அது, தன் பெண்களுக்காக அமெரிக்கா, UK போன்ற வெளி நாடுகளில் வேலை பார்க்கும் வரன்களை அப்பாக்கள் வலை போட்டு தேடிய, பத்து வருடங்களுக்கு முந்தய காலம். என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு சில பெண்கள் இப்படி திருமணம் ஆகி போக, அதே போல நாமும் போக வேண்டும் என்று நினைத்த என்னுடைய தோழி அவர். வெளி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற அவரது அவா என்ற நிலையை தாண்டி வெறி என்றே ஆகி விட்டிருந்தது.
அவரின் தந்தையும் பல சொந்த பந்தங்கள், ப்ரோக்கர்கள், பத்திரிக்கைகள் தவிர மேற்றிமொனியால் தளங்கள் வர ஆரம்பித்திருந்த தருணம் ஆகையால், அதிலும் அவளை பற்றி விளம்பரம் கொடுத்து இருப்பார். அவள் மாநிறமான , கொஞ்சம் பூசினாற்போல இருந்த சற்று குள்ளமான பெண். ஆனாலும் அவர் தந்தை விளம்பரத்தில் "Fair, tall, lean beautiful, domestically trained girl" என்று விளம்பரம் கொடுத்து இருந்தார். இதில் domestically trained என்பது வீடு வேலை செய்ய தெரிந்த பெண் என்று பொருள் தரும்படி எழுத பட்டு இருந்தது.
நாங்கள் எல்லாம் கூட "என்ன, உங்க அப்பா உன்ன ஒரு பிராணி லெவலுக்கு உயர்த்தி இருக்காரே" என்று கிண்டல் செய்தாலும் அவள் சளைக்காமல் "அதிலென்ன தப்பு, வீட்டு வேலை செய்ய தெரிஞ்ச பொண்ணுன்னு அப்புறம் எப்படி சொல்லுறதாம்" என்று சப்பை கட்டு கட்டுவாள்.
என்ன தான்அவள் தந்தை விளம்பரம் செய்தாலும் அவள் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை அவர்கள் சமூகத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிவப்பா, ஒல்லியா இருந்த பெண்ணையே விரும்பினார்கள். அதனால் இவளும் சிவப்பாக கிரீம் மேல கிரீம் ஆக போட்டு கொண்டு இருந்தாள். எந்த சிவப்பழகு கிரீம் மார்க்கெட்டில் வந்தாலும் உடனே அதனை முதலில் ட்ரை செய்து பார்ப்பவள் அவளாகத்தான் இருக்கும். பிறகு உடம்பை குறைக்கிறேன் பேர்வழி என்று சரியாக சாப்பிடாமல் டியட்டிங் வேறு இருக்க ஆரம்பித்தாள்.
பிறகுஅவளுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. நாங்கள் படிப்பை முடித்து வேறு வேறு திசையில் சென்று விட்டோம். பல வருடங்களுக்கு பின் நேற்று என்னுடைய அம்மாவிடம் பேசும் போது அந்த பெண்ணை கோவிலில் பார்த்ததாகவும் அடையாளம் தெரியாத அளவுக்கு அவள் குண்டாக இருப்பதாகவும், அவள் கணவன் அவளை இங்கு தனியே விட்டு விட்டு சிங்கப்பூரில் இருப்பதாகவும் சொன்னார்கள்.
என்னவென்று மேலும் விசாரிக்க அம்மாவிடம் சொன்னேன். அவர்கள் சொன்னது மேலும் அதிர்ச்சி அளித்தது. அவள் தந்தை எப்படியாவது அவளுக்கு கல்யாணம் ஆனால் சரி நினைத்து அதிக வரதட்சணை கொடுத்து சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஒரு வரனை பார்த்து திருமணம் முடித்து இருக்கிறார். அந்த வரன் நல்ல பையன் என்றாலும் மனைவி ஒல்லியாக சிவப்பாக இருக்க வேண்டும் என்று விரும்ப, அவள் அதிகம் டியட்டிங் செய்ய ஆரம்பித்து இருக்கிறாள். ஒல்லியாக, அவள் செய்த டியட்டிங் வேறு வகையில் பக்க விளைவுகள் கொடுத்து பூசினாற்போல இருந்தவள் தைராய்டு பிரச்சனை ஏற்பட்டு அதிகம் குண்டாக ஆரம்பித்து இருக்கிறாள்.
