Friday, May 18, 2018

அன்னையர் தினமும், நடிகையர் திலகமும் , தலைமை பொறுப்பும் !!

பொது நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கலந்து கொள்வதில்லை. நேரமின்மை முதல் காரணம். பின்னர், பல நேரங்களில் நிகழ்ச்சி ஆரம்பிக்கவே மிக தாமதமாகும், அப்புறம், அவசர அவசரமாக முடிப்பார்கள், முழுதும் பார்க்க முடியாது.இப்படி பல காரணங்கள். ஆனால்கடந்த வாரம் , "அன்னையர் தினம்" எங்காவது போகலாம் என்று முடிவு செய்து, தமிழ் சங்கம் சார்பில் பெண்கள் தினம் கொண்டாடுறாங்க வேணா போகலாம் என்று தோழி பரிந்துரைத்தாள். சரி என்று GATS தமிழ் சங்க  பெண்கள் தின விழாவுக்கு சென்றாகி விட்டது.

$10 இல், லஞ்ச், ஸ்னாக்ஸ் மற்றும்  சமையல் போட்டி, recycling போட்டி, பேஷன் ஷோ என்றெல்லாம் அறிவிப்பு பார்த்தேன். அதோடு, முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களின் சிறப்புரை என்றும் அறிவித்திருந்தனர்.

என்னப்பா, வேற ஏதாவது சிந்திக்க மாட்டிங்களா?, மறுபடியும் சமையல், பேஷன் ஷோ ஏன், அரைச்ச மாவைவே மறுபடியும் அரைக்கிறாங்க? என்று எண்ண தோன்றியது.  நான் முனைவர். பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சை முன்பு கேட்டதில்லை. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கேட்கலாம், ரொம்ப போர் அடிச்சா ஏதாவது மூவிபோகலாம் என்று பிளான் செய்தோம்.

பர்வீன் சுல்தானா அவர்கள் பேச்சு ஆரம்பிக்கும் போதே, " என்னப்பா, மறுபடியும் அரைச்ச மாவா? ரீசைக்ளிங், குக்கிங் தானே வீட்டிலேயும் செய்யிறீங்க, புத்தக ரெவியூ, புத்தக, கவிதை வெளியீடு போன்றவற்றை செய்யலாமே?  "அடுத்த விழாவில் ஏதாவது புத்தக வெளியீடு எதிர்பார்க்கிறேன்" என்றார்.  பரவாயில்லையே, நல்ல ஸ்டார்டிங் என்று தோன்றியது. எதிர்பார்ப்பின்றி வாழ்வது, அழகென்பது ஆரோக்கியமாக இருப்பது, போன்ற விஷயங்கள், நன்றாக இருந்தது.  அவர்கள் சொன்ன சில கதைகளும், நன்றாகவே இருந்தது. ஆனால் அவர்களின் பேச்சை தவிர, மற்றவை அசுரசியமாக இருந்தது. 

ஒரே ஒரு பெனிபிட் என்றால், 10$ இல், லஞ்ச், ஸ்னாக்ஸ், பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சு மற்றும் நீர் மோர் சூப்பர்.  மற்றபடி நோ கமெண்ட்ஸ்.

மூவிக்கு என்று நாங்கள் தேர்ந்தெடுத்தது, "நடிகையர் திலகம்". இந்த படம் குறித்த என்னுடைய சில அவதானிப்புகள். எனக்கு தெலுங்கு படங்கள் அதிகம் பிடிக்காது. ஆனாலும், "எவடே சுப்பிரமணியம்" எடுத்த "நாக் அஷ்வின்" மேல் ஒரு நம்பிக்கை உண்டு. அதனாலேயே, அவர் அடுத்த படத்தை நடிகை சாவித்ரி வாழ்க்கை என்றதும் பார்க்க ஆவலுடன் இருந்தேன். என்னை பொறுத்த வரை இந்த படம் நாக் அஸ்வினின் பெஸ்ட் என்று சொல்ல மாட்டேன். எவடே சுப்பிரமணியம் உடன் பொருத்தி பார்க்கும் போது, இது சுமார். கீர்த்தியின் நடிப்பு நன்றாக இருந்தது. எனக்கு பிடித்த ஒரு விடயம், உண்மையை எந்த சாயமும் பூசாமல் எடுத்தது. சாவித்திரியின் மிட் லைப் கிரைசிஸ் மற்றும் ஆணின் ஈகோ, நன்றாக காட்சி படுத்த பட்டு இருந்தது என்று சொல்வேன்.




