Saturday, November 13, 2010

பெண்களும் சுதந்திரமும்

இன்று நான் பார்த்த பெண் சுதந்திரம் மற்றும் கலாச்சாரம் குறித்த சில இடுகைகளை படித்த பிறகு எனக்குள் எழுந்த எண்ணங்களின் விளைவே இந்த இடுகை.

தற்போது இருக்கும் பெண்களுக்கு பொது அறிவு தெரியவில்லை அல்லது அரசியல் குறித்தோ அல்லது ஆட்சி குறித்தோ அறிந்திருக்க வில்லை. அவர்களுக்கு சுதந்திரம் என்றாலே என்ன என்று தெரியவில்லை. தெரிந்தால் தானே அவர்களுக்கு சுதந்திரம் தர முடியும்?. இவ்வாறெல்லாம் ஜோதிஜி அவர்களின் தளத்தில் பெண்கள் குழந்தைகள் கொஞ்சம் சுதந்திரம் என்ற இடுகையில் படிக்க நேர்ந்தது.

ஒரு விவாதத்திற்காக கீழ் காணும் ஒரு சூழல் நடப்பதாக வைத்துக் கொள்வோம்.

குடும்ப தலைவி ஆக இருக்கும் ஒரு பெண் அரசியல் குறித்து பேச ஆரம்பிக்கிறார் அல்லது இந்திரா நூயி குறித்து பேச ஆரம்பிக்கிறார் அல்லது நிறைய அரசியல் பற்றியோ அல்லது பொது அறிவு பற்றியோ படித்து தெரிந்து கொள்கிறாள்.

தான் அறிந்து கொண்டதை, அவள் கணவரிடம் தன்னுடைய நிலைப்பாடு குறித்தோ அல்லது எப்படி ஆட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்றோ பேச தலைப்படுகிறாள் என்று வைத்து கொள்வோம். எத்தனை கணவன் மார்கள் அதனை விரும்புவார்கள்?.

ஒரு சமயம் தன்னுடைய கணவனை விட உலக அறிவு அதிகம் தெரிந்து கொண்டாள் என்று வைத்து கொள்வோம் எத்தனை பேர் "பரவாயில்லையே! என்ன விட உனக்கு நிறைய தெரியுதே?" என்று ஊக்குவிப்பார்கள். அல்லது பிறரிடம் சொல்லி சந்தோஷ படுவார்கள்.

நான் சிறு வயதில் இருந்து பார்த்த சில சொந்தங்களையே இதற்க்கு பதிலாக தர விளைகிறேன்.

என் அம்மாவுக்கு நிறைய விஷயம் தெரியும், எப்படி பேசுவது, முடிவெடுப்பது, சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி.
அவர்களை போல தைரியமானவர்களை நான் பார்த்ததில்லை (என் பிரசவதிற்க்காக அமெரிக்காவுக்கு யார் துணையும் இன்றி தனியாக இரண்டு விமானம் மாற்றி வந்தார்) .

ஆனால் என் அப்பாவை பொறுத்த வரை தெருவில் நடந்து போகும் போது கூட என் அம்மா என் அப்பாவிற்க்கு முன்னால் நடந்து செல்ல கூடாது, பத்தடி பின்னால் வர வேண்டும். எதேனும் ஒரு விடயத்தை பற்றி என் அம்மா தன் கருத்தை என் அப்பாவிடம் சொன்னால் உடனே வரும் விடை “ஆமா, இவ எனக்கு முன்னால பிறந்தவ, ரொம்ப தெரியும் பாரு”.

என் தாத்தா வீட்டில் அடுக்களையை விட்டு என் அத்தை வந்ததில்லை. என் தாத்தா முன்பு எந்த பெண்ணும் உட்கார கூடாது. எதோ நான் சொல்வதெல்லாம் அறுபதுகளில் நடந்தது என்று நினைப்பவர்களுக்காக “இது இப்போதும் எங்கள் வீட்டில் நடந்து கொண்டிருப்பது”.

"பொண்ண இவ்வளவு படிக்க வைக்கிறயே எதுக்கு, எப்படியும் இன்னொரு வீட்டுக்கு போக போறா, அவளுக்கு இவ்வளவு செலவு பண்ணனுமா, இந்த செலவுக்கு பதிலா ரெண்டு பவுனு வாங்கி வச்சிருக்கலாம்"

இதெல்லாம் சின்ன வயதில் நான் கேட்ட வார்த்தைகள். என் அம்மாவிடம் வழங்கப்படும் என்னை சார்ந்த அறிவுரைகள்.

பெண்கள் பொது அறிவு பேச வேண்டும் ஆனால் அதிகம் பேச கூடாது. நிறைய சிந்திக்க வேண்டும் ஆனால் தன்னை விட அதிகம் சிந்திக்க கூடாது. இதெல்லாம் என்ன நியாயம்.

