத நிலையில் idiot box என்று அழைக்கப்படும் இரண்டு சாதனங்கள் முன் என் பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று. பழைய urban dictionary இல் idiot box என்றால் அது T.V மட்டுமே, ஆனால் இப்போது கணினியும் சேர்க்கப்பட்டு இருப்பதாக Jeopardy நிகழ்ச்சியின் மூலம் அறிந்தேன்.

நாங்கள் subscribe செய்துள்ள Satellite டிவியில் மாத மாதம் சில சேனல்கள் இலவசமாக வரும். அப்படி நேற்று நான் பார்க்க நேர்ந்தது GSN எனப்படும் " Game Show Network ". ஒன்றன் பின் ஒன்றாக வெறும் கேம் ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு இந்த ஷோ க்கள் எல்லாம் இந்திய தொலைக்காட்சிகளில் பார்த்த ஞாபகம் வந்தது. இந்திய, அமெரிக்க கேம் ஷோ மற்றும் ரியாலிட்டி ஷோ பற்றிய ஒரு ஒப்பீடு.

Family Feud - ஜாக்பாட்
Newly wed game /Matchmaker - ஜோடி பொருத்தம்
Who wants to be a millionaire - kaun banega crorepati
Deal or No Deal - Deal ஆ No Deal ஆ
The Bachelor / The Bachelorette - Swayamvar
American Idol - சேனல்கள் நடத்தும் அனைத்து பாட்டு போட்டிகளும்
Dancing with the stars - ஜோடி நோ 1

இவை எல்லாம் எனக்கு ஞாபகம் வந்த நிகழ்ச்சிகள் பற்றிய ஒப்பீடு மட்டுமே. இன்னும் நெறைய இருக்ககூடும்.

ஓரிரண்டு இந்திய சேனல்களும் free preview வந்தது. அதில் ஒன்று B4U Music , அப்புறம் ஜெயா செய்திகள்.

B4U மியூசிக் சேனலில் வந்த நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்பட்ட பாட்டுக்களில் எல்லாம் நான் கவனித்தது இது தான்

1 . அதில் ஆடும் நடனங்கள் எல்லாம் கிளப் இல் ஆடும் நடனங்கள் போல இருந்தன.

2 . அதில் நடுவில் ஆடும் நடிக,நடிகையர் தவிர முக்கால் வாசி பேர் வெளிநாட்டினர்.

3 . பெரும்பாலும் அதில் ஆடிய பெண்கள் உடுத்தியிருந்த உடை இங்கே strip club என்ற ஒன்று உண்டு, அதில் ஆடும் பெண்கள் உடுத்தும் உடை (சில ஆங்கில படங்களில் பார்த்த ஞாபகம்) போன்றிருந்தது.

4 . அதனை காம்பேர் செய்த பெண்ணின் உடையும் கிட்டத்தட்ட அதேபோல இருந்தது.

ஜெயா செய்தி சேனல் பார்க்க நேர்ந்தது, பார்த்து கொண்டே இருக்கும் போது நடுவில் "ஹமாம் க்ருஹப்ரவேஷ ஆபர்" என்று ஒரு பெண் செய்தி வாசிக்க ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, இதென்ன ஜெயா செய்திகளில் ஹாமம் கம்பெனி பிரச்சாரம் நடக்கிறது என்று யோசித்து கொண்டிருக்கும் போது தான் அறிந்தேன் அது ஒரு விளம்பரம் என்று.

அந்த செய்தி சேனல் பார்த்து கொண்டிருக்கும் போது, ஒரு பெண்ணிடம் மின்வெட்டு பற்றி கேள்வி கேட்டு கொண்டிருந்தனர். அந்த பெண்ணும் "காலையில எழுந்து குழந்தைகள் படிக்க முடியல...." என்று சொல்லி கொண்டு இருந்தார். அப்போது தான் ஒன்று கவனித்தேன் அந்த பெண் nighty உடுத்தி இருந்தார். Nighty நைட் டிரஸ் ஆக அல்லாமல் day டிரஸ் ஆனது நான் கடந்த முறை இந்தியா வந்த போது கண்கூடாக பார்க்க நேர்ந்தது. அதுவாவது பரவாயில்லை, ஆனால் ஒரு பப்ளிக் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும் போது கூடவா nighty உடுத்தி இருப்பது, கஷ்ட காலம் என்று நினைத்து கொண்டேன்.

