Thursday, February 2, 2012

ஒரு சீட்டுக்கு பத்து லட்சமும், நண்பன் படமும்

ஒரு சில நேரங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாக தோன்றும் சில விசயங்களுக்குள்ளும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும், அப்படித்தான் எனக்கு நான் கேள்விப்பட்ட சில விசயங்களுக்கும் நான் பார்த்த நண்பன் படத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக தோன்றுகிறது.

முதலில் நான் கேள்விபட்ட சில விசயங்கள். சென்னையில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி சேர்க்க ஃபீஸ் குறைந்தது 2 லட்சம் அதிக பட்சம் 10 லட்சம் கேட்கிறார்கள். இது நான் அறிந்து கொண்ட அதிர்ச்சி தரும் செய்தி. எல்லா ஊர்களிளும் இது உண்மையா என்று யாராவது சொல்லுங்கள். இந்த ஃபீஸ் தவிர மாதாமாதம் டெர்ம் பீஸ், பஸ் பீஸ், ஹாஸ்டல் பீஸ்....இன்னும் நிறய இருக்கிறது. இதனை தவிர ஒரு குழந்தையை நீச்சல், கராத்தே போன்ற வேறு ஆக்டிவிடியில் சேர்த்து விட்டால் அதற்கு தனி ஃபீஸ். எல்லாவற்றையும் சேர்த்தால் எப்படியும் ஒரு மாதத்திற்கு ஒரு குழந்தைக்கு 10 முதல் 15 ஆயிரம் வரை செலவாகும் போல. எப்படி ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தால் சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை.

இத்தனை செலவு செய்து, அந்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, அதனை தவிர கராத்தேயில், பாட்டு கிளாசில்..என்று அடுக்கடுக்காக சேர்த்துவிட்டு அவை எல்லாவற்றிலும் அந்த குழந்தை முதலில் வரவேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறோம். இதற்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் பெற்றோரும் விதி விலக்கல்ல, இங்கு பள்ளிக்கு ஃபீஸ் இல்லை..ஆனாலும் இந்திய பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் இருக்க விடுவதில்லை குமோன், நீச்சல், கராத்தே, பியானோ, பாலே..என்று எண்ணற்ற கிளாஸ்களில் சேர்த்து விட்டு அவற்றில் எல்லாம் தங்கள் குழந்தைகள் முதலில் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். யாரும் குழந்தைகள் என்ன விரும்புகிறார்கள் என்று கேட்பதில்லை. இதனை ஒரு மைய கருத்தாக வைத்தே நண்பன் படம் வந்திருப்பது வரவேற்க்கப்பட வேண்டியது.


அடுத்த செய்தி, தற்போது இருக்கும் குழந்தைகள் மற்றும் இளைய சமுதாயதினரின் வாழும் வாழ்க்கைமுறை பற்றியது. சிறு வயதிலேயே, டி.வி, செல் போன், வீடியோ கேம், இன்டர்நெட்,ஃபேஸ்புக், டுவிட்டர்..எல்லாம் தெரிகிறது இவர்களுக்கு. முகமறியா நட்புகளே இவர்கள் அறிந்தது. வெளியில் சென்று விளையாடுவதை பல குழந்தைகள் அறிவதில்லை.

நண்பன் என்றால் யார்? உயிர் தோழன், தோழி என்றெல்லாம் நமது இலக்கியங்களில் சொல்லி இருக்கிறார்களே அப்படி என்றால் யார்?, என்ன செய்வார் என்று இன்றைய இளைஞர்களிடம் கேட்டு பாருங்கள், அவர்கள் சொல்வது இதுவாகத்தான் இருக்கும், “என் பெஸ்ட் ஃப்ரெண்ட் கூட மால் போனேன், அங்க கே.எஃப்.சி போனோம், தண்ணி அடிச்சேன், பைக்கில/காரில ஈ.சி.யாரில போனேன்..”என்று தான் நூற்றுக்கு தொண்ணூறு இளைஞர்கள் இன்று சொல்கிறார்கள். அதுவும் தண்ணி அடிப்பது என்பது இப்போதெல்லாம் டீ, காபி குடிப்பது போல சர்வ சாதாரணமாக சொல்லப்படுகிறது.

