Friday, February 17, 2012

இரண்டு வருட பதிவுலக வாழ்க்கையும் விருதும்.

போன மாதமே இதனை எழுதி இருக்க வேண்டும். ஆனால், பதிவுலகில் இருந்து என்ன பெரிதாக சாதித்து விட்டோம் என்று நினைத்து இதனை எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனாலும், சென்ற வாரம் நான் படித்த இரண்டு பதிவுகளும், அவர்கள் உண்மைகள் அவர்கள் எனக்கு வழங்கிய விருதும், என்னை பற்றி சுயபரிசோதனை செய்ய தூண்டியதன் விளைவே இந்த பதிவு.

2008 இல் இருந்து பதிவுலகம் எனக்கு அறிமுகமானாலும் பதிவு எழுதுவது எப்படி என்பது குறித்தோ, திரட்டி குறித்தோ நான் அறிந்திருக்கவில்லை. வேலை பளு காரணமாகவும் எழுதுவது குறித்து நான் நினைக்கவும் இல்லை.

ஆனால் 2009 இல் முகுந்த் பிறந்தபிறகு நான் எடுத்த பேறுகால விடுமுறை எனக்கு நிறைய நேரம் தந்தது. அதுவரை ஓடி ஓடி பழக்கப்பட்ட எனக்கு நேரம் நிறைய இருந்தது போர் ஆகிவிட்டது. எதையாவது உருப்படியாக செய்யலாமே என்று ஆரம்பித்தது தான் வலைப்பூ. என் கணவரே வலைப்பூ ஆரம்பி என்று blogspot ஐ அறிமுகப்படுத்தினார்.

முதலில் எதனை எழுதுவது என்று தெரியாமல், நான் படித்த புத்தகம் பற்றியும், என்னுடைய அனுபவம் பற்றியும் எழுதி வைத்து பார்த்து கொண்டு இருந்தேன். முதன் முதலில் என் வலைப்பூவிற்கு வந்து பின்னூட்டமும் இட்டு, திரட்டி குறித்து அறிமுகப்படுத்தி அதில் பதிவை இணைக்க சொல்லி கூறியவர் தெகா அவர்களும், முத்துலெட்சுமி அவர்களும் தான்.

பதிவை தமிழ்மணத்தில் இணைத்த பின் மேலும் பலர் வந்து பார்த்து பின்னூட்டம் இட ஆரம்பித்ததும், blog bug ஆல் கடிக்கப்பட்டு இணையத்திற்கு நான் அடிமையானது நினைத்து இப்போது சிரிப்பு தான் வருகிறது. யார் பார்த்தார்கள், எப்போது எங்கிருந்து வந்தார்கள் என்று எப்போதும் கம்யூட்டரே கதி என்று ரெஃப்ரெஸ்ஷ் செய்து பார்த்திருக்கிறேன்.

இது ஒருவிதமான அடிக்‌ஷன் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வித ஆர்வத்தில் ஆரம்பிக்கும் இது போகப்போக வெறியாகி, ஹிட்டை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்று மனது யோசிக்க தொடங்கும். ஒரு நாளைக்கு ஒரு பதிவு, இரண்டு பதிவு என்று போட்டி போட்டுக்கொண்டு எழுத ஆரம்பித்து, உபயோகமான பதிவுகள் இல்லாமல், வெறும் மொக்கை பதிவுகள் போட ஆரம்பித்து விடும் அபாயம் உண்டு.

மன அமைதிக்காக பிளாக் என்பது போயி,  மன நிம்மதி கெடுவதற்குறி்ய ஒரு காரணியாக போய் விடும். நல்ல வேளை, இது ஒரு மாய உலகம் என்று நான் ஆரம்பத்திலேயே சுதாரித்து கொண்டேன். எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது மட்டுமே பதிவிடுவது, பதிவுகளை பார்ப்பது என்று என்னை நானே சுருக்கி கொண்டுவிட்டேன்.

சென்ற ஆண்டு ஆரம்பத்தில் மறுபடியும் வேலைக்கு சேர்ந்தபிறகு என்னுடைய பதிவிடும் நேரமும் பதிவுகளை படித்து பின்னூட்டம் இடும் நேரமும் அதிகளவில் குறைந்து போய் விட்டன.

