Sunday, April 14, 2013

ஒரு சோகமும் சில நிகழ்வுகளும்

இரண்டு வருடங்கள் கழித்து இந்தியா வந்த நேரமோ என்னவோ, அடுத்தடுத்து, இரண்டு முறை இந்தியா செல்ல நேர்ந்தது. முதல் முறை, சந்தோசமான பயணமாகவும், இரண்டாம் முறை சோகமாகவும் அமைந்தது. முதன் முறை நீண்ட நாள்களுக்கு பின், இந்தியாவில் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை, மற்றும் உறவினர் திருமணம் என்று எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோசமாக இருந்தேனோ, அதற்க்கெல்லாம் சேர்த்து வைத்து வந்தது, அப்பாவின் மரண செய்தி. எதிர்பாராத மரணம். வெளிநாட்டில், வாழ்வதால் இருக்கும் பல இழப்புகளில், முதன்மையானது பெற்றோரை அருகிருந்து பார்த்து கொள்ள முடியாதது. அதுவும், அவர்களின் கடைசி நிமிடங்களில் அருகிருக்கும் வாய்ப்பை இழந்தது.

 பொங்கல் சமயம் இந்திய வந்த போது நான் சந்தித்த , என்னுடன் படித்த கல்லூரி நண்பர்  சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.  வெளிநாட்டில் ஆராய்ச்சி படிப்பு முடிந்ததும் சில ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு அவர் இந்தியா திரும்பி விட்டார்.  ஏன் என்று நான் கேட்ட போது அவர் சொன்னது இது தான், "என் கல்யாணத்தின் போது இருந்த பலர் இப்போது போட்டோவாகி விட்டனர், என் பெற்றோரை போட்டோவாக மட்டும் நான் பார்க்க விரும்பவில்லை", அவர் சொன்ன வார்த்தைகள் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தன.

ஒருவரின் அருமை, அவர் இருக்கும் போது நமக்கு தெரிவதில்லை. இறப்புக்கு பின்னே பலரின் அருமை நமக்கு தெரிகிறது. சரி, இருக்கும் வரை என் அம்மாவை நன்கு கவனித்து கொள்ளலாம் என்று முடிவு செய்தால், இருப்பது இரண்டு வழிகள் மட்டுமே. ஒன்று, அவரை இங்கு அழைத்து வருவது, இல்லை நாங்கள் இந்தியா திரும்புவது.

இதில், இரண்டாவது முடிவு, பற்றி சற்று அதிகமா சிந்திக்க ஆரம்பித்தேன். என் முகத்தில்
அறைந்தது, இந்தியாவில் இருக்கும் பணம், பணம் என்று பண பைத்தியமாகும் மக்கள். உறவுகள் என்னும் காக்கை கூட்டம், சாவு வீட்டுக்கு வந்திருந்தாலும், பணம் பர பற்றி பேசிய பேச்சு, பணம் இருந்தவர்கள் காட்டிய படோடபம், பணம் இல்லாதவர்களை அவர்கள் நடந்திய விதம், என்று அனைத்தும். ஒரு சாவு வீடு என்று கூட பார்க்காமல் வந்திருந்த அனைவரும் என்னிடம் கேட்ட கேள்வி " எவ்வளோ சம்பளம் உனக்கு.", " வீட்டுக்கு பணம் அனுப்புறையா, எவ்வளவு.". " அமெரிகாவில கிரீன் கார்டு இருக்கா., வீடு இருக்கா..? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள். இதில் சிலர் " என்னிடம் வந்து நான் கஷ்டபடுகிறேன், கொஞ்சம் என்னை கவனிக்க கூடாதா? என்று கேட்டது, அதிலும் சிலர், "என் பையன் வேலை இல்லாம கஷ்டப்படுறான் ஏதாவது வேலை பார்த்து கொடேன் ", என்று நான் எம்ப்லோய்மென்ட் exchange நடந்துவது போல application போட்டனர். ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து "பார்க்கலாம் " என்று சொன்னாலோ, என் முதுகுக்கு பின்னால் எனக்கு கேட்கும் படியே சிலர் " எல்லாம் பணத்திமிர்" என்று திட்டுவதை கேட்க்க முடிந்தது. கஷ்டப்படுகிறார்களே என்று பணம் கொடுத்தாலும் " இவ்வளவுதானா,?" என்று முகத்தை திருப்பிக்கொண்டு சிலர் சென்றனர். இதில் பணம் இருக்கும் சிலரோ தங்கள் படோடபத்தை எல்லாம், தாங்கள் வார்த்தைகளில் தெளித்து, தாங்கள் பெரிய ஆட்கள் என்று காட்டிகொண்டிருன்தனர்.