இப்படி செய்யிறவங்கெல்லாம் எங்க ஊரில இல்ல என்று சொல்லுபவர்களுக்கு..இது சென்னையில் மட்டும் நடப்பதல்ல..மதுரை, திருச்சி போன்ற ஊர்களிலும் இப்போது நடக்கிறது..
தோள் கொடுப்பான் தோழன் என்று சொல்வார்கள், நண்பன் படத்தில் காட்டபட்டு இருப்பது போல தன்னுடைய நண்பனை உயர்த்த எத்தனை பேர், தோள் கொடுக்கிறார்கள் இப்போது சொல்லுங்கள்.


4 comments:

வவ்வால் said...

உங்கள் ஆதங்கம் சரியே. கல்வி வியாபாரம் ஆகிவிட்டது. இப்போது உள்ளக்கல்வி நிலையங்களை பெரும்பாலும் நடத்துவதே அரசியல்வாதிகள் தான்.

//முதலில் நான் கேள்விபட்ட சில விசயங்கள். சென்னையில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி சேர்க்க ஃபீஸ் குறைந்தது 2 லட்சம் அதிக பட்சம் 10 லட்சம் கேட்கிறார்கள். இது நான் அறிந்து கொண்ட அதிர்ச்சி தரும் செய்தி. //

சென்னையில் உள்ளப்பள்ளிகள் எல்லாம் என்பது போல இருக்கு. பிரபல தனியார் பள்ளிகள் என்று சொல்லுங்க.

கட்டணம் அதிகம்னு செய்தித்தாள், தொகாவில் காட்டிய பள்ளிகள் எல்லாம் ஒரு நடுத்தரமான கட்டணப்பள்ளிகள், அங்குப்படிப்பவர்களே மிடில் கிளாஸ் குடும்பம் என்பதால் கூட்டம் கூட்டி போராடிவிட்டார்கள்.

நீங்கள் சொன்னது போல லட்சக்கணக்கில் காசு வாங்கும் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர் யாருமே வாய்த்திறக்கவில்லை. அப்பள்ளிகளும் செய்தியில் வரவில்லை.

எனக்கு தெரிந்த்தே எனது உறவினர் அவர்களது பசங்களை சேர்க்க ஒரு சிலப்பள்ளிகளை சொல்லி அதில் எதாவது ஒன்றில் விண்ணப்பம் வாங்கிக்கொடுனு சொன்னாங்க. கொடுமை என்னவென்றால் அப்ளிகேஷனே எளிதில் கிடைக்காது. நான் போய் வரிசையில் காலங்கார்த்தால நின்னு வாங்கனுமாம் :-))

மேலும் அப்படியே அப்ளிகேஷன் வாங்கினாலும் கட்டணம் அதிகம் ஆச்சேனு கேட்டதுக்கு ,எவ்வளவு செலவானாலும் பரவாயில்லைனு சொன்னாங்கன்னா பார்த்துக்கோங்க , யார் மேல தப்புனு.

இதுக்கே அவங்க கணவர் மத்திய அரசு ஊழியர், அதனால கேந்திரிய வித்தியாலாயவில் சேர்த்துடலாம் ,அது ஈசியாச்சேனு சொல்லியும் கேட்கவில்லை. அப்புறம் அப்ளிகேஷனே பிளாக்கில் வாங்க்கி கொடுத்தேன்.

நீங்க என்னனா ஃபீஸ் ரொம்ப அதிகமானு கேட்கிறிங்க, அப்ளிகேஷனே ரொம்ப அதிக விலை தான். அதுக்கே செம டிமாண்ட் :-))

வைன் ஷாப்பை எல்லாம் அரசுடையாக்க அக்கரைக்காட்டும் அரசு ஏன் எல்லா பள்ளிகளையும் அரசுடைமையாக்க கூடாது?

