Saturday, December 24, 2016

ரீவைண்ட் 2016

ஒரு வருடம் ஓடி விட்டது. எப்படி ஓடியது என்று கூட தெரியவில்லை. இந்த வருடத்தில் நடந்த என்னை பாதித்த சில நிகழ்வுகளை திரும்பி பார்க்கும் சுயசொறிதல் பதிவு இது.

வருட ஆரம்பத்தில் இனிமேல் முகநூல் உபயோகிப்பதில்லை என்ற தீர்மானம் எடுத்து அதனை வெற்றிகரமாக செயலாற்ற முடித்திருந்தது. அப்பப்ப்போ பதிவுகள் எழுதுவதை, சிலரின் பதிவுகளை படிப்பது தவிர, சுத்தமாக சோசியல் மீடியாவை உபயோகிப்பது விட்டாகிவிட்டது. ஒரு பெரிய அடிக்கசனில் இருந்து மீண்ட ஒரு உணர்வு. "கையில் கொஞ்சம் காசு இருந்தா அது தான் உனக்கு எஜமானன், கழுத்து வரைக்கும் காசு இருந்தா அதுவே உனக்கு எஜமானன்" என்ற ரஜினி பட பாடல் போல, " சோசியல் மீடியாவை, உங்கள் கண்ட்ரோலில் வைத்திருக்கும் வரை, நீங்கள் உங்கள் நேரத்தின் எஜமானன், அதுவே, சோசியல் மீடியா உங்களை கண்ட்ரோலில் வைத்திருந்தால் அது உங்கள் நேரத்தின் எஜமானன்" என்ற புது மொழி சொல்லலாம் என்று நினைக்கிறன். 

எப்பொழுதும் போனை பார்த்து கொண்டு, ஏதாவது லைக், கமெண்ட் வந்திருக்கிறதா, எதனை பேர் நம் ப்ளாகை வாசித்தார்கள் என்று செக் செய்து கொண்டிருந்த ஒரு மோசமான அடிக்கசனில் இருந்து முழுதும் வெளி வந்து விட்டேன். முகநூல் பக்கம் போய் மாதக்கணக்காகிறது. வாட்சாப் எல்லாம் எப்பொழுதாவது உபயோகிப்பது, அதுவும் குடும்ப விஷயம், அல்லது மிக மிக முக்கிய  விசயம்   என்றால் மட்டுமே உபயோகிப்பது, என்ற கொள்கை வைத்திருக்கிறேன். அதனால் சில நேரங்களில் நெருங்கிய தோழிகள் நண்பர்கள் கூட, "என்ன பேசவே மாட்டேங்கிற, ரொம்ப பிசியா",  என்று கேட்பதை, ஆமாம் என்று, ஒத்து கொண்டு, அமைதியாக வந்து விடுகிறேன். இப்போதெல்லாம், நிறைய பேசுவதில்லை, அடுத்தவர் பேசுவதை கேட்கிறேன். 

கிடைக்கும் நேரத்தில் வாசிக்கிறேன். அதிகம் வாசிக்க முடியவில்லை என்றாலும், ஒரு சில புத்தகங்கள் மனதுக்கு பிடித்திருந்தன. அதிலும் என்னை ரொம்ப பாதித்தது, "Naomi Wolf" அவர்களின்  "The Beauty Myth" புத்தகம்.


பெண்ணென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு மாயையை புகைப்படங்கள் காணொளிகள் மூலம் உருவாக்கி, அதுவே சாஸ்வதம் என்று நம்ப வைத்து, எப்படி பேஷன் மாற்று அழகு சாதன இண்டஸ்ட்ரி பெண்களை அடிமை படுத்தி இருக்கிறது என்பதை முகத்தில் அறைந்தார் போல சொல்லும் புத்தகம். 

