Monday, September 19, 2016

இளையராஜா ஆஆஆ ...!



சிறு வயதில் இருந்து  நான்  கேட்ட மனதில்  மனதில் ரீங்காரமிடும் அந்த ட்யூன்கள்..கண் எதிரில்    ஆர்கேஸ்டரா வாசிக்க இசைஞானி இளையராஜாவை நேரில் முதன் முறையாக காணும் வாய்ப்பு கிட்டியது. இளையராஜாவின் Live -In Concert ,USA சுற்றுப்பயணத்தில் ஒரு ஊரான அட்லாண்டாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்கும் வாய்ப்பு நிகழ்ந்தது.

கொட்டும் மழையில் ஓபன் தியேட்டரில் மழைச்சாரல் அடிக்க ,  "சிவ சக்தியா யுக்தோ யதி பவதி" என்று ஆரம்பித்து, "ஜனனி, ஜனனி" என்று தொடங்கியது..அடுத்து அதிரும் குரலில் "ஓம் சிவோஹம்" என்று பாடகர் கார்த்திக் ஆரம்பித்து அதிர வைத்தார்.  

ஆனால் ஆர்ப்பாட்டமான துவக்கத்துக்கு  பிறகு துவக்கத்தில் ஏனோ கச்சேரி களை  கட்டவில்லை.  ஆயிரம் பாடல்களுக்கு மேல்  இசை அமைத்தவர் என்பதால் என்னவோ எதை விடுவது எதை எடுப்பது என்று தெரியவில்லை போலும். "நிலா காயுது, நேரம் நல்ல நேரம்"  பாடல்கள் எல்லாம் சேர்த்த அவர்கள், நூற்றுக்கணக்கான மெலடி பாடல்கள் சேர்க்காதது ஏன் என்று தெரியவில்லை. மேலும் இந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்திருந்தது அட்லாண்டா தமிழ் சங்கம் மட்டுமல்லாது அட்லாண்டாவில் இயங்கும் 3  தெலுங்கு சங்கங்களும் ஸ்பான்சர்  செய்திருந்தார்கள். அதனால் தானோ என்னவோ, நிறைய தெலுங்கு பேசினார் ராஜா.. அதனை தவிர நிறைய தெலுங்கு பாடல்கள்களும் இசைக்கப்பட்டன. அதிலும் ஒரு சில மனதுக்கு பிடித்த நான் அதிகம் விரும்பிய ஒரு சில பாடல்களான "இதழில் கதை எழுதும் நேரமிது" பாடலும் "கொடியிலே மல்லிகைப்பூ" பாடலும் தெலுங்கு வெர்சனில் கேட்க கடுப்பாகி விட்டது.

ஏற்கனவே இதழில் கதை எழுதும் நேரமிது பாடல் தமிழில் பாட கேட்காதது கண்டு கடுப்பாகி இருந்த நான், அதனை பாடிய கார்த்திக்கை ராஜா திரும்ப பாடு, தப்பாக பாடுகிறாய் என்று ட்ரில் வாங்கி கொண்டிருந்தார். கார்த்திக் பாடிய அத்தனை பாடல்களும் திரும்ப பாடும்படி அவர் சொன்னது, பலருக்கு கடுப்பேத்தியது என்பது உண்மை. "சின்ன மணிக்குயிலே" பாட்டு, பால்ஸ் வாய்ஸில் படுற, ஒரிஜினல் வாய்ஸில் பாடு, என்று திரும்ப பாட சொல்லி ஆரம்பித்த அவர், பின்னர் "நினைவோ ஒரு பறவை" பாட்டில் சுருதி இல்லை என்று திரும்ப பாட சொன்னார். அதே நிலை
"லலித பிரிய கமலம் (இதழில் கதை எழுதும் நேரமிது) பாடலுக்கும் நிகழ்ந்தது.
சில நேரம் வந்த இடத்தில இதெல்லாம் சகஜமப்பா..என்று சொல்ல தோன்றியது என்னவோ உண்மை. அதையும் தவிர, மேடைக்கு வருபவர்கள் எல்லாரும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க காலில் விழுவது நேரம் போகப்போக கடுப்பாக இருந்தது. அருகில் இருந்த ஒரு சிலர்," கார்த்திக், கால்ல விழுகல போல, அதான் மாஸ்டரோ ட்ரில் வாங்குறாரு " என்று கமெண்ட் அடித்து கொண்டிருந்தனர்.





