Wednesday, March 31, 2010

கதை கதையாம் காரணமாம்

கதைகள் கேட்ட, வாசித்த அனுபவத்தை பற்றி பகிர 'சொல்லத்தான் நினைக்கிறேன்' அம்பிகா அழைத்திருந்தார்கள், அவர்களுக்கு என் நன்றி.

எனக்கு கதை சொல்லிகள் என்றால் உடனே என் அம்மா பாட்டி தான் நினைவுக்கு வருவார்கள். அவர்கள் பெரிய சிவபக்தை. ஒவ்வொரு சிவராத்திரிக்கும் எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள், அப்புறம் எங்களையும் அழைத்து கொண்டு மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு செல்வார்கள். அங்கு நடக்கும் ஆயிரத்தி எட்டு சங்காபிஷேகம் என்று நினைக்கிறேன், அது பார்த்து விட்டு வருவோம்.

பாட்டி எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் நிறைய சிவன் கதைகள் சொல்வார்கள். கண்ணப்ப நாயனார், நந்தனார், சிறுத்தொண்டர் கதை அப்புறம் சிவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது இன்னும் நெறைய சொல்லுவார்கள். அப்புறம் ரொட்டி தாசன் கதை, அய்யா பிச்சை கதை இதுவும் சிவன் கதை தான் ஆனால் என் பாட்டியின் version ஆ என்று எனக்கு தெரியாது.

என் பாட்டி நன்றாக பாடுவார்கள், சங்கீதம் எல்லாம் அவர்களுக்கு தெரியாது, எல்லாம் நாட்டு புற பாடல்கள் மாதிரி இருக்கும். அதுவும் நந்தனார் தில்லை செல்ல முடியாமல் வருந்தும் கதையை மிக அழகாக பாட்டாக்கி பாடுவார்கள். இன்னும் என் பாட்டியின் அந்த பாடல்களும் நந்தனார் கதைகளும் பசுமரத்தாணி போல என்மனதில் உள்ளன.

என் அம்மா எங்களுக்கு கதை சொன்னதில்லை என்றாலும், நன்றாக பாடுவார்கள், இரவில் தூங்குவதற்கு முன் தினமும் பாடச்சொல்லி நான் கேட்பதுண்டு. என் பிரசவத்திற்கு என் அம்மா இங்கு வந்திருந்த போது இப்படி பாடச்சொல்லி record செய்து வைத்திருக்கிறோம்.

இதெல்லாம் சிறு வயதில் நான் கேட்டவை. அப்புறம் ஏழாவது எட்டாவது படிக்கும் போதெல்லாம் எங்கள் வீட்டில் ரஷ்ய நாடோடிக்கதைகள் புத்தகம் இருக்கும். அதனை படித்ததுண்டு. அப்புறம் அம்புலிமாமா, தெனாலிராமன், பீர்பால் கதைகளும் இரவல் வாங்கி படித்ததாக ஞாபகம். கொஞ்ச நாள் கழித்து ராஜேஷ்குமார், சுஜாதா இவர்களின் துப்பறியும் கதைகள் படித்ததுண்டு. அதுவும் இரவல் வாங்கி படித்ததோடு சரி. என் அப்பா இதனை எல்லாம் வாங்கி தர மாட்டார்கள்.

உண்மையாக கதை வாசிக்க ஆரம்பித்தது என்றால், அது என்னுடைய கல்லூரி காலத்தில் தான். நான் படித்த கல்லூரியின் பின்புறத்தில் ஒரு lending library இருக்கும். அதில் எங்கள் தோழியர் அனைவரும் சேர்ந்து பணம் கட்டி உறுப்பினர் ஆக சேர்ந்தோம். அதில் புத்தகம் எடுத்து ஒவ்வொரு வாரமும் எங்களுக்குள் circulate செய்து கொள்வோம். அப்படி முதன் முதலில் எனக்கு படிக்க கிடைத்தது "பொன்னியின் செல்வன்". அதுவரை வரலாற்று நாவல்கள் ஒன்று கூட நான் படித்ததில்லை என்பதால் முதலில் படிப்பது எனக்கு கடினமாக இருந்தது. ஆனாலும் அடுத்தவாரம் அனைவரும் அதனை பற்றி விவாதிப்பார்களே நாம் என்ன செய்வது என்ற பயத்திலேயே, நானும் அதனை ஒரு homework போல படிப்பேன். பிறகு கல்கியின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு அவருடைய "சிவகாமியின் சபதம்", "பார்த்திபன் கனவு", "அலை ஓசை" எல்லாம் படித்ததாக ஞாபகம்.

நான் வேலை பார்க்க ஆரம்பித்த போது, என்னுடன் பணிபுரிந்தவர்கள் எல்லாம் ஆங்கில நாவல்கள், படங்கள் பற்றி பேசுவார்கள் எனக்கு அதனை பற்றி எல்லாம் எதுவும் தெரியாது என்பதால் அவர்களுடன் விவாதிக்க முடியாது. பின்னர் என்னுடைய தோழி ஒருத்தி எனக்கு Robin Cook புத்தகம் Chromosome 6 என்று நினைக்கிறேன், அதனை எனக்கு படிக்க கொடுத்தாள். நான் ஆங்கில புத்தகங்கள் படித்ததில்லை என்பதால் அவளிடம் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி வைத்து கொண்டேனே தவிர படிக்கவில்லை.

நான் முதன் முதலில் படித்த (படித்து முடித்த) ஆங்கில புத்தகம் Sir Arthur Conan Doyle's Sherlock Holmes இன் துப்பறியும் கதை "A study in Scarlet". அதுவும் நான் இந்தியாவை விட்டு வெளியில் வந்த பின்பு. முன்பே சில தமிழ் துப்பறியும் கதைகள் படித்து இருந்ததால் எனக்கு இதனை படிக்க நன்றாக இருந்தது. பிறகு எல்லா Sherlock Holmes இன் கதைகளும் படித்தேன். அதே போல அடுத்த துப்பறியும் கதை எழுத்தாளர் "Agatha Christie" யின் கதைகளும் படித்து இருக்கிறேன்.

Thriller கதைகள் எனக்கு பிடித்து இருந்ததால் medical thriller எழுதும் Robin Cook இன் கதைகளும், Law thriller எழுதும் John Grisham இன் கதைகளும் படிக்க ஆரம்பித்தேன். பிறகு ஒருவாறு த்ரில்லர் கதைகள் போரடிக்க வேறு வகையான புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் எனக்கு பிடித்த ஒரு சில

Animal farm and 1984 - George Orwell
The Kite Runner - Khaled Hosseini
To Kill a Mocking Bird - Harper Lee
A house for Mr.Biswas - V.S.Naipaul
The Lord of the Rings - J.R.R.Tolkien
A Passage to India - E.M.Forster
Memoirs of a Geisha - Arthur Golden
The God of Small Things - Arundhati Roy

ஒருகாலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தகம் வாங்கும் பழக்கம் வைத்து கொண்டு இருந்தேன். தற்பொழுது நாங்கள் இருக்கும் இடத்தில் நூலக வசதி நன்றாக இருப்பதால் நூலகத்தில் இருந்து இரவல் வாங்கி படிக்க முடிகிறது. ஒவ்வொரு வாரமும் என் பையனுக்காக நூலகம் சென்று Board books எனப்படும் படக்கதைகள் புத்தகம் எடுத்து வந்து வாசித்து கொண்டு இருக்கிறேன். அதில் எனக்கு பிடித்த சில

The Very Hungry Caterpillar by Eric Carle
Goodnight Moon by Margaret Wise Brown
Brown Bear, Brown Bear, What do you see? by Bill Martin, Jr.
The Rainbow Fish by Marcus Pfister
Corduroy by Don Freeman
The Snowy Day by Ezra Jack Keats
The Runaway Bunny by Margaret Wise
Guess How Much I Love You by Sam McBratney

இவை எல்லாம் நூலகத்தில் இருக்கும் லிஸ்ட் இல் சிறந்த புத்தகங்களாக இருப்பவை.

என் கதை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உதவிய அம்பிகா அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள். கதைகள் கேட்ட, வாசித்த அனுபவத்தை பகிர நான் அழைக்க விரும்புவது

ராகவன் நைஜீரியா
தெகா
ராமலெட்சுமி

விருப்பமிருந்தால் தங்களின் அனுபவங்களை பகிருங்களேன், அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

Monday, March 29, 2010

Love in Heathrow"ஒரு ஊரில ஒரு அம்மா, அப்பா இருந்தாங்களாம். அவங்களுக்கு ஒரு பொண்ணு இருந்துச்சாம். அந்த பொண்ணுக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அவங்க அப்பா ஒத்த காலில நின்னாறாம், ஆனா, அந்த பொண்ணை நல்லா படிக்க வைக்கணும்னு அந்த பொண்ணோட அம்மா அப்பாகிட்ட சண்டை போட்டாங்களாம். கடைசியல அவங்க அம்மா சொன்னது போல நல்லா படிச்சதாம் அந்த பொண்ணு.

படிச்சு முடிச்சவுடனே அந்த பொண்ணுக்கு வேலை கிடைச்சதாம். அந்த வேலையில இருந்து அந்த பொண்ணை வெளிநாட்டுக்கு அனுப்புனாங்களா, அங்க அந்த பொண்ணு போனப்போ அங்க ஒரு பையன பார்த்ததாம். அந்த பையன் இந்த பொண்ணோட friend ஓட friend டாம். அந்த பையனுக்கு இந்த பொண்ணை ரொம்ப பிடிச்சு போனதாம். அந்த பையன் என்னை கல்யாணம் பண்ணிகிறயான்னு கேட்டாராம். இந்த பொண்ணும் சரின்னு சொல்லிடுச்சாம்.

