Wednesday, January 11, 2017

லாஸ் ஏஞ்சலீஸ் டு சான் பிரான்சிஸ்கோ, தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

இந்த வருடம் புது வருடம் பிறந்தது, புது ஊரில். ஒரு கருத்தரங்கில் பங்கேற்க, பேச என்று கலிபோர்னியா செல்ல நேர்ந்தது. முன்பே ஒரு முறை லாஸ் ஏஞ்சலீஸ் சென்றிருந்தாலும், முதல் முறை முகுந்துடன். "கோல்டன் கேட் பாலம்" பார்த்தே ஆகவேண்டும் என்று விரும்பியதால். LA யில் இருந்து சிலிக்கான் வேலி வரை பின்னர் SFO டு LA  வரை  5- 6 மணி நேர கார் பயணம். 

LA யில் இருந்து SFO செல்ல வேண்டும் என்றால் 3 வழிகள் உண்டு. ஒன்று மிக மிக அழகான "பசிபிக் கோஸ்ட் ஹை வே" கடற்கரை ஓரம் மலையில் அமைத்த பாதை கீழே ஆர்ப்பரிக்கும் பசிபிக் மகா சமுத்திரம், என்ற மிக மிக அழகான பாதை. அழகென்றாலே ஆபத்து உண்டு என்று யாரோ சொன்னது போல, மிக மிக கவனமாக ஓட்ட வேண்டிய பாதை. பகலில் மிக அற்புதமான சீனிக் டிரைவ் ஆக இருக்கும் இது, மாலை மயங்கியவுடன் மிக ஆபத்தான பாதை ஆகிவிடும். கும்மிருட்டில், மலைப்பாதையில், எதிர் வரும் ஆப்போசிட் ட்ராபிக் கண்ணில் ஒளி அடிக்கும் ஆபத்தில், கொஞ்சம் வண்டியை திசை திருப்பினாலும் கடலில் விழ வேண்டிய நிலை. வழியில் எந்த எக்ஸிட் ம் இல்லாமல், எந்த ஸ்டாப் ம் பண்ண முடியாமல்,  2- 3 மணி நேரம், அப்படி ஒரு சூழலில் வண்டி ஓட்டி வர நேர்ந்தது மறக்க முடியா அனுபவம்.  




இந்த  பாதை எவ்வளவுக்கு எவ்வளவு அற்புதமாக இருந்ததோ அதற்க்கு நேர் எதிர் இருந்தது, LA யில் இருந்து SFO நாங்கள் சென்ற ஐ-5 எனப்படும் சென்ட்ரல் கலிபோர்னியா வழி  செல்லும் ஒரு பாதை.

ஆரம்பிக்கும் போது இந்த பாதையும் அழகாகவே  இருந்தது, சுற்றிலும் மலைகள் சூழ, அதில் வெள்ளை போர்வைகள் போல பனி படர்ந்து அற்புதமான காட்சியாக இருந்தது. இந்த காட்சியை ரசித்து கொண்டே வண்டி ஓட்டி கொண்டிருந்த போது, தூரத்தில் ஒரு இருள் சூழ்ந்த நிகழ்வு போல, கரும் புகையா அல்லது புழுதியா என்று தெரியவில்லை லாண்ட்ஸ்கேப்பில் பார்த்தால் நம்மை சுற்றிலும் ஒரு 180 டிகிரி அளவு போல புகை போல படர்ந்தது போல தென்பட்டது. இதென்ன Smog ஆக இருக்குமோ என்று நினைத்து வண்டியை விட, அது உண்மையில் "டஸ்ட் பவுல்" என்று காலிஃபோர்னியர்கள் சொல்வது போல ஒரு புழுதி படலம். 



மத்திய காலிஃபோர்னியாவில் எங்கெங்கு நோக்கினும் தண்ணீர் பஞ்சம்,  சாலையில் இரு மருங்கிலும், வாடிய பயிர்களும், அதனை சார்ந்த அட்டைகளும் காண நேர்ந்தது. எது முக்கியம், புது புது பாலங்களா? இல்லை நிலத்திற்கு நீரா? என்று அரசாங்கத்தை தாக்கி பல பல போர்டுகள்.





