Friday, February 25, 2011

பறவை காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும்

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு காய்ச்சல் : பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், சிக்கன் குன்யா என வித விதமான காய்ச்சல்கள். ஆனால் இந்த காய்ச்சல் வகைகள் எல்லாம் ஒரே ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா! உண்மை தான்.
இன்ப்லுயன்சா வைரஸ் என்பதே அந்த வைரஸ் கிருமி. பொதுவாக வைரஸ் கிருமிகள், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகளை விட வித்தியாசமானவை. மனித செல்களை அடையும் வரை அவை செயல் படுவதில்லை, மனித செல்களை அடைந்தவுடன் வேகமாக தன்னை மனித செல்களுடன் இணைத்து கொண்டு தன்னை தானே படிவமெடுத்து வெளியிட்டு பெருகுகின்றன.

சரி, இன்ஃப்லுயன்ஸா என்பது ஒரு வைரஸ் கிருமி தானே, பிறகு எப்படி பல உயிரினங்களில் வித விதமான காய்ச்சல்கள் ஏற்படுத்துகிறது?
இந்த வைரஸ் கிருமி ஒரு உயிரினத்தில் வசிக்க ஆரம்பிக்கிறது என்று வைத்து கொள்ளுவோம், அது அந்த உயிரினத்தில் தன்னை நகல் எடுக்க ஆரம்பிக்கும் போது, தனக்குள்ளே சில மாற்றங்களை செய்து கொள்ளுகிறது, அதனை ஆங்கிலத்தில் மியுட்டேஷன் என்று கூறுகிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் அந்தந்த உயிரினத்திற்கு தகுந்தாற் போல அது தன்னை மாற்றிகொண்டே இருப்பதால், ஒரு நோய்-> ஒரு மருந்து என்ற முறைப்படி நம்மால் மருந்து கண்டுபிடிக்க முடிவதில்லை.
2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலை இதற்கு உதாரணமாக கூறலாம். இதனை ஏற்படுத்திய இன்ஃப்லுஎன்ஸா வைரஸ் H1N1 என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு 1918 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு H1N1 ஸ்பெயினில் ஏற்பட்டு இருந்தாலும், அப்போது இருந்த வைரஸை விட இப்போது 2009 ல் நோய் உண்டாக்கிய வைரஸ் நிறைய மாற்றங்களை தனக்குள் ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது. அதனை தவிர 2009 ல் ஏற்பட்ட பன்றிக்காய்சல் பன்றியில் இருந்து வந்திருந்தாலும், ஒரு மனிதனில் இருந்து இன்னொரு மனிதனுக்கு தாவும் சக்தி பெற்றிருந்தது.


சரி, இது எப்படி ஒரு மனிதனில் இருந்து இன்னொருவருக்கு தாவுகிறது?
காய்ச்சல் உள்ள ஒருவரிடம் இருந்து வரும் தும்மல், இருமல், சளி துப்புதல் இவற்றால் இந்த காய்ச்சல் அதிகம் பரவும் என்பதால், முடிந்த வரை நோயுற்ற ஒருவரிடம் இருந்து விலகி இருப்பது நமக்கு அந்த காய்ச்சல் வராமல் தடுக்கும். அடிக்கடி கை கழுவுவதன் மூலமும் இந்த காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.


மேலும் நாம் வசிக்கும் இடத்தில் இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதம் நம் மூக்கை உலராமல் வைத்திருந்து மூக்கில் இருக்கும் மியூக்கஸ் மூலமாக நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும் என்பதால் முடிந்த அளவு வீட்டில் ஈரப்பதம் இருக்கும் படியும் பார்த்துக்கொள்ளலாம்.


ஃப்லூ தடுப்பூசி

ஒவ்வொரு வருடமும் இந்த வகை இன்ஃப்லுயன்ஸா வைரஸ் பரவலாம் என்று ஊகித்து அதற்கு மருந்து தயாரிக்கின்றனர். அதனை இங்கு அமெரிக்காவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஃப்லு ஷாட்ஸ் என்று தடுப்பூசியாக போடுகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர் என்று அறிவதால் அவர்களுக்கு இந்த தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆனாலும் ஒரு முறை இந்த தடுப்பூசி போட்டுவிட்டால் ஒவ்வொருவருடமும் போட வேண்டும் இல்லாவிட்டால் ஃப்லூ கட்டாயம் வந்துவிடும் என்று இங்குள்ள அனைவரும் நம்புகிறார்கள்..ஆனால் உன்மை என்னவென்றால் ஃப்லூ தடுப்பு ஊசி போட்டு கொண்டாலும் பலருக்கு காய்ச்சல் வரலாம். ஏன் என்றால் தடுப்பூசி மருந்து இந்த வகை வைரஸ் பரவலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதே இதற்கு காரணம். ஆனால் இந்த இன்ஃப்லூயன்ஸா வைரஸ் இந்த வருடம் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது?, அதற்குறிய மருந்து என்ன? என்பது நோய் வந்த பிறகே கணிக்க முடியும் என்பது வருந்ததக்க உண்மை.

