Sunday, November 11, 2018

சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

 ஒருவரிடம் ஒரு 6-15 நிமிஷம் எதுவும் செய்யாம ஒரு ரூமுக்குள்ள சும்மா இருக்க முடியுமா? எதுவும் செய்ய கூடாது. நோ போன் பாக்குறது, நோ புக் படிக்கிறது, நோ டிவி, நோ கேம்ஸ், தூங்க கூடாது. உக்கார்ந்த இடத்தை விட்டு நகர கூடாது,  நீங்களும் உங்கள் எண்ணங்கள் மட்டுமே. இப்படி ஒரு ஆய்வு 11 வெவ்வேறு இடங்களில்நடத்தப்பட்டது. என்ன முடிவு வந்திருக்கும்? சயின்ஸ்ஆய்விதழில் கட்டுரை ஒன்று பார்க்க நேர்ந்தது.

 இந்த ஆய்வு நேரத்துக்கு பிறகு வெளியே வரும் ஆட்களிடம் உங்களின் அனுபவம் எப்படி இருந்தது?  என்று கேட்ட கேள்விக்கு, "ஒரே கொடுமையாக இருந்தது" என்றே பலரின் அனுபவம்.
சரி உங்களுக்கு சும்மா இருக்க பிடிக்கவில்லை, உங்களுக்கு ஒரு தூண்டல் தருகிறோம், அது மைல்டு எலக்ட்ரிக் ஷாக்.  தற்போது, நீங்கள் சும்மா இருப்பதை தேர்ந்தெடுப்பீர்களா?, அல்லது எலக்ட்ரிக் ஷாக் கை தேர்ந்தெடுப்பீர்களா? என்று கேட்டால் 67% ஆண்கள், என்னால சும்மா இருக்க முடியாது? எலக்ட்ரிக் ஷாக் கொடுங்க? என்று கேட்டு இருக்கிறார்கள். ஆனால் 25% பெண்கள் அதனை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். 


ஏன் சும்மா இருப்பது அவ்வளவு கஷ்டம்? சும்மா இருக்கும் போது, தனக்கு உள்நோக்கி, தன்னுடைய குறைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனை சுழற்சியில் மாட்டி கொள்கிறார்கள். அதனால் எப்படியாவது அந்த சுய சிந்தனையில் இருந்து தப்பிக்க வேறேதாவது ஒரு வெளி தூண்டல் அவர்களுக்கு தேவையாக இருக்கிறது.


இதனுடன் தொடர்புடைய டெலிகிராப் செய்தி ஒன்று பார்க்க நேர்ந்தது. அது எப்படி தற்போதைய தலைமுறை (16-24 வயதுக்கு உட்பட்டவர்கள்) வாரத்தில் 34.3 மணி நேரம் நேரம் போக்குவதற்காக இன்டர்நெட்டில் செலவழிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. இது 10 வருடங்களுக்கு முன்பு இருந்தது விட 2 மடங்கு அதிகம். இந்தியாவும் இந்த விஷயத்தில் விதிவிலக்கல்ல, இந்தியர்கள் தினசரி 3 மணி நேரம் இன்டர்நெட்டில் செலவழிக்கிறார்கள் என்று எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

சும்மா இல்லாமல் இருக்க டைம் பாஸுக்காக எந்த எல்லைக்கும் போக இவர்கள் தயாராக இருக்கிறார்கள், அது நெகடிவ் விஷயம் ஆக கூட இருக்கலாம்.


இந்த கட்டுரை படித்த பிறகு எனக்கு வடிவேலுவின் "சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?" என்ற காமெடி நினைவுக்கு வந்தது.

References

1. Just think: The challenges of the disengaged mind


2. https://www.telegraph.co.uk/news/2018/08/01/decade-smartphones-now-spend-entire-day-every-week-online/

3. https://economictimes.indiatimes.com/magazines/panache/indians-spend-roughly-3-hours-a-day-on-smartphones-but-are-they-paying-big-bucks-for-apps/articleshow/62866875.cms

Sunday, November 4, 2018

பழைய ரூபாய் நோட்டும், பரியேறும் பெருமாளும், ஹிந்தியும்!!


சோசியல் மீடியா வந்தாலும் வந்தது, அதில் எந்த வித பில்டரும் இல்லாமல் வந்ததை எல்லாம் சொல்லும், அடித்து சத்தியம் செய்யும், மற்றவர்களை பேச விடாமல், தான் பேசுவது மட்டுமே சரி என்று விவாதிக்கும் சிலரும் இருக்க தானே செய்கிறார்கள். அப்படி ஒரு குரூப்பிடம் மாட்டி கொண்ட என்னுடைய அனுபவம் இங்கே.

அது 1930 களில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டு குறித்தது.( அது உண்மையான நோட்டா, இல்லையா என்று தெரியவில்லை). அதனை ஒரு தோழி ஷேர் செய்து, பாருங்கள் இதில் "இந்தி இல்லை", என்று அவள் குறிப்பிட்டு விட்டாள். உடனே இன்னொரு தோழி, வரிந்து கட்டி கொண்டு. அதெல்லாம் உண்மை இல்லை, நோட்டின் அடுத்த பக்கத்தை பார்க்கவும். இந்தி எல்லாவற்றிலும் இருக்கும். "இந்த நோட்டு போலி", என்று விவாதம் மேல் விவாதம். அதோடு நின்று கொள்ளாமல், "இந்தி கற்று கொள்ளாததால் நாம் இழந்தது நிறைய" என்றுஅவள் சொல்ல  "இந்தி ஆதரிப்பு  பிரச்சாரமாக" ஆகி விட்டு இருந்தது.

 அவளிடம் உரையாடிய பிறகு பல சந்தேகங்கள். "ஒரு சிலரிடம் தர்க்கம் செய்வது என்பது ஏன் முடியாமல் போகிறது?, எப்படி விடாமல் தான் சொல்வது சரி என்று வாதிக்கிறார்கள். அடுத்தவர்களை பேச விடாமல், அவர்கள் எந்த விடயம் பேச ஆரம்பித்தாலும் அதற்கென்று ஒரு எதிர் பாயிண்டு எப்படி தயாரித்து பேச முடிகிறது.?"
மேலும், இந்த பிரச்னை கட்டாயம் பல இடங்களில் பேச/விவாதிக்க பட்டு இருக்கும், என்பதால், இது சரியா தவறா என்ற விவாதிக்க நான் வரவில்லை. ஆனால், உண்மையில் ஹிந்தி கற்று கொள்ளாததால், நாம் நிறைய இழந்தோமா?

இங்கு வந்த பிறகு, ஆபிசில் நிறைய இந்தியர்கள் இருப்பின், எந்த மாநில மக்களாயினும் சரி, இந்தியில் பேசுவதை பார்த்து இருக்கிறேன். அதே நேரம், தமிழ் பேசும் மக்கள், எனக்கு ஹிந்தி தெரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று பேசுவதையும் பார்த்திருக்கிறேன். இந்தி படிக்காததால்  எந்த பிரச்னையும் அவர்கள் அனுபவித்ததாக தெரியவில்லை. ஒரு வேலை இந்தியாவில் இருப்பவர்கள் இந்தி படிக்காததால் பிரச்சனைகள் அனுபவிக்கிறார்களா?. எனக்கு தெரிந்து IT  வேளைகளில் இருக்கும் பலரும், பெங்களூரு, ஹைதெராபாத், சென்னை, புனே போன்றஊர்களில் வசிக்கும்போது   ஆங்கிலத்தில் பேசி சமாளிப்பதை பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் பாஷையிலும் பேசி சமாளிப்பதற்கு பார்த்திருக்கிறேன். அதனால், தெரியாமல் கேட்கிறேன்,  ஹிந்தி கட்டாயமாக படிக்காததால் நாம் இழந்தது நிறையவா?, இல்லை இது பிரச்சாரமா?


தற்போது, இதனை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல முகத்தில் அறைந்த படம் பார்த்த திருப்தி.  இப்போயெல்லாம் எங்கப்பா சாதி பாக்குறாங்க/ என்று சொல்லி திரியும் சிலரின் கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில், "பரியேறும் பெருமாள்", உண்மைக்கு மிக அருகில் எடுக்கப்பட்ட உண்மை விளக்கம்.

 நான் முதுநிலை படித்த கல்லூரியில் எப்போதும் விரிவுரையாளர்கள், பையன்கள் முதுகில் நன்கு தட்டி கொடுப்பார்கள். முன்பு எனக்கு அதன் அர்த்தம் புரியாது. ஆனால், பிறகு மற்றவர்கள் சொல்ல அறிந்து கொண்டது. அவர்கள், தட்டி கொடுப்பது போன்று எதனை தேடுகிறார்கள், என்பது, அதே போல, இளங்கலை படித்த போது, என்னுடன் படித்த சில பெண்கள், எப்படி ஒரு சில பெண்களிடம் நடந்து கொண்டார்கள்?, என்பதையும் அறிந்து இருந்தேன்.  அவர்களிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட மாட்டார்கள்அல்லது எதோ சொல்லி பாலிஷ் ஆக தவிர்ப்பார்கள்.

எனக்கென்னவோ, இந்த படம் பார்த்த பிறகு, சில எண்ணங்கள். அந்த "பரியனின்" இடத்தில் ஒரு பெண் இருந்திருப்பின் எவ்வாறு இருந்திருக்கும்?. ஒரு ஏழை பெண், கீழ் சாதியாய்இருப்பின்,  ஆங்கிலம் தெரியாமல், மற்றவர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளமுடியாமல், அந்த பெண்ணின் பொருளாதார மற்றும் சாதிய நிலையை குத்தி காட்டி காட்டியே, அவளை முழுதாக கொன்றிருப்பார்கள். ஏதேனும் மேல் சாதி பையனிடம் அந்த பெண் பழகியிருக்கிறார் என்றால், அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்திருக்க மாட்டார்கள். மாறாக, அவளின் மானத்தை எடுத்து அப்போதே பிணமாக்கி இருந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.  

இங்கே சாதி என்ற குறியீட்டை கூட எடுத்து விடுவோம். ஒரு ஏழை பெண், கிராமத்தில் வாழும், ஒரு பெண் படிக்கிறாள். படிக்க விரும்புகிறாள், என்று வைத்து கொள்ளுவோம்.  ஆங்கில அறிவு கொஞ்சம் மட்டுமே இருக்கும். மார்க்கும் நிறைய எடுக்கவில்லை அல்லது 10 ஆம் வகுப்பில் பெயில் என்றால் அவ்வளவு தான், படிப்பு வரல என்று கல்யாணம் செய்து வைத்து இருப்பார்கள்.  திரும்ப படிக்க வைப்பதோ அல்லது டுடோரியல் சேர்த்து படிக்கவைத்து பாஸ் செய்வதோ பெரிய விஷயமாகி இருக்கும். அப்படியே படிக்க வைத்த பெற்றோர் இருப்பினும். கல்லூரி வரை அந்த பெண் சென்றிருந்தால் பெரிய விஷயம். "பொம்பள புள்ளைய எதுக்கு படிக்க வச்சிட்டு, பேசாம கல்லாணம் பண்ணி வையுங்க", என்று பலரும் பரிந்துரைத்து இருப்பார்கள். திரும்ப படிக்க வைப்பது போன்ற சலுகை எல்லாமே பையனுங்களுக்கு தான்.

இந்த உண்மை நிலவரத்தில், ஹிந்தியும் கட்டாயமாக்க பட்டிருந்தால், என்ன ஆகியிருக்கும். தமிழை தவிர பிற மொழியான ஆங்கிலமே சொல்லி கொடுக்க யாரும் இல்லாமல் இருக்கும் நம்ம ஊரு பப்லிக் பள்ளிகளில் ஹிந்தி சொல்லி கொடுக்க யாருப்பா இருப்பாங்க. அதுலயும் பெயில் ஆகுங்க புள்ளைக. இதையே காரணம் காட்டி புள்ளைக படிப்பை நிப்பாட்டிட்டு வேலைக்கு அனுப்பி இருப்பாங்க இல்லாட்டி கல்யாணம்  பண்ணி கொடுத்து இருப்பாங்க கிராமத்தில இருக்கும் பெத்தவங்க. 

சரி, கிராம பிள்ளைகளை விட்டுடுவோம். பல நகரங்களில் தற்போது பிள்ளைகள் ஹிந்தி கற்று கொள்கிறார்கள். சொல்ல போனால், தமிழை கற்று கொள்வதே இல்லை. மார்க்குக்காக, ஹிந்தி, சமஸ்க்ருதம், பிரெஞ்சு. ஜெர்மன், ஆங்கிலம் போன்றவற்றை மற்றும் கற்றுக்கொள்கிறார்கள்.  அதுவும் மிக மிக தொடக்க நிலை மொழி அறிவு மட்டுமே இவர்கள் அறிந்துஇருக்கிறார்கள். இதனால் என்ன பயன்?. இவர்களால் கோர்வையாக ஹிந்தியில் பேச முடியுமா?, அல்லது பிரெஞ்சு அல்லது ஜெர்மனில் தான் பேச முடியுமா?. ஒன்றும் இல்லை. 

அதே நேரம், எனக்கு தெரிந்தே, 5ஆவது வரை படித்த ஒரு அம்மா, மும்பையில் வசிக்க நேர்ந்த 6 மாதத்தில் அழகான ஹிந்தி கற்று கொண்டு விட்டார். மொழியை பாடமும் பாட திட்டமும் கற்றுக்கொடுக்காத மொழியை சுற்றுசூழலும், தேவையும் கற்றுகொடுத்து விட்டது.  எவ்வளவோ வடஇந்திய குடும்பங்கள், மதுரையில் கோயிலை சுற்றி கடைகள் வைத்து ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். அழகாக தமிழ் பேசுகிறார்கள். இவர்கள் எந்த ஊரில் தமிழ் எழுத படிக்க கற்று கொண்டனர்?. எல்லாம் சூழல் கற்று கொடுத்தது.

சரி, மறுபடியும், தொடங்கிய கேள்விக்கு வருவோம். 

ஹிந்தி கட்டாயமாக படிக்காததால் நாம் இழந்தது நிறையவா?, இல்லையா?

வாசிப்புக்கு நன்றி.Saturday, October 27, 2018

எது அழகானது? எது மனதுக்கு மகிழ்ச்சி தரும்? ஒரு அறிவியல் பார்வை!