//“என் பெஸ்ட் ஃப்ரெண்ட் கூட மால் போனேன், அங்க கே.எஃப்.சி போனோம், தண்ணி அடிச்சேன், பைக்கில/காரில ஈ.சி.யாரில போனேன்..”என்று தான் நூற்றுக்கு தொண்ணூறு இளைஞர்கள் இன்று சொல்கிறார்கள். அதுவும் தண்ணி அடிப்பது என்பது இப்போதெல்லாம் டீ, காபி குடிப்பது போல சர்வ சாதாரணமாக சொல்லப்படுகிறது. //

அப்போ படிக்கிற பசங்க குடும்பம் எல்லாம் 90% பணக்கார குடும்பமா?

நீங்க சொல்ற கலாச்சாரம் எல்லாம் உயர்/ உயர் நடுத்தர வர்க்க மாணவர்கள்.

மத்தவங்க எல்லாம் கே.எப்சி,மால்,ஈசிஆர் எல்லாம் எட்டாக்கனி தான்.மேக்சிமம் டாச்மாக் சரக்கு :-))

அப்புறம் ஒரு யூத் கோட் இருக்கு பெஸ்ட் பிரண்ட்னு சொன்னா அது கேர்ள்/பாய் பிரண்ட் , என் குளோஸ் பிரண்ட் சொன்னா அது ஜஸ்ட் பிரண்ட் :-))

கோமதி அரசு said...

எல்லாவற்றிலும் அந்த குழந்தை முதலில் வரவேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறோம். இதற்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் பெற்றோரும் விதி விலக்கல்ல, //

உலகம் முழுவதும் பெற்றோர்களின் எண்ணமும் அதுதான்.

எந்த பள்ளியில் படித்தாலும் என் குழந்தைகள் நன்கு படிக்கும் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு வரவேண்டுமே!

நிறைய காசு கொடுத்து படிக்க வைக்கும் பள்ளி தான் நல்ல பள்ளி, மற்றைவை நல்ல பள்ளி இல்லை என்ற நிலை மாறினால் நல்லது.

bandhu said...

//குமோன், நீச்சல், கராத்தே, பியானோ, பாலே..என்று எண்ணற்ற கிளாஸ்களில் சேர்த்து விட்டு அவற்றில் எல்லாம் தங்கள் குழந்தைகள் முதலில் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். //
இதில் பாதி சரி.. பாதி தவறு என்று நினைக்கிறேன். எல்லா கிளாஸ்களிலும் சேர்ப்பது தவறில்லை. சில மாதங்களிலேயே எதில் குழந்தைக்கு ஆர்வம் இருக்கிறது என்று தெரிந்து மற்றவற்றை விட்டு விட வேண்டும். இருப்பவற்றில் சிறந்து வரவேண்டும் என்ற ஆவல் இருப்பது இயற்கையே. அது குழந்தைகள் மீது பிரஷர் ஏறி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..

ஆதி மனிதன் said...

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ஆனால், எல்லா பள்ளிகளிலும் லட்சக் கணக்கில் டொனேஷன் வாங்குவதாக தெரியவில்லை. ஒன்றிரண்டு பெரிய பள்ளிகளில் மற்றும் பணக்கார பிள்ளைகள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் இது நடக்கிறது.

என்னுடைய குழந்தைகளுக்கு இங்கு அவர்கள் விருப்பப் படும் எக்ஸ்ட்ரா கரிகுலர் மட்டும் தான் சேர்த்து விட்டுருக்கிறேன். மியூசிக்கில் கூட அவர்கள் விருப்பப்பட்ட இன்ஸ்ட்ரூமண்ட எடுத்துக் கொள்ள சம்மதித்தேன் (எனக்கு அதில் விருப்பமில்லை என்றால் கூட.

இத்தனைக்கும் என் பெண் படிப்பு மற்றும் பாண்டில் எப்போதும் நம்பர் ஒன்.