தற்போதெல்லாம், அடுத்தவர்கள் சொல்லும் சொல், அல்லது செயல் தான் நம்மை, நிர்ணயிக்கும் கருவி ஆகி இருக்கிறது பலருக்கு. அதாவது, "நீ குண்டு," "அட்ட கரி மூஞ்சி","உன் மூக்கு சரியில்ல", "வாய பாரு", "முகமெல்லாம் பரு"  என்பது போன்ற புற அழகுகளை மெருகேற்ற தரும் டிப்ஸ் தவிர இப்போதெல்லாம், பெண்களின் ப்ரா சைஸ் இல் இருந்து அவர்கள், உடுத்தும் உள்ளாடைகள் வரை, இது தான் பெஸ்ட், இப்படி இருந்தா தான் பெஸ்ட் பாஷன், இல்லையினா வேஸ்ட். என்பது போன்றவை சிறு வயதில் இருந்தே மறைமுகமாக அல்லது நேரடியாக போதிக்க படுகின்றன. இதனை படிக்கும் போது, எப்படி மறைமுகமாக பல பல விஷயங்கள் நம் வாழ்வில் நுழைந்திருக்கின்றன என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் எல்லாம், அவர்களின் தன்னம்பிக்கையை குறைத்து, இப்படி இருந்தால் தான் அழகு, என்று மறைமுகமாக/நேரடியாக போதித்து, ஒரு "அழகு" இண்டெக்ஸ் உருவாக்கி இருக்கிறார்கள். முடிந்தால் இந்த புத்தகம் கிடைத்தால் படித்தது விடுங்கள். 

அடுத்த புத்தகம், 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிகழ்ந்த  ஹவுசிங் மார்க்கெட் சரிவு குறித்து அதன் காரணிகள் குறித்த  "The Big Short" என்ற ஒரு நாவல். இதுவும் மனிதர்களின் பேராசைக்கு ஒரு உதாரணம். இது கடந்த டிசம்பர் படமாக வந்து சக்கை போடு போட்டது. அதன் ட்ரைலர் இங்கே.



எக்கனாமிக்ஸ் என்றால் என்ன?, சாதாரண மக்களிடம் கேட்டு பாருங்கள், ஒன்றும் தெரியாது. எனக்கு தெரிந்து இந்தியாவில் பல கலை கல்லூரிகளில் BA எகனாமிக்ஸ் டிகிரி உண்டு. அதில் படிக்கும் பலரிடம் கேட்டு பாருங்கள், எகனாமிக்ஸ் கோட்பாடுகளை. யாருக்கும் ஒன்றும் தெரியாது. ஆனால் இந்த எக்கனாமிக்ஸ் என்னென்ன விஷயங்களை கொண்டிருக்கிறது, எப்படி 500, 1000 ருபாய் செல்லாத அறிவிப்பு, டீ மானிட்டிசேஷன்,  எப்படி இந்தியாவை ஆட்டி படைத்து கொண்டிருக்கிருக்கிறது என்று படிக்கும் போது அறிந்து கொண்டால் புரிந்து நடந்தால் நன்றாக இருக்கும். பிராக்டிகல் ஆக இதனை சொல்லி தருவார்களா? என்று தெரியவில்லை. 
இது பெஸ்ட் அது பெஸ்ட் என்று சாதாரண மக்களுக்கு ஆசை காட்டி காட்டியே, பலர் தங்கள் பணப்பையை நிரப்பி கொள்கிறார்கள். இது எப்படி அமெரிக்கா பொருளாதாரத்தில் நிகழ்ந்தது என்று இந்த படத்தில் சொல்லி இருப்பார்கள். "Subprime மார்கேஜ்", "மார்கேஜ் பாண்ட்", FICO ஸ்கோர், கிரெடிட் ஸ்கோர் எல்லாம் பார்க்கும் போது, அமெரிக்காவிலேயே இப்படி ஒரு சரிவு ஏற்பட்டது, இந்தியாவில் என்ன நடக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.