அப்புறம் அந்த பொண்ணு மேல் படிப்பு படிக்க ஆரம்பிச்சுடுச்சாம், அந்த பையன் அமெரிக்கா வந்துட்டாராம். அப்புறம் அவங்க ரெண்டு பெரும் போன்லயும், இண்டர்நெட்லையுமே லவ் பண்ணினாங்களாம்.

அப்புறம் ஒரு நாள், அந்த பொண்ணோட அம்மாகிட்ட தான் லவ் பண்ணுறத சொல்லிச்சாம் அந்த பொண்ணு. அவங்க அம்மா டென்ஷன் ஆகிட்டாங்களா, அப்புறமா நான் பையன பார்க்கணும்னு சொன்னாங்களாம். கொஞ்ச நாள் கழிச்சு பையன பார்த்த பிறகு, அவங்க அம்மாவுக்கும் பிடிச்சிடுச்சாம், அப்புறம் அந்த பையன் வீட்டுலயும் இந்த பொண்ண பிடிச்சிடுச்சாம்.

அப்புறம் மெதுவா அந்த பொண்ணோட அப்பா கிட்ட, அந்த பொண்ணோட அம்மா இதை சொன்னாங்களாம். அவரு சாதி, சனம் என்ன சொல்ல போகுதோன்னு யோசிச்சாரம். அந்த பொண்ணோட அம்மா நம்ம மக செய்யிறது சரியா தாங்க இருக்கும்னு சமாதானம் செய்தாங்களாம். அப்புறம் எல்லாரும் சம்மதிச்சு கல்யாணம் சிறப்பா நடந்துச்சாம். சரியா தம்பி" என்று ஒரு வழியா என் பையனுக்கு கதை சொல்லி முடிச்சேன்.

பொண்ணுபார்த்த/பார்க்க போன கதையை சொல்ல அனன்யா , அழைச்சிருந்தாங்க. எனக்கு அந்த அனுபவமே ஏற்படாததால, எனக்கு தெரிஞ்ச ஒரு கதை இங்கே. நன்றி அனன்யா.

நானும் என் பங்குக்கு ஒரு சிலரை கூப்பிடனும்ல

சித்ரா
பத்மா

என்னைய போல பீல் பண்ணி கதை சொல்லனும்னு நெனைச்சா சொல்லுங்கப்பா.

Sunday, March 28, 2010

பெயரில் என்ன இருக்கிறது

"ஏம்மா இப்படி ஒரு பெரிய பேரை எனக்கு வச்சிங்க" என்று அம்மாவிடம் நான் சிறு குழந்தையாய் இருக்கும் போது அடிக்கடி கேட்டதுண்டு.

"நீ நல்ல படியா பொறக்கனுன்னு நான் சாமிகிட்ட வேண்டிட்டனா, அதனால தான் சாமி பேரை உனக்கு வச்சேன்" என்று என் அம்மா சமாதானம் சொல்வார்கள்.

எனக்குன்னு வீட்டில செல்ல பேரு இருந்ததால இது ஒரு பெரிய விஷயமா சின்ன வயதில் எனக்கு தெரியல.

அப்புறம் படித்தது எல்லாம் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் என்பதால் இளநிலை முடிக்கும் வரை என் பெயர் ஒரு பெரிய பிரச்சனை ஆனதில்லை.

பிறகு முதுநிலை படிப்புக்கு இருபாலரும் படிக்கும் கல்லூரியில் சேர்ந்தபோது என் கூட படித்த பையன்கள் எல்லாம்

"வாங்க அம்மா மாதாஜி" என்பார்கள்.

இந்தியாவிற்குள் இருந்த வரை என் பெயர் அவ்வளவு கஷ்டப்படுத்தவில்லை.

ஆனால் என் மேல் படிப்புக்காக நான் வெளிநாடு செல்ல நேர்ந்த போது என் பெயரையும் என் அப்பாவின் பெயரையும் இவர்கள் செய்த கொலை இருக்கிறதே! அது சொல்லி மாளாது.

என் பாஸ் ஒரு ஜெர்மன், அவர்கள் பாஷையில் j வை யா என்று உச்சரிப்பார்கள். நான் அங்கு சென்றவுடன் நான் சொன்னது இது தான்.

"Please dont try to pronounce my name, please call me using my pet name" என்று சொல்லிவிட்டேன். ஆனால் அதனையும் அவர் ரயி என்று தான் கூறுவார். பிறகு அதுவே என் பேராகி போனது.

என் அப்பாவின் பெயர் இன்னும் படாதபாடு பட்டது, Balasubramaniyan என்ற என் அப்பாவின் பெயர் Balpsapbramanijan என்று ஆனது. அதனையே என் student card லயும் print செய்து கொடுத்து விட்டார்கள். ஒரு semester முழுவதும் நான் அந்த பெயருடனே student கார்டு வைத்துகொண்டு இருந்தேன்.

இன்று வரை என் கணவர் என் அப்பாவின் இந்த பெயரை சொல்லி என்னை கிண்டல் செய்வதுண்டு.

நான் படித்து முடித்து விட்டு வரும் வரை என் boss ஆல் என் பெயரை ஒரு முறை கூட சரியாக உச்சரிக்க முடியவில்லை. எனக்கு பட்டம் அளிக்கும் போது அவர்கள் வழக்கப்படி என் பாஸ் என்னை பற்றி சில வார்த்தைகள் கூறி எனக்கு toast செய்ய வேண்டும். அப்பொழுதும் என் boss என் முழுப்பெயரை சொல்ல திணறியது இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது.

பிறகு அமெரிக்கா வந்த பிறகு இன்னும் விடாது கருப்பு போல துரத்தியது என் பெயர் பிரச்சனை. Driving license ஆபீஸ் சென்ற போது என் பெயரில் உள்ள எழுத்துக்களை கூட்டி பார்த்து விட்டு அங்கு இருந்த அம்மா எப்படி சொன்னார்கள்.

"35 letters in a name, Wow, You have almost all alphabets in your name" என்று.

கார்த்திகேயன் என்ற என் கணவரின் பெயர், Karth ஆகி பின் Kaath ஆகி பின் முடிவாக Scott ஆகி விட்டது.

சஞ்சீவ் sam ஆகிவிட்டது.

எழிலன் Ezi ஆகி போனது.

தமிழரசி என்ற அருமையான பெயர் Tami ஆகி விட்டது.

கண்ணன் Cannon ஆகி விட்டது.

கவின் Kevin ஆகி விட்டது.

ரங்கநாதன் Randy ஆகி விட்டது.

பெயரில் என்ன இருக்கிறது என்று முதலில் நினைத்தாலும், இங்கு வந்த பிறகு தங்கள் பெயரை எல்லாம் சுருக்கி வைத்து கொண்ட சிலரை போல நானும் பேசாமல் பெயரை மாற்றி கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

Friday, March 26, 2010

The Blind Side -எனது பார்வையில்உண்மை கதைகள் சினிமாவாக எடுக்கப்படுவது உண்டு. அதிலும் சில கதைகள் நெஞ்சை உருக்கும் வகையில் இருக்கும், எனக்கு பிடித்த சினிமாவாக்கப்பட்ட சில உண்மைக்கதைகள்

The Hurricane - Rubin Carter என்ற குத்து சண்டை வீரரின் வாழ்க்கை.

Schindler's List - இரண்டாம் உலக யுத்தத்தின் போது 1000 யூதர்களை காப்பாற்றிய Oscar Schindler என்பவரின் வாழ்க்கை.

The Pursuit of Happyness - Businness man Chris Gardner இன் வாழ்க்கை.

இந்த படங்கள் அனைத்தும் அதனை பார்த்த பிறகும் நம் மனதுக்குள் ஏதோ செய்யும். அதே போல நேற்று இரவு Michael Oher என்ற அமெரிக்கன் Football வீரர் ஒருவரின் உண்மைக்கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் The Blind Side ஐ பார்க்க நேர்ந்தது.

அமெரிக்கா என்றால் சொர்க்க பூமி, இங்கு வறுமை இல்லை என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. அதிலும் ஹிந்தி சினிமாக்களில் எல்லாம் அமெரிக்கா என்றால் இங்கு இருக்கும் beaches, bar, pub இவை தவிர வேறெதுவும் நான் பார்த்ததாக ஞாபகம் இல்லை. ஆனால் இங்கும் வறுமை , வீடின்மை, பசிக்கொடுமை எல்லாம் உண்டு.

நான் பிரசவித்து மருத்துவமனையில் இருந்த போது என்னிடம் அங்கிருந்த நர்ஸ் ஒன்று கேட்டார்கள்,

"உங்களை உங்கள் வீட்டுகாரர் நன்றாக நடத்துகிறாரா? குழந்தைக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா உங்கள் வீடு" என்று

இதனை கேட்ட போது ஏன் இப்படி கேட்கிறார்கள் என்று எனக்கு அர்த்தம் புரியவில்லை. ஆமாம் என்று தலை ஆட்டி வைத்தேன்.

பிறகு எனக்கு அதற்கான காரணம் புரிந்தது. இங்கு குழந்தைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்று தெரிந்தால் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து விடுவார்கள். பிரிக்கப்பட்ட குழந்தைகள், அனாதை குழந்தைகள் போல சில நேரங்களில் Foster home, எனப்படும் பாதுகாப்பாளர்களுடன் இருப்பதுண்டு. அதுவும் சில நேரங்களில் நன்றாக அமைவதில்லை. அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆக்கப்பட்டு விடும்.

அப்படி, ஒரு போதைக்கு அடிமையான அம்மாவிடம் இருந்து பிரிக்கப்பட்ட, அப்பாவாலும் கைவிடப்பட்ட Micheal என்ற ஒரு கறுப்பின பையன், எவ்வாறு அமெரிக்கன் football இல் பெரிய விளையாட்டு வீரர் ஆக்கபடுகிறார் என்பதே கதை சுருக்கம்.

