நீங்கள் மேலை நாடுகளில் வசிக்கிறீர்கள் அதுவும் மேலை நாடுகளில் மேல்படிப்பு படித்தவர் என்றால் கட்டாயம் இதனை அனுபவித்து இருப்பவர்கள்.
இது பலருக்கும் நடந்திருக்கும், நமக்குதெரிந்தவர் உதாரணமாக உங்கள் பாஸ் என்று வைத்து கொள்ளுங்கள் அவரை சந்திக்கும் போது கட்டி பிடித்தல் சகஜம் அது இவர்களின் கலாச்சாரம். அதே சமயம் தெரியாதவர் என்றால் சந்திக்கும் போது கை கொடுத்தல் மிக சகஜம். உங்களுக்கு எதாவது நல்லது அல்லது கெட்டது என்று எது நடந்தாலும் இப்படி வந்து கட்டி பிடித்து ஆறுதல் சொல்வார்கள் அல்லது வாழ்த்துவார்கள். இன்னும் சில நாடுகளில் அதுவும் ஐரோப்பிய நாடுகளில் கன்னத்தில் முத்தம் கொடுப்பார்கள். இதெல்லாம் எப்படி செய்யலாம், மாட்டேன் என்று சொல்ல முடியாது. உடனே "unfriendly" என்று முத்திரை குத்தி விடுவார்கள்.
இதனையும் அனுபவித்து இருக்கலாம், யாரையும் பார்க்கும் போது ஒரு சிரிப்பு சிரிப்பார்கள். தெரிந்தவர் தெரியாதவர் என்று எந்த வித்தியாசமும் இருக்காது. நீங்களும் பதிலுக்கு சிரிக்க வேண்டி வரும். நீங்கள் ஜாகிங் செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், அப்போது எதிரில் உங்களை போல ஜாகிங் செய்து கொண்டு வருபவர் உங்களை பார்த்து ஹாய் அல்லது குட் மார்னிங் சொன்னால் நீங்களும் சொல்ல வேண்டி வரும், அவர் யாரெண்று கூட உங்களுக்கு தெரியா விட்டாலும், இல்லாவிட்டால் நீங்கள் rude என்று சொல்லி விடுவார்கள்.
அதே போல நீங்கள் கீழே விழுந்து விடீர்கள் என்றாலும் உடனே வந்து உங்களை தொட்டு தூக்குவார்கள், உடனே "யார் நீ, என்னை தூக்க " என்று சண்டை போட முடியாது . எப்போது டின்னெர் அல்லது பார்ட்டி என்றாலும் ஆண்களும் பெண்களும் பீர் அல்லது வைன் குடிப்பார்கள், நீங்களும் குடிக்கிறீர்களா? என்று கேட்பார்கள், இதென்ன பொம்பளை கிட்ட இப்படி கேட்குறீங்களே? என்று நீங்கள் கேட்க முடியாது . ஒரு success பார்டி அல்லது கல்யாணம் என்று சென்றாலும் உடனே ஷாம்பெயின் ஓபன் செய்வார்கள், நமக்கும் குடுப்பார்கள், நீங்கள் குடிக்கவிட்டலும், கிளாஸ் ஐ வாங்கி டோஸ்ட் செய்ய வேண்டும், இல்லையேல் மரியாதை குறைவாக நினைப்பார்கள்.
வெளி நாடுகளில் வந்து படிக்கும் சிலர் அனுபவிப்பது இது. நீங்கள் இங்கு இருக்கும் பலரையும் உங்களுக்கு வெளிநாட்டு மக்களுடன் பழக வேண்டும் என்றால் அவர்களுடைய சினிமா, விளையாட்டு, மியூசிக், அரசியல், சமையல் என்று ஒவ்வொன்றாக கற்று கொள்ள வேண்டும், அப்பொழுது தான் அவர்களுடன் பேச பழக இயலும் .
என்னை போன்று ஒரு கட்டுபெட்டியான குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டுக்கு வந்தவர்கள் அதுவும் மேல்படிப்புக்கு என்று வந்தவர்கள் இதனை போன்ற ஒரு விசயத்தை பெரிய ஷாக் ஆக்கி பார்பவர்கள். ஆனால்நாட்கள் செல்ல செல்ல நீங்களும் இந்த பழக்க வழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக உங்களை அறியாமல் பழகி இருப்பீர்கள்.
