படித்தது:
தமிழ் சரித்திர நாவல்களில் கல்கியை தவிர நான் வாசித்ததில்லை. கல்கியின் எழுத்துகளில் கூட பொன்னியின் செல்வன் கவர்ந்த அளவு கூட பார்த்திபன் கனவோ இல்லை சிவகாமியின் சபதமோ கவரவில்லை. இந்த முறை இந்திய பயணத்தில் மூச்சு முட்ட வேலை இருந்ததால், கடைசி நாளில் மதுரையில் கோவிலுக்கு சென்று விட்டு புதுமண்டபத்தில் தேடி கடல் புறா வாங்கி வந்தேன். சாண்டில்யனின் நாவல்கள் வாசித்ததில்லை, ஆயினும் பலர் சிலாகித்து சொல்வதை கேட்டதுண்டு.
முன்பெல்லாம் ஓரிரு வாரங்களில் புத்தகத்தை முடிக்க நேரம் இருந்தது போல் இப்பொழுது இல்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயமாவது முடித்து இருக்கிறேன். ஒருவழியாக 3 பாகங்களையும் 3 மாதத்தில் முடித்தாகிவிட்டது.
இதன் கதை நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என்பதால் சிறு கதை சுருக்கம் இங்கே. தென்னிந்தியாவை ஆண்ட சோழர்கள் பற்றியதே "கடல் புறாவும்". ஆனால் கதையின் நாயகன் கருணாகர பல்லவன் அல்லது இளைய பல்லவன். பொன்னியின் செல்வன் கதை வந்தியத்தேவனை சுற்றி நகர்வது போல, கடல்புறா, இளையபல்லவனை சுற்றி நகர்கிறது. அவன் கடலோடும் திறமை, படை நடத்தும் திறமை, அவன் சந்திக்கும் பிரச்னைகள் அதனை எப்படி முறியடிக்கிறான்..இப்படி நகர்கிறது கடல்புறா.
ஆனால் ஒரு பெரிய வித்தியாசம், வந்தியத்தேவன் என்ற அரசன் பெயரளவில் பொன்னியின் செல்வனில் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பார். அவர் உண்மையில் வாணர் குலத்தை சேர்ந்தவரா இல்லையா, என்று உறுதியாக தெரியவில்லை. அவரை பற்றியும் பெரிய அளவில் சரித்திரத்தில் இல்லை. ஆனால், இளையபல்லவனோ கதையின் நாயகன், உண்மையில் கருணாகர தொண்டைமான் என்று புகழ்பெற்று குலோத்துங்க சோழனின் முதன் மந்திரியாக படைத்தளபதியாக இருந்தவன்.
புத்தகத்தை பற்றி என்னுடைய கருத்துக்கள், ஒவ்வொரு ஆசிரியர்க்குள்ளும் ஒரு எழுத்து நடை உண்டு. தான் சொல்லவந்ததை சொல்லும் விதமும் வித்தியாசமாக இருக்கும். சாண்டில்யனின் நடை, ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் அடுத்த அத்தியாயத்துக்கான லீட் (சுருக்கம் ) கொடுக்கிறார், அது வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு நாவல் படிக்கும் போதும் அதன் தொடர்புடைய கிளை கதைகள் படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் உண்டு. அதே போல தோண்டியபோது, எனக்கு சில விஷயங்கள் புரிந்தன.
கடல்கடந்து ராஜ்யத்தை விரிவு செய்த இந்திய அரசர்களில் சோழர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அவர்களின் கடற்படை எப்படி அந்த காலத்தில் சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கிறது. எப்படி எல்லாம் அவர்கள் படையை காத்தார்கள், வழி நடத்தினார்கள் என்றெல்லாம் படிக்கும் போது புல்லரிக்கிறது. இதெயெல்லாம் கடந்து எனக்கு புரிந்த விஷயம், கலிங்கத்து பரணி என்ற காவியத்தின் தலைவன் இளையபல்லவன்.
பரணி என்பது ஆயிரம் யானைகளை போரில் கொன்ற ஒரு தலைவனை பற்றி பாடுவது "கலிங்கம்" என்ற நாட்டை பிடிக்க நடந்த போரில் ஆயிரம் யானைகளை கொன்ற ஒரு தலைவனின் புகழ் பாடும் காவியம் கலிங்கத்து பரணி. அதனை முன்னின்று நடத்திய கருணாகர பல்லவனின் கீர்த்தி பாடும் காவியம் கலிங்கத்து பரணி.
