Friday, January 16, 2015

படித்தது, கேட்டது, அனுபவித்தது

படித்தது 

சில மாதங்களுக்கு முன்பு, "ஆண்டிபயாடிக் சோப்புகளை உபயோகிப்பது நல்லதா இல்லையா " என்ற பதிவு எழுதி இருந்தேன். அதில் தற்போது மருத்துவமனைகளில் பரவும் MRSA ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்களை பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன்.

இன்று வாசித்த செய்தி. சாதாரண ஆண்டிபயாடிக்குகள் போல ஆண்டிபயாடிக் எதிர்பை அல்லது பாக்டீரியாகளில் பரிணாம மாற்றத்தை தூண்டாத ஒரு புது ஆண்டிபயாடிக்கை தற்போது மண்ணில் இருக்கும் பாக்டீரியாக்களில் இருந்து பிரித்து எடுத்து கண்டுபிடித்து இருக்கின்றனர்.  அதன் பெயர் teixobactin. இதனை காச நோயை உருவாக்கும் Mycobacterium tuberculosis பாக்டீரியாக்களின் மீது செலுத்திய போது, இது காச நோய் பாக்டீரியாக்களை கொன்றது மட்டுமல்லாமல் எந்த வித ஆண்டிபயாடிக் எதிர்ப்பு காச நோய் பாக்டீரியாக்களையும் உருவாக்கவில்லை. அதனால் இந்த மருந்தை எந்த பயமும் இன்றி கொடுக்கலாம். ஆனால் என்ன, இதனை மருந்தாக உருவாக்கி, பரிசோதனைகள் செய்து மார்கெட்டில் புழக்கத்தில் வர குறைந்தது பத்து வருடங்கள் ஆகும் என்றாலும் இது மருத்துவ உலகில் வரவேற்க தக்கது.

கேட்டது 

ஒரு சிலரின் குரலை முதன் முதலில்  கேட்கும் போது மனம் மயங்கும், அப்படி நான் கேட்டவுடன் பிடித்த குரல் Israel "IZ" Kamakawiwoʻole எனப்படும் ஹவாயை சேர்ந்த பாடகர். அவரின் "Somewhere over the rainbow" எனப்படும் இந்த பாடல் சோர்ந்த மனதிற்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் அளிக்கும். "IZ" அவர்களின் சொந்த வாழ்க்கை சோகமானது, உடல் பருமனால் அவரின் மொத்த குடும்பமும் அவதிப்பட்டு இறந்தாலும் தனது வசீகர குரலால் பலருக்கு தன்னம்பிக்கை அளித்தவர் அவர்.

இதோ அவரின் "Somewhere over the rainbow" பாடல் 




அனுபவித்தது 

சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது பட்ட அவஸ்த்தை. சொந்த ஊரான மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லலாம் என்று குடும்பத்துடன் முடிவு செய்து அனைவரும் கிளம்பியாயிற்று. போகும் வழியில் எல்லாம் பெண்களுக்கான கழிப்பறை தேடி தேடி நொந்து போனது அவஸ்தை. அப்படியே ஒரு சில இடங்களில் கழிப்பறைகள் இருப்பினும் அவற்றில் எல்லாம் உபயோகித்த நாப்கின் குப்பைகளில் இருந்து அனைத்தையும் போட்டு சில இடங்களில் கால் கூட வைக்க முடியவில்லை.  பல கட்டண கழிப்பறைகளில் கூட இந்த நிலை, தண்ணீர் கூட  வருவதில்லை. கட்டணமில்லா கழிப்பறைகளை பற்றி சொல்லவே வேண்டாம். ஒழுங்கான கழிப்பறைகளை நான் கண்டது மதுரையில் இருந்து சென்னை செல்லும் வழியில் இருந்த  A2B உணவகங்களுக்கு அருகில் இருந்தவை மட்டுமே.

இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள் கழிப்பறைகளை உபயோகித்தாலும் UTI (Urinary track infection) வருவது தவிர்க்க முடியாது.  நல்ல கழிப்பறைகள் தேவை, எல்லா இடங்களில் இல்லாவிட்டாலும் , சுற்றுலா தளங்களிலாவது வேண்டும். கவனிக்குமா அரசு.

நன்றி 


3 comments:

வருண் said...

இந்த மாதிரியெல்லாம் உண்மை நிலவரத்தை எழுதினீங்கனா, அமெரிக்கா போயி உங்களுக்கு திமிர் வந்துருச்சுனு சொல்வார்கள். :-)

ஆஹா, "எப்படி இருக்கு ஐ டி கம்பெணி பில்டிங், ஐ டி மக்கள் வாழ்க்கை தரம் உலகத்தரம்! கே எஃப் சி சிக்கன், பிட்சா ஹட் எல்லாம் பிரமாதமா இருக்கு!" னு ஏதாவது பாசிடிட்வா உயரத் தூக்கி வச்சு எழுதினீங்க உங்களை பாராட்டுவாங்க.

நான் கூட அம்மா உணவகம், அம்மா திரை அரங்கம் லாம் எதுக்கு? அம்மா கழிப்பறை தான் அவசியம் என்று ஒரு பதிவு எழுதினேன்.

பார்ப்பணர்கள் எல்லாம் சீரியஸா "அஃபெண்ட்" ஆயிட்டாங்க. இதுக்கெல்லாம் ஒரு சாதியை உருவாக்கி, அதில் ஏழைகளை மட்டும் உள்ளடக்கி, மஞ்சக்க்குளிச்சவர்கள் இவர்கள். கீழ்மட்டத்தில் உள்ளவர்களைப் பற்றி, இது போல் பென்களுக்கு உள்ள அவலநிலைகளைப் பற்றி எல்லாம் இவர்களுக்கு யோசிக்கத் தெரிந்து இருந்தால் இந்தியா ஏன் இந்நிலையில் இருக்கு?

இந்தியா சூப்பர் பவர் ஆகபோதாம்! :))

? said...

@வருண்

அம்மா கழிப்பறை எல்லாம் கட்டினால் மட்டும் போதாது. நம்மாளுக அதை ஒரே வாரத்தில் உபயோகிக்க முடியாத அளவுக்கு நாறடித்து விடுவார்கள். நமது மனோநிலை மாற வேண்டும். ஒரு புகழ்பெற்ற இந்திய மருத்துவ கல்லூரி ஹாஸ்டலில் தங்க நேர்ந்தது. மருத்துவ மாணவர்களே சாப்பிட்ட தட்டை கழுவாமல் கிழே எறிந்து விட்டு போய்விடுவர்கள், பின்பு அதில் மிச்சமிருப்பதை நாய் சாப்பிடும். கழிப்பறையில் தண்ணீர் ஊற்றிவிடாமல் போய்விடுவார்கள், கழிப்பறை கதவை திறந்ததும் வாந்திதான் வரும்.வருங்கால மருத்துவரே இந்த லட்சணம் என்ற மற்றவரை பற்றி கேட்க வேண்டுமா?

நம்மாளுகளின் கேவலமான மனோபாவம் எவ்வளவு படித்தாலும் பணம் சம்பாதித்தாலும் மாறுவதில்லை என்பதுதான், ஆச்சர்யம். நீயூஜெர்சியில் இருக்கும் நம்மாளுக அந்த மாநிலத்தை எப்படியெல்லாம் நாறடித்து வருகிறார்கள் என்பது தாங்கள் அறியாதது அல்ல. ஆகவே நமது அடிப்படை மனோபாவமும் மாறனால்தான் உண்டு. ஆனா நீங்க சொன்னது போலவே இதைப் பற்றியெல்லாம் குறை சொன்னால் நம்மாளுக குமுறிவிடுவார்கள் என்பது முற்றிலும் உண்மை. :))

வேகநரி said...

இந்த கழிப்பறை சமாச்சாரம் இந்திய அவமானம்.