Monday, May 23, 2016

சோசியல் மீடியா சாதியும்,நீதியும், தண்ணீர் தண்ணீரும்!


கடந்த 6 மாதங்களாக சோசியல் மீடியாவில்  எங்கு திரும்பினாலும் அரசியல், அரசியல் என்று ஒரே அரசியல் மட்டுமே. இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவரும் இதனை ஒரு பொழுது போக்காக, அவுல் மெல்ல, விவாதிக்க, நன்றாக தீனி போட்டது இந்த சோசியல் மீடியா. FB, வாட்ஸ் ஆப், ட்விட்டர், ப்ளாக்..என்று என்ன என்ன இருக்கிறதோ அங்கெல்லாம் செம தீனி. 

எங்க கட்சி தான் ஜெயிக்கும்.உன்னை விட ஒரு ஓட்டாவது கூட வாங்கி கட்டுறேன் பாருங்க ...எங்கள் சாதி/இன  பலம் தெரியுமா, பாருங்கள். என்று கட்சிகளும் மீம்ஸ் மூலமும் வீடியோ மூலமும் பிரச்சாரம் தூள் பறந்தது.நிறைய மக்கள் தங்களின் சாதி வேட்பாளர் யாரேனும் போட்டியிட்டால் தங்களின் தளங்களில் பப்ளிக் ஆக பிரச்சாரம் செய்தனர். இது எங்க சாதி..என்று பலர் பப்ளிக் ஆக அறிவித்து, சாதி பெருமை பேசினர். அதிலும் அப்படி தங்கள் சாதியை பற்றி சிலாகித்து செய்தி வெளியிட்ட பலரும் நன்கு படித்து நல்ல பதவியில் அல்லது IT கம்பனியில் வேலை பார்க்கும் பலர். யார் போட்டியிடுகிறார், அவர் செய்த நல்லது என்ன? என்று யோசிக்கும் நிலையில் கூட யாரும் இல்லை. எனக்கெனவோ,இந்த தேர்தல்  சாதி வெறியை நிறைய ஊக்குவித்ததாக தோன்றியது. 


இதே மக்கள் பலர், சென்னை வெள்ளம் வந்த போது வரிந்து கட்டிக்கொண்டு அரசியல் வாதிகளையும் கவர்மெண்ட்ஐயும் காய்ச்சு காய்ச்சு என்று சோசியல் மீடியாவில் காய்ச்சியவர்கள். சென்னை வெள்ளத்தில் உதவி செய்த சகாயம் IAS, மற்றும் நடிகர்கள் சித்தார்த், RJ பாலாஜி எல்லாரையும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுங்கள் என்று நிறைய செய்திகள், பெட்டி செய்திகள், மீம்கள் என்று தூள் பரத்தினார்கள். சரி, மக்கள் முன்னேறிட்டாங்க போல என்று சந்தோசமாக இருந்தது. ஆனால், நடந்தது என்னவென்றால் இப்படி சோசியல் மீடியாவில் நீதி பேசிய பலர் ஓட்டு போடவில்லை. கேட்டால் நேரம்/காலம்/விருப்பம் இல்லை/... என்று பல நொண்டி சாக்குகள்.
சாதி என்ற ஒன்று எப்படி இந்த தேர்தலில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது..
நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம்!, என்று என்னையே கேள்வி கேட்க தூண்டியது.

இந்த நிலையில் பல நாட்களுக்கு பிறகு, பாலச்சந்தர் அவர்களின் "தண்ணீர் தண்ணீர்" படம் பார்க்க நேர்ந்தது. 1981 ஆம் ஆண்டு வந்த படம் அது. அது படம் என்பதை விட  பாடம் என்பதே சரி. படம் வந்து கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆன பின்பும், இன்னும் அதில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் இன்றைய அரசியலுக்கும் சரி, தேர்தலுக்கும் சரி..சீனுக்கு சீன் அப்படியே ஒத்து போகிறது. மக்களின் சாதியை குறி வைத்து நடக்கும் தேர்தல் பிரச்சாரங்கள், அதனை சார்ந்த காட்சிகள், அரசு எந்திரம் எப்படி இருக்கிறது என்பதற்கான காட்சிகள் என்று அந்த படம் ஒரு காவியம் என்று தான் சொல்ல வேண்டும். இவை போன்ற படங்கள் இனிமேல் வருமா, ஏக்க பெருமூச்சு மட்டுமே நம்மில்.

அரசு எந்திர செயல்பாடு குறித்த அந்த படத்தின்  சில காட்சிகள் இங்கே!!.