எங்கே வெளியே சுற்றுலா சென்றாலும் இயற்கை காட்சிகள் கண்டு புகைப்படம் எடுப்பது என்பது  புகைப்பட கருவிகள் வந்த காலத்தில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. அதே இடங்களை முன்பே பலர் பல பல விதங்களில் புகைப்படம் எடுத்திருப்பார்கள். நிறைய பத்திரிக்கைகள், இணைய தளங்களில் கோடிக்கணக்கில் பார்த்திருப்போம். இருப்பினும் அந்த இயற்க்கை காட்சியை  பார்க்கும் போது நமக்குள் ஒரு சந்தோசம், அதனை நாமும் புகைப்படம் எடுப்போம். ஏன் இப்படி?, என்று பலமுறை நான் யோசித்ததுண்டு.

என்னுடைய சமீபத்திய உதாரணம், கொலோராடோ சென்றிருந்தது, அங்கு க்ளென்வூட் என்னும் ஒரு ஊரில் ஹைக்கிங் சென்றது. 2.8 மைல் ஹைக்கிங் என்றாலும் ரொம்ப கஷ்டப்பட்டு ஏறி அங்கு சென்றதும், மெய் மறந்து ரசித்தது ஹாங்கிங் லேக் எனப்படும் தொங்கும் ஏரி.மேலும் தொங்கும் ஏரி பற்றி தெரிந்து கொள்ள. https://www.tripadvisor.com/Attraction_Review-g33446-d146055-Reviews-Hanging_Lake-Glenwood_Springs_Colorado.html

இயற்கை காட்சிகள் அழகானவை என்று எப்படி நாம்/நம் மனம் தீர்மானிக்கிறது? அதே போல, அழகான ஓவியங்கள், கலை பொருட்கள் இவை எல்லாம் பார்க்கும் போது மனது மகிழ்கிறது? ஏன்?. அழகென்பது என்ன? , என்று பலமுறை யோசித்தது உண்டு. அதற்க்கான விடையாக ஒரு TED டாக் பார்க்க நேர்ந்தது. டெனிஸ் டட்டன் என்ற அறிவியலார் அவர்களின் ""A Darwinian theory of beauty" தமிழில்  "அழகிற்கான டார்வின் கோட்பாடு" என்பதாகும்.
டெனிஸ் அவர்களின் உரையின் படி, "எதனை நம் மூளை அழகென்று தீர்மானிக்கிறது?, என்பது, நம் மூதாதையர்களான கற்கால மனிதர்களிடம் இருந்து வந்தது. கற்கால மனிதர்கள் எதனை, எந்த நிலப்பரப்பை பாதுகாப்பானது என்று நினைத்தார்களோ, அதுவே நிம்மதியானது, அழகானது என்று மூளையில் பதியப்பட்டு இருக்கிறது. உதாரணமாக, பரந்து விரிந்த நிலப்பரப்பு, அங்கு ஒரு நதி/குளம்/ஏரி போன்ற நிலப்பரப்பு, அங்கங்கு சில, ஆடு,மாடு, முயல் போன்ற மேயும் மிருகங்கள். நிறைய மரங்கள். இவை போன்ற ஒரு காட்சி, கற்கால மனிதனை பொறுத்தவரை, ஒரு பாதுகாப்பான இடம். ஏனென்னில், அவனுக்கு, உணவு, குடிக்க தண்ணீர், எந்த கொடிய மிருகங்களும் இல்லாத சூழல், என்பது ஒரு பாதுகாப்பை தந்து இருக்கிறது. அதுவே மனித மூளையில், அழகென்பது பதிவாகி இருக்கிறது.

அந்த பரிணாம தோற்றம் பதியப்பட்ட காரணத்தாலே, தற்கால மனித மனதிலும் பரந்து விரிந்த நிலப்பரப்பை நீர்.நிலம், மரங்கள், விலங்குகள் நிறைந்த இடப்பரப்பு அழகாக தெரிகிறது.


"சரி, நிலப்பரப்பை  விடுங்கள், ஓவியங்கள், கலைப்பொருட்கள் எல்லாம் அழகாக தெரிவதன் பின்னணி என்ன?". அதற்க்கு டெனிஸ் அவர்கள், நம்மை அதே கற்கால மனிதர்கள் காலத்துக்கு முன்னெடுத்து செல்கிறார். மயில் றெக்கை உதாரணமும் நமக்கு தருகிறார். மயில்கள் எதற்கு றெக்கை வைத்து இருக்கின்றன. அதனால் அவைகளுக்கு எந்த பிரயோஜனம் இல்லை. ஆனால், அவைகள், தன் துணையை வசீகரிக்க தம் இறக்கையை உபயோகிக்கின்றன. அதே போல, கற்கால சுவர் ஓவியங்கள், கற்களால் செய்த சிறு சிறு கலை பொருட்கள் அனைத்தும் இணையை வசீகரிக்க என்று மனிதர்களுக்கு உதவி இருக்கின்றன.  அதே எண்ணங்கள்  படிமங்கள் ஆக மூளையில் படித்ததன் விளைவு மனித மூளைக்கு கலைப்பொருட்கள், ஓவியங்கள், இசை என்று பல பல விஷயங்களை பார்க்கும் போதும் கேட்கும் போதும் மனதுக்கு சந்தோசம் தருகிறது.  அந்த நேரங்களில் மூளையில் சந்தோச தரும் ஹார்மோன் ஆன டோபோமின் சுரப்பு அதிகம் இருக்கிறது. இது அழகானது, என்று பல விஷயங்களை மனதுக்கு மகிழ்ச்சியும் தருகிறது.


ரொம்ப நாளைக்கு பிறகு என்னுடைய போனில் ரிப்பீட் மோடில் நான் கேட்டு கொண்டிருக்கும் பாடல்கள், "96" பட பாடல்கள். என்ன ஒரு மெஸ்மெரைசிங். அதுவும் "வசந்த காலங்கள்" பாட்டுநான் எப்பொழுதும் முணுமுணுக்கும் ஒன்றாகி விட்டது.  வெல்டன் இசையமைப்பாளர் "கோவிந்த் வசந்தா"
மனதுக்கு நிம்மதி தரும், சந்தோசம் தரும் எல்லாம் அழகு தான்!, அது புகைப்படம், பாடல், கலைப்பொருள், இயற்க்கை காட்சி, ஒரு குழந்தையின் சிரிப்பு. என்று எதுவானாலும் இருக்கலாம்.


நன்றி.


Sunday, September 9, 2018

சோசியல் மீடியா புகைப்படங்கள், மனஅழுத்தம் மற்றும் பொருளாதார நிலை!

மனநிலை மனோ தத்துவம் இவற்றில் எல்லாம் நான் ரொம்ப கவனம் செலுத்தியதில்லை. ஆனால்,தற்போது நாடாகும் பல  விஷயங்களை படிக்கும் போதும் உற்று நோக்கும் போதும், அவை எவ்வளவு முக்கியமானவை வாழ்வியலுக்கு என்று தெரிகிறது.

மனிதன் ஒரு சமூகம் சார்ந்த குரங்கு. சோசியல் அனிமல். ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது, என்பது மிக முக்கியம். நமக்கு அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது மிக முக்கியம். நான், எனக்காக வாழ்கிறேன், என்று சொல்லி திரிபவர்கள் கூட, எதோ "ஒரு விஷயத்தை" ரிகக்னிஷன்ஐ மற்றவர்களிடம் இருந்து எதிர் பார்க்கிறார்கள்.  இது ஒரு வகை அட்டென்சன் சீக்கிங் அதாவது "கவனத்தை கோருதல்". என்னை பார், எப்படி இருக்கிறேன் பார். என்று காட்டுதல். இது, உடல் அழகில் ஆகட்டும், பணத்தில் ஆகட்டும், பட்டு பீதாம்பரம், விளம்பரம்...என்று பல பல வழிகளில் கையாள படுகிறது.


இதெல்லாம் தற்போதைய கலாச்சாரம், முன்பெல்லாம் இப்படி ஏதும் இல்லை என்று சொல்லுபவர்களுக்கு, முன்பும், இவை போன்ற அட்டென்ஷன் சீக்கிங் இருந்திருக்கிறது..ஆனால் வேறு மாதிரி. உதாரணமாக, என்னுடைய பாட்டி காலத்திய கதையாக, மாதம் ஒரு புடவை எடுப்பது, உடனே அதனை கோவில், விசேஷங்கள், கல்யாணம் என்று கட்டி கொண்டு போவது..இவை எல்லாம் சாதாரணம். எனக்கு தெரிந்தே, எங்கள் பக்கத்து வீட்டு பணக்கார அம்மா,  எப்பொழுது நகை வாங்கினாலும், கொண்டு வந்து எல்லோரிடமும் காட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். இது ஒரு வகையான "அட்டென்சன் சீக்கிங்". பார் நான் உங்களை விட எவ்வளவு நகை வைத்திருக்கிறேன் பார் என்று காட்டுவதற்காக.

தற்போது சோசியல் மீடியா வந்த பிறகு, இப்படியான கவனம் கோருதல் அதிகமாகி இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். விளையாட்டாக சோசியல் மீடியாவுக்குள் வரும் பலரும், தொடக்கத்தில் எந்த புகை படங்களும் பகிராமல் இருந்தாலும், காலம் செல்ல செல்ல அடுத்தவர்கள், நண்பர்கள் பகிரும் போது அதனால் ஈர்க்கப்பட்டு மெதுவாக பகிர ஆரம்பிக்கிறார்கள். ஆனால்,  மெதுவாக, மெதுவாக, புகைப்படம் பகிர என்றே மேக்கப் செய்துகொள்வது, புது உடை உடுத்துவது, என்ன கன்டென்ட் கொடுக்கலாம், என்று  அதே வேலையாக திரிவது என்று தன்னை அடிமையாக்கி கொள்கிறார்கள்.

ஆனால், இப்படி விளையாட்டாக ஆரம்பிக்கும் பழக்கம், நாட்கள் செல்ல செல்ல, சந்தோசத்தை தருவதை விட, டிப்ரெஷன்/மன அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கிறது என்று நான்  வாசித்த சில ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவிக்கின்றன. 

சோசியல் மீடியாவில் படங்களை பகிரும் பலரும், தம்முடைய புது உடை, கார், நகை, என்று பகிர்வது மட்டும் அல்லாமல், என்னுடைய கணவர். காதலர் வாங்கி கொடுத்தது என்று பகிர்வது தற்போது சகஜம். சொல்ல போனால், வீட்டில் நடக்குமா தெரியாது ஆனால் சோசியல் மீடியாவில் காதல் செய்யும், அன்பை பகிரும் கணவன், மனைவி அதிகம். இது ஒரு வித அட்டென்ஷன் சீக்கிங். "பாரு!! நான் உன்னை விட பெரிய பரிசு காதலர் தினத்துக்கு/கல்யாண நாளுக்கு  வாங்கியிருக்கேன், என் கணவர் தான் பெஸ்ட்" என்று பெருமை சாற்றிக்கொள்ளும் பலரும், அடுத்தவர்களுக்கு ஒருவித டிப்ரெஷன் ஏற்படுத்துகிறார்கள், என்பதே உண்மை.  பொது வெளியில், இப்படி பகிரப்படும் அனைத்தும் உண்மை என்று நம்பி, "நம்ம வீட்டுகாரர்க்கு நம்ம மேல பாசம், அன்பு இல்லை" என்று மனஅழுத்தத்துக்கு உண்டாகும் நிலை பல பெண்களுக்கு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட பெண்களின் மனநிலையை சாதகமாக்கி கொள்ளும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் குறிக்கோள், இப்படிப்பட்ட பெண்களிடம், பேசி பேசி, அன்பை காட்டுவது போல நடிப்பது அல்லது அந்த பெண்ணை அவள் அழகை, அவள் செயலை புகழ்வது. அதுவும் பப்லிக் ஆக சோசியல் மீடியாவில் புகழும் போது அதனை தனக்கு கிடைத்த ரெகக்னிஷன்/அங்கீகாரமாக பெண்கள் நினைத்து கொள்வது மட்டும் அல்லாமல், தன்னுடைய மன அழுத்தத்துக்கான தீர்வாக நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இது, அவர்களின், ப்ளஷர் ஹார்மோன் ஆன, செரோட்டின், டோபோமின் போன்றவற்றை தூண்டி, ஒரு கனவுலகில் அவர்கள் வாழ தூண்டுகிறது. 

இதுவே, "குன்றத்தூர் அபிராமி போன்றவர்களை" கனவுலக வாழ்க்கை வாழ தூண்டி இருக்க வேண்டும். சோசியல் மீடியா அடிக்சன், அதனால் நிகழ்ந்த மனஅழுத்தம், அந்த நேரம் தன் அழகை பற்றி கிடைத்த "ரெகக்னிஷன்" , அதனை தடுக்க முனைந்த பெற்றோர், குடும்பம் மற்றும் கணவர், குழந்தைகள் அனைவரும், எதிரி போல கருதப்பட்டு இருக்கிறார்கள். இது போதை மருந்து/மதுவுக்கு அடிமையானவர்களை திருத்த போதை மருந்து தராமல், அல்லது மது தராமல் தடுக்கும் போது அவர்கள் செய்யும் எதிர்வினைக்கு சமமானது. போதையை அடைய எந்த தவறும் செய்ய தயாராக இருப்பார்கள், போதைக்கு அடிமையானவர்கள். அதே நிலையை "அபிராமி" அடைந்து இருக்கிறார்.

இப்படி ப்ளஷர் ஹார்மோன் வசப்பட்டவர்கள், எப்போதும் ஒரு வித பதட்டம், தூண்டல் கொண்டிருப்பார்கள். சோசியல் மீடியாவில் ஏதாவது கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்று எந்த லெவல்க்கும் செல்ல தயாராக இருப்பார்கள். சமீபத்தில் நான் வாசித்த ஒரு ஆராய்ச்சி கட்டுரை
"அதிகம் பிகினி உடைகளை சோசியல் மீடியாவில் பகிரும் பெண்கள், அப்படி பகிர்வதன் மூலம், தான்  பொருளாதார அளவில் மற்ற பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று பறை சாட்டவே செய்கிறார்கள்" என்று தெரிவிக்கிறது.

