Sunday, September 17, 2017

நம்மை கண்ட்ரோல் செய்வது கட்டுப்படுத்துவது யார்/எது ?

இந்த கேள்வியை நீங்கள் ஒவ்வொரு வயதினரிடம் கேட்டால் ஒவ்வொரு பதில் கிடைக்கலாம். உதாரணமாக சிறு குழந்தைகளிடமோ அல்லது பருவ வயதினரிடமோ கேட்டால், பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் என்ற பதில் வரும். அதே காதலிப்பவர்களிடம் கேட்டால், பெற்றோர் அல்லது சமூகம் என்ற பதில் வரும். திருமணமான பின்னோ கணவன் தன்னை கண்ட்ரோல் செய்வதாக மனைவியும், மனைவி கண்ட்ரோல் செய்வதாக கணவனும் மாறி மாறி புகார் கூறி கொள்வர். ஆனால், வயதான பின்பு உடல்நிலை, குழந்தைகள் என்று சைக்கிள் மாறி விடும்.

ஆனால் நீங்கள் போனிலோ, அல்லது கம்ப்யூட்டரிலோ இன்டர்நெட் உபயோகிப்பவர் எனில் உங்களை கட்டுப்படுத்துவது எது என்ற கேள்வியை வயது வித்தியாசம் இல்லாமல்  கேட்டு பாருங்கள்.



உதாரணமாக, நீங்கள் யூ-டியூபில் வீடியோ ஒன்று பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுவோம், முன்பெல்லாம் நீங்களாக அடுத்த வீடியோவை கிளிக் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இப்பொழுதோ, அதுவே ஆட்டோ பிலே செய்கிறது. அதாவது, உங்களுடைய வேலையை மிச்சப்படுத்த என்று  யூ-டியூப் உங்களுக்காக செலக்ட் செய்து பிலே செய்கிறது. அதாவது யூ-டூபின் நோக்கம் உங்களை அதிக நேரம் அதில் செலவழிக்க வைப்பது. தொடர்ந்து பிலே ஆகும் போது, பல நேரங்களில் உங்களுக்கு அதனை விட்டு வெளியே வர முடிவதில்லை. அதாவது உங்கள் நேரத்தை, நீங்கள் வேறு வகையில் செலவழிக்க விடாமல் உங்களை யூ-டியூப் கண்ட்ரோல் செய்து விடுகிறது.



அதே போல, நெட்பிலிக்ஸ் எடுத்து கொள்ளுங்கள்,  இதுவும் அதே பாணியை கடைபிடிக்கிறது. '
ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்தது, தானாகவே பிலே ஆகிறது.

இன்னொரு விஷயம். நீங்கள் எப்போது ஒரு விசயத்தை அதிகம் பார்ப்பீர்கள். உதாரணமாக, முகநூல் நியூஸ் பீட் எடுத்து கொள்ளுங்கள். அதில் எந்த விஷயங்கள் அதிகம் காட்டப்படுகிறது. நீங்கள் ஒரு செய்தியை படித்து மனம் வெதும்பி கமெண்ட் அடிக்கிறீர்கள் அன்று வைத்து கொள்ளுங்கள், உங்களுக்கு அதனை சார்ந்த பதிவுகள், திரும்ப திரும்ப காட்டப்படுகிறது, உதாரணமாக, என்னுடைய நண்பர் ஒருவர் கறுப்பினத்தை சேர்ந்தவர், அவர் நடந்து முடிந்த சார்லோட்ஸ்வில் தாக்குதலை குறித்து கமெண்ட் அடித்திருந்தார். இப்பொழுது விடாமல் அவரிடம் இருந்து அதே போன்ற பல பல செய்திகள் கமெண்ட் ஆக வந்து கொண்டிருக்கின்றன. எல்லாமே ரத்தத்தை கொதிக்க வைக்கிறது போன்ற செய்திகள். நடந்தது என்னவென்றால், அவரின் முகநூல் உபயோகிக்கும் நேரத்தை அதிகப்படுத்த என்று, அதனை சார்ந்த பல பல விஷயங்கள் அவருக்கு பரிந்துரைக்க படுகின்றன.  அவரும் ஒவ்வொரு விஷயமாக வாசித்து, கமெண்ட் இட்டு  அதனை மற்றவருக்கு அனுப்புகிறார்.

