Tuesday, October 28, 2014

போலியோ இல்லா உலகம், நன்றி Dr. ஸால்க் அவர்களே!

இன்று கூகுள் திறந்தவுடன் கண்ணில் பட்டது Dr. ஸால்க் அவர்களின் நூறவது பிறந்தநாள் வாழ்த்து .  Dr. ஸால்க்  என்றவுடன் பலருக்கு யாரென்று தெரிய வாய்ப்பில்லை, ஆனால் பல கோடி குழந்தைகளை ஊனமாகாமல் காப்பாற்றிய பெருமை உடையவர் அவர். பிஞ்சு குழந்தைகளை ஊனமாக்கிய போலியோ வைரஸ்க்கு தடுப்பு ஊசி கண்டுபிடித்தவர் அவர்.

Source: Google doodle

1939 ஆம் ஆண்டு மருத்துவ பட்டம் பெற்று மருத்துவராக நியூயார்க் நகர மவுண்ட் சினாய் மருத்துவமனையில் தனது ஆராய்ச்சியை தொடங்கிய அவர் 1947 ஆம் ஆண்டு பிட்ச்புர்க் பல்கலைகழகத்தின் வைரஸ் ஆராய்ச்சியை தொடங்கினார்.

மனித உடலில் செயல் இழந்த வைரஸ்களை செலுத்தி எதிர்ப்பு சக்தியை தூண்டும் முறையைபயன்படுத்தி  அதனை தடுக்கும் முறையை கண்டுபிடித்தவர் இவர். இதுவே பல நோய் தடுப்பு ஊசிகளை கண்டுபிடிக்க உதவியது.

இவரின் ஆராய்ச்சி பின்பு National Foundation for Infantile Paralysis எனப்படும் குழந்தைகள் முடக்குவியாதி தடுப்பு ஆராய்ச்சி கூடத்தின் தலைவர் Basil O'Connor ன் கண்ணில் பட்டது. அவர், குழந்தைகள் முடக்கு வியாதியான போலியோவிற்கு மருந்து தயாரிக்க கேட்டுகொண்டார்.

ஸால்க் கண்டுபிடித்த தடுப்பு ஊசியானது முதலில் குரங்குகளில் பரிசோதிக்கப்பட்டு பின்பு 1954 ல் ஆறிலிருந்து ஒன்பது வயது வந்த பத்து லட்சம் குழந்தைகள் மீது பரிசோதிக்கப்பட்டது. ஏப்ரல்  12, 1955 இந்த போலியோ மருந்து பயனுள்ளது, பாதுகாப்பானது என்று அறிவிக்க பட்டது.

 மருந்து வெளிவருவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வரை அமெரிக்காவில் 45,000 மேற்பட்ட குழந்தைகள் போலியோவால் பாதிக்க பட்டு இருந்தனர் அது இரண்டு வருடங்களில் 910 ஆக குறைந்தது. தற்போது பல நாடுகள் இந்தியா உற்பட போலியோ இல்லாத நாடாக WHO ஆல்  அறிவிக்க பட்டு இருக்கிறது.

பல நாட்டு குழந்தைகளை ஊணமாக்காமல் காப்பற்றி புது வாழ்வு அளித்த Dr.ஸால்க் அவர்கள் இந்த தடுப்பு ஊசி கண்டுபிடித்ததை காப்புரிமை கூட செய்யவில்லை. இதனால் ஒரு சதவீதம் கூட பண பயன் பெறவில்லை. தன்னுடைய ஆராய்ச்சியை உலக நன்மைக்கு மட்டுமே பயன்படுத்தியவர் ஆவார்.

அவருடைய நூறாவது பிறந்த நாளில் அவருக்கு நம்முடைய மனதார நன்றியை தெரிவிப்போம்.

நன்றி.




Tuesday, October 21, 2014

எபோலா வைரஸு க்கு மருந்து ஏன் இன்றுவரை இல்லை!

தற்போது உலகளவில் பயமுறுத்தும் ஒரு சொல் "எபோலா வைரஸ்", கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆப்ரிக்கா நாடான  காங்கோ நாட்டில் கண்டுபிடிக்கபட்டது.

மைக்ரோஸ்கோபில் பார்க்கும் போது , சின்னம்மை வைரஸ் அல்லது ஃப்ளு வைரஸ் போன்ற ஒரு தோற்றம் கொண்ட இந்த வைரஸ் , ஃப்ளு போன்று மூச்சுகுழாயை தாக்கும்  (upper respiratory infection) வைரஸ் ஆக இல்லாமல் உடலின் எந்த ஒரு செல்லையும், உறுப்பையும் தாக்கும் திறன் கொண்டது. 