அடிப்படை தேவைகள் எதுவும் இல்லாமல், துணி என்று சொல்லி உடுத்த ஒரு பிளாஸ்டிக் பையில் இருக்கும் இரண்டு துணியும், சாப்பாட்டிற்கு ஸ்டேடியத்தில் கிடக்கும் பாப்கார்ன், hotdog போன்ற அடுத்தவர்களின் மிச்சத்தை சாப்பிட்டு, தூங்குவதற்கு School ஜிம் அல்லது எங்கெல்லாம் குளிருக்கு ஒதுங்க முடியுமோ அங்கெல்லாம் வாழும் ஒரு பதினாறு வயது பையன் Mike. அவனுக்கு பெரிய உடம்பு அதனால் அனைவரும் Big Mike என்று அழைக்கிறார்கள்.

ஒரு நாள் ஸ்கூல் ஜிம்மும் மூடிவிட எங்கு சென்று குளிருக்கு ஒதுங்குவது என்று அறியாமல் இருக்கிறான் மைக். அப்போது அதே பள்ளியில் படிக்கும் மாணவன் SJ வின் தாய் Anne அவனை பார்க்கிறாள், சரி என் வீட்டில் இன்று வந்து தங்கிக்கொள், நாளை காலை உன் தாயிடம் கொண்டு உன்னை சேர்க்கிறேன் என்று சொல்கிறாள்.

அடுத்த நாள் அவனின் தாய் அவன் சொன்ன இடத்தில் இல்லை என்பதையும், மறுபடியும் அவன் தெருவில் தங்க வேண்டி இருப்பதையும் அறிந்த Anne, Thanks giving என்னும் பண்டிகை வருவதால் அதுவரை தங்களுடன் இருக்குமாறு கூறுகிறாள். மைக் இதுவரை முழு சாப்பாடு சாப்பிட்டதில்லை, அதுவும் Dinning Table இல் உக்கார்ந்து சாப்பிட்டதில்லை. அவனுக்கு என்று ஒரு படுக்கை இருந்ததில்லை. அதனால் அவனுக்கு கிடைக்கும் அனைத்தும் புதுமையாக இருக்கிறது. வேறு வழியில்லாமல் அடுத்த சில நாட்களும் அவன் அங்கு தங்க நேர்கிறது. படிப்படியாக அவன் அந்த குடும்பத்தில் ஒருவனாகிறான். அந்த குடும்பம் பதினெட்டு வயதான அவனை தத்து எடுத்து கொள்கிறது.

எப்போதும் அடுத்தவர்களிடமிருந்து தன்னை காத்து கொள்ள பழகியதால், protective instinct எனப்படும் தற்காப்பு திறமை அவனிடம் அதிகம் இருப்பதை Anne கண்டறிகிறாள். அதனையே முதலீடாக்கி இந்த திறமை தேவைப்படும் American football கேமில் அவனை பயிற்றுவிக்கிறாள். நல்ல திறமைசாலியாகி விடுகிறான். பின் என்னானது என்பது மீதி கதை.

ஏற்கனவே இதே போல வீடில்லாமல், சாப்பிட வழியில்லமல் சிறு குழந்தையையும் வைத்து கொண்டு படித்து முன்னேறி பெரிய தொழிலதிபர் ஆன Gardner அவர்களின் வாழ்கையை போல இதுவும் மிகவும் inspiring கதை. அதில் Mike ஆக நடித்த Quinton Aaron இன் நடிப்பும், Anne ஆக நடித்து Oscar வென்ற Sandra Bullock இன் நடிப்பும் A+ ரகம்.

இதனை பார்த்து முடித்த பிறகு எனக்கு தோன்றிய எண்ணங்கள். இதனை போல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட inspiring சினிமாக்கள் தமிழ் சினிமாவில் மிகக்குறைவு. இந்தியாவிலும் எத்தனையோ Mike, Gardner போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்கையை திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும்?. நாலு பாட்டு, அஞ்சு பைட்டு, மூணு செண்டிமெண்ட் என்று ஒரு வட்டத்தை விட்டு ஏன் வரமாட்டேன் என்கிறார்கள் தமிழ் திரை உலகினர் என்று தோன்றியது.

Thursday, March 25, 2010

போட்டி மனப்பான்மை நல்லதா?

சமீபத்தில் இங்குள்ள ஒரு மருத்துவ மனைக்கு வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்கு சென்றிருந்த போது அங்கு இருந்த நர்ஸ் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

"How come Indian students excel in Science and Math but not in Arts" என்று.

நான் இதை பற்றி இதுநாள் வரை யோசித்ததில்லை என்பதால் அவர்கள் கேட்ட பின் அந்த கேள்வி சரி என்றே தோன்றியது.

இங்குள்ள பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் அறிவியலிலும், கணக்கிலும் நன்றாக score செய்கிறார்கள். Reading, Art இவைகள் பக்கம் அவர்கள் அதிகம் செல்வதில்லை. ஆனால் அமெரிக்க மாணவர்களோ நெறைய Reading, Art போன்றவற்றை பாடமாக எடுக்கிறார்கள்.

இங்கு இருக்கும் பள்ளிகள் அனைத்தும் public schools, அதாவது நம்மூர் அரசு பள்ளிகள் போன்றவை. இங்கு பள்ளி படிப்பு இலவசம் என்பதால் பெரும்பாலோனோர் தங்கள் பிள்ளைகளை இதில் தான் சேர்க்கிறார்கள். இங்கு இருக்கும் private schools எல்லாம் அதிக கட்டணம் வசூலிப்பவை என்பதால் அங்கு பிள்ளைகளை அனுப்புவது குறைவு.

மேலும் இங்குள்ள பள்ளிகளில் நல்ல ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளுக்கு எல்லாம் demand அதிகம் இருக்கும். பள்ளி Admission அவரவர் இருக்கும் இடத்தை பொறுத்தது. ஒருவர் நல்ல பள்ளி இருக்கும் area வில் உள்ளார் என்றால் அவர்களுக்கு அந்த பள்ளியில் admission உண்டு. அதனால் நல்ல பள்ளி உள்ள area களில் எல்லாம் வீடு வாங்குவது, அல்லது வீடு வாடகைக்கு எடுப்பதற்கு அதிகம் செலவாகும்.

இங்குள்ள இந்தியர்களில் பெரும்பாலோனோர் நல்ல பள்ளிகள் இருக்கும் பகுதியில் வாழ்வதால், இந்திய சூழ்நிலை போல அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள பிள்ளைகளுக்குள் போட்டி மனப்பான்மை உருவாக்கபடுகிறது .

இந்தியாவில் நெறைய வீடுகளில் அடுத்த வீட்டு பிள்ளைகளை காட்டி ஒரு comparision நடக்கும். அதே போல இங்கும் நெறைய வீடுகளில் நடக்கிறது.

"அடுத்த வீட்டு பிள்ளை மியூசிக் கிளாஸ் போகுது, நீயும் போ"

"அந்த பிள்ளை western டான்ஸ் கிளாஸ் போகுது, உன்னையும் அதில சேர்த்து விடுறேன்"

என இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை நெறைய extra classes க்கு அனுப்புகிறார்கள். இதனால் நம்மூரில் உள்ள குழந்தைகளை போலவே இங்குள்ள குழந்தைகளுக்கு நேரம் இருப்பதில்லை. எப்போதும் எதாவது ஒரு class இக்கு செல்கிறார்கள். இதில் parents க்கும் வேலை அதிகம். ஒவ்வொரு class க்கும் அவர்கள் குழந்தைகளை கொண்டு விடவேண்டும்.

மியூசிக், டான்ஸ், பியோனோ, ஸ்விம்மிங், கராத்தே, கிடார் என்று நெறைய classes உண்டு, ஆனாலும் அதனையே ஒரு career ஆக குழந்தைகளை எடுக்க நெறைய பெற்றோர் விடுவதில்லை. பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவ (அல்லது மருத்துவம் சார்ந்த) அல்லது இன்ஜினியரிங் படிப்புக்கு போவதையே விரும்புகிறார்கள்.

இதற்கெல்லாம் பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை போல தம் தம் பிள்ளைகளையும் வளர்க்க நினைப்பது தான் காரணம் என்று நினைக்கிறன். இது ஒரு வகையில் நல்லது தான் என்று நினைத்தாலும், ஒரு ஊரில் அனைவருமே மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக நினைத்தால் என்ன ஆகும்? குழந்தைகளின் விருப்பப்படி அவர்களை படிக்க வைப்பது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் என்பது என் கருத்து.

Monday, March 22, 2010

Difference Between American and British Culture
எனக்கும் ஒரு personal experience உண்டு. ஒருமுறை ஒரு பிரிட்டிஷ் receptionist அம்மாவிடம் ஒருவர் பற்றி enquire செய்தேன். அந்த அம்மா எதோ சொன்னது அந்த pronunciation எனக்கு புரியவில்லை. உடனே சாரி மா "I dont understand" என்று சொன்னேன். உடனே அந்த அம்மா எனக்கு ஊமை பாஷை போல கைவிரல்களை ஆட்டி எதோ சொல்ல ஆரம்பித்தது. எனக்கு சரி கடுப்பு, புரியலைனா மெதுவா சொல்லணும், அதை விட்டுட்டு இப்படியா செய்யிறது.

Sunday, March 21, 2010

General Knowledge ஆ கிலோ என்ன விலை ?