முதலில் 15 நிமிடம் மட்டுமே முகநூலில்  செலவழித்த அவர், இப்போது அதுவே கதி என்று இருக்கிறார்.

நீங்கள் பிளிப்கார்ட் உபயோகிப்பவரா, இல்லை அமேசான் உபயோகிப்பவரா?, உங்களுக்கு ஏற்ற விடயங்களை, பொருட்களை அவர்களே பரிந்துரைக்கிறார்கள், உங்களுக்கு பிடிக்கும் என்று அடுத்த பொருட்களை பிளாஷ் செய்து உங்களை கிளிக் பண்ண செய்கிறார்கள். நீங்கள் செலவைக்கும் நேரத்தை அதிகரிக்க வைக்கிறார்கள்.

சரி, இப்போது, மறுபடியும் நான் முதலில் கேட்ட கேள்விக்கு வரலாம். உங்களை யார் கண்ட்ரோல் செய்கிறார்கள்.

"AI" எனப்படும் செயற்கை நுண்ணறிவு என்ஜினீர்கள். இவர்கள் டாப் 5-10 கம்பெனிகளில் இருக்கும் என்ஜினீயர்கள். கூகிள், முகநூல், யூடூப் , நெட்டபிலிக்ஸ், அமேசான், மைக்ரோ சாப்ட் என்றுஅனைத்து பெரிய கம்பெனிகளில் இருக்கும் அவர்களே உங்களை கண்ட்ரோல் செய்கிறார்கள். உங்களின் நேரத்தை எங்கே செலவழிப்பது, எப்படி செலவழிப்பது, என்ற அனைத்தையும் அவர்களே ப்ரோக்ராம் செய்து வைத்து விடுகிறார்கள். நீங்கள் அவர்கள் பரிந்துரைப்பது போல செயல்பட செயல்பட அதே போன்ற, அதனை சார்ந்தவை மட்டுமே உங்களுக்கு காட்டப்படும். உங்களின் சுயம் என்பது அவர்களால் நிர்ணயிக்க படுகிறது.

இப்போது எத்தனை பேர்  டிவி, போன், ஐபாட், கம்ப்யூட்டர், யூடூப், அமேசான், பிளிப்கார்ட், நெட்டபிலிக்ஸ் என்று எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள், சொல்லுங்கள். விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இதுவே, டிவி நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். எப்படி மக்களை அதிக நேரம் டிவி பார்க்க வைப்பது என்று உக்கார்ந்து உக்கார்ந்து யோசித்ததாலேயே, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் உருவாக்கப்படுகிறது. அதநை சார்ந்த பலவும் மற்ற எல்லா ஊடகங்களிலும் தெரிய செலவழிக்க வேண்டி உங்களுக்கு பரிந்துரைக்க படுகிறது.

அதுவே எத்தனை பேர் புத்தகங்களை வாசிக்கிறார்கள், இந்த இன்டர்நெட் தாக்கம் இன்றி சொந்தமாக ஏதாவது செய்கிறார்கள். நீங்களே உங்களை கேட்டு கொள்ளுங்கள். நாமெல்லாம் சுயத்தை AI என்ஜினீர்களிடம் இழந்து வருகிறோம், இதுவே உண்மை.

நன்றி

Reference:

https://www.ted.com/talks/tristan_harris_the_manipulative_tricks_tech_companies_use_to_capture_your_attention/transcript?utm_campaign=social&utm_medium=referral&utm_source=facebook.com&utm_content=talk&utm_term=technology#t-873658





Tuesday, September 12, 2017

நகையும், சுயமரியாதையும், கொசு(றும்)!!

ஒரு சில சமயம் சிறு குழந்தைகள் கேட்கும் கேள்விகள் நம்மை வாயடைத்து போக வைக்கும். பல நேரங்களில் எனக்கு இந்த நிலை ஏற்பட்டு இருந்தாலும் சமீபத்தில் முகுந்த் கேட்ட ஒரு கேள்வி என்னை யோசிக்க செய்தது. அது, Why do Women/Girls wear jewellery and makeup?
அதாவது "எதுக்கு மா நகை போடுறாங்க?, எதுக்கு பொண்ணுங்க மேக்கப் பண்ணுறாங்க?" இதுவே அந்த கேள்வி?.

