Thursday, January 28, 2016

"குச் குச் ஹோதா ஹை" முதல் சன்னி லியோன் IBN இண்டர்வியு வரை

கடந்த சில வாரங்களில் இரண்டு விஷயங்கள் பார்க்க நேர்ந்தது. ஒன்று நான் கல்லூரி படிக்கும் காலத்தில் வந்த "Kuch Kuch Hota Hai" படமும் நேற்று நான் சேட்டைக்காரன் அவர்களின் தளத்தில் வாசித்த சன்னி லியோன் இண்டர்வியு குறித்த பதிவும் அதனை தொடர்ந்து நான் பார்த்த அந்த யூ டுயூப் இண்டர்வியுவும்.

முதலில் Kuch Kuch Hota Hai பற்றி என் கல்லூரி காலத்தில் வந்த ஒரு கல்ட் படம் அது. பாடல்களும் சரி, ஷாருக்கான் மற்றும் கஜோல் இருவரிடம் இருந்த கெமிஸ்ட்ரி, கல்லூரி வாழ்க்கை  என்று அனைவரையும் பைத்தியம் பிடிக்க வைத்தவை. எனக்கு ஹிந்தி அதிகம் தெரியாது என்றாலும், என் கல்லூரி தோழிகளிடம் பேச வேண்டும் அல்லது எனக்கும் தெரியும் என்று காட்ட வேண்டும் என்பதற்காகவே அதன் பாடல்களை காசெட் களில் கேட்ட காலம் அது. பின்னர் எங்கள் கல்லூரி தோழிகள் எல்லாம் சேர்ந்து அந்த படத்திற்கு வேறு சென்றோம். அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் பாடல்களும் எனக்கு அத்துபடி.



அதே படம் கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து இப்பொழுது நெட்ப்ளிக்ஸ் புண்ணியத்தில் பார்க்க நேர்ந்தது. என்னுடைய தோழிகள் வேறு, "Kuch Kuch Hota Hai" netflix இல் வந்து இருக்கு பார்க்கலையா, என்று சொல்ல. என்  காலேஜ் நாட்களை எண்ணியபடி அந்த படத்தை பார்த்தேன்.. ஆனால் இப்போது எனக்கு அந்த படத்தின் ஒவ்வொரு விசயமும் ஸ்டுபிட் ஆக இருந்தது. பின்னர் சில விசயங்களும் உரைக்க ஆரம்பித்தது.

முதலில் ஷாருக் கின் ராகுல் என்னும் கரெக்ட்டர் கல்யாண சந்தையில் அல்லது பொதுவாக பெண்ணை பற்றிய இந்திய ஆணின் எதிர்பார்ப்பின் மொத்த  உருவமாக தெரிந்தது. அவரும் கஜோலும் நண்பர்களாக பழகுவார்களாம், ஆனால் இவர் அந்த பெண்ணை காதலிக்க மாட்டாராம், ஏனெனில் அந்த பெண் "ஆண் தன்மை உள்ளவாராக , பாஸ்கெட் பால் விளையாடி கொண்டு" திரிவதால் இவருக்கு காதல் வரவில்லையாம். ஆனால் தன்னுடைய கல்லூரியில் பெண்மையுள்ள
"ஹாட் சிக்" ஒரு பெண் வந்தவுடன் அவர் அந்த "ஹாட் சிக்" பின்னாடி சுற்றுவாராம், "காதலிப்பாராம்". ஆனாலும் அந்த "ஹாட் சிக்கை" அவர் "கல்யாணம் செய்ய " அந்த "ஹாட் சிக்" தனக்கு நம்முடைய கலாச்சாரமும் தெரியும் என்று "ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே" என்று சாமி பாட்டு பாடி பின்னர் தனக்கு கோயில் போகும் பழக்கம் எல்லாம் இருக்கிறது என்று காட்டிய பின்னர், இவர் கல்யாணமும் செய்து கொள்வாராம். ஒரு வேலை அந்த பெண்ணுக்கு நம்முடைய கலாச்சாரம் தெரியாது என்று வைத்து கொண்டால் இவர் அந்த பெண் பின்னால் சுற்றுவதோ அல்லது அந்த பெண்ணிடம் பேசுவதோ அல்லது அந்த பெண்ணை காதலிக்கவும் செய்யலாம். ஆனால் கல்யாணம் செய்து கொள்ள மாட்டோம். ஏனெனில் அந்த பொண்ணுக்கு இந்திய கலாச்சாரம் தெரியாது என்று புறக்கணித்து இருக்க வாய்ப்புகள் உண்டு.

