Friday, June 24, 2011

இந்தியப் பெண்களென்ன சோதனைச்சாலை எலிகளா?



அதிக வேலை பளுவினால் பதிவெழுத முடியா நிலை, அதிலும் சில நாட்களுக்கு முன் நான் படித்த இந்த செய்தியை எப்படியாவது பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு நாளும் எதோ ஒரு தடங்கல்.

அந்த செய்தியின் சாராம்சம் இது தான் "ஆந்திராவை சேர்ந்த ஏழை பெண்கள் சிலரை கர்பப்பை வாய் புற்று நோய் மற்றும் மார்பு புற்று நோய் மருந்து கொடுத்து அவர்கள் அறியாமலேயே பல சோதனைகள் நடத்தப்பட்டு இருக்கிறது.

எந்த ஒரு நோய்க்கும் மருந்து கண்டு பிடித்தவுடன் அதனை சோதனை சாலைகளில் இருக்கும் எலிகள் மீது செலுத்தி அவை எப்படி அந்த மருந்தை எதிர் கொள்கின்றன என்று கணிப்பர்.

நோயுற்ற எலிகள் உயிருடன் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி பெற்றாலும் சில நேரங்களில் சில மருந்துகள் மனிதர்களுக்கு வேலை செய்யாது. அதனால் மனிதர்களிடம் இது போன்ற சோதனைகள் நடத்துவது உண்டு. ஆங்கிலத்தில் இதனை 'clinical trials' என்று அழைப்பர். ஆனாலும் இதற்க்கு மனிதர்களை சம்மதிக்க வைப்பதென்பது அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் மிக கடினம். இதில் சேர்க்கும் முன் பல படிவங்களை நிரப்பி சோதனையில் பங்கு பெறுபவரின் முழு சம்மதமும் பெற்று சோதனையின் பக்க விளைவுகள் ஏதும் இருப்பின் அதனை முழுதும் விளக்கி, பங்கு பெறுபவர் முழு சம்மதம் கொடுத்தால் மட்டுமே இந்த சோதனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க சட்டம் சொல்கிறது சுட்டி. இதனை அமெரிக்க போன்ற நாடுகளில் நடத்த ஆகும் செலவும், நேரமும் அதிகம்.

அதனால் தானோ என்னவோ? பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இத்தனை பெரிய காரியத்தை செய்ய இந்தியாவில் இருக்கும் சில நிறுவனங்களை தொடர்பு கொண்டு இதனையும் 'outsource' செய்ய நினைகின்றன போலும். அப்படி அவுட் சோர்ஸ் செய்யப்பட்ட சோதனைகளை நடத்த இங்கிருக்கும் சில நிறுவனங்கள் குறிவைப்பது ஏழை மக்களை தான். அவர்கள் தான் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் சொற்ப பணத்துக்காகவும் நல்ல சாப்பட்டுக்காகவும் சோதனை எலிகளாக சம்மதித்து இருக்கிறார்கள். இவர்களை பொறுத்தவரை பணம் கிடைக்கிறது, கொஞ்ச நாள் கடும் பணியிலிருந்து ஓய்வு கிடைக்கிறது, அதற்கு ஆசைப்பட்டு பின்விளைவுகள் கூட தெரிவிக்கப்படாமல் ஆபத்தான மருந்தை போட்டு கொள்கிறார்கள். விளைவு இப்போது தெரிகிறது.

மருந்து கம்பெனிகளுக்கோ எந்த வித பிரச்சனையோ/படிவங்களோ/சட்ட பிரச்சனையோ/ அதிக பணமோ இல்லை, அதிகம் சிரமப்படாமல் தங்கள் காரியம் நடக்கிறது. இப்படிப்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு தேவை பணம், பணம் பணம் மட்டுமே!

இப்படிப்பட்ட உள்நாட்டு தரகு கம்பனிகளும் வெளி நாட்டு மலை முழுங்கி மருந்து கம்பெனிகளும் இருக்கும் வரை, மனித உயிராவது ஒண்ணாவது, அடபோங்கப்பா!


7 comments:

Avargal Unmaigal said...

மனம் கனக்கிறது இதை படித்த பின்னர். இதை செய்பவர்களை இறைவன் கண்டிப்பாக தண்டிப்பான்

ராமலக்ஷ்மி said...

கொடுமை. ஆந்திர ஏழைப் பெண்கள் இன்னொரு விதத்திலும் வஞ்சிக்கப் படுவதாக TOI-ல் வாசித்தேன். பழங்குடி பெண்கள் பலருக்கு சாதாரண பிரச்சனைகளுக்கும் சின்ன வயதிலேயே கர்ப்பப் பையை எடுத்து விடுகிறார்களாம். அறியாமையில் கையில் இருக்கிற பணத்தைக் கொடுத்து இதற்கு உடன்படுகிறார்கள் படிக்காத பெண்கள். இதில் பதின்ம வயது பெண்களும் அடக்கம்.இதனால் ஈஸ்ட்ரஜன் குறைந்து அவர்கள் படும் அல்லல் சொல்ல முடியாததாய்.

காணமல் போய் விட்டது கருணை என்பது.

Anna said...

That's shocking.

settaikkaran said...

மகாராஷ்டிரம் பூனேயருகே ஒரு மருத்துவரின் வீட்டுத்தோட்டத்தில் பெண் சிசுக்கொலைக்கான தடயங்கள் சிக்கியுள்ளன. ராஜஸ்தானில் கருப்பை அறுவை சிகிச்சைகள் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப் படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வறுமை, அறியாமை, இயலாமை என்ற இந்த மூன்றையும் பயன்படுத்தி வலியோர் எளியோரைச் சுரண்டி வாழும் அவலம் தொடர்கிறது.

அதிர்ச்சியூட்டும் இடுகை!

பாச மலர் / Paasa Malar said...

வறுமையும் அறியாமையும் படுத்தும் பாடு..சிலர் காசு பண்ண பலர் பலியாகும் நிலை..என்ன கொடுமை சார் இது என்று அங்கலாய்க்க வேண்டிய விஷயங்கள் நாளுக்கு நாள் பெருகிக்
கொண்டேயிருக்கின்றன..

சாந்தி மாரியப்பன் said...

கொடுமையான விஷயம்தான்.. அறியாமையும் வறுமையும் இருக்கும்வரை இப்படி பரிசோதனை எலிகளா இருக்கவேண்டியது தலையெழுத்து போலிருக்கு..

Stay smile said...

:(