இங்கெல்லாம் Pajama எனப்படும் இரவு உடையை அணிந்து வெளிஆட்கள் யாரிடமாவது பேசினால் அது அவர்களை அவமதிப்பது போல ஆகும் என்று கற்று கொண்டேன். இங்கு யாரையும் அவர்களின் Pajama உடையில் வெளியில் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அதனால் வீட்டை விட்டு வாசல் வரவேண்டும் என்றால் கூட நான் உடை மாற்றி கொண்டே வருகிறேன்.

Saturday, April 10, 2010

சாதிகள் இல்லையடி பாப்பா

இப்படி ஒரு பதிவை எழுத நேர்ந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இது எனக்கு இன்று நேர்ந்த ஒரு மோசமான நிகழ்வின் பிரதிபலிப்பு.

இன்று ஒரு பிறந்தநாள் விழாவிற்கு செல்ல நேர்ந்தது. அதில் புதிய சிலர் அறிமுகம் ஆயினர். வழக்கமாக இங்கு நடக்கும் விழாக்களில் எல்லாம் பெண்கள் ஒரு பக்கமும் ஆண்கள் ஒரு பக்கமும் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருப்பர். நான் பெண்களுடன் அமர்ந்து புதிதாக அறிமுகமான அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

எப்படி எங்கள் திருமணம் நேர்ந்தது?, காதல் திருமணம் எப்படி சாத்தியமானது? எங்கே படித்தீர்கள்?, எப்படி படித்தீர்கள்?, எங்கே வேலை பார்கிறீர்கள்/பார்த்தீர்கள்? இவை எல்லாம் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் . எதோ quiz போல என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். நானும் பதில் சொல்லி கொண்டு வந்தேன்.

எல்லா கேள்விகளும் ஓகே என்றாலும் முடிவில் அவர்கள் கேட்டது இது தான்
"நீங்கள் என்ன சாதி"

எனக்கு தூக்கி வாரி போட்டது.
"நான் பெண் சாதி"

என்று நானும் நறுக் என்று பதில் சொன்னேன். அதற்கு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை ஒரு சாதி பெயரை சொல்லி நீங்கள் அந்த சாதியினரா என்று கேட்டனர்.
அதற்கு நான் இல்லை என்று சொன்னது தான் தாமதம். நீங்கள் படித்த படிப்பை கேட்டதும் நீங்கள் அந்த சாதியினர் என்று நினைத்தோம், அதனால் தான் கேட்டோம், No offense என்று கூல் ஆக பதில் வந்தது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் இப்படி ஒரு கேள்வி என்னிடம் கேட்டனர். இப்படி ஒரு கேள்வி கேட்ட அனைவரும் நன்கு படித்த பெண்கள். மனது வலிக்கிறது, உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சாதிகள் ஒழியாதா?

Friday, April 9, 2010

ஜப்பானிய Geisha வும், இந்திய தேவதாசிகளும்
இது ஒரு ஒப்பீடு

ஜப்பானிய Geisha : இவர்கள் ஜப்பானிய traditional entertainers . நடனம் மற்றும் பாட்டில் கைதேர்ந்தவர்கள் இவர்கள். விருந்தினர்கள் முன் பாட்டு பாடி, நடனம் ஆடி அவர்களை மகிழ்விப்பது இவர்கள் தொழில்.
இந்திய தேவதாசிகள்: இவர்கள் முந்தய இந்தியாவில் இருந்த traditional entertainers , இவர்களும் பாரம்பரிய, நடனம் மற்றும் பாட்டில் கைதேர்ந்தவர்கள். கடவுளின் முன் பாட்டு பாடி, நடனம் ஆடுவது இவர்கள் தொழில்.