எப்படி பரவும் ?

எபோலா வைரஸ் எங்கிருந்து உண்டானது என்பது இன்னும் அறியமுடியாவிட்டாலும், தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட வைரஸ் பரவலானது ஒரு மிருகத்தில் இருந்து மனிதருக்கு பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சரி, இது எப்படி பரவுகிறது என்றுபார்க்கலாம்? நோய்வாய்ப்பட்ட மனித உடலில் இருந்து வெளியேறும் திட,திரவங்கள் மூலம் இது எளிதில் பரவலாம். அவை சிறுநீர், எச்சில், வேர்வை, மலம்,  வாந்தி , தாய்பால்  , ரத்தம் மற்றும் விந்து.  நோய்வாய்ப்பட்ட மிருகத்தில் இருந்தும் இது பரவலாம்.  நோயாளிகள்  உபயோகபடுத்திய ஊசி மூலமும் இவை பரவும் தன்மை வாய்ந்தது. 

எந்த உறுப்பிலும் நுழைந்த உடன் தன்னை பல பிரதி எடுத்து உடனடியாக அந்த உறுப்பின் முதல் 
பாதுகாப்பு கவசமான T-cells அழித்துவிடும். பின்பு, அந்த உறுப்பை செயலிழக்க செய்து, மரணத்தை ஏற்படுத்தவல்லது. 

எப்படி பரவாது?

இந்த வைரஸ் காற்றின் மூலமும் நீரின் மூலமும் பரவாது. உணவின் மூலமும் பரவாது. அதனால், நோய் வாய்ப்பட்ட  மனிதர் இருக்கும் இடத்தில் காற்றை சுவாசிப்பதால் இது பரவாது. கொசு மற்றும் பூச்சி கடிப்பதாலும் இது பரவாது.

என்ன அறிகுறிகள்?

நோய் கிருமி தாக்கிய அவரவர் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப 2 முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கலாம். அவை, காய்ச்சல், கடுமையான தலைவலி, உடம்பு வலி, சோர்வு, வயிற்றுபோக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி போன்றவை.

ஏன் மருந்து இல்லை?

இத்தனை வருடங்களில் ஏன் இதற்கென்று ஒரு மருந்து அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை?  பல காரணங்கள் உண்டு என்றாலும் ஒரு சில மருத்துவ காரணங்கள் இங்கே.,, 

முதல் காரணம் , இது வைரஸ் என்பதால், வெகு சீக்கிரம் தன்னை தகவமைத்து கொண்டு (mutates) மாற்றி கொண்டு விடுகிறது.

இரண்டாவது காரணம்,  இது பல உறுப்புகளை தாக்கவல்லது என்பதால், உறுப்பை சார்ந்த மருந்துகளை செலுத்துவது, கண்டு பிடிப்பது சில நேரங்களில் கடினமானது.

இப்போது மருத்துவம் தாண்டிய பொருளாதாரம் சார்ந்த ஒரு காரணம். 

இது, HIV போலவோ, கான்செர், ஃப்ளு, சின்னம்மை போன்ற  அதிகம் அறியப்பட்ட "high profile" நோய் அல்ல. அதனாலே, இதற்க்கான மருத்துவ ஆராய்ச்சிக்கு அதிகம் செலவிடப்படவில்லை. அதனை தவிர, உலகின் உள்ள பல மருந்துகளை தடுப்பூசிகளை தயாரிக்கும் பெரிய மருத்துவ நிறுவனங்கள் இந்த நோயை அதிகம்  கண்டு கொள்ளவில்லை, காரணம் இது நிகழ்ந்தது ஏழை நாடுகளை கொண்ட ஆப்பிரிக்க கண்டத்தில், அங்கு மருந்துக்கான  மார்க்கெட் இல்லை என்று அவர்கள் நினைத்ததால்.

தற்போது உலகமெங்கும் இந்த நோய் பரவும் ஆபத்து இருப்பதால், இதற்கான மார்க்கெட் நன்றாக இருக்கும் என்று அனைவரும் நினைத்ததால், நீ, நான் என்று அனைவரும் போட்டி போட்டு கொண்டு இந்த வைரஸ்காண தடுப்பூசி கண்டுபிடிக்க முனைகிறார்கள். இதனை சில வருடங்களுக்கு முன்பு செய்திருந்தால் பல ஆயிரம் உயிர்கள் போவது தடுக்கபட்டு இருக்கலாம்.  

நன்றி 

References

http://www.cdc.gov/vhf/ebola/
http://www.mirror.co.uk/news/world-news/ebola-virus-symptoms-start-sore-3933920
http://www.huffingtonpost.com/2014/08/05/big-pharma-ebola_n_5651855.html