Thursday, April 21, 2016

குறையும் கச்சா எண்ணெய் விலையும், மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலையும் !

கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே எனக்கு தெரிந்து நிறைய மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்கள் வேலை வாய்ப்பை இழந்து இருக்கிறார்கள். இது வரும் என்று முன்கூட்டியே தெரிந்து தானோ என்னவோ தெரியவில்லை சிலர் வேறு துறைக்கு அல்லது வெளிநாட்டுக்கு குடி பெயர்ந்து இருகிறார்கள். வேலையில் இருப்பவர்களும் எப்பொழுதும் ,என்ன நடக்குமோ என்று ஒரு கிலியில் இருப்பதாக பேசிய போது சொன்னார்கள். இதனை சார்ந்த பல செய்திகள் பார்க்க படிக்க நேர்ந்தது.

எண்ணெய் வளம் என்ற ஒன்றை மற்றும் நம்பி கொண்டு எதிர்காலத்தை நடத்த முடியாது என்று நினைத்ததாலோ என்னவோ, UAE, குவைத், ஓமன் போன்ற நாடுகள் மற்ற துறைகளில் காசை முதலீடு செய்கிறார்கள். துபாய் நகரம் முழுதும் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த தொழில் முனைவோருக்கு என்று நிறைய வாய்ப்புகள் வழங்குகிறார்கள்.

எண்ணெய் வளம் மட்டுமே வைத்து நம்பி கொண்டு இருந்த சவுதி தற்போது  உள்ள உள்நாட்டு பற்றாக்குறையை சமாளிக்க என்று தன்னுடைய வெளிநாட்டு சேமிப்பில் இருந்து 70 பில்லியன் டாலர் வரை எடுத்து இருப்பதாக சில செய்திகளையும் படிக்க நேர்ந்தது.

சரி, என்ன நடக்கிறது, யார் மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கிறார்கள் என்பது குறித்த "Who controls Middle East Oil Prices?"  என்ற Forbes கட்டுரை ஒன்று வாசிக்க நேர்ந்தது.  அதில் எனக்கு புரிந்த சில விடயங்கள் இங்கே.

பல வருடங்களாக கச்சா எண்ணெய் ஒரு ஆயுதமாக பயன்படுத்த பட்டு வந்து இருக்கிறது. சவூதி அரசாங்கம் எண்ணைவளத்தை அமெரிக்காவுடன் உறவு ஏற்படுத்தி கொள்ள ஒரு பாலமாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.  உனக்கு எண்ணெய் குறைந்த விலையில் தருகிறேன், எனக்கு எந்த எதிரியும் தாக்காமல் எனக்கு உன் ஆயுத பலம், என்று மறைமுக டீல் இருந்திருக்கிறது . இதனை வைத்து அமெரிக்கா, உலக மார்கெட்டில் கச்சா எண்ணெய் விலை $100 ஐ தாண்டினாலும் அமெரிக்காவுக்கு குறைந்த விலையில் சப்ளை செய்து வந்திருகின்றனர்.

எண்ணெய் தேவையை சமாளிக்க என்று அமெரிக்கா, மின்சாரத்தில் இயங்கும் பாட்டரி கார், சூரிய ஒளியில் இயங்கும் கார் போன்றவை ஒரு பக்கம் உருவாக்கி புழக்கத்தில் விட்டது. கடந்த வருடங்களில் நிறைய நிசான் கம்பனி "லீப் Leaf"  எனப்படும் பாட்டரி கார் ஒன்றை புழக்கத்தில் விட, அதனை வாங்கினால் நிறைய டாக்ஸ் பெனிபிட் என்று ஒபாமா அறிவிக்க, எங்கும் எங்கெங்கும் நிஸ்ஸான் லீப் கார்கள் பார்க்க நேர்ந்தது. அதுவும் நிறைய இந்தியர்கள் வீட்டுக்கு ஒரு நிஸ்ஸான் லீப் வைத்திருந்ததை பார்க்க நேர்ந்தது.