எனக்கும் இதனை சார்ந்த ஒரு விஷயம் தோழிகளுடன் பேசும் போது கேட்க நேர்ந்தது. அதாவது, #100சாரீபாக்ட் எனப்படும் ஒரு தினமும் ஒரு புடவை அணிந்து போட்டோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் போடுவது. புடவை மட்டும் என்றில்லாமல் அதற்க்கு தேவையான அணிகலன்கள் (ஜிமிக்கி, தோடு, வளையல், நகை etc ) அணிந்து, அவை எங்கே வாங்கியது என்று டாக் செய்வது.
இதனை பலர் தினமும் செய்து வருவதாக அறிந்தேன். எதற்காக இவை செய்கிறார்கள்? என்ற கேள்வியும் வந்தது.

 சைக்காலஜியில் "மாஸ்லோவின் தேவைகள் பிரமிட்" என்ற ஒன்று உண்டு.  அதனை "Maslow's Hierarchy of Needs" என்றழைப்பர்.  அதன்படி, மனிதர்கள் தேவைகளை பல படிநிலைகள் கொண்டு பிரிக்கலாம். அவை,

1. அடிப்படை தேவைகள் (உணவு உடை உறைவிடம்)
2. பாதுகாப்பு தேவைகள் (வேலை, உடல்நிலை, வாழ்வில் ஸ்திரத்தன்மை)
3. அன்பு தேவைகள் (நண்பர்கள், குடும்பம், உறவுகள்)
4. சுயமரியாதை தேவைகள் (தன்னம்பிக்கை, சாதித்தல், அடுத்தவர் மதிக்கும்படி நடத்தை, தனித்தன்மை)
5.சுயம் அறிதல் (நன்னடத்தை, படைப்பாற்றல், தன்னிலை உணர்தல், வாழ்வின் நோக்கம் அறிய முற்படுத்தல்)



ஒவ்வொருவருடைய வாழ்வையும் எடுத்துக்கொண்டால் இந்த பிரமிடின் எதோ ஒரு படிநிலையில் நாம் இருக்கிறோம் அல்லது பல படிநிலைகளை தொட்டிருக்கிறோம் என்று அறியலாம்.

உதாரணமாக. அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் எல்லாம் இரண்டாம் படிநிலையான வேலையை சார்ந்இருக்கிறது. வேலை இல்லாமல் இருக்கும் பலரின் அடிப்படை வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகின்றன.

வேலையும் இருந்து விட்டால், வாழ்வின் அடுத்த நிலையான, உறவுகளை தேட ஆரம்பித்து விடுகிறோம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த நிலை பொருந்தாது, ஏனெனில், வேலைவெட்டி இல்லாதவன் தான் கதாநாயகன், ஆனால் உண்மை நிலவரம் வேறு, வேலை வெட்டி இல்லதவனை யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

உறவுகளும் அமைந்த பின், அடுத்த நிலை பிரச்சனைகள் எட்டி பார்க்கின்றன, பெரும்பாலும் அவை, சுயமரியாதை சம்பந்தப்பட்டவை. இந்தியாவில் ஒளிபரப்பப்படும் 100க்கு 99 சீரியல்கள் இந்த சுயமரியாதை பிரச்னைனை கையிலெடுத்து, சமூக அந்தஸ்து, அடுத்தவர் மதிக்கும்படு நடத்தை,…என்பதை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படுபவை.

