Monday, August 30, 2010

A House for Mr Biswas - ஒரு சொந்த வீட்டுக்கான கனவுஅது மூட நம்பிக்கைகள் அதிகம் நிறைந்த கிராமம். அங்கு ஏழை ஒருவர் வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. "குழந்தை பிறந்த நேரம் சரியில்லை, அவன் ஒரு பெண்பித்தனாக ஊதாரியாக இருப்பான், தந்தை தாயை விழுங்கி விடுவான், அதனால் தோஷம் கழிய அவனை தண்ணீர் அருகில் செல்ல விடாதீர்கள்" என்று அங்கு இருக்கும் ஜோதிடர் கணிக்கிறார். அவனுக்கு மோகன் என்று பெற்றோர் பெயரிடுகின்றனர். அவனுடன் குடும்ப பெயரான பிஸ்வாஸ்ம் சேர்ந்து அவன் மோகன் பிஸ்வாஸ் என்று அழைக்க படுகின்றான்.

சில ஆண்டுகளுக்கு பின் சிறுவன் பிஸ்வாஸ் ஒரு கன்று கன்றுக்குட்டியை துரத்தி போகிறான், அது ஒரு நீரோடைக்கு அருகில் செல்ல வாழ்நாளில் நீரோடையை முதலில் பார்த்து மெய் மறந்து கன்று குட்டியை மறந்து விடுகிறான். அந்த கன்று குட்டி நீரில் விழுந்து இறந்து விடுகிறது. அதனை தேட சென்ற அவன் தந்தையும் நீரில் மூழ்கி இறக்க அங்கே ஆரம்பிக்கிறது பிஸ்வாஸ் இன் கஷ்ட காலம்.

அப்பாவை இழந்த, பள்ளிகூடத்தில் இருந்து நிறுத்தபட்ட அவன் ஒரு குருக்களிடம் வேதம் கற்று கொள்ள அனுப்பி வைக்க படுகின்றான். அவன் அம்மா மற்றும் இரண்டு சகோதரர்கள் அவன் சொந்த காரர்கள் உடன் தங்குகிறார்கள். அவன் அக்கா வசதியான அவனுடைய மாமா அத்தை உடன் சென்று தங்க குடும்பம் திசைக்கு ஒன்றாக பிரிகிறது.

சிறிது நாட்களில் குருக்கள் வீட்டில் பிடிக்காத சில விஷயங்கள் நடப்பதை அவன் பார்த்து விடுகிறான், உடனே குருக்கள் அவன் சுத்த பத்தமாக இல்லை என்று சொல்லி அவன் மாமா வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். அவன் அத்தை தன் தம்பி கடைக்கு வேலைக்கு அனுப்ப அங்கும் நடக்கும் தில்லு முல்லுகளை அவன் கண்டறிகிறான் அதனால் அங்கிருந்தும் வெகு விரைவில் வெளியேற்றப்படுகிறான்.

வெளியே வந்த பிஸ்வாஸ் தன் தாயிடம் சென்று தன்னை யாரிடம் தன்னை தங்க அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சி கேட்டு கொள்கிறான். பிறகு என்ன வேலை செய்வது என்று தெரியாமல் தெருவில் சென்று கொண்டிருந்த பிஸ்வாஸ் பள்ளிகூட நண்பனை சந்திக்கிறான். அந்த நண்பன் sign board எழுதும் வேலையை கற்றுகொடுக்க, அதனையே ஒரு தொழிலாக அவன் எடுத்து கொள்கிறான்.

சில வருடங்களுக்கு பிறகு அவன் sign-board எழுத ஒரு கடைக்கு செல்கிறான் அங்கே இருக்கும் கடைகாரர் மகளை பார்த்து காதல் கொள்கிறான் . அந்த கடை காரர் குடும்பம் அந்த ஊரிலேயே பெரிய துளசி குடும்பம் என்று அழைக்கபடுகிறது. இதனை அறிந்த அந்த கடைகாரர் அவனுக்கே அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்க அவன் அம்மாவுக்கும் மற்றைய உறவினர்களுக்கும் நிம்மதி ஏற்படுகிறது.

அவனுக்கு என்று சொந்த வீடு என்று எதுவும் இல்லாததால் துளசி குடும்பத்துடன் அவர்களின் வீடான அனுமான் ஹவுஸ் இல் தங்குமாறு அவன் தாய் கூறுகிறாள். ஹனுமான் ஹவுஸ் சென்ற சில நாட்களிலேயே அந்த வீட்டு பெண்கள் தங்கள் கணவர்களுடன் அங்கு தங்கியிருப்பது தெரிகிறது. அவர்களின் கணவன் மார்கள் அந்த வீட்டுக்கு கூலியில்லாத வேலைகாரர்கள் ஆக மாறி இருப்பதும் பிஸ்வாசுக்கு தெரிய வருகிறது.