நீங்கள் சொல்வதெல்லாம் நான்சென்ஸ் நான் என் மனைவியை சரி சமமாக மதிக்கிறேன் என்று சொல்பவரா நீங்கள், உங்களை நான் மதிக்கிறேன், போற்றுகிறேன். ஆனால் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்? மனதை தொட்டு சொல்லுங்கள்.


36 comments:

துளசி கோபால் said...

நம்ம வீட்டில் கதை வேற.....

நான் எப்பவும் முன்னால் போகணு(மா)ம். அப்பத்தான் பின்னால் நடந்துவரும் இவர் என்னை பத்திரமா இருக்கேனான்னு பாதுகாத்துக்கிட்டே வருவாராம்!

கேரளாவில் இப்பவும் இருக்கும் ஒரு சம்பிரதாயம்.....வீட்டுத் திண்ணையில் பெண்கள் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தால்.....வீட்டிற்கு வருபவர் ஆணாக இருந்தால் உடனே எந்திரிச்சு நிப்பாங்க.

மணிச்சேச்சி, அம்மா எல்லோரும் கோபாலைப் பார்த்தவுடன் எந்திரிக்கும்போது எனக்கு வல்லிய சங்கடம் கேட்டோ!

தமிழ் உதயம் said...

ஒவ்வொரு விஷயங்களும், ஆணின் பார்வைக்கு ஒரு மாதிரியும், பெண்ணின் பார்வைக்கு வேறு மாதிரியும் படுகிறது. நியாயங்களை எடுத்து கொள்ளலாம்.

ஜோதிஜி said...

ரொம்ப சந்தோஷம். உங்கள் விளக்கமும் ஏற்புடையதே. எப்போதும் ஒருவருடைய பாதிப்பில் உருவாவது தானே, ஆனால் கடைசியாக கொடுத்த வரிகளுக்கு நான் சொந்தக்காரன் தான். இன்று வரையிலும் என் மனைவியிடம் சொல்வது நிறைய கற்றுக் கொள், நிறைய பேசு, விவாதம் செய், முக்கியமாக அடுக்களைக்கு அப்பால் ஒரு உலகம் இருக்கிறது என்பதை புரிந்து கொள். ஆனால் விடை ம்ம்ம்ம்ம்ம்....

ஆனால் துளசி கோபால் சொன்னதை படித்து விட்டு சிரித்துக்கொண்டுருக்கின்றேன்.

நன்றிங்க முகுந்த் அம்மா

ஜெயந்தி said...

பப்புக்கு சென்று ஆடும், குடிக்கும் சில பெண்களை மட்டுமே எல்லோரும் உதாரணம் எடுத்துக்கொண்டு எல்லாப் பெண்களையும் எடைபோடும் போக்கே இப்போது உள்ளது. கோடிக்கணக்கான பெண்களின் நிலைமை இன்னும் வெளியே வராமல் இருக்கிறது.

ஹுஸைனம்மா said...

நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் (தந்தை தவிர்த்து) நடைமுறையில் நானும் காண்கிறேன். எனினும் பலரும் மாறி வருகிறார்கள். நம்பிக்கை இருக்கிறது. இருதரப்பிலும் மாற்றங்கள் வேண்டும்.

கோமதி அரசு said...

சிலர் நீங்கள் சொன்ன மாதிரி இன்னும் இருக்கிறார்கள்.

இப்போது மாறி கொண்டு இருக்கிறது உலகம்.

அபி அப்பா said...

இதை நீங்க ஏன் லேபிள்க நகைச்சுவைன்னு போடலை????

அபி அப்பா said...

மன்னிக்கவும் முகுந்த் அம்மா!

பெண்கள் இப்போது நீங்க சொல்வது போல இல்லை என சொல்லவே இப்படி ஹார்ஷா சொல்லிட்டேன்! மன்னிக்கவும்!

வருண் said...

நீங்க நல்ல தரமான கன்சர்வேடிவ் ஃபேமிலில இருந்து வந்து இருக்கீங்க போல! மகிழ்ச்சி!

***என் அம்மாவுக்கு நிறைய விஷயம் தெரியும், எப்படி பேசுவது, முடிவெடுப்பது, சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி.
அவர்களை போல தைரியமானவர்களை நான் பார்த்ததில்லை (என் பிரசவதிற்க்காக அமெரிக்காவுக்கு யார் துணையும் இன்றி தனியாக இரண்டு விமானம் மாற்றி வந்தார்) .

ஆனால் என் அப்பாவை பொறுத்த வரை தெருவில் நடந்து போகும் போது கூட என் அம்மா என் அப்பாவிற்க்கு முன்னால் நடந்து செல்ல கூடாது, பத்தடி பின்னால் வர வேண்டும். எதேனும் ஒரு விடயத்தை பற்றி என் அம்மா தன் கருத்தை என் அப்பாவிடம் சொன்னால் உடனே வரும் விடை “ஆமா, இவ எனக்கு முன்னால பிறந்தவ, ரொம்ப தெரியும் பாரு”.***

But he let you study, right? I think he might say so, but I am sure he has been listening to your mom without admitting it. :)))

Unknown said...