அடுத்தது, சினிமா. நான் இந்த வருடம் அதிகம் தமிழ் படங்கள் பார்க்கவில்லை. அவ்வப்போது ஒரு சில பார்த்ததுண்டு, சில பிற மொழி படங்கள் பார்த்ததுண்டு. அப்படி நான் பார்த்த ரசித்த ஒரு படம், "Toni Erdmaan" என்ற ஜெர்மன் படம். பொதுவாக ஜெர்மானியர்கள் குறித்த சில கிளிஷேக்கள் உண்டு. நகைசுவை உணர்வு இல்லாதவர்கள். எப்போதும் உர்ரென்று இருப்பார்கள். பெர்பெக்ஷன் மக்கள் என்று. ஆனால், திடீரென்று தனிமையாக்கப்பட்ட  ஒரு தந்தையாக, காரீயர் வுமன் ஆன தன் மகளை தேடி சென்று, அவர் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கொடுத்து இருக்கிறார்கள். வாழ்கை நிலை சொல்லும் படம். எனக்கு பிடித்திருந்தது. 



 
இந்த வருடம் நிகழ்த்த சில மரணங்கள், வாழ்க்கையின் நிலையாமையை உரக்க உணர்த்தி சென்றிருக்கின்றன. எவ்வளவு பணம், புகழ், அதிகாரம் என்று இருந்தாலும் என்ன தான் "தான்" என்று ஆட்டம் போட்டாலும், எல்லாம், ஒன்றுமில்லாமல் அடங்கி விடும். அதன் பின் ஒருவரும் உன்னை சீண்ட மாட்டார்கள். அவர் அவர் வாழ்க்கையை பார்த்து கொண்டு, புகழ், பணம் சேர்க்க சென்று விடுவார்கள். இது ஒரு நிலையில்லா வாழ்வு. என்று உணர்த்தி சென்று இருக்கிறது. 
"வாழ்வில் எத்தனை பணம் புகழ் வந்தாலும், தலைகனம் மட்டும் வரக்கூடாது" என்று  நான் உணர்ந்திருக்கிறேன். சில மறக்க முடியா பாடங்கள் இவை என்று நினைக்கிறன்.

புது ஆண்டில், எல்லாரும் எல்லாமும் பெற்று வளமுடன் வாழ, எல்லாம் வல்ல இறைவன்/இயற்க்கை அருளட்டும். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

வாழ்க வளமுடன்.

நன்றி.

 




Friday, December 9, 2016

ஸ்டேட்டஸ் சிம்பல்!

ஒரு அனுபவமும் ஒரு செய்தியும் பார்க்க படிக்க நேர்ந்தது .

முதலில் ஒரு அனுபவம், பிளாக்  ஃப்ரைடே வியாபாரம் என்பது இங்கே காண ஜோராக நடக்கும். நம்ம ஊர் ஆடித்தள்ளுபடி போல இது. நிறைய கடைகளில் தள்ளுபடி கொடுப்பார்கள். எல்லா பொருட்களையும் வாங்கலாம். நான் ஊரில் இல்லாததால் எங்கும் ஷாப்பிங் செல்லவில்லை. அதனால், ஷாப்பிங் சென்ற என்னுடைய தோழி வந்து, "லூயிஸ் வுட்டன் பர்ஸ் ஒன்று, ரொம்ப சீப் ஆக சேல் போட்டு இருந்தான் ஓடி போய் அள்ளிட்டு வந்துட்டேன்" என்றாள். லூயிஸ் வுட்டன் என்பது மிக மிக அதிக விலை விற்கும் பர்ஸ். சின்ன கையடக்க பர்ஸ் கூட குறைந்தது 500$ இருக்கும். கைப்பை எல்லாம் குறைந்தது 1000-2000$ இருக்கும். என்ன தான் சேல் என்று அவர்கள் போட்டாலும் 300$க்கு குறைவாக அவர்கள் சேல் போட மாட்டார்கள்.  மற்ற பர்ஸ்களில் இல்லாத ஒன்றை அப்படி என்ன அந்த பர்சில் இருக்கிறதோ, தெரியவில்லை, ஆனால் அப்படிப்பட்ட பர்ஸ் வைத்திருப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல்.