சில நாட்களுக்கு முன் முகநூல் COO ஷெரில் (ஜிமிக்கி கம்மல் ஷெரில் அல்ல) அவர்களின் டெட் டாக் கேட்க நேர்ந்தது. "ஏன் மிக குறைந்தஅளவில் பெண்கள் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்?" என்பது குறித்த அவர்களின் உரை, அற்புதம்.




அவர்கள் சொல்ல வருவது இது தான். வேலை செய்யும் பெண்கள் பொதுவாக தனக்கு கிடைத்ததை வைத்து வாழ பழகி கொள்கிறார்கள். தனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகும் போதோ அல்லது மறுக்கப்படும் போதோ அதற்காக போராடுவதில்லை.
உதாரணமாக, கல்யாணம் ஆகி குழந்தை குடும்பம் என்று வந்தபிறகு, இருப்பது போதும், எதுக்கு வீனா கேள்வி கேட்டுட்டு என்று அமைதியாக இருந்து விடுவது. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கிடைத்தது வைத்து இருப்பது. என்று தனக்கென்று ஒரு வட்டத்தை வகுத்துக்கொண்டு, அதுக்கெல்லாம் நாம சரிப்பட்டு வரமாட்டோம் என்று முடிவு கட்டி வாழ பழகி கொள்வது.
இதுவே முதல் காரணம், பெண்கள் தலைமை பொறுப்பில் வரமுடியாமல் போவதற்கு என்கிறார்.

அவர் குறிப்பிட்ட இரண்டாவது காரணம், வீட்டில் இருக்கும் துணைவரை அனைத்து விடயங்களிலும் துணைவராக பயன்படுத்தி கொள்ளாதது. அல்லது பயன்படுத்த முடியாமல் போவது.
இது பொதுவாக நாம் பார்க்கும், கேட்கும், சந்திக்கும் ஒன்று. வேலைக்கு போகும் பெண்களுக்கு வீட்டில் கணவர் உதவாமல் போகும் பட்சத்தில் அந்த வேலை பெண்ணுக்கு ஒரு நரகம் மட்டுமே. வீட்டிலும் வேலை செய்து விட்டு, வெளியிலும் வேலை செய்து, பின் வீட்டுக்கு வந்து மறுபடியும், குழந்தை, சமையல் என்று ஒரு மெஷின் போல ஆகி விடும் ஒரு நிலை.

அதே நேரம்,  ஆணை விட அதிகம் சம்பாதிக்கும் நிலை பெண்ணுக்கு வந்துவிட்டால் , ஆணுக்கு  ஈகோ தொற்றிக்கொள்கிறது. நம்மை மதிப்பதில்லை, என்ற ஒரு வித மனநோய். இப்போது தலைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மனநோய் குறைந்து கொண்டு வந்தாலும், இன்னும் முழுதும் மறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


எனக்கென்னவோ நான் மேலே குறிப்பிட்ட மூன்று விடயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று தோன்றுகிறது. மகளிர் விழா என்றாலும் அதற்கென்று எந்த ரிஸ்க் கும் எடுக்காமல், மறுபடியும் அனைத்து விழாவும் போல, "சமையல், கலைப்பொருள் என்று" மகளிர்  நினைக்கும் பாங்கு ஒரு புறம்,    புகழ் பணம், அதுவும் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் ஒரு நிலையில் நடக்கும் ஈகோ மோதல்கள் நடந்து, அதனால் திசை திரும்பிய சாவித்திரியின் வாழ்க்கை. இந்த இரண்டுமே ஷெரில் அவர்கள்  குறிப்பிட்ட பெண்கள் தலைமை பொறுப்பில் இல்லாமல் போனதற்கான காரணங்கள் என்று தோன்றுகிறது.


நன்றி.

1 comment:

ஆரூர் பாஸ்கர் said...

இந்தப் படம் கவனம் பெற்று அனைவராலும் பெரிதாக பேசப்படுகிறது.