பெண்ணாக இருந்து குடும்ப வேலைகளுக்கு இடையே வீட்டு வேலைகள் ஒழிந்த நேரம் பதிவிடுவது என்பது மிக கடினம். அதுவும், வேலைக்கும் சென்று விட்டு வீட்டுவேலைகளும் செய்து விட்டு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் பதிவிடுவது மிக மிக கடினம். அதுவும் என்னை போல ஆராய்ச்சித்துறையில் இருப்பவர்களுக்கு நேரம் காலம் என்று வேலைக்கு இருப்பதில்லை. வரும் நோய்க்கு நேரம் காலமா தெரிய போகிறது. பல நேரங்களில் விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

அதனால், குடும்பத்தையும், வேலையையும் பாலன்ஸ் செய்வது என்பது மிக மிக கடினமாகி விட்ட நிலையில், பதிவிற்க்கு என்று நேரம் ஒதுக்குவது முடியாததாகி விட்டது. இந்த நிலையில், ஹிட் பற்றியோ, பின்னூட்டதிற்கு பதில் எழுதுவது பற்றியோ நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.

ஆயினும், இன்னும் பலர் என்னுடைய பதிவிற்கு வந்து படித்து ஊக்குவித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் உளமார்ந்த நன்றி.

Liebster award கொடுத்த அவர்கள் உண்மைகள் அவர்களுக்கு என் நன்றி. இதனை என்னை போல இருக்கும் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

குறிப்பாக நான் மிகவும் மதிக்கும் இருவர்.

  1. அறிவியலில் பெண் ஆராய்ச்சியாளராக இருந்து கொண்டு குடும்பத்தையும் அற்புதமாக பாலன்ஸ் செய்யும் அன்னா தி அனலிஸ்ட் அவர்களுக்கும்
  2. மிக அருமையான தமிழால் நம்மை கட்டிப்போடும் அறிவியல் ஆசான் கையேடு ரஞ்ஜித் அவர்களுக்கும் அளிக்க விரும்புகிறேன்.


நன்றி.








14 comments:

வவ்வால் said...

// blog bug ஆல் கடிக்கப்பட்டு இணையத்திற்கு நான் அடிமையானது நினைத்து இப்போது சிரிப்பு தான் வருகிறது.//

சிறப்பாகவும், நிதானமாகவும் எழுதுவதற்கு வாழ்த்துகள்!

ஆனால் இன்னும் அந்த பதிவுப்பூச்சி கடியின் பாதிப்பு போகலை போல, நல்ல தொற்று நீக்கிப்போடவும் :-))

என்ன கொடுமை சார் இது-2

Avargal Unmaigal said...

உங்களுக்கு நான் அந்த விருதை கொடுக்க காரணம் பெண்கள் என்றால் அவர்கள் கவிதைமட்டும் எழுதுவார்கள் அல்லது குடும்பவாழ்க்கை நடக்கும் சம்பவங்களை மட்டும் எழுதுபவர்கள் என்று இல்லாமல் பல்வேறுபட்ட மாறுதலான பதிவுகளை பெண்களும் தரமுடியும் என்று உங்கள் பதிவிகளின் மூலம் அறிந்து கொண்டதால் மட்டுமே.நீங்கள் குடும்ப சூழ்நிலையால் மிக குறைந்த பதிவு போட்டாலும் சிறந்த பதிவை போட்டுள்ளீர்கள். அதற்குதான் எனது பாராட்டுகள்

வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

தமிழ்நாட்டில் இருக்கும் போது எங்கள் அண்ணன்(உங்கள் கணவர்) உங்களுக்கு மல்லிகை பூ வாங்கி கொடுத்து மகிழ்வித்தார். ஆனால் அமெரிக்கவந்ததும் உங்களுக்கு அதை வாங்கி கொடுக்கமுடியாததால் இந்த வலைப்பூவை உங்களுக்கு அறிமுகப்படுத்தி உங்களை உலகெங்கும் மணக்க செய்கிறார். அந்த நல்ல உள்ளத்திற்கு எனது வாழ்த்தை சொல்லுங்கள். மேலும் நீங்கள் பதிவு எழுத நேரம் கொடுத்த உங்கள் குட்டி செல்லம் முகுந்திற்கும் எனது வாழ்த்துகள்

துளசி கோபால் said...

இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

உங்கள் பதிவுகளை விரும்பி ஆவலுடன் வாசிக்கும் அநேகரில் நானும் ஒருத்தி:-)

எண்ணிக்கை முக்கியமில்லை. எழுத்துதான் முக்கியம்

rajamelaiyur said...

இருவருக்கும் வாழ்த்துகள்

rajamelaiyur said...

இன்று ...

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துகள்.. அவ்வப்போது எழுதிக்கொண்டிருங்கள்:)

ஆச்சி ஸ்ரீதர் said...

வாழ்த்துகள்.

Anna said...

WOW! மிக்க மிக்க நன்றி முகுந்த் அம்மா. என் எழுத்தில் பெரிதாக நம்பிக்கையற்ற எனக்கு இந்த அங்கீகாரங்கள் மிகுந்த ஊக்குவிப்பைத் தருகின்றன என்றால் அது மிகையாகாது.

"அறிவியலில் பெண் ஆராய்ச்சியாளராக இருந்து கொண்டு குடும்பத்தையும் அற்புதமாக பாலன்ஸ் செய்யும்"

சத்தியமாக இந்த அங்கீகாரத்திற்கு நான் தகுதியானவள் என நினைக்கவேயில்லை. ஏதோ எனக்குச் சரி என்று பட்டதைச் செய்து கொண்டிருக்கிறேன் என்பதே உண்மை.

Thanks heaps Mukundamma!

கையேடு ரஞ்சித்திற்கும் வாழ்த்துக்கள்! அவரின் அபாரமான மொழித்திறனைப் பார்த்து எப்போதும் வியந்திருக்கிறேன்.

baleno said...

விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.
பர்தாபோபியா பதிவில் நீங்கள் தெரிவித்த தெளிவான மிக அருமையான கருத்தை படித்துவிட்டு முதல் தடவையாக உங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன்.

கையேடு said...

நன்றிகள் பல முகுந்தம்மா விருது வழங்கியதற்கு.

இப்படியான சக பாராட்டுகள் அவ்வப்போது எழுத மிகவும் ஊக்கம் தருபவை.

ஆனால் அறிவியல் ஆசான் என்பதெல்லாம் கொஞ்சம் மிகையான பாராட்டுதான்..

தமிழில் எழுதுவது என்பது வலையுலக வாசிப்பு கற்றுத்தந்ததுதான். தமிழகத்தில் பலரைப்போல முழுக்க முழுக்க ஆங்கில வழிக்கல்வி பயின்றவந்தான் நானும். எனது எழுத்தைத் தொடர்ந்து நீங்களும் அனா வும் பாராட்டும் போது நெகிழ்ச்சியாகத்தான் உள்ளது. இது வலையுலகில் சிறப்பாகவும் எளிமையாகவும் எழுதி எனக்கு மறைமுகப் பயிற்சி அளித்த பலரையும் சாரும்.

விருதுக்கு மீண்டும் நன்றிகள்.

கோமதி அரசு said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

ஆதி மனிதன் said...

//மன அமைதிக்காக பிளாக் என்பது போயி, மன நிம்மதி கெடுவதற்குறி்ய ஒரு காரணியாக போய் விடும். நல்ல வேளை, இது ஒரு மாய உலகம் என்று நான் ஆரம்பத்திலேயே சுதாரித்து கொண்டேன். எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது மட்டுமே பதிவிடுவது, பதிவுகளை பார்ப்பது என்று என்னை நானே சுருக்கி கொண்டுவிட்டேன்.//

அனைத்தும் உண்மை. சில நேரம் எனக்கு கூட அந்த பயம் ஏற்படுகிறது. இருந்தாலும் எனக்கு அவ்வப்போது கிடைக்கும் நேரத்தில் பதிவுகள் எழுதுவதை ஒரு ரிலாக்ஸ் ஆக எடுத்துக் கொள்கிறேன்.

Avargal Unmaigal said...

அன்புள்ள முகுந்த்அம்மா ,இனிய நினைவு அலைகளைத் தொடர்பதிவாக்கும்படி சகோதரி ராஜி அன்புடன் கேட்டு கொண்டதால் நான் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்பதை எழுதியுள்ளேன். இதை தொடர் பதிவாக நேரம் இருந்தால் மட்டும் எழுத உங்களை அன்புடன் அழைக்கிறேன். http://avargal-unmaigal.blogspot.com/2012/03/blog-post.html