இது ஒரு புறம் இருக்க, "hydraulically fractured oil" எனப்படும் பாறைகளை உடைத்து சேதாரங்களை தவிர்த்து எண்ணெய் எடுக்கும்  தொழில் நுட்பத்தை அமெரிக்கா வளர்க்க என்று எல்லாபுரமும் தனது என்னை தேவையை சமாளிக்க என்று நிறைய காய்களை நகர்த்த ஆரம்பித்தது.  விளைவாக, எனக்கு உங்களின் எண்ணெய் வேண்டாம் என்று மறைமுகமாக சொல்ல/காய்களை நகர்த்த..தேவை இல்லாமல் நிறைய எடுத்து என்ன செய்வது என்று மறைமுகமாக நிறைய சப்பளை அதிகரித்து டிமான்ட் குறைய ஆரம்பித்தது.

Market Vector Oil Services (NYSE:OIH)-34.40
Ipath S&P GSCI Crude Oil (NYSE:OIL)-58.5%
United States Oil Fund (NYSE:USO)-53.06
Source: Finance.yahoo.com

NYSC இல் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிவு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. முடிவு, எதற்கு நிறைய எண்ணெய் எடுக்க வேண்டும், பேசாமல் ப்ரொடக்சன் பிளான்ட் ஐ நிறுத்தி விடுவோம் அல்லது குறைத்து விடுவோம் என்று நிறைய மத்திய கிழக்கு நாடுகள் முடிவு செய்து ஆள்குறைப்பு செய்து வருகின்றனர். அதோடு, தற்பொழுது டாக்ஸ் ம் வரப்போகிறது என்றெல்லாம் பேச்சாக இருப்பதால், நிறைய எண்ணெய் வளத்தை நம்பி அங்கு வேலைக்கு சென்ற இந்தியர்கள் தங்கள் குடும்பங்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதாக அறிய முடிகிறது.

இதனால் இந்தியர்களுக்கு மட்டும் என்று இல்லை, இந்திய பொருளாதாரத்திற்கும் நிறைய பாதிப்புகள் வரலாம் என்று போர்பஸ் இன் மற்றொரு செய்தி. தெரிவிக்கிறது. எப்படி, என்றால், உலகின் பல மூலைகளில் இருந்து பணம் அனுப்புபுபவர்களில் வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள். இந்தியா நம்பர் ஒன் நாடாக இப்படி பணம் பெறுவதில் இருக்கிறது. UAE இல் இருந்து மட்டுமே கிட்டத்தட்ட $15 பில்லியன் டாலர்கள் இந்தியாவிற்கு 2012 இல் அனுப்ப பட்டு இருப்பதாக அது தெரிவிக்கிறது. இது US இல் இருந்து அனுப்படும் பணத்தை விட 4 பில்லியன் அதிகம் ஆகும்.Photo from Forbes வேலை இழப்புகள், இது போன்ற பண வரவு இழப்பை ஏற்படுத்தலாம். கிட்டத்தட்ட 7 மில்லியன் இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கிறார்கள், அவர்களின் நிலை என்னவாகும். இது ஒரு தொக்கி  நிற்கும் கேள்வியே..காலம் தான் இதற்க்கு பதில் சொல்ல வேண்டும்.

டிஸ்கி
இது நான் வாசித்ததை, கேட்டதை வைத்து எழுதியது, ஏதேனும்  தவறுகள் இருப்பின் தெரிவிக்கவும்.

நன்றி.
Wednesday, April 20, 2016

"கில்லியும்","தெறியும்", ஆங்கரி யங் மேனும்!

கடந்த வாரம் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் என்னுடைய பழைய கணினியை format செய்து, புது லினக்ஸ் OS போடலாம் என்று முடிவு செய்து களத்தில் இறங்கி ஆகி விட்டது. அப்பொழுது, பழைய பைல்கள் தேடி கொண்டு இருந்த போது..எப்பொழுதோ தரவிறக்கிய "கில்லி" படம் இருந்தது. அந்த படம்  பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்ட படியால் படத்தை ஓட விட்டேன். எத்தனையோ தடவை பார்த்தது தான் என்றாலும் இன்னும் பார்க்கும் போது மனிதரை என்கேஜ் செய்வது இந்த படத்தின் சிறப்பு. இன்னும் கூட மீனாக்ஷி அம்மன் கோயில் முன் இருக்கும் சீன் மற்றும் த்ரிஷா கழுத்தில் கத்தி வைக்கும் சீன். பிரகாஷ்ராஜ் நடிப்பு என்று, படம் எப்பொழுது பார்த்தாலும் ஒரு கம்ப்ளீட் பக்கேஜ். ஏற்கனவே தெலுகு ஒக்கடுவில் வந்த காட்சிகள் தாம் என்றாலும் கர்னூலுக்கு பதில் மதுரை, பழக்கவழக்கங்கள், செல்லம் ஐ லவ் யு  என்று கலக்கல்  விகிதமாக இருந்தது.