சோசியல் மீடியாவில் அதிகம் படங்களை பகிரும் பெண்கள் வசிக்கும் இடங்களில் அதிக பியூட்டி பார்லர்கள், ஹேர் சலூன்கள், மேக் அப் ஐட்டம் விற்கும் கடைகள், பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் கிளினிக் க்குகள் இருப்பதாத தெரிவிக்கிறது. அது மட்டும் அல்ல அந்த இடங்களில் எல்லாம் குடும்ப பொருளாதார வித்தியாசம் அதிகம் இருப்பதாக காட்டுகிறது.  அதாவது, பொருளாதார நிலையில் அதிக வித்தியாசம் இருக்கும் நிலையில், பெண்கள், தன்னுடைய நிலையை போலியாக உயர்த்தி காட்ட/ மற்றவர்களின் கவனத்தை கோர, இப்படி "ஆடைகுறைப்பு/பிகினி உடை/உடல் அழகை அதிகம் காட்டும் உடை " போன்றவற்றை உடுத்துகிறார்கள் என்று தெரிவிக்கிறது.


எப்படி, சோசியல் மீடியா, பொருளாதாரத்தை பாதிக்கிறது, மனித மனநிலைகளை நெகடிவ் ஆக பாதிக்கிறது, அடுத்தவர் நல்லா இருக்கிறார், நாம நல்லா இல்லை, என்பதனை போன்ற போலி பிம்பத்தை உண்டாக்கி மக்களை குற்றங்கள்  புரிய தூண்டுகிறது என்பதனை படிக்கும் பலரும்  , "ஏன் இந்த கருமத்தை மக்கள் உபயோகிக்கிறார்கள் பேசாம தூக்கி போட்டுட்டு இருக்கலாமே!, " என்று அறிவுரை கூறுவதை பார்க்கலாம். இது காலத்தின் கட்டாயம். மனிதன் ஒரு சோசியல் அனிமல். ஏதாவது ஒரு வகையில் அவனுக்கு ஒரு அவுட்லெட் வேணும்.  உபயோகிக்காமல் இருக்க முடியாது. ஆனால், அதற்க்கு அடிக்சன் ஆகாமல் இருப்பது எப்படி, எப்பொழுது நிறுத்துவது என்று அறிந்து தானே மேனேஜ் செய்தாலே போதும். ஒரு செல்ப் கண்ட்ரோல் வேணும். அப்படி சோசியல் மீடியா அடிக்ட் ஆனவர்களையும், குடும்ப கவுரவம், அடுத்தவங்க என்ன நினைப்பாங்க என்று திரும்ப அதே நிலையில் அழுத்தாமல், மீட்பு நடவடிக்கை, கவுன்சிலிங்  என்று கொடுக்கலாம். இப்படி புரிந்து கொண்டு அனுசரித்து நடப்பதே அவர்களை வெளியே கொண்டு வரும். பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்பது என் எண்ணம்.நன்றி.References
https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/da.22466
https://www.ama.org/publications/MarketingNews/Pages/feeding-the-addiction.aspx
http://www.pnas.org/content/early/2018/08/13/1812331115?etoc=&utm_source=TrendMD&utm_medium=cpc&utm_campaign=Proc_Natl_Acad_Sci_U_S_A_TrendMD_0
Wednesday, July 25, 2018

சான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் !!


சான்பிரான்சிஸ்கோ poop  மேப்

சமீபத்திய நியூயார்க் பயணத்தில் நான் கண்டது நியூயார்க் தெருவுக்கு தெரு வீடில்லாமல் தெருவில் வசிக்கும் நிறைய மக்கள். ஒரு மூட்டை மட்டுமே வைத்து கொண்டு தெரு ஓரங்களில் நிறைய பேரை காண நேர்ந்தது. செக்ஸ் கொடுமைகள், பாலின மாறுபாடுகள், LGBT எனப்படும் மூன்றாம் பாலின புரிதல் மட்டும் அறிதல் காரணமாக வீட்டை விட்டு துரத்த படும் மக்கள், வேலையிழப்பு மற்றும் இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் எல்லாவற்றையும் இழந்த மக்கள் என்று பல காரணங்களுக்காக தெருவில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட  மக்கள்.

picture from google images

இப்படி தெருவில் வசிக்கும் மக்களுக்காக என்று ஹோம் லெஸ் ஷெல்ல்ட்டர் எனப்படும் தற்காலிக தங்குமிடங்கள் தரப்பட்டாலும், நிரந்தர தீர்வு என்று எதுவும்செய்து கொடுக்காத நிலையிலேயே இப்படி பலரும் தெருவில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.. அதுவும் பெரிய பெரிய மெட்ரோ நகரங்களான நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ போன்றவற்றில் இது வேறு வகையான பிரச்சனைகளை கொடுக்கிறது. அது இப்படி வீடில்லாத மக்கள் தம் கழிவுகளை தெருக்களில் வெளியேற்றுவதால்  பல தெருக்களில் நாம் நடக்க முடியாத அளவு மூத்திர மற்றும் மல நாற்றம்.   

இந்த பிரச்சனையை முன்னிறுத்தியே 2014  ஜென்னிபர் வோங் என்னும் வெப் டெவலப்பர், ஹியூமன் வேஸ்ட் லேண்ட் என்னும் ஒரு ப்ராஜெக்ட் உருவாக்கினார். அதில் பே ஏரியா எனப்படும் சிலிக்கான் வேலே இல் எங்கெல்லாம் மனித கழிவுகளை ரோட்டில் காணலாம் என்று மேப்பில் குறித்திருப்பார்.


http://mochimachine.org/wasteland/இது சான் பிரான்சிஸ்கோ என்று இல்லை இன்னும் பல பல மெட்ரோ நகரங்களின் நிலை. ஏன் அட்லாண்டாவில் கூட மிட்டவுன் அருகில் இருக்கும் பல பகுதிகள் இப்படி தான் இருக்கும்.


ஹாரி பாட்டர்

முகுந்தின் சம்மர் ஹாலிடேஸ்ல் 4 ஆவது கிரேடுக்கு முன் படிக்க வேண்டிய புத்தக லிஸ்ட் என்று ஒரு லிஸ்ட்  அவன் பள்ளியில் கொடுத்திருந்தார்கள். எப்போதும் டிவி, கேம்ஸ் என்று கழிக்காமல் எப்படியாவது ரீடிங் ஹாபீட்டை அதிகப்படுத்துவது என்று முடிவு செய்து ஹாரி பாட்டர் புத்தகத்தை படி என்று நூலகத்தில் இருந்து எடுத்து கொடுத்தேன். அவனுக்கு இண்டெர்ஸ்ட் வர என்று முதல் புத்தகத்தை அவனுடன் சேர்ந்து நானும் படிக்க ஆரம்பித்தேன். அதுவே  வர வர ஒரு போட்டியாக போய் விட்டது. யார் முதலில் ஒரு சாப்டர் ஐ படிப்பது என்று. அப்படி படித்தவர்கள் அடுத்தவர்களுக்கு கதை சொல்ல கூடாது என்று அக்ரீமெண்ட் வைத்து கொண்டோம். முதல் புத்தகம் கிட்டத்தட்ட முடிய போகிறது.இரண்டு சாப்டர்கள் தவிர மற்றவை சரி இன்டெரெஸ்ட்டிங். இந்த புத்தகத்தை முழுதும் முடித்த பிறகு அந்த படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன். என்னுடன் போட்டி போட்டு கொண்டே முகுந்த் இரண்டாவது புத்தகம் படித்து முடித்து விட்டான். அவனிடம், கதை ஸ்பாயில் பண்ண கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருக்கிறேன்.

ஏற்கனவே நன்றாக படம் வரையும் முகுந்த் தற்போது காமிக் புக் ஒன்று எழுதி படம் வரைய ஆரம்பித்து இருக்கிறான். "Journey Through Time" என்று பெயர் கூட வைத்து இருக்கிறான். வைகிங், ரோமன், விஸார்ட் மற்றும்  விட்ச்ஸ் என்று அனைத்தும் அதில் வரைந்து இருக்கிறான். பார்க்கலாம் எப்படி வருகிறது என்று. வாசிப்பிற்கு நன்றி.Sunday, July 8, 2018

கலவை: ரசித்தது, படித்தது, நொந்தது

ரசித்தது: 

அம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு  டெம்பிளேட் லிஸ்ட் இருக்கிறது.

 ஈஸ்ட் கோஸ்ட் இல் என்றால்

1. நயாகரா, 2. வாஷிங்க்டன் டிசி வெள்ளை மாளிகை, கேப்பிடல் ஹில், சில ம்யூசியங்கள் 3. நியூ யார்க், டைம் ஸ்கொயர், சுதந்திர தேவி சிலை, எம்பையர் ஸ்டேட் பில்ட்டிங், மேடம் துஸ்ஸாட் மெழுகு ம்யூஸியம் 4. புளோரிடா பீச், டிஸ்னி லேண்ட், யூனிவேர்சல், 5. மியாமி பீச். 

வெஸ்ட் கோஸ்ட் என்றால் 1. லாஸ் வேகஸ், 2. கிராண்ட் கேன்யன், 2. சான்பிரான்சிஸ்கோ 4. லாஸ் ஏஞ்செல்ஸ் 

இவை எல்லாம் கூட்டி போய் காட்டிவிட்டால், மொத்த அமெரிக்காவும் காட்டி விட்டது போல சொல்லி கொள்ளலாம். 

ஒவ்வொரு முறையும் அம்மா ஊரில் இருந்து வரும் போது கிட்டத்தட்ட எதாவது ஒன்றை டெம்ப்ளட் லிஸ்டில் இருந்து கவர் செய்து இருக்கிறேன். அப்படி, ஊரில் இருந்து வந்த அம்மாவை அழைத்து கொண்டு நியூயார்க் பயணம். முன்பு சிலமுறை நியூயார்க் சென்றிருக்கிறேன்,  என்றாலும், அம்மாவுடன் தனியாக சென்றது ஒரு த்ரில்லிங். நியூயார்க் செல்லப்போகிறேன் என்றதும், என்னுடன் வேலை பார்க்கும் சிலர், "பிராட்வே ஷோ ரொம்ப பாமேஸ்" அழைத்து கொண்டு போ, என்றனர்.   

முன்பின் ஓபரா சென்றதில்லை, என்றாலும், எந்த  எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சிக்கு  சென்று மெய்மறந்து ரசித்தது எவ்வாறு இருக்கும் என்பதை சமீபத்தில் உணர்ந்தேன். "பான்டோம் ஆப் ஓபரா" நியூயார்க் மெஜெஸ்டிக் பிராட்வே தியேட்டரில் 30 வருடங்களாக நடக்கும் ஷோ என்றார்கள். 30 வருசமா ஒரு ஸ்டேஜ் ஷோ நடக்குதா, என்று ஒரே ஆச்சரியம். விலை எல்லாம் கண்ணா பின்னா என்று இருந்தது, ஈவினிங் ஷோவுக்கு இடம் இல்லை. அதனால் மதியம் இரண்டு மணி ஷோவுக்கு புக் செய்து விட்டேன்.  2 மணி ஷோவுக்கு 30 நிமிடம் முன்னால் சென்றால் போதும் என்று சென்றால், ஒரு மைல் தூரத்துக்கு கியூ நின்றது. அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். 30 வருசமா நடக்குற ஷோவுக்கு இவ்வளவு கூட்டமா என்று.

உள்ளே சென்று ஒரு வழியா உக்கார்ந்து செட்டில் ஆனவுடன், 1800 களின் பிற்பகுதியில் இருக்கும் பிரான்ஸ் என்று ஒரு ஏலம் போன்ற ஒரு செட் ஆரம்பித்தார்கள். அதில் நடு நாயகமாக சாண்ட்லியர் ஒரு மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதனை ஒருவர் ஓபன் செய்ய அற்புதமான தீம் மியூசிக் உடன் அந்த சாண்ட்லியர் மேலே செல்ல அட போட வைத்தது...

வாயை பிளந்து நான் பார்த்த ஒரு ஷோ என்றால் அது "பாண்டம் ஆப் ஓபரா பிராட் வே ஷோ" அமேசிங் எஸ்பிரின்ஸ்.  ஆர்கெஸ்ட்ரா வாசிக்க, பாண்டம் ஆக நடித்தவர், மற்றும் கிறிஸ்டின் ஆக நடித்தவர், பாடியது, செட் அலங்காரங்கள் எல்லாம் அருமையிலும் அருமை. எதோ வேறு உலகுக்கு சென்றது போன்ற ஒரு உணர்வு.

மறுபடி எப்பொழுது நியூயார்க் சென்றாலும் மறுபடியும் இந்த ஷோ செல்லவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். ஒரு அவுட் ஆப் வேர்ல்ட் உணர்வு.

பான்டோம் ஆப் ஓபரா படமாகவும் வந்திருக்கிறது. அதில் வந்த தீம் சாங் இங்கேபடித்தது :

எப்பொழுதும் எதிர்பாராமல் நடக்கும் சில விசயங்கள் மறக்க முடியாததாகி விடும். ஏர்போர்ட்டில்  விமானம் தாமதமாக, பொழுது போக ஒரு புத்தக கடையை சுத்தி கொண்டிருந்த போது, இந்த புத்தகம் கண்ணில் பட்டது, மால்கம் கில்டவெல் எழுதிய "அவுட்லையர்ஸ்" என்ற புத்தகம். புள்ளியியலில்  படித்தவர்கள் அறிந்திருப்பார்கள். அவுட்லையர்ஸ் என்பது எப்பொழுதும் எஸ்ட்ரீம் கேஸ் என்று டேட்டா அனாலிசிஸ் செய்யும் போது, நிராகரிக்கப்படும். எந்த டேட்டா நீங்கள் எடுத்து ஆராய்ந்தாலும் அதில் சில அவுட் லையெர்ஸ் எப்போதும் இருக்கும். அதாவது, எதோ ஒரு வகையில் பொதுவான பண்பில் இருந்து வித்தியாசமாக மாறுபட்டு தனித்து இருக்கும் விஷயங்கள் அவுட் லையெர்ஸ் எனப்படும்."ஸ்டோரி ஆப் சக்ஸஸ்" என்று போட்டிருந்தது,  வித்தியாசமாக இருந்தது. உடனே வாங்கி விட்டேன். 

என்னை பொறுத்த வரை கற்பனை கதை என்பது மிக சுவாரசியமானது. அடுத்து என்ன என்ன என்று புத்தகத்தை புரட்ட வைத்து விடும். ஆனால் உண்மை விஷயங்களை குறிக்கும் புத்தகம், நான்பிக்சன்  புத்தகம் என்பது அடுத்தது என்ன என்று பக்கங்களை நகர்த்தியது என்றால் அது இந்த புத்தகம் மட்டுமே.

