Saturday, November 19, 2016

அறிவு ஜீவிகளுக்கு மட்டுமே புரியும் சில விசயங்கள் !

முதல் விஷயம்,   நம் தங்க தலைவர், தான தலைவர், இந்தியாவின் லேட்டஸ்ட் துக்ளக் மோடி அவர்களின் சரித்திர புகழ் வாய்ந்த ஒரு செயல். " கருப்பு பண ஒழிப்பை பற்றி உக்கார்ந்து உக்கார்ந்து யோசித்து" முடிவாக கருப்பு பணத்தை ஒழிக்க இது தான் வழி என்று அவர் உருவாக்கிய சரித்திர புகழ் பெற்ற திட்டம் இது. வாழ்க மோடி ஜியின் புகழ் வளர்க அவரின் தொண்டு. (மைண்ட் வாய்ஸ் : நமக்கு எதுக்கு பா வம்பு, கொஞ்சம் புகழ்ந்து வைப்போம்)

என்னை போன்ற அறிவிலிகளுக்கு தற்போது என்ன பிரச்சனை என்றால், கடந்த  முறை இந்தியா வந்த போது அவசர  செலவுக்கு வேண்டும் என்று  எடுத்து வைத்திருந்த 500, 1000 நோட்டுக்களை என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறேன்.  இதே போல விசிட்டர் விசாவில் வந்த பலரும் இந்தியா சென்றதும் அவசர செலவுக்கு என்று பணம் வைத்து இருக்கின்றனர். இதனை போன்ற நோட்டுக்களை தற்போது என்ன செய்வது என்று என்னை போலவே பலரும் குழம்பி போய் இருக்கின்றனர். அதிலும் அடிக்கடி இந்தியா சென்று வரும் பலரும் 10 முதல் 50 ஆயிரம் வரை பணத்தை 500, 1000 நோட்டுக்களாக மாற்றி வைத்திருக்கின்றனர். அவர்களின் நிலைமையை நினைத்தால் என்னவாகும் என்று தெரியவில்லை. டிசம்பர் 30 க்குள் இந்தியா சென்றால் மட்டுமே பணத்தை மாற்ற முடியும் என்கிற பட்சத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. 

இந்த நிலையில், இங்கிருந்து யாரவது அங்கே செல்கிறார்கள் என்றால் அவர்களிடம் கொடுத்து மாற்ற சொல்லவேண்டிய நிலைமை பலருக்கும். அதுவும் நம்பிக்கை யானவர்களாக இருக்க வேண்டுமே என்ற பதட்டம். இந்த நிலையில் அங்கே இது போன்ற NRI களிடம் இருந்து பணம் மாற்றி கொடுக்க என்றே சிலர் ஏஜென்ட் வேலை பார்ப்பதாகவும், ஆனால் அப்படி பணம் மாற்றி கொடுக்க 10-20% கமிஷன் அடித்து கொள்ளுவதாகவும் கேள்வி பட்டேன். 

இதனை போன்ற கமிஷன் ஏஜெண்டுகளின் நன்மைக்காக இது போன்ற திட்டத்தை வகுத்த அறிவுச்செம்மல் மோடி வாழ்க.


அடுத்ததாக,  மனுஷ்ய புத்திரன் அவர்களின் "வேசிகளிடமும் செல்லாத ஐநூறு ரூபாய் நோட்டுகள்" என்ற கவிதை.  இதனை தொடர்ந்த  "ஒரு சொல் என்ன செய்யும்" என்ற விகடன் கட்டுரை என்னுடைய தோழி ஷேர் செய்து இருந்தாள். சிறு வயதில், தெருவில் பெண்களுக்கு இடையே சண்டை வந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் திட்டி கொள்ள உபயோகிக்கும் வார்த்தை இது. அதாவது, திட்டும் பெண், தன்னை சுத்தமானவள் என்று கருதி, திட்டப்படும் பெண்ணை நோக்கி வீசும் அம்பு இது. இதே நிலை, ஆண்களும் கையில் எடுப்பார்கள். ஒருவனை அவமானப்படுத்த, கோவப்படுத்த அவன் தாயை குறித்ததோ, மனைவியை குறித்தோ இது போன்ற தப்பான வார்த்தை சொன்னால் போதும். இது உலகம் முழுக்க இருக்கும் ஒரு நிகழ்வு, இந்தியா என்று மட்டும் அல்ல, உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், 2006 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை சொல்லலாம். உலகமே ஆர்வமாக பார்த்த அந்த போட்டியில், தன்னுடைய தாயை தரக்குறைவாக ஒருவன் கூறிவிட்டான் என்று அவனை தலையால் முட்டி மோதி, ரெட் கார்டு வாங்கி வெளியில் சென்ற Zidane ஐ சொல்லலாம். இது உலகம் முழுக்க இருக்கும் ஒரு நிகழ்வு. 





உலகின் தொன்மையான பெண்களை திட்டும் ஒரு வார்த்தையை வைத்து மோடி அவர்களின் செயலை புகழ்ந்த ஒரு அறிவி ஜீவியின் செயல் இது . இதனை புரிந்து கொள்ளவேண்டுமாயின் நீங்களும் அறிவு ஜீவியாக இருக்க வேண்டியது அவசியம்.

கடைசியாக, "அச்சம் என்பது மடமையடா" என்ற அறிவு ஜீவி காவியத்தை  சொல்லலாம்.  "படம்னா இது படம் யா, என்ன ஒரு லவ் பீலிங் தெரியுமா, அதெல்லாம் லவ் பண்ணவுங்களுக்கு தான் புரியும்" அமேஜிங்..என்று பல அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள்.  பல நேரங்களில் இவர்களின் தீர்க்க தரிசனத்தில்  இருந்து நான் தப்பித்து இருக்கிறேன், இருந்தாலும் இந்த படம்  ஒருவேளை VTV மாதிரி இருக்கும் போல என்று கொஞ்சம் நம்பி போய் விட்டேன். பிறகு தான் எனக்கு புரிந்தது, இந்த படத்தை பிடிக்க நானும் ஒரு அறிவு ஜீவி ஆக இருக்க வேண்டும் என்று.

எங்கயாவது "30 நாட்களில் அறிவு ஜீவி ஆவது" எப்படி என்று புக் யாராவது விக்கிறாங்களா சொல்லுங்கப்பா, நானும் படிச்சிட்டு அறிவு ஜீவி ஆகலாம்னு இருக்கேன்..

நன்றி.

டிஸ்கி 
இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே. 



1 comment:

ப.கந்தசாமி said...

"30 நாட்களில் அறிவு ஜீவி ஆவது" எப்படி //
அதெல்லாம் பிறவியிலேயே வந்திருக்கோணும். இப்படி வராது.