Friday, March 1, 2013

அறிவாளி குழந்தை தயாரிப்பது எப்படி?


தேவையான பொருள்கள்

2-3 வயது குழந்தை
பாட அட்டவணை - பல
பாட புத்தகங்கள் (1- 5 ஆம் வகுப்பு புத்தகங்கள் நலம்)
அறிவியல் புத்தகம் - பல
வானவியல் புத்தகம் - பல
கணிதம் - பல
ஆங்கிலம் - எண்ணிலடங்கா
அறிவு ஜீவி பொம்மைகள்:  பல
பணம்- நிறைய.



ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது 
  1. ஒவ்வொரு நாளும் குழந்தையிடம் நீ மத்தவங்களை விட பெரியாளா வரணும், நீ தான் பெரிய ஆளா இருக்கணும். வேறு யாரையும் உன்னை விட பெரியாளா ஆக விடக்கூடாது என்று சொல்ல வேண்டும் 
  2. அடுத்த குழந்தைகளை விட நம் குழந்ந்தை வித்தியாசமாக ஆக்க என்ன செய்யலாம் என்று யோசித்து பட்டியலிட வேண்டும் .
  3. இப்படி பட்டியலில்  இட்டபடி ஒவ்வொரு நாளிலும் நடைமுறை படுத்த வேண்டும்.

செய் முறை 

  1. நம் குழந்தை வைத்திருக்கும் மற்ற குழந்தைகள் விளையாடும் எந்த பொம்மைகளும் வாங்கி கொடுக்க கூடாது. எப்போதும் அறிவு ஜீவி பொம்மைகள் மட்டுமே  வைத்து விளையாட விடவும்.
  2. உங்கள் குழந்தை வயதொத்த மற்ற குழந்தைகள் உங்கள் வீட்டுக்கு விளையாட வந்தாலோ, அந்த குழந்தைக ளி டம், உங்கள் குழந்தை "வெரி அட்வான்ஸ் "அதனால் அந்த குழந்தைகளுடன் செட்  ஆகாது என்று கூறி வந்தவர்களை திருப்பி அனுப்பவும்.
  3. உங்கள் குழந்தையை வயதை விட பெரிய வயது குழந்தைகளுடன் எப்போதும் விளையாட விடவும்.
  4. கலரிங், பெயிண்ட் அடித்தல், பேனா வைத்து கிறுக்குதல், டீவியில் கார்டூன்  பார்த்தல், போன்ற சாதாரண குழந்தைகள் செய்யும் எதையும் உங்கள் குழந்தையை செய்ய விடாமல், எப்போதும் கணிதம், வானவியல், அறிவியல், ஆங்கிலம்..போன்ற புத்தகங்களை படிக்க மட்டுமே வற்புறுத்த வேண்டும்.
  5. எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிடி அனைத்திலும் உங்கள் குழந்தையை சேர்த்து விட வேண்டும்.
  6.  யாராவது உங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தால் அவர்களின் முன் உங்கள் குழந்தையின் திறமைகளை மறக்காமல் பட்டியலிடவும்.  அவர்கள் போதும் போதும் என்று சொன்னாலும் விட கூடாது.
  7. உங்கள் குழந்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்தவர்கள் முன்னிலையில் ஆடவோ,பாடவோ செய்ய வைக்க வேண்டும்.
  8. குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்று உங்கள் குழந்தை எப்படி படிக்கிறது என்று விசாரிப்பதோடு நிறுத்தி விடாமல், என் குழந்தை ரொம்ப அட்வன்ஸ்டு அதனால, டபுள் ப்ரோமோஷன் கொடுங்க என்று நச்சரிக்க வேண்டும்.
  9. அவர்கள் உங்கள் தொல்லை தாங்க  முடியாமல் ஒன்று உங்கள் குழந்தையை டபுள் ப்ரொமோட் செய்யலாம், அல்லது உங்கள் குழந்தையை வேறு பள்ளியில் சேர்க்க சொல்லி விடலாம். எதற்கும் தயாராக இருக்கவும்.
  10. அப்படி உங்கள் குழந்தை டபுள் ப்ரொமோட் செய்ய பட்டால், உடனே உங்கள் குழந்தையுடன் படித்த அடுத்த குழந்தைகளின் பெற்றோருக்கு போனை போட்டு, ஏன் உங்க குழந்தை ப்ரொமோட் ஆகல என்று துக்கம் விசாரிக்க வேண்டும்.அதோடு விடாமல் உங்கள் குழந்தையிடம்.."நீ வேற கிளாஸ் போயிட்ட அதனால பழைய நண்பர்களுடன் விளையாடாதே " என்று கண்டிப்பாக சொல்லவும்.
 அவ்வளவே!! அறிவாளி குழந்தை நீங்கள் தயாரித்து விட்டீர்கள். வாழ்த்துகள்.

13 comments:

ப.கந்தசாமி said...

மொத்தத்தில அவனை உதவாக்கரைப்பிள்ளை ஆக்கிடரதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, பண்ணுங்க, கடவுள்தான் அந்தக் குழந்தையைக் காப்பாத்தணும்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... இதுவல்லவோ சிறந்த "தாயாரிப்பு..."

Avargal Unmaigal said...

அட நீங்க இதை முன்னாலேயே எழுதி இருக்கலாமே நான் நீங்க சொன்னதற்கு எதிர் மாறாக வழக்கிறேன். அப்ப என் குழந்தை அறிவாளியாக சான்ஸ் இல்லையா? வீக்கெண்ட் அதுவும் என்னை சோகத்தில் மூழ்க வைச்சுட்டீங்களே ஹூம்ம்ம்ம்ம்

எதாவது ஷார்கட் இருந்தால் பதிவாக போடவும்

Ranjani Narayanan said...