நிற்க, சென்ற சனிக்கிழமை விஜயின் "தெறி" பார்க்கலாம் என்று தோழிகளுடன் சினிமா பிளான்.  பலரும் கழுவி ஊற்றியாயிற்று. அதனால் வேண்டாம் என்று சொன்னாலும்,, விஜயின் தீவிர ரசிகர்கள் எங்கள் தோழிகள் லிஸ்டில் இருப்பதால், போயே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தாலும் சென்றாயிற்று. நிறைய கழுவி  ஊற்றியதால் நான் எந்த விமரிசனமும் செய்ய போவதில்லை. மாறாக எனக்கு அந்த படம் பார்க்கும் போது என்ன தோன்றியது என்று மட்டுமே சொல்ல போகிறேன்.

மிக அறுவை காட்சிகள், மகேந்திரன் என்னும் அருமை டைரக்டர் ஐ ஒரு கொடுமை வில்லனாக சித்தரிக்க செய்ய முயற்சிகள் காண சகிக்காத கொடுமை.  தன் மகன் செத்ததுக்கு ஒரு வருடம் கழித்து? விஜய் குடும்பத்தை பழி வாங்க வரும் கொடுமை. பின்னர் போன் செய்து "நீ இன்னும் உயிருடன் இருக்கியாமே?" என்று நம்மை டார்ச்சர் செய்வது.. பின்னர் பேய் போல விஜய் வருவது. பின்னர் கட்டி வைத்து அடிப்பது..."சாவை விட அதிக கஷ்டம் தரும் ஒன்னை தர்றேன்" என்று காசு கொடுத்து படம் பார்க்க வந்த நம்மை "படுத்தோ படுத்துன்னு கொன்னுர்றாங்கபா". எனக்கு ஒரு விஷயம் விளங்கவே இல்லை. இவங்க படம் எடுத்தது விஜயோட ரசிகருக்காக மட்டும் தான் அப்படினா, அவங்க ரசிகர் மன்ற மக்களுக்கு மட்டும் போட்டு காட்டி இருக்காலாமே. எதுக்கு இப்படி பெரிய பில்ட் அப் கொடுத்து இப்படி ஒரு கொடுமையை நமக்கு கொடுக்கணும்.

இரண்டு படங்களுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால்  அதன் ஹீரோக்கள் "ஆங்ரி யங் மேன்", கொடுமையை கண்டு சகிக்காத கொதித்தெழும் ஒரு ஆள். தமிழில் 70 -80 களில் வந்த படங்கள் முதல் இன்று வரை வரும் பல ஆக்சன் படங்களின் ஹீரோ "ஆங்ரி யங் மேன்" தான். இன்னும் சொல்ல போனால்..ஏன் இந்திய படங்களின் கதாநாயகர்களும் ஆங்ரி யங் மேன் தான். அதுவும் தெலுங்கு படங்களில் எல்லாம் ஹீரோ ஒரு அடி விட்டால் அடியாட்கள் 50 அடி தூரம் பறந்து விழுவார்கள். அதுவே வீரம் என்று படங்களில் சொல்லபடுகிறது. அறிவுறுத்த படுகிறது. ஆனால் உண்மையில் ஒருவன் எப்பொழுது பார்த்தாலும் ரத்தம் கொதிக்க இப்படி சண்டை போட்டு கொண்டு இருக்க முடியுமா..இது சாத்தியமா?.. ஏனெனில், ஆபிஸ் பாலிடிக்ஸ் சமாளிப்பது எப்படி என்பது குறித்த ஒரு கோர்ஸ் எடுக்க நேர்ந்தது அது "emotional inteligence" சார்ந்தது. ஏனெனில் ஒருவர் நல்ல லீடர் அல்லது தலைவர் ஆக வேண்டும் என்றால் முதல் தகுதி அவர் தன்னுடைய உணர்ச்சிகளை வெளி காட்டி கொள்ள கூடாது என்பதே. உங்கள் முன்னிலையில் அநியாயமே நடந்தாலும் அதனை பகுத்து ஆய்ந்து எந்த முடிவு சரியானதாக இருக்கும் என்று முடிவு செய்து அதற்க்கு ஏற்றார்போல மட்டுமே பதில் வினை யாற்ற வேண்டும். இதனை சார்ந்த ஒரு வீடியோ காண நேர்ந்தது. எப்படி இதனை உபயோகித்து சிறந்த தலைவர் ஆவது என்பது குறித்த வீடியோ அது.தலைவர்கள் யாவரும் "ஆங்ரி யங் மேன்" அல்லர், மாறாக ராஜ தந்திரம் தெரிந்த அரசியல் செய்ய உகந்த உணர்சிகளை கட்டுபடுத்தும் வித்தை கைவரபற்றவர்கள்.  அதனால் எனக்கு தெரிந்தவரை, படங்களில் காட்டும் ஹீரோக்கள் நிஜ வாழ்கையை பொருத்தவரை ஜீரோக்கள் மட்டுமே.அதனால் தொண்டரைடிகள் இதுவே வாழ்க்கை என்று நினைத்து ஏமாறாமல் இருக்க வேண்டும்.