எப்படியாவது அந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிட வேண்டும் என்று அவன் விடாமல் முயற்சி எடுக்கிறான். அவன் அனைத்து முயற்சிகளையும் துளசி குடும்பத்தினர் முறியடிக்கிறனர். ஓவ்வொரு முறை தோற்கடிக்க படும்போதும் தனக்கென ஒரு சொந்த வீடு வேண்டும் என்ற அவனது வெறி அதிகமாகி கொண்டே இருக்கிறது. பள்ளிக்கூடம் கூட தாண்டாத அவன் சிறிது சிறிதாக முயற்சி செய்து ஒரு பத்திரிக்கையாளர் ஆக மாறுகிறான்.

மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தனக்கென ஒரு வீடு கட்டுகிறான், தான் மனைவி குழந்தைகளுடன் அங்கு குடியேறுகிறான். ஆனால் அங்கு சென்ற சில காலத்தில் நாற்பது நாற்பத்தைந்து வயதிற்குள் அவன் வாழ்க்கை முடிகிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த நோபல் பரிசு வென்ற திரு. V. S. நைபால் அவர்களின் எழுத்தை உலகுக்கு அடையாளம் காட்டிய மிக முக்கியமான நாவல் இது. நாவல் நடப்பதாக காட்டப்படுவது இந்தியாவில் அல்ல. ட்ரினிடாட் நாட்டில் குடியேறிய இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதியில் கதை நடப்பதாக சித்தரிக்க படுகிறது. நைபால் அவர்களின் எழுத்து நடை கட்டிபோட வைக்கும். என்னை மிகவும் பாதித்த நாவல்களில் இதுவும் ஒன்று.

Friday, August 27, 2010

தட்சணை போடுங்கோ!


இந்தியா பயணம் பற்றி நிறைய எழுதி விட்டேன் என்று நினைக்கிறேன். இருப்பினும் முக்கியமாக நான் பார்த்த ஒன்றை பற்றிய இந்த இடுகையுடன் இந்தியா பயண இடுகைகளை நிறைவு செய்கிறேன். (எப்படியோ முடிஞ்சா சரிதான், என்று நீங்கள் சொல்வது கேட்கிறது)

மதுரை கோவிலுக்கு ரங்கமணி, முகுந்த் உடன் சென்று இருந்தேன். கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், முகுந்த்தை வைத்துகொண்டு வரிசையில் நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதாலும் திருப்பணிக்காக என்று வைத்திருந்த நூறு ருபாய் டிக்கெட் வாங்கினால் சிறப்பு தரிசனம் என்றும் எழுதி இருந்த படியால் இரண்டு டிக்கெட் வாங்கி கொண்டோம்.

நாங்கள் சென்ற நேரம் ஆடி முளைக்கட்டு திருவிழா ஆரம்பித்து இருந்தது. அந்த நேரத்தில் அம்மன் பிரஹாரத்தில் எழுந்தருளி இருப்பார். அதனை பார்த்தவுடன் ரங்கமணி "என்ன விசேஷம் இப்போ" என்று என்னிடம் கேட்டார், அப்போது அருகில் இருந்த குருக்கள் ஒருவர் இரண்டு வெயிட் ஆனா பார்ட்டி மாட்டிடுச்சு என்று நினைத்தோ என்னவோ மெதுவாக மதுரை பற்றி ஆரம்பித்தார்

"இப்போ தான் ஆடி முளைக்கட்டு திருவிழா ஆரம்பிச்சிருக்கு, இங்க தினம் ஒரு திருவிழா தான்"

பொறுமையாக நானும் கேட்டுக்கொண்டு வந்தேன், பிறகு தாங்க முடியாத நிலையில் "சாமி நான் பிறந்து வளந்தது மதுரையில தான்க " என்று சொன்னதும் அவர் அசடு வழிந்தார். பிறகு உள்ளே சென்று குங்கும பிரசாதம் எடுத்து வந்தார், அதனை கொடுத்து விட்டு "தட்சணை போடுங்க" என்று கேட்டார், ரங்கமணி இருபது ருபாய் தட்டில் போட்டதும் ஒரு மாதிரி முறைத்து கொண்டு சென்று விட்டார்.