இதில் ஜோக் என்னவென்றால் இந்த சோசியல் மீடியா என்னும் மாய உலகை உண்மை என்று நம்பி தான் வெற்றி அடைந்துவிட்டோம் என்று மமதையில் ஆடிய நிறைய பேர். அவர்களின் கதி தற்போது என்ன என்று நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

டிஸ்கி 

இது இன்றைய அரசியல் குறித்தும், சோசியல் மீடியா குறித்தும் என்னுடைய எண்ணங்கள் மட்டுமே. யாரையும் குறிக்கவில்லை.
பல வருடங்களுக்கு பிறகு கோடை விடுமுறை இந்தியாவில்.  பார்க்கலாம், என்னென்னபுதிய  விசயங்கள் கற்றுக்கொள்ள போகிறேன் என்று.

நன்றி 

Friday, May 13, 2016

மனோதத்துவ நேர்காணலும் இன்றைய அரசியல் நிலையம் !

தற்போது நிறைய நிறுவனங்கள் தங்கள் ஆட்களை எடுக்கும் முன்பு மனோதத்துவ முறையில் பல தேர்வுகள் நடத்துகிறார்கள். CIDS எனப்படும் இதனை போன்ற தேர்வுகள் தலைமை பொறுப்பு பதவிகளுக்கு கட்டாயம். சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு மனோதத்துவ இண்டர்வியு எடுக்க நேர்ந்தது.

திரும்ப திரும்ப சில கேள்விகள் அதில் கேட்கப்பட்டன.

தேங்க்ஸ் டு google images 

நீங்கள் உங்களின் சாதனைகளை மதிக்கிறீர்களா?, நீங்கள் வாழ்கையில் தன்னிறைவு அடைந்ததாக நினைகிறீர்களா? உங்கள் வாழ்கையில் ஏதாவது சாதனை செய்து இருப்பதாக நினைக்கிறீர்களா? தனியாக இருப்பது பிடிக்குமா, அல்லது பார்ட்டி செல்ல பிடிக்குமா?, எத்தனை நண்பர்கள் உங்களுக்கு?புதியவர்களுடன் நீங்கள் நட்பாக இருக்க இயலுமா?  தவறு செய்வீர்களா, செய்திருக்குகிறீர்களா? தானம் செய்து இருக்கிறீர்களா? அடுத்தவர்கள் தவறு செய்தால் உடனே சுட்டி காட்டுவீர்களா? மேனேஜர் என்ன செய்தாலும், தவறே செய்தாலும் சுட்டி காட்டாமல் கண்டு கொள்ளாமல் விடுவீர்களா? எத்தனை முறை நீங்கள் சோதனையான காலத்தில் அமைதியாக இருந்து இருக்குறீர்கள்? ஒருவரை பார்த்தவுடன் நீங்கள் அவரை எடை போடுவீர்களா?

இப்படி பல பல, கிட்டத்தட்ட 1 மணிநேரம் முதல் 2 மணி நேரம் வரை கேள்விகள். எல்லாமே உங்களின் பெர்சனாலிட்டி பற்றி தெரிந்து கொள்ள? ஏன் இப்படி கேள்வி கேட்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு..


பொதுவாக நிறைய மக்கள் நினைபதெல்லாம் இதுதான்..வேலை கிடைக்க வேண்டும் என்றாலோ அல்லது இருக்கும் வேலையை தக்க வைக்க வேண்டும் என்றாலோ முதலில் நாம் நம் மேனேஜர் /கம்பெனி முதலாளி/டைரக்டர்/ ...க்கு சலாம் போட வேண்டும். அவர் என்ன தப்பு செய்தாலும் அவை எல்லாம் கண்டு கொள்ளாமல், எப்படி அமைச்சர்கள் அம்மாவிடம் அவர் என்ன செய்தாலும் நீங்க செய்வது தான் சரி அம்மா! என்று கூல கும்பிடு போட்டு வாழ்ந்து தன்னுடைய பதவியை தக்க வைத்து கொள்ளுகிறார்களோ அதுவே சிறந்தது . அப்படி இருப்பவன் பிழைக்க தெரிந்தவன் என்பது காலம் காலமாக நமக்கு கற்று கொடுக்கபடும் ஒன்று.