இவர்கள் எல்லாம் என்னை என்ன என்று நினைத்து கொண்டனர் என்று தெரியவில்லை. " அப்பா இறந்த சோகத்துடன் இருக்கும்  எங்களிடம் என்ன எதிர் பார்கிறார்கள்?. அழுது அழுது அலுத்து போயிருந்த என் அம்மாவிடம் சென்று சொத்து விஷயம் வேறு பேசியபடி இருந்தனர்.

"எப்போடா சொந்தகாரங்க நல்லவங்கள இருந்திருக்காங்க, இப்போ இருக்க?, என்று மனதை தேத்திகொண்டு இந்தியா வந்துவிடலாம் என்று நினைத்தால், அடுத்து முகத்தில் அறைந்தது, இங்கு ஆராய்சிக்கு கொடுக்கும் அமுக்கியத்துவம். அமுக்கியம்-முக்கியத்தின் எதிர்மறை. நான் படித்த உலகப்புகழ் பெற்ற மதுரை காமராஜர் பல்கலை கழக , உயிரியல் தொழில் நுட்ப துறையில் நடக்கும் சில நிகழ்வுகளால் தற்போது பணம் இருந்தாலோ, அல்லது சிபாரிசு இருந்தாலோ , யாருக்கும் பேராசிரியர் பதவி, தகுதி இருப்பினும் பணம் இல்லாவிடில் அவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் . ஆராய்ச்சி கூடம் வைக்கலாம் என்றால் "பலருக்கு கொடுக்க வேண்டிய சம்திங்" என, அனைத்தும் என்னை மிரட்ட ஆரம்பித்தன.

சரி,இப்போது IT க்கு தானே மதிப்பு, பேசாம, பீல்ட்  மாத்திட்டு IT ல
சேர்ந்துடலாம்னு நினைச்சா, IT  மக்கள் படும் பாடு இன்னொரு பக்கம் மனதை பிழிந்தது. பெற்றோர் நிமித்தம், அமெரிக்காவை விட்டு அங்கு சென்ற பல IT குடும்பங்கள், அங்கு இருக்கும் 12 மணி நேரந்திற்கும் குறையாத வேலை, சனி கிழமை கூட வேலை, ஆபிஸ் பாலிடிக்ஸ், குடும்பத்துடன் இருக்கும் நேரம் மிக குறைவு, குழந்தைகள் கல்வித்தரம் என்று பார்த்து விட்டு இங்கு திரும்பி வந்ததை நினைத்து பீல்ட்  மாத்துவது என்பது முடியாததாகி விட்டது.

அடுத்து என் முகத்தில் அறைந்தது நான் பார்த்த "pollution" அதனால் முகுந்துக்கு ஏற்பட்ட "வீசிங்". மதுரையில், திருப்பரங்குன்றம் மலையை பகல் நேரங்களில் பார்க்க முடிவதில்லை. அப்படி ஒரு புகை மூட்டம். மதுரையில் எல்லா இடங்களிலும் எரிக்கப்படும் குப்பைகள். அதனால் ஏற்படும் புகை, வளி மண்டலத்தில் கலந்து கொடுக்கும் வீசிங் பிரச்சனைகள். மக்களுக்கு குப்பைகளை எரிப்பதால் பிரச்சனைகள் உண்டாகின்றன என்று தெரிந்திருந்தாலும் எதனையும் கண்டு கொள்ளாத பணம் மட்டுமே  குறியாக உள்ள அரசாங்கம்.

என்ன ஆயிற்று இந்தியாவிற்கு, நான் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்த இந்தியாவை காணவில்லை. எங்கும்  பணம் பணம் பணம் தான்.

 எல்லாம் அனுபவித்து உணர்ந்த பிறகு, என் கல்லூரி நண்பரிடம் மீண்டும் பேசினேன். அவர் சொன்னது "இந்தியாவில் நெருங்கிய சொந்தங்கள் தவிர, வேறெதுவும் இல்லை" என்பதே.

 

21 comments:

ப.கந்தசாமி said...