தொடக்க சாப்டர் "ரொசெட்டா மிஸ்டரி" , இத்தாலில் இருந்த ரொசெட்டா என்ற ஊரில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறிய ஒரு கிராமம் முழுக்க பென்சில்வானியா ஊரில் வந்து தங்கி, அங்கேயே ஒரு குடியிருப்பை நிறுவிய மக்களை பற்றிய அத்தியாயம் அது. 

1950 ஆம் ஆண்டு, இத்தாலியில் இருந்து பென்சில்வானியா  வந்து  கிட்டத்தட்ட 70-80 வருடங்கள் ஆன பிறகும் அந்த ஊரில் மட்டும் எந்த மக்களும் இதயநோயால் இறக்க வில்லை. யாருக்கும் இதயநோய் இல்லை, என்று ஆச்சரிய படுகிறார் ஸ்டீவர்ட் ஒலஃ என்னும் மருத்துவர். இதயநோய் மட்டும் அல்ல, அல்சர், மனஅழுத்தம் என்ற எந்த நோய்களும் இல்லை, என்ன காரணம்?, உணவு பழக்கமா, இல்லை உடற்பயிற்சி அதிகமா?, இல்லை சீதோஷண நிலை, இயற்கை நிலப்பரப்பா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார். ஆனால் எந்த வித துப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. உணவு பழக்கவழக்கம், சீதோஸ்ணம், உடல்பயிற்சி என்று எல்லா விதத்திலும் பென்சில்வானியா ரொசெட்டா கிராமம், மற்ற கிராமங்கள் போலவே இருக்கிறது. பின்பு எப்படி, இந்த ஊரில் மட்டும் ஒருவருக்கு கூட இதய நோய் இல்லை என்று குழம்புகிறார். இந்த ரொசெட்டா கிராமம், இதய நோயை பொறுத்தவரை ஒரு அவுட்லெயர்.

இதனை யோசித்து கொண்டு, அந்த கிராமம் வழியாக நடந்து சென்றபோது, ஒலஃ கவனித்தது ஒன்று. அந்த கிராம மக்கள், அனைவரும் அனைவரையும் அறிந்து இருக்கிறார்கள். எல்லாரும் எல்லோரிடமும் பேசுகிறார்கள். நடந்து செல்லும் போது கூட ஒவ்வொரு கடையிலும் நின்று எல்லோரிடமும் பேசுகிறார்கள். அதனை தவிர, ஒவ்வொருவரும் கூட்டு குடும்பமாக வாழ்கிறார்கள். 
குடும்பத்திற்குள் பிரச்னை என்றால் ஒருவரை ஒருவர் பேசி தீர்த்து கொள்கிறார்கள். அனைவரும் வார இறுதியில் சர்ச் செல்கிறார்கள். அங்கு ஒவ்வொரு குரூப் ஆக கலந்து பேசி, தமக்குள்ள இருக்கும் சண்டையை, மனக்கசப்பை தீர்த்து கொள்கிறார்கள்.  அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள். என்று கண்டறிகிறார். மருத்துவ உலகில் மிஸ்டரி ஆக இருந்த "ரொசெட்டா" ஒரு அவுட்லையேர் அல்ல, ஒரு சக்ஸஸ் ஸ்டோரி.

நொந்தது:

மேலே குறிப்பிட்ட இந்த புத்தகம் படித்த சில வாரங்களுக்கு முன்பு தான் என்னுடைய தோழி ஒருவரின் சமீபத்திய இந்திய பயணம் குறித்து அறிய நேர்ந்தது. ஒரு திருமணத்திற்கு என்று சென்ற அவர், தற்போது சொந்தங்கள் எப்படி இருக்கிறார்கள் என்று ஒரு கிலிம்ஸ் கொடுத்தார்.

முன்பெல்லாம், திருமணம் சடங்கு என்றால், அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து வேலையை எடுத்து செய்து, அனைவரையும் உபசரித்து ஆளுக்கொரு வேலையாக செய்த காலம் போய், தற்போது திருமணம், நல்ல காரியம், ஏன், உடல் நிலை சரியில்லை என்றால் கூட, நெருங்கிய சொந்தம், அக்கா, அண்ணா, தங்கை,தம்பி, தவிர வேறு யாரும் எந்த உதவியும் செய்வதில்லை.  அதுவும் ஒரு குழந்தை, இரண்டு குழந்தை என்று இருக்கும் குடும்பத்தில், யாரும் இல்லை. சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை குழந்தைகள் என்று எந்த சொந்தமும், கூட மாட வேலை கூட செய்யவேண்டாம், ஏனோ தானோ என்று வருகிறார்கள், சென்று விடுகிறார்கள். அப்படி வரும் பலரும், நம்மிடம், எதோ எதிர்பார்க்கிறார்கள், செய்யவில்லை எனில், நாம் எதிரி நம்பர் 1 ஆகி விடுகிறோம். 

இதனை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், என்னுடன் வேலை பார்க்கும் ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர், தன்னுடைய பேமிலி கெட்டோகெத்தேர் இருக்கிறது அதனால் நான் லீவில் செல்கிறேன் என்று சொல்லி கொண்டிருந்தார். என்னது, கெட் டுகெதர் கு லீவா?, என்ன செய்வீர்கள் என்று கேட்டுக்கொண்டிருதேன். அவர் சொன்னது. அவருடைய, சொந்தங்கள் அனைவரும், அதாவது, ஒரு பேமிலி பெயர் கொண்டிருக்கும் அனைவரும், வருடாவருடம் ஒவ்வொருவர் வீட்டில் ஒன்று கூடுவார்கள். அதற்காக, எல்லா மாநிலங்களிலும் இருந்து கெட்டோகெத்தேர் வீட்டுக்கு வந்து விடுவார்கள். பின்னர், அவர்கள் வீட்டில் சாப்பாடு, சர்ச்சுக்கு செல்வது என்று சென்று விட்டு, இரண்டு நாள் கழித்து சென்று விடுவார்கள். அப்படி கெட் டுகெதர்க்கு ஆகும் செலவு, எல்லாரும் பிரித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை, அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள நல்ல வழி இது.  கிட்டத்தட்ட, 50- 100 பேர் வருவார்கள் என்று சொல்லி கொண்டிருந்தார்.

எனக்குள், ஒரே ஆச்சரியம், சந்தோசம்,வருத்தம் எல்லாம் கலந்த ஒரு உணர்ச்சி அவர் சொன்னதை கேட்ட பிறகு. இந்தியாவில் சொந்தங்கள்  எல்லாம் பொய்யாகி விட்டனவா?, என்று எனக்குள் கேள்வி? அதனால் தான், நமக்கு, இருதய நோய், அல்சர், மனஅழுத்தம் என்ற அனைத்தும் அதிகம் இருக்கிறதா?நமக்கு  என்று இல்லாமல் தனக்கு   என்று வாழ ஆரம்பித்ததுக்கு நாம் கொடுத்த பரிசா இது? தெரியவில்லை.வாசிப்புக்கு நன்றி.

Friday, May 18, 2018

அன்னையர் தினமும், நடிகையர் திலகமும் , தலைமை பொறுப்பும் !!

பொது நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கலந்து கொள்வதில்லை. நேரமின்மை முதல் காரணம். பின்னர், பல நேரங்களில் நிகழ்ச்சி ஆரம்பிக்கவே மிக தாமதமாகும், அப்புறம், அவசர அவசரமாக முடிப்பார்கள், முழுதும் பார்க்க முடியாது.இப்படி பல காரணங்கள். ஆனால்கடந்த வாரம் , "அன்னையர் தினம்" எங்காவது போகலாம் என்று முடிவு செய்து, தமிழ் சங்கம் சார்பில் பெண்கள் தினம் கொண்டாடுறாங்க வேணா போகலாம் என்று தோழி பரிந்துரைத்தாள். சரி என்று GATS தமிழ் சங்க  பெண்கள் தின விழாவுக்கு சென்றாகி விட்டது.

$10 இல், லஞ்ச், ஸ்னாக்ஸ் மற்றும்  சமையல் போட்டி, recycling போட்டி, பேஷன் ஷோ என்றெல்லாம் அறிவிப்பு பார்த்தேன். அதோடு, முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களின் சிறப்புரை என்றும் அறிவித்திருந்தனர்.

என்னப்பா, வேற ஏதாவது சிந்திக்க மாட்டிங்களா?, மறுபடியும் சமையல், பேஷன் ஷோ ஏன், அரைச்ச மாவைவே மறுபடியும் அரைக்கிறாங்க? என்று எண்ண தோன்றியது.  நான் முனைவர். பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சை முன்பு கேட்டதில்லை. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கேட்கலாம், ரொம்ப போர் அடிச்சா ஏதாவது மூவிபோகலாம் என்று பிளான் செய்தோம்.

பர்வீன் சுல்தானா அவர்கள் பேச்சு ஆரம்பிக்கும் போதே, " என்னப்பா, மறுபடியும் அரைச்ச மாவா? ரீசைக்ளிங், குக்கிங் தானே வீட்டிலேயும் செய்யிறீங்க, புத்தக ரெவியூ, புத்தக, கவிதை வெளியீடு போன்றவற்றை செய்யலாமே?  "அடுத்த விழாவில் ஏதாவது புத்தக வெளியீடு எதிர்பார்க்கிறேன்" என்றார்.  பரவாயில்லையே, நல்ல ஸ்டார்டிங் என்று தோன்றியது. எதிர்பார்ப்பின்றி வாழ்வது, அழகென்பது ஆரோக்கியமாக இருப்பது, போன்ற விஷயங்கள், நன்றாக இருந்தது.  அவர்கள் சொன்ன சில கதைகளும், நன்றாகவே இருந்தது. ஆனால் அவர்களின் பேச்சை தவிர, மற்றவை அசுரசியமாக இருந்தது. 

ஒரே ஒரு பெனிபிட் என்றால், 10$ இல், லஞ்ச், ஸ்னாக்ஸ், பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சு மற்றும் நீர் மோர் சூப்பர்.  மற்றபடி நோ கமெண்ட்ஸ்.

மூவிக்கு என்று நாங்கள் தேர்ந்தெடுத்தது, "நடிகையர் திலகம்". இந்த படம் குறித்த என்னுடைய சில அவதானிப்புகள். எனக்கு தெலுங்கு படங்கள் அதிகம் பிடிக்காது. ஆனாலும், "எவடே சுப்பிரமணியம்" எடுத்த "நாக் அஷ்வின்" மேல் ஒரு நம்பிக்கை உண்டு. அதனாலேயே, அவர் அடுத்த படத்தை நடிகை சாவித்ரி வாழ்க்கை என்றதும் பார்க்க ஆவலுடன் இருந்தேன். என்னை பொறுத்த வரை இந்த படம் நாக் அஸ்வினின் பெஸ்ட் என்று சொல்ல மாட்டேன். எவடே சுப்பிரமணியம் உடன் பொருத்தி பார்க்கும் போது, இது சுமார். கீர்த்தியின் நடிப்பு நன்றாக இருந்தது. எனக்கு பிடித்த ஒரு விடயம், உண்மையை எந்த சாயமும் பூசாமல் எடுத்தது. சாவித்திரியின் மிட் லைப் கிரைசிஸ் மற்றும் ஆணின் ஈகோ, நன்றாக காட்சி படுத்த பட்டு இருந்தது என்று சொல்வேன்.
சில நாட்களுக்கு முன் முகநூல் COO ஷெரில் (ஜிமிக்கி கம்மல் ஷெரில் அல்ல) அவர்களின் டெட் டாக் கேட்க நேர்ந்தது. "ஏன் மிக குறைந்தஅளவில் பெண்கள் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்?" என்பது குறித்த அவர்களின் உரை, அற்புதம்.
அவர்கள் சொல்ல வருவது இது தான். வேலை செய்யும் பெண்கள் பொதுவாக தனக்கு கிடைத்ததை வைத்து வாழ பழகி கொள்கிறார்கள். தனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகும் போதோ அல்லது மறுக்கப்படும் போதோ அதற்காக போராடுவதில்லை.
உதாரணமாக, கல்யாணம் ஆகி குழந்தை குடும்பம் என்று வந்தபிறகு, இருப்பது போதும், எதுக்கு வீனா கேள்வி கேட்டுட்டு என்று அமைதியாக இருந்து விடுவது. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கிடைத்தது வைத்து இருப்பது. என்று தனக்கென்று ஒரு வட்டத்தை வகுத்துக்கொண்டு, அதுக்கெல்லாம் நாம சரிப்பட்டு வரமாட்டோம் என்று முடிவு கட்டி வாழ பழகி கொள்வது.
இதுவே முதல் காரணம், பெண்கள் தலைமை பொறுப்பில் வரமுடியாமல் போவதற்கு என்கிறார்.

அவர் குறிப்பிட்ட இரண்டாவது காரணம், வீட்டில் இருக்கும் துணைவரை அனைத்து விடயங்களிலும் துணைவராக பயன்படுத்தி கொள்ளாதது. அல்லது பயன்படுத்த முடியாமல் போவது.
இது பொதுவாக நாம் பார்க்கும், கேட்கும், சந்திக்கும் ஒன்று. வேலைக்கு போகும் பெண்களுக்கு வீட்டில் கணவர் உதவாமல் போகும் பட்சத்தில் அந்த வேலை பெண்ணுக்கு ஒரு நரகம் மட்டுமே. வீட்டிலும் வேலை செய்து விட்டு, வெளியிலும் வேலை செய்து, பின் வீட்டுக்கு வந்து மறுபடியும், குழந்தை, சமையல் என்று ஒரு மெஷின் போல ஆகி விடும் ஒரு நிலை.