பிறகும், அந்த பெண் இறந்தவுடன் தன்னுடைய பழைய தோழியை சந்திக்க அவரின் மகளே வழி  ஏற்படுத்தி கொடுப்பாராம், இவரும் தற்போது "பெண்மையாக" மாறி உள்ள தன்னுடைய தோழியை பார்த்ததும் "காதல்" வந்து விடுமாம். ஆனால் அந்த தோழியோ, இன்னும் பழைய காதலன் நினைவாகவே இருப்பதாகவும் பழைய காதலன் வந்து தன்னுடைய கல்யாண தினத்தில் வந்து "I love you" சொன்னவுடன் உருகி போய் திரும்ப சேருவதாகவும் ஒரு அப்பட்டமான அசிங்கமான இந்திய ஆணின் ஆணாதிக்க படமாக எனக்கு தெரிந்தது. அதாவது, ஆண் என்றால் எத்தனை காதல் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம், எத்தனை பேரையும் காதலிக்கலாம் ஆனால் பெண் என்றால், காதல் அல்லது கல்யாணம் என்றால் அது ஒரு முறை. இல்லை என்றால் அவள் ஒழுக்கமான பெண் இல்லை. அல்லது இந்திய norm ன் படி அவள் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவள் இல்லை. இது ஒரு எழுதபடாத சட்டம்.




இந்த படத்தை பார்த்து ஏற்கனவே புழுங்கி கொண்டு இருந்த எனக்கு சன்னி லியோன் அவர்களின் IBN இண்டர்வியு பார்க்க நேர்ந்தது. சன்னி லியோன் பற்றி ஒரு சில விஷயங்கள் கேள்வி பட்டு இருந்தாலும். அவரை பற்றி நான் முழுதும் அறிந்திருக்க வில்லை. என்ன ஒரு confident ஆன பெண் அவர் என்பதை அவரின் ஒவ்வொரு பதிலும் பறை சாற்றியது. அவரை பற்றி கேள்வி கேட்ட அந்த தொகுப்பாளார் ஒரு டிபிகல் இந்திய கிசுகிசு எழுத்தாளர் என்ன கேட்பாரோ அல்லது என்ன சென்செசனல் விஷயம் வேண்டும் என்று எதிர் பார்ப்பாரோ அந்த லெவலில் கேள்வி கேட்டு கொண்டு இருந்தார்.


"உங்கள் வாழ்கையில் நீங்கள் செய்த பெரும் தவறு என்ன?
உங்களின் பழைய வாழ்க்கை உங்களை எப்பொழுதாவது பாதித்தது உண்டா?
நீங்கள் உங்கள் வாழ்கையில் ஏதேனும் மாற்றி செய்ய நினைத்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்?
உங்களுடன் என் மற்ற நடிகர்கள் நடிக்க தயங்குகிறார்கள் தெரியுமா?"



என்ன முட்டாள் தனமான கேள்விகள் இவை.

 அவர் என்ன சன்னி இடம் இருந்து பதில் பெற விரும்புகிறார் என்று எல்லாருக்கும் புரிந்து இருக்கும். அதாவது தான் நீல படத்தில் நடித்தது ஒரு விபத்து என்னை அதில் பிடித்து தள்ளினார்கள் என்று அழுகை பிழிய பிழிய சொல்ல வேண்டும், இதை தான் அவர் எதிர்பார்க்கிறார்.

சன்னி கிளியர் ஆக ஒன்று சொல்லுகிறார் திரும்ப திரும்ப சொல்லுகிறார், இது என்னுடைய வாழ்க்கை, இது எனக்கு பிடித்து நானே செய்தது, என்னை யாரும் கட்டாய படுத்த வில்லை. எல்லாருக்கும் ஒரு தொழில் இருப்பது போல, இது என்னுடைய தொழில். என்னுடைய வாழ்க்கை இது, எனக்கு பிடித்ததை செய்கிறேன் என்னுடன் யாரும் நடிக்க தயங்கினால் அது என் பிரச்னை அல்ல.