அப்படி அடுத்தவரிடம் பணிந்து பணிந்து வேலை பார்க்கும் ஒரு ஆள், தன்னுடைய இயலாமையை மறைக்க என்று வேறு யாருடனோ அல்லது தனக்கு கீழே இருக்கும் ஒருவனிடம் அவன் படோடபத்தை காட்டுவான்..இது தொடர்கதை ஆகி ...முதல் கோணல் முற்றும் கோணல் போல வழி  வழியாக வந்து, எந்த உருப்படியான காரியங்களும் செய்ய முடியாமல் டாமினோ எபக்ட் போல படிப்படியாக சரிய நிறைய வாய்ப்புகள் இருப்பதாலேயே..உன் மேனேஜர் தப்பு செய்கிறார் என்றால், அதனை எதிர்த்து சொல்ல தைரியம் வேண்டும். ஆனால், அதன் பின் விளைவுகளை தாங்கி கொள்ளும் திறமையும் வேண்டும். அதே நேரம், தொடாதுக்கெல்லாம் குறை சொல்ல கூடாது. நல்ல பாலன்ஸ் இருக்க வேண்டும்.

நிறைய இண்டர்வியுக்களில் பார்க்கபடும் அடுத்த முக்கிய மனோதத்துவ பண்பு , " நான் மட்டுமே வாழ்க்கை..என்னை என் குடும்பத்தை சுற்றி மட்டுமே எல்லாம் நிகழ வேண்டும் என்று  நினைக்கும் பண்பு இல்லாது இருப்பது"  அடுத்தவர்கள் உதவி என்று கேட்டால் உதவும் எண்ணம் துளியும் இல்லாமல், தானும் தன்னுடைய குடும்பமும் வாழ்ந்தால் போதும் என்று சுயநலமாக இருப்பது.  இரக்க குணம், அடுத்தவருக்கு உதவும் பண்பு என்று நிறைய தலைமை பொறுப்பு இருப்பவர்களுக்கு வேண்டும் என்று எதிர் பார்கிறார்கள்.  நீங்கள் எப்பொழுதாவது கம்ம்யுநிட்டி சர்வீஸ் அல்லது பொது சேவை செய்து இருக்கிறார்களா  என்று நிறைய கம்பனிகள் பார்க்கிறார்கள். empathy அல்லது இரக்க குணம் என்பது இருந்தால் மட்டுமே அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் வரும்.

அதே போல, தவறு செய்தால் ஒத்து கொள்ளும் தன்மை. பொது இடங்களில் பேசும் நாகரிகம்
தன்னுடைய ஒவ்வொரு தவறுக்கும் அடுத்தவர் தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பித்து செல்லாமல், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை, யாருமே இங்கு மாஸ்டர் அல்ல, எல்லாரும் ஸ்டுடென்ட் போல ஒவ்வொரு நாளும் கற்று கொண்டு இருக்கிறோம் என்ற பணிவு . இதனை போன்ற பல பல கேள்விகளாக கேட்கப்பட்டன.

இந்த நேர்காணல் முடிந்தவுடன், எனக்குள் சில கேள்விகள். சாதாரண மேனேஜர்  பதவிக்கே..இத்தனை இத்தனை கேள்விகள் கேட்டு அவர் அந்த பதவிக்கு சரியானவரா என்று ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள். ஆனால், தமிழ் நாடு, இந்தியா ஏன் அமெரிக்கா எலெக்சனில் வாக்களிக்கும் முன்பு மக்கள் இது போன்ற அடிப்படை பண்புகளில் ஒன்றாவது தாங்கள் வாக்களிக்க போகும் அரசியல்வாதிகளுக்கு இருக்கா என்று ஆராய்கிறார்களா?

சாதாரண தலைமை பொறுப்புக்கே இத்தனை பண்புகளையும் கொண்டுள்ள ஒரு தலைவன்/தலைவி வேண்டும் என்று எதிர்பாக்கப்படும் போது நாட்டையே கட்டி ஆள வாய்ப்பு கொடுங்கள் என்று கூவும் அரசியல் வாதிகள் தங்களுக்கு இதனை போன்ற அடிப்படை பண்புகள் உண்டா என்று சுயபரிச்சை செய்கிறார்களா/செய்வார்களா?

ஒன்றும் புரியவில்லை.


நன்றி.

டிஸ்கி
இது என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே..எந்த அரசியல் கட்சியை குறித்தும் தலைவர்கள் குறித்தும் இங்கு கூறவில்லை.

Tuesday, May 10, 2016

லெட் இட் கோ ! லெட் இட் கோ!

வாழ்கையில் எது முக்கியம், பணமா? மன அமைதியா? . இந்த கேள்வி எல்லாருக்கும் அடிக்கடி வரும். தற்போது அனைத்தும் பணம் என்றாகிவிட்ட நிலையில் எது முக்கியம் என்ற கேள்வி எனக்கும் பல முறை தொக்கி நிற்கிறது. இன்னும் முடிவெடுக்கவில்லை.