சரி தொடர்ந்து பதிவா எழுதிட்டு இருக்கேனே! ஒரு break விடலாமே என்று நினைச்சேன். ஆனா பாருங்க இன்னிக்குனு என் friend வீட்டில ஜெயா TV இன் (இரண்டு வாரத்திற்கு முந்தய) ஜாக்பாட் நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அதில் இரண்டு சென்னை பெண்கள் Teams பங்கு பெற்றார்கள். அதில் பங்குபெற்ற அனைவரும் MBA, BE என்று படிக்கும் கல்லூரி மாணவிகள்.

அதில கேட்ட கேள்விகளுக்கு கல்லூரி மாணவிகள் கொடுத்த பதில்கள் சிரிப்பை வரவழிப்பதாக இருந்தது. சில சாம்பிள் questions இங்கே

1. கோடை காலத்தில் குளத்தில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பது ஏன்?
மண்ணின் குளிர்ச்சியால்

2. சென்னையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தின் பெயர் என்ன?
காமராஜர் நினைவு இல்லம்

3. பணியில் இருக்கும் போதே மரணமடைந்த ஜனாதிபதி யார்?
இந்திராகாந்தி
அடுத்த டீம் க்கு இதே கேள்வி கேட்டார்கள் அதற்கு நேரு என்று அவர்கள் பதில் கொடுத்தார்கள்

4. ஒரு Batsman எப்படியெல்லாம் out ஆவார்?

Tension னால் அவுட் ஆவார்.

5. கொடுங்கோல் ஆட்சி செய்த மன்னர் அல்லது சர்வாதிகாரி பெயர்?

shajahan

இவர்களுக்கு உண்மையிலேயே இதற்கு பதில்கள் தெரியாதா என்று எனக்கு தெரியவில்லை.

Friday, March 19, 2010

Lord of the Rings ம் நானும்-2 (Fellowship of the ring)

` சென்ற பதிவின் தொடர்ச்சி

LoTR , நம்ம பொன்னியின் செல்வன் போல பல பாகங்கள் கொண்டது. அப்புறம் அதில கிளை கதைன்னு பல கதைகளும் உண்டு.

எனக்கு கதை புத்தகத்தை கொடுத்த என் labmates அனைவரும் இந்த புத்தகத்தை தங்களின் தாய்மொழியில் படித்து இருந்தனர். எனக்கு இதனை படிப்பது குதிரை கொம்பாக முதலில் இருந்தது. LoTR புத்தகம் Classic English இல் எழுதப்பட்டது. ஒவ்வொரு வரிக்கும் எனக்கு முதலில் dictionary தேவைப்பட்டது. நான் அதிக நாள் படித்த ஒரே புத்தகம் இதுதான்.

LoTR இன் முதல் பாகம் "Fellowship of the Ring"

கதை ஆரம்பிக்கும் போது காணாமல் போன Dark lord Sauron இன் மாயமோதிரம் hobbit இனத்தை சேர்ந்த Bilbo Baggins கிட்ட இருக்குது. Hobbit மக்கள் Shire எனப்படும் ஒரு ஊரில் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் குள்ள வடிவில் இருக்கிறார்கள்.

மாய மோதிரம், எப்பொழுது தன் எஜமானரிடம் சேரலாம் என்று காத்துகொண்டு இருக்கிறது. அதனை யாராவது அணிந்து கொண்டுவிட்டால், அணிந்தவர் அடுத்தவர் கண்ணுக்கு தெரியமாட்டார், ஆனால் Sauron இன் கண்ணுக்கு மட்டும் தெரிந்து விடுவார். அப்படி, அந்த மோதிரம் எஜமானருக்கு தன் இருப்பிடத்தை காட்டிகொடுக்கும் சக்தி கொண்டதாக இருக்கிறது.
அந்த மோதிரம் Bilbo வை 111 வயசாகியும் இளமையா வச்சிருக்குது. Bilbo வின் 111 ஆவது பிறந்தநாளை கொண்டாட Shire மக்கள் அனைவரும் திரள்கிறார்கள். அப்போது Bilbo வின் நண்பரான Gandolf the grey வருகிறார். இவர் ஒரு Witch (மந்திரவாதி). தன்னுடைய பிறந்தநாளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் Bilbo ஒரு மேஜிக் காட்டப்போவதாக அறிவித்து விட்டு அந்த மோதிரத்தை அணிந்து மறைந்து விடுகிறார். உடனே அது தன் இருப்பிடத்தை Sauron கண்களுக்கு காட்டி விடுகிறது. Sauron இன் அடியாட்கள் (Dark forces) மோதிரத்தை தேடி Shire க்கு கிளம்புகிறார்கள்.
பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்தவுடன் அந்த மோதிரத்தை கதாநாயகனான Frodo விடம் கொடுத்து விட்டு தான் யாத்திரை செல்ல இருப்பதாக Uncle Bilbo அறிவிக்கிறார். அந்த மோதிரத்தின் சக்தியை பார்த்த Gandolf அந்த மோதிரம் Sauron உடையது தானா என்று பரிசோதிக்கிறார், அது Sauron உடையது என்று உறுதி செய்து கொண்ட பின் அதனை எடுத்து சென்று அழிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்காக Frodo வை Rivendell என்ற ஊருக்கு மோதிரத்துடன் வருமாறு சொல்லிவிட்டு எங்கோ சென்று விடுகிறார். Frodo வுடன் அவன் நண்பர்கள் Sam, Pipin, Merry ஆகியோரும் சேர்ந்து கொள்ள Rivendell பயணம் ஆரம்பிக்கிறது.

மோதிரத்தை Frodo விடம் கொடுத்த பின் Gandolf அந்த மோதிரத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள தன் நண்பனான Saruman னிடம் செல்கிறார். Saruman, Gandolf ஐ விட அதிகம் சக்தி கொண்டவன். அவன் Sauron இன் கைப்பதுமை ஆகிவிட்டது, Gandolf இக்கு தெரிய வருகிறது. அவன் Orcs எனப்படும் பேய் முகம் கொண்ட ஒரு இனத்தவரை அடிமைகள் ஆக்கிக்கொண்டு Sauron இன் சாம்பிராஜியத்தை பரப்ப முயல்கிறான். அவன் Gandolf ஐயும் தன் போல Sauron பக்கம் சேருமாறு அழைக்கிறான். அதனை Gandolf மறுத்துவிட அவரை Isengard நகர கோபுரத்தின் உச்சியில் சிறை வைத்து விடுகிறான்.

இதற்கிடையில் Rivendell செல்வதற்குள் Frodo தெரியாமல் அந்த மோதிரத்தை போட்டு விடுகிறான், அது தன் எஜமானனுக்கு எங்கு இருக்கிறது என்று தெரிவித்து விடுகிறது, Sauron இன் அடியாட்கள் Frodo வை துரத்துகின்றனர். Strider என்று அழைக்கப்படும் Aragorn இன் உதவி அவர்களுக்கு கிடைக்கிறது. Aragorn மனித இனத்தை சேர்ந்தவன் நல்ல பலசாலி. Rivendell பயணத்தில் ஒரு நாள் Nazgûl என்ற Dark forces இன் தலைவனின் கத்தியால் Frodo குத்தபடுகிறான். அவன் சாக கிடக்கும் போது Elrond என்னும் Elf இன அரசன் Frodo வை பிழைக்க வைக்கிறார். மற்ற அனைவரும் Aragorn இன் உதவியுடன் Rivendell க்கு வருகின்றனர். கோபுரத்தின் உச்சியில் சிறைவைக்கப்பட்ட Gondolf தன் ரகசிய பருந்து படையின் உதவியுடன் தப்பித்து Rivendell வருகிறார்.

Rivendell அரசன் Elrond, Middle-earth இல் வசிக்கும் அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளையும் அழைத்து Sauron இன் மோதிரத்தை எப்படி அழிப்பது என்று கூட்டம் போடுகிறான். அப்போது Gandolf இதனை உடைக்கவோ, எரிக்கவோ, உருக்கவோ முடியாது என்றும், இந்த மோதிரம் Mordor நாட்டில் இருக்கும் Mount Doom இல் உள்ள நெருப்பு ஆறில் உருவாக்கப்பட்டது என்றும். அந்த நெருப்பு ஆறு மட்டுமே அதனை அழிக்க முடியும் என்று கூறுகிறார். அந்த மலையை Sauron இன் கண்கள் பாதுகாப்பதாகவும், அதன் பார்வையில் இருந்து தப்பித்து Mount Doom செல்வது கடினம் என்றும் கூறுகிறார். யார் அதனை எடுத்து செல்வது என்று அனைவருக்கும் சண்டை நடக்கிறது.

அப்போது Frodo எதோ நினைவு வந்தவனாக, நானே எடுத்து செல்கிறேன் என்று சொல்கிறான். அவனுக்கு துணையாக Elf இனத்தை சேர்ந்த Legolas ம், Dwarf இனத்தை சேர்ந்த Gimli யும், மனித இனத்திற்கு Boromir ம், Aragorn ம், Witch இனத்திற்கு Gandolf ம், Frodo வின் நண்பர்களும் சேர்ந்து ஒரு group உருவாகிறது. அதனை " Fellowship of the Ring" என்று Gandolf அறிவிக்கிறார்.


(The Fellowship of the Ring: Orlando Bloom (Legolas), Dominic Monaghan (Merry), Sean Bean (Boromir), Billy Boyd (Pippin), Ian McKellen (Gandalf), Elijah Wood (Frodo), Viggo Mortenson (Aragorn), John Rhys-Davie (Gimli) and Sean Astin (Samwise) in The Lord of the Rings: The Fellowship of the Ring (2001))


அப்பாடா ஒரு வழியா முதல் பாகத்தின் தலைப்பு வந்திடுச்சு, புக் முடிஞ்சிருச்சுன்னு நினைச்சேன். ஆனா, இன்னும் கொஞ்சம் கதை உண்டு இந்த புக் முடிய.