உண்மையை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். இன்று இந்தியாவில் பணம்தான் கண்கண்ட தெய்வம். அது இல்லாதவன் முப்பைக்கூடையில் இருக்கும் குப்பைக்கு சமம்.

உங்கள் அம்மாவை கூட்டிக்கொண்டு போக முடிந்தால் நல்லது. முடியாதென்றால் ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவதே உத்தமம். இனிமேல் மனித வாழ்க்கையில் பந்த பாசத்திற்கு இடமில்லை. அமெரிக்காவில் பார்க்கும் அதே நிலை இங்கும் வந்துவிட்டது.

Anna said...

My deepest condolences Mukundamma. My thoughts are with you and your family.

நீங்கள் எழுதிய நிகழ்வுகள் மாதிரித் தான் இலங்கையிலும். மக்களின் சிந்தனையை எப்படி மாற்றுவதென்பது தெரியவில்லை.

vrsh-a said...

I am struggling with the same questions. என் கதை இன்னும் கொஞ்சம் குழப்பம் அதிகமாக. மகள் கல்லூரிக்கு செல்ல வேண்டிய வருடம். தங்கை கணவரின் திடீர் மரணம். தனியாக அம்மா. வயதான மாமனார். க்ரீன்கார்ட் இல்லை. But kids want the option of staying back or coming back.

I am in a mess!

Thekkikattan|தெகா said...

I am sorry to hearing this Mukundamma. hope you guys pull through this challenging time.

i am sort in the mid way of moving over there. kaavi also has this wheezing issue, i don't know how she is going to cope up with. let us see! they leave nest month.

துளசி கோபால் said...

என் மனசில் இருப்பவைகளை எல்லாம் அப்படியே உங்கள் எழுத்தில் பார்த்தேன் முகுந்த் அம்மா.

இது நான் விட்டுட்டு வந்த இந்தியா இல்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை:(

ஆச்சு 32 வருசம்.இனி அங்கே போய் செட்டில் ஆவது என்பது உண்மையிலுமே முடியாத ஒன்றுதான்!

அப்பாவின் ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தங்கள் தந்தையார் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
"செல்லாதே இல்லான் வாய்ச் சொல்"
2000 ஆண்டுக்குமுன்னே தமிழ்க்கிழவி சொல்லிவிட்டா?
"காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி"- கேட்டுத்தான் வளர்ந்தோம்.
பணம் பந்தியிலே! தான்
யாரை நோவது....
கந்தசாமி ஐயா சொல்லும் வழியை நாடுவதே! மேல்.

திண்டுக்கல் தனபாலன் said...

பல உண்மைகள்...

எங்கும் எதிலும் பணம் பணம் பணம் தான்...

கோமதி அரசு said...

முகுந்த் அம்மா, , உங்கள் அப்பாவின் திடீர் மரணம் அம்மாவையும், உங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும்.
அப்பா அவர்களின் ஆதமா சாந்தி அடைய என்னுடைய பிராத்தனைகள்.
அம்மா அங்கு வர சம்மதிப்பார்களா?
இப்போது உள்ள வயதானவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க ஆசைப்படுகிறார்கள். நாம் தான் அவர்களை போய் பார்க்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
அம்மா அவர்கள் மன ஆறுதலுடன் இருக்க வேண்டுகிறேன்.

Kanchana Radhakrishnan said...


தங்கள் தந்தையார் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Avargal Unmaigal said...

அப்பா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய என்னுடைய பிராத்தனைகள். கடந்த வாரத்தில் எனது சகோதரனும் இறந்து போனான். அப்போது நான் நினைத்தது இதுதான். நடக்க வேண்டியது நடந்து இருக்கிறது. அதை மாற்ற யாராலும் முடியாது என்று அது போல நீங்களும் நினைத்து வருத்தத்தை சிறிது தள்ளிவைத்துவிட்டு நடக்க வேண்டியதை நீங்கள் எந்தவித குழப்பம் இல்லாமல் சிந்தியுங்கள். உங்கள் மனதிற்கு எது நல்லது எனப்படுகிறதோ அதை உங்கள் அம்மாவுடன் கலந்து ஆலோசித்து நடங்கள் மற்றவர்களை பற்றி சிறிதும் கவலைப்படாதீர்கள் காரணம் நீங்கள் எது செய்தாலும் குறை சொல்லவே சொந்தங்கள் இருக்கின்றன.