டிஸ்கி
இது திரைப்படம் குறித்த என்னுடைய கண்ணோட்டம் மட்டுமே, விமரிசனம் அல்ல.

நன்றி.Wednesday, April 13, 2016

இல்லத்தரசிகள் தற்கொலை: இந்தியாவை பிடித்தாட்டும் தொற்றுநோய்


கடந்த மாதம் என்னுடைய தோழி ஒருவரின் மரண செய்தி காதில் வந்து விழுந்தது. என்னுடன் பள்ளியில் படித்த பெண் அவர். திருமணமாகி 15 வருடங்களில் தன்னை அழித்து கொள்ள துணிந்து விட்டார் அவர். இளநிலை கல்லூரி படிப்பு முடிந்தவுடன் திருமணம், இரண்டு பெண் குழந்தைகள் என்று சென்ற வாழ்கை என்னவானதோ முடிந்து விட்டது. பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். வாழ்க்கை பட்டு போன இடத்தில் அதிகம் படிக்காத மாமியார், மாமனார். இரண்டும் பெண் குழந்தைகள் என்பதால், மாமியார் வருத்தப்பட மெதுவாக மனஸ்தாபம் வந்து இருக்கிறது. அதனால் தனது கணவருடன் தனிக்குடித்தனம் சென்று இருக்கிறார். பின்னர் என்னவானதோ தற்போது உயிருடன் இல்லை.

இது என்னுடைய தோழி மட்டும் என்று இல்லை, நிறைய பெண்கள் சொல்ல போனால் 20,000 பெண்கள் முக்கியமாக இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக இந்திய குற்றபிரிவு அறிக்கை தெரிவிக்கிறது.  இது 2014 இல் நடந்த விவசாயிகள் மரணத்தை விட 4 மடங்கு அதிகம். ஆனால் இதனை போன்ற ஒன்று பத்திரிக்கையின் முதல் பக்கத்தை பிடிப்பது இல்லை. உடனே, ஒரு கள்ள காதல் அல்லது எதோ ஒன்று என்று கதை கட்டி விட்டு கேஸ்ஐ முடித்து விடுகிறார்கள். உண்மையில் என்ன நடந்தது, என்ன காரணம் என்று யாரும் கவலைபடுவது இல்லை, நடவடிக்கை எடுப்பதுவும் இல்லை.

இந்தியாவில் 1லட்சம் பெண்களுக்கு 11 பெண்கள் தற்கொலை செய்து கொள்ளவதாக இது ஒரு தொற்றுநோய் போல பரவி வருவதாக BBC செய்தி ஒன்றும்  அதனை சார்ந்த ஆய்வறிக்கை ஒன்றும் படிக்க நேர்ந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை பார்க்கும் போது திருமணம் ஒரு பெண்ணின் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கும் என்று தெரிகிறது. ஆனால் இந்தியா இதற்க்கு விதிவிலக்கு போல. 2011 இல் இந்தியாவில் நடந்த தற்கொலைகளில் தற்கொலை செய்த 70% பெண்கள் திருமணமானவர்கள்.  