இந்த இந்தியா பயணத்தில் நாங்கள் சென்ற கோவில்களில் எல்லாம் நான் கண்டது இதுதான்

நல்ல பணம் வரும் அல்லது கூட்டம் வரும் கோவில்களில் இருக்கும் குருக்கள் கூச்சம் இல்லாமல் "தட்சணை போடுங்கோ" என்று demand செய்கிறார்கள். மதுரை, ஸ்ரீ ரங்கம், சமயபுரம், திருச்செந்தூர்.. இந்த கோவில்களில் எல்லாம் இதனை கண்கூடாக பார்க்க நேர்ந்தது. இருவது ரூபாய் கொடுத்தால் தான் பிரசாதமாவது கொடுக்கிறார்கள் அல்லது எப்போ தட்சணை போடுவார்கள் என்று வெயிட் செய்கிறார்கள்.

கூட்டம் இல்லாமல் இருக்கும் அல்லது பண வசதி இல்லாமல் இருக்கும் கோவில்களில் எல்லாம் மிகுந்த பய பக்தியுடன் பூஜை நடக்கிறது, உதாரணதிற்கு திருவெண்காடு, திரு நாங்கூர். அதிலும் திருநாங்கூர் சுற்றி ஆழ்வார்களால் பாடப்பட்ட பல வைணவ திவ்ய தேசங்கள் இருக்கின்றன. ஆனாலும், அதில் எல்லாம் ஒன்று அல்லது இரண்டு குருக்களே இருக்கிறனர். ஒரு கோவில் தரிசித்து விட்டு அதே குருக்களை எங்கள் வண்டியிலேயே கூட்டி கொண்டு அடுத்த கோவிலுக்கு சென்றோம். அங்கு அவர் கோவில் கதவை திறந்து பூஜை செய்கிறார்.

இந்த குருக்கள் யாருமே தட்சணை தாருங்கள் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. அன்புடன், எந்த ஆழ்வார் மங்களாசாசனம் செய்தது, என்ன பாடல் என்று அழகாக விளக்குகிறார்கள். அற்புதமாக சாமி தரிசனம் செய்தோம். கோவிலை சுற்றி இருக்கும் இடங்களில் எல்லாம் செடிகள் மண்டி கிடக்கின்றன. யாரும் கவனிப்பதில்லை. "நாங்களே வலிய வந்து நாங்கள் திருப்பணிக்கு ஏதாவது கொடுக்க நினைக்கிறோம் எங்கே கொடுப்பது" என்று கேட்டோம். அவர்கள் ஒரு விலாசத்தை கொடுத்து அங்கு அனுப்பி வையுங்கள் என்று கூறினார்கள். அதனையும் அவர்கள் வாங்கி கொள்வது இல்லை.

இத்தனைக்கும் பெரிய கோவில்களில் இருக்கும் குருக்களுக்கு சம்பளம் என்று ஒன்று கொடுப்பார்கள். ஆயினும் அவர்கள் demand செய்கிறார்கள். ஆனால் நாங்கூர் போன்ற சிறிய கோவில்களில் எல்லாம் குருக்களுக்கு சம்பளம் உண்டா என்று தெரியவில்லை. இருப்பினும் அவர்களின் இந்த பண்பு எங்களுக்கு வியப்பை தந்தது.

Thursday, August 26, 2010

புதுப் பணக்காரர்கள்

புது பணக்காரர்களை எப்படி அடையாளம் காண்பது, கீழே உள்ள ஐந்து கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் ஆமாம் என்று பதில் சொன்னால் நீங்கள் புது பணக்காரர்களை பார்த்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
  1. நீங்கள் பார்த்த அந்த நபர் கையில் கிடைக்கும் பேப்பர் நோட்டு புத்தகத்தை cஎல்லாம் எடுத்து விசிறி கொண்டு "அப்பா என்னமா வெயில் அடிக்குது, ஏசி லையே இருந்து பழகிட்டனா, வெயில்னாலே ஒரே அலர்ஜி யா இருக்கு" என்று சொல்கிறாரா.
  2. ஏதாவது ஒருவர் எதோ கார் பற்றி கூறினாலும், "அப்படிதான் பாருங்க இப்போ இருக்கிற ட்ராபிக் சுத்தமா எனக்கு ஒத்து வரலைங்க, அதான் முடியலைன்னு கார் வாங்கிட்டோம்", என்று சம்பந்தம் சம்பந்தமில்லாமல் மூக்கை நுழைக்கிறாரா.
  3. தெரிந்தவர் என்று எதோ பேச போக உடனே நமக்கு அறிவுரை கூறுவது போல "என்ன சம்பாரிச்சு எதாவது வீடு கீடு ன்னு இன்வெஸ்ட் பண்ணினியோ, இப்படி தான் பாரு என் பய்யன் அங்க போனான்னா, ரெண்டே வருஷம் தான், இப்போ நாலு வீடு வாங்கி போட்டு இருக்கான்" என்று தற்பெருமை பேசுகிறாரா.
  4. இது புது பணக்கார பெண்கள் அடிக்கடி செய்வது கோவில், விசேஷம் என்று எங்கே பார்த்தாலும் நம்மை விசாரிப்பது போலே விசாரித்து "இந்தா, இந்த வளையல் / புடவை போன வாரம் என் பொண்ணு வேண்டா வேண்டாம்னு சொல்லியும் என்னோட கிப்ட்டு ன்னு சொல்லி கொடுத்துட்டு போனா, நீயும் ஏதாவது உங்க அம்மா அப்பாவுக்கு செய்யிற இல்ல" என்று போகிற போக்கில் நம்மை வம்பில் மாட்டி விட்டு போவது.
  5. இது முக்கியமாக வெளிநாடு வந்து சென்ற புது பணக்காரர்கள் செய்வது "எங்க பய்யன் ஒரு கார் வச்சிருக்காரு பாருங்க, எவ்வளவு வேகமா போனாலும் கொஞ்ச கூட ஆடாது அலுங்காது".