என்ன மச்சுர்ட் ஆன பதில்கள் இவை.

"லேட் நைட் ஷோ நடத்தும் கபில் உங்களை வைத்து நிகழ்ச்சி நடத்த தயங்கினாராமே"
என்று கேட்கிறார் அந்த பேட்டியாளர். அதற்கும், அவர், "நீங்கள் சொல்லி தான் எனக்கு கபில் இப்படி சொன்னார் என்று தெரியும், நான் அவரின் பல லேட் நைட் ஷோவில் பங்கேற்று இருக்கிறேன்." என்று நறுக்கு தெறித்தார் போல ஒரு பதில் 

"நான் உங்களை போன்ற பெண்ணிடம் ஏன் இப்படி பேட்டி காண வேண்டும் அது என்னுடைய நல்ல பேருக்கு இழுக்கு"

"விருப்பம் இல்லாவிட்டால் சொல்லுங்கள் நான் சென்று விடுகிறேன்"  இது பதில்.

ஒரு பெண் இது என்னுடைய வாழ்க்கை, அதனை முழுமையாக வாழுகிறேன் என்கிறார். தான் இந்தியா வந்தவுடன் தான் பார்த்த கல்டுரல் /கலாச்சார ஷாக் பெரியது என்கிறார். ஒரு பெண் நீல படங்களில் நடிப்பது என் தொழில் என்று சொல்லுவது இவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. அந்த தொழிலை வைத்து அவரின் கரெக்டேரை முடிவு செய்யும் உலகம் அது.  எப்படி ஒரு பெண் இது என் தொழில்  செய்யலாம். பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் ஒரு கோடு போட்டு வைத்து இருக்கிறோமே அதனை எப்படி இந்த பெண் மீறலாம். அப்படி மீறினால் நாங்கள் இப்படி தான் பப்ளிக் ஆக கேள்வி கேட்டு அவமான படுத்துவோம். என்பதை இருந்தது அந்த கேள்வி கேட்டவரின் நடத்தை.

இந்த பேட்டியை பார்த்தவுடன், நிர்பயா கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட ஒரு கைதி, "அந்த பெண் எப்படி இரவு நேரத்தில் சினிமா பார்க்கலாம், அதற்க்கு தான் இந்த தண்டனை நாங்கள் தந்தோம்" என்று முட்டாள் தனமாக சொன்னானோ, அவனுக்கும், சன்னி லியோனை  கேள்வி கேட்ட அந்த தொகுப்பாளருக்கும் எந்த வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை.


டிஸ்கி
இது கன்றவேர்சியல் டாபிக் என்பதால் நிறைய விமரிசனங்கள் வரலாம். இங்கு குறிப்பிட்ட அனைத்த்தும் என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டோ சமூக பழக்க வழக்கங்களை சாடியோ இங்கு எழுதவில்லை. அப்படி யாரும் புண் படுத்தியதாக எடுத்து கொண்டால் அது என் பொறுப்பு அல்ல.


நன்றி.

Monday, January 18, 2016

தொலைந்த ஏரியும், ராஜாவின் ஆளுமையும்!

முதலில் நான் பார்த்த குழந்தைகள் நிகழ்ச்சி பற்றியது.

எப்பொழுதும் நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. சில நேரங்களில் முகுந்துடன் அவனுடைய சேனல் பார்ப்பதை தவிர. PBS எனப்படும் பப்ளிக் தொலைக்காட்சி (நம்மூர் தூர்தர்ஷன் போல) ஒன்றே ஒன்று மட்டுமே பார்க்க அதுவும் வார இறுதி நாட்களில் பார்க்க அனுமதி உண்டு. அப்படி ஒரு நாள் தொலைக்காட்சி நேரத்தில் பார்த்த ஒரு நிகழ்ச்சி "ப்ளம் லேன்டிங்" எனப்படும் ஒரு குழந்தைகள் நிகழ்ச்சி. 