உதாரணமாக, பெண்கள் அதுவும் வேலைக்கு செல்லும் பெண்கள் பல பொட்டு வைப்பது, விபூதி இடுவது, கல்யாணம் ஆனவர் என்றால் மெட்டி அணிவது, தாலி அணிவது என்பதெல்லாம் இருபதில்லை.எனக்கு தெரிந்தே வேலைக்கு செல்லாத நிறைய பெண்களும் இப்போது தாலி அணிவதில்லை. திருட்டு பயம் என்று காரணம் சொல்கிறார்கள் என்றாலும் இது சாதரணமாகி விட்டது.தாலிக்கு பதில் மோதிரம் அணிந்து கொள்கிறார்கள், இங்குள்ளவர்கள் போல.
நிறைய இந்திய பெண்கள் பார்ட்டி என்றால் வைன் அருந்துகிறார்கள். சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து கொள்கிறார்கள், ஆண் பெண் வித்தியாசம் இன்றி.
இந்திய உடைகளை உடுத்துவது என்பது மிக குறைந்து விட்டது . இப்போதெல்லாம் சுடிதார் கூட உடுத்துவது இல்லை, எப்பொழுதும் மேலை நாட்டு உடை தான். புடவை உடுத்துவது என்பது பார்ட்டிக்கு செல்லும் போது அல்லது கோவிலுக்கு போகும் பொது என்றாகிவிட்டது. இதெல்லாம் நம்மையும் அறியாமல் நடக்கும் மாற்றங்கள். எது நமக்கு சவுகரியமோ அதனை உடுத்தி கொள்கிறோம்.
ஏனெனில் ஐரோப்பிய நகரங்களில் இந்திய உடையுடன் சுற்றினால் எப்படி நம்மை வேடிக்கை பார்பார்கள் என்பதை நான் அனுபவித்து இருக்கிறேன். அமெரிக்காவில் இந்தியர்கள் நிறைய இருப்பதால் இந்திய உடை அணிதாலும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். ஆனால் ஐரோப்பாவில் கட்டாயம் வேடிக்கை பார்ப்பார்கள்(என்னுடைய 10 வருடங்களுக்கு முந்தைய அனுபவம் இது, இப்போது மாறி இருக்க வாய்ப்பு இருக்கிறது). ஆனாலும் இன்றும் அமெரிக்காவில் இந்திய உடையுடன் ஆபிசுக்கு வந்தால் எல்லாரும் கட்டாயம் உங்களை வேடிக்கை பார்பார்கள்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமல் மாறிய நாம், இந்தியாவிற்கு செல்லும் போது நம்மை மறுபடியும் re tune செய்து கொள்ள வேண்டி வரும். உதாரணமாக, படித்து கொண்டிருந்த போது, நான் விடுமுறைக்கு என்று சென்ற போது மதுரை ஏர்போர்ட்டில் என்னைபார்த்த என் அப்பா, "இது மதுரை மா, பான்ட் ஷர்ட் எல்லாம் போடாத, எல்லாரும் ஒரு மாதிரி பார்பாங்க" என்று சொன்னது இன்னும் நினைப்பு இருக்கிறது. இதற்காக பிரான்க்பார்தில் இருந்து விமானம் ஏறும் முன் நான் உடை மாற்றி கொண்டு வர இயலாது. எல்லாரையும் பார்த்து சிரித்து பழகி இருந்த நான், அங்கு ஒரு ஆட்டோ டிரைவரை பார்த்து சிரிக்க அந்த ஆள் என்னை ஒரு மாதிரி நினைத்து விட்டார். பின்னர் நான் தவறை உணர்ந்து முகத்தை கடுப்பாக்கியது வேறு கதை. அதே போல தெரிந்தவர்களை பார்க்கும் போது இங்கேபழகியது போல கட்டி பிடிக்க முடியாது. அங்கே கட்டி பிடிப்பது என்றாலே பாலியல் சார்ந்த ஒரு வார்த்தை. அதே போல யாராவது விழுந்தால் ஓடிபோய் தூக்குவது, அனைத்திற்கும் நன்றி சொல்லுவது, சாரி சொல்லுவது, என்று செய்து கொண்டிருப்போம்.
இப்படி எல்லாம் நம்மையும் அறியாமல் நாம் கற்ற பழக்கவழக்கங்கலால் நாம் கலாச்சாரத்தை மறந்தவர்கள் ஆகிவிடுவோமா? என்னை பொறுத்த வரை, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் செய்யும் எந்த விசயங்களும் நல்லதே. மாற்றங்கள் என்பது மாறாதது, இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் கூட இவை பெரிய விசயமாக இருக்காது. நாம் தான் அந்த மாற்றங்களை பழகி கொள்ள வேண்டும்.
நன்றி