இது என்னுடைய தற்போதைய இந்தியா பயணத்தில் நான் பார்த்த ஒரு சில புது பணக்காரர்களை பற்றியது மட்டுமே. அனைவரும் இப்படி என்று கூற வில்லை.

Tuesday, August 24, 2010

இரவு பயணமும் ஸ்ரீ வாஞ்சியமும்

இரண்டரை வருடங்களுக்கு பிறகு நான் சென்ற இந்த இந்தியா பயணத்தில் நான் கண்ட மிகப்பெரிய மாற்றம் இந்திய நெடுஞ்சாலைகள்.

மதுரையில் இருந்து சென்னை ஆறு முதல் ஏழு மணி நேரத்தில் செல்ல முடிகிறது. இரண்டு லேன் வசதியுடன் அற்புதமாக இருக்கிறது நெடுஞ்சாலைகள். அதற்குரிய வரி (டோல்) செலுத்தும் போதும் நமக்கு எந்த முணுமுணுப்பும் ஏற்படுவதில்லை.

பலமுறை மதுரையில் இருந்து திருச்சிக்கு பயணப்பட நேர்ந்தது, ஒன்றரை மணி நேரத்தில் கிட்டத்தட்ட எண்பது முதல் நூறு கிலோமீட்டர் வேகத்தில் கார் செல்ல முடிகிறது. இதனை முதலில் பார்த்தவுடன் ரங்கமணி க்கு ஒரு நப்பாசை, நாமும் கார் ஓட்டலாமே என்று.

ஆனால், வண்டி இந்திய நெடுஞ்சாலையில் செல்லும் போது மூன்று இடங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று பின் அவர் புரிந்து கொண்டார்.
  1. முதலில் நெடுஞ்சாலையை கடக்கிறோமே, வேகமாக கடப்போம் என்றுகொஞ்சமும் உணராமல் ஏனோதானோ என்று செல்லும் மக்கள்
  2. பாதையின் குறுக்கே வரும் ஆடு, மாடு, நாய், பன்றி, கோழி....(அமெரிக்காவில் இது போன்று குறுக்கே வரும் பல பிராணிகள் காருக்கு பலியாவதை கண்கூடாக கண்டிருக்கிறேன், ஆனால் இந்தியாவில் இப்படி நடந்தால் அதன் உரிமையாளர் பஞ்சாயத்தை கூட்டி விடுகிறார்.)
  3. அதற்க்கு பிறகு முக்கியமான தடை எதிர் திசையில் வரும் வாகனங்களால் ஏற்படுவது. சிறிது தூர பிரயாணத்தை மிச்சபடுத்த, எதிர் திசையில் வந்து நேர் வழியில் செல்லும் நம்மையும் திக்கு முக்காட வைத்து விடுகிறார்கள்.
இவற்றில் இருந்து எல்லாம் தப்பித்து கார் ஓட்டுவதற்கு சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பகல் நேரங்களில் இது போன்ற தடைகளை தூரத்தில் இருந்து அறிந்து கொள்வதால் விலகி, மெதுவாக செல்ல முடிகிறது, ஆனால் இரவு நேரங்களில் ஹெட் லைட் கூட இல்லாமல் எதிர் திசையில் வரும் வாகனங்களில் இருந்து தப்பிப்பதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி உள்ளது.