கலிங்கத்து பரணி என்ற ஒரு காவியம் இருக்கிறது என்று எனக்கு தெரிந்திருந்தாலும், அது என்னவென்று நான் அறிந்திருக்கவில்லை. ஒரு சில தமிழறிஞர்கள் அவ்வப்போது மேடைகளில் "கலிங்கத்து பரணி" குறித்து பேசுவது மட்டுமே கேட்டிருக்கிறேன். ஆனால் அது ஒரு வகை இலக்கியவகை. பரணி பாடுவதற்கு என்று சில வழிமுறைகள், இலக்கணங்கள் இருக்கின்றன. அதன் படி பாடுவது சுலபமல்ல என்றெல்லாம் அறியும் போது நமது தமிழ் மொழியின் சிறப்பை முன்னோர்களின் சிறப்பை எண்ணி பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
எனக்கென்னவோ கடல் புறா படித்த பிறகு, லியோ டால்ஸ்டராயின் "War and Peace" ஞாபகத்துக்கு வந்தது. இரண்டும் ஒரு அரசனின்/தலைவனின் போர்முறையை, வீரத்தை பறைசாற்றுகிறது. ஒரு அற்புதமான அனுபவம்.
பார்த்தது
அமெரிக்கா வந்தபிறகு தியேட்டரில் சென்று நான் பார்த்த தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் நிறைய பேர் புகழ்ந்து சொன்ன "விக்ரம் வேதா" தமிழ் படத்தை தியேட்டரில் சென்று பார்க்க நேர்ந்தது. எனக்கு தெரிந்த வரை மிக மிக நேர்த்தியான கதை, திரைக்கதை, நடிப்பு என்று அனைத்திலும் பின்னி எடுத்த ஒரு அற்புதமான படம் இது. படம் முடிந்தவுடன் அனைவரும் எழுந்து ஸ்டாண்டிங் ஓவேஷன் (கைதட்டல்) கொடுத்தனர். அதில் எல்லா நடிகனின் ரசிகனும் இருந்தார்கள். அதுவே படக்குழுவிற்கு கிடைத்த வெற்றி. வெல் டன் டீம்.
வாசித்தது
விக்ரம் வேதா படத்தை பார்த்த பிறகு வாசிக்க நேர்ந்த ஒரு விஷயம், " Prisoner's dilemma"
அதாவது, இரண்டு குற்றவாளிகள் A , B இருக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுவோம். இருவரும் ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கிறது. இருவரும் வாயை திறக்க மறுக்கிறார்கள். அவர்களை அழைத்து ஒரு டீல் பேசுகிறார்கள், அதாவது, A ஐ அழைத்து நீ உண்மையை ஒப்புக்கொண்டால் உன்னை வெளிவிட்டு B ஐ 20 வருட தண்டனை கொடுப்போம். அதேபோல B ஐ அழைத்து நீ ஒப்புக்கொண்டால் உனக்கு விடுதலை, A க்கு 20 வருட தண்டனை. அதே போல இருவரும் ஒப்புக்கொண்டால் 5 வருட தண்டனை. ஆனால் இருவரும் கடைசிவரை வாயை மூடி இருந்தால் 1 வருடம் மட்டுமே சிறை. என்று சொல்கிறார்கள் என்று வைத்து கொள்ளுவோம்.
இந்த நிலையில் என்ன முடிவெடுப்பார்கள் அந்த கைதிகள்?
என்ன ஆகிறதென்றால், இருவரும் வாய் மூடி இருந்தால் ஒருவருடம் தண்டனை என்றறிந்து இருந்தாலும், பெரும்பாலும்எங்கே அடுத்தவன் ஒப்புக்கொண்டு தனக்கு 20 வருட தண்டனையும், அவனுக்கு விடுதலையும் பெற்றுத்தந்த விடுவானோ என்றெண்ணி, இருவரும் ஒப்பு கொண்டு இருவரும் ஐந்து வருட சிறை அனுபவிப்பர்.
இது அவர்கள் இருவரும் வாய் மூடி இருந்தால் கிடைக்கும் ஒருவருட சிறையை விட அதிகம் என்றாலும், நிறைய பேர் தன்னலமாக யோசித்து அதிக தண்டனை பெற்று கொள்கிறார்கள் என்பது "கைதிகள் குழப்பம்" எனப்படும் "Prisoner's dilemma"
நன்றி
No comments:
Post a Comment