photo from  google images 

இந்தியாவில் திருமணமான 30- 45 வயதான பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுவது என்பது 15 முதல் 30 வயது பெண்களை விட இரண்டரை மடங்கு அதிகம் என்று மருத்துவ ஆராய்ச்சி கட்டுரை லான்செட் தெரிவிக்கிறது 

சரி புள்ளி விவரங்கள் போதும், என்ன காரணமாக இருக்கும் என்று யோசிப்பவர்களுக்கு. தலைமுறை இடைவெளி, புகுந்த வீட்டில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியாமல் போவது, அதனை சார்ந்த மன அழுத்தம், புகுந்த வீட்டில் சப்போர்ட் இல்லாமல் இருப்பது போன்ற ஒரு சில  காரணமாக ஆய்வில் சொல்ல படுகின்றன.

பெரும்பாலான நேரங்களில் படிக்கும் நேரத்தில் அல்லது படித்து முடித்த வுடனே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறது. பெண்களின் ஆசைகள் நிராசைகள் என்னென்ன என்பது பலரும் கேட்பதில்லை அறிய முற்படுவதில்லை. திருமணமாகி செல்லும் பெண்கள், தனது ஆசை கனவுகள் சில நேரங்களில் சாதிக்க நினைக்கும் பலவற்றையும் குடும்பத்துக்கு என்று தியாகம் செய்கிறார்கள். அதிலும் பல நேரங்களில் குடும்பபிரச்சனைகள் எல்லாவற்றையும் தாண்டி தனக்கு தன் கணவரிடம் இருந்து சப்போர்ட் இல்லை என்று பலர் நினைக்கும் போது இது போன்ற எக்ஸ்ட்ரீம் முடிவுகள் எடுக்கின்றனர். தனிக்குடித்தனம், அல்லது சப்போர்ட் ஸ்ட்ரக்சர் அல்லது கவுன்சிலிங் என்பது போன்ற எதுவும் இல்லாத போது, மனதுக்குள் புழுங்கி புழுங்கி இது போன்ற எக்ஸ்ட்ரீம் முடிவுகள் எடுக்கிறார்கள்.

எது எப்படியோ, இது ஒரு தொற்று நோய் போல மிக தீவிரமாக பரவிவருகிறது என்பதை மறுப்பதற்க்கு இல்லை. சீக்கிரம் இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுப்பது என்பது பல தற்கொலையை தவிர்க்க உதவும்.

நன்றி.

டிஸ்கி 

இது என்னுடைய சொந்த அனுபவத்திலும், வாசித்ததிலும் எனக்கு தெரிந்தார்களின் அனுபவத்திலும் இருந்து எடுக்கப்பட்டது. யாரையும் குறிப்பிடவில்லை. References 
http://ncrb.nic.in/
http://www.bbc.com/news/world-asia-india-35994601
http://www.epw.in/journal/2016/14/thinking-clearly-about-suicide-india.html
http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(12)60606-0/fulltext?_eventId=loginSunday, April 3, 2016

இன்டர்நெட்டால் ஒருவரின் தனித்தன்மை பறிபோகிறதா?

முதலில் சில  கேள்விகள் 

உங்களில் எத்தனை பேர் இன்டர்நெட்டில் முகம் தெரியாத சிலருடன் நண்பராக இருக்கிறீர்கள்?
அந்த சிலரை நீங்கள் ஒரு தரம் கூட நேரில் பார்த்தது பேசியது இல்லை?, உங்களின் முழு  உரையாடலும் இணையத்தில் மட்டுமே என்று இருக்குறீர்கள். 

நிறைய பேர் இதற்க்கு ஆமாம் எனக்கு முகம் தெரியாத நண்பர்கள் உண்டு என்கிறீர்களா?, தொடர்ந்து படியுங்கள்.

BBC கட்டுரை ஒன்று படிக்க நேர்ந்தது அது, எப்படி இணையம் பலரின் தனித்தன்மையை மாற்றி இருக்கிறது என்பதே.