மேற்சொன்னவை எல்லாம் நெடுஞ்சாலைகள் பற்றியது , ஆனால் மற்ற சாலைகளின் நிலைமை அப்படியே தான் இருக்கிறது. அதுவும் மாயவரத்திலிருந்து ஸ்ரீவாஞ்சியம் சென்ற அனுபவம் எனக்கு இன்னும் நினைத்தால் மயிர்கூச்சரிய வைக்கும்.

ஸ்ரீ வாஞ்சியத்தில் இருக்கும் வாஞ்சிநாத சுவாமிகள் எமனுக்கு சாபத்தில் இருந்து விமோசனம் அளித்ததால் அங்கு செல்ல பல தடைகள் ஏற்படும் என்று சிலர் பயமுறுத்தினர். இருப்பினும் எங்கள் குடும்பம் முழுதும் ஒரு இன்னோவா காரில் அங்கு செல்ல மதியம் கிளம்பினோம். குண்டும் குழியுமாக இருந்த சாலையில் பின் சீட்டில் அமர்ந்து பயணப்படுவதர்க்குள் முதுகு வலி வந்துவிட்டது.

இரண்டு வழிச்சாலையில் எங்கள் டிரைவர் நிதானமாகவே வண்டி ஓட்டி சென்றார். இருப்பினும் ஒரு சிறிய வளைவு அங்கு சென்றதும் திடீரென்று வண்டியை நிறுத்தி விட்டார், அப்போது எதிர் திசையில் ஒரு பஸ் திரும்ப முயற்சித்து கொண்டிருக்க அதனை ஓவர் டேக் செய்து ஒரு அரசுபேருந்து எங்கள் வண்டியை ஏறக்குறைய இடித்த நிலையில் மிக வேகமாக சென்றது, எங்கள் வண்டியில் இருந்த அனைவரும் கத்தி விட்டோம். ஒருவழியாக, நாங்கள் கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டு திரும்பும் போது ஒரு சாலை விபத்து, எங்கள் வண்டி அடி வாங்க இருந்த அதே இடத்தில் ஒரு பஸ் டூ வீலர் மீது மோதி அந்த இடத்திலேயே டூ வீலரில் இருந்த ஒருவர் மரணம்.

ஸ்ரீ வாஞ்சியத்தில் எமனுக்கு சாப விமோசனம் அளித்தார் சிவன், விபத்து நடந்த அந்த இடத்தில் ஒருவருக்கு எமன் மோட்சம் அளித்து விட்டார். இதில் யார் மீது குற்றம் சொல்ல?, வேகமாக ஓட்டி வந்த பஸ் டிரைவர் மீதா?, கண்மண் தெரியாமல் வளைவுகளில் முந்தி செல்லும் டூ வீலர்கள், பஸ்கள் மீதா?.

சாலையில் செல்லும் போது கொஞ்சம் பொறுமையுடன் இருந்தால் பலர் வாழ்வு தப்பும். இருப்பினும் அதிக வேகத்துடன் சென்று ஏன் இப்படி தனக்கு தானே குழி தோண்டி கொள்கிறார்களோ தெரியவில்லை!

Friday, August 20, 2010

பட்டிக்காட்டானும் புத்தகக்கடையும்

எப்படியாவது தேவாரம், பெரியபுராணம் மற்றும் பிரபந்தம் இவற்றை இசைத்தட்டுகளாக வாங்கிவிட வேண்டும் என்பது ரங்கமணியின் விருப்பம். அதே போல பெரியபுராணம் உரைநடையாக கிடைத்தால் முகுந்துக்கு நாயன்மார்கள் வாழ்க்கையை கதையாக சொல்லலாம் என்று நினைத்து கொண்டிருந்தோம். அதனால் இந்த இந்தியா பயணத்தில் இவை எல்லாம் வாங்க வேண்டும் என்று ஒரு to do லிஸ்ட் போட்டு வைத்து இருந்தோம்.

முதலில் நாங்கள் கோவில் என்று சென்றது தில்லை நடராஜர் கோவிலுக்கு அங்கு இரவில் சென்றதால் கோவில் கடைகளில் அதிகம் தேட முடியவில்லை. பிறகு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் கடைகளிலும் விசாரித்தோம், அங்கும் தேவார ஓரிரண்டு பதிகங்கள் அடங்கிய இசைத்தட்டுகள் mp3 வடிவில் கிடைத்தன என்றாலும் முழுமையாக கிடைக்க வில்லை.