சிலவருடங்கள் ஆவலுடன் வாழ்ந்த அவள் கணவன் அவள் குண்டாக ஆக அவளை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்து இருக்கிறார். கண்ட கண்ட கிரீம்கள் போட்டு அவள் முகம் வேறு கிழடுதட்ட ஆரம்பித்து இருக்கிறது. அதுவும் ஒரு காரணமாக சேர்ந்து கொள்ள "சிவப்பா, ஒல்லியா இருக்கிற பொண்ணுதான் வேணும்னு நினைச்சேன், எங்க அம்மாதான் உன்னை என் தலையில கட்டிட்டாங்க" என்று தினமும் திட்டி இருக்கிறார். அதோடு தைராய்டு பிரச்சனையால் குழந்தைபேறு வேறு தட்டி போக, அதையே ஒரு காரணமாக சொல்லி அவளை ஒதுக்கி வைத்திருப்பதாகவும் அறிய முடிந்தது.
இதில் யாரை குற்றம் சொல்ல? வெளிநாட்டு மோகத்தினால் வாழ்கை தொலைத்த என் தோழியையா அல்லது ஒல்லியான சிவப்பான பொண்ணுதான் அழகுன்னு நினைத்த அவள் கணவனையா!
6 comments:
யாரை குற்றம் சொல்லி இனி என்ன பயன்? இன்று வாழ்க்கையைத் தொலைத்து விட்டு வேதனையுடன் இருப்பது உங்கள் தோழிதானே..... அவர்கள் நிலை அறிந்து வருத்தமாக இருக்கிறது.
இந்த சிகப்பழகு கிரீம் தொல்லையும் மேனியழகை கூட்டும் சோப்பு தொல்லையும் தாங்க முடியல.
நேரம் இருக்கும் போது: http://konjamvettipechu.blogspot.com/2010/03/white.html
வாசித்து பாருங்கள்.
ஆக மொத்தத்தில ஏதோ ஒரு வகையில வாழ்க்கையை சமூக அழுத்தங்களுக்கென தன்னோட தேடலை அமைச்சிக்கப் போயி இந்த மாதிரியான இடியப்பச் சிக்கலாகிப் போயிடுது. ஒல்லியோ/குண்டோ/குட்டையோ/நெட்டையோ/சிகப்பு/கருப்போ அகமாக தேடாம வெளியிலயே நின்னுட்டு இருந்தா எது கிடைச்சாலும் ‘தித்திப்பா’ இருக்காது. மொதல்ல அதை புரிஞ்சிட்டா தன்க்குத் தேவையானது ஓரளவிற்கு தட்டுப்பட ஆரம்பிச்சும் தன் பயண வழியிலேயே ... அப்படின்னு புரிஞ்சு வைச்சிருக்கேன்.
வாழ்வும், தாழ்வும் நம் கையில். யாரையும் குற்றம் சொல்ல இயலாது.
ம் .. :( கஷ்டம்ங்க..
இவங்களுக்கு சிகப்புத்தோல் வேணும்; அவுங்களுக்கு அமெரிக்காகாரவுக வேணும்!! ஒருத்தர் கேட்டத்க் கொடுத்து அடுத்தவருக்குக் கொடுக்கலன்னாதானே பிரச்னை. அதான் ஆண்டவன் கணக்கு நேர் பண்ணிட்டான் ரெண்டு பேர் ஆசையையும் நிறைவேத்தாமலே. மைனஸ் இண்டு மைனஸ் ஈக்வல்டூ பிளஸ்தானே!!
sad! nalla write up mukundamma
Post a Comment