ஒரு வருடம் ஓடி விட்டது. எப்படி ஓடியது என்று கூட தெரியவில்லை. இந்த வருடத்தில் நடந்த என்னை பாதித்த சில நிகழ்வுகளை திரும்பி பார்க்கும் சுயசொறிதல் பதிவு இது.
வருட ஆரம்பத்தில் இனிமேல் முகநூல் உபயோகிப்பதில்லை என்ற தீர்மானம் எடுத்து அதனை வெற்றிகரமாக செயலாற்ற முடித்திருந்தது. அப்பப்ப்போ பதிவுகள் எழுதுவதை, சிலரின் பதிவுகளை படிப்பது தவிர, சுத்தமாக சோசியல் மீடியாவை உபயோகிப்பது விட்டாகிவிட்டது. ஒரு பெரிய அடிக்கசனில் இருந்து மீண்ட ஒரு உணர்வு. "கையில் கொஞ்சம் காசு இருந்தா அது தான் உனக்கு எஜமானன், கழுத்து வரைக்கும் காசு இருந்தா அதுவே உனக்கு எஜமானன்" என்ற ரஜினி பட பாடல் போல, " சோசியல் மீடியாவை, உங்கள் கண்ட்ரோலில் வைத்திருக்கும் வரை, நீங்கள் உங்கள் நேரத்தின் எஜமானன், அதுவே, சோசியல் மீடியா உங்களை கண்ட்ரோலில் வைத்திருந்தால் அது உங்கள் நேரத்தின் எஜமானன்" என்ற புது மொழி சொல்லலாம் என்று நினைக்கிறன்.
எப்பொழுதும் போனை பார்த்து கொண்டு, ஏதாவது லைக், கமெண்ட் வந்திருக்கிறதா, எதனை பேர் நம் ப்ளாகை வாசித்தார்கள் என்று செக் செய்து கொண்டிருந்த ஒரு மோசமான அடிக்கசனில் இருந்து முழுதும் வெளி வந்து விட்டேன். முகநூல் பக்கம் போய் மாதக்கணக்காகிறது. வாட்சாப் எல்லாம் எப்பொழுதாவது உபயோகிப்பது, அதுவும் குடும்ப விஷயம், அல்லது மிக மிக முக்கிய விசயம் என்றால் மட்டுமே உபயோகிப்பது, என்ற கொள்கை வைத்திருக்கிறேன். அதனால் சில நேரங்களில் நெருங்கிய தோழிகள் நண்பர்கள் கூட, "என்ன பேசவே மாட்டேங்கிற, ரொம்ப பிசியா", என்று கேட்பதை, ஆமாம் என்று, ஒத்து கொண்டு, அமைதியாக வந்து விடுகிறேன். இப்போதெல்லாம், நிறைய பேசுவதில்லை, அடுத்தவர் பேசுவதை கேட்கிறேன்.
கிடைக்கும் நேரத்தில் வாசிக்கிறேன். அதிகம் வாசிக்க முடியவில்லை என்றாலும், ஒரு சில புத்தகங்கள் மனதுக்கு பிடித்திருந்தன. அதிலும் என்னை ரொம்ப பாதித்தது, "Naomi Wolf" அவர்களின் "The Beauty Myth" புத்தகம்.
பெண்ணென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு மாயையை புகைப்படங்கள் காணொளிகள் மூலம் உருவாக்கி, அதுவே சாஸ்வதம் என்று நம்ப வைத்து, எப்படி பேஷன் மாற்று அழகு சாதன இண்டஸ்ட்ரி பெண்களை அடிமை படுத்தி இருக்கிறது என்பதை முகத்தில் அறைந்தார் போல சொல்லும் புத்தகம்.
தற்போதெல்லாம், அடுத்தவர்கள் சொல்லும் சொல், அல்லது செயல் தான் நம்மை, நிர்ணயிக்கும் கருவி ஆகி இருக்கிறது பலருக்கு. அதாவது, "நீ குண்டு," "அட்ட கரி மூஞ்சி","உன் மூக்கு சரியில்ல", "வாய பாரு", "முகமெல்லாம் பரு" என்பது போன்ற புற அழகுகளை மெருகேற்ற தரும் டிப்ஸ் தவிர இப்போதெல்லாம், பெண்களின் ப்ரா சைஸ் இல் இருந்து அவர்கள், உடுத்தும் உள்ளாடைகள் வரை, இது தான் பெஸ்ட், இப்படி இருந்தா தான் பெஸ்ட் பாஷன், இல்லையினா வேஸ்ட். என்பது போன்றவை சிறு வயதில் இருந்தே மறைமுகமாக அல்லது நேரடியாக போதிக்க படுகின்றன. இதனை படிக்கும் போது, எப்படி மறைமுகமாக பல பல விஷயங்கள் நம் வாழ்வில் நுழைந்திருக்கின்றன என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் எல்லாம், அவர்களின் தன்னம்பிக்கையை குறைத்து, இப்படி இருந்தால் தான் அழகு, என்று மறைமுகமாக/நேரடியாக போதித்து, ஒரு "அழகு" இண்டெக்ஸ் உருவாக்கி இருக்கிறார்கள். முடிந்தால் இந்த புத்தகம் கிடைத்தால் படித்தது விடுங்கள்.
அடுத்த புத்தகம், 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிகழ்ந்த ஹவுசிங் மார்க்கெட் சரிவு குறித்து அதன் காரணிகள் குறித்த "The Big Short" என்ற ஒரு நாவல். இதுவும் மனிதர்களின் பேராசைக்கு ஒரு உதாரணம். இது கடந்த டிசம்பர் படமாக வந்து சக்கை போடு போட்டது. அதன் ட்ரைலர் இங்கே.