Tuesday, February 8, 2011

Researcher என்றொரு ஜந்து-2ஏற்கனவே என்னுடைய முந்தய சில இடுகைகளில் ஆராய்ச்சி பட்டம் பெற முயற்சி செய்யும் பலர் படும் அவஸ்தைகளை பற்றி எழுதி இருந்தேன் பகுதி 1 , பகுதி 2, அந்த அவஸ்தைகளின் தொடர்ச்சியே இந்த இடுகையும்.

நேற்று நெடுநாளைக்கு பிறகு என்னுடைய நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. என்னுடைய ஜூனியர் அவர். இந்தியாவில் இருந்து இங்கு மேல்படிப்புக்காக வந்தவர். கிட்டதட்ட ஐந்து வருட இடைவெளியில் சந்தித்தால் எனக்கு ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறி இருந்ததாக தோன்றியது. பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு பேசிகொண்டிருந்த போது "எப்போ கிராஜூவேட் ஆன? " என்று நான் கேட்டது தான் தாமதம் அவர் முகம் சுருங்கி எதோ போல ஆகி விட்டது. பின்னர் ஒருவாறு பேச்சை மாற்றி வேறு பேச்சு பேச ஆரம்பித்து விட்டோம்.

பின்னர் வேறு ஒரு நண்பர் மூலமாக நான் அறிந்தது இது தான். என்னுடைய நண்பர் படிப்பை தொடர்ந்த போது, அவருடைய பாஸ் அவருக்கு ஒரு புது உயிரினத்தை அதாவது அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாத ஒரு உயிரினத்தை அவரின் ஆராய்ச்சிக்கு கொடுத்து இருக்கிறார். இது போன்று யாரும் ஆராய்ச்சி
செய்யாத உயிரினத்தை கொடுத்து ஆராய்ச்சி செய்ய சொல்லுவது ஒரு சூதாட்டம் மாதிரி. நல்ல ரிசல்ட் வந்தால் நல்ல மதிப்பு மற்றும் நல்ல ஜேர்னலில் ஆராய்ச்சி கட்டுரை என்று எல்லாம் நல்ல படியாக நடக்கும். மாறாக ஒன்றும் வரவில்லை என்றால் எல்லாமே ஆப்பு ஆகிவிடும்.

புது உயிரினம் அதனால் நல்ல எதிர்காலம் உனக்கு இருக்கிறதுஎன்று அவருடைய பாஸ் பிரைன் வாஷ் செய்து இருக்கிறார். இவரும் நம்பி இறங்கி இருக்கிறார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட உயிரினம் செயற்கையான லேப் சூழ்நிலையில் வளர மறுக்க.அவருக்குஅதனை எப்படி லேபில் வளர வைக்க என்று ஆராயவே அவருக்கு சில வருடங்கள் பிடித்திருக்கிறது. பின்னர் புது உயிரினத்தில் நடத்தப்படும் அடிப்படை சில டெஸ்டுகள் நடத்தி முடிக்க அவருடைய ஆராய்ச்சி காலமும் முடிந்திருக்கிறது, பின்னர் ஒரு வருடம் எக்ஸ்டென்ஷன் வாங்கி அவர் தொடர்ந்திருக்கிறார், சில பல புதிய ஆராய்ச்சிகள் செய்து முடிக்கும் தருவாயில் அவர் செய்தது போன்ற அதே ஆராய்ச்சிகள் வேறொறுவர் செய்து ஜர்னலில் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறார். அதனை காரணமாக காட்டி அவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் எங்கும் வெளியிட படவில்லை.

ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்படாததால் அவருக்கு முனைவர் பட்டமும் கொடுக்கப்படவில்லை. இந்தியாவில் இருந்து ஸ்டூடண்ட் விசாவில் வந்ததால் அதுவும் முடிந்து விட்டு இருக்கிறது, இப்பொதைக்கு அவர் 5 வருடங்களுக்கு முன் எந்த நிலையில் இந்தியாவில் இருந்து வந்தாரோ அதெ போல வெறுங்கையுடன் இந்தியா திரும்ப வேண்டிய நிலை. இடையில் திருமணம் வேறு.