தேவார பதிகங்களாவது இசைத்தட்டுகள் வடிவங்களில் கிடைத்தன ஆனால் பெரியபுராணம் கிடைக்கவேயில்லை. திருவெண்காடு, திருக்கருகாவூர் மற்றும் நாங்கள் சென்ற வேறு சில சிவ ஸ்தலங்களிலும் விசாரித்து பார்த்து விட்டோம். பெரியபுராணம் கிடைக்கவில்லை. முடிவாக சென்னையில் உள்ள பெரிய புத்தக கடைகளில் விசாரித்து பார்போம், அதே போல சென்னையில் இருக்கும் பெரிய இசைத்தட்டுகள் விற்கும் கடைகளில் கிடைக்குமா என்று பார்போம் என்று வந்து விட்டோம்.

சென்னை வந்தவுடன் Higgin botham's மற்றும் வேறு சில புத்தக கடைகளிலும் விசாரித்து பார்த்ததில் உரைநடையாக இவை கிடைக்கவேயில்லை.

சிட்டி சென்டரில் இருக்கும் லேண்ட்மார்க் கடையில் எல்லா இசைத்தட்டுகளும் கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். சரி அங்கு சென்று பார்க்கலாம் என்று சென்றோம்.

சிட்டி சென்டரில் இருக்கும் கடைகளையும் அங்கு வந்து செல்லும் இளைஞர் கூட்டத்தையும் பார்த்த பிறகாவது எங்கள் எண்ணத்தை மாற்றி கொண்டிருக்க வேண்டும். ஆனால் விடாப்பிடியாக ரங்கமணி லேண்ட்மார்க் சென்று தேடோ தேடு என்று தேடினார். எந்த தமிழ் இலக்கியங்களும் அங்கு இல்லை.

விசாரித்து வருகிறேன் என்று சொல்லி அவர் சென்று ஹெல்ப் டெஸ்கில் இருக்கும் ஒருவரிடம், "தேவாரம், CD வச்சிருக்கீங்களா?” என்று கேட்க அங்கே இருந்தவர் சொன்னது “What is that?" .

இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறோம். யாராவது கிடைக்குமிடம் தெரிந்தால் சொல்லுங்கள்.

Monday, August 16, 2010

Gen - Z ம் நானும்

Definition
------------
Gen -Z : 16 லிருந்து 25 வயதிற்குள் இருக்கும் இளைய சமுதாயத்தினர் generation Z என்று அழைக்கப்படுகிறார்கள்.


துணிக்கடையில்
-----------------------

"ஏண்டா/ஏண்டி எப்போ பார்த்தாலும் கசமுசா என்று படங்கள் போட்ட/ ஜிகினா வைத்த டிரஸ் எடுக்கிறீங்க கொஞ்சமாவது டிரஸ் டீசன்ட் ஆ இருக்க வேண்டாமா? இது என்ன டிசைன் சகிக்கல?" இது நான்.

"இதெல்லாம் இப்போ இருக்கிற youth trend , உங்களுக்கெல்லாம் அது புரியாது " இது பதில்.


வீட்டில்
-------------

இருபத்தி நாலு மணி நேரமும் செல்போனும் கையுமாக ஒரு ரோபோ போல இருக்கும் gen Z ஐ பார்த்து.

”என்னாடா செய்யிற? கொஞ்சம் எங்கிட்ட பேசேன்” இது நான் .

”ஒரு நிமிஷம், ஒரு SMS அனுப்பிச்சிட்டு வந்துடரேன்” இது பதில்.

“ஒரு மாசம் எத்தனை SMS தாண்டா அனுப்புவ, பொழுது விடிஞ்சு பொழுது போனா இதே வேலையா இருக்கிற” இது நான்.

“போங்கக்கா, என் கிட்ட வெறும் 3000 SMS பிளான் தான் இருக்கு. அது ஒரு வாரம் கூட வர மாட்டேன்கிரது. அவனவன் 6000 SMS பிளான் வச்சிருக்கான், we need to get connected இல்ல” இது பதில்.

City center இல்
-----------------
ஒரு சாப்பாட்டு கடை முன்

நான் கடை காரரிடம்

”ஒரு பெப்சி எவ்வளவு”

ஒரு சின்ன can காட்டி அவர் “22 ருபாய்”

நான் gen Z யிடம் “என்னது 22 ருபாயா, வேண்டாம் பா”

gen Z "ஏன்கா இப்படி ஒரு பெப்சி வாங்குறதுக்கு கஞ்சதனம் பார்கிறீங்க, எனக்கு ஒரே கேவலமா இருக்கு ” என சொல்லி இரண்டு பெப்சி வாங்கி வந்தான்.