சீரியல்கள் தவிர்த்து உண்மை நிலவரம் என்னவென்றால், தன்னை இந்த சமூகம் மதிக்க வேண்டும், அதற்கான சில ப்ரோடோகால் உண்டு, நகை போடுவது, மேக்கப் போடுவது, 100சாரீபாக்ட் எல்லாமே, தனக்கான, தன்னுடைய சுயத்துக்கான தேடல். இதனாலேயே, நிறைய வீடுகளில் சீட்டுப்போட்டு நகை வாங்குவது. வாயை கட்டி வயிற்றை கட்டி நகை வாங்குவது. கஷ்டப்படும்போது அடகு வைக்க என்று காரணம் சொல்லப்பட்டாலும், மற்ற அடிப்படை தேவைகள் பூர்த்தியான பல வீடுகளில் நகை என்பது, தன்னுடைய சுயமரியாதையை வளர்த்து கொள்ளவே. எனக்கு தெரிந்தே ஏழை குடும்ப பெண்கள் கல்யாணத்துக்கு செல்லமாட்டார்கள், ஏனெனில், நீங்கள் எவ்வளவு நகை அணிந்து இருக்குறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பும், மரியாதையும் இருக்கும் என்பதால்.

சுயமரியாதை என்ற ஒன்று மட்டுமே பலரை பலநிலைக்கு கீழே தள்ள வல்லது. பலர் கடன் வாங்கியாவது வீடு கட்டுவது, நகை வாங்குவது, பார்ட்டி வைப்பது எல்லாமே, தன்னுடைய ஸ்டேட்டஸ் ஐ வெளிக்காட்டி கொள்ள, ஏதோஒரு வகையில் தான் உயர்ந்தவன் அல்லது நானும் உங்களில் ஒருவன் என்று காட்டி கொள்ள. இப்படி வெட்டியாக சுயமரியாதை மட்டுமே கருத்தில் கொண்டு, உறவுகளை, வேலையை தொலைத்து அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்பட்டவர்களை நான் சந்தித்து இருக்கிறேன். இவர்கள் எல்லாம் பந்தா பேர்வழிகள், "ரொம்ப நல்லவங்க சார்/மேடம்" நீங்க என்று சொல்லிவிட்டால் போதும், எதையும் செய்வார்கள்.

சுயமரியாதை என்பது ஒருவகை தேவை மட்டுமே, ஆனால் அதுவே வாழ்வின் முழுநோக்கமாக இருப்பின் இழப்பு மட்டுமே கிட்டும்.  வாழ்வின் முழு நோக்கம் தெரிய, அதீத சுயமரியாதை நிலையை விட்டு வெளிவரவும்.  நம்முடைய முழு திறமை வெளிப்படும்.

கொசு(று)

கொசுக்கடி பற்றிய ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது. கொசுக்கள் ஏன் ஒருசில மட்டும் அதிகம் கடிக்கின்றன?, இதுவே கட்டுரை

நீங்கள் ஒருபார்க்குக்கு நண்பர்களுடன்  சென்றுள்ளீர்கள், அங்கு உங்களை மட்டுமே கொசு பயங்கரமாக கடிக்கிறது, மற்றவர்களை அல்ல. ஏனென்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா?, ஏனெனில், கொசுக்கடிக்கும் உங்கள் ரத்தவகைக்கும் சம்பந்தம் உண்டு. கொசுக்கள் ஓரிரு ரத்தவகை மனிதர்களை அதிகம் விரும்பும். அதுவும், ஓ வகை மனிதர்கள் தாம் கொசுக்களின் முதல் விருப்பம். ஆனால் உங்கள் ரத்தவகை ஏ  எனில், உங்களை அதிகம் கடிக்காது.

நன்றி



Saturday, September 9, 2017

கலிங்கத்து பரணியும், விக்ரம் வேதாவும், கைதிகள் குழப்பமும்!

படித்தது:
தமிழ் சரித்திர நாவல்களில் கல்கியை தவிர நான் வாசித்ததில்லை. கல்கியின் எழுத்துகளில் கூட பொன்னியின் செல்வன் கவர்ந்த அளவு கூட பார்த்திபன் கனவோ இல்லை சிவகாமியின் சபதமோ கவரவில்லை. இந்த முறை  இந்திய பயணத்தில் மூச்சு முட்ட வேலை இருந்ததால், கடைசி நாளில் மதுரையில் கோவிலுக்கு சென்று விட்டு  புதுமண்டபத்தில் தேடி கடல் புறா வாங்கி வந்தேன். சாண்டில்யனின் நாவல்கள் வாசித்ததில்லை, ஆயினும் பலர் சிலாகித்து சொல்வதை கேட்டதுண்டு. 
முன்பெல்லாம் ஓரிரு வாரங்களில் புத்தகத்தை முடிக்க நேரம் இருந்தது போல் இப்பொழுது இல்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயமாவது முடித்து இருக்கிறேன். ஒருவழியாக 3 பாகங்களையும் 3 மாதத்தில் முடித்தாகிவிட்டது.
 