ஒரு ஆராய்ச்சி மாணவன் நல்ல படியாக தீசிஸ் எழுதி பட்டம் பெறுவது என்பது முழுக்க முழுக்க அவனது ப்ரோபாசர் கையில் இருக்கிறது. அவர் நல்லவராக அமைந்து விட்டால் எல்லாம் நல்லபடியாக இருக்கும், இல்லாவிட்டாலோ, எல்லாம் சர்வநாசம் ஆகிவிடும்.

Wednesday, February 2, 2011

'Salt' - மகா குப்பை
ஒரு படத்தை ரொம்ப நாளா பார்க்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்..எல்லாரும் அந்த படத்தை பத்தி ஆகா, ஓகோ, சான்சே இல்லை என்று ஏத்தி வேற விட்டு இருந்தார்கள். தியேட்டர் போயி பார்க்க முடியல, சரி, DVD வரட்டும் வீட்டிலேயே பார்க்கலாம்னு முடிவு பண்ணி வெயிட் பண்ணி DVD வாங்கி ஆசை ஆசையா படத்தை பார்த்தா, சாமி!! நம்ம ஊரு விஜயகாந்த், அர்ஜுன், விஜய் வகையறா படங்கள் கூட தேவலைப்பா...அப்படின்னு தோனுற அளவு ஒரு படமுங்க இந்த 'Salt', இதை போய் எப்படி மக்கள் நல்லா இருக்குன்னு சொன்னாங்கன்னு தெரியலப்பா.

அதில வர்ற ஆன்ஜெலினா ஜோலி அம்மா இருக்காங்க பாருங்க..நம்ம ஊரு தனுஷ் மாதிரி உடம்பை வச்சுகிட்டு என்னம்மா தாவி தாவி சண்டை போடுராங்க தெரியுமாப்பா! அதை விட நம்ம ஹீரோ எல்லாம் பண்ணுவாங்க பாருங்க ஒரு லாரி ல இருந்து இன்னொரு லாரிக்கு அப்படியே ரன்னிங்க ல தாவுவாங்களே, அந்த மாதிரி ஜிவ் ஜிவ் ன்னு ஹை வேஸ்ல தாவுதுப்பா அந்த அம்மா!

அதை விட சில நேரங்கள்ல அந்த அம்மாவை ரோட்ல ஓட விட்டு இருக்காங்க அது ஓடுறதை பார்த்தா என்னவோ உடம்புக்கு முடியாம இருக்கிற ஒரு பாட்டிய ஒடுங்கம்மா அப்படின்னு படுத்தினா எப்படி இருக்கும் அப்படி இருக்கு.

இதில என்ன ஜோக் ன்னா அந்த அம்மா எல்லா இடத்திலையும் சும்மா 'சர்' சர்' ன்னு வந்து சுட்டுட்டோ/கொலை செஞ்சுட்டு போகுமாம், போலிசு, CIA, FBI, அப்புறம் இவங்க secret agency எல்லாம் லொலிபொப் சாப்பிட்டு இருப்பாய்ங்களாம், யாருக்கையா காது குத்துறீங்க. அதுவும் அந்தம்மா வைட் ஹவுஸ்க்கு எலிவேட்டேர் மேல இருந்து சும்மா சிட்டாட்டம் பறந்து வரும் பாருங்க சூப்பர் சீனுப்பா அது, ஐயோ! ஐயோ, தலையில அடிச்சிக்க வேண்டியது தான்.

கதையாவது கொஞ்சம் நல்லா இருக்கா!..அதுவும் இல்ல...அதே ரஷ்ய உளவாளியாம்...டபுள் ஏஜெண்டாம்...அய்யா!!..இதெல்லாம் நாங்க நிறைய ஜேம்ஸ்பாண்டு படங்கள்ள நிறைய பார்த்தாச்சுங்கோ!!

இதுனால சகலமானவர்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்னா, நம்ம ஊரு மக்களான விஜயகாந்த் படங்கள் எல்லாம் குப்பை, ஹோலிவூட் படங்கள் தான் சூப்பர்ன்னு நினச்சுட்டு, " We wont see tamil pictures, we only see english pictures" அப்படின்னு பீட்டர் விட்டுட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு வார்த்தை..”இங்கிலீஷ் ல யும் இந்த சால்ட் மாதிரி நிறைய குப்பை இருக்குதுங்கோ!”