அம்மா தனியாக இருப்பதைவிட பேரக் குழந்தையிடம் பேசி மகிழ்ந்து வாழ்வே விரும்புவார்கள் என நினைக்கிறேன் அது அவர்களுக்கு நிச்சயம் சந்தோஷத்தை நிச்சயம் தரும்

நம்பள்கி said...

முகுந்த் அம்மா & துளசி கோபால்:

மறுபடியும் தமிழ்நாடு சென்று வாழ முடியும் என்று நினைக்கிறேன்; ஆனால், சென்னையில் என்னாலும் என் மனைவியாலும் கட்டாயம் ---கட்டாயம் வாழ முடியாது. நாங்கள் இருவருமே சென்னை, sorry, மெட்ராஸ் வாசிகள்...பள்ளி முதல் கல்லூரி வரை.

மதுரை, திருச்சி, நெல்லை, இது மாதிரி எந்த பெரிய ஊரிலும் இருக்க முயாது. கோவைக்கு அருகில் 15 to 20 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கலாம்.

கேரளா பெஸ்ட்...! ஆனா, தமிழனை எங்கு போனாலும் உதைக்கிரானுன்ங்களே!

நம்பள்கி said...

சொல்ல மறந்து விட்டேன்; பாண்டிச்சேரி இப்போ புதுச்சேரி நல்ல இடம்; நல்ல மருத்துவ வசதி உண்டு.

சென்னையை விட புழுங்கித் தள்ளும்; அதானல் கொஞ்சம் யோசனை!

ஹுஸைனம்மா said...

என் வருத்தங்கள், முகுந்த் அம்மா.

We are all in the same boat முகுந்தம்மா. என் மகன் இன்னும் இரண்டு வருடங்களில் கல்லூரி செல்ல வேண்டும். என் பெற்றோரின் உடல்நிலையும் அத்தனை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பெரியவர்கள் தாங்கள் பழகிய இடங்களிலிருந்து வர விரும்புவதுமில்லை.... இதே குழப்பங்கள்...

Avargal Unmaigal said...

@நம்பள்கி

//ஆனா, தமிழனை எங்கு போனாலும் உதைக்கிரானுன்ங்களே! ///

நம்பள்கி தமிழனை எங்கு போனாலும் உதைக்கிரானுன்ங்களோ இல்லையோ நாம ரெண்டு பேரும் தமிழ்நாடு போனா நிச்சயம் உதை உண்டு

Avargal Unmaigal said...

முகுந்தம்மா எங்கு வசிப்பது உங்கள் குடும்பத்திற்கு சந்தோஷம் தருகிறதோ அதுதான் வசிப்பதற்கு மிக சிறந்த இடம். உங்க அம்மாவுடன் அமெரிக்காவில் வசிக்க வேண்டிய இடம் என்றால் அது நீயூஜெர்ஸிதான் என்பேன் காரணம் உங்கள் பையன் ஸ்கூலுக்கு சென்ற பின்னாலும் உங்கள் அம்மாவிற்கு பேச்சு துணைக்கு ஆள் இங்கு கிடைக்கும். இந்தியாவில் இருந்து வரும் வயதானவர்களுக்கு இது மிக முக்கியம் இல்லையென்றால் அது அவர்களுக்கு ஒரு ஜெயில் தண்டனை போலாகிவிடும்

வெங்கட் நாகராஜ் said...

எனது வருத்தங்கள்.

//"இந்தியாவில் நெருங்கிய சொந்தங்கள் தவிர, வேறெதுவும் இல்லை" என்பதே.// உண்மை....

வருண் said...

Sorry to hear about your dad! :( My heartfelt condolences to you, Mukunth ammA :(

கவியாழி said...

பணம் பத்தும் செய்யுமா?

Agila said...

Condolences Mukunthamma
//"இந்தியாவில் நெருங்கிய சொந்தங்கள் தவிர, வேறெதுவும் இல்லை" என்பதே.//

This is reality... :((

Stay smile said...

So sad :(

இராஜராஜேஸ்வரி said...

எல்லாம் அனுபவித்து உணர்ந்த பிறகு, என் கல்லூரி நண்பரிடம் மீண்டும் பேசினேன். அவர் சொன்னது "இந்தியாவில் நெருங்கிய சொந்தங்கள் தவிர, வேறெதுவும் இல்லை" என்பதே.


மிகச்சரி..!