ஜப்பானிய Geisha : Geisha க்கள் தங்களை மிகவும் அழகு படுத்தி கொள்வார்கள். அதற்கென்றே சிறப்பு மேக்கப், கிமோனோ (Kimono) அணிந்து கொள்வார்கள். இவர்களின் white மேக்கப் மிக பிரசித்தம்.
இந்திய தேவதாசிகள்: இவர்களும் தங்களை மிகவும் அழகுபடுத்தி கொள்வார்கள். அதற்கென்றே சிறப்பு நகைகளும், ஆடையும் உடுத்தினர்.


ஜப்பானிய Geisha : முந்தைய காலத்தில் பெரும்பாலும் இவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது ஏழ்மையான பெற்றோரால் Gion எனப்படும் Geisha க்கள் வாழும் வீட்டுக்கு விற்கப்படுபவர்கள்.
இந்திய தேவதாசிகள்: முந்தய காலத்தில் பெரும்பாலும் இவர்கள், பெற்றோர்களால் கோவிலுக்கு நேர்ந்து விடப்படுபவர்கள்.


ஜப்பானிய Geisha : சிறு குழந்தைகளாக Gion இக்கு வரும் Geisha க்கள், பருவமடைந்ததும் Mizuage என்ற ஒரு விழா நடத்தப்படும், அது முடிந்த பின்னரே ஒரு பெண் முழுமையான Geisha வாக அறியப்படுகிறாள். Mizuage இக்கு முன்னர் அந்த பெண் ஏலத்துக்கு விடப்படுவாள். யார் அதிகமாக ஏலம் எடுக்கிறார்களோ அவர்கள் அவளுடன் அன்று தங்க அனுமதிகப்படுவார்கள்.
இந்திய தேவதாசிகள்: சிறுமிகளாக விற்கப்படும் தேவதாசிகள், பருவமடைந்ததும் கடவுளுடன் அவளுக்கு திருமணம் நடக்கும். அதன் பின்னர் அவள் தேவதாசி என அறியப்படுவாள். தேவதாசி ஆன பின் அவள் உயர்குடி ஆண்களின் விருப்பப்பொருள் ஆக்கப்படுகிறாள்.


ஜப்பானிய Geisha : ஒரு காலத்தில் நன்கு மதிக்கப்பட்ட இவர்கள் பின்னர் பாலியல் தொழில் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்திய தேவதாசிகள்: அரசர் காலத்தில் மிக உயர்ந்த நிலையில் மதிக்கப்பட்ட இவர்களும், பின்னர் படிப்படியாக பாலியல் தொழில் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.


டிஸ்கி: இது எனக்கு தெரிந்த, படித்த விசயங்களை கொண்டு எழுதியது, ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும்.

Thursday, April 8, 2010

Take it easy ஊர்வசி

என்னுடைய முந்தய மங்கையராய் பிறக்க பதிவில், நன்றாக படித்தும், சூழ்நிலையால் படிக்க முடியாமல் கஷ்டப்பட்ட சுதாவை பற்றி எழுதும் போதே எனக்கு இன்னொரு பெண் பற்றி ஞாபகம் வந்தது. இந்த பெண் அடுத்த extreme . அதன் விளைவே இந்த பதிவு.

அவள் என்னோடு முதுநிலை படித்தவள். இவளுக்கு வீட்டில் அனைத்து வசதிகளும் உண்டு. அவள் அம்மா, அப்பா இருவரும் பெரிய வேலை பார்த்து கொண்டிருந்தனர். அவளுக்கு ஒரு தம்பி மட்டுமே. இவளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பது அவள் பெற்றோரின் எண்ணம். அதனால் வீட்டில் கண்டிப்பு அதிகம். ஆனால் அவளோ கல்லூரிக்கு பொழுது போக்க வருவாள்.

பொதுவாக பெண்கள் serious nature கொண்டவர்கள். பெண்களில் ஏமாற்றுபவர்கள் குறைவு, ஏமாறுபவர்கள் அதிகம். ஆனால் இவளோ ஏமாற்றுபவர்கள் லிஸ்டில் இருந்தாள்.