எக்கனாமிக்ஸ் என்றால் என்ன?, சாதாரண மக்களிடம் கேட்டு பாருங்கள், ஒன்றும் தெரியாது. எனக்கு தெரிந்து இந்தியாவில் பல கலை கல்லூரிகளில் BA எகனாமிக்ஸ் டிகிரி உண்டு. அதில் படிக்கும் பலரிடம் கேட்டு பாருங்கள், எகனாமிக்ஸ் கோட்பாடுகளை. யாருக்கும் ஒன்றும் தெரியாது. ஆனால் இந்த எக்கனாமிக்ஸ் என்னென்ன விஷயங்களை கொண்டிருக்கிறது, எப்படி 500, 1000 ருபாய் செல்லாத அறிவிப்பு, டீ மானிட்டிசேஷன், எப்படி இந்தியாவை ஆட்டி படைத்து கொண்டிருக்கிருக்கிறது என்று படிக்கும் போது அறிந்து கொண்டால் புரிந்து நடந்தால் நன்றாக இருக்கும். பிராக்டிகல் ஆக இதனை சொல்லி தருவார்களா? என்று தெரியவில்லை.
இது பெஸ்ட் அது பெஸ்ட் என்று சாதாரண மக்களுக்கு ஆசை காட்டி காட்டியே, பலர் தங்கள் பணப்பையை நிரப்பி கொள்கிறார்கள். இது எப்படி அமெரிக்கா பொருளாதாரத்தில் நிகழ்ந்தது என்று இந்த படத்தில் சொல்லி இருப்பார்கள். "Subprime மார்கேஜ்", "மார்கேஜ் பாண்ட்", FICO ஸ்கோர், கிரெடிட் ஸ்கோர் எல்லாம் பார்க்கும் போது, அமெரிக்காவிலேயே இப்படி ஒரு சரிவு ஏற்பட்டது, இந்தியாவில் என்ன நடக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.
அடுத்தது, சினிமா. நான் இந்த வருடம் அதிகம் தமிழ் படங்கள் பார்க்கவில்லை. அவ்வப்போது ஒரு சில பார்த்ததுண்டு, சில பிற மொழி படங்கள் பார்த்ததுண்டு. அப்படி நான் பார்த்த ரசித்த ஒரு படம், "Toni Erdmaan" என்ற ஜெர்மன் படம். பொதுவாக ஜெர்மானியர்கள் குறித்த சில கிளிஷேக்கள் உண்டு. நகைசுவை உணர்வு இல்லாதவர்கள். எப்போதும் உர்ரென்று இருப்பார்கள். பெர்பெக்ஷன் மக்கள் என்று. ஆனால், திடீரென்று தனிமையாக்கப்பட்ட ஒரு தந்தையாக, காரீயர் வுமன் ஆன தன் மகளை தேடி சென்று, அவர் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கொடுத்து இருக்கிறார்கள். வாழ்கை நிலை சொல்லும் படம். எனக்கு பிடித்திருந்தது.
இந்த வருடம் நிகழ்த்த சில மரணங்கள், வாழ்க்கையின் நிலையாமையை உரக்க உணர்த்தி சென்றிருக்கின்றன. எவ்வளவு பணம், புகழ், அதிகாரம் என்று இருந்தாலும் என்ன தான் "தான்" என்று ஆட்டம் போட்டாலும், எல்லாம், ஒன்றுமில்லாமல் அடங்கி விடும். அதன் பின் ஒருவரும் உன்னை சீண்ட மாட்டார்கள். அவர் அவர் வாழ்க்கையை பார்த்து கொண்டு, புகழ், பணம் சேர்க்க சென்று விடுவார்கள். இது ஒரு நிலையில்லா வாழ்வு. என்று உணர்த்தி சென்று இருக்கிறது.
"வாழ்வில் எத்தனை பணம் புகழ் வந்தாலும், தலைகனம் மட்டும் வரக்கூடாது" என்று நான் உணர்ந்திருக்கிறேன். சில மறக்க முடியா பாடங்கள் இவை என்று நினைக்கிறன்.
புது ஆண்டில், எல்லாரும் எல்லாமும் பெற்று வளமுடன் வாழ, எல்லாம் வல்ல இறைவன்/இயற்க்கை அருளட்டும். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
நன்றி.
4 comments:
வாழ்த்துகளுக்கு நன்றி, முகுந்த் அம்மா.
நல்ல பதிவு.
நீங்க சொன்ன கையில் கொஞ்சம் காசு இருந்தா அது தான் உனக்கு எஜமானன், கழுத்து வரைக்கும் காசு இருந்தா அதுவே உனக்கு எஜமானன் என்ற ரஜினி பாடல் புரியாததால் எனக்கு தெரிந்த தமிழ் சினிமா அறிஞருக்கு போனை போட்டு கேட்டேன். கொஞ்சம் காசு வைத்திருந்தால் நீ தான் அதற்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தா அதுவே உனக்கு எஜமானன் என்று சொன்னார்.
உங்களுக்கும் புது வருட வாழ்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்து....தொடருந்து எழுதுங்கள் .....ஒரு எதிர்பார்ப்பு கொடுக்கும் பதிவு ...தெரிந்து கொள்ள நிறைய உண்டு ....பெருமையுடன் பகிரிந்து கொளவோ
சொல்ல மறந்துட்டேன்.பணம் புகழ் வந்தாலும் தலைகனம் ஆட்டம் போடுதல் வரக்கூடாது என்ற உண்மையை தெரிவித்த உங்களை பாராட்டுகிறேன்.
Post a Comment