அந்த நிகழ்ச்சியின் மெயின் கேரக்ட்டர் "ப்ளம்" எனப்படும் ஒரு ஏலியன். வெளி உலகில் இருந்து வந்து பூமியின் ஒவ்வொரு விசயத்தையும் இயற்கையையும் பார்த்து அதிசயிக்கும் ஒரு பிராணி ப்ளம். அப்படி ஒரு நாள் வந்த நிகழ்ச்சி, "லாஸ்ட் லேக்" எனப்படும்  ஆஸ்திரேலிய பாலைவனத்தில் தொலைந்த ஏரி பற்றியது.

எப்படி ஒரு 3 மாத இடைவெளியில் ஒரு பெருமழை பெய்து, ஒரு பாலைவனம் சோலைவனமாக மாறுகிறது பின்னர் மறுபடியும் பாலைவனமாக மாறுகிறது. என்பதனை ஒரு 5 நிமிட நிகழ்ச்சியில் பொருத்தி மிக மிக இன்றேஸ்டிங் ஆக அளிக்கிறார்கள் என்று நினைத்தால் அதிசயமாக ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் தண்ணீர், மழை. அதனை கொண்டு ஆக்காவும் முடியும் அழிக்கவும் முடியும் என்று ஒரு 5 நிமிட ப்ரோக்ராமில் கற்று கொடுத்தது அமேசிங்.

என்னுடைய ஆறாவது அல்லது ஏழாவது படிக்கும் போது என்று நினைக்கிறன். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பற்றி புவியியலில் மனபாடம் செய்தது. ஆஸ்திரேலியா நிறைய பாலை வனங்கள் கொண்டது என்று அறிந்தது /மனபாடம் செய்தது ஆறாவது படிக்கும் போது. அதன் பின்னர் எதுவும் நான் படித்தது இல்லை. ஆனால் ஒரு 1 வது படிக்கும் முகுந்த், நான் ஆறாவதில் படித்ததை விட நிறைய தெரிந்து கொண்டு இருக்கிறான். அதை போலவே, மாங்கரூவ் காடுகள் எனப்படும் சதுப்பு நில காடுகள் எப்படி சிறு கடல் மீன்கள் வளர, மீன்களுக்கு டே கேர் போல இருக்கின்றன என்று பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் தற்போது இருக்கும் குழந்தைகள் நிறைய விசயங்களை விளையாட்டாக கற்று கொள்ளுகிறார்கள். சில நேரங்களில் பொறமை கூட பட தோன்றுகிறது.

சில "ப்ளம் லேன்டிங்" வீடியோக்கள் இங்கே






அடுத்த விஷயம் இசைஞானி இளையராஜா பற்றியது. 

எங்கள் தமிழ் பள்ளியில் வருடாவருடம் பொங்கல் திருவிழா நடக்கும். ஒவ்வொரு வருடமும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் தன்னார்வ தொண்டர்களும் பொங்கல் குறித்து அதனை சார்ந்த விசயங்களை ஆடல் பாடல் நடிப்பு மற்றும் கவிதை கட்டுரை என்று அரங்கேற்றுவது உண்டு. அப்படி நிறைய நிறைய ஆட்டங்கள் பாட்டங்கள் என்று இந்த வருடமும் கலை கட்டியது.

பொங்கல் பண்டிகையை பற்றியதல்ல இந்த பதிவு..ஆனால் எப்படி இளையராஜா என்னும் ஒரு ஆளுமை நம்மில் கலந்து இருக்கிறார் என்பதனை பற்றியது. உதாரணமாக, நீங்கள் எந்த கிராமியம் சம்பந்தமான ஒரு விஷயம் யோசித்தாலும் அல்லது பாட்டை நினைத்தாலும் உடனே நமக்கு ஒரு இசை ஞாபகத்திற்கு வரும் என்றால் அது இளையராஜா இசை என்பதை யாரும் மறுக்க முடியாது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது தற்போது ஹாட் ஆக இருக்கும் தாரை தப்பட்டை தீம் மியூசிக் இல் பொங்கல் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அய்யா..என்ன ஒரு மியூசிக். கேட்கும் அனைவரையும் எழுந்து ஆட வைக்கும் மியூசிக்..


