Friday, October 14, 2016

சவுத் இந்தியனும் கிளிஷேக்களும், உலக மகா பணக்காரர்களும்!!

சவுத் இந்தியனும், கிளிஷேக்களும்
 
எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன, மதராஸ் மாகாணம் 4, தற்போது 5 மாநிலங்களாக பிரிந்து. ஆனாலும் இன்னும் பல வட இந்திய மக்களிடம் "மதராஸி" என்ற சொல் வழக்கமாக இருக்கிறது. அந்த சொல் மட்டும் அல்ல, மதராஸி என்றால் இப்படி தான் இருப்பார் போன்ற பல கிளிஷேகளும் இன்னும் இருக்கின்றன. 

உதாரணத்துக்கு, தீபாவளிக்கு அம்மாவுக்கு புடவை வாங்கலாம் என்று இங்கிருக்கும் ஒரு வட நாட்டு துணி கடைக்கு சென்று இருந்தேன். உள்ளே நுழையும் போதே அங்கிருந்த அம்மா, வாங்க!, "பட்டு புடவைகள் எல்லாம் கடைசி செக்சனில் இருக்கு" என்றார்.  உடனே நான், இல்லங்க நான் சாதாரண புடவை பார்க்கணும் என்றவுடன், அவரோ, "நீங்க மதராஸி மக்கள் எப்பொழுதுமே பட்டு புடவை தானே வாங்குவீங்க, அதனாலதான் சொன்னேன்" என்றார்.

எங்க இருந்து இது போல கிளிஷேக்கள் உருவாகுதுன்னு தெரியல..இன்னொரு விஷயம், படேல் ஒருவரின் வீட்டுக்கு சாப்பிட போய் இருந்தோம், அவர், சாப்பிடும் போதே பெரிய தயிர் டப்பா எடுத்துட்டு வந்து வச்சார். அது டின்னெர் என்பதால் நாங்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்ப்பது வழக்கம். ஆனால் அவருக்கு "ஒரு ஆச்சரியம்," "என்ன சவுத் இந்தியன் நீங்க, தயிர் சாதம் சாப்பிடாம இருக்கீங்க!". என்று கேட்டார்.

இதே போல இன்னும் சில கிளிஷேக்கள், சவுத் இந்தியன் பெண்கள் எல்லாரும், கருப்பாக இருப்பார்கள், எல்லாரும் வெஜிடேரியன் என்று ஒரு சில கிளிஷேக்கள். எல்லாரும் பேசும் பொது ஐயோ, கடவுளே ..என்று பேசுவார்கள் என்றும் சில...இதனை குறித்து நான் அப்பப்போ யோசிப்பதுண்டு.  வேலைப்பளுவில் இருந்து ரிலாக்ஸ் ஆக என்று நான் யூ டூப் தட்டியபோது  "2 ஸ்டேட்ஸ்" என்ற படம் பார்க்க நேர்ந்தது. அதிலும் இப்படி பல பல கிளிஷே காட்சிகள்.  சவுத் இந்தியன் அல்லது தமிழன் என்றால்  கர்நாடக சங்கீதம், பட்டு புடவை, ஐயர், சந்தன பொட்டு, தயிர் சாதம், ஐயோ..என்று இருப்பார்கள் , என்பன போன்ற கிளிஷேக்களை உறுதி செய்கிறது. 
நான் வட இந்தியாவில் வசித்ததில்லை, அதனால் இது இன்னும் தொடரும் நிலையா என்று தெரியவில்லை.  இதனை குறித்து தேடிய போது, "We are south of India" என்ற ஆல்பம் பார்க்க நேர்ந்தது. அது இது போன்ற கிளிஷேக்கள் பற்றியது. நீங்களும் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கலாம்.