நான் முதுநிலை சேர்ந்த புதிதில், எங்கள் Seniors எங்களுக்கு Welcome party கொடுத்தனர். அதில் எங்களுக்கு அவர்களுடன் நல்ல அறிமுகம் ஏற்பட்டது. நாங்கள் அனைவரும் seniors என்றால் ஒரு மரியாதையுடன் விலகியே இருப்போம், ஆனால் அவளோ எங்கள் seniors சிலரிடம் நட்பை ஏற்படுத்தி கொண்டாள்.

பிறகு அவர்களில் ஒரு சீனியர் ஐ தான் காதலிப்பதாக கூறினாள். எங்களுக்கு அவள் பற்றி எதுவும் அவ்வளவாக தெரியாததாகையால், அவள் சொன்னதற்கு நாங்கள் பதில் ஏதும் சொல்ல வில்லை. பின்னர் ஒரு சீனியர் அக்கா திருமணதிற்காக வெளியூர் செல்ல நேர்ந்தது, அங்கு சென்ற போது இவள் எப்போதும் அந்த சீனியர் அண்ணனுடன் தான் சுற்றி கொண்டு இருந்தாள். நாங்கள் அனைவரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று முடிவுக்கே விட்டோம். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை, அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

பிறகு சில நாட்களில் அந்த சீனியர் அண்ணன் வேலை கிடைத்து வேறு ஊருக்கு சென்று விட்டார், நாங்களும் இரண்டாவது வருடத்தில் அடி எடுத்து வைத்தோம். அப்போது நாங்கள் எங்களுடைய juniors இக்கு பார்ட்டி கொடுக்க வேண்டும். அப்போது ஒரு ஜூனியர் பையன் மிகவும் அப்பாவி அவர், எங்களுக்கு அறிமுகம் ஆனார்.

எங்கள் ஜூனியர், நல்ல அறிவாளி, அவர் இளநிலையில் நன்றாக மதிப்பெண் பெற்று வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் GATE எக்ஸாம் க்கு தன்னை தயார் படுத்தி கொண்டு இருந்தார்.

இந்த பெண்ணின் பார்வை, எங்கள் ஜூனியர் மேல் விழுந்தது. எங்களுக்கு இவள் பற்றி முன்னமே தெரிந்து இருந்ததால், எங்கள் ஜூனியர் இடம் இவளை பற்றி ஜாடை மாடை ஆக சொல்லி பார்த்தோம். ஆனால் அவரோ என்ன மயக்கத்தில் இருந்தாரோ தெரியவில்லை. படிப்பில் அவரின் கவனம் குறைந்தது. ஒவ்வொரு வெள்ளிகிழமை மதியமும் அவர்களை அமிர்தம் தியேட்டர்இல் பார்க்கலாம். அப்படி ஒன்றாக ஊர் சுற்றினார்கள்.

அந்த பையன் அவளை அப்படி காதலித்தான் என்று தான் கூற வேண்டும். ஒரு முறை கையில் காசு இல்லை, ஆனால் இவளுடைய பிறந்த நாள் வருகிறது என்று தெரிந்ததால் அவர் எதோ சினிமாவில் வருவது போல, தன்னுடைய ரத்தத்தை விற்று ஒரு பரிசு பொருள் வாங்கி கொடுத்தார். அதனை அவள் எங்களிடம் எல்லாம் எதோ பெரிய சாதனை தான் செய்து விட்டது போல காட்டுவாள். நாங்கள் அனைவரும் கிட்டத்தட்ட இவள் அவரை ஏமாற்றி விடக்கூடாதே என்று பிராத்தனையே செய்ய தொடங்கி விட்டோம்.

ஆனால் இறுதி ஆண்டு முடிவில், மிகவும் கூல் ஆக ஒருநாள் எங்களுக்கு தன்னுடைய திருமண பத்திரிக்கையை நீட்டினாள். அதில் மாப்பிள்ளை அவளின் மாமா பையன். எங்களுக்கு எல்லாம் தூக்கி வாரிபோட்டது. அப்பொழுது எங்கள் ஜூனியர் பையனின் கதி என்ன என்று கேட்டோம். அவளோ, ஒரு சாரி சொல்லி தான் கடிதம் கொடுத்து விட்டதாக சொன்னாள்.