இந்த group தன் பயணத்தை தொடர்கிறது. Saruman, இந்த பயணத்தை பற்றி தெரிந்து கொண்டு கடுமையான பனிப்பொழிவை உண்டாக்குகிறான். அதனால் அவர்களால் வழக்கமான பாதையில் செல்ல இயலாமல் போகிறது. அவர்கள் மலைக்குகை பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள். அதனை கடக்கும் போது நடக்கும் சண்டையில் Gandolf, Morgoth Bauglir என்ற ராட்சனதனால் நெருப்பு மலை உச்சியில் இருந்து விழுந்து விடுகிறார். Fellowship உடைய ஆரம்பிக்கிறது. Boromir, Frodo விடம் இருந்து அவன் மோதிரத்தை திருட முயற்சிக்கிறான், அதனால் நம்பிக்கை இழந்த Frodo தப்பித்து தன் நண்பனான Sam உடன் தனியாக பயணத்தை தொடர்கிறான். அடுத்து Orcs இனத்தவருடன் நடக்கும் ஒரு போரில் Boromir கொல்லப்படுகிறான்.

Fellowship of the Ring படம் முடிகிறது.

---தொடரும்

Lord of the Rings ம் நானும் -1


போன பதிவில் LoTR (Lord of the Rings) பற்றியும் ஆராய்ச்சி மாணவர்கள் படும் இம்சை பற்றியும் எழுதிட்டு, அப்படியே போனா எப்படின்னு தோணிச்சு அதான் இந்த பதிவு :)))
( படிக்கிறவங்கள கொடுமை படுத்தாம விடுறதில்லைன்னு ஆத்தா மகமாயி முன்னால சத்தியம் செஞ்சு இருக்கோம்ல நாங்க)

LoTR என்றொரு புத்தகம் இருக்கிறது, அது சினிமாவாக எடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்பது எனக்கு 2002 வரை தெரியாது. 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான் வெளிநாடு வந்து இரண்டு மாதங்களே ஆன நிலை, 2001 ஆம் ஆண்டு டிசம்பர்இல் தான் LoTR இன் முதல் பாகமான "Fellowship of the Ring" சினிமாவாக வெளிவந்து சக்கை போடு போட்டு கொண்டு இருந்தது. என்னுடைய labmates இருவர் நீ கட்டாயம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர். படம் தொடங்கிய போது எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. நேரம் செல்ல செல்ல எதோ கொஞ்சம் புரிந்தது (அதில் வரும் graphics ம் DTS சத்தமும் படத்தில் வரும் பேய் போன்ற முகங்களும் அன்று இரவு கனவில் வந்து என்னை பயமுறுத்தியது வேற விஷயம்)

பிறகு அடுத்த நாள் அப்பாடா தொல்லை விட்டது என்று நான் நினைக்க அதே labmates இல் ஒருவர் வந்து, இந்தா புத்தகம், இது LoTR ஐ உனக்கு அறிமுகப்படுத்தும் என்று "The Silmarillion" என்ற புத்தகத்தை கொடுத்து விட்டு போனார். எனக்கு LoTR யே புரியல, இதில எங்க அறிமுகப்படுத்துறது என்று மனதுக்குள் சொல்லி கொண்டு அதனை வாங்கி வைத்து கொண்டேன். (கடைசி வரை அதனை நான் படிக்க வில்லை)

பிறகு அடுத்த மாதமே என்னுடைய whole group ம் சேர்ந்து அதே படத்திற்கு (விதி செய்த சதி) நான் வரவில்லை என்று பல தடவை சொல்லியும் கேட்க்காமல் அழைத்து சென்றது.
இப்பொழுது படம் எனக்கு இன்னும் கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது. (எங்கு, எங்கு பேய்முகம் வரும் என்று தெரிந்ததால் நாள் கண்ணை மூடி கொண்டு விட்டேன்)

அப்புறமும் என்னை விடாமல் துரத்தியது LoTR, இப்போது வேறு வடிவில். நாங்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து எப்போதும் சாப்பிட செல்வோம், சாப்பிட்டு விட்டு ஒவ்வொருவரும் முட்டை வடிவில் சாக்லேட் ஒன்று இருக்கும் அதனுள் LoTR action figures இருக்கும், அதனை collect செய்வது எதோ தங்கத்தை சேகரிப்பது போல எல்லாரும் செய்வார்கள், அந்த சுழலில் நானும் மாட்டி கொண்டேன். (நான் படித்து முடித்து விட்டு வரும் போது ஒரு பை நிறைய LoTR action figures என்னிடம் இருந்தது) அவ்வாறு சேர்த்த பொம்மைகளை என் desk முழுக்க எதோ கொலு போல வைத்து இருப்பேன்.

இப்படி தொடர்ந்து நம்மை துரத்துதே LoTR அப்படி என்ன தான் அதில இருக்கு? அப்படின்னு ஒரு கை பாத்திடுவோம்னு, LoTR இன் முதல் புத்தகமான Fellowship of the Ring படிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே படம் வேறு பல முறை பார்த்ததால் கதை கொஞ்சம் புரிந்தது.

இந்த புத்தகத்தை எழுதியவர் J.R.R. Tolkien அவர்கள். LoTR கதை நடப்பது middle earth என்ற பூமி போன்ற ஒரு உலகத்தில். அதில் பலவகையான மனிதர்கள், மனிதர்கள் போன்றவர்கள் வசிக்கிறார்கள். அவர்களின் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து தங்கள் இனத்தை பாதுகாக்க மோதிரங்களை (Rings) உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு race ம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Rings ஐ பெருகின்றனர். அவற்றில் ஒரு கெட்ட அரசன் Sauron (Dark lord) இவர்களுக்கு எல்லாம் தெரியாமல் எல்லா மோதிரங்களையும் அடிமை படுத்தும் ஒரு மோதிரத்தை உருவாக்குகிறான். அதுவே Lord of all the rings. இந்த மோதிரத்தை கொண்டு எல்லா மனிதர்களையும், மனிதர்கள் போன்றவர்களையும் அடிமைபடுத்த முயல்கிறான். இதனை தெரிந்து கொண்ட அனைவரும் அவனுக்கு எதிராக வெகுண்டெழுந்து போர் செய்கின்றனர், முடிவில் Sauron கொல்லபடுகிறான். அவன் மோதிரம் தொலைந்து போகிறது, அவன் இறந்தாலும் அவன் ஆவி அந்த மோதிரத்தை தேடுகிறது.

இதுவரை நான் சொன்னது LoTR இன் முன்கதை மட்டுமே , இப்பவே கண்ண கட்டுதே! என்று தான் முதலில் இருந்தது எனக்கு.
---தொடரும்

Thursday, March 18, 2010

"Researcher" என்ற ஒரு ஜந்து

"பேரு பெத்த பேரு தாக நீலு லேது" என்று யாரோ சொல்லி கேள்விபட்டு இருக்கிறேன். மத்த விசயங்களுக்கு இது பொருந்துதோ இல்லையோ, ஆனா "I am a researcher" என்று யாராவது சொன்னால் அவர்களின் உண்மை நிலை இது தான்.

"Lord of the Rings" கதையையும் ஒரு Researcher இன் வாழ்கையையும் இணைத்து நெறைய கதைகள் வந்ததுண்டு. அந்த கதையில் வரும் ப்ரூடோ (Frodo) போல ஒரு ஆர்வக்கோளாறு பையன் மற்றவர்களை போல இல்லாமல் எதாவது வித்தியாசமா செய்யனும்னு நினைக்கிறான். அவனுக்குன்னு ஒரு advisor, Gandolf ரூபத்தில் வந்து அமைகிறார். முதலில் ஒரு சின்ன ப்ராஜெக்ட் (ரிங் ஐ Rivendell க்கு கொண்டு செல்வது) ஐ Frodo வுக்கு Gandolf கொடுக்கிறார். அதனை assign செய்து விட்டு அவர் எங்கோ சென்று விடுகிறார். அதனை கொடுத்தவுடன் Researcher ஐ dark forces ரூபத்தில் எதிர்கால பிரச்சனை பிடித்து கொள்ளுகிறது . என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது Aragorn என்ற ஒரு Postdoc அவனுக்கு ஹெல்ப் செய்கிறார். Aragorn ரொம்ப காலமாக Gandolf க்கு Postdoc ஆக இருக்கிறார்.

ஒரு வழியாக நல்ல postdoc ஆன Aragorn உதவியுடன் முதல் project ஐ முடித்தவுடன் எங்கிருந்தோ மறுபடியும் advisor ஆன Gandolf வந்துவிடுகிறார். பின்னர் Head of the Department ஆன Elrond முன் Presentation நடக்கிறது. Advisor Gandolf இந்த ப்ராஜெக்ட் இனிமேல் தான் ஆரம்பிக்க போகிறது என்று சொல்லி ஒரு பெரிய குரூப் உருவாக்குகிறார். அதில் visiting students ஆக Gimli யும் Legolas ம் இணைகிறார்கள். அதில் எப்படா அடுத்தவன் research ஐ திருடுவது என்று காத்து கொண்டிருக்கும் Boromir ம், நல்ல postdoc ஆன Aragorn ம் இருக்கிறார்கள். அதில் Frodo வின் பழைய friends ஆன சிலரும் இணைகிறார்கள். இதனை உருவாக்கிய பின்னர் மறுபடியும் advisor Gandolf எங்கோ சென்று விடுகிறார். இந்த குரூப் தங்களின் research பயணத்தை Frodo வின் தலையில் கட்டி விட்டு தொடங்குகிறது.

நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொருவராக அந்த குரூப் இல் இருந்து கழண்டு கொள்ள ஆரம்பிகிறார்கள். முதன்முதலாக Boromir, Frodo வின் வேலையே திருட நினைக்க அவனை Frodo கழட்டி விடுகிறான். இனிமேல் research சம்பந்தமாக தன் உயிர் சிநேகிதனான சாம் ஐ தவிர வேறு யாருடனும் discuss செய்வதில்லை என்று முடிவு செய்து தனியாக பயணத்தை சாம் உடன் தொடங்குகிறான். இடையிடையே கூட இருந்து கழுத்து அறுக்கும் Gollum போன்றவர்கள் வருகிறார்கள், அவர்களை பற்றி சாம் எச்சரித்தாலும் அவர்களை நம்பி கொண்டு இருக்கிறான் Frodo.

Frodo வின் research பயணத்தின் கடைசி கட்டமான Thesis writing (Mount doom) வருகிறது. அதில் ஏற, ஏற கனம் அதிகம் ஆவது போல உணர்கிறான். Thesis submission வரும் போது இது என் வேலை என்று Gollum தன் வேலையை காட்டுகிறது. அதில் இருந்து ஒரு வழியாக சமாளித்து Thesis submit செய்து முடிக்கிறான். அவன் சாக கிடக்கும் கடைசி நேரத்தில் அவனுடைய advisor வந்து அவனை காப்பாற்றுகிறார்.

எல்லாம் முடிந்து அவன் டாக்டர் பட்டம் வாங்கி விட்டான். எல்லாரும் பாராட்டுகிறார்கள் அதன் பின் என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு. முழு உலகமும் வெறுமையாக தெரிகிறது. டாக்டர் பட்டம் வாங்கினால் அடுத்து என்ன என்ற கேள்வி எழுகிறது. அவனால் மற்றவர்களை போல வாழவும், சம்பாதிக்கவும் முடியவில்லை. அவனுடைய மற்ற நண்பர்கள் எல்லாம் நல்ல வாழ்கை வாழ அவனோ தலை நரைத்த பெருசுகளான Elrond, Gandalf அவன் Uncle எல்லோருடனும் சேர்ந்து மறுபடியும் எதையோ தேடி செல்கிறான்.

Saturday, March 13, 2010

தண்ணீருக்காக ஒரு யுத்தம் வராமல் தடுப்போம்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
.எண்ணெய் யுத்தம் கேள்வி பற்றிருக்கிறோம். அது கச்சா எண்ணைக்காக தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் தண்ணீருக்காக இதே போல் ஒரு யுத்தம் நடக்கும், இவ்வாறு நான் சொல்லவில்லை ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைப்படி பூமியில் தற்போது இருக்கும் நீரில் 2.5% நீரே குடிநீராக உபயோகப்படுத்தமுடியும். அவற்றிலும் ௦.0007% நீரே ஆறு,குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் இருக்கிறது. உலகத்தில் மக்கள்தொகை உயர உயர நீரின் தேவையும் அதிகம் ஆகும். ஆனால் இப்போது இருக்கும் நிலவரப்படி உபயோகிக்க கூடிய குடிநீர் அளவு ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் மிக மிக குறைந்து வருகிறது.

மேலே இருக்கும் புகைப்படத்தில்(1) ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் நாடுகளில் எல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது என்றும், மஞ்சள் நிறத்தில் இருக்கும் நாடுகள் தண்ணீர் தட்டுப்பாட்டின் விளிம்பில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது. அவற்றில் உலகில் மிகஅதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளான இந்தியாவும் சீனாவும் அடங்கும். இது தற்போதைய நிலை தான். இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பித்தால் என்ன ஆகும்? யோசித்து பாருங்கள். தற்பொழுது எண்ணைக்காக ஆக்கிரமிப்புகள் நடப்பது போல நாளை நீர்வளம் இருக்கும் நாடுகளை நோக்கி ஆக்கிரமிப்பு தொடங்கும். விளைவு போர்.உலக புள்ளிவிவரங்கள் எல்லாம் இருக்கட்டும், தற்போது தமிழ்நாட்டுக்கும் அதன் அண்டை மாநிலங்களுக்கும் அடிக்கடி நடக்கும் உரசல்கள் எல்லாம் நதிநீர் சம்பந்தப்பட்டது. அது உள்ளூர் கலவரமானது அனைவரும் அறிந்ததே.

சரி! இதற்கு தீர்வு!

1. இருக்கும் நீர் நிலைகளை காப்பது
2. கழிவு கூடாரமாகி இருக்கும் ஆறு குளங்களை சுத்தபடுத்துவது
3. மேலும் கழிவு ஆறு குளங்களில் கலக்காமல் காப்பது.
4. நிலத்தடி நீரை அதிகப்படுத்துவது
மேலே இருக்கும் புகைப்படம் (2) ஒரு ஆலை கழிவு கங்கை ஆற்றில் கலக்க படும் புகைப்படம். ஆலை கழிவுகள் சுத்திகரிக்க பட வேண்டும் என்று எத்தனையோ சட்டம் இருந்தாலும் அதன் ஓட்டைகளை அறிந்து கொண்டு அதனை செயல்படுத்தாமல் இருப்பவர்களே அதிகம். சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.

கங்கை ஆற்றில் கலக்கும் கழிவுகளில் 20% கழிவுகளே ஆலை கழிவுகள், மீதமுள்ள 80% கழிவுகள் மனிதனால் உண்டாவது (3). இவற்றில் மக்கள் தூக்கி வீசுவது கொஞ்சம் தான், மாநிலங்களே அவற்றை என்ன செய்வது என்று அறியாமல் ஆறுகளிலும், ஏரிகளிலும் கலக்கிறார்கள் அல்லது தீயிட்டு கொளுத்தி காற்றை மாசுபடுத்துகின்றனர்.

இதனை தடுக்க ஒரே வழி மறுசுழற்சி முறையை மக்களிடம் கொண்டு செல்வது. கழிவுகளை பகுத்து எவை, மக்கும் கழிவுகள், எவை எல்லாம் மக்கா கழிவுகள், இவற்றை எல்லாம் எப்படி மறுசுழற்சி செய்வது என்பது போன்ற திட்டங்களை உருவாக்குதல். கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்று எங்கோ படித்திருக்கிறேன். இவை எல்லாம் அரசாங்கத்தின் வேலை தானே நாம் நம் வேலைகளை கவனிப்போம் என்று எண்ணாமல் நாமும் நம் வீட்டில் மறுசுழற்சி முறையை தொடங்கலாம்.

எப்படி.

1. வீட்டில் சமையல் கழிவுகளை பகுத்தல். இதனை மற்ற கழிவுகளுடன் கலக்காது மண்ணில் மக்க செய்தால், இது இயற்கை உரமாகலாம்.

2. பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் இவற்றை முடிந்தவரை பயன்படுத்தாது இருத்தல்.

3. எங்கு சென்றாலும் துணிப்பை எடுத்து செல்லுதல், இது பிளாஸ்டிக் பை உபயோகத்தை குறைக்க உதவும்.

4. கண்ணாடி, பேப்பர் போன்ற கழிவுகளை, பழைய பேப்பர் காரனிடம் மட்டுமே போடுதல்.

மேலே நான் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் எனக்கு தெரிந்த சில வழிகள் மட்டுமே. இன்னும் நெறைய வழிகள் கட்டாயம் இருக்கும்.

"You must be the change you wish to see in the world" என்ற அண்ணல் காந்தியடிகளின் வார்தைக்கிணங்க ஒவ்வொருவரும் இதனை ஆரம்பிப்போம்! உலகத்தை காப்போம்!


இதனை போன்ற மனநிறைவு தரும் ஒரு பதிவை தொடர் பதிவாக எழுத என்னை அழைத்த சிறுமுயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கும், இது போன்ற ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த அனைத்து பதிவர்களையும் அழைத்த மண், மரம், மழை, மனிதன் வின்சென்ட் அவர்களுக்கும் என் கோடான கோடி நன்றிகள்.


References
1. www.un.org/waterforlifedecade
2. www.danielbachhuber.com/tag/photography/
3. www.cag.gov.in/reports/scientific/2000_book2/gangaactionplan.htm

Thursday, March 11, 2010

அசோகா ஸ்வீட் ம் நானும்

திருமணமான புதிதில் ஒரு நாள் என் கணவர் ஆபீஸ் போவதிற்கு முன்

"அசோகா பண்ணி வச்சிடுமா, சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு!" என்றார்.

நானும் எல்லாம் தெரியும் என்பதை போல தலை ஆட்டி வைத்தேன்.

கல்யாணத்திற்கு முன் எனக்கு டீ கூட போட தெரியாது என்பது பாவம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆபத்பாண்டவணன் ஆக இருந்த சமையல் புத்தகங்களின் உதவியால் நான் ஓரளவு சமைத்து ஒப்பேத்தி கொண்டிருந்தேன். அதனால் பரவாயில்லையே நம்ம wife நல்லா சமைக்கிறாளே என்று நினைத்து கேட்டு இருக்க கூடும் என்று நினைக்கிறேன்.

அசோகா என்று அவர் சொன்ன போது அது ஸ்வீட் ஆ காரமா என்று கூட தெரியாது. எனக்கு தெரிந்த அசோகா எல்லாம் அசோகர் சாலை ஓர மரங்களை நட்டது, அப்புறம் அசோகர் ஒரு போருக்கு பின் புத்த மத துறவியானது இவை போன்ற அசோகா சக்கரவர்த்தி பற்றிய விஷயங்கள் தான்.

என்ன பெரிய அசோகா நம்ம cook book ல இல்லாததா என்று எனக்கு ஒரு நினைப்பு இருந்ததாலே "கட்டாயம் பண்ணி வைக்கிறேங்க" என்று அவர் கேட்கும் போது தலை ஆட்டி வைத்தேன். ஆனால் என் கேட்ட நேரம் அதை பற்றி ஒரு விசயமும் என் புக் ல இல்ல.