இதன் கதை நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என்பதால் சிறு கதை சுருக்கம் இங்கே. தென்னிந்தியாவை ஆண்ட சோழர்கள் பற்றியதே "கடல் புறாவும்". ஆனால் கதையின் நாயகன் கருணாகர பல்லவன் அல்லது இளைய பல்லவன். பொன்னியின் செல்வன் கதை வந்தியத்தேவனை சுற்றி நகர்வது போல, கடல்புறா, இளையபல்லவனை சுற்றி நகர்கிறது. அவன் கடலோடும் திறமை, படை நடத்தும் திறமை, அவன் சந்திக்கும் பிரச்னைகள் அதனை எப்படி முறியடிக்கிறான்..இப்படி நகர்கிறது கடல்புறா.

 ஆனால் ஒரு பெரிய வித்தியாசம், வந்தியத்தேவன் என்ற அரசன் பெயரளவில் பொன்னியின் செல்வனில் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பார். அவர் உண்மையில் வாணர் குலத்தை சேர்ந்தவரா இல்லையா, என்று உறுதியாக தெரியவில்லை. அவரை பற்றியும் பெரிய அளவில் சரித்திரத்தில் இல்லை. ஆனால், இளையபல்லவனோ கதையின் நாயகன், உண்மையில் கருணாகர தொண்டைமான் என்று புகழ்பெற்று குலோத்துங்க சோழனின் முதன் மந்திரியாக படைத்தளபதியாக இருந்தவன். 

புத்தகத்தை பற்றி என்னுடைய கருத்துக்கள், ஒவ்வொரு ஆசிரியர்க்குள்ளும் ஒரு எழுத்து நடை உண்டு. தான் சொல்லவந்ததை சொல்லும் விதமும் வித்தியாசமாக இருக்கும். சாண்டில்யனின் நடை, ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் அடுத்த அத்தியாயத்துக்கான லீட் (சுருக்கம் ) கொடுக்கிறார், அது வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு நாவல் படிக்கும் போதும் அதன் தொடர்புடைய கிளை கதைகள் படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் உண்டு. அதே போல தோண்டியபோது, எனக்கு சில விஷயங்கள் புரிந்தன.  

கடல்கடந்து ராஜ்யத்தை விரிவு செய்த இந்திய அரசர்களில் சோழர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அவர்களின் கடற்படை எப்படி அந்த காலத்தில் சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கிறது. எப்படி எல்லாம் அவர்கள் படையை காத்தார்கள், வழி நடத்தினார்கள் என்றெல்லாம் படிக்கும் போது புல்லரிக்கிறது.  இதெயெல்லாம் கடந்து எனக்கு புரிந்த விஷயம், கலிங்கத்து பரணி என்ற காவியத்தின் தலைவன் இளையபல்லவன். 

பரணி என்பது ஆயிரம் யானைகளை போரில் கொன்ற ஒரு தலைவனை பற்றி பாடுவது "கலிங்கம்" என்ற நாட்டை பிடிக்க நடந்த போரில் ஆயிரம் யானைகளை கொன்ற ஒரு தலைவனின் புகழ் பாடும் காவியம் கலிங்கத்து பரணி. அதனை முன்னின்று நடத்திய கருணாகர பல்லவனின் கீர்த்தி பாடும் காவியம் கலிங்கத்து பரணி. 

