Sunday, October 13, 2019

குழந்தைகளும், பொறுப்புணர்வும்!!


picture adopted from
https://www.isd197.org/news/news_archives/2015-16_news_archives/realistically_raising_a_responsible_child#.XaNSxS-ZOgQ

பெரும்பாலான பெற்றோரிடம் இருக்கும் குழந்தைகள் பற்றிய முதல் கவலை என்னவாக இருக்கும் என்றால், "எப்படி பொறுப்பா வர போறானோ/போறாளோ தெரியல , எப்போ பாரு டிவி/கம்ப்யூட்டர்/போன்/ கேம்ஸ்  அப்படின்னு திரியுறாங்க?" என்பதாக இருக்கும்.


இது பொதுவாக உபயோகப்படுத்தப்படும் ஒரு வாக்கியம் என்றாலும், கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால், பல அர்த்தங்கள் கொண்டது.

பொறுப்புணர்வு என்று எதனை குறிக்கிறோம்?

1. ஒரு காரியத்தை கொடுத்தால், அதனை முழுமையாக தொடக்கம் முதல் முடிவு வரை முழுமையாக  செய்து முடிக்கும் தன்மையா?

2. வார்த்தை சுத்தம், தொழில் சுத்தம், வார்த்தை மாறாமல் சொன்னதை செய்யும் தன்மையா?

3. கொடுத்த காலக்கெடுவுக்குள் ஒரு காரியத்தை செய்து முடிக்கும் தன்மையா?

4. உங்களின் முழு திறமையும் செலுத்தி காரியம் முடிக்கும் திறனையா?

5. தவறு செய்தாலும் நன்மை செய்தாலும், அதனால் விளையும் விளைவின் பலனை ஏற்றுக்கொண்டு கலங்காமல் இருக்கும் திறனிலா?

6. தான் சார்ந்த குடும்பத்துக்கு, வேலைக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகத்துக்கு ...தன்னால் ஆன பங்களிப்பை  கொடுத்து நல்ல பேர் வாங்குவதையா?

இப்படி சொல்லி கொண்டே போகலாம். "பொறுப்பு" என்ற ஒரு வார்த்தை பன்முகம், பல பரிமாணங்கள் கொண்டது. ஆயினும், ஒவ்வொரு குழந்தையும் மேலே குறிப்பிட்ட அந்த பல பரிமாணங்களையும் எப்படியாவது கற்று கொள்ள வேண்டும், அல்லது பெற்றோர் அதற்க்கு உதவ வேண்டும்.இது பள்ளி, கல்லூரி, வேலை, குடும்பம் என்று அனைத்து இடங்களுக்கும் பொருந்தும்.

பொறுப்புணர்வும், கீழ்ப்படிதலும் 

பொறுப்புணர்வு என்று சொன்னாலே பெருபாலான பெற்றோர் அதனை கீழ்ப்படிதல் என்று நினைத்து கொள்கிறார்கள். அதாவது, "நான் என்ன சொல்லுறேனோ/எதிர்பார்க்கிறேனோ, கேட்டு , பதில் கேள்வி எதுவும் கேக்காமல், அதன் படி(யே) நடக்கணும்/செய்யணும் " , இது கீழ்ப்படிதல்.

ஆனால் பொறுப்புணர்வு என்பது " எவரும் இதனை செய், அதனை செய் என்று சொல்லாமல் தானாகவே  எது செய்யவேண்டியதோ, அதனை தானாக செய்வது".

இரண்டுக்கும் ஒரு மெல்லிய கோடு அளவு வித்தியாசமே. அது, "பிறர் எதிர்பார்ப்பு" என்பது போய்  "தானாக முடிவெடுக்க முடியும்" என்ற ஒரு உணர்வு வரும் போது பொறுப்பு வந்துவிட்டது என்று உணரலாம்.