இந்த பலகைகளை பார்த்து கொண்டே வந்த எங்களுக்கு திடீரென்று மூக்கை துளைக்கும் மாட்டு சாண நாற்றம். குடலை பிடுங்கும் ஒரு நாற்றம் அது. காரின், AC எல்லாவற்றையும் நிறுத்தி வைத்துவிட்டு வண்டியை செலுத்தினாலும் இந்த நாற்றத்தை பொறுக்க முடியவில்லை. 
அப்புறம் நாங்கள் பார்த்தது, "ஹாரிஸ் ரான்ச்" எனப்படும் அமெரிக்காவின் #1 மாடுகளை வளர்த்து/வாங்கி உணவுக்காக வெட்டும் இடம். ஆயிரக்கணக்கான ஏக்கரில், எங்கெங்கு காணினும் மாடுகள், பல லட்சம் மாடுகள், தங்களின் சாணத்தின் மீது தானே நின்று கொண்டு, மிக மிக குறைந்த இடத்தில், பார்க்கவே பாவமாக இருந்தது. 

இந்தியாவில், நிறைய மாட்டு கொட்டகைக்கு சென்று இருக்கிறேன், ஆனாலும் இப்படி ஒரு நாற்றத்தை நுகர்ந்ததில்லை. ஒரு வேளை , வெட்டப்படும் முன், நன்கு கொழுக்க வைக்க என்று ஸ்பெஷல் சாப்பாடு மாடுகளுக்கு கொடுக்க படுகிறது. அது நிறைய சோளமும், ப்ரொடீனும் நிறைந்த ஒரு வகை உணவு. அதனாலேயே, க்ரீன் ஹவுஸ் காஸெஸ் எனப்படும், கழிவு பொருட்களில் இருந்து வரும் கேஸ்கள் அதிகமாக இந்த மாடுகளில் இருந்து வருகிறதா தெரியவில்லை.  ஆனால், ஒரு முறை இந்த பக்கம் வந்து இந்த "வாசத்தை" நுகர்ந்த எவரும், ஹம்பர்கர்ஓ, அல்லது சடீக் ஓ அல்லது பீப் பிரை ஓ சில நாட்கள் கட்டாயம் சாப்பிட மாட்டார்கள். 




 இந்த மாடுகளுக்கு உணவளிக்க, தண்ணீர் காட்ட மட்டும் எப்படி இவர்களுக்கு தண்ணீர் கிடக்கிறது என்று எனக்கு ஒரே கேள்வி. ஏனெனில், ரெஸ்டாரெண்டில் சாப்பிட சென்றால் கூட, ஒரு முறை தண்ணீர் வந்து வைத்த பிறகு மறுமுறை வைக்க, கெஞ்ச வேண்டி இருக்கிறது. தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று எல்லா இடங்களிலும் போஸ்டர்.  அமெரிக்கா முழுதுக்கும் சாப்பாடு வருவது, கிட்டத்தட்ட 60-80% வரை கலிஃபோர்னியாவில் இருந்து. கலிபோனியாவில் இது போல தண்ணீர் பஞ்சம் இருக்க, சாப்பாட்டு உற்பத்திக்கு என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. மிக பெரிய கேள்வி குறி.

இதெல்லாம் எனக்கு, எங்கே செல்லும் இந்த பாதை என்று என்னுடைய "தண்ணீருக்காக ஒரு யுத்தம் வராமல் தடுப்போம்" முந்தைய பதிவை ஞாபக படுத்தின. 

மொத்தத்தில், லாஸ் ஏஞ்சலீஸ் , சான் பிரான்சிஸ்கோ பயணம், ஒரு மறக்க முடியா அனுபவம்.

நன்றி.

2 comments:

வேகநரி said...

தெரிந்திராத தகவல்கள் தெரிந்து கொண்டேன்.பதிவுக்கு நன்றி.

ஆரூர் பாஸ்கர் said...

கடந்த முறை SFO போன போது, நீங்கள் சொன்ன இடங்களைப் பார்க்கத் தவறிவிட்டோம். அமெரிக்காவிலும் இந்தியா போல தண்ணீர் தட்டுப்பாடு, மாநிலங்களுக்குள் முட்டுதல் இருக்கதான் செய்கிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் மோசமில்லை.


பருவமழை நன்றாக பெய்ய வேண்டுவோம். நன்றி !!