Photo from google images

ஒவ்வொருவருக்கும் அவருக்கு என்று ஒரு அல்டெர் ஈகோ இருக்கும். அதாவது, நான் இப்படி இருக்க வேண்டும், இந்த வேலை செய்ய வேண்டும், இந்த உடை உடுத்த வேண்டும், இப்படி நிறைய.. அப்படி பல பல ஆசைகளுக்கு வடிகாலாக பலர் இணையத்தில் தன்னை பாவித்து கொள்ளுகிறார்கள் என்று அந்த BBC கட்டுரை உரைக்கிறது. உதாரணமாக ஆண்கள், பெண்கள் போல ப்ரொபைல் வைத்து கொள்ளுவது நம்மில் பலராலும் அறியப்பட்டு இருக்கிறது. அதே போல, வயதானவர் இளமையானவராக, கத்துக்குட்டிகள் தங்களை எக்ஸ்பெர்ட் ஆக கிராமப்புற மக்கள் தங்களை மெட்ரோ ஊர்களில் வசிக்கும் நவ நாகரிக மக்களாக, பேஷன் ஐகான் ஆக ...இப்படி தங்களின் அல்டெர் ஈகோவை இணையத்தின் ப்ரொபைல் மூலம் பலர் வெளிக்கொண்டு வருவதாக அது தெரிவிக்கிறது. 

இப்படி தன்னை வேறு ஒரு ஆளாக காட்டி கொள்ள ஆரம்பிக்கும் பலர் நாளாக நாளாக தன்னை அப்படி ஒரு ஆள் என்றே எண்ணி கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். அதாவது, ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி. உண்மையில் அவர் ஒரு ஜொள்ளு பார்ட்டியாக இருப்பார், ஆனால் ஊருக்கு தான் ஒரு உத்தமன் என்று பகல் வேஷம் போடுவது. இது போல ஆகும் பலரும் தன்னுடைய உண்மை நிலைமையை மறந்து எப்பொழுதும் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து நிஜத்தை தொலைக்கிறார்கள் என்று BBC கட்டுரை தெரிவிக்கிறது.

இணையம் உபயோகிக்கும் அல்லது அடிக்ட் ஆகி இருக்கும் பலரிடம் நீங்கள் மெதுவாக "நீங்கள் யார் உங்களின் லட்சியம் என்ன?" என்று கேட்டு பாருங்கள். அவர்களின் பதில், "தான் எப்படி ப்ராஜெக்ட் செய்ய விரும்புகிறாரோ அதனை தான் சொல்லுவாரே தவிர நிஜத்தை அல்ல?" இதனால் என்ன தவறு எல்லாரும் கனவு காணத்தானே சொல்லுகிறார்கள்? என்று கேட்பவர்களுக்கு.

கனவு மட்டுமே காண்பவனுக்கு எப்பொழுதும் வெற்றி கிடைக்காது. உதாரணமாக, அடிக்ட்  ஆகி இருக்கும் ஒருவன் நிஜத்தை உணர மறுக்கிறான். நிஜத்தில் இருந்து தூர ஓடிப்போக மட்டுமே தன்னுடைய அல்டெர் ஈகோ வை வைத்து இருக்கிறான். இது ஒரு கனவு மட்டுமே. உண்மையில் நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் நிஜத்தை உணர வேண்டும். இது என் நிஜம், இந்த நிஜத்தில் இருக்கும் பிரச்சனையை தைரியமாக முதலில் எதிர் கொள்ள வேண்டும். பின்னர், அந்த நிஜத்தில் இருக்கும் மனிதரில் இருந்து கனவு காணும் அல்லது அல்டெர் ஈகோ மனிதன் ஆக என்னென்ன முயற்சிகள் எல்லாம் எடுக்க வேண்டுமோ அதனை எடுக்க வேண்டும்.

ஆனால் எனக்கு தெரிந்த ஒருவர் எப்பொழுதும் இணையத்தில் மூழ்கி கிடக்கும் ஒருவர். இணைய உலகில் தன்னை ஒரு பெரிய தலையாக காட்டி கொள்ள அதிகம் மெனக்கெடுவார், ஆனால் அவரால் வீட்டில் இருக்கும் மனைவி மக்களுக்கு  எந்த பிரயோஜனமும் இல்லை. அவர் காண்பது கனவு மட்டுமே, தான் பெரிய தலை என்று அவர் நம்பி நம்பி அந்த கனவில் மட்டுமே வாழும் அவர் என்னை பொருத்தவரை ஒரு உதவாக்கரை. 

