Sunday, October 28, 2012

பேனை பெருமாளாக்குவது எப்படி?


1910 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த பான்ச்சோ வில்லா ஒரு திருட்டு கும்பலை அமைத்துக்கொண்டு ரயில்களில் திருடுவது, பணக்காரர்களிடம் திருடுவது, கொலைகள் செய்வது என்று ஒரு ராபின் ஹீட் போல செயல் பட்டு வந்தான். மெக்ஸிகோ நாட்டின் ஜெனரெல் காரென்ஸ்ஸா, வில்லாவை தோற்கடித்து கட்டுக்குள் வைத்து இருந்தார்.

1916 ஆம் ஆண்டு மறுபடியும் தலை எடுக்க நினைத்த வில்லா, கொலம்பஸ், நியூமெக்ஸிகோ நகரத்தை சூறையாடி 17 அமெரிக்க ராணுவத்தினரை கொன்றனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வில்சனிடம் அவருடைய மந்திரிகள் வில்லாவை ஒழிக்க படையை அனுப்பும் படி செய்தனர். ஒரு சிறு திருட்டு கும்பலை அழிக்க பத்தாயிரம் படை வீரர்களை அனுப்பினர்.  அத்தனை பேருக்கும் தண்ணி காட்டி வில்லா தப்பிக்க தப்பிக்க எல்லாருக்கும் பத்திரிக்கைகளுக்கும், ஊருக்கும் அது பெரிய தலைப்பு செய்தியாகி விட்டது.  நாட்கள் செல்ல செல்ல வில்லாவின் தவறை மறந்த மக்கள் அவன் தப்பிக்கும் திறமையை மெச்ச ஆரம்பித்து விட்டனர். ”ஆனானப்பட்ட அமெரிக்காவிற்கே கண்ணுல விரலை விட்டு ஆட்டுறான் பாரு” என்று அனைவரும் மெச்ச அவன் திருட்டையும் கொலைகளையும் மறந்த மக்கள் அவனை ஒரு தலைவன் என்று கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் அமெரிக்காவுக்கோ இது பெரிய அவமானமாகி விட்டது.  வில்லா தலைக்கு $50,000 பணம் என்று அறிக்கை விட்டாலும் யாரும் வில்லாவை பிடித்து தர தயாராக இல்லை.  முடிவில் வில்லாவை பிடிக்க முடியாமல் அவர்கள் திரும்பவேண்டி இருந்த போது இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஒன்னேகால் லட்சம் வீரர்களாகி இருந்தது. இப்படி வீரர்களின் உயிரையும், பணத்தையும் செலவிட்ட வில்சன் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தி அவர் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாகி விட்டது.

தன்னுடைய பவரை காட்ட ”ஒரு கொசுவை பிடிக்க யானையை அனுப்புவது போல” படையை அனுப்பும் போது வில்சன் “என்கிட்ட மோதாதே!, நான் அமெரிக்கா, அமெரிக்காவிடம் மோதினால் என்ன நடக்கும் என்று காட்டுகிறேன் பார்?” என்ற மமதையுடன் அனுப்பினார்.

ஆனால், அது வில்லாவுக்கு சாதகமாக அமையும் என்று அவர் எதிர் பார்த்து இருக்கமாட்டார்.

வில்சன் படையை அனுப்புவதற்கு முன் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த வில்லாவின் பெயர்.. “அட அமெரிக்காவையே ஆட்டுறவர் டா” என்று அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது.

வெறும் பேனாக இருந்த வில்லா பெருமாள் அளவுக்கு ஊதி பெரிதாக்கப்பட்டார்.

இப்படிபட்ட பேன்களை சரிகட்ட என்ன செய்திருக்கலாம் வில்சன்

“உதாசீனப்படுத்தி இருக்கலாம்”. ஒன்றுமில்லா எதிரியை உதாசீனப்படுத்துவது மட்டுமே நல்ல பழிவாங்குதலாகும். அதுவே அந்த எதிரியை வளர விடாமலும் செய்யும். தமக்கு சமமில்லாத எதிரிக்கு ஒருவர் முக்கியத்துவம் கொடுத்து போர் தொடுப்பதோ இல்லை பழிவாங்குதலோ அந்த எதிரியின் பவரை அதிகப்படுத்துமே ஒழிய, எதிரியை ஒழிக்காது.

"Making a big deal out of a petty problem just fuels it and turns it into something worse." Robert Greene