சரி நம்ம கிட்ட தான் Trusty Survival manual ஆன Google இருக்கே என்று asoka என்று type செய்து தேட விட்டேன். அதிலும் சனி வந்து ஆட்டி வைக்க, வந்தது எல்லாம் King Asoka, Asoka chakra.....இப்படி எல்லாம் அசோகா சக்கரவர்த்தி பற்றிதான்.

சரி அடுத்து என்ன பண்ணலாம் என்று நினைத்து , அசோகா எப்படியும் ஒரு ஸ்வீட் ஆவோ காரமாவோ தான இருக்கணும், "அசோகா காரம்" அப்படின்னு ஒரு கூகிள் ல தேடலாமேன்னு தேட விட்டேன். அதுக்கும் பதில் நஹி.

அடுத்து அசோகா ஸ்வீட் அப்படின்னு ஒரு google search. ஒரு சில Recipe வந்தது. அப்பாடா ஒரு வழியா அசோகான்னு ஏதோ ஒரு recipe இருக்கு ஆன எது அவர் சொன்னது என்று குழம்பினேன்.

முதல்ல நான் பார்த்தது அசோகா அல்வா அப்படின்னு ஒரு அல்வா. அது தஞ்சாவூர் ஸ்பெஷல் என்று இருந்தது. இவர் தூத்துக்குடி காரர் ஆச்சே இவருக்கு எப்படி தஞ்சாவூர் ஸ்வீட் பற்றி தெரியும் என்று நினைத்து, செய்ய ஆரம்பித்தேன்.

"செத்தா தானே சுடுகாடு தெரியும்" என்று என் பாட்டி அடிக்கடி சொல்வார்கள். நானோ அல்வா எல்லாம் லாலா கடையில வாங்கி சாப்பிடதோட சரி. அதுவும் திருநெல்வேலி அல்வா தான். எங்கம்மாவும் எனக்கு வீட்டுல எல்லாம் அல்வா கிண்டி கொடுத்ததில்லை.
அது பெரிய வேலை அப்படின்னு சொன்னது மட்டும் ஞாபகம்.

அசோகா அல்வா பாசிப்பருப்புல செய்றது. முதல்ல பாசிபருப்பை தேங்காய் பாலில வேக வச்சு, எடுத்து மசிச்சு அதில சீனி போட்டு நெறைய நெய் ஊத்தி அடி பிடிக்காம பதமா கிண்டிட்டே இருக்கணும் அப்புறம் பாத்திரத்தில ஒட்டாம வரும் போது எறக்கி வைக்கணும். ரேசிபே படிக்கும் போதே எனக்கு தலை சுற்றியது. சரி நாம வேற வேலை இல்லாம வெட்டியா தானே இருக்கோம் அப்படின்னு ஒரு வழியா கஷ்டப்பட்டு கிண்டி முடிச்சேன்.

ஒரு வெற்றி களிப்போட, ரொம்ப சந்தோசமா சாயங்காலம் அவர் வந்ததுமே, "இதோ பாருங்க அசோகா" அப்படின்னு நீட்டினா மனுஷன் என்னை ஒரு மாதிரி பாக்குறாரு. இதுவா அசோகா! அது கேக் மாதிரில்லா இருக்கும் என்றாரே பாக்கணும். இன்னைக்கு வரை அசோகா கேக் ரேசிபே தேடிட்டு இருக்கேன். யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.

Wednesday, March 10, 2010

குழந்தையின்மை சிகிச்சை வியாபாரமாக்கப்படுகின்றதா?

சில மாதங்களுக்கு முன் என் தோழி ஒருவரின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அவர்களுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனாலும் ஒரு நல்லசெய்தி சொல்ல முடியாமல் வேதனைபட்டு கொண்டு இருந்தனர்.

நான் சென்றிருந்த சமயம் அவர்கள் வீட்டில் ஒரு இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு நடிகை ஒரு மருத்துவரிடம் கேள்வி கேட்டு கொண்டிருந்தார். அந்த மருத்துவர் பெண்களுக்கான Ob-Gyn/Infertility டாக்டர் என்று நினைக்கிறேன். அதில் நடிகை ஒவ்வொரு கேள்வி கேட்டு முடித்த பின் அந்த டாக்டரின் speciality என்று சுமார் பத்து நிமிடம் அறிவித்தார் ஒரு பெண். அதில் எங்களிடம் சிகிச்சை எடுத்து கொண்டால் எல்லா கருப்பை பிரச்சனையும் விலகி குழந்தை உண்டாகும் என்றார். எல்லா speciality யும் சொன்ன பின் அந்த அறிவிப்பாளர் "எங்கள் டாக்டர் மிகுந்த பக்தியும் கைராசியும் உள்ளவர் ...." என்று நிறைய சொன்னார்.

அது ஒரு 30 நிமிட நிகழ்ச்சி என்று நினைக்கிறேன், அதில் நடிகை ஒரு ஐந்தாறு கேள்வி தான் கேட்டு இருப்பார். மற்றபடி அந்த டாக்டர் பற்றின விளம்பரமும் அவரின் கைராசி பற்றியும் தான் நிறைய கேட்க முடிந்தது.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது என் தோழியுடன் பேசி கொண்டிருந்தேன். அவர் இந்தியா செல்ல இருப்பதாக சொன்னார். அங்கு சென்று குழந்தையின்மைகாக சிகிச்சை எடுத்து கொள்ள இருப்பதாக சொன்னார். இங்கு நல்ல advanced treatments இருக்கும் போது எதற்கு அங்கு செல்கிறாய் என்று கேட்டேன். அதற்கு அவர் தனக்கு கருக் குழாய் அடைப்பு (Fallopian tube blockage) இருப்பதாக டாக்டர்ஸ் சொன்னதாகவும் அதற்கு சோதனை குழாய் குழந்தை (IVF treatment) தான் ஒரே தீர்வு என்று இங்கு இருக்கும் டாக்டர்ஸ் சொன்னதாகவும் சொன்னார். அதற்காக ஆகும் செலவு இங்கு அதிகம் என்றும், அவர்களின் இன்சூரன்ஸ் இதனை கவர் செய்யாது என்றும் சொன்னார். அதனால் இந்தியா சென்று இதற்கான மருத்துவம் பார்க்க போவதாகவும் சொன்னார்.

இதை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் வேறொரு இந்தியன் சேனலில் மற்றொரு டாக்டர் வந்து பேசி கொண்டு இருந்தார். அவரும் தான் ஒரு கைராசி குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் என்றும், தன்னிடம் சிகிச்சை பெற்று பலர் குழந்தைபேறு அடைந்ததாகவும் சொன்னார். இது ஒரு coincidence ஆ! இல்லை உண்மையிலேயே இந்தியன் சேனல்களில் இது போன்று விளம்பரம் அடிக்கடி வருகிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் இப்போதெல்லாம் மருத்துவம் குறித்த நிகழ்ச்சிகள் எல்லாம் மருந்துகள் பற்றி கூறுவதை விட அந்த மருத்துவர் பற்றிய விளம்பரமாக மாறியதாக எனக்கு தோன்றியது. சமீப காலங்களில் இந்திய பத்திரிக்கைகள் வாரஇதழ்கள் எல்லாவற்றிலும் இது போன்ற விளம்பரங்கள் அடிக்கடி காண நேரிடுகின்றது.

இவை எல்லாம் நடந்தது சில மாதங்களுக்கு முன், நேற்று என் தோழியை சந்திக்க நேர்ந்தது, அவர் தான் உண்டாகி இருப்பதாக நல்ல செய்தி சொன்னாள். எல்லாம் இயற்கையாக நடந்ததாகவும் எந்த treatment க்கும் செல்லவில்லை என்றும் சொன்னாள். எனக்கு ஒரே சந்தோசம், கடவுள் அவர்களுக்கு நல்ல வழி காட்டினாரே! என்று.

ஆனாலும் எனக்கு வந்த சந்தேகம் இது தான், கருக்குழாய் அடைப்பு என்றும் (Fallopian tube blockage) இயற்கையாக குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றும் இங்குள்ள டாக்டர்ஸ் எப்படி சொன்னார்கள்?. மருத்துவம் மிகவும் முன்னேற்றம் அடைந்ததாக கூறப்படும் இந்த நாட்டிலும் ஏன் இப்படி நடக்கிறது? என்று நினைத்தேன். அப்போது Robin Cook அவர்களின் Vital Signs என்னும் புத்தகத்தில் இது போன்ற குழந்தையின்மை சிகிச்சை (Infertility கிளினிக்) நிலையங்களில் நடக்கும் கூத்துகள் நினைவுக்கு வந்தன. அது ஒரு கற்பனை கதை என்றாலும், இங்கு நடக்கும் கூத்துகளை எல்லாம் பார்க்கும் போது, குழந்தையின்மை சிகிச்சை வியாபாரமாக்கப்படுகின்றதோ என்று நினைக்க தோன்றுகிறது.

Saturday, March 6, 2010

திருவாசகமும், பிரபந்தமும், பீதோவன் இசையும் பின் நானும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கு பிரபந்தம் என்றால் ஒரு பாட்டு தான் நினைவுக்கு வரும். அது நான் பத்தாவது படிக்கும் போது என்று நினைக்கிறேன், அதில் மனபாட பகுதியாக வரும் "பச்சைமா மலை போல் மேனி" என்று தொடங்கும் தொண்டரடிபொடி ஆழ்வார் அவர்களுடைய பாடல். அதே போல சைவ சமயத்தை எடுத்து கொண்டால் "குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில்" என்று தொடங்கும் அப்பர் தேவார பாடலும் தான் நினைவுக்கு வரும்.