இப்படி நிறைய பேர் பார்த்து இருக்கிறேன். இணைய உலகில் பெண்களை மடக்க என்று வித விதமாக வேஷம் போடும் பலர். இல்லாத ஒன்றை இருக்கு என்று தான் பெரிய இவர் என்று மெனக்கெட்டு காட்டி கொள்ளும் சிலர். எப்பொழுதும் தான் பெஸ்ட் என்று காட்டி கொள்ளும் சிலர் இப்படி சொல்லி கொண்டே போகலாம். சொல்ல போனால் ஒரு நாய் கூட தான் உலக அழகன்/அழகி என்று கதை விட்டு தன்னை நிலைபடுத்தி கொள்ள இணையம் உதவுகிறது.

இப்பொழுது தொடங்கிய கேள்விக்கு வருகிறேன், உங்களில் எத்தனை பேர் நீங்கள் சந்திக்கத நபருடன் நண்பராக இருக்குறீர்கள், அப்படி இருக்கும் நீங்கள் அந்த சந்திக்காத நபரை எவ்வளவு நம்புகிறீர்கள்?. ஏனெனில் இணையத்தில் உலவும் பலரும் வெளி வேஷம் போடுபவர்கள் அதனால் தன்னுடைய சுயத்தை இழந்தவர்கள் அல்லது இழந்து கொண்டு இருப்பவர்கள். அதனால் கவனம் மிக கவனம் தேவை.

நன்றி.Reference

How disconnecting the internet could help our identityhttp://www.bbc.com/news/magazine-35895719Friday, April 1, 2016

வாழ்வதற்கு எவ்வளவு பணம் தேவை?


என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் இன்னும் இரண்டு வருடங்களில் தான் ரிடையர் ஆக போவதாக கூறினார். அவருக்கு ஒரு  பையன் கல்லூரியில் இருக்கிறார்,  ஒரு 50-55 வயது இருக்கும் அவருக்கு (இங்கு பலரின் வயதை கணிக்க முடியாது). அவரும், மனைவியும் வேலை பார்த்து நிறைய சேர்த்து வைத்து இருப்பதாகவும், ரிடையர்மென்ட் இல் ஐரோப்பா  முழுதும் சுற்ற போவதாகவும் சொன்னார்.

இங்கெல்லாம் நிறைய பேர் வேலை பார்க்கும் போதே 401K எனப்படும் ரிடையர்மென்ட்க்கு பணம் சேர்ப்பதை பார்க்கலாம். இது கிட்ட தட்ட நம்ம ஊரு பென்ஷன் போன்றது.  அதே போல, இங்கு இருக்கும் மக்கள் பலர் உலகத்தை சுற்றி பார்க்க ஊரை சுற்றி பார்க்க என்று நிறைய பணம் சேமிப்பார்கள். ஏதேனும் விடுமுறை என்றாலோ அல்லது வெகேசன் என்றாலோ குடும்பத்துடன் வெளியே கிளம்பி விடுவார்கள்.

இவர் இப்படி சொன்னதை கேட்ட பிறகு, எனக்குள்  சில கேள்விகள். இதே போல இந்தியாவில் இருக்கும் ஒருவர் 50-55 வயதில் நான் ரிடையர் ஆக போகிறேன் என்று சொல்ல முடியுமா?. அவரின் குடும்ப ரியாக்சன் என்னவாக இருக்கும்.

ஏனெலில், எனக்கு தெரிந்த ஒரு அம்மா, அவரின் கணவர் உடல் நிலைக்காக வோலேன்டறி ரிடையர்மென்ட் கொடுத்த பிறகு அவரை கரித்து கொட்டி கொண்டு இருந்ததை  பார்த்து இருக்கிறேன். இன்னும் 6 வருஷம் சர்வீஸ் இருக்கு ஆனா இப்படி வீட்டுல உக்கார்ந்துட்டு என் உயிரை வாங்குறீங்க என்று சொல்லி சொல்லி மாய்ந்து போவார். இத்தனைக்கும் அவர்களுக்கு பணம் ஒரு பொருட்டே இல்லை. நிறைய உண்டு. ஆனாலும் அதனை செலவு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட எண்ணம் இருக்காது. சரியான கஞ்சன் அம்மா.  எச்சில் கையால் கூட காக்கை ஓட்ட மாட்டார் அந்த அம்மா. அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒன்று தோன்றும், இப்படி பணம் சேர்த்து வைத்து எங்கு கொண்டு செல்ல போகிறார் என்று. தானும் அனுபவிக்காமல், மற்றவருக்கும் கொடுக்காமல் என்ன மக்களோ என்று நான் நினைப்பது உண்டு.

