Saturday, April 9, 2011

குழந்தையின்மை ஒரு நோயா?- 2

நேற்றைய இடுகையில் குழந்தையின்மை பற்றிய பொது கருத்துக்களை பற்றி எழுதி இருந்தேன். இன்றைய இடுகையில் பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையையும் சினை முட்டை பையையும் பற்றி ஒரு சின்ன முன்னுரை.

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு இருப்பதே பெண்களின் இனப்பெருக்க உறுப்பு. கவிழ்த்த முக்கோணத்தை போன்று இருப்பது கர்ப்பப்பை, இரண்டு கைகள் போல காட்டப்பட்டு இருப்பது பால்லோப்பியன் டியுப். இரண்டு கைகளின் முடிவில் இருப்பது சினைமுட்டையை உற்பத்தி செய்யும் சினைப்பை.

ஒவ்வொரு மாதமும் சினைமுட்டை, சினைப்பையில் உருவாகி, வெடித்து, வெளியேறி, பால்லோபியன் டியுப் வழியாக மெதுவாக கர்ப்பப்பை நோக்கி நகர ஆரம்பிக்கும். சினைமுட்டை பால்லோபியன் டியுப் வந்தவுடன் அங்கிருக்கும் விந்தணுவுடன் இணைந்து கருவாக் ஆள்ளத். பிறகு கருவானது மெதுமெதுவாக கர்ப்பப்பையை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. இதற்கிடையில் கர்பப்பையானது தன்னுடைய கருப்பை சுவர்களை மெத்தை போலாக்கி கருவை தாங்கும் சக்தி கொண்டதாக மாற்றுகிறது. தற்போது கருவானது கர்பப்பை சுவர்களில் தன்னை இணைத்து கொண்டு பலசெல் கருவிலிருந்து முழுதும் வளர்ந்து குழந்தையாகும் வரை மாறும் தனது வியப்பான பயணத்தை ஆரம்பிக்கிறது.

மேலே குறிப்பிடபட்டுள்ள பல நிலைகளில் ஏதேனும் ஒரு நிலை சரிவர நடக்காவிட்டாலும் குழந்தைப்பேறு வாய்க்காது.

உதாரணமாக சினைமுட்டை முழு வளர்ச்சியடையாமல் பாதி வளர்ச்சியடைந்திருதாலோ அல்லது வெடித்து வெளியேற முடியாமல் இருந்தாலோ குழந்தைப்பேறுக்கு முதல் தடை ஆரம்பம்.

அடுத்த தடை சினைமுட்டை பால்லோபியன் டியுப் வழியாக கருப்பை நோக்கி நகர முடியாமை. இதற்க்கு முக்கிய காரணியாக இருப்பது பால்லோபியன் டியுப் அடைப்பு.

அப்படி சினைமுட்டை வெளியேறி, ஃபல்லோபியன் டியூப் வழியாக வந்து காத்திருப்பது அதிகபட்சம் ஒரு 24 மணி நேரமே, அதற்குள்ளாக விந்தணுவுடன் இணைந்தால் மட்டுமே கருவாக முடியும். அப்படி கருவாவதற்கு விந்தணுவும் சினைமுட்டையும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதாவது விந்தணுவில் இருந்து வரும் குரோமோசோமும் சினைமுட்டையில் இருந்து வரும் குரோமோசோமும் எவ்வித மரபணு சார்ந்த குறைபாடும் இல்லாமல் இருக்கவேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே உருவான கரு குழந்தையாக மாறும், மரபணு குறைபாடிருப்பின் அந்த கரு கலைந்துவிடும்.

கடைசியாக ஏற்படும் தடை கரு, கர்ப்பப்பையில் தன்னை இணைத்து கொள்ள முடியாமை. இதற்கு முக்கிய காரணியாக இருப்பது கர்ப்பப்பை தன்னை கருவை தாங்கிகொள்ளும் படி தயார் படுத்த முடியாமை அல்லது கர்ப்பபை கட்டிகள்.

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து நிகழ்வையும் கண்ட்ரோல் செய்யும் மாஸ்டர் கண்ட்ரோலராக இருப்பது பிட்யூட்டரி சுரப்பியாகும்.




எப்படி இந்த பிட்யூட்டரி சுரப்பி அனைத்தையும் கண்ட்ரோல் செய்கிறது என்பதை மேலுள்ள படத்தில் காணலாம். சினைப்பையில் இருந்து சினைமுட்டை முழுவளர்ச்சி அடைந்து வெடித்து வெளியேறுவது பிட்யூட்டரி சுரப்பி வெளியிடும் சிக்னலான FSH எனப்படும் ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்ட்ங் ஹார்மோன்னால் தான்.
அதே பிட்யூட்டரி சுரப்பி கருப்பை சுவர்களை மெத்தை போல மாற்றி கருவை கருப்பையுடன் இனைக்க வசதியாக்கும் LH எனப்படும் லூட்டியல் ஃபேஸ் ஹார்மோனை சுரக்கிறது.

சரி, இப்போது எப்படி நமது இனப்பெருக்க உறுப்புகள் வேலை செய்கிறது என்பது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நாளைய இடுகையில் எப்படி உடல் பருமனும், உணவுப்பழக்கவழக்கங்கள் மேலே விவரித்த ஒவ்வொரு நிலையையும் பாதிக்கிறது என்று காண்போம்.

--தொடரும்

2 comments:

Thekkikattan|தெகா said...

+2 விலங்கியல் வகுப்பில் அமர்ந்திருந்த நினைவை கிளறிவிடுகிறது.

நல்லா தெளிவாத்தான் சொல்லுறீங்க...

ராமலக்ஷ்மி said...

விளக்கமான பதிவு. தொடருங்கள்.