நான் அவள் கல்யாணத்திற்கு போகவில்லை, ஆனால் என்னுடைய juniors மூலம் நான் பின் தெரிந்து கொண்டது இது தான், அந்த ஜூனியர் பையன் முதல் வருடம் முழுவதும் நெறைய பாடங்களில் தேறவில்லை. பின்னர் காதல் தோல்வியில், GATE எக்ஸாம் இக்கும் படிக்க வில்லை. சில வருடங்கள் காதல் தோல்வியில் துவண்டு இருந்தார். பின்னர் தேறியதாக அறிந்தேன். இப்போது எங்கோ ஒரு தனியார் பள்ளியில் டீச்சர் ஆக வேலை பார்ப்பதாக சொன்னார்கள். எப்படியோ வந்திருக்க வேண்டியவர் அவர், ஆனால் இவள் செய்த சதியால் எப்படியோ ஆகிவிட்டார்.

Tuesday, April 6, 2010

பைத்தியக்கார மாடு (Mad cow)பைத்தியக்கார மாடு- இது வசைச்சொல் அல்ல.

ஒரு மாடு மற்றொரு மாட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?

என்னது! மாடு இறைச்சி சாப்பிடுவதா? ஒரு மாடு எப்படி இன்னொரு மாட்டை சாப்பிடும், மாடு புல்லை தானே சாப்பிடும்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆனால் வெறும் புல்லை தின்ற மாடுகள் புஷ்டியாக இல்லாமல் நோஞ்சான்னாக இருந்தன. அப்படி நோஞ்சான் மாடுகள் கறிக்கு உதவவில்லை என்று மாடுகள் பண்ணை நடத்தும் " Cattle Industry " மக்கள் உணர்ந்தனர். நோஞ்சான் மாடுகள் கொழுக்க சரிவிகித உணவு என்ற ஒன்றை கொடுக்க ஆரம்பித்தனர். ( நாம் சரியாக சாப்பிடாத குழந்தைகளுக்கு எக்ஸ்ட்ரா ப்ரோடீன் உள்ள nutritional drink கொடுப்பது போல)

அவர்கள் கொடுத்த சரிவிகித உணவுக்கு பெயர் "Meat and bone meal ( MBM )". இது மாட்டின் இறைச்சியை பிரித்தெடுத்த பிறகு மீதமுள்ள பொருள்களான எலும்பு, தசை, ரத்தம் .. இவற்றை கொண்டு தயாரிக்கப்படுவது. இந்த MBM இல் ப்ரோடீன் அதிகம் இருக்கும். அதனால் மாடுகள் நன்கு கொழுக்க ஆரம்பித்தன.

மாடுகள் பண்ணை நடத்துபவருக்கும், அதனை கறியாக்கி விற்றவருக்கும் ஏக மகிழ்ச்சி. ஆனால் சில வருடங்களில், மாடுகள் நோய்வாய்ப்பட ஆரம்பித்தன. சுணங்கி படுப்பது, நிற்க முடியாமல் போவது, இறப்பது என்று இருக்கவும், என்ன காரணம் என்று ஆராய ஆரம்பித்தனர்.

ஆராய்ச்சி முடிவில் அவர்கள் கண்டது இது தான். நோய்கள் பல வகைப்படும், பெரும்பாலான நோய்கள் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் உண்டாவது. ஆனால் ஒரு ப்ரோடீன் ஆல் மாடுகளுக்கு இந்த நோய் உண்டாவது கண்டு பிடிக்க பட்டது. அந்த ப்ரோடீனுக்கு " prion " என்று பெயர். இந்த கெட்டுபோன ப்ரோடீன் மாடுகளின் மூளை மற்றும் தண்டுவடத்தில் உள்ள மற்ற நல்ல ப்ரோடீன் களையும் கெடுக்கிறது. விளைவு மாடுகள் மூளை செயல்பாட்டை இழக்கின்றன. மாடுகள் "பைத்தியம்" ஆகின்றன.