"நீங்கள் சொல்வதெல்லாம் நான்சென்ஸ் நான் என் மனைவியை சரி சமமாக மதிக்கிறேன் என்று சொல்பவரா நீங்கள், உங்களை நான் மதிக்கிறேன், போற்றுகிறேன். ஆனால் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்? மனதை தொட்டு சொல்லுங்கள்".

Right. Not many. நியாயமான கேள்விகள். ஒரு பெண் வீட்டிலோ, சமூகத்திலோ முன்னேற்றம் காண கல்வி, வேலை, பொருளாதாரச் சுதந்திரம் இன்றி அமையாதது.

Thekkikattan|தெகா said...

//தான் அறிந்து கொண்டதை, அவள் கணவரிடம் தன்னுடைய நிலைப்பாடு குறித்தோ அல்லது எப்படி ஆட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்றோ பேச தலைப்படுகிறாள் என்று வைத்து கொள்வோம். எத்தனை கணவன் மார்கள் அதனை விரும்புவார்கள்?.//

பயங்கரவாதத்தின் வேர் - இது :))

//ஒரு சமயம் தன்னுடைய கணவனை விட உலக அறிவு அதிகம் தெரிந்து கொண்டாள் என்று வைத்து கொள்வோம் எத்தனை பேர் "பரவாயில்லையே! என்ன விட உனக்கு நிறைய தெரியுதே?" என்று ஊக்குவிப்பார்கள். அல்லது பிறரிடம் சொல்லி சந்தோஷ படுவார்கள்.//

கேட்டீங்களே ஒரு கேள்வி, இது கேள்வி. அதை மக்கா எப்படித்தெரியுமா எடுத்துக்கோணும்னு நான் நினைக்கேன், தன் மனைவி மேலும், மேலும் புதிசு புதிசா படிச்சா நம்ம வீட்டுக்குத்தானே நல்லது. நான் பொசுக்குன்னு மண்டையை போட்டுட்டாலும் அவ பொழைச்சிக்குவா, புள்ள குட்டிகளையும் பார்த்துப்பான்னு நினைச்சிக்கிட்டா சரியாகிடும்.

ஒண்ணே ஒண்ணுங்க சந்தோஷமா இருக்கணும்னா, நான் மரணிக்கிறவன், என்னோட பயணம் மரணத்தை நோக்கியதின்னு தினமும் ஞாபகப்படுத்திக்கிட்டவே பொண்டாட்டிகிட்டயே ’ஈகோ’ பார்க்கிறது குறைஞ்சிடுமோ!

என் வீட்டில அரசியலும், அடிதடியும் பண்ணச் சொல்லி கெஞ்சிறேன் போங்க. அப்போதான் பர்சனலா ஒருத்தரை ஒருத்தர் சுரண்டிக்காம இருக்க முடியும் பாருங்க. That approach is an alternative hypothesis :D

குலோசிங் டச் செம!

வல்லிசிம்ஹன் said...

முகுந்த் அம்மா,பலவீடுகளில் நிலைமை முன்னேறி விட்டது. ஆனாலும் இன்னும் தெற்கில் போனால் ஒரு விநோதமான சூழ்நிலை பார்க்கலாம்.
தானாகவே கட்டுப்பட்டு வீட்டில் இருக்கும் பெண்கள்.கண்ணுக்குத் தெரியாத கயிற்றினால் கட்டுண்டவர்கள்.
உங்கள் அம்மா போலத்தான் என் அம்மாவும். எத்தனையோ அறிவாளி. ஆனால் தான் என் தந்தைக்கு மேற்பட்ட புத்திசாலி என்று எப்போதும் நாங்கள் உணர நடந்ததில்லை. இத்தனைக்கும் அப்பா மிக மென்மையானவர்.
என் தலைமுறையிலும் இருவரும் சமம் என்றே நம்புகிறேன்.
எனக்கு அப்புறம் இருக்கும் தலைமுறை பற்றி இனித்தான் கணிக்க வேண்டும்.:)

அமைதி அப்பா said...

மனைவிடம் ஜெயிப்பவர் வாழ்வில் தோற்றுப் போவார்;
மனைவிடம் தோற்றுப் போபவர் வாழ்வில் ஜெயிப்பார். இது அண்மையில் ஒருவர்(பெயர் சரியாக ஞாபகமில்லை) சொன்னதாக பத்ரிக்கையில் படித்தேன்.
நல்ல பதிவு.

குட்டிப்பையா|Kutipaiya said...

//தான் அறிந்து கொண்டதை, அவள் கணவரிடம் தன்னுடைய நிலைப்பாடு குறித்தோ அல்லது எப்படி ஆட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்றோ பேச தலைப்படுகிறாள் என்று வைத்து கொள்வோம். எத்தனை கணவன் மார்கள் அதனை விரும்புவார்கள்?//

பெரும்பாலான, சராசரியான ஆண்களின் மனப்பான்மை!!