கலிங்கத்து பரணி என்ற ஒரு காவியம் இருக்கிறது என்று எனக்கு தெரிந்திருந்தாலும், அது என்னவென்று நான் அறிந்திருக்கவில்லை. ஒரு சில தமிழறிஞர்கள் அவ்வப்போது மேடைகளில் "கலிங்கத்து பரணி" குறித்து பேசுவது மட்டுமே கேட்டிருக்கிறேன். ஆனால் அது ஒரு வகை இலக்கியவகை. பரணி பாடுவதற்கு என்று சில வழிமுறைகள், இலக்கணங்கள்  இருக்கின்றன. அதன் படி பாடுவது சுலபமல்ல என்றெல்லாம் அறியும் போது நமது தமிழ் மொழியின் சிறப்பை முன்னோர்களின் சிறப்பை எண்ணி பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
எனக்கென்னவோ கடல் புறா படித்த பிறகு, லியோ டால்ஸ்டராயின் "War and  Peace" ஞாபகத்துக்கு வந்தது. இரண்டும் ஒரு அரசனின்/தலைவனின் போர்முறையை, வீரத்தை பறைசாற்றுகிறது. ஒரு அற்புதமான அனுபவம். 



பார்த்தது

அமெரிக்கா வந்தபிறகு தியேட்டரில் சென்று நான் பார்த்த தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் நிறைய பேர் புகழ்ந்து சொன்ன "விக்ரம் வேதா" தமிழ் படத்தை தியேட்டரில் சென்று பார்க்க நேர்ந்தது. எனக்கு தெரிந்த வரை மிக மிக நேர்த்தியான கதை, திரைக்கதை, நடிப்பு என்று அனைத்திலும் பின்னி எடுத்த ஒரு அற்புதமான படம் இது. படம் முடிந்தவுடன் அனைவரும் எழுந்து ஸ்டாண்டிங் ஓவேஷன் (கைதட்டல்) கொடுத்தனர்.  அதில் எல்லா நடிகனின் ரசிகனும் இருந்தார்கள். அதுவே படக்குழுவிற்கு கிடைத்த வெற்றி. வெல் டன் டீம்.




வாசித்தது 

விக்ரம் வேதா படத்தை பார்த்த பிறகு வாசிக்க நேர்ந்த ஒரு விஷயம், "  Prisoner's dilemma"
அதாவது, இரண்டு குற்றவாளிகள் A , B இருக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுவோம். இருவரும் ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கிறது. இருவரும் வாயை திறக்க மறுக்கிறார்கள்.  அவர்களை அழைத்து  ஒரு டீல் பேசுகிறார்கள், அதாவது, A ஐ அழைத்து நீ உண்மையை ஒப்புக்கொண்டால் உன்னை வெளிவிட்டு B ஐ 20 வருட தண்டனை கொடுப்போம். அதேபோல B ஐ அழைத்து நீ ஒப்புக்கொண்டால் உனக்கு  விடுதலை, A க்கு 20 வருட தண்டனை. அதே போல இருவரும் ஒப்புக்கொண்டால் 5 வருட தண்டனை. ஆனால் இருவரும் கடைசிவரை வாயை மூடி இருந்தால் 1 வருடம் மட்டுமே சிறை. என்று சொல்கிறார்கள் என்று வைத்து கொள்ளுவோம். 

இந்த நிலையில் என்ன முடிவெடுப்பார்கள் அந்த கைதிகள்?



 
 என்ன ஆகிறதென்றால்,  இருவரும் வாய் மூடி இருந்தால் ஒருவருடம் தண்டனை என்றறிந்து இருந்தாலும்,  பெரும்பாலும்எங்கே அடுத்தவன் ஒப்புக்கொண்டு தனக்கு 20 வருட தண்டனையும், அவனுக்கு விடுதலையும் பெற்றுத்தந்த விடுவானோ என்றெண்ணி,  இருவரும் ஒப்பு கொண்டு இருவரும் ஐந்து வருட சிறை அனுபவிப்பர். 

இது அவர்கள் இருவரும் வாய் மூடி இருந்தால் கிடைக்கும் ஒருவருட சிறையை விட அதிகம் என்றாலும், நிறைய பேர் தன்னலமாக யோசித்து அதிக தண்டனை பெற்று கொள்கிறார்கள் என்பது "கைதிகள் குழப்பம்"  எனப்படும் "Prisoner's dilemma"



நன்றி