சொல்லப்போனால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை, அவர்கள் பெரியவர் ஆன பின்பும் கூட, கீழ்ப்படிதல் கொண்ட ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் தவிர, பொறுப்பானவர் ஆக, தானாக முடிவெடுக்க முடிந்தவர் ஆக, அல்ல. தான் சொல்லுவதை கேட்க வேண்டும், பதில் ஏதும் சொல்லாமலே, அப்படியாயின் அவர், பொறுப்பான பிள்ளை. இல்லை எனில் "சொன்ன பேச்சு கேக்காத தறுதலை"

எப்படி பொறுப்புணர்வை வளர்ப்பது?

எப்போது கீழ்ப்படிதல் எதிர்பார்ப்பு என்பதுபோய்  பொறுப்புணர்வு எட்டிப்பார்க்கும்? எவ்வளவு தூரம் குழந்தைகள் கையை பிடித்து நடக்க சொல்லி கொடுப்பது? அல்லது எப்படியாவது போ?  என்று தண்ணீர் தெளித்து விடுவதா? அல்லது எப்போது அவர்களாகவே சென்று கற்றுக்கொள்ளட்டும் என்று விடுவது? எப்போது அவர்க ளுக்கு நம் அறிவுரைகள் தேவை என்று அறிவது? இப்படி பல பல கேள்விகள்.

எப்போதும் பிள்ளைகள் நம் கண்ட்ரோலில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோரின் முதல் முதல் பயமே, "நம்ம கண்ட்ரோலில் இல்லை எனில், பிள்ளை தவறான பாதையில் போயிடும், பின்ன நமக்கு தான் பெரிய பாரம், வேலை" என்ற எண்ணத்திலே , விரல் நுனியில் பிள்ளைகளை வைத்துஇருக்கிறார்கள் . ஆனால், இப்படி வைத்திருப்பின், உங்கள் கட்டளைகளை கேட்கும் ஒரு ரோபாட் போல அவர்கள் இருப்பார்களே தவிர, எப்போது எதனை செய்தால் நல்லது, என்று முடிவெடுக்கும் பக்குவம் தெரியாதவர்களாக இருப்பார்கள்.

அதனால், இது உன்னுடைய வேலை, அதனை எப்படி செய்வாயோ அது உன்னுடைய திறமை. ஆனால் இதன் இறுதி நாள் அடுத்தவாரம் , அதற்குள் எப்படி முடிக்க முடியுமோ, முடித்து கொள். ஏதேனும் உதவி தேவை படின் கேள்? என்று சொல்லலாம்.


எப்போது உதவுவது, எப்போது உதவாமல் இருப்பது என்று அறிவது ஒரு கலை 

எப்போது உதவுவது, எப்போதுகுழந்தைகளை சுதந்திரமாக முடிவெடுக்க விடுவது என்று அறிவது என்பது எளிதான விஷயம் அல்ல.

மிகவும் கண்டிப்பாக,நான் சொல்லுவதை கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றுநினைப்பதும் தவறு , என்ன வேண்டும் என்றாலும் செய், எப்படி வேண்டும் என்றாலும் செய், என்று அதிகம் செல்லம் கொடுப்பதும் தவறு. ஒரு பாலன்ஸ் வேண்டும். எப்போது செல்லம் கொடுக்க வேண்டும், எப்போது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தெரிந்திருப்பது ஒரு கலை.

அன்பை பொழியும் பெற்றோர் ரோல் 

உதாரணமாக, நீங்கள் நல்ல மூடில் இருக்கிறீர்கள் எனில் குழந்தைகளோடு கருணையாக, அன்பாக அக்கறையாக, அவர்கள் சொல்லுவதை காது கொடுத்து கேட்டு அவர்களோடு விளையாடி கொண்டு, உதவி கொண்டு இருக்கலாம்" இந்த நேரத்தில், நீங்கள் எந்தவித  எதிர்பார்ப்பில்லாத அன்பை குழந்தை மீது நீங்கள் செலுத்துகிறீர்கள்.

ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ரோல் 

நீங்கள் எல்லா நேரத்திலும், மேலே சொன்னது போல, அன்பை பொழிந்து  கொண்டிருப்பேன், உண்மை வாழ்க்கை நிலவரம் குழந்தைகளுக்கு தெரியாது, அதனால். சிலநேரம் ஸ்ட்ரிக்ட் ஆபிசர், ரோல் நீங்கள் எடுக்க வேண்டியது வரும்.

இந்த நேரத்தில், நீங்கள் ஒரு வேலை முடிக்க 1. கால அளவு நிர்ணயிக்கலாம் 2. டிஸிப்ளின்  அல்லது இப்படி தான் செய்ய வேண்டும் என்று ஒழுக்கம் சொல்லலாம் 3. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நடத்தை சொல்லி கொடுக்கலாம். 4. உங்களின் நன் மதிப்புகள் , நற்குணங்கள், கருணை போன்றவற்றை சொல்லி கொடுக்கலாம்.

குழந்தைகள் கேட்டதை உடனே கொடுக்காமல் அவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தைகொடுக்கலாம். இது,  எனக்கு உடனே அது கிடைக்க வேண்டும் என்ற உந்துதலை கட்டுப்படுத்த உதவும். "Delayed gratification" என்பது குறைந்த மனக்கிளர்ச்சியை, "தான்/தன் சந்தோசம்" என்ற நிலையை விட்டு வர உதவும். இந்த எண்ணமே, வீடியோ கேம், இன்டர்நெட் அடிமையாக பிள்ளைகள்/பெற்றோர் கிடைப்பதற்கு அடிப்படை.

இது தான் "எதிர்பார்க்கப்படும் அடிப்படை ஒழுக்கம் " என்று தெளிவாக சொல்லி விடுங்கள். அதே போல, இதனை மீறினால் கிடைக்கும் விளைவுகளையும் சொல்லி விடுங்கள். தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளுக்கு குழந்தைகள் சந்தோசப்பட வேண்டும். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி" என்பது அவர்களுக்கு விளங்க வேண்டும்.

இது ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ரோலின் முக்கிய அம்சங்கள்.

இரண்டும் கலந்த கலவை ரோல் 

பெரும்பாலான குழந்தைகள், நீங்கள் அன்பாக, ஆதரவாக, அக்கறையாக,  சொன்னால் உங்களின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க சம்மதிப்பார்கள்.

ஆரோக்கியமான பொறுப்புணர்வான குழந்தைகள் எங்கே வளர்வார்கள் எனில், அங்கே அன்பும் கண்டிப்பும் ஒரு சேர இருக்கும் வீட்டில் தான். இந்த கண்டிப்பு, கீழ்ப்படிதல் எதிர்பார்ப்பு அல்ல, மாறாக, விளைவை சார்ந்த நல்ல தன்னம்பிக்கை கொண்டது.


  1. தன்னம்பிக்கை கொண்ட குழந்தைகள் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள். பொறுமையாக, நோக்கம் நிறைவேறும் வரை திரும்ப திரும்ப முயற்சி செய்பவர்களாக இருப்பார்கள். 
  2. தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக அதிலிருந்து பாடம் கற்று கொள்பவர்களாக இருப்பார்கள்.
  3. இறுதிவரை எடுத்த காரியத்தை செய்து முடிப்பார்கள். தேவை எனில் உதவி கேட்க தயங்க மாட்டார்கள்.
  4. அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்து இருப்பார்கள்.
  5. புதிய விஷயங்கள் செய்ய துணிவுகொள்வார்கள்
  6. ஏதேனும் தடங்கல்கள் வரின் தன்னால்  சமாளிப்பது எப்படி என்று அறிந்திருப்பார்கள்.
உனக்காக நான் இருக்கிறேன் என்ற உணர்வு கொண்டு வருவது 