முகுந்த்; Amma said...

வாங்க துளசி டீச்சர்

//நான் எப்பவும் முன்னால் போகணு(மா)ம். அப்பத்தான் பின்னால் நடந்துவரும் இவர் என்னை பத்திரமா இருக்கேனான்னு பாதுகாத்துக்கிட்டே வருவாராம்!//

படித்து பார்த்து சிரிச்சிட்டு இருந்தேங்க.

//கேரளாவில் இப்பவும் இருக்கும் ஒரு சம்பிரதாயம்.....வீட்டுத் திண்ணையில் பெண்கள் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தால்.....வீட்டிற்கு வருபவர் ஆணாக இருந்தால் உடனே எந்திரிச்சு நிப்பாங்க.//

இதே போன்றதொரு சம்பிரதாயம் நானும் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன்.

//மணிச்சேச்சி, அம்மா எல்லோரும் கோபாலைப் பார்த்தவுடன் எந்திரிக்கும்போது எனக்கு வல்லிய சங்கடம் கேட்டோ!//

உண்மை தான், சங்கடமாகவே இருக்கும்.

கருத்துக்கு நன்றிங்க.

முகுந்த்; Amma said...

@தமிழ் உதயம்

//ஒவ்வொரு விஷயங்களும், ஆணின் பார்வைக்கு ஒரு மாதிரியும், பெண்ணின் பார்வைக்கு வேறு மாதிரியும் படுகிறது. நியாயங்களை எடுத்து கொள்ளலாம்.//

உண்மைங்க, ஆண்களின் கண்ணோட்டமும் பெண்களின் கண்ணோட்டமும் சில விசயங்களில் வேறு மாதிரி இருப்பதுண்டு.

நாங்கள் எமோசனாலாக எதையும் யோசிப்பவர்கள். நிறைய நேரங்களில் அடுத்தவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசிச்சு காரியங்கள் செய்வதுண்டு. அதுவே சில நேரங்களில் தவறாக போய் விடுவதும் உண்டு.

நன்றிங்க.

முகுந்த்; Amma said...

@ஜோதிஜி

//ரொம்ப சந்தோஷம். உங்கள் விளக்கமும் ஏற்புடையதே. எப்போதும் ஒருவருடைய பாதிப்பில் உருவாவது தானே//

உண்மை. எனக்கு தோன்றியதை நான் சந்தித்த சிலரை பற்றி எழுதி இருக்கிறேன்.

//ஆனால் கடைசியாக கொடுத்த வரிகளுக்கு நான் சொந்தக்காரன் தான். இன்று வரையிலும் என் மனைவியிடம் சொல்வது நிறைய கற்றுக் கொள், நிறைய பேசு, விவாதம் செய், முக்கியமாக அடுக்களைக்கு அப்பால் ஒரு உலகம் இருக்கிறது என்பதை புரிந்து கொள். ஆனால் விடை ம்ம்ம்ம்ம்ம்....//

உங்கள் மனைவியின் மன நிலையில் இருந்து இதனை அனுக வேண்டும் என்றே நினைக்கிறேன். அவர்களின் எண்ணம் வேறேதாவது இருக்கும்.

என்னை பொருத்தவரை எதனையும் யார் மீதும் திணிக்க கூடாது. அவர்களை அவர்களாகவே விட்டு விடுவது அல்லது ஏற்றுக்கொள்வது தான் சிறந்தது. அதுவே அவர்களுக்கு நாம் கொடுக்கும் சுதந்திரம் என்பது என் கருத்து.

என்னை இப்படி ஒரு இடுகை எழுத தூண்டியது உங்கள் இடுகை தான். அதற்கு என் நன்றிகள்.

முகுந்த்; Amma said...

வாங்க ஜெயந்தி

//பப்புக்கு சென்று ஆடும், குடிக்கும் சில பெண்களை மட்டுமே எல்லோரும் உதாரணம் எடுத்துக்கொண்டு எல்லாப் பெண்களையும் எடைபோடும் போக்கே இப்போது உள்ளது. கோடிக்கணக்கான பெண்களின் நிலைமை இன்னும் வெளியே வராமல் இருக்கிறது.//

உண்மை. எப்போதும் கெட்ட விசயங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு அதுவே பெரிது படுத்தப்படுகிறது. ஏன் இந்த நிலை என்று தெரியவில்லை.

நன்றிங்க.

முகுந்த்; Amma said...

இந்த இடுகை மூலம், எதோ என் தந்தையை பற்றி நானே தவறாக எழுதி இருப்பது போன்று சிலர் நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

என் தந்தையிடம் இதனை பற்றி எத்தனையோ தடவை நானே கேட்டு இருக்கிறேன்/சண்டை கூட போட்டு இருக்கிறேன். அதற்கு அவர், அப்படி இருந்தா தான் வீடு நல்லா இருக்கும் என்று சிரித்து கொண்டே கூறுவார். இன்னொரு விசயம் என்னவென்றால் இதனை எல்லாம் அவர் என் அம்மாவிடம் மட்டும் தான் செய்வார். என்னிடம் அல்ல. தன்னுடைய மனைவி தன்னை நன்கு புரிந்து கொண்டவள், ஒன்றும் நினைத்து கொள்ள மாட்டாள் என்ற எண்ணமே இதற்கு காரணம்.