அதே நேரம்,  ஆணை விட அதிகம் சம்பாதிக்கும் நிலை பெண்ணுக்கு வந்துவிட்டால் , ஆணுக்கு  ஈகோ தொற்றிக்கொள்கிறது. நம்மை மதிப்பதில்லை, என்ற ஒரு வித மனநோய். இப்போது தலைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மனநோய் குறைந்து கொண்டு வந்தாலும், இன்னும் முழுதும் மறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


எனக்கென்னவோ நான் மேலே குறிப்பிட்ட மூன்று விடயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று தோன்றுகிறது. மகளிர் விழா என்றாலும் அதற்கென்று எந்த ரிஸ்க் கும் எடுக்காமல், மறுபடியும் அனைத்து விழாவும் போல, "சமையல், கலைப்பொருள் என்று" மகளிர்  நினைக்கும் பாங்கு ஒரு புறம்,    புகழ் பணம், அதுவும் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் ஒரு நிலையில் நடக்கும் ஈகோ மோதல்கள் நடந்து, அதனால் திசை திரும்பிய சாவித்திரியின் வாழ்க்கை. இந்த இரண்டுமே ஷெரில் அவர்கள்  குறிப்பிட்ட பெண்கள் தலைமை பொறுப்பில் இல்லாமல் போனதற்கான காரணங்கள் என்று தோன்றுகிறது.


நன்றி.

Sunday, May 6, 2018

புகழ், திமிர், கோபம்


எதற்க்காக திடீரென்ற, "புகழ், திமிர், கோவம்" பற்றிய  ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு சிலர், அந்த டிபார்ட்மெண்டில் எல்லோருமே "திமிர்" பிடித்தவர்கள். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். உங்களை அவமான படுத்துவார்கள் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். 


திமிர் என்றால் என்ன? அரகன்ஸ் என்றால் என்ன?

திமிரை காட்டுபவர்கள் மறைமுகமாக சொல்ல விரும்புவது, " நான் தான் அறிவாளி. எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும், நீங்கள் எல்லாருமே முட்டாள்கள். ஒன்றுக்கும் உதவாதவர்கள். நான்  எதுக்கு உங்களுக்கு உதவி என்னுடைய நேரத்தை செலவளிக்க வேண்டும்." என்னுடைய அறிவை மதித்து எனக்கு மதிப்பளித்தால் நான் உங்களுடன் பேசுகிறேன்". "எனக்கு மதிப்பளிக்கவில்லை என்றால் எனக்கு கோவம் வரும்". "நான் தான் பெஸ்ட்"

எல்லோரும் பிறக்கும் போதே திமிருடன் இருக்கிறார்களா? இது எப்படி ஆரம்பிக்கிறது?
ஜிகர்தண்டா படத்தில் ஒரு டயலாக் வரும். "நம்மள பாத்து அடுத்தவங்க பயந்து ஒதுங்கும் போது ஒரு கிக்கு வரும்!!, அத மட்டும் அனுபவிச்சுடம்னா, அவ்வளவு தான்!!, சூர போதை!!". "அடுத்தவங்க மத்தியில நாம தனித்து தெரியுறோம். நம்மள எல்லாரும் மதிக்கிறாங்க". அவங்க மதிக்கிறாங்களா அல்லது பயந்து விலகி போறாங்களோ தெரியாது, ஆனா, நாம்ம  மத்தவங்கள விட பெரியாள்!!".

இந்த போதை/புகழ் கொடுக்கும் ஒரு திமிர்.  அந்த புகழ்/போதை கிடைக்காத போது அல்லது புறங்கணிக்க படும் போது வரும் ஒரு கோவம்.


"Stardom /ஸ்டர்டாம்" அடைந்த பலர் கடக்கும் பொதுவான பாதைகள்..


 • எதோ ஒரு திறமை இருக்கும்
 • அந்த திறமையை வெளியே கொண்டுவர வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் 
 • அந்த திறமையை உலகுக்கு காட்ட, எல்லா வகையிலும் பொறுமையாக தொடர்ந்து முயல்வார்கள்
 • ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கும்.
 • அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி வெற்றியை எட்டி பிடிப்பார்கள்.
 • உலகம் அவர்களை கொண்டாடும்
 • வெற்றியை சுவைக்கும் போது கிடைக்கும் சூர போதை. 
 • தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற "திமிர்" வருவது  
 • அந்தபுகழ் போதையை தக்கவைத்து கொள்ள எல்லாம் செய்வது 
 • புகழ் காணாமல் போவது, மக்கள் நம்மை மதிப்பதில்லை என்று அறிவது 
 • அப்போது வரும் கோவம், இயலாமை, அதற்காக மற்ற போதை வஸ்துக்களை தேடி சென்று தன் அழிவை தானே தேடி கொள்வது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என்று எந்த ஆர்ட்டிஸ்ட் எடுத்து கொள்ளுங்கள், பலரின் கேரியர் க்ராப் இப்படி தான் இருக்கும். இதுல பெண்கள் என்றால், வேறு மாதிரியான நிலைக்கு தள்ள படுவதும் உண்டு. 


இது நடிகை நடிகர்கள், ஆர்ட்டிஸ்ட் அல்லது showbiz இல் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பொருந்துமா?

இல்லை, இது எந்த துறைக்கும் பொருந்தும். எவ்வளவோ வாழ்ந்து கெட்ட குடும்பங்கள். அவர்களின் வாழ்க்கை பயணம் கிட்டத்தட்ட நான் மேலே குறிப்பது போலவே இருக்கும். அந்த திறமை என்பது தொழில் திறமை ஆக இருக்கலாம். குடும்ப பெருமையாக இருக்கலாம்.  ஆனால், அந்த பெருமை எல்லாம் தன்னால் உண்டாக்கப்பட்டது என்ற ஒரு "போதை" மண்டையில் ஏறி ஒரு "திமிர்" மனிதன் மனதில் வந்துவிட்டது என்றால் அதுவே அவன் முடிவுக்கு முதல் படி.

பெரிய குடும்பங்கள், வாழ்ந்து கெட்ட குடும்பங்கள்  இதெல்லாம் விட்டு விடுங்கள், சாதாரண நிலையில் இருக்கும் மிடில் கிளாஸ் குடும்பங்கள் எடுத்து கொள்ளுங்கள்,அதில் இருக்கும் ஒவ்வொருவருக்கும், மனதில்  எதோ ஒரு மூலையில், "புகழ்" அடைய வேண்டும் என்ற நோக்கம் இருக்கும். அது உலக புகழ், நாட்டு புகழ், ஊர் புகழ்,...என்றெல்லாம் கூட இல்லை, நண்பர்கள் வட்டத்திற்குள், தன் குடும்ப வட்டத்திற்குள், தன்னை புகழ வேண்டும், என்ற இச்சைக்காக காசை இறைக்கும், பலரும் இருக்கிறார்கள். இவர்கள் விரும்புவது எல்லாம்.. "நீ தான் பெஸ்ட்","உன்னை போல யாரும் இல்லை", என்ற வார்த்தைகள். அதற்காக என்னவேண்டும் என்றாலும் செய்வார்கள்.

"சபையிலே, எனக்கு உரிய மரியாதை கொடுக்கல, மதிக்கல", என்ற ஒரு சப்பை காரணத்துக்காக, சண்டை போட்டு பிரிந்த குடும்பங்கள் எத்தனை எத்தனையோ? தனக்கு என்று இருக்கும் புகழை, எல்லாரும் மதிக்க வேண்டும் என்ற "திமிர்", இப்படிபட்ட மக்கள் மனதில் ஆழ பதிந்து, அதனை அடுத்தவர் தராத பட்சத்தில் "கோவம்" தலைக்கேறி சண்டை போடுவது,இல்லை வன்முறையில் இறங்குவது.


நிற்க, தற்போது தொடங்கிய பிரச்சனையான," எப்படி திமிர் பிடித்தவர்களுடன் வேலை பார்ப்பது" என்ற கேள்விக்கு வருவோம்.

 "இந்த திமிர் என்பது ஒரு வித பாதுகாப்பின்மையின் வெளிப்பாடு". இவர்களிடம் "நீங்க தான் பெஸ்ட்" , என்று சொல்லி பாருங்கள். உடனே உங்களுக்கு சொல்லி கொடுப்பார்கள். நீங்கள் "நான் முட்டாள்" என்ற தொப்பியை அணிந்து கொண்டு அவர்களிடம் வேலை செய்ய வேண்டும்.  அடுத்தவர்கள் முன் இவர்கள் தான் பெஸ்ட் என்று காட்டி கொள்ளஎன்ன வேண்டும்  என்றாலும் செய்வார்கள். அதனால், இவர்களை, "நீ தான் பெஸ்ட்" என்ற "புகழ்" பிஸ்கெட் போட்டு அவர்களின்  "திமிரை" வழிக்கு கொண்டு வந்து வேலை செய்ய வேண்டும். 

இந்த டெக்கனிக் எல்லா இடத்திலும் உதவும், குடும்பத்தில், பிரெண்ட்ஸ் மத்தியில் என்று எல்லா இடத்திலும் உதவும். அதுவும் மாமியார் மருமகள் விஷயத்தில் ரொம்பவே உதவும். 

கடைசியாக நான் வாசித்த ஒரு quote இங்கே 
photos from Google imagesநன்றி 

Sunday, April 29, 2018

அறையில் இருக்கும் யானைகள்!!

ஆங்கிலத்தில் "An elephant in the room" என்ற பதத்தை அதிகம் உபயோகிப்பதை கேட்டதுண்டு. இந்த metaphor அல்லது உதாரணம், நாம் எல்லோருக்கும் தெரியும் ஒரு பிரச்னை இருக்கிறது என்று, ஆனாலும் அந்த பிரச்னை இருப்பதை குறித்து பேசவோ, எழுதவோ, விவாதிக்கவோ நாம் விரும்பாத போது, அந்த பிரச்னையை "அறையில் இருக்கும் யானை" என்று குறிப்பிடலாம்.

நாம் அனைவருக்கும் தெரியும், அந்த யானை அறையில் இருக்கிறது என்று, ஆனாலும் நாமெல்லாம் அதனை பார்ப்பதில்லை அல்லது பார்த்தும் பார்க்காமல் இருக்க நினைக்கிறோம். நான் இப்போது சொல்ல வருகிற விஷயமும் அது போல சில  "அறையில் இருக்கும் யானை" தான்.

1. அறையில் இருக்கும் முதல் யானை 

என் கல்லூரி தோழிகள் குழுமத்தில் அடிக்கடி நான் கேட்கும் ஒன்று. இந்தியா மட்டும் தான் உலகில் இருக்கும் "மத சார்பற்ற ஒன்று", "வேற்றுமையில் ஒற்றுமை",  நம் அண்டைய நாடுகளை பாருங்கள், அவர்களை விட நாம் தான் மற்ற எல்லா விதத்திலும் உயர்ந்து இருக்கிறோம், நம்மை யாரும் பிரிக்க முடியாது.. இத்தியாதி இத்தியாதி..அதுவும், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் இந்த சத்தம் பெரிதாக ஓங்கி ஒலிக்கும்.

இதுதான், என்னுடைய  முதல் "அறையில் இருக்கும் யானை" . நாம் எல்லோருக்கும் தெரியும், நமக்குள் ஒற்றுமை இல்லை என்று. இந்தியாவில் மட்டும் அல்ல, இந்தியாவை விட்டு வெளியே வந்தாலும், நமக்குள் ஒற்றுமை இல்லை என்று.  ஏன், ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் ஒற்றுமை கிடையாது. இந்திய சாதி பிரிவுகள் இங்கேயும் இருக்கின்றன. இவை ஏன், தமிழ் நாட்டில் வசித்து, அங்கிருந்து சாதியை இங்கே கொண்டு வந்து, தன் சாதியை சேர்ந்த மக்களாக மட்டும் அழைத்து தீபாவளி பொங்கல் என்று விழா கொண்டாடும் மக்களும் இங்கே இருக்கிறார்கள். எனக்கு தெரிந்தே, அப்படி "ஒரு பொங்கல் விழா" நடந்தேறியது. அந்த விழாவில் வேறு எந்த சாதிக்கும் அனுமதி இல்லை.


photo from google image

தற்போது இளைஞர்களை கூட தன்னுடைய ஜாதியை (அது உயர்ந்த சாதியாக இருக்கும் பட்சத்தில்) அதனை தன்னுடைய பெயருக்கு பின்னர் பெருமையாக இட்டு கொள்கிறார்கள். அதில் ஒரு பெருமை.

இந்த அறையில் இருக்கும் யானையில், என்னுடைய ஒரே நம்பிக்கை/எதிர்பார்ப்பு, நமக்கு அடுத்த தலைமுறை, இதனை தொடர கூடாது என்பதே. ஆனாலும், நம்முடைய "கலாச்சாரத்தை ஊட்டுகிறேன்" பேர்வழி என்று, கலாச்சாரத்தோடு, "சாதியையும்", சேர்த்து ஊட்டுபவர்களே  இங்கு அதிகம். இங்கே இந்த நிலை என்றால் இந்தியாவில் கேட்கவே வேண்டாம்.

2. அறையில் இருக்கும் இரண்டாம் யானை 

இந்த யானையும் முதல் யானையோடு சம்மந்த பட்டது தான் என்றாலும், இது கொஞ்சம் வேறானதும் ஆகும்.  முதல் யானை சாதி மதத்தை  பற்றியது என்றால், இரண்டாவது யானை சாதி மாறி, மதம் மாறி நடக்கும் திருமணங்களை குறித்தது.

என்னுடைய கல்லூரி தோழிகள் குழுமத்தில் எல்லா மத நம்பிக்கை கொண்டவர்களும் இருக்கிறார்கள், இப்படி "இந்தியா தான் சிறந்தது, வேற்றுமையில் ஒற்றுமை, நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம், இந்த அரசியல்வாதிகள் தான் மக்களை பிரிக்கிறார்கள்" என்ற வாக்கியங்களை கேட்க்கும் போது எல்லாம் நான் கேட்க்கும் ஒரு கேள்வி இது தான். சரி, நீங்கள் சொல்வது, "நன்று," "உங்கள் பெண் அல்லது பையன், மற்ற சாதி/மதம் சேர்ந்த பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உங்களிடம் வந்து கேட்கிறார் என்றால், நீங்கள் சம்மதிப்பீர்களா?" திருமணம் முடித்து வைப்பீர்களா?" இப்படி நான் கேட்டவுடன் "ஜகா" வாங்குபவர்களே அதிகம்.

உங்களால் ஒரு சொல்லுக்கு கூட, "ஆமாம் நான் சம்மதிப்பேன்" என்று சொல்ல முடியவில்லையே, பின்னர் எதற்கு இந்த வீண் பேச்சு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூச்சல்.