இது எப்படி ஏற்பட்டது? வெறும் புல்லை மட்டும் செரிக்கும் உடல் அமைப்பை கொண்டிருந்த மாடுகளுக்கு " MBM " என்ற எக்ஸ்ட்ரா ப்ரோடீன் உணவு அதுவும் மாடுகளின் மிச்சத்தையே கொடுப்பதால் இது உண்டானது என்று கண்டு பிடித்தனர்.

இந்த நோய் தாக்கிய மாடுகளின் இறைச்சியை சாப்பிட்ட மனிதருக்கும் இந்த நோய் உண்டானது. ஒரு சிலர் இறக்கவும் நேரிட்டது. இதனை கண்டு பிடித்த பின்னர் மாட்டு இறைச்சி ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

மேலை நாடுகளில் இறைச்சி உண்ணக்கூடியதா என்று பரிசோதித்த பின்னரே கடைகளுக்கு அனுப்புவர். பல்வேறு பரிசோதனைக்கு உட்படுத்த பட்ட பிறகு விற்கப்பட்ட இறைச்சியில் இப்படி ஒரு நோய் இருந்தது கண்டு பிடிக்க முடியாமல் போனது.

ஆனால் இந்தியாவில் கோழிக்கு உடம்புக்கு முடியாமல் போனால் அது இறைச்சியாக ஆக்கப்படுகிறது. அது உண்ணக்கூடியதா, இதனால் பாதிப்பு எதுவும் வருமா என்று யாரும் நினைத்து பார்ப்பதில்லை.

இந்தியாவில் எப்படி இறைச்சி விற்கப்படுகிறது?

சென்ற முறை நான் இந்தியா வந்திருந்த போது, என் அம்மாவுடன் அதிகாலை வாக்கிங் சென்றேன், எங்கள் வீட்டுக்கு அருகில் ஆடுகள் குப்பை தொட்டியை மேய்ந்து கொண்டு இருந்தன. என்ன இப்போதெல்லாம் ஆடுகள் குப்பை சாப்பிட ஆரம்பித்து விட்டனவே என்று நினைத்து கொண்டே சென்றேன்.

வாக்கிங் முடித்து திரும்பும் போது அதில் ஒரு ஆடு கொல்லப்பட்டு தோல் உரிக்கப்பட்டு கொண்டு இருந்தது. அதனை வாங்க ஒருசிலர் நின்று கொண்டு இருந்தனர்.

Sunday, April 4, 2010

வால்மார்ட்டும், ரங்கநாதன் தெருவில் இருக்கும் கடைகளும்

இது ஒரு சின்ன ஒப்பீடு.

வால்மார்ட்: Electronics, பாத்திரங்கள், துணிமணிகள், மளிகை, சாப்பாடு, பொம்மை, வீட்டுஉபயோக பொருட்கள்.... உலகத்தில் உள்ள அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் வால்மார்ட்.
ரங்கநாதன் தெரு கடைகள்: பாத்திரங்கள், துணிமணிகள், மளிகை, சாப்பாடு, பொம்மை, வீட்டுஉபயோக பொருட்கள், நகைகள் (ஜொலிக்குதே, ஜொலி ஜொலிக்குதே). அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் ரங்கநாதன் தெரு.

வால்மார்ட்: இங்கு வாங்கும் துணி மணிகள் நன்றாக உழைப்பதில்லை என்றாலும் விலை குறைவாக இருப்பதால் அங்கு தான் நாம் வாங்குவோம்.
ரங்கநாதன் தெரு கடைகள்: இங்கு வாங்கும் துணி மணிகள் என்னதான் மட்டம் என்றாலும் அங்கு தான் நாம் வாங்குவோம்.

வால்மார்ட்: டீன் ஏஜ் பசங்கள் படிப்பு செலவுக்காக இங்கே வந்து வேலை பார்க்கின்றனர்.
ரங்கநாதன் தெரு கடைகள்: நெறைய டீன் ஏஜ் பசங்கள், குழந்தைகள் இங்கு வயிற்றுக்காக வேலை பார்க்கின்றனர்.