அவர்கள் காலத்தில் எல்லாம் இதெல்லாம் ரொம்ப சகஜம். அதனை என் அம்மாவும் பெரிதாக நினைத்து கொள்ள மாட்டார்கள், சிரித்து கொண்டே சென்று விடுவார்கள்.

இன்னொரு விசயமும் இதில் உண்டு. என் தந்தை என் அம்மாவை இப்படி சொல்லி, மறைமுகமாக நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள ஊக்குவித்தார் என்று சொல்ல முடியும்.

முகுந்த்; Amma said...

வாங்க ஹுஸைனம்மா

//நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் (தந்தை தவிர்த்து) நடைமுறையில் நானும் காண்கிறேன். எனினும் பலரும் மாறி வருகிறார்கள். நம்பிக்கை இருக்கிறது. இருதரப்பிலும் மாற்றங்கள் வேண்டும்.//

நிறைய இடங்களில் மனைவியிடம் விட்டுக்கொடுக்காத ஈகோ பார்க்க முடியும்.

மாற்றம் வர வேண்டும் என்பதே என் எண்ணமும்.

நன்றிங்க.

முகுந்த்; Amma said...

வாங்க கோமதிம்மா,

//சிலர் நீங்கள் சொன்ன மாதிரி இன்னும் இருக்கிறார்கள்.

இப்போது மாறி கொண்டு இருக்கிறது உலகம்.//

உண்மைம்மா, இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இல்லை இது போன்றெல்லாம் நடக்கவேயில்லை என்று சொல்பவர்கள் ஒரு utopia வில் வாழ்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

நன்றிங்க.

முகுந்த்; Amma said...

வாங்க அபி அப்பா,

நீங்கள் சொல்வது நீங்கள் சந்தித்த பெண்களை மட்டுமே சார்ந்தது என்பது என் கருத்து.

தெற்கில் இன்னும் நிறைய கிராமங்களில் இதனை பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

முகுந்த்; Amma said...

வாங்க வருண்

//நீங்க நல்ல தரமான கன்சர்வேடிவ் ஃபேமிலில இருந்து வந்து இருக்கீங்க போல! மகிழ்ச்சி!//

இதனை நீங்கள் கிண்டலுக்கு சொல்கிறீர்களா, இல்லை உண்மையாக சொல்கிறீர்களா என்று தெரியவில்லை.

//But he let you study, right? I think he might say so, but I am sure he has been listening to your mom without admitting it. :)))//

உண்மை. இதனை சார்ந்ததொரு விளக்கத்தை என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் காணவும்.

நன்றிங்க.

முகுந்த்; Amma said...

வாங்க Sethu

// Right. Not many. நியாயமான கேள்விகள். ஒரு பெண் வீட்டிலோ, சமூகத்திலோ முன்னேற்றம் காண கல்வி, வேலை, பொருளாதாரச் சுதந்திரம் இன்றி அமையாதது.//

Well said. கருத்துக்கு நன்றிங்க.

முகுந்த்; Amma said...

வாங்க Thekkikattan|தெகா

நான் படித்த பின்னூட்டங்களில் உங்களுடையது தான் விளக்கமாக எல்லா கேள்விகளுக்கும் விடை அளிப்பது போல இருக்கிறது.

//பயங்கரவாதத்தின் வேர் - இது :))//

ஏன் பெண்கள் அரசியல் பேசுவதை பயங்கரவாதம் என்று சொல்லுரீங்க தெகா.


//கேட்டீங்களே ஒரு கேள்வி, இது கேள்வி. அதை மக்கா எப்படித்தெரியுமா எடுத்துக்கோணும்னு நான் நினைக்கேன், தன் மனைவி மேலும், மேலும் புதிசு புதிசா படிச்சா நம்ம வீட்டுக்குத்தானே நல்லது. நான் பொசுக்குன்னு மண்டையை போட்டுட்டாலும் அவ பொழைச்சிக்குவா, புள்ள குட்டிகளையும் பார்த்துப்பான்னு நினைச்சிக்கிட்டா சரியாகிடும்.

ஒண்ணே ஒண்ணுங்க சந்தோஷமா இருக்கணும்னா, நான் மரணிக்கிறவன், என்னோட பயணம் மரணத்தை நோக்கியதின்னு தினமும் ஞாபகப்படுத்திக்கிட்டவே பொண்டாட்டிகிட்டயே ’ஈகோ’ பார்க்கிறது குறைஞ்சிடுமோ!//

இந்த கேள்விக்கு நீங்க மட்டுமெ விடை கொடுத்து இருக்கீங்க.
உங்கள் விளக்கமும் அருமை.