அதனை தொடர்ந்து "பச்சைக்கிளி பாடும் பாட்டு", "மாரி மழை பெய்யாதோ!! "சில பாடல்கள் சில ரஹ்மானின் பிறரின் அதிக இரைச்சல் இசையிலும்,இசை என்று ஒன்று இசைத்தாலும்  இரைச்சலே மிச்சம் இருந்த மாதிரி ஒரு உணர்வு.,ஆனால் அடுத்து  வந்த "பூமியே எங்க சாமியம்மா" . என்ன ஒரு பாட்டு..அதற்க்கு மழலைகளின் அருமையான ஆட்டம். அருமை அருமை. மொத்த அரங்கமும் ஆரவாரமாக ரசித்தது.



ஒன்று மட்டும் நிச்சயம். எத்தனை எத்தனை கத்து குட்டிகள் வந்து நாங்களும் இசை அமைகிறோம் என்று பீற்றி கொண்டாலும். ராஜா என்னும் ஒரு ஆளுமையை அசைத்து கூட பார்க்க முடியாது.

டிஸ்கி 

இது என்னுடைய பார்வையில் இருந்து எழுதியது மட்டுமே..மற்ற இசை கலைஞர்கள் இசையை குறை கூற இல்லை இங்கு.






Sunday, January 10, 2016

ஆபிஸ் பாலிடிக்ஸ்: உங்களின் புது ஐடியா வை காப்பாற்றுவது எப்படி?

புது வேலையில் சேர்ந்தாயிற்று. புது டீம். உள்ளே நுழைந்தவுடன் தான் தெரிந்தது, அங்கு என்னுடன் வேலை பார்த்த பழைய நண்பர் ஒருவர் வேலை செய்கிறார் என்று. டீமை பற்றி தெரிந்து கொள்ள என்று லஞ்சுக்கு அழைத்து சென்றதில் ஒன்று விளங்கி விட்டது. பயங்கர பாலிடிக்ஸ் இருக்கும் டீம் இது என்று.

பொதுவாக வேலைக்கு சேரும் நிறைய மக்கள் இதனை அனுபவித்து இருப்பார்கள். நீங்கள் எந்த டீம்க்கு சென்றாலும் அங்கு ஒரு சில பழம் தின்று கொட்டை போட்ட சில பெருசுகள் இருக்கும். பல வருட வேலை அனுபவம் இருக்கு என்று இவர்கள் நடத்தும் கூத்து சரி ஜோக் ஆக இருக்கும். அதாவது பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு ப்ராஜெக்ட் இல்  ஒரு விஷயம் செய்து இருப்பார்கள். உதாரணமாக ஒரு சாப்ட்வேர் கோடில் ஒரு  புள்ளி வைத்து இருப்பார்கள், அப்போதைய தேவைக்கு இந்த புள்ளி தேவை பட்டு இருக்கும். ஆனால், இப்பொழுது புள்ளி வைத்து கோலம் போட்டு அதில் பூ கூட வைத்து இருப்பார்கள். அந்த அளவு டெக்னாலஜி முன்னேறி இருக்கும். ஆனாலும் இந்த பெருசுகள். இன்னும் புள்ளி தான் சரி என்று பிடித்து கொண்டு இருப்பார்கள். அதிக வருடம் இருப்பதால் பிசினஸ் நன்கு தெரிந்து இருப்பார்கள், அல்லது பிசினஸ் மக்களுடன் நல்ல தொடர்பில் இருப்பார்கள் என்பதால், நாம் எதுவும் சொல்ல முடியாது. சொன்னால், இது தான் பிசினஸ் வேண்டும் என்று சொல்லுகிறார்கள் அதனால் இது தான் சரி. என்று திரும்ப திரும்ப சொல்லுவார்கள்.

இவர்களை பொறுத்த வரை இது ஒரு ஜாப் செக்யூரிட்டி. அதனை தவிர எதுவும் தெரியாது என்பதால், நமக்கு சொல்லியும் கொடுக்க மாட்டார்கள். நாமாக அவர்கள் வாயில் இருந்து எதுவும் வாங்க முடியாது. திரும்ப கேட்டாலும் எனக்கு நிறைய வேலை இருக்கிறது, ஈமெயில் அனுப்புங்கள்..அல்லது மீட்டிங்இல் சொல்லுகிறேன் என்று சொல்லுவார்கள்...ஆனால் சொல்லவே மாட்டார்கள்.