3. அறையில் இருக்கும் மூன்றாவது யானை 

இது ஒரு விதத்தில் நான்   முன்பு சொன்ன விஷயத்துக்கும் தொடர்புடையது. "இந்திய கலாச்சாரம்தான் சிறந்தது", என்று நடக்கும் கூச்சல்.  

40 வயதை கடந்தாலே, நம் மக்களுக்கு ஒரு வித மனப்பான்மை வந்து விடுகிறது என்று கொள்ளலாம். "நமக்கு" என்ற சுயம் இல்லாமல் "போய்" அனைத்த்தும் குடும்பத்துக்கு என்று வாழ்வது என்றாகி விட்ட போது, "தான் யார் " என்று தேடும் "ஐடென்டிட்டி கிரைசிஸ்" வந்து விடுகிறது.  இது உண்மை, எல்லோருக்கும் நடக்கும், ஆண் பெண் வித்தியாசம் இன்றி, இதையே "மிட் லைப் கிரைசிஸ்" என்று அழைப்பார்கள்.  இது "அறையில் இருக்கும் மூன்றாவது யானை", பலரும் எதோ ஒரு வகையில் இந்த நிலையை கடந்து வந்திருப்பார்கள்.

இந்த சூழலில், இன்னொரு காதல் என்று திரும்பும்சிலரும்  இருக்கிறார்கள்.  எந்த பத்திரிக்கை எடுத்தாலும் இதனை போன்ற செய்திகள்இல்லாமல்  இருக்காது. பத்திரிக்கை வாசிப்பவரை பொறுத்தவரை, அது ஒரு கிளுகிளுப்பு செய்தி.  முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த செய்திகள் போய், தற்போது எங்கும் எதிலும் இப்படி நிறைய கேட்க முடிகிறது.


ஆனால், ஜோக் என்னவென்றால், இப்படி பரவலாக நடக்கும் விஷயங்களை மக்கள் "அறையில் இருக்கும் யானையாக" பாவித்து, "நமது கலாச்சாரமே சிறந்தது" நாம் தான் சிறந்தவர்கள் என்று கலாசார காவலர்களாக இருப்பது.

4. அறையில் இருக்கும் கடைசி யானை 


சில வாரங்களுக்கு முன்பு, என்னுடைய முதுநிலை கல்லூரி  குழுமத்தில் இருந்து வந்த ஒரு செய்தி. வயசான பெற்றோர், தன்னுடைய தனிமை குறித்து, தன்னுடைய பிள்ளைகள் குறித்து திட்டி எழுதிய ஒரு மடல், என்று வைத்து கொள்ளலாம். அதனை குறித்த ஒரு விவாதம் எங்கள் குழுமத்தில் நடக்க, அதில்  நான் பாட்டுக்கு சும்மா இல்லாமல், வயதான காலத்தில், எதுக்கு பிள்ளைகளை நம்பி இருக்கணும், காசு இருக்குல்ல, பேசாம, எங்கையாவது டூர் போகலாம், அவங்க பிரெண்ட்ஸ் கூட விளையாடலாம், பேசலாம், படிக்கலாம்".  என்று கூற, பயங்கர விவாதம். "நீ அந்த இடத்தில இருந்து  பார்த்தால் தான் தெரியும், எப்படி கஷ்டம் தெரியுமா? என்று. உங்களை போல வெளிநாட்டுல போய் செட்டில் ஆனவங்கனால தான் பெற்றோர் கஷ்டப்படுறாங்க" என்று என் மேலே திரும்பிய கணைகள்.

அந்த சூழலில் அறையில் இருக்கும் யானை, "எதோ வெளிநாட்டிலோ இருப்பவர்களாலே தான் பெற்றோர் இப்படி கஷ்டப்படுகிறார்கள்  உள்நாட்டில் நாங்கள் எங்கள் பெற்றோரை கண்ணில் வைத்து பார்த்து கொள்ளுகிறோம்" என்று திருப்பும் மக்கள். அதுவும் இவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்களை தாக்க என்று வெயிட் செய்து கொண்டிருப்பார்கள்.

அதில் என்னுடைய தோழி ஒருவர் சொன்ன சில விஷயங்கள், எங்கள் தரப்பு விவாதம் என்று வைத்து கொள்ள உதவியது.  அவர் சொன்னது இது தான், என்னுடைய பெற்றோரை எங்களுடன் வந்து இருங்கள் என்று அழைத்தாலும் வந்து இருப்பதில்லை, எப்படி "பெண்" வீட்டில் இருப்பது, என்ற ஈகோ வந்து விடுகிறது. அதனால் தனிமையில் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் எங்களுடன் வந்து தங்க மாட்டார்கள். இன்னும் பெண் வீடு, பையன் வீடு என்று வித்தியாசம் பார்க்கும் பெற்றோர் இருக்கிறார்கள்.

இருப்பதை நினைத்து, வைத்து கொண்டு, சந்தோசமாக வாழ்ந்து குறை காலத்தை கழிப்பதே சுகம். என்னுடைய பக்கத்து வீட்டு பாட்டி தாத்தா, 75 வயதை கடந்தவர்கள். பிள்ளைகள் அருகில் இல்லை, ஆனாலும் அவ்வளவு ஆக்ட்டிவ். இன்னும் டென்னிஸ் விளையாடுவது, பாட்டி தோட்டவேலை செய்வது, சர்ச்சில் வலண்டீர் பணி செய்வது என்று சந்தோசமாக இருக்கிறார்கள்.

என் அம்மா மருத்துவ செலவு இவ்வளவு ஆகுது.. என்று புலம்பும் போதெல்லாம் நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். "செலவு செய்து மருத்துவம் பார்க்கும் அளவு காசு இருக்குல்ல" அதனை நினச்சு சந்தோசமா இருங்க... என்று சொல்வேன். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு."டிஸ்கி

இங்கே குறிப்பிட்டுள்ளதை எல்லாம் என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே. யாரையும் எவரையும், எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை. புரிதலுக்கு நன்றி

Saturday, April 21, 2018

கனவு, கவர்ச்சிகன்னிகளும் , Femme Fatale ம்.

Femme Fatale, என்றால் என்ன என்று கூகிளில் தேடவும்: An attractive and seductive woman, especially one who will ultimately bring disaster to a man who become involved with her.

நீங்கள் தமிழில் இதற்க்கு அர்த்தம் தேடினால், விவகாரமான பெண்,  கவர்ச்சியான பெண் என்பது போன்ற அர்த்தங்கள் வருகிறது. ஆனால் இவை இரண்டும் பொருந்தாது என்பது என் எண்ணம். இப்படி பட்ட பெண்கள், கவர்ச்சியாகவும் இருப்பார்கள், கனவு கன்னிகளாகவும் இருப்பார்கள், ஆனால் பயங்கரமான உள்நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

தமிழ் சினிமாவில், முதன் முதலில் கனவு கன்னியாக பார்க்கப்பட்ட பேசப்பட்டவர் T.R. ராஜகுமாரி என்று சொல்வார்கள். அவரின் "மன்மத லீலையை வென்றார் உண்டோ" பாடலில் "பறக்கும்  முத்தம்" அந்த காலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பார்கள்.  ஒரு seductress அவர். பார்வையில் ஒரு மயக்கம் கிறக்கம் இருக்கும். அந்த கால இளைஞர்களை அவரின் bold மூவ்ஸ் பாடாய் படுத்தியது என்று சொல்லலாம்.  அந்த நாட்களில் பின்னர் எத்தனையோ பேர் வந்தாலும், T.R.ராஜகுமாரி அளவு கவரவில்லை எனலாம். 1940-50 களில் கோடி கட்டி பறந்தவர்.

பின்னர் 60-70 களில் , நிறைய கிளப் டான்சர்ஸ் ரோல்களில் நிறைய பேர் அறை குறை ஆடையுடன் ஆடுவது போல நிறைய பாடல்கள் வந்தாலும், மனதில் நிற்பது போல Femme Fatale ரோல்கள் செய்தவர்கள் என்றால் ஜெயமாலினி, ஹிந்தி நடிகை ஹெலன், அனுராதா என்ற ஒரு சிலர். ஆனாலும், இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டவர், சில்க். தன்னுடைய கண்ணசைவில், கவர்ச்சியில் 80 களின் இளைஞர், முதல் முதியவர் வரை ஆட்டி படைத்தவர். என்ன படம் என்று நினைவில்லை, ஆனால் ஒரு படத்தில் பாடலின் ஒவ்வொரு பத்தியில் தன்னுடைய ஒவ்வொரு உடையின் லேயர் அவிழ்ப்பார். ரொம்ப பேமஸ் பாடல் அது.

முன்பெல்லாம் இது போன்ற Femme Fatale ரோல் செய்வதற்கு என்று சிலர் இருந்தனர். ஆனால் இப்போது பல ஹீரோயின்களே அந்த ரோல்கள் செய்து விடுகிறார்கள். ஆடை அவிழ்ப்பு மற்றும் அரைகுறை ஆடை, நீச்சல் உடை போன்றவை உடை அணிந்தால் Femme Fatale அல்ல,  

 என்னை பொறுத்தவரை, Femme Fatale ரோல் செய்வதென்றால் உங்கள் மேல் நெகடிவ் இமேஜ் இருக்க வேண்டும். பெண்களுக்கு உங்களை பிடிக்க கூடாது, ஆனால் ஆண்கள் கனவு காண வேண்டும்.  நல்ல அறிவாளியாக இருக்க வேண்டும், எதிராளியை எப்படி கவிழ்க்க முடியும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அனைத்தையும், அனைவரையும், உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்த வளைக்க தெரிந்திருக்க வேண்டும். வெரி வெரி  போல்ட். ஜேம்ஸ் பாண்டு படங்களில் எல்லாம் ஒரு Femme Fatale ரோல் கட்டாயம் இருக்கும், இவர்கள் எல்லாருமே டபிள் ஏஜென்ட் ஆக இருப்பார்கள். 

சரி, என்ன திடீரென்று, Femme Fatale பற்றிய ஆராய்ச்சி. உண்மையில் இது Paulo Cohelho வின் "தி ஸ்பை"  படித்த பிறகு ஏற்பட்ட ஆராய்ச்சி.


photos from google images

இந்த நாவலின் கதாபாத்திரம், "மாதா ஹரி"/ "Mata Hari" என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் அல்ல. உண்மையில் 20 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் வாழ்ந்த ஒரு Femme Fatale. மிக மிக கவர்ச்சியான, அறிவான, யாரையும் மயக்கக்கூடிய, ஒரு பெண். உண்மையான டபிள் ஏஜென்ட். முதல் உலகப்போரில் டபிள் ஏஜென்ட் ஆக செயல்பட்டவர் என்று பிரெஞ்சு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டவர்.

ஆனால், யார் இந்த மாதா ஹரி. என்று Paulo, அவர் இறக்கும் முன்பு தன்னுடைய வக்கீலுக்கு எழுதிய கடிதங்களை வைத்து விவரிக்கிறார். 

சந்தேகப்படும், அடிக்கும்  கணவனுடன் சில ஆண்டுகள் வாழ்ந்து, அடிபட்டு சுதந்திரமாய் இருக்க என்று  வீட்டை விட்டு ஓடி வந்த பெண் அவர். சிறு வயதில் கற்ற நடனம் உடன் இருக்க. எப்படியாவது பெரியாளாக வேண்டும் என்று  கையில் ஒருபைசா இல்லாமல் பாரிஸ் நகரம் வந்திறங்கிய "மார்க்ரெட் ஸில்லே".  எப்படி பெரியாளாவது என்று யோசனையில், தன்னுடைய பெயரை "மாதா ஹரி" என்று மாற்றி வைத்து கொண்டு, தான் கீழை நாடுகளில் வாழ்ந்தவர், அங்கிருக்கும் நடனம் பயின்றவர் என்று பரப்பினார். "கீழை நாடுகளில் மக்கள் நடனம் எப்படி இருக்கும் என்று தெரியாததால், என்னதான் இந்த பெண் காட்டுகிறார் என்று பார்க்க வந்த கூட்டத்தை, தன்னுடைய வித்தியாசமான அலங்காரம், எஸோட்டிக்மூவ்மெண்ட் என்று தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை, சரியாக பயன்படுத்திய மாதா ஹரி, அதனுடன் நிற்கவில்லை. தன்னுடைய ஷோ ஸ்டாப்பர், மூவ்மெண்ட், ஒவ்வொரு அசைவிலும் தன்னுடைய ஒவ்வொரு லேயர் துணியை உருவி விடுவது, முடிவில் முக்கால் வாசி ஆடை உருவி ஷோவை முடிப்பது என்று, முடித்து, 1904-5 களில், பாரிஸ் நகரை அலற வைத்தவர்.photos from google images

 பின்னால் நடராஜர் சிலை இருக்க, அலங்காரங்களும், தோரனைகளும் வேறு மாதிரி இருக்க, இவரின் நடனம், அந்த கால பத்திரிகைகள், பெரியமனிதர்கள், "யார் இவர்", இப்படி ஒரு டான்சர் பார்த்ததில்லை என்று அனைத்து பத்திரிக்கைகளும் எழுதின. 

ஆனால், "கவர்ச்சி"  சிறு ஆயுட்காலம் கொண்டது. சில ஆண்டுகளில் வெறுத்து. அதே பத்திரிக்கைகள், இவரை, வேறு மாதிரி விவரிக்க தொடங்க ஆரம்பிக்கும் போது , தன்னை ஒவ்வொரு முறையும் புதுப்பிக்க மறக்க வில்லை மாதா ஹரி. ஒவ்வொரு முறையும், வேறு வேறு கிழக்காசியா நாடுகளின் நடனத்தை புகுத்தி, புதுமை கொண்டுவர மறக்கவில்லை. ஒரு சூழலில், "இவரை யாரும் மதிக்கவில்லை, ஆனால் மறக்கவும் இல்லை". 