 




உலக மகா பணக்காரர்கள் 

"அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்ற பழமொழி நிறைய பேர் கேள்வி பட்டு இருப்பார்கள். நானும் சிறு வயதில் இது போன்ற பல புது பணக்காரர்களை பார்த்து இருக்கிறேன். தற்போது பண புழக்கம் அதிகமான, சோசியல் மீடியா அதிகம் ஆன பிறகு, "ஷோ" காட்டுவது என்பது அதிகம் ஆகிவிட்டது என்று சொல்லலாம். தற்பெருமை காட்டுவது என்பது ஆண், பெண் பாகுபாடில்லாமல் நடக்கிறது. ஆண்கள் முக்கால் வாசி நேரம், "கார், பைக்" போன்றவற்றை ஷோ காட்டுவது, பல இடங்களுக்கு நாடுகளுக்கு சென்று பல போஸ்களில் போட்டோ இணையத்தில் உலவ விடுவது, சகஜம் என்றால். பெண்களோ!!, பல பல ட்ரெஸ்கள், நகைகள், மேக்கப் என்று பலவும் போட்டு, பல பல போஸ்களில் படம் எடுத்து உலவ விடுவது சகஜமான நிகழ்வு. 

இதெல்லாம் இளைய மக்கள் செய்து கொண்டிருக்க, மிடில் கிளாஸ் மக்களிடம் வேறு வகையான "ஷோ"   காட்டுவது என்பது உண்டு.  பெண்கள் எல்லாம் பெரிய தடிமனான செயின் போட்டு கொள்ளுவது. உதாரணமாக, "அம்மா" வின் பக்தைகள் சிலரின் புகைபடங்கள் காண நேர்ந்தது, அதில் காட்டப்படும் "நகை" காசு மாலை எல்லாம் பார்த்தால், எங்க இருந்து இவங்களுக்கு பணம் கிடைக்குது என்று கேட்க தோன்றும்.  

(photo from BBC) 

இதே போல நிறைய ஷோ பண்ணும் குடும்பம் என்றால், அமெரிக்காவை பொறுத்தவரை "கர்தாஷியன்" குடும்பம். "அற்பனுக்கு வாழ்வு..." பழமொழிக்கு சரியான உதாரணமான இவர்கள். 
ஆனால், இப்படி ஷோ காட்டுவதன் பின் விளைவுகள் என்ன என்று பார்த்தால் துப்பாக்கி முனையில் "கிம் கர்தாஷியன்" நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை கூறலாம். இதே, தற்பொழுது ஹாலோவீன் காஸ்டியூம் ஆகி கூட இருக்கிறது. 


ஆனால், உண்மையில் உலக மகா பணக்காரர்கள் எல்லாம் இப்படி ஷோ காட்டுபவர்களா, என்று பார்த்தால் ஆச்சரியம் மிஞ்சுகிறது. உதாரணமாக, "பில் கேட்ஸ் ம் அவரது மனைவியும்" தங்களது சொத்தில் பாதியை "பில் & மெலின்டா பவுண்டேஷன்" க்கு செலவளிக்கிறார்கள். (நானே அவர்களின் பவுண்டேஷன் க்கு நிறைய ஆராய்ச்சி அப்ப்ளிகேஷன் போட்டு இருக்கிறேன்)  அவர்களின் போகஸ் எல்லாமே, ஏழை நாடுகளில் இருக்கும் மக்களின் சுகாதாரத்தை குறித்த, உடல்நிலையை முன்னேற்றும் வழிகள், மருந்துகள் கண்டு பிடிப்பது போன்ற ஆராய்ச்சிக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். 

"வாரன் பாபட்",  1958 இல் வாங்கிய  அதே வீட்டில் இன்னும் வாழ்கிறார். முகநூல் CEO மார்க் தனது Facebook சேரில் 99% பொதுநல, சுகாதார விசயத்துக்கு என்று எழுதி வைத்து விட்டார். இன்னும் சிம்பிள் ஆக, அதே பணிவுடன், சாதாரண காரில், சாதாரணமாக வாழ்கிறார்கள்.  

"Too often, a vast collection of possessions ends up possessing its owner. The asset I most value, aside from health, is interesting, diverse, and long-standing friends."

-Warren Buffet


இதையே தான் நம்ம பாவனையில்  "கையில் கொஞ்சம் காசு இருந்தால் அது தான் நமக்கு முதலாளி, கழுத்து வரைக்கும் காசு இருந்தா அதுவே உனக்கு முதலாளி" என்று சொல்லி இருக்கிறார்கள் போல.
 

நன்றி.


1 comment:

ஆரூர் பாஸ்கர் said...

ரொம்ப நாளுக்கு பிறகு உங்கள்
தளத்துக்கு வருகிறேன். ஏமாற்றவில்லை. நல்ல கருத்துகள் !!