வால்மார்ட்: இங்கு வேலை பார்பவர்களுக்கு சம்பளம் என்று அவர்கள் கொடுப்பது மிக சொற்பம் (மணிக்கு $8), அவர்களுக்கு கிடைக்கும் benifits ம் மிக குறைவு. வேலை அதிகம்.
ரங்கநாதன் தெரு கடைகள்: இங்கு வேலை பார்ப்பவர்களுக்கு சோறு போட்டு தங்க இடம் கொடுத்து எவ்வளவு சம்பளமாக கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. மிக மிக சொற்பம் என்பது மட்டும் உண்மை. வேலை அதிகம்.

வால்மார்ட்: இங்கு வேலை பார்ப்பவர்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று கூறப்படுவதுண்டு. அப்படி மீறப்படும் போதெல்லாம் பிரச்சனையை தவிர்க்க அந்த ஸ்டோர் ஐ மூட முயற்சிப்பார்கள்.
ரங்கநாதன் தெரு கடைகள்: மனித உரிமைகளா அப்படின்னா?


இந்த பதிவு நேற்று நான் பார்த்த அங்காடித் தெரு படத்தின் பாதிப்பு.

Friday, April 2, 2010

மங்கையராய் பிறக்க ...

சில நாட்களுக்கு முன் சிறுமுயற்சி முத்துலெட்சுமி அவர்களின் மீள் பதிவான இழப்பின் வலிகள் படிக்க நேர்ந்தது. அது என்னுடைய வாழ்கையில் நான் சந்தித்த ஒரு சில பெண்களின் வாழ்க்கையை எனக்கு உடனே ஞாபகப்படுத்தியது. அதன் விளைவே இந்த பதிவு.

அவள் பெயர் சுதா. நான் இளநிலை இயற்பியல் மீனாக்ஷி கல்லூரியில் சேர்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது அவளும் எங்களுடன் நின்று கொண்டிருந்தாள். நல்ல உயரம், அழகு அவளுக்கு. ஆனால் கண்ணில் ஒரு சோகம் எப்போதும் இருந்தது. பிறகு எங்களை போலவே வரிசையில் நின்று கொண்டிருந்த இளநிலை இயற்பியலில் சேர்ந்த அனைவரும் தோழியர் ஆனோம்.

தோழியர் ஆன சில நாட்களில் எனக்கு தெரிந்து விட்டது. சுதாவுக்கு இயற்பியல் படிக்க விருப்பமில்லை. தான் improvement எழுத போவதாகவும் பின் டாக்டர் படிப்புக்கு முயற்சி செய்ய போவதாகவும் சொல்லி முயற்சி செய்து கொண்டு இருந்தாள். அவள் improvement இக்கு படித்து கொண்டு இருந்தாலும் first semester இல் அனைத்து பாடத்திலும் 90% மதிப்பெண் பெற்று இருந்தாள். அதிலும் கணித துணைபாடத்தில் அவள் நூற்றுக்கு நூறு. அதே அடுத்த semester லும் தொடர்ந்தது. எப்படி படித்தாள் என்பது எங்களுக்கு தெரியாது.

நானோ +2 வரை தமிழ் வழி கல்வி பயின்று விட்டு தடவி தடவி முதல் semester இல் 60% தான் எடுக்க முடிந்தது. ஆனால் அவளோ எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாக செய்வாள். அவளை பார்த்து நான் பிரமித்திருக்கிறேன்.

பிறகு அவள் improvement இல் நல்ல மதிப்பெண் பெற்றாள். ஆனாலும் அவள் ஏனோ டாக்டர் படிப்பில் சேரவில்லை. ஏன் என்று எனக்கு தெரியாது. சுதாவுக்கு ஒரு அக்கா ஒரு தங்கை உண்டு. அவள் அக்கா கடைசி வருடம் டாக்டர் க்கு படித்து கொண்டிருந்தார்கள். அவள் தங்கை +2 படித்து கொண்டிருந்தாள்.