படிப்படியாக, பெரிய மனிதர்கள் பலருக்கு இவரின் "சகாயம்" தேவைப்பட. இவரும், அந்த சூழலை நாசுக்காக பயன்படுத்தி, தன்னுடைய அடுத்த நிலைக்கு வந்திருக்கிறார். முதல் உலகப்போர் மூண்ட நேரம், பிரான்சும், ஜெர்மனியும், எப்படி போரை கையாள்வது, அடுத்தவர்களை பற்றிய துப்புகளை எப்படி அறிவது என்று ஒற்றர்களை பல திசைகளிலும் அனுப்ப எத்தனித்து கொண்டிருக்க. பல பெரிய மனிதர்களின், சர்கிளில், சுதந்திரமாக வாழ்ந்து வந்திருந்த "மாதா ஹரி"  தயவை "ஜெர்மனி" அடைய ஒற்றர் H21 நியமித்தது. வயதாகிவிட்டது, இன்னும் டான்ஸ் ஆட முடியாது, என்று, இவரே சென்று, "பிரெஞ்சு" போர் அமைச்சரவையில், "இங்கே பாருங்கள், ஜெர்மனி என்னை அவர்களின் தூதரக நியமித்து இருக்கிறது, எனக்கு "ஜெர்மனி" பெரிய மனிதர்களும் பழக்கம். வேண்டும் என்றால், பிரெஞ்சு க்காக நான் ஒற்றரிகிறேன், எனக்கு பணம் கொடுங்கள்" என்று இரண்டு பக்கமும், "டபிள் ஏஜென்ட்" ஆக செயல்பட்டு, ஆனால், ஒரு பக்கமும், பயனுள்ள எந்த தகவலையும் தெரிவிக்காமல் இரண்டு நாட்டிற்கும் "பெப்பே"  காட்டியவர். இரண்டு பக்கமும் எந்த தகவலும் சொல்லாமல் இவர் நழுவி கொண்டிருக்க, இவரை பிரெஞ்சு ஒற்றராக நியமித்த பிரெஞ்சு அதிகாரி, எப்படி ஒரு பெண் தன்னை ஏமாற்றி இருக்கிறார் என்று வெறுப்பாகி, அவரை கர்ணம் வைத்து மாட்டி விட்டிருக்கிறார்"

கடைசியில் பிரெஞ்சு  தூதராகத்தால், சிறை பிடிக்கப்பட்டு சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். உண்மையில்  யாராலும், அவர் செய்த எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் ஒரு பலியாடாக இவர் தலை உருண்டிருக்கிறது.

வழக்கமான, Paulo Coelho, புத்தகம் இது இல்லை என்றாலும், அங்கங்கே, சில தத்துவங்களை போலோ,  தூவ தவறவில்லை. போலோ வின் கூற்றுப்படி, "ஆணாதிக்க சமுதாயத்தில், தனக்கு விரும்பிய வகையில் சுதந்திரமாக   வாழ எத்தனித்த ஒரு பெண்ணின் முடிவு" என்று முடிக்கிறார்.
எது எப்படியோ, என்னை பொறுத்தவரை, "மாதா ஹரி", உண்மையான  Femme Fatale.


நன்றி.

Thursday, March 29, 2018

எது சரி? எது தப்பு?: உளவியல் மற்றும் அறிவியல் பார்வை

ஒரு நிகழ்வு நடக்கிறது, நீங்களும் அந்த தருணத்தில் அங்கு இருக்கிறீர்கள், அந்த நிகழ்வை காணும் நாம் எப்படி அந்த நிகழ்வை குறித்து ஓர் முடிவுக்குவருகிறீர்கள் . அது சரியான முடிவா? இல்லை தவறான முடிவா?

ஒரு உதாரணம் எடுத்து கொள்ளுவோம். ஆபிசில் ஒரு மீட்டிங் நடக்கிறது. ஒரு முக்கியமான பிரச்னை குறித்து மேனேஜர் தெரிவிக்கிறார். அதன் தீர்வு என்ன என்று விவாதிக்கவே இந்த மீட்டிங். தற்போது உங்களுக்கும் அந்த மேனேஜர் க்கும் டெர்ம்ஸ் சரி இல்லை என்று வைத்து கொள்ளுவோம். அவர், என்ன சொல்ல வந்தாலும் அல்லது சொன்னாலும் அது தப்பாகவே தோன்றும்.  அதே நேரம், அந்த மேனேஜர்க்கு  உங்களுடன் நல்ல டெர்ம்ஸ் இருக்கிறது என்றால், அவர் சொல்வது எல்லாமே கரெக்ட் ஆக தோன்றும்.

ஏன் இப்படி நடக்கிறது. எது சரி? எது தப்பு?. முதலில் உளவியல் பார்வை.

மனோதத்துவத்தில் "Ladder of Inference" என்ற ஒரு தியரி உண்டு. அதாவது, தமிழாக்கத்தில் "ஊகிக்கும் படிநிலை". இந்த தியரி படி, ஒவ்வொரு விஷயம் நடக்கும் போதும் அந்த விஷயம் குறித்து நாம் ஒரு ஊகம் செய்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.

Image from google images

1. இந்த படிநிலையில் முதல் படி," நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்", எந்த பில்டரும் இல்லாமல் நம்மை சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளும் இங்கே முதல் படி. என்னுடைய முந்தைய உதாரணத்தில், ஆபிசில் நடக்கும் மீட்டிங், அது நடக்கிறது. அங்கு கூடியிருக்கும் மக்கள், அவர்கள் முக பாவனைகள், அவர்கள் அமர்ந்திருக்கும் முறை. இப்படி பலவும் முதல் நிலை. "அதாவது , நம்மால் பார்க்க/கவனிக்க முடிந்த/முடியாத எல்லா  செய்திகள்/நிகழ்வுகள் கலவை"

2. இரண்டாவது படி, " நாம் பார்த்த செய்திகளில்/ நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்யும் நிகழ்வுகள்".  என்னுடைய உதாரணப்படி, அந்த மேனேஜர் என்னுடன் நல்ல டெர்ம்ஸ் இல் இருந்தார் எனில், அவருடைய செய்கைகள், அவரை ஆமோதிக்கும் அனைவரின் செய்கைகள் மட்டுமே என் மூளை செலக்ட் செய்யும். இல்லை, எனக்கு அந்த மேனேஜர் உடன் மோசமான முன் விரோதம் இருப்பின் என்றால், அவருக்கு எதிராக நடக்கும் எல்லா விஷயங்கள் மட்டுமே கண்ணில் சிக்கும், அல்லது மூளை செலக்ட் செய்யும். இந்த நேரத்தில், அந்த மேனேஜர் சொல்லும் சொல்லுக்கு எதிர் பேசும் ஒருவர் சொல்லுவது எல்லாமே கரெக்ட் ஆக தெரியும்.

3. மூன்றாவது படி, "நம்முடைய கற்பனை கலத்தல்", நடந்த நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்த நிகழ்வுகளில், நம்முடைய கற்பனை கலப்பது. உதாரணமாக, அந்த மீட்டிங்கில், ஒரு பெண் தலை குனிந்து கேட்கிறார் என்று வைத்து கொள்ளுவோம், நமக்கு பாஸிடம் நல்ல டெர்ம்ஸ் இல்லாத பட்சத்தில், "அந்த பொண்ணு ஏன் தலை குனிச்சிட்டு இருக்கு, எதோ வருத்தப்படுற மாதிரி தெரியுது", என்று மனதுக்குள் நினைப்பது.  அந்த பொண்ணு என்ன காரணத்துக்காக தலை குனிந்து இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால், நம்முடைய எண்ணத்துக்கு ஏற்றபடி கற்பனை கலப்பது, மூன்றாவது படி.


4. நான்காவது படி," நாம் கலந்த கற்பனை கொண்டு  இது தான்நடந்து கொண்டிருக்கிறது  "என்று ஊகிப்பது. உதாரணமாக,, அந்த மீட்டிங்கில், "பாஸ் பேசுவது அந்த பொண்ணுக்கு  பிடிக்கவில்லை போல,அதான் தலை குனிஞ்சி வருத்தப்படுது, இந்தம்மா/ஆளு ஏன் இப்படிஇருக்கிறார் ? என்று பாஸ் பற்றிய தன்னுடைய  ஊகத்தை வலுப்படுத்துவது.

5. ஐந்தாவது படியில், "நாம் கொண்ட ஊகம், கற்பனை, எல்லாம் கலந்து  அந்த நிகழ்வு குறித்து முடிவெடுப்பது" . அதாவது, "அந்த மீட்டிங்கில், பாஸ் பேசுவது யாருக்கும் பிடிக்கவில்லை, அதனாலேயே எல்லாரும், தலையை குனிஞ்சிட்டு இருக்காங்க,  ஏன் இந்தம்மா/அய்யா  மத்தவங்களை புரிஞ்சுக்காம இப்படிபேசுறாங்க ? " என்று முடிவெடுப்பது

6.  ஆறாவது படியில், "நாம் எடுத்த முடிவுவை கொண்டு இப்படி தான் உலகம் இருக்கு என்று நம்பிக்கை கொள்வது".  அந்த மீட்டிங்கில் நடந்த, நாம் பில்டர் செய்த, கற்பனை கலந்த, ஊகித்த நிகழ்வுகளை கொண்டு, இந்த உலகமே இப்படி தான் பா", முதலாளி வர்கம், ஏழைகளை பற்றி கவலை பட மாட்டாங்க, என்று புலம்புவது.

7. ஏழாவது படிநிலை, இறுதி நிலை. நாம் எடுத்த முடிவுக்கு ஏற்ற ஆக்சன் எடுப்பது. அதாவது, இந்த மேனேஜர் சரியில்லை, எல்லாரையும் தப்பாக நடத்த்துகிறார், அடுத்தவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்க மாட்டேன்கிறார், என்று HR இடம் காம்ப்ளயின் செய்வது. அல்லது, அடுத்தவர்களிடம் புறம் பேசுவது, கேங்கு சேர்ப்பது, கூட்டம் சேர்ப்பது,கொடி  பிடிப்பது.


நான் விவரித்த இந்த "Ladder of Inference" இல், "நீ" அல்லது "I" என்பது மிக முக்கியமான ஒன்று. அதாவது, என்ன நடக்கிறது என்பதை, "நீ" அல்லது "I" இன் பார்வையில் மட்டுமே பார்த்து "நாம்" முடிவெடுக்கிறோம். அதுவும் நமக்கு சாதகமாக, அதனை திரித்து, அதனை மாற்றி, கற்பனை கலந்து, மோல்ட் செய்து, ஒரு முடிவுக்கு வருகிறோம்.

இந்த இடத்தில் நாம் எடுத்த முடிவு சரியா? இல்லை தப்பா?

வெளியில் இருந்து பார்க்கும் போது, அல்லது மூன்றாவது மனுஷனாக பார்க்கும் போது அந்த முடிவு தப்பு, ஆனால், நாம் உள்ளே இருக்கும் போது, நாம் அதில் உடன்பட்டு இருக்கும் போது, அந்த முடிவு சரியான முடிவு. இது எல்லாமே பெர்ஸப்ஸன்/ நாம் உணர்வது  சார்ந்தது. ஆனால் உண்மை நிலை அல்ல.

உண்மை நிலை வேறொன்றாக இருக்கலாம், ஆனால், எந்த ஒரு சூழலுக்கும் நாம் அந்த சூழலை குறித்து என்ன நினைக்கிறோம் என்பதை சார்ந்தே, அது சரி என்றோ அல்லது தவறு என்றோ நம்மால் அல்லது பிறரால் தீர்மானிக்கப்படுகிறது.


நிற்க, மனோ தத்துவத்தில் இருந்து, சிறிது மாற்றத்துக்காக  அறிவியல் பார்வை பாப்போம்.

எத்தனை பேர், தன்னுடைய பள்ளி பருவத்தில், "அறிவியல்/பிசிக்ஸ்" பாடத்தை கடுப்புடன் படித்து இருக்கிறீர்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் போது, ஒளியின் பண்புகள் என்று, இரண்டு வகை பண்புகள் படித்திருப்போம். 1. துகள் வடிவானது( Particle nature of light), 2. அலை வடிவானது (wave nature of light).  என்று நிறைய படித்திருப்போம். ஒவ்வொரு தியரியும் பற்றி படம் வரைந்து,சமன்பாடுகள் மனப்பாடம் செய்து. அட போங்கைய்யா என்று கடுப்பை கிளப்பி இருக்கும்.

பிசிக்ஸ் பாடத்தை குறித்த பார்வையை, அது வெறும் கணித சமன்பாடுகள் மட்டுமே கொண்டது என்ற என்னுடைய எண்ணத்தை மாற்றியது "The Dancing Wu Li Masters" என்ற புத்தகம்.


Image from google images

சரி எதற்கு இந்த புத்தகத்தை குறித்து இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், அதில், "The Role of "I"" என்ற அத்தியாயம் உண்டு. இந்த அத்தியாயத்தில், எந்த சமன்பாடும் இல்லாமல் ரொம்ப அழகாக இதன் ஆசிரியர், ஒளியின் , அலை மற்றும் துகள் பண்புகளை எளிமையாக குறிப்பிடுகிறார். அதன் பின்பு அவர் சொல்வது. "ஒளிக்கு, அலை மற்றும் துகள் பண்பு இருப்பது இதுவரை கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது, வேறு பல பண்புகளையும் ஒளி கொண்டிருக்கலாம், ஆனால் இதுவரை "நாம்" என்ன அறிந்திருக்கிறோமோ அதனை கொண்டு இது தான் ஒளியின் பண்பு என்று முடிவு கட்டிவிட முடியாது. இது "நாம்"/"ஐ" அறிந்த வரை காணும் ஒளியின் பண்பு மட்டுமே"


பொதிகவியளார், ஹெய்சென்பெர்க் அவர்களின் "Theory of uncertainity" மிக பிரபலம். அதன் முடிவில் ஹெய்சென்பெர்க் சொல்லுவது

" What we observe is not nature itself, but nature exposed to our method of questioning."


நாம் பார்க்கும் உலகம் /இயற்க்கை என்பது உண்மையில் இருப்பது அல்ல, நம்முடைய அனுமானத்தில் அல்லது நமக்கு பிடித்த வகையில் நாம் அறிந்த வரையில் இருக்கும் இயற்க்கை/உலகம் மட்டுமே. இது தான் உண்மையில் உலகம் என்று வரையறுக்க இயலாது.


உளவியல் மற்றும் அறிவியல் பார்வைகளின் சாராம்சம் எளிமையாக, நம்முடைய, எது சரி, எது தப்பு என்ற வாதத்துக்கு வருவோமானால். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பு,  "நான், நாம்", என்ற அந்த பாய்ண்ட்யை விட்டு வெளியே வந்து, மூன்றாவது மனிதனாக, யூனிவேர்சல் ஆக யோசித்தால் மட்டுமே, எந்த ஒரு பிரச்சனைக்கும் "முழுப்பரிமாணம்" கிடைக்கும். இல்லை எனில், லாடம் கட்டிய குதிரை போல் நாம் நினைத்ததே சரி என்று அந்த வழியில் சென்று கொண்டிருப்போம்.