photo from www.andertoons.com

"சீனாவின் புதிய ஸ்டேட்டஸ் சிம்பல் இது!", என்ற பிபிசி செய்தி ஒன்று படிக்க நேர்ந்தது. அதாவது எப்படி மான்நேர்ஸ் உடன் இருப்பது, உக்காருவது, ஸ்பூன், போர்க் உபயோகிப்பது, வைன் கிளாஸ் பிடிப்பது, பேசுவது போன்ற விஷயங்களை சொல்லி கொடுக்க என்று கோர்ஸ் தற்போது சீனாவில் இருப்பதாக அந்த செய்தி தெரிவித்தது.  இதல்லாம் ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகி விட்டது.

90 களில் எல்லாம் மிடில் கிளாஸ் மக்களை பொறுத்தவரை, பைக் வாங்குவது என்பது ஒரு வகையான ஸ்டேட்டஸ் சிம்பல். அது வீடு வாங்குவது, நகை வாங்குவது என்பதை தாண்டி மூன்றாவதாக இருந்து வந்திருக்கிறது. "எனக்கு தெரிந்தே பைக் வாங்கி கொடு, எல்லார் கிட்டயும் பைக் இருக்கு என்னைய எவனும் மதிக்க மாட்டான்" என்று பெற்றோர் இடம் சண்டை போட்ட என் கிளாஸ் மெட் பசங்கள் உண்டு. ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு எப்படியும் ஒரு பைக், ஸ்கூட்டர், அல்லது மொபெட் என்று ஏதாவது ஒன்று கட்டாயம் இருப்பது என்பது ஒரு வகை ஸ்டேட்டஸ் சிம்பல்.

 2000 களில் எல்லாம், காலேஜ் படிக்கும் பசங்கள் மத்தியில் பைக் என்பது, ஸ்போர்ட்ஸ் பைக் ஆக உருமாறி விட்டது. அதாவது, எத்தனை cc பைக் வைச்சிருக்கேன் பாரு என்று காட்டுவது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். ஆனால் மிடில் கிளாஸ் குடும்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கார் பக்கம் திரும்ப ஆரம்பித்ததும் அந்த நேரம் தான். அதாவது 2000 தின் ஆரம்பத்தில் மாருதி என்று ஆரம்பித்த இந்த கார் கிரேஸ் பின்னர், மெதுவாக டாடா, ரெனால்ட், போர்ட், செவர்லெட், பியட், நிசான், டொயோட்டா, ஹோண்டா, போல்க்ஸ் வாகென் போன்ற மீடியம் வகை செடான் கார்கள் வாங்க ஆரம்பித்தனர். 

அதிலும் தற்போதெல்லாம் முகநூலில் எந்த வகை கார்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து இருக்கிறது என்று படம் பிடித்து போடுகிறார்கள். இரண்டு மாதத்துக்கு முன், எங்கள் கும்பத்துடன் தற்போது டொயோட்டா இணைந்திருக்கிறது என்ற செய்தியுடன் என்னுடைய தோழி குறுந்செய்தி அனுப்பி இருந்தாள். அதே போல நேற்று என்னுடைய சொந்த கார பெண், எங்கள் குடுமபத்துடன் செவெர்லெட் இணைந்திருக்கிறது என்று செய்தி அனுப்பி இருக்கிறார்.  அதாவது, தற்போதெல்லாம், வீட்டுக்கு குறைந்தது, ஒரு காராவது வைத்திருப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகிவிட்டது. அதிலும், தற்போதெல்லாம், உங்கள் காரின் விலை எவ்வளவு என்பது பொறுத்து உங்களின் ஸ்டேட்டஸ் உயரலாம் அல்லது குறையலாம்.

எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், எப்போதும் இல்லாமல் ஒருநாள் போன் செய்து நலம் விசாரித்தார். எனக்கோ, என்னது அதிசயமா, இவர் போன் பண்ணுறார் என்ற கேள்வி. என்னவென்ற விசாரித்த போது, தான் BMW வாங்கி இருப்பதாகவும், அதுவும், ஹை எண்டு மாடல் வாங்கி இருப்பதாகவும், இங்கே அசெம்பிள் செய்யும் இடத்துக்கு சென்று வாங்கி வந்ததாகவும் கதை விட்டு கொண்டு இருந்தார். என்ன எதிர் பார்க்கிறார் என்று தெரியாமல், நல்ல வேலை செய்தீர்கள் என்று சொல்லி போனை வைத்து விட்டேன். சரி வாங்கிட்டிங்க என்ன செய்யணும் அதுக்கு, என்று கேட்க தோன்றியது.

இன்னும் ஒரு சில ஸ்டேட்டஸ் சிம்பல் மிடில் கிளாஸ் மக்கள் இருக்கிறார்கள். எப்போதும் பிராண்டட் பொருள்கள் மட்டுமே வாங்குவார்கள். ரால்ப் லாரன் ஷர்ட், நிக்கே ஷு, ரோலெஸ் வாட்ச், ரேபன் கண்ணாடி என்று எப்போதும் பிராண்டட் மட்டுமே. இவர்கள் உடுத்தும் உள்ளாடைகள் கூட பிராண்டட் ஆக மட்டுமே வாங்குவார்கள். இவர்கள் ஒரு பிராண்டட் பிரியர்கள்.  அதே போல அவர்கள் வாங்குவது என்று மட்டும் அல்லாமல் பிராண்டட் மட்டுமே தரமானது, மற்றவை எல்லாம் தரமில்லாதவை என்ற எண்ணம் கொண்டவர்கள்.

உண்மையை சொன்னால் இவர்கள் பிராண்டட் வாங்குவது என்பது "நான் மிடில் கிளாஸ் இல்லை, ஹை கிளாஸ்" என்று மற்றவர்களுக்கு தெரிவிக்கவே தவிர பிராண்டட் மேல் உள்ள நம்பிக்கையினால் அல்ல.

நன்றி

Friday, December 2, 2016

கலவை- ரசித்த, படித்த, பார்த்த, நொந்த நிகழ்வுகள்

நிறைய ரசித்த சின்ன சின்ன விஷயங்கள் நிறைய உண்டு, அவற்றை எல்லாம் தனித்தனி பதிவுகளாக எழுத முடியாது என்பதால், கலவையாக தொகுத்து வழங்கலாம் என்ற சிறு எண்ணம் வந்ததால் இது ஒரு கலவை பதிவு.

முதலில் சில  பாசிட்டிவ் விஷயங்கள்

மேற்கோள்  (quote)


“Think of it this way: There are two kinds of failure. The first comes from never trying out your ideas because you are afraid, or because you are waiting for the perfect time. This kind of failure you can never learn from, and such timidity will destroy you. The second kind comes from a bold and venturesome spirit. If you fail in this way, the hit that you take to your reputation is greatly outweighed by what you learn. Repeated failure will toughen your spirit and show you with absolute clarity how things must be done.” 
― Robert GreeneMastery


எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர் ராபர்ட் கிறீன் அவர்களின் மேற்கோள் இது. தமிழாக்கம் செய்ய வேண்டும் என்றால், இதோ.

வாழ்க்கையில்இரண்டு வகையான தோல்விகள் உண்டு. முதல் தோல்வி பயம் காரணமாக ஒரு செயலை செய்யாமலே ,எங்கே செய்தால் தோல்வி வந்து விடுமோ,  என்று பயந்து நல்ல நேரம் பார்த்து காத்திருக்கும் மக்கள் சந்திக்கும் தோல்வி.

இரண்டாவது தோல்வி, துணிவுடன் ஒரு செயலை செய்து அந்த செயல் கொடுத்த தோல்வி. இந்த வகை தோல்வியில் நீங்கள் கற்றது அதிகம் இருக்கும் , அடுத்தடுத்த  முறை தவறு செய்து  தோல்வியில் முடிந்தாலும், திரும்ப முயற்சி செய்ய தெம்பு வரும்.