சரி, "எப்படி குழந்தைகள் நாம்சரி தவறு எது  செய்தாலும் நம்முடன் பெற்றோர் இருப்பார்கள் " என்று நம்பிக்கை கொள்ள  வைப்பது 

"நான் எப்போதும் உன்னிடம் அன்பு செலுத்துவேன்" என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவது 

"நீ எனக்கு மகனாக/மகளாக கிடைத்தது என் பாக்கியம்" என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவது"

"உன்னுடன் நேரம் செலவழிப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி கொடுக்கிறது" என்று சொல்லுவது 

இது போன்ற சின்ன சின்ன செய்திகள் அடிக்கடி சொல்வதன் மூலம், குழந்தைகள் நமக்கு பின்புலமாக நம் பெற்றோர் இருக்கிறார்கள், என்று நம்பிக்கை கொள்வார்கள்.

உன்னால் முடியும் என்று ஊக்கப்படுத்துவது 

குழந்தைகளின் பொறுப்புணர்வை வளர்ப்பதற்கு அவர்களின் தன்னபிக்கை மிக முக்கியம். அதனை வளர்க்க சில வழிகளை பயன்படுத்தலாம்.

1. அவர்கள் தானாக செய்த திட்டப்பணி, படங்கள், உதவி போன்ற சிறு சிறு விஷயங்களையும் எடுத்து பாராட்டுவது. உதாரணமாக, அவர்களின் ஸ்கூல் ப்ராஜெக்ட் ஒன்றை எடுத்து கொண்டு, அவர்கள் எப்படி சிறப்பாக அதனை செய்தார்கள் என்று பாராட்டுவது.

2. வீட்டு வேலைகளில் ஏதாவது அவர்கள் உதவி இருப்பின் அதனை பாராட்டுவது.

3. அவர்கள்  ஏதாவது செய்த பிறகு,  "எனக்கு தெரியும் உன்னால் செய்ய முடியும் என்று" என்று  சொல்லுவது .

4. சொந்த பந்தங்களிடம் பரிவாக பேசும்போதோ அல்லது அவர்களுக்கு உதவி செய்யும் போதோ, அவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று அறிய வைப்பது.

5. நாமாக சொல்லாமல் அவர்களாக எதாவது ஒரு உதவி செய்திருப்பின், அவர்களின் பொறுப்புணர்வை பாராட்டுவது. 


அதீத கவனிப்பும் அதன் விளைவும் 

நான் அதிகம் கவனித்த பார்த்த இந்த தலைமுறை குழந்தைகள் பலர் சுயநல வாதிகளாக, இருப்பதற்கு நன்றியுணர்வு இல்லாதவர்களாக, இது என் உரிமை, கொடு என்று வேண்டுபவர்களாக, தன்னால் செய்ய முடிந்ததையும் பிறர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களாக, எதுவும் உடனே கிடைக்க வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களாக, தாம் செய்த தவறை ஒத்து கொள்ளாதவர்களாக, முயற்சி செய்யத்தவர்களாக, அடுத்தவர்களிடம் பகிராதவர்களாக, இருக்குகிறார்கள்.

மேலே சொன்ன அனைத்திற்கும் காரணம், பெற்றோர். தான் பட்ட கஷ்டம் தன குழந்தை படக்கூடாது என்று கேட்டதை வாங்கி கொடுத்து, அவர்கள் கேட்காததையும் வாங்கி கொடுத்து, "எல்லாமே ஈசி" என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறோம். உதாரணமாக, நீங்கள் Ipad /போன்/கேம்ஸ் என்று அனைத்தும் சிறு வயது முதலே குழந்தைக்கு கொடுப்பது 


இன்னொரு உதாரணம், குழந்தைகள் தாமாகவே செய்ய முடிந்த வேலையை செய்ய விடாமல் தானாக செய்வது. உதாரணமாக, டிவி பார்த்து கொண்டு, அது கொண்டு வா, இது கொண்டு வா என்று ஆர்டர் செய்யும் குழந்தைகள். அதனை செய்யும் பெற்றோர்.