நன்றி.

Thursday, March 22, 2018

முகநூல், ப்ரொபைலிங், பிரைவசி மற்றும் வேலை இழப்பு

சில வருடங்களுக்கு முன்பு, சோசியல் மீடியா குறித்தும், பிரைவசி குறித்தும் அது எப்படி நம்முடைய பர்சனல் வாழ்வில் தலையிடலாம் என்பது குறித்தும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்.
 1. உங்களை சுற்றி பின்னப்படும் பரிந்துரை என்னும் மாயவலை!
 2. Facebook ம் ப்ரைவசியும் பெண்களும்
 3. காசு, பணம் துட்டு, மணி மணி ! 

நான் என்னென்ன குறிப்பிட்டேனோ அது நடந்து விட்டிருக்கிறது. முகநூலில் உங்களை குறித்த விஷயங்களை சேகரித்து, உங்களுடைய பர்சனல் விஷயங்களை வேறொரு கம்பெனியிடம் விற்று, உங்களையே டார்கெட் செய்து மார்க்கெட் செய்து இருக்கிறார்கள். அதுவும் அமெரிக்க தேர்தலில் இது ஒரு பெரிய வித மார்க்கெட்டிங் உத்தியாக உபயோகப்படுத்த பட்டு இருக்கிறது. நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று மார்க் ஸுகேர்பேர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். ஆனால் போனது போனது தானே.


இதனால் என்னங்க பிரச்னை என்று கேட்பவர்களுக்கு.. நீங்கள் என்ன சாப்பிடுவது, என்ன பார்பது என்ன உடை அணிவது, என்ன கேட்பது, என்ன என்ன செயல்கள் செய்வது, என்று ஒன்று விடாமல் உங்களை குறித்த ப்ரொபைலிங் நடக்கிறது. உங்களை குறித்து அறிந்தபிறகு, உங்களுக்கு தேவையான பொருட்கள், வீட்டிற்கே வந்து மார்க்கெட்டிங் செய்யப்படுகின்றன. டிஜிட்டல் மார்க்கெட்டிங் இப்போது எல்லா இடங்களிலும் கொடி கட்டி பறக்கிறது. உங்களுக்கு தேவையானதை, மற்றொருவர் முடிவு செய்வார்.  உங்களுக்கு என்று சுயம் ஓன்று இல்லாமல் போகும்

இப்பொது, கூகிள் ஹோம், அலெக்சா, சிறி  என்று பல பர்சனல் அசிஸ்டென்ட் ஆப் கள் இருக்கின்றன. அதுவும் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொரு நிமிடமும், உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று டேட்டா கலெக்ட் செய்து அனுப்புகின்றன. இதனால், நீங்கள் பொது வெளியில் என்ன செய்கிறீர்கள் என்பதை விட, வீட்டில் என்ன என்ன செய்கிறீர்கள் என்று உங்களை முழுக்க ப்ரொபைல் செய்கிறார்கள்.

அப்படி செஞ்சா என்ன பிரச்னை ஆகப்போகுது..விடுங்க என்பவர்களுக்கு, இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் எப்படி ரோபோக்கள் பல வேலைகளுக்கு மனிதர்களை விட பயன்படுத்த பட்டிருக்கும் என்ற மார்க்கெட் வாட்ச் செய்தி மற்றும் படம் இங்கே.
இதில் என்ன குறிப்பிட படுகிறது என்றால், மூளையை உயோகிக்காமல் செய்யப்படும் பல  வேலைகளை ஆட்டோமேஷன் செய்து விடுவார்கள். முதல் உதாரணமாக,  சூப்பர்மார்கெட் செல்கிறீர்கள் என்றால், அங்கே பில் போட  என்று இருக்கும் மக்கள் இனிமேல் இருக்க மாட்டார்கள். அதற்க்கு பதில் ஆட்டோமேட்டிக் ஆக நீங்கள் பில் போடா முடியும். ஏற்கனவே, ஆட்டோமேட்டிக் செக்கின் என்று பல கடைகள் வந்துவிட்டன, இன்னும் சில வருடங்களில் இந்த வேலை எல்லாமே இருக்காது. அந்த வேலை மட்டுமே செய்த தெரிந்த பலருக்கு வேலை இழப்பு ஏற்படும்.

சரி இதற்கும் உங்களை பற்றிய ப்ரொபைலிங் என்பதற்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு? ப்ரொபைலிங் செய்வதன் மூலம் உங்களுடைய முழு விவரமும் அவர்களுக்கு தெரியும். அந்த விவரங்களை ஒரு AI /அர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவு படிமுறை மூலம் படிப்படியாக கம்ப்யூட்டர் உங்களை பற்றி கற்றுக்கொள்ளும்.

இது எப்படி ஒரு குழந்தை சிறுவயதில் இருந்து கற்றுக்கொள்கிறதோ, அதனை ஒத்தது. சரி கற்று கொண்டு என்ன ஆகபோகிறது, என்றால். நீங்கள் செய்யும் வேலையும் கம்ப்யூட்டர் செய்கிறது எனில் அதுவும் நீங்கள் செய்யும் வேலை வெறும் உடல் உழைப்பு சார்ந்தது எனில், மனிதர்கள் வேலைக்கு எடுக்க மாட்டார்கள், பதிலாக, கம்ப்யூட்டர் அல்லது ரோபோக்கள் வேலைக்கு எடுக்கப்படும்.

இப்படி மனிதர்கள் அல்லாத ரோபோக்களை வேலைக்கு வைப்பது அவர்களுக்கு சௌகரியம். PF,பஞ்சபடி, மாதாமாதம் சம்பளம், இன்சூரன்ஸ், என்று எதுவும் கொடுக்க தேவை இல்லை. வேலையில் நேரும் குற்றங்கள் நிறைய இருக்காது. சப்போர்ட் வேலைகள் எல்லாமே கம்ப்யூட்டர் செய்துவிடும். ஆட்டோமேட்டிக் மெஸேஜ் போல, தற்போது ஆட்டோமேட்டிக் டெல்லர் வந்து விட்டது. இதனால் BP வேலை செய்யும் பலருடைய வேலை போகும்.

உங்களை பற்றி தெரிந்து கொண்டு உங்களையே வேலையை விட்டு தூக்கலாம், அதற்க்கு உங்களுடைய ப்ரொபைல் பயன்படுத்தலாம். உங்களுடைய கிரெடிட் கார்டு, SSN போன்றவற்றையே சேகரித்து உங்கள் பெயரில் வேறொருவர் லோன் வாங்கலாம். இல்லை பொருட்கள் வாங்கலாம். எங்கும் டேட்டா செக்யூரிட்டி என்று எதுவும் இருக்க போவதில்லை. இவர்கள் சேகரிக்கும் டேட்டா பாதுகாக்கப்படும் என்று யாரும் உறுதி கொடுக்க போவதில்லை.  நாமே சென்று எதிர் இந்த நிலைக்குள் விழ  வேண்டும். சிந்திப்போம்.

நன்றி.References

http://www.foxnews.com/tech/2018/03/21/facebook-ceo-zuckerberg-breaks-silence-on-data-scandal-dont-deserve-to-serve-without-security.html

https://www.marketwatch.com/story/this-chart-spells-out-in-black-and-white-just-how-many-jobs-will-be-lost-to-robots-2017-05-31

Sunday, March 11, 2018

இனிமேல், ஆடு வெட்டாம ஆட்டுக்கறி சாப்பிடலாம்!!

இந்த பதிவுக்கு ஆடு வெட்டாம ஆட்டுக்கறியும், ஹீலா செல்களும்!! என்று தான் தலைப்பு வைக்கணும்னு நினைச்சேன், ஆனா, ஹீலா செல்கள் "கான்செர் பேஷண்ட்" என்பதால் நெகடிவ் பதம் வந்து விடும் என்று மாற்றி வைத்து விட்டேன்.

"என்ன தலையும் புரியல வாலும் புரியல ?"என்பவர்களுக்கு, என்னுடைய முந்தைய பதிவான "
ஹீலா ஹீலா - செத்தும் கொடுத்தார்" இல் இருந்து சில பகுதிகள்.

"மருத்துவ ஆராய்ச்சி உலகில் இருக்கும் அனைவருக்கும் HeLa என்ற பெயர் மிகவும் பரிச்சயமாகஇருக்கும். HeLa என்பது அழியாத மனித செல் லைன் என்று சொல்வார்கள். பொதுவாக மனிதசெல்கள் உடம்புக்கு வெளியே வளர்ப்பது 1951 வரை மிக மிக கடினமானது என்று கருதப்பட்டது. அவற்றை எல்லாம் முறியடித்து உடம்புக்கு வெளியேயும் செல்கள் வளர முடியும் என்று நிரூபித்ததுHeLa செல்கள் மட்டுமே.

இதென்ன!!,மனித செல்கள் உடம்புக்கு வெளியே வளருவதாஎன்ன சொல்லுறாங்கஎன்றுகேட்பவர்களுக்கு திசு கல்சுர் பற்றிய சின்ன அறிமுகம்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் 

"செல்களை பெட்ரிடிஷ் எனப்படும் தட்டுகளில் வளர்ப்பது".

எப்படி செய்கிறார்கள்

"எந்த ஒரு உயிரினத்தின் செல்களை வளர்க்க வேண்டுமோ அதனை பெட்ரிடிஷ் இல் தடவி, அந்த செல்கள் அதாவது எல்லா விதமான nutrients ம் தந்து அந்த செல்கள் வளர்கின்றனவா? என்று பார்ப்பது 

எதற்க்காக செய்கிறார்கள் 

மருத்துவ சோதனைகளை சோதனைச்சாலை எலிகளிடமோமனிதர்களிடமோ செய்வதற்கு முன்உயிரின செல்களிடம்  செய்து அவை எப்படி அந்த சோதனைகளை எதிர் கொள்கின்றன என்றுகாண்பர்இதனை  போன்ற திசுக்களில் நடத்தப்படும் பரிசோதனை எந்த உயிரினத்தையும்பரிசோதனை  என்ற பெயரில் துன்புறுத்துவதர்க்கு முன் செய்யப்படுவதால் திசு கல்ச்சர்  ஒருவரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
சரி இப்போது ஹீலா செல்களை பற்றி பார்ப்போம்

முதன் முதலில் ஆராய்ச்சி துறைக்கு நான் வந்த பொழுதெல்லாம் HeLa செல்களில் இந்த ஆராய்ச்சி நடந்தது, அந்த ஆராய்ச்சி நடந்தது என்றெல்லாம் பலர் கூற கேட்டு இருக்கிறேன். ஆனால் HeLa செல் என்றால் என்ன என்று கேட்டால் ஒரே ஒரு பதில் தான் வரும் "HeLa is a immortal cell line" அதனை தவிர வேறொன்றும் யாருக்கும் தெரியாது.

சமீபத்தில் "The immortal life of Henrietta Lacks" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது.
ஹீலா  என்று மட்டுமே அறியப்பட்ட ஹென்ரிட்ட லாக்ஸ் என்ற கறுப்பின பெண்மணியின் கான்செர்செல்களே ஹீலா செல்கள் என்று அறியப்படுகின்றன என்று அறிந்த போது ஆச்சரியபட்டேன்.


போலியோ மருந்து முதல் பல பல கான்செர் மருந்துகள் வரை பலவகை  மருந்துகளும் முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது இந்த அம்மாவின் செல்களில்  தான். சொல்லப் போனால் ஒருபுது  மருத்துவ மறுமலர்ச்சியையும், மில்லியன் டாலர் இண்டஸ்ட்ரியையும் இந்த செல்கள்உருவாக்கி இருக்கின்றன.  இன்னும் கூட  பல பல நாடுகளில் ஊர்களில் இருக்கும் பல மருத்துவஆராய்ச்சி கூடங்களில் இவருடைய செல்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன...

ஆனால் இவற்றை எல்லாம் நமக்கு கொடுத்த அவரோ மிக இளவயதில் கர்ப்பப்பை வாய்புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களோ அவருடையஉடம்பில் இருந்து எடுத்த செல்களை கொண்டு திசு கல்ச்சர்இல் வளர வைத்து ஒரு பெரியஇண்டஸ்ட்ரி உருவாக்கி விட்டார்கள் ஆனால் இதனை பற்றி அவருடைய குடும்பம் துளியும்அறிந்திருக்க வில்லை.
"

நிற்க, சரி இப்பொழுது எதற்கு ஹீலா செல்களை பற்றியும், ஆட்டு கறி பற்றியும்  குறிப்பிடுகின்றேன் என்றால், எப்படி ஹீலா செல்களை  பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்த்தார்களோ, அதே போல, மற்ற விலங்குகள் செல்களையும் பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்த்து ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், ஏன் இதை பிசினெஸ் ஆக செய்ய கூடாது என்று பிசினெஸ் முதலாளிகள் நினைத்ததன் விளைவாக, தற்போது பல பல கம்பெனிகள் இதனை ஒரு பிசினிஸ் ஆக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் "க்ளீன் மீட்". "மெம்பிஸ் மீட், சூப்பர் மீட்" என்று பல பல கம்பெனிகள் இந்த பிசினெஸ் இல் இருக்கிறார்கள்.


அதாவது சின்ன பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்ப்பதற்கு பதில், பெரிய, அல்லது இண்டஸ்ட்ரி லெவல் உற்பத்தி செய்வது. இதன் மூலம், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி அனைத்தும் லேபில் உற்பத்தி செய்யப்படும். அதன் சுவை மாறி இருக்கிறதா என்று நிறைய டேஸ்ட் டெஸ்ட் நடத்தி இருக்கிறார்கள்.  

இதனை சார்ந்த புத்தகம் ஒன்றை படிக்க நேர்ந்தது "கிளீன் மீட்"  எப்படி இனிமேல், ஆட்டுக்கறி மாட்டு  கறி உற்பத்தி இருக்க  போகிறது என்பது குறித்த விளக்கம் இதில் இருக்கிறது.
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இனிமேல் கடைக்கு சென்று கறி வாங்கும் போது அது உண்மையிலேயே ஒரு ஆடு மாடு வெட்டி வர்ற கறியா, இல்லை லாபில் வளர்த்த கறியா என்று தெரியாது என்பது உண்மை. 


நன்றி.