இதே "முயற்சி திருவினையாக்கும்" என்ற சொற்பதம்.

 இதனை தற்போது ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு தெரிந்தே பலர் நல்ல பிளான் செய்து வைத்திருந்தும், நேரம் காலம் சரியில்லை, இது சரி இல்லை அது சரியில்லை என்று சொல்லி சொல்லியே பல விஷயங்களை தள்ளி போட்டு கொண்டே இருப்பதை காண்கிறேன்.  என்னுடைய நெருங்கிய சொந்தத்தில் கூட இது நிறைய நடக்கிறது. எதற்கெடுத்தாலும் ஜாதகத்தை தூக்கி கொண்டு ஜோசியரிடம் சென்று, அல்லது தானே ஜோசியம் பார்த்து கொண்டு, "எனக்கு இன்னும் நல்ல நேரம் வர நாளாகும். அப்ப பாருங்க நான் எவ்வளவு பெரிய ஆளா வர்றேன்னு" என்று சொல்லி கொண்டு சிலர் திரிகிறார்கள். ஒரு விஷயத்தை தொடங்காமலே எங்கே தோற்று விடுவோமோ என்று பயந்து தள்ளி போடுதல், எல்லாமே இருந்தும் எங்கே செத்து போய் விடுவோமோ என்று பயந்து சாப்பிடாமல் இருக்கும் ஒருத்தனை போன்றது.

இதற்காக எந்த பிளானும்  செய்யாமல் விஷயங்கள் செய்வது என்று அர்த்தம் இல்லை. ஏனெனில் இன்னொரு  எஸ்ட்ரீம் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் பிளான் செய்யாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்கிறவர்கள். இந்த வகை மக்கள் முதல் வகை மக்களுக்கு நேர் எதிர்.

சரி அடுத்த விஷயம்

கேட்டது

நிறைய பாடல்கள் கேட்பது பிடிக்கும் என்றாலும், எப்போதும் காலையில் ஆபீஸ் போவதற்குள் கேட்பது லங்காஸ்ரீ FM . UK வில் இருந்து ஒலிபரப்பாவதால் எங்கள் காலை நேரம் என்பது கூல் 7 பாடல்கள் என்ற நிகழ்ச்சி கேட்க சரியாக இருக்கும். 8கே ரேடியோ, தமிழ் குயில் இப்படி பல பல தமிழ் ரேடியோக்கள் வந்தாலும் எனக்கென்னவோ காலையில் எழுந்தவுடன் கேட்க இந்த ரேடியோ பிடித்திருக்கிறது. அதற்காக மற்றவை நல்லா இல்லை என்று சொல்லவில்லை. ஒவ்வொரு மணிநேரத்துக்கும் மணித்தியாலத்தின் முதல் பாடல், மணித்தியாலத்தின் காதல் கீதம். என்று மிக சுவாரசியமாக நகர்த்தி கொண்டு போகிறார்கள். காலையில் நான் கேட்பது 1-2 மணி மட்டுமே, அந்த நேரமும் மிக சுவாரசியம் ஆக இருக்கிறது.


 படித்தது, பார்த்தது 


முகுந்த் பள்ளியில் ப்ராஜெக்ட் ஒன்றுக்காக கடலின் பல அடுக்குகள் பற்றி தேட படிக்க நேர்ந்தது. படிக்க படிக்க மிக மிக சுவாரசியமான அது, நம்முடைய பூமியின் அற்புதத்தை எண்ணி வியக்க வைத்தது.  சிறு அதனை குறித்த சிறு தொகுப்பு இங்கே.