சிறிது நேரம் கழித்து பெப்சியில் இரண்டு மிடறு தான் குடித்து இருப்பான் அப்படியே வைத்து விட்டு கிளம்பினான்.

“என்னடா, 22 ருபாய் டா, கையில எடுத்துட்டு வாடா” இது நான்.

”வேற வேலை இல்ல, சரியான கஞ்சப்பிசினாறிக்கா நீங்க” இது பதில்.


டிஸ்கி: இவை, நான் பார்த்த சில generation Z பற்றிய என்னுடைய கருத்துக்கள் மட்டுமே, பொதுவானவை அல்ல.

Monday, August 9, 2010

இரண்டு பயணங்கள் ஒரு ஒப்பீடு

சார்லோட் to நியூயார்க் - எனது பக்கத்து இருக்கையில் ஒரு வயதான ஆங்கில பெண்மணி. முகுந்த் விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் புது இடம் என அழுக ஆரம்பிக்கிறான். தொடர்ந்து விமானம் மேலேற அவன் சத்தம் விமானத்தில் உள்ளவர்கள் காதை கிழிக்கிறது. என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பாட்டியிடம் "I am so sorry" என்று சொல்ல அந்த பாட்டியோ புன்னகையுடன் "No problem, I have 4 grandkids, I know how it is" என்று சொல்கிறார். விமானம் நியூ யோர்க்கில் தரை இறங்க, நான் கேட்காமலேயே என்னுடைய கைப்பைகளை மேலிருந்து எடுத்து தருகிறார்.

சென்னை to மதுரை - எனது பக்கத்து இருக்கையில் நடுத்தர வயது தம்பதியினர். முகுந்துக்கு இப்போது விமான பயணம் கொஞ்சம் பழகிவிட்டது. இருப்பினும் விமானம் மேலெழும் பொழுது சிணுங்க ஆரம்பிக்கிறான். பக்கத்து சீட் அம்மா ஒரு மாதிரி பார்கிறார், எதோ பெரிய இடைஞ்சல் ஏற்பட்டது போல தலையை ஆட்டுகிறார், நான் "சாரி" என்று சொல்ல பதில் ஏதும் சொல்லாமல் தலையை திருப்பி கொள்கிறார். விமானம் மதுரையில் இறங்கியவுடன் பக்கத்து சீட் அய்யாவிடம் ப்ளீஸ் ஹெல்ப் என்று பெட்டியை எடுக்க உதவி கேட்கிறேன் அதற்கு அந்த அம்மா "உங்களுக்கு எதுக்கு வீண் வேலை, அவங்களுக்கு எடுக்க தெரியும் பேசாம இருங்க" என்று பதில் தருகிறார்.

இது என்னுடைய இந்திய பயணத்தின் போது நான் சந்தித்த சிலரை பற்றிய என் கருத்துக்கள் மட்டுமே, அனைவரும் இப்படி தான் இருப்பார்கள் என்று நான் கூற வரவில்லை.

ப/பிணம் தின்னும் கழுகுகள்

ரமணா என்ற படத்தில் ஒரு மருத்துவமனை காட்சி ஒன்று வரும். அதில் ஒரு பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பது போல பாசாங்கு செய்து பணம் கேட்பார்கள். அப்போது நடிகர் விஜயகாந்த் ஒரு வசனம் சொல்லுவார்

"உங்கள போல மருத்துவமனை டாக்டர்கள் கிட்ட சொல்ல கூடாத ஒன்னு இருக்கு. அது எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, எப்படியாவது நோயாளிய காப்பாத்திடுங்க, அப்படின்னு "

அந்த படம் பார்க்கும் போது இப்படி எல்லாம் நடக்குமா என்று நான் வியந்ததுண்டு. ஆனால் கிட்டத்தட்ட அதே போன்றதொரு சூழ்நிலையை என்னுடைய இந்திய பயணத்தில் நான் கண்கூடாக காண நேர்ந்தது.

என்னுடைய கணவரின் பெரியம்மா அவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்திருக்கிறது. என்னவென்று அறிய ஒரு புகழ் பெற்ற மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

தினமும் ஒரு மருத்துவர் வந்து அவரை பரிசோதித்து சென்று இருக்கிறார். ஒவ்வொருவர் வந்து தொட்டால் கூட ஆயிரக்கணக்கில் அவருக்கு பீஸ். கிட்டதட்ட ஒருமாதம் வரை இப்படி ஒவ்வொரு புது மருத்துவராக வந்து பார்த்தாலும் என்ன நோய் அவருக்கு என்று ஒருவரும் கூறவில்லை.