//என் வீட்டில அரசியலும், அடிதடியும் பண்ணச் சொல்லி கெஞ்சிறேன் போங்க. அப்போதான் பர்சனலா ஒருத்தரை ஒருத்தர் சுரண்டிக்காம இருக்க முடியும் பாருங்க. That approach is an alternative hypothesis :D

குலோசிங் டச் செம!//


அடிதடி, சண்டை எல்லாம் போட சொல்லியும் போட மாட்டேங்கிறாங்களா, தப்பாச்சே, உங்க மனைவியை கட்டாயம் சந்திச்சு பேசனுமே :)))

நன்றிங்க.

முகுந்த்; Amma said...

வாங்க வல்லிசிம்ஹன்

//முகுந்த் அம்மா,பலவீடுகளில் நிலைமை முன்னேறி விட்டது. ஆனாலும் இன்னும் தெற்கில் போனால் ஒரு விநோதமான சூழ்நிலை பார்க்கலாம்.
தானாகவே கட்டுப்பட்டு வீட்டில் இருக்கும் பெண்கள்.கண்ணுக்குத் தெரியாத கயிற்றினால் கட்டுண்டவர்கள்.//

உங்கள் அம்மா போலத்தான் என் அம்மாவும். எத்தனையோ அறிவாளி. ஆனால் தான் என் தந்தைக்கு மேற்பட்ட புத்திசாலி என்று எப்போதும் நாங்கள் உணர நடந்ததில்லை. இத்தனைக்கும் அப்பா மிக மென்மையானவர்.//

உன்மைங்க, நிறைய பேரை நானும் இப்படி பார்த்து இருக்கேன்.


//என் தலைமுறையிலும் இருவரும் சமம் என்றே நம்புகிறேன்.
எனக்கு அப்புறம் இருக்கும் தலைமுறை பற்றி இனித்தான் கணிக்க வேண்டும்.:)//

எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு. அடுத்த தலைமுறை, சுதந்திரதிற்காக காத்திருக்க மாட்டார்கள். எடுத்துக்கொள்வார்கள் :))

முகுந்த்; Amma said...

வாங்க அமைதி அப்பா

//மனைவிடம் ஜெயிப்பவர் வாழ்வில் தோற்றுப் போவார்;
மனைவிடம் தோற்றுப் போபவர் வாழ்வில் ஜெயிப்பார். இது அண்மையில் ஒருவர்(பெயர் சரியாக ஞாபகமில்லை) சொன்னதாக பத்ரிக்கையில் படித்தேன்.
நல்ல பதிவு.//

அருமையான வரிகள். யார் அதனை சொல்லி இருந்தாலும் அனுபவித்து சொல்லி இருக்கிறார்.

நன்றிங்க.

முகுந்த்; Amma said...

வாங்க kutipaiya

// பெரும்பாலான, சராசரியான ஆண்களின் மனப்பான்மை!!//

உங்களை போல எத்தனை பேர் இதனை ஒத்துகொள்கிறார்கள்.

நன்றிங்க, உங்கள் கருத்துக்கு.

Thekkikattan|தெகா said...

ஏன் பெண்கள் அரசியல் பேசுவதை பயங்கரவாதம் என்று சொல்லுரீங்க தெகா.//

சும்மா கிண்டலுக்காக அப்படிச் சொல்லியிருக்கேங்க.

இந்த பாராவில கொஞ்சம் சொதப்பிட்டேன் அதான் பொருள் மாறிடுச்சு. நான் சொல்ல வந்தது இப்படி...


........என் வீட்டில வெளி அரசியலும், அடிதடியும் பத்தி பேசச் சொல்லி கெஞ்சிறேன் போங்க. அப்போதான் பர்சனலா ஒருத்தரை ஒருத்தர் சுரண்டிக்காம இருக்க முடியும்னு....


//அடிதடி, சண்டை எல்லாம் போட சொல்லியும் போட மாட்டேங்கிறாங்களா, தப்பாச்சே, உங்க மனைவியை கட்டாயம் சந்திச்சு பேசனுமே :)))//

அட நீங்க வேற கொடி கட்டி பறந்த காலமெல்லாம் உண்டு... அப்புறம் போர் அடிச்சிருச்சு இப்போ வெளி மொக்கை கொஞ்சம் தூக்கலா அதுவுமில்லாம 3 யியர்ஸ் ஓல்ட் ஒண்ணு இருக்கில்ல நேரம் அங்கே பரந்துரும் சோ நான் தப்பிச்சேன் :))

வருண் said...

***இதனை நீங்கள் கிண்டலுக்கு சொல்கிறீர்களா, இல்லை உண்மையாக சொல்கிறீர்களா என்று தெரியவில்லை.**

இல்லங்க இதில் கேலி எதுவும் இல்லைங்க. அம்மா அனுசரித்துப் போய்விடுவதால் இதுபோல் குடும்ப வாழ்விலும் ஒரு அழகுதான் தெரியுதுங்க.