இது தான் தற்போது நான் இருக்கும் ஒரு சூழல் . இப்படி பட்ட ஒரு சூழலில் உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கிறது அதனை எப்படி ப்ரொமோட் செய்வது, நாம் சொலும் போது வரும் எதிர்ப்புகளை சமாளிப்பது எப்படி என்று தேடி கொண்டு இருந்த போது, Buy-In  from  Kotter International என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது.  அதில் கூறப்படும் சில ஆபீஸ் பொலிடிக்ஸ் விசயங்கள்.


ஒரு ஐடியா இருக்கிறது அதனை கொல்ல அல்லது வளரவிடாமல் செய்ய செய்யப்படும் சில தந்திரங்கள்.

  1. பயம் ஏற்படுத்துதல்: இந்த ஐடியா ரொம்ப ரிஸ்கி ஆனது. இது தோல்வி அடைய நிறைய சான்ஸ் உள்ளது. பின்னர் அனைவருக்கும் பிரச்னை கொண்டு வந்து விடும். இதுவே முதல் தந்திரம். பயம் ஏற்படுத்தி விட்டால் அது ஒரு தொற்று நோய் போன்றது. பின்னர் அது பரவி, எல்லாரும் இதனை செய்வது பிரச்னை என்று விலகி போய் விடுவார்கள். உங்களையும் கொடுக்கிற வேலைய பாரு உனக்கு எதுக்கு இந்த ரிஸ்கு என்று அட்வைஸ் செய்வார்கள்.
  2. இழுத்து அடித்தல்: அடுத்த தந்திரம் இழுத்தடித்தல். அந்த மீட்டிங் இந்த மீட்டிங், அந்த கேள்வி இந்த கேள்வி என்று ஆயிரம் கேள்விகள் கேட்பது. முடிவிலி யாக தொடர்ந்து அங்கு இங்கு என்று இழுத்தத்டித்து அந்த ப்ராஜெக்ட் அல்லது ஐடியா தற்போதைய சூழலுக்கு தகுதி இல்லாமல் போகும் வரை செய்வது 
  3. குழப்பிவிடுவது: ஐடியா பற்றி பேசும்போது அல்லது மீட்டிங் வைக்கும் போதும் தேவை இல்லாமல் சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்பது. அதனை பற்றி பதில் சொல்ல முடியாமல் அல்லது தெரியாமல் ஐடியாவை சொல்பவர் குழம்பி நிற்கும் போது, "இதற்க்கு தான் சொன்னேன் இந்த ஐடியா வேலை செய்யாது என்று".. என்று சொல்லி ஐடியா வை குழி தோண்டி புதைப்பது.
  4. நேரடி தாக்குதல்: ஐடியா சொல்பவரை பற்றி சந்தேகம் ஏற்படுத்துவது. இவர் எதிரி அல்லது எதிரி டீமில் இருந்து வந்தவர். குழப்பம் ஏற்படுத்த என்று வந்தவர் என்பது போன்று திரித்து விடுவது. அல்லது ஐடியா சொல்பவரின் நடத்தையை சந்தேகிப்பது..
இது தான் நடக்கும் என்று நான் எதிர் பார்த்து இருந்ததால் பெருசுகள் ஏற்படுத்தும் பிரச்னை குறித்து அதிகம் கவலை படவில்லை. தற்போது இதனை எப்படி சமாளிப்பது என்று சில விஷயங்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். வேலை மட்டுமே வாழ்க்கை இல்லை, உலகம் மிக பெரியது என்று மனதில் திரும்ப திரும்ப சொல்லி கொண்டு ரிலாக்ஸ் செய்து கொண்டு இருக்கிறேன். மீண்டு வந்தவுடன் அதனை குறித்து எழுதுகிறேன்.

புது வருடத்தின் முதல் பதிவு இது. அனைவரும் பொங்கல் பண்டிகைக்கு தயாராகி கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறன். அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

நன்றி.