Friday, April 8, 2011

குழந்தையின்மை ஒரு நோயா?- 1



சென்ற சில மாதங்களாக பதிவுகள் பக்கம் வர இயலவில்லை. தற்செயலாக என்னுடைய இடுகைகள் ஸ்டேட்ஸ் பற்றி பார்த்த போது தினப்படி குறைந்தது பத்து தடவையாவது என்னுடைய முந்தய இடுகையான குழந்தையின்மைசிகிச்சை வியாபாரமாக்கபடுகிறதா? என்ற இடுகையை பலர் படித்திருப்பது அறிய முடிகிறது.

நேற்று என் அம்மாவிடம் உறவுக்காரர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த போது அதில் என் வயதொத்த சிலர் குழந்தையில்லாமல் மிகவும் சிரமப்படுவதாக அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள். எனக்கு தெரிந்தே இங்கு வசிக்கும் எங்கள் நண்பர்கள் சிலர் பல வருடங்களாக குழந்தைக்கு முயற்சி செய்து எதுவும் நடக்காமல் வாழ்க்கை வெறுத்து இருப்பதை கண்ணார கண்டிருக்கிறேன்.

முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குழந்தையின்மை பிரச்சனை இப்போது ஆங்காங்கே நிறைய காண, கேட்க முடிகிறது. நான் மட்டும் தான் இப்படி அடிக்கடி கேட்கிறேனா? இல்லை, உண்மையில் நிலவரம் அப்படித்தான் இருக்கிறதா? போன்ற கேள்விகள் எனக்குள் எழாமல் இல்லை. இருப்பினும் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு வரை, குழந்தையில்லாமல் நூற்றில் ஒருவர் இருக்கிறார் என்ற நிலைமை போய் இப்போது நூற்றில் பத்து பேர் இந்த நிலையில் இருப்பதை அறிய முடிகிறது.

ஒரு சதவீதமாக இருந்த குழந்தையின்மை இப்போது பத்து சதவீதமாக எப்படி மாறி இருக்கிறது? யார் காரணம்? அவசர வாழ்க்கைக்கும், பாஸ்ட் பூட் கலாச்சாரத்திற்கும், ஒயிட் காலர் வேலைக்கும் நாம் கொடுத்த கூலிகளா இவை? என்பது போன்ற பல கேள்விகள் என்னுள் எழுவது உண்டு.

குழந்தையின்மைக்கு ஆண்கள் சில நேரம் காரணமாக இருப்பினும், அது பெரிது படுத்தபடாமல் "பிள்ளை பெத்து போட முடியாத மலடி" என்று ஊராரால் பெண்களின் மீதே பலி போடப்படுகிறது. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆணுக்கு குறைபாடு இருந்திருக்கிறது, ஆனால் அதனை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். பின்னர் குழந்தை இல்லை என்று அந்த பெண்ணை அவர்கள் படுத்திய பாடு இருக்கிறதே அப்பப்பா! சொல்லி மாளாது. கடைசியில் தாங்கமுடியாமல் அந்த பெண் விவாகரத்து வாங்கி விட்டார். இப்போது மறு திருமணம் செய்து அவருக்கு ஒரு பெண்குழந்தை இருக்கிறது.

இது சமூகத்தில் எப்படி குழந்தையில்லாமல் இருக்கும் பெண்களை நடத்துகிறார்கள் என்பதை உணர்த்தும் இடுகை அல்ல. குழந்தையின்மைக்கு என்னென்ன காரணங்கள் அறியப்பட்டிருக்கின்றன, அவற்றை எப்படி சரி செய்கிறார்கள் அல்லது என்னென்ன மருத்துவ முறைகள் கையாள்கிறார்கள் போன்ற மருத்துவ அறிவியல் சம்பந்தமான இடுகை இது.

இதனை ஒரு தொடர் போல எழுதலாம் என்று இருக்கிறேன். இது மருத்துவ ஆலோசனை அல்ல. குழந்தையின்மை குறித்த நான் படித்த, கேட்ட, அனுபவித்த என் அறிவுக்கு எட்டிய கருத்துக்கள் மட்டுமே இவை என்பதை முன்கூட்டியே இங்கு தெரிவித்து கொள்கிறேன்.

மருத்துவ ரீதியாக பல காரணங்கள் குழந்தைஇன்மைக்கு காரணமாக இருந்தாலும் முக்கியமான காரணமாக நான் கருதுவது நமது உணவு பழக்க வழக்கங்களும், அதீத எடையும் தான். எப்படி இவை நம் உடம்பை பாதிக்கிறது, அதனை தவிர்ப்பது எப்படி என்பதை அடுத்து பார்க்கலாம்.

---தொடரும்

10 comments:

Chitra said...

Welcome back to the BLOG world! :-)

Avargal Unmaigal said...

நல்லபயனுள்ள தொடர் .....வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ எழுதுங்க.. சமீபத்தில் ஆறேழு வருடங்களாக குழந்தைல்லாம இருந்த என் தோழியும் உறவினர்களும் என பலர் நல்ல செய்திகளை அடுத்தடுத்துச் சொன்னார்கள்.நடுவில் இத்தனை வருடங்களில் அவர்களின் மனவலி என்ன என்பதை நான் அறிவேன்.

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

அவசியம் ஒரே இடத்தில் தொகுத்து வழங்கப்பட வேண்டிய ஒன்று. தொடருங்க!

நேற்று மாற்று மரபணு சம்பந்தமான எனது பதிவில் கரவை மாடுகளில் வளர்ச்சி ஹார்மோன்கள் போடப்படுவதின் விளைவாக நமக்கு கிடைக்கும் பக்க விளைவு வியாதிகளான புற்று நோய், மற்றும் இனப்பெருக்க சம்பந்தமான கோளாறுகளும் வந்து சேருவதாக தெரிந்து கொள்ள முடிந்தது.

இது போன்ற பல உணவு பழக்க வழக்க மாற்றங்கள் கொண்டு வந்து சேர்ப்பதும் 10ல் இரண்டாக உயர்ந்ததிற்கு காரணமாக அமையலாம்.

Bibiliobibuli said...

அறிய ஆவல் தொடருங்கள், மீண்டும் வருகிறேன்.

ராமலக்ஷ்மி said...

அவசியமான பகிர்வு. தொடருங்கள்.

Anna said...

Looking forward to reading this series.

துளசி கோபால் said...

அடடா..... என்ன ஒரு அருமையான பதிவு!!!!!

தாமதமாக வந்ததுக்கு மன்னிக்கணும்.

இந்த நோய் வந்தவங்க படும் அவமானம் இருக்கே..... சொல்ல முடியாதுங்க. அதுவும் மற்ற பெண்கள் நம்ம காது கேட்கும்படியான பழிச்சொற்களை வீசுவாங்க பாருங்க...மனசு அப்படியே வெடிச்சுப் போயிரும்.

எத்தைத்தின்னாப் பித்தம் விலகுமுன்னு யார் என்ன வைத்தியம் சொன்னாலும் செய்வோம். ஆராய்ஞ்சு பார்க்க அறிவு வேலை செய்யாது....

தாங்க முடியாமத்தான் இந்தியாவை விட்டுப்போக முடிவு செஞ்சேன்:(

dr prabhu +91 9488472592 said...

பகிர்வு. தொடருங்கள். DR PRABHU 91,9488472592