**என் தந்தையிடம் இதனை பற்றி எத்தனையோ தடவை நானே கேட்டு இருக்கிறேன்/சண்டை கூட போட்டு இருக்கிறேன். அதற்கு அவர், அப்படி இருந்தா தான் வீடு நல்லா இருக்கும் என்று சிரித்து கொண்டே கூறுவார். இன்னொரு விசயம் என்னவென்றால் இதனை எல்லாம் அவர் என் அம்மாவிடம் மட்டும் தான் செய்வார். என்னிடம் அல்ல***

நான் நெனச்ச மாதிரியே! :)))

Unknown said...

நானும் கண்டுக்காம போவணும்னு பாக்கிறேன், முடியல.

முகுந்த் அம்மா, பெண் சம உரிமை பதிவு புயல்ல, உங்க பதிவு நடுநிலையோடவும், நிதானமா அதே சமயம் தெளிவாவும் உங்க பக்கத்தைச் சொன்னது. நன்றி.

வருண்,
//நீங்க நல்ல தரமான கன்சர்வேடிவ் ஃபேமிலில இருந்து வந்து இருக்கீங்க போல! மகிழ்ச்சி!// நீங்க CMMi /அக்மார்க் முத்திரை கொடுக்கிற ஆளா? வேற மாதிரி பின்னூட்டத்தைத் தொடங்கத் தெரியலையா? தெ.கா. பதிவிலியும் உங்க அக்கப்போர் பாத்திட்டுப் போனேன்....

ஆமா, timeforsomelove கயல்விழி காணோமே? என்ன ஆச்சு? அவங்களோட கண்ணோட்டம் என்ன இதப் பற்றி?

//அம்மா அனுசரித்துப் போய்விடுவதால் இதுபோல் குடும்ப வாழ்விலும் ஒரு அழகுதான் தெரியுதுங்க// அப்பா அனுசரிச்சுப் போனாலும் அழகாத் தானுங்க தெரியும்.

வருண் said...

***கெக்கே பிக்குணி said...//அம்மா அனுசரித்துப் போய்விடுவதால் இதுபோல் குடும்ப வாழ்விலும் ஒரு அழகுதான் தெரியுதுங்க//

அப்பா அனுசரிச்சுப் போனாலும் அழகாத் தானுங்க தெரியும்.***

இன்னைக்கு தயிர்சாதம்தான் இருக்கு! னு அம்மா சொல்றாங்க!

நான், ஊறுகாயை தொட்டுக்கிட்டு, மிளகாய் வற்றலை கடிச்சுக்கிட்டு, தயிர் சாதம் நல்லாயிருக்கும்மா னு மனதாற சொல்ற வழக்கம்! I really like that combo and there is no lies there. It makes my mom happy and that makes me happy too!

நீங்க என்ன சொல்றீங்கனா, "இட்லி, வடை பொங்கல் இருந்தால் நல்லாயிருந்து இருக்கும் அம்மா!" னு சொல்லி அம்மாவை கஷ்டப்படுத்த சொல்றீங்க.

இட்லி வடை பொங்கல் நல்லாயிருக்காதுனு நான் சொல்லல.அதை நீங்க புரிஞ்சுக்கனும்!

-------------
I don't mean to be rude here but I don't want to discuss irrelevant topics (எ.கா..."தெ.கா. பதிவிலியும் உங்க அக்கப்போர் பாத்திட்டுப் போனேன்") in muhunth ammA's blog! Take care! :-)

---------

சாரி, முகுந்த் அம்மா! இந்தப் பின்னூட்டத்தை நீங்க பப்ளிஸ் செய்யலைனாலும் நான் உங்கள புரிஞ்சுக்குவேன். நன்றி! டேக் இட் ஈஸி, ப்ளீஸ்!

Unknown said...

வருண், என் வார்த்தையில‌ இல்லாத பொல்லாததைச் சொல்லிட்டு, அப்பீட்டு வாங்கிக்கிறீங்க.

//நீங்க என்ன சொல்றீங்கனா, "இட்லி, வடை பொங்கல் இருந்தால் நல்லாயிருந்து இருக்கும் அம்மா!" னு சொல்லி அம்மாவை கஷ்டப்படுத்த சொல்றீங்க.//

நான் இட்லி வடை பொங்கல் வேணும்னு கேட்கலை. நான் மூணு வித சாப்பாடு (இட்லி அல்லது வடை அல்லது பொங்கல்) கேட்கவே இல்லையே. மத்தவங்க வார்த்தையைத் திரிச்சு, அதிகரிச்சு பேசுறீங்களே? தெ.கா. பதிவைப் பற்றிப் பேச வேண்டாம், என் பின்னூட்டத்தைத் திரிக்கும் உங்களோட மறுமொழியை கேள்வி கேட்கிறேன்.