அவளின் மதிப்பெண்ணும் ஒவ்வொரு semester இலும் 90-95 % குறையாமல் இருந்தது. இரண்டாம் ஆண்டு வரை ஒவ்வொரு semester இலும் அவள் கணிதத்தில் 100/100 . பின் இரண்டாவது வருட முடிவில் தனக்கு கல்யாணம் ஆக போவதாக சொன்னாள். எங்களுக்கு ஒரே ஆச்சரியம். ஏனென்றால் அவள் அக்காவுக்கு திருமணம் ஆகவில்லை. என்ன என்று விசாரித்த போது தன்னுடைய தாய் மாமாவை கல்யாணம் செய்து கொள்ள போவதாக சொன்னாள்.

எங்கள் தோழியர் அனைவரும் அந்த கல்யாணத்திற்கு சென்றோம். பிறகு தான் தெரிந்தது. அவள் தாய் மாமா பெரிய பணக்காரர், அதனால் வயது வித்தியாசம் அதிகம் ஆனாலும், சொத்து வெளியில் சென்று விட கூடாது என்று இவளுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள் என்று.

அவள் தாய் மாமா அதிகம் படிக்காதவர் என்பதால் அவள் improvement எழுதி நல்ல மதிப்பெண் பெற்ற போதும் அவளை மருத்துவம் படிக்க வைக்கவில்லை. அதனாலே டாக்டர்க்கு படிக்கும் அவள் அக்காவால் தாய் மாமாவை திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனது என்றும் பின் எங்களுக்கு தெரிந்தது.

அவள் படிப்பை நிறுத்தி விடுவார்களோ என்று நாங்கள் பயந்தோம். ஆனால் சுதா வழக்கம் போல மூன்றாம் ஆண்டு படிக்க கல்லூரிக்கு வந்தாள். எங்களுக்கு சந்தோசமாக இருந்தது. அவளின் மதிப்பெண் கொஞ்சம் குறைய ஆரம்பித்தாலும் இன்னும் அவள் முதல் மார்க் தான். சில மாதங்கள் ஆனதும் அவள் எப்போதும் பெரிய டிரஸ் போட்டு கொண்டு வர ஆரம்பித்தாள், பெரிய நோட்புக் கொண்டு வயிற்றை மூடி கொண்டு வருவாள். ஐந்து ஆறு மாதம் வரை அவள் தான் உண்டாகி இருப்பதை எங்களிடம் சொல்லவில்லை. ஆனாலும் நாங்கள் அவளின் நடவடிக்கை பார்த்து சந்தேகப்பட்டோம்.

கடைசி semester பரிட்சையும் அவள் பிரசவமும் ஓரிரு மாத இடைவெளியில் வந்தது. எங்கள் ஆசிரியர்கள் அனைவரும் அவளை எப்படியாவது பரீட்சை எழுத வைத்து விடவேண்டும் என்று முயற்சித்தார்கள். ஏனென்றால் அவள் பெற்ற மதிப்பெண்ணுக்கு அவள் University first ஆக கட்டாயம் வந்துவிடுவாள் என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும் அவளால் பரீட்சை எழுத முடியவில்லை. கல்லூரிக்கும் வரவில்லை. அவள் வாழ்கை என்ன ஆனது என்று எனக்கு அப்புறம் தெரியாது.

அவள் நன்றாக படிக்கிறாள் என்று அவள் குடும்பத்தில் அனைவரும் அறிந்து இருந்தனர். பிறகு ஏன் அவளுக்கு மட்டும் திருமணம் செய்து வைத்தனர். கடைசி semester ஆவது அவளை எழுத அனுமதித்து ஒரு பட்டதாரி ஆகவாவது அவளை அனுமதித்து இருக்கலாம். ஆனாலும் அவளை ஏன் இப்படி படிக்க விடாமல் செய்து விட்டனர் என்று இன்று வரை எனக்கு தெரியவில்லை. அவளுக்கு இருந்த திறமைக்கு கட்டாயம் பெரிய ஆளாக வந்து இருப்பாள். ஆனால் இன்று எங்கு எப்படி இருக்கிறாளோ தெரியவில்லை. இன்றும் என் மனதை தைக்கும் நிகழ்ச்சி இது.