ஒரு சில நேரத்தில் தொடர்ந்து 3 தெலுங்கு பாடல்கள் இசைக்கப்பட்ட, கிட்டத்தட்ட அனைவரும் "தமிழ் பாட்டு வேணும் " என்று கத்தவே ஆரம்பித்து விட்டார்கள். பின்னர் முடியும் தருவாயில், சில குத்து பாடல்கள் போட்டு கச்சேரியை நிறைவு செய்தாலும் எனக்கென்னவோ முழு திருப்தி இல்லை.

ஆயினும்,  ஒரு சில பாடல்களான "காட்டு குயிலு மனசுக்குள்ள," "ஓ ப்ரியா ப்ரியா", "மடை திறந்து பாடும்" போன்ற பாடல்கள் அற்புதமாக இருந்ததென்னவோ உண்மை.

கொடுத்த காசுக்கு இன்னும் நிறைய மெலடி பாடல்கள் சேர்த்து இருந்தால் முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி இருந்திருக்கும். இது என்னவோ தரவில்லை என்பதென்னவோ உண்மை.

ஒரு கொசுறு செய்தியும் இங்கே. எங்கள் தமிழ் பள்ளியில் என் வகுப்பில் 2 ஆவது 3ஆவது படிக்கும் பிள்ளைகளிடம், "இளையராஜா யார் என்று தெரியுமா?" என்று ஒரு கேள்வி கேட்டு விட்டேன். அதற்க்கு அவர்கள் கொடுத்த பதில் புல்லரிக்க வைத்தது. சில குழந்தைகள் "He is a flutist", "He plays sitar", "He is singer" etc. இங்கேயே பிறந்து வளர்ந்த இவர்களிடம் யார் இளையராஜா என்ற கேள்வி கேட்டு இருக்க கூடாது..ஏனெனில் இவர்கள் அனைவரும் Taylor Swift, Justin Beiber, பரம்பரையை சேர்ந்தவர்கள். எல்லாம் என் நேரம்.


டிஸ்கி
இங்கு நான் குறிப்பிட்டு இருக்கும் செய்திகள் எல்லாம் என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே. யாரையும்குறிப்பிடவோ குறை  கூறவோ  இல்லை  இங்கு. புரிதலுக்கு நன்றி.




3 comments:

காரிகன் said...

நிலா காயுது பாடலையெல்லாம் லைவாக ஒரு இசை நிகழ்ச்சியில் பாடுவதே மாபெரும் சாதனை.

----- அதையும் தவிர, மேடைக்கு வருபவர்கள் எல்லாரும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க காலில் விழுவது நேரம் போகப்போக கடுப்பாக இருந்தது. ------


இரா தன்னை உண்மையிலேயே ஞானி என்று எண்ணுவது தெரிந்ததுதானே?

ஆரூர் பாஸ்கர் said...

ராக தேவனின் கச்சேரிக்கு சென்றதுக்கு வாழ்த்துகள்.
கடந்த வருடம் நடந்த அவருடைய கச்சேரியில் தெலுங்கு பாடல்கள் கேட்டு
தெலுங்கு ரசிகர்கள் ஆர்பாட்டம் செய்ததாக கேள்விப்பட்டேன்.

வேகநரி said...

இசைஞானி இளையராஜாவின் ரசிகரின் பதிவை படித்தேன்.
சுவாரஸ்யம்.