சிலபல லட்சங்கள் கரைந்த நிலையில் டாக்டர்கள் முடிவாக " அவருக்கு ரத்த புற்றுநோய் முற்றிய நிலையில் இருக்கிறது மருத்துவம் பார்க்க இயலாது எடுத்து செல்லுங்கள்" என்று கூறி விட்டனர்.

எனக்கு ஒன்று விளங்கவில்லை, மருத்துவமனையில் சேர்த்தவுடன் எடுக்கும் அடிப்படை பரிசோதனைகளில் ஒன்று ரத்த அணுக்கள் பற்றியது. அதில் பார்த்தவுடனேயே அணுக்களின் எண்ணிக்கையை வைத்து புற்றுநோய் என்று அறிய முடியாதா? அப்படி புற்றுநோய் என்று முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் ஒருமாத காலம் அந்த அம்மையார் படுக்கையில் பட்ட கஷ்டம் இல்லாமல் போயிருக்குமே!. கையில் ஊசி குத்திய இடத்தில எல்லாம் சீழ் பிடித்து அவர்கள் பட்ட கஷ்டம் அப்பப்பா!

இதனை எல்லாம் பார்த்த பிறகு ஏன் இப்படி ஒரு சில மருத்துவமனைகள் ப/பிணம் தின்னும் கழுகுகள் ஆகிவிட்டன என வருத்தபடாமல் இருக்க முடியவில்லை.

Saturday, August 7, 2010

முடிஞ்சாச்சு லீவு!

இரண்டு மாத இந்தியா விடுமுறை பயணம். சில, பல சந்தோஷங்கள், துக்கங்கள், நிறைய பயணங்கள், எனக்கு, அவருக்கு, முகுந்துக்கு என மாறி மாறி உடல் நல குறைவுகள் என ஒரு வழியாக நிறைவு பெற்றது. இன்னும் யாரும் ஜெட்-லாகில் இருந்து வெளி வராத நிலையில் ஒரு சின்ன அப்டேட் இது.

சிறு குழந்தையை வைத்து கொண்டு கிட்டத்தட்ட 18-24 மணிநேரம் விமான பயணம் ஒரு அவஸ்தை என்று தான் சொல்ல வேண்டும்.

விமானம் மேலெழும்பும் போதும் சரி, அல்லது கீழிறங்கும் போதும் சரி ஏற்படும் அழுத்த வேறுபாடால் காதுவலி ஏற்பட்டு குழந்தைகள் வீறிட்டு கத்த ஆரம்பிப்பார்கள். என்ன செய்தாலும் சமாதானம் ஆகமாட்டார்கள். அதுவும் நாம் செல்லும் விமானத்தில் நிறைய சிறு குழந்தைகள் இருப்பின், ஒரு குழந்தை அழுவதை பார்த்து அடுத்த குழந்தையும் கத்த ஆரம்பிக்கிறது. அதே போல Turbulence வந்தாலும் இதே பிரச்னை தான்.

அமெரிக்காவில் பிறந்த பெரும்பாலான குழந்தைகள் இந்தியா சென்றதும் அவர்கள் சந்திக்கும் மாற்றங்கள்; தட்ப வெப்ப சூழ்நிலை மாற்றம், கொசு போன்ற பூச்சி கடி, அப்புறம் தூசி, Pollution.

தட்ப வெப்ப மாற்றத்தால் சென்ற ஒரு சில தினங்களில் முகுந்துக்கு காய்ச்சல்.
இங்கே diaper போட்டு பழகியதால் அங்கு சென்றும் diaper உபயோகிக்க ஆரம்பிக்க விளைவு diaper rash. பிறகு தூசி. எப்போது தி.நகர் சென்று விட்டு வீடு திரும்பினாலும் வீடு திரும்பியவுடன் அவனுக்கு மூக்கு ஒழுக ஆரம்பித்து விடுகிறது.

நாங்கள் சென்ற ஒரு வாரத்திலேயே முகுந்துக்கு உடம்பு முழுதும் கொப்புளம் வர ஆரம்பித்து விட்டது. உள்ளூரில் உள்ள குழந்தைகள் மருத்துவர் ஒருவரிடம் சென்று என்ன காரணம் என்று விசாரிக்க அவர் எழுதி கொடுத்த prescription இது தான்

"கொசு கடியை தவிர்க்கவும், கொசுவை அடிக்கவும்".

Goodnight, Allout என்று எத்தனை கொசுவிரட்டிகள் உபயோகித்தாலும் இந்த கொசு பிரச்சனை தீர்ந்த பாடில்லை.

ஜெட்லாகில் இருந்து முழுதும் விடுபட்டதும் மீண்டும் சந்திப்போம்.