கடல் மொத்தம் 4 அடுக்குகள் கொண்டது. 1. sunlight zone , 2. twilight zone , 3. midnight zone கடைசியாக 4. The Abyss கடைசி லேயர் என்பது சூரிய ஒளி சுத்தமும் இல்லாத ஒரு அடுக்கு. அங்கே வாழும் உயிரினங்கள் சூரிய ஒளி இல்லாமல் வாழ தகவமைத்து கொண்டிருக்கின்றன.
தானாக ஒளியை உண்டாக்கும் சில உயிரினங்கள் இருக்கின்றன. இன்னும் சில அங்கே இருக்கும் வெந்நீர் நீர் ஊற்றுக்கள் அல்லது கடலடியில் இருக்கும் எரிமலைகளில் இருந்து வெளிப்படும் வெப்பத்தை வைத்து உயிர்வாழ்கின்றன.

Abyss அடுக்கில் இருக்கும் விலங்குகள் குறித்த ஒரு வீடியோ காண நேர்ந்தது.



என்ன ஒரு அற்புதமான மாடல் இது. இது என்னை பொறுத்த வரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில், ஜுபிடர் /வியாழன் கிரகத்தின் நிலவான ஐரோப்பா வில், நீர் ஊற்றுக்கள் இருப்பதை படம் பிடித்து இருக்கிறது ஹபிப்ல் தொலைநோக்கி. அப்படி கடலடி நீர் ஊற்றுக்கள் இருப்பின், பூமியில் இருக்கும் கடலடி உயிரினங்கள் போல அங்கேயும் இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.



photo from https://www.nasa.gov/press-release/nasa-s-hubble-spots-possible-water-plumes-erupting-on-jupiters-moon-europa


நொந்தது

ஏற்கனவே நான் அமெரிக்க தேர்தல் குறித்து அதன் முடிவு குறித்த என்னுடைய பயத்தை எழுதி இருந்தேன், "God save us" என்று. நான் என்ன நினைத்து பயந்தேனோ அது நடக்க ஆரம்பித்து இருக்கிறது. ஏற்கனவே, வெள்ளை மக்கள் மற்ற மக்களை விட தங்கள் உசத்தி என்ற எண்ணம் பரவலாக உண்டு இங்கே. அது வெளியே தெரியாமல் இது வரை இருந்திருக்கிறது என்று தற்போது எண்ண  தோன்றுகிறது. டிரம்ப் அவர்களின் செலக்ஷன்க்கு பிறகு, "நான் வெள்ளை" நான் உசத்தி என்ற எண்ணத்தை மக்கள் அப்பட்டமாக வெளிக்கொணர ஆரம்பித்து இருக்கிறார்கள். அதற்க்கு சமீபத்திய உதாரணம். ஒரு வெள்ளை அம்மா, தான் கறுப்பின பெண்ணால் அவமானப்படுத்த பட்டதாக ஒரு கடையில் நின்று பெரிய கூச்சல்  போட்டு, தேவையே இல்லாமல் " நான் டிரம்ப் க்கு ஓட்டு போட்டேன், அதனால் உனக்கு என்ன போச்சு" என்பது போல பல கீழ்த்தரமான வார்த்தைகள் பேசி சண்டை போடும் ஒரு வீடியோ காண நேர்ந்தது.


மண்ணின் மைந்தன் நான் என்ற கொள்கை எல்லாம் அமெரிக்காவை பொறுத்தவரை கிடையாது. ஏனெனில் அமெரிக்காவின் உண்மையான மண்ணின் மைந்தர் எல்லாம் "சீரோக்கீ, க்ரீக்  போன்ற பூர்வாங்க குடி மக்கள்" அவர்களை எல்லாம் கொன்று, நாடுகடத்தி எல்லா கஷ்டங்களையும் கொடுத்து வெளியேற்றிய பிறகு, இங்கே வந்து குடியேறிய ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்கள், தாங்கள் மண்ணின் மைந்தன் என்று சொந்தம் கொண்டாடுவது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

God save us


டிஸ்கி
இது நான் ரசித்த விஷயங்களை கோர்த்து எழுதியது மட்டுமே. யாரையும் குறிப்பிடவில்லை. யாரையும் , எதையும் சப்போர்ட் செய்யவில்லை.

நன்றி.