இது தான் உன்னுடைய லிமிட் என்று தெளிவாக இலக்கு நிர்ணயிப்பது. "நோ" என்ற வார்த்தையை சொல்லுவது இவை இரண்டும் தாரக மந்திரம்.


முடிவாக, நம் நோக்கம் தன்னம்பிக்கை கொண்ட, சமூக பொறுப்பு, குடும்ப பொறுப்பு கொண்ட ஒரு பொறுப்பான ஒரு பிள்ளையை வளர்ப்பது.இது எளிதான காரியம் அல்ல,  இரு பக்கம் கூர்மையான ஒரு கத்தி மேல் நடப்பது போன்றது. அதிக செல்லமும் இல்லாமல், அதிக கண்டிப்பும் இல்லாமல் அதே நேரம், தெரிவான இலக்கு கொடுத்து வளர்க்க வேண்டிய ஒன்று. கொஞ்சம் முயற்சியும் சுய கட்டுப்படும் கொண்டிருந்தால் நிச்சயம் வெற்றி கொள்ளலாம்.

நன்றி.

5 comments:

Pandian Subramaniam said...

விரிவான அலசல். பொறுப்புணர்வு - கீழ்ப்படிதல் விளக்கம் அருமை. நல்ல ஆலோசனை குறிப்புகள். முயற்சி, சுயகட்டுப்பாடுடன் பொறுமையோடு உழைத்தால், குழந்தைகளோடு நாமும் புதிய அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களை நன்கு புரிந்து கொள்ளவும் உதவும். நன்றி.

ப.கந்தசாமி said...

பொறுப்புணர்வை நன்றாகப் புரிய வைத்துள்ளீர்கள். பெரும்பாலான பெற்றோர்கள் நீங்கள் சுட்டிக்காட்டியபடி நாம் பட்ட கஷ்டம் நம் குழந்தைகள் படவேண்டாம் என்று நினைப்பதால்தான் நடுத்தர மக்களின் குழந்தைகள் வழி தவறிப்போகின்றன.

நான் ஏழாவது படிக்கும்போது என் தந்தை எனக்கு தனியாக ஒரு பை வாங்கிக்கொடுக்க மறுத்து விட்டார். என்னுடைய சக்திக்கு இவஙளஙுதான் முடியும். உனக்கு படிக்க விருப்பம் இருந்தால் படி, இல்லாவிட்டால் நின்றகொள் என்று சொல்லி விட்டார். பிறகு மரியாதையாக பள்ளிக்குச் சென்றேன. இன்று நான்.றாக இருக்கிறேன்

முகுந்த்; Amma said...

"விரிவான அலசல். பொறுப்புணர்வு - கீழ்ப்படிதல் விளக்கம் அருமை. நல்ல ஆலோசனை குறிப்புகள். முயற்சி, சுயகட்டுப்பாடுடன் பொறுமையோடு உழைத்தால், குழந்தைகளோடு நாமும் புதிய அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களை நன்கு புரிந்து கொள்ளவும் உதவும். நன்றி."

Nandri Pandian Subramaniam.

முகுந்த்; Amma said...

"நான் ஏழாவது படிக்கும்போது என் தந்தை எனக்கு தனியாக ஒரு பை வாங்கிக்கொடுக்க மறுத்து விட்டார். என்னுடைய சக்திக்கு இவஙளஙுதான் முடியும். உனக்கு படிக்க விருப்பம் இருந்தால் படி, இல்லாவிட்டால் நின்றகொள் என்று சொல்லி விட்டார். பிறகு மரியாதையாக பள்ளிக்குச் சென்றேன. இன்று நான்.றாக இருக்கிறேன்"

Very good approach. thanks Ayya for the comment

Ashwani Singh said...

Valuable Inforamtion I Like it and Visit Who has interested Make Money Online from Home