சில மாதங்களாக எங்கும் பிரச்சனைகள். எது சொன்னாலும் செய்தாலும் பிரச்சனைகள்...எது முக்கியம் எனக்கு என்ற மன குழப்பங்கள்..முடிவாக மன நிம்மதி மட்டுமே சரியானது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.


இந்த நேரத்தில் ஒரு டாகுமெண்டரி பார்க்க நேர்ந்தது. "ஹாப்பி" என்பது அதன் தலைப்பு. ஆஸ்கர் பரிசுக்கு பரிந்துரைக்க பட்ட இந்த டாகுமெண்டரி ன் அடி நாதம். எது சந்தோசம் என்பதே. பலரிடம் எது சந்தோசம் என்ற கேள்விக்கு "பணம்" என்ற பதில் கிடைத்ததாக கூறினார் சிலர்.  யார் சந்தோசமாக இருக்கிறார்கள் என்ற சர்வேயில் ஜப்பான் மக்கள் மிகவும் சந்தோசம் இல்லாமல் வாழ்க்கை வாழ்வதாக கூறப்படுகிறது. 

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பாதி அழிந்த நிலையில் நாட்டை திரும்ப மீட்டெடுக்க வேண்டிய நிலையில் சுறு சுறுப்பாக வேலை பார்க்க ஆரம்பித்த ஜப்பானிய மக்கள், பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்கை என்று ஆரம்பித்து கடைசியில் யந்திரமாக மாறி சரியான தூக்கம் "கரோஷி" எனப்படும் overwork death மக்களாக மாறி இறப்பதாக இந்த டாகுமெண்டரி அறிவிக்கிறது. அதிக வேலை பளு காரணமாக ஸ்ட்ரெஸ், ஹார்ட் அட்டாக் போன்ற இதய நோய்கள் நெர்வஸ் பிரேக் டவுன் போன்ற அனைத்தும் நடப்பதாக அறிய முடிகிறது. இதனை தடுக்க இந்த "கரோஷி" என்னும் அமைப்பு உருவாக்க பட்டுள்ளது.

இது ஜப்பான் என்று மட்டும் அல்ல, இதனை போல பணம் மட்டுமே சந்தோசம் தரும் என்று பணத்தை தேடி ஓடி ஓடி உழைக்கும் மக்கள் இருக்கும் பல நாடுகளிலும் நடக்கும் ஒன்று.

இந்த டாகுமெண்டரியில் ஒரு மேற்கு வங்காளத்தை சேர்ந்த கை ரிக் ஷா  இழுக்கும் மனிதர் பற்றியும் குறிபிடுகிறார்கள். இவர் வசிப்பது சேரியில் தினமும் காலையில் இருந்து மாலை வரை கை ரிக் ஷா இழுப்பது இவர் தொழில், ஆனால் தான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக இவர் கூறுகிறார். தன் குடும்பம், குழந்தை, பக்கத்து வீட்டு காரர்கள் அனைவரும் அன்புடன் இருக்கிறார்கள், நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல இருக்கிறோம்.. எனக்கு என்ன குறை என்று அவர் கூறுகிறார்.

இதே டாகுமெண்டரியில் எது மிகவும் மகிழ்ச்சியான நாடு என்ற ஒரு செய்தியும் நமக்கு தருகிறார்கள். அதன் படி உலகின் மகிழ்ச்சியான நாடு "டென்மார்க்". எப்படி மக்கள் வாழ்கிறார்கள் எது அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என்று பார்க்கையில். தற்போது கம்யுனிட்டி ஹௌசிங்க் எனப்படும் கூட்டு வாழ்க்கை முறை இவர்கள் வாழ்வதாக தெரிகிறது. ஒரு அபர்ட்மெண்ட்டில் இருக்கும் அனைவரும் ஒரு கூட்டு குடும்பம் போல வாழ்ந்து ஒரே சமையல் செய்து சாப்பிட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டு வாழ்வது என்பது அதிகரித்து இருப்பதாக அதில் தெரிய வருகிறது.

அதாவது, குடும்பம், நண்பர்கள் என்ற ஒரு நெருங்கிய வட்டம் இல்லை என்றால் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதில் மகிழ்ச்சி என்பது இருப்பது இல்லை. இதுவே இந்த டாகுமெண்டரியில் சொல்லப்படும் கருத்து.

எனவே..முடிவாக நான் உணர்ந்த ஒன்று எத்தனை பிரச்னை வந்தாலும் முடிவில் கடைசி வரை உங்கள் கூட இருப்பது உங்கள் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் லெட் இட் கோ ! லெட் இட் கோ! எத்தனை பேர் இந்த பாடலை கேட்டு இருப்பார்களோ தெரியவில்லை..ஆனாலும்..இது ஒரு கிரேட் சாங்..
நன்றி.