இந்த இரண்டு பாடல்களை தவிர பிற ஏதும் அதிகம் தெரிந்திராத நான் நிறைய பாடல்கள் கேட்க வேண்டும் என்று நான் குழந்தை உண்டாகி இருக்கும் போது சொன்னார்கள். அதற்காகவென்றே தேடி தேடி கேட்க ஆரம்பிதேன்.

நான் சிறு வயதாக இருக்கும் போது என் அம்மாவுடன் சேர்ந்து ஒவ்வொரு பிரதோசமும்
எங்கள் ஊரில் உள்ள "இம்மையில் நன்மை தருவார்" கோயிலுக்கு செல்வேன். அப்போது அங்கு ஒருவர் நின்று கொண்டு திருவாசகம் பாட கேட்டு இருக்கிறேன். அப்போது எல்லாம் அர்த்தம் புரியாது என்றாலும் கேட்க நன்றாக இருக்கும்.

அர்த்தம் புரிந்து நான் சிவபுராணம் கேட்க ஆரம்பிதேன். ஆகா! என்ன அருமையான வரிகள். அப்பொழுது தான் இளையராஜா அவர்கள் இசையமைத்த "திருவாசகம் சிம்போனி" கேட்க நேர்ந்தது. சிவபுராணத்தின் பல வரிகள் சிம்போனி இசைக்கு தகுந்த மாதிரி பொருத்தி இசை அமைத்து இருந்தார்.

அதே போல, இங்குள்ள கோவில்களில் திருமஞ்சனதிற்கு முன் பாட படும் "வெண்ணை அளைந்த குணுங்கும்" என தொடங்கும் பாடல் பாட கேட்டு இருக்கறேன். அது என்ன பாடல் என்று பார்த்த போது அது பிரபந்தந்தில் வரும் பெரியாழ்வார் திருமொழியின் இரண்டாம் பத்தில் வரும் பாடல் என்று அறிந்தேன். அதனை படிக்கும் போது வரும் ஆனந்தம் அளவிற்கு அரியது.

அதே போல பெரியாழ்வார் திருமொழியில் வரும் "மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி" என தொடங்கும் தாலாட்டு பாடல் அருமையானது. அதனை சிக்கில் குருசரண் அவர்களின் இசையில் கேட்க நேர்ந்தது. அருமையான பாடல்களை அருமையான சங்கீதத்தில் கேட்கும் போது வரும் ஆனந்தம் இன்பமானது. சில நேரங்களில் தாலாட்டு பாடலாக நான் "மாணிக்கம் கட்டி" பாடலை பாட முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

குழந்தை உண்டாகி ஏற்கும் போது பீதோவன் கேட்பது முக்கியம் என்று சில நண்பர்கள் சொன்னதால் பீதோவன் கேட்க ஆரம்பிதேன். நான் முதலில் கேட்ட பீதோவன் இது தான்

Various - Beethoven - Fur Elise .mp3
Found at bee mp3 search engine


இதனை கேட்டவுடன் அட!! என்று ஒரே ஆச்சரியம் எனக்கு. இதனை நிறைய கார் reverse எடுக்கும் போது வரும் இசையாக கேட்டு இருக்கிறேன். எப்படி இன்றைய அன்றாட வாழ்கையில் பீதோவன் இணைந்துள்ளார் என்று எண்ணி ஆச்சரியபட்டேன்.
பின் பீதோவன் நிறைய கேட்க ஆரம்பிதேன்.

பீதோவெனின் No. 5 in C Minor symphony நேரில் சென்று பார்க்க, கேட்க நேர்ந்தது. Pin drop silence என்பார்களே அது போன்ற ஒரு நிசப்தமான அரங்கில் மியூசிக் கண்டக்டர் அவர்கள் நுழைய அனைவரும் கரகோசம் எழுப்புகிறார்கள், அதன் பின் அவர் கை அசைக்க மெதுவாக ஆரம்பிக்கிறது. சிறிது நேரத்தில் எல்லா வாத்தியங்களும் இணைந்து கொள்ள ஆகா!! என்ன அருமையான இசை. என் வாழ்நாளில் மறக்க முடியாத இசை கச்சேரி அது.

மேற்கத்திய இசையாயினும் சரி இந்திய இசையாயினும் சரி அதனை கேட்கும் போது ஏற்படும் இன்பமும், உணர்வும் மறக்க இயலாதவை.

நான் ரசித்த இது போன்ற ஒரு சில பாடல்களும் இசையும் இசைகடலின் மிக மிக சிறிய துளியே. இசை பெருங்கடலின் இன்பத்தை அனுபவிக்க எத்தனை பிறவி எடுத்தாலும் போதாது.

Thursday, March 4, 2010

Flashback...டொய்ங்..டொய்ங்

நேற்று இரவு எழுந்து எதாவது எழுதலாமே என்று நினைத்து கம்ப்யூட்டர் ஐ on பண்ணியவுடன்

"என்ன இப்போ எல்லாம் நடுராத்திரியில எழுந்திருச்சு blog எழுதுற மாதிரி பைத்தியம் ஆயிட்ட?" என்றார் என் கணவர்.

அட ஆமால்ல! இப்படி நான் படிக்கும் போது கூட எந்திருச்சு படிச்சதில்லையே. இப்படி ப்ளாக் நம்மளை addictive ஆக்குதோ என்று நினைச்சாலும்

"ஆமா பகல்ல உங்க பையன பாக்கவே நேரம் சரியாய் இருக்கு, எனக்குன்னு டைம் எப்போ தான் கிடைக்குது சொல்லுங்க". என்று நொள்ள சாக்கு சொன்னேன்.

"ஒரு நிமிஷம் கடந்த 5 வருஷ flashback ஐ ஓட்டி பாரு. உனக்கே புரியும்" என்று பதில் வந்தது.

உடனே என் மனதில் வளையம் வளையமாக flashback ஓடியது.

டொய்ங்..டொய்ங்..டொய்ங்..

ஐந்து வருடங்களுக்கு முன் ....டன் டட்ட டைன்

2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான் இங்கு வந்த போது எங்களுக்கு என்று நட்பு வட்டம் யாரும் இல்லை. இங்கு இருந்த நட்பு எல்லாம் என்னுடைய கணவரின் bachelor friends மட்டுமே.

என்னங்க உங்களுக்கு family ஆ யாரும் friends கிடையாதா என்று என் கணவரிடம் கேட்டேன்

"அட போம்மா, இங்க பாமிலி ஓட இருந்தா தான் நம்மளையும் பாமிலி மக்கள் ஒட்ட விடுவாங்க. இப்போ நீ வந்துட்ட இல்ல இனிமே பாரு என்னோட வேலை பாக்குறவங்க நிறைய பேர் friends ஆவாங்க" என்று பதில் வந்தது.

என்ன ஆச்சரியம் அதே போல எங்களுக்கு ஒரு group அமைந்தது. அதில் இருந்த அனைவரும் couples என்பதால் அது "couples group". அது மட்டும் அல்ல அவர்கள் அனைவர் வீட்டிலும் கணவர் வேலை பார்த்தார் மனைவி house wife. அப்புறம் என்ன! வாரா வாரம் get together தான், Virginia beach, Blue ridge parkway...etc நெறைய ஊர் சுற்றல் தான்.

அப்புறம் ஒரு ஆறு மாதத்தில் எனக்கு பல்கலைகழகத்தில் வேலை கிடைத்தது, அதன் பின் எங்க couples க்ரூபில் இருந்து நாங்கள் கழற்றி விட பட்டோம். என்ன காரணம் என்று கேட்ட போது,

"நீங்க வேலை பார்கிறதால weekend தானே உங்களுக்கு கிடைக்கும். அதில போய் உங்கள disturb பண்ண வேண்டாமுன்னு விட்டுட்டோம்" என்று பதில் வந்தது.

அப்புறம் கொஞ்ச நாள் கழித்து எங்களை போல இருவரும் வேலை பார்க்கும் ஒரு குரூப் அமைந்தது அது "all working group" அது கணவன் மனைவி வேலை பார்க்கும் couples group. அப்புறம் என்ன! weekend weekend, get together தான், நெறைய ஊர் சுற்றல் தான்.

யாரு கண்ணு பட்டுச்சோ! அப்புறம் ஒரு நல்ல நாளில் அந்த குரூப் இல் இருந்தும் கழற்றி விடப்பட்டோம். இப்போது காரணம் அவர்கள் எல்லாம் "expecting parents" ஆகி விட்டார்கள். நாங்கள் இன்னும் couples தானே. காரணம் கேட்ட போது.

"குழந்தை இருந்தா குழந்தைக்கும் ஒரு செட் வேணும்ல..நாம மட்டும் பேசிட்டு இருந்தா குழந்தைகள் எங்க போகும்". என்று பதில் வந்தது.

அப்புறம் ஒரு வழிய முக்கி தக்கி நாங்களும் "first time parents" ஆகி parents group ல join பண்ணிடலாம்னு நினைச்சா அதுக்குள்ள அவங்க எல்லாம் double century போட்டு "Two time parents" ஆகிட்டாங்க.

இப்போ என்ன பண்ணுறது? அவங்க நமளையும் ஆட்டைக்கு சேர்த்துக்கணும் னா நாங்களும் double century போடணும். இல்லாட்டி "first time parents" இருக்க குரூப் ஆகா பார்க்கணும், அதுவும் ஆம்பளை பையன் இருக்க first time parents குரூப் ஆ பார்க்கணும்..

"அப்ப தானே என் பையனுக்கும் அவன் செட்டுக்கு ஆள் கிடைக்கும்"

flashback முடிந்தது டொய்ங்..டொய்ங்..டொய்ங்.