இது ஒரு வகை மக்கள் என்றால் இன்னொரு எக்ஸ்ட்ரீம் ஒருவரையும் பார்த்து இருக்கிறேன்.
 அவர் கவர்மெண்ட் சம்பளம் இல்லை, பிரைவேட் கம்பனியில் வேலை. தனது 40 களில் இருக்கும் அவருக்கு சேவிங் என்று எதுவும் இல்லை. வீட்டு லோன் வாங்கி அதற்க்கு EMI கட்டி கொண்டு இருக்கிறார்.  ஒவ்வொரு வீகெண்ட்ம் வெளியே கிளம்பி விடுவார். கையில் இருக்கும் எல்லாத்தையும் செலவழித்து விடுவார். நிறைய அனாவசிய செலவுகள் இருக்கும். இரண்டு குழந்தைகள், ஆனாலும் அவர்களுக்கு என்று எதுவும் சேமிக்க இல்லை என்று அவரின் மனைவி மாய்ந்து மாய்ந்து புலம்புவார். இவரின் நோக்கம் இறக்கும் வரை ஏதாவது வேலை செய்து கொண்டு இருக்கவேண்டும். வாழ்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே.


உண்மையில் ரிடையர் ஆக வேண்டும் என்றால் எவ்வளவு பணம் தேவை. இந்தியாவில் அல்லது  அமெரிக்காவில் என்று எனக்கு அடிக்கடி தோன்றுவது உண்டு. வாழ்வதற்கு எவ்வளவு பணம் தேவை? ஆனால் இது ஒரு மாறி வரும் இலக்கு. உதாரணமாக நான் ஸ்டுடென்ட் ஆக இருந்த போது கிடைத்த சொற்ப  ஸ்டைபெண்டு இல் வாழ்கை வாழ்ந்து இருக்கிறேன். பின்னர் வேலை கிடைத்த பிறகு வந்த சம்பளமும் சரியாக போய் இருக்கிறது. பின்னர் வேறு வேலை கொஞ்சம் அதிகம் சம்பளம் என்று எல்லாமே மாறினாலும் அப்பொழுதும் வரும் சம்பளம் சரியாக மாறி இருக்கிறது. என் அம்மா ஒன்று சொல்லுவார்கள், வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது என்று. அதே போல, நம் சம்பளம் உயர உயர வாழ்க்கை தேவையும் உயருகிறது. தற்போது நாம் வாழ பழகி கொண்ட வாழ்க்கையை எடுத்து விட்டு 11 வருடத்திற்கு முன் இருந்த ஸ்டுடென்ட் வாழ்க்கை வாழு என்று சொன்னால் கஷ்டமாக இருக்கும்.

ஆனால், எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது என்னவென்றால், அமெரிக்காவுக்கு வந்த இந்தியர்கள், இந்தியா செல்லும் போது காசு விசயத்தில் கொஞ்சம் கட்டு பெட்டியாக எண்ணி எண்ணி செலவழிப்பது போலவும், இந்தியாவில் இருப்பவர்கள் கொஞ்சம் தாராளமாக செலவழிப்பது போலவும் தோன்றுகிறது. இது எனக்கு மட்டும் தோன்றும் ஒன்றா என்று தெரியவில்லை. நிறைய நகரத்தில் இருக்கும்  இளைய தலைமுறை முதல் மிடில் கிளாஸ் மக்கள் கூட தற்போது அதிகம் செலவழிக்கிறார்கள். வாழ்க்கை சந்தோசமாக அனுபவிக்க வேண்டும் என்று நினைகிறார்கள். ஆனால், இன்னும் சிறு நகரங்கள் போல இருக்கும் மதுரை, திருச்சி போன்ற மக்கள் நிறைய சேமிக்க வேண்டும் என்று நினைகிறார்கள் என்று நினைக்கிறன்.

மறுபடியும் தொடங்கிய பிரச்சனைக்கு வருகிறேன். வாழ்வதற்கு எவ்வளவு பணம் தேவை? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

நன்றி.