அப்பாடா! காமெடி பதிவா? உண்மையிலே பயந்துட்டேன்.

கோமதி அரசு said...

முகுந்த் அம்மா எங்கே இவ்வளவு நாளாய் காணோம்!
நல்ல தயாரித்தார்கள் போங்க, குழந்தையை குழந்தையாய் இருக்க விட்டால் போதும்.

Thekkikattan|தெகா said...

ஹாஹாஹா... முகுந்தம்மா என்ன கொடுமையிது!

ஆங்கில அகராதியில இருக்கிற அத்தனை வார்த்தையும் அந்த சின்ன மண்டைக்குள்ளர வைச்சு திணிதிணின்னு திணிக்க பாத்ரூமுகுள்ளர போயி நுழைஞ்சிட்டாலும், கதவுக்கு வெளியில நின்னு வார்த்தை சொல்லி ஸ்பெல் அவுட் செய்யச் சொல்லுற கொடுமையெல்லாம் லிஸ்ட்ல இல்லையே... :))

பாவம் கொயந்தக!!

Agila said...

செம காண்டுல இருக்கீங்க போல.. :))

வருண் said...

உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பதிவு!! எதிர்பார்க்கவே இல்லை!

அடுத்தவர்கள் தங்கள் குழந்தையை எப்படி வளர்த்தால் நமக்கென்ன? நம்ம குழந்தையை நமக்கு எப்படி வளர்க்கணும்னு தோனுதோ அதன்படி வளர்ப்போமே?

These days people are worried about other issues..

* They want their child to be "normal" in their sexual orientation.

* They want their child to be healthy

* They want their child to be NOT SOCIALLY AWKWARD!

* They want their child not to get involved in drugs..

These are the things people worry about when they are bringing up their child! :)

Anna said...

Loved your sarcarsm. யாராவது hi-fi ஆன இலங்கைத் தமிழர் வீட்டை போனீர்களா? :)

Welcome back!

முகுந்த்; Amma said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

வேலை பளுவால் சில மாதங்கள் பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. விசாரித்த அனைவருக்கும் நன்றி.

முகுந்த்; Amma said...

என்ன இப்படி ஒரு பதிவு, இப்படி எல்லாம் நடக்குமா?, என்று நினைப்பவர்களுக்கு.

நான் மேல் எழுதியவை அனைத்தும், இங்கு நான் சந்தித்த பல குடும்பங்களில் நடக்கிறது. அது தமிழ், தெலுங்கு, கன்னடம்..என்ற எந்த மொழி வேறுபாடும் இல்லாமல், இந்திய குடும்பங்களில் நடக்கிறது. சொல்லப்போனால் நான் சந்தித்த சில ஆசிய பெற்றோர்கள் கூட, பிள்ளைகளை அறிவாளி ஆக்குகிறேன் பேர்வழி என்று, மேலே சொன்ன அனைத்தும்,இன்னும் தெகா சொன்னது போல..பாத்ரூம் கூட போக விடாமல் “ஸ்பெல் டெஸ்ட்” நடத்துகிறார்கள்.

அனைத்து குடும்பங்களும் இப்படித்தான் என்று பொதுவாக இதனை எடுத்துக்கொள்ளா விட்டலும், இதனை போன்ற ஒரு "competetive" நோச்சர் பல பெற்றோர்களிடம் காண முடிகிறது.

அவர்கள் வாழ நினைத்ததை தம் குழந்தைகள் மூலம் வாழ்ந்து விடவேண்டும் என்ற நினைப்பு காரணமாக இருக்கலாம். அல்லது இந்தியாவில் இருக்கும் போட்டி மனப்பான்மை இங்கும் வளர்க்க பார்கிறார்களா என்று தெரியவில்லை.




முகுந்த்; Amma said...

போட்டி மனப்பான்மை தவறு என்று நான் இங்கு சொல்ல வரவில்லை..ஆனால் அகாடெமிக் ஆக மட்டும் ஒரு குழந்தை அறிவாளியானால் வாழ்க்கையில் வென்றுவிடும் என்று பல பெற்றோர் நினைப்பது தவறானது.

சோசியல் ஸ்கில்ஸ்ம் முக்கிய தேவை என்பது பலருக்கு புரிவதில்லை.

வெறும் புத்தகப்புளு வாழ்க்கையில் வெல்ல முடியாது.

முகுந்த்; Amma said...

வருண் அவர்களுக்கு

”அடுத்தவர்கள் தங்கள் குழந்தையை எப்படி வளர்த்தால் நமக்கென்ன? நம்ம குழந்தையை நமக்கு எப்படி வளர்க்கணும்னு தோனுதோ அதன்படி வளர்ப்போமே”


உண்மை தான்...ஆனால் அடுத்தவர்கள் நம்மிடம் அறிவுரை சொல்வது போல துக்கம் விசாரிக்காதவரை, அவர்கள் எப்படி குழந்தையை வளர்த்தாலும் நமக்கு தேவை இல்லை தான்.

ஆனாலும், எதோ தாம் சாதித்து விட்டது போலவும், நமக்கு வாழ்க்கையில் முன்னேற விருப்பம் இல்லாதது போலவும், அவர்கள் நினைப்பது நடத்துவது கண்டு கடுப்பாகி எழுதிய பதிவு இது.


என்னை பொருத்தவரை...அவரவர் சுதந்திரத்தில் தலையிடாதவரை, எனக்கு அடுத்தவர்கள் அவர்கள் குழந்தைகளை எப்படி வளர்த்தால் தான் என்ன?

ஆனால் தான் மட்டுமே சாமர்த்தியம், அடுத்தவன் பைத்தியக்காரன் என்று நினைப்பவர்களை கண்டு எள்ளத்தான் முடிகிறது.