உங்க உதாரணத்தை வச்சே சொல்றேன், அம்மா "பொங்கல்" தான் சாப்பிடணும்னு விருப்பப்பட்டாங்க. அப்பாவுக்குத் தேவை தயிர்சாதம். அதனால், எது அம்மாவுக்கு விருப்பமோ, அதைச் செய்தும், அப்பாவுக்கு தேவையானதைத் தந்தோ, அல்லது அப்பாவை கன்வின்ஸ் செய்தோ வாழலாம். தப்பு ஒண்ணும் இல்லை. அப்பாவை சந்தோஷப்படுத்திட்டு இருக்கிறது மட்டும் போதாது. அம்மாவின் உள்ளக் கிடக்கையை ஒரு மகளாக, ஒரு தாயாக அறிவேன். அதை வெளிப்படையாகப் பேச வைக்க முடியும். அம்மா வெளிப்படையா தன் விருப்பத்தைச் சொன்னால், அப்பாவுக்கு எதிராகத் தோணுமோ என்று மௌனமாக இருக்கலாம்; அதே சமயம், தன் விருப்பத்தை வெளிப்படையாக சொல்வதில் அப்பாவுக்கு தவறு எதுவும் தோன்றவில்லை, ஓர் ஆணாக. எல்லாரும் அனுசரித்துப் போகணும்னு நான் சொல்றேன்; பதிவிலியும் முகுந்த் அம்மா சொல்றாங்க, அவங்க அப்பா கிட்ட இது பற்றிப் பேசியிருக்காங்கன்னு. இதுல, வீட்ல இல்லாத விருந்து சாப்பாடு வேணும்னு நான் சொல்கிறேனா?

என் முந்தைய பின்னூட்டத்தில் கயல்விழி பற்றிக் கேட்டிருந்தேன், அதையும் திருப்பி டீல்ல விட்டுட்டு நீங்க என் மேற்படி கேள்விகளுக்கு மட்டும் கூட‌ பதில் சொல்லலாம். அநாவசியமா நான் சொன்னதை மாற்றிச் சொன்னதால் இந்த பின்னூட்டம்.

முகுந்த் அம்மா, பின்னூட்டத்தை வெளியிட்டீர்களென்றால் நன்றி.

வருண் said...

If you wanted to debate about another issue in another blog, you could have come over there and joined. Coming here and talking about it is UNNECESSARY! You are saying I am complicating it. That is amazing!!!

***நான் இட்லி வடை பொங்கல் வேணும்னு கேட்கலை. நான் மூணு வித சாப்பாடு (இட்லி அல்லது வடை அல்லது பொங்கல்) கேட்கவே இல்லையே. மத்தவங்க வார்த்தையைத் திரிச்சு, அதிகரிச்சு பேசுறீங்களே? ***

I dont see I twisted anything here.
just two situations just like you brought up there.

First of all we are talking about something which already had happened.

You are saying the other possibility would have been nice too.

நீங்க சொல்ற SECOND பாஸிபிலிட்டி நடந்திருக்க எனக்கு வாய்ப்பே இருக்கிற மாதிரி எனக்குத் தோனலை. அதுவும் நடந்து முடிந்த ஒரு விசயம். இப்போ அதை மாற்றமுடியாத ஒரு நிலைமை. அந்த ஒரு சூழ்நிலையில் "அம்மா" சமர்த்தாக நிலைமையை சமளித்ததாகத் தான் எனக்கு தோனுது. அதைத்தான் நான் சொல்லியிருக்கேன், பாராட்டியுள்ளேன்.

உங்க கருத்தை என்னை இழுக்காமல் நீங்க சொல்லியிருக்கலாம். என் கருத்தை தொட்டதாலும், இது அவங்க முகுந் அம்மா பர்சனல் குடும்ப விசயம் என்பதாலும், நான் வேண்டுமென்றே என் சம்மந்தப்பட்ட ஒரு உதாரணத்துக்கு மாற்ற்றினேன். அவ்ளோதான்.

***என் முந்தைய பின்னூட்டத்தில் கயல்விழி பற்றிக் கேட்டிருந்தேன், அதையும் திருப்பி டீல்ல விட்டுட்டு நீங்க என் மேற்படி கேள்விகளுக்கு மட்டும் கூட‌ பதில் சொல்லலாம். அநாவசியமா நான் சொன்னதை மாற்றிச் சொன்னதால் இந்த பின்னூட்டம்.***

May be I am not in a situation to answer for her. So, I humbly ignored it. I thought you could understand that. :)

முகுந்த்; Amma said...

வருண், கெக்கே பிக்குனி இருவருக்கும்.

இடுகையின் நோக்கம் வேறு திசைகளில் பிரயானிக்க ஆரம்பித்தது போன்று உணர்கிறேன். அதனால் இத்துடன் இதனை நிறுத்தி கொள்ளும் படி இருவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

இருவருக்கும் நன்றி

வருண் said...

I understand. :)

No hard feelings, * கெக்கே